கலி காலம்





கலி காலம்


கலியுகம் என்பது பாவம் மிகுந்த யுகம் எனப்படும்.

பாவம் மிகுந்து இந்தக் கலியுகத்திலும் புகழப் பெறுவது சிவபதம்.

பிரமபதம், விஷ்ணுபதம், முதலிய எல்லாப் பதங்களிலும் சிறந்தது சிவபதம் என்பதால் அதனைத் தனக்கு அளித்து அருள் புரியுமாறு அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் வேண்டுகின்றார்.


கரி இணைக் கோடு எனத் தனம் அசைத்து ஆடி, நல்
     கயல்விழிப் பார்வையில் ...... பொருள்பேசி,

கலை இழுத்தே, குலுக்கு என நகைத்தே, மயல்
     கலதி இட்டே, அழைத்து, ...... அணைஊடே

செருமி, வித்தார சிற்றிடை துடித்து ஆட, மல்
     திறம் அளித்தே, பொருள் ...... பறிமாதர்

செயல் இழுக்காமல், இக் கலியுகத்தே புகழ்ச்
     சிவபதத்தே பதித்து ...... அருள்வாயே.


இதன் பொருள் ---

யானையின் இரு கொம்புகள் போன்ற தனங்களை அசைத்து நடனம் ஆடியும், நல்ல கயல் மீன் போன்ற கண்பார்வையாலேயே பெரும் பொருள் தரவேண்டும் என்று பேசியும், மேல் முந்தானையை இழுத்து இழுத்து விட்டும், குலுக்கென்று அடிக்கடி சிரித்தும், மயக்கமான கெடுதியைத் தந்தும், அழைத்துக் கொண்டுபோய் படுக்கையில் நெருங்கி, அலங்கரித்த சிறு இடை துடித்து அசையவும், வளமையான இன்பத்தைத் தந்து பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் செயல் அடியேனை இழுக்காமல், இக்கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவபதத்தில் என்னைப் பொருந்துமாறு அருள் புரிவீர்.

கலிகாலம் என்பது எப்படிப்பட்டது என்பதைப் பின்வரும் பாடல்களால் அறிவோம் வாருங்கள்...

"அறப்பளீசுர சதகம்" என்னும் நூலில் வரும் பாடல் இதோ...


எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை
     இணையிலாச் சேடன் என்றும்,
  ஈவது இல்லாத கன லோபியைச் சபை அதனில்
     இணையிலாக் கர்ணன் என்றும்,

அழகு அற்ற வெகுகோர ரூபத்தை உடையோனை
     அதிவடி மாரன் என்றும்,
  ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை
     ஆண்மை மிகு விசயன் என்றும்,

முழுவதும் பொய் சொல்லி அலைகின்ற வஞ்சகனை
     மொழி அரிச்சந்த்ரன் என்றும்,
  மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
     முறையின்றி ஏற்பது என்னோ?

அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
     அமலனே! அருமை மதவேள்!
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

  இதன் பொருள் ---

அழல் என உதித்து வரு விடம் உண்ட கண்டனே --- நெருப்பைப் போலத் தோன்றி வந்த ஆலகால விடத்தை உண்ட கண்டத்தை உடையவனே!

 அமலனே --- குற்றம் அற்றவனே!,

அருமை மதவேள் ---  அருமை மதவேள் என்பான்,

அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

எழுதப் படிக்க வகை தெரியாத மூடனை இணை இலாச் சேடன் என்றும் --- எழுதவும் படிக்கவும் வழியறியாத அறிவு அற்றவனை ஒப்பற்ற கல்வியில் சிறந்த ஆதிசேடன் என்றும்,  

ஈவது இல்லாத கன லோபியைச் சபையதனில் இணைஇலாக் கர்ணன் என்றும் --- பொருளைப் பிறருக்குக் கொடுத்து அறியாத பெரிய அழுக்களாகிய உலோபியை, அவையிலே ஒப்பற்ற கொடையில் சிறந்த கர்ணன் என்று புகழ்ந்தும்,

அழகு அற்ற வெகு கோர ரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் --- அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவம் உடையவனைப் பேரழகு உடைய மன்மதன் என்றும்,

ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை ஆண்மை மிகு விசயன் என்றும் - ஆயுதத்தை ஏந்தவும் பழகாத ஆண்மை அற்றவனை வீரத்தில் அர்ச்சுனன் என்றும்,

முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் - எக்காலமும் பொய்யையே பேசித் திரிகின்ற வஞ்சகனை, சொல்லில் அரிச்சந்திரன் என்றும்,

இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது என்னோ --- இவ்வாறு பழைமையான இந்த உலகத்தில் பாவாணர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசி, தகுதி  இல்லாதவர்களிடம் இரப்பது என்ன காரணமோ?


துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவர்;
     சொல்லும் நல் கவியை மெச்சார்;
  துர்ச்சனர்க்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார்; வரும்
     தூயரைத் தள்ளி விடுவார்;

இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார்; கறுப்பு
     என்னிலோ போய்ப் பணிகுவார்;
  ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார்; வேசை
     என்னிலோ காலில் வீழ்வார்;

நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
     நன்றாகவே பேசிடார்;
  நாளும் ஒப்பாரியாய் வந்த புத்துறவுக்கு
     நன்மை பலவே செய்குவார்;

அட்டதிசை சூழ்புவியில் ஓங்கு கலி மகிமை காண்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினை தரு சதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

 இதன் பொருள் ----

அத்தனே - தலைவனே!,

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

யாருமே துட்ட விகடக் கவியை மெச்சுவர் --- எல்லோரும் தீமை பயக்கின்ற விதத்தில் விகடமாகப் பாடல் புனையும் கவிஞனைப் புகழ்வார்கள்,

சொல்லும் நல் கவியை மெச்சார் --- புகழ்ந்து கூறத்தக்க நல்ல கவிஞரைப் புகழமாட்டார்கள்,

துர்ச்சனருக்கு அகம் மகிழ்ந்து உபசரிப்பார் --- தீயவருக்கு மனமகிழ்ச்சியுடன் வேண்டிய உபசாரங்களைச் செய்வார்,

தூயரைத் தள்ளி விடுவார் --- நல்லோரைத் தள்ளி வைப்பார்கள்,

இட்டம் உள தெய்வம் தனைக் கருதிடார் --- விருப்பமான தெய்வத்தை நினைந்து வழிபட மாட்டார்கள்,

கறுப்பு என்னிலோ போய்ப் பணிகுவார் --- பேய் என்றால் சென்று வணங்குவர்,

ஈன்ற தாய் தந்தையைச் சற்றும் மதியார் --- தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையரைச் சிறிதும் மதிக்க மாட்டார்கள்,

வேசை என்னிலோ காலில் வீழ்வார் --- விலைமகள் என்றால் அவள் காலில் விழுந்து வணங்குவார்,

நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின் நன்றாகவே பேசிடார் --- இன்ப துன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம் விட்டுப் பேசமாட்டார்,

ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு நாளும் பல நன்மை செய்வார் --- ஒப்புக்கு என்று வந்த புதிய உறவினர்க்கு எப்போதும் பல நன்மைகளையும் செய்வார்,

அட்ட திசை சூழ் புவியில் ஓங்கு கலி மகிமை --- எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகத்தின் கலிகாலப் பெருமை இது ஆகும்.

கருத்து --- மதிக்க வேண்டியவற்றை மதித்துப் போற்றிப் பயன் பெற வேண்டும் என்பது அறியாத அறியாமை மிகுந்தது கலிகாலத்தின் போக்கு என்றார்.


அடுத்து, கலிகாலத்தைப் பற்றி, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....


தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்; உயர்
     தந்தையைச் சீறு காலம்;
சற்குருவை நிந்தை செய் காலம்; மெய்க் கடவுளைச்
     சற்றும் எண்ணாத காலம்;

பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம்;
     புரட்டருக்கு ஏற்ற காலம்;
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்; நல்
     பெரியர் சொல் கேளாத காலம்;

தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்; மிகு
     சிறியவன் பெருகு காலம்;
செருவில் விட்டு ஓடினார் வரிசைபெறு காலம்; வசை
     செப்புவோர்க்கு உதவு காலம்;

வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு
     வாய்த்த கலி காலம்; ஐயா!
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

ஐயா --- ஐயனே!

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் --- பெற்றெடுத்த தாய் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கின்ற காலம்;

உயர் தந்தையைச் சீறு காலம் --- மேலான தந்தையைச் சீறி, வெறுத்து உரைக்கும் காலம்;

சற்குருவை நிந்தைசெய் காலம் - நல்லாசிரியரை நிந்திக்கின்ற காலம்;

கடவுளைச் சற்றும் எண்ணாத காலம் --- தெய்வத்தைச் சிறிதும் நினையாத காலம்;

பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம் --- பேயைத் தெய்வம் என்று போற்றி வழிபாடு செய்யும் காலம்;

புரட்டருக்கு ஏற்ற காலம் --- ஏமாற்றுகின்றவர்க்குத் தகுந்த காலம்;

பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் --- மனைவி வைதாலும் பொறுத்துக் கொள்ளுகின்ற காலம்; (மனைவியின் ஊதியத்தில் வாழுகின்ற காலம்)

நல் பெரியர் சொல் கேளாத காலம் --- நல்ல பெரியோர் சொல்லும் சொற்களைக் கேட்டு ஏற்றுக்கொள்ளாத காலம்;

பெரியவன் தேய்வுடன் சிறுமை உறு காலம் --- முன் பிறந்தவனாகிய அண்ணன் என்பவன் கலங்கித் தாழ்வு அடையும் காலம்;  (பெரியவன் என்பதை அறிவில் பெரியவன் என்றும் கொள்ளலாம்)

மிகு சிறியவன் பெருகு காலம் --- பின் பிறந்தவன் பெருமை அடைகின்ற காலம். (சிறியவன் என்பதை அறிவில் சிறியவன் என்றும் கொள்ளலாம்.)

(குறிப்பு --- மூத்தவனாகப் பிறந்து, குடும்ப பாரத்தை, தந்தையைப் போல் சுமக்கின்ற பெரியவர்கள், தனக்கென வாழாமல், தனது பின் பிறந்தார்களுக்கு என்றே எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து, பின்னர் வாழ்வில் சிறுமையை அடைவதை இன்றும் காணலாம்)

செருவில் விட்டு ஓடினோர் வரிசை பெறு காலம் --- போரிலே தோற்று ஓடியவர்கள் சிறப்புப் பெறுகின்ற காலம்;  (போருக்குப் பயந்து புறமுதுகு இட்டு ஓடியவர்கள் என்றும் கொள்ளலாம்)

வசை செப்புவோர்க்கு உதவு காலம் --- இழிவாகப் பேசுவோர்க்கு உதவி செய்யும் காலம்;

வாய்மதம் பேசிவிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் - வாய்க் கொழுப்போடு இறுமாப்பாகப் பேசிடும் நியாயம் இல்லாத ஒழுங்கீனர்களுக்குப் பொருந்திய கலிகாலம்.


இங்கே பின்வரும் "விவேக சிந்தாமணி"ப் பாடலைப் படித்துக் கொள்ளவும்.

பொருட் பாலை விரும்புவார்கள், காமப்பால்
     இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே
     விரும்பார்கள், அறிவொன்று இல்லார்,
குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால்
     புரவலர்பால் கொடுக்கக் கோரார்,
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி
     செம்பொன் சேவித்து இடுவார். ---  விவேக சிந்தாமணி.

அறிவு சிறிதேனும் இல்லாத மூடர்கள், நிலையற்ற செல்வத்தின் தன்மையை விரும்புவார்கள். (அவ்வாறு விரும்பிச் செல்வம் தேடிய செருக்கு காரணமாக) பெண்ணாசை என்னும் கடலில் விழுந்து புரளுவார்கள். செல்வத்தால் தேட வேண்டிய புகழைப் பற்றியும், அறம் செய்து அருளைத் தேட வேண்டியதைப் பற்றியும், கனவிலும் விரும்பமாட்டார்கள். குருவுக்கோ, கடவுள் பூசைக்கோ, அந்தணர்களுக்கோ, அறச் செயல்களைப் பாதுகாத்து நடத்தும் புரவலர்களுக்கோ தாம் தேடிய செல்வத்தை ஈய சிறிதும் விரும்ப மாட்டார்கள். ஆனால், தங்களைப் பிடித்து செருப்பாலே அடித்துத் துன்புறுத்தும் திருடர், துட்டர் முதலியோருக்கு, மனம் விரும்பி, தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான பொன்னைக் கொடுப்பார்கள்.)


இங்கே இன்னொரு பாடலையும் கருத்தில் கொள்ளலாம்...

அண்டின பேரைக் கெடுப்போரும்,
         ஒன்று பத்தா முடிந்து
குண்டுணி சொல்லும் குடோரிகளும்,
         கொலையே நிதம் செய்
வண்டரைச் சேர்ந்து இன்பச்
         சல்லாபம் பேசிடும் வஞ்சகரும்,
சண்டிப் பயல்களுமே,
         கலிகாலத்தில் தாட்டிகரே.  


திருப்புகழில் அருணகிரிநாதப் பெருமான் கலிகாலத்தைப் பற்றி விளக்கி உள்ளார்.

கோழை, ஆணவ மிகுத்த வீரமே புகல்வர், அற்பர்,
         கோதுசேர் இழிகுலத்தர்,              குலமேன்மை
கூறியே நடு இருப்பர், சோறுஇடார், தருமபுத்ர
         கோவும் நான் என இசைப்பர்,       மிடியூடே
ஆழுவார், நிதி உடைக் குபேரனாம் என இசைப்பர்,
         ஆசுசேர் கலியுகத்தின்               நெறி ஈதே. 
ஆயும் நூலறிவு கெட்ட நானும் வேறல அதற்குள்,  
         ஆகையால் அவையடக்க           உரையீதே.        --- திருப்புகழ்.
        
இதன் பொருள் ----

பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப்பேச்சைப் பேசுவார்கள் சிலர்.  கீழ் மக்களாகவும்,  குற்றம் உள்ள இழி குலத்தவராக இருப்பினும், சிலர் தங்கள் குலப்பெருமை பேசியே சபை நடுவே வீற்றிருப்பர். பசித்தவருக்குச் சோறு இடாத சிலர், தரும புத்ர அரசன் நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்வார்கள். ஏழ்மை நிலையிலே ஆழ்ந்து கிடந்தாலும் சிலர், செல்வம் மிக்க குபேரன் நான்தான் என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள்.  குற்றம் நிறைந்த கலியுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. ஆயவேண்டிய நூலறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...