ஊழின் பெருவலி





44. ஊழின் பெருவலி

அன்றுமுடி சூடுவது இருக்க, ரகு ராமன்முன்
     அருங்காடு அடைந்தது என்ன?
அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட, பரமனுக்கு
     காலம் லபித்தது என்ன?

வென்றிவரு தேவர்சிறை மீட்ட நீ, களவில் வே
     டிச்சியை சேர்ந்தது என்ன?
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம்போகி
     வெஞ்சிறையில் உற்றதது என்ன?

என்றும்ஒரு பொய்சொலா மன்னவன் விலைபோனது
     என்னகாண்? வல்லமையினால்,
எண்ணத்தினால், ஒன்றும் வாராது; பரமசிவன்
     எத்தனப் படிமுடியுமாம்;

மன்று தனில் நடனம்இடு கங்காதரன் பெற்ற
     வரபுத்ர வடிவேலவா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---


     மன்றுதனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர
வடிவேலவா - திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் சிவபிரான் அருளிய சிறந்த மகனாகிய வடிவேலரே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     அன்று முடி சூடுவது இருக்க, ரகுராமன்முன் அருங்காடு அடைந்தது என்ன --- முற்காலத்தில் அன்றைக்கு முடி சூடுவதாக இருந்தும்,  முடிசூடி நாட்டை அரசு புரியாமல், இராமன் காட்டிலே வாழ நேர்ந்தது எதனால்?

     அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன --- தேர்கள் எல்லோரும் அமுதம் உண்ணவும், சிவபிரானுக்கு மட்டும் நஞ்சு கிடைத்தது எதனால்?

      வென்றிவரு தேவர் சிறைமீட்ட நீ, களவில் வேடிச்சியைச் சேர்ந்தது என்ன --- வெற்றியை உடைய தேவர்களைச் சிறையில் இருந்து மீட்ட நீ, வேடுவர் மகளைக் களவு மணம் புரிந்தது எதனால்?

     மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம்சிறையில் உற்றது என்ன --- உலகைப் படைக்கும் பிரமதேவனுக்கு ஒருதலை இல்லாமல் போனது மட்டும் அல்லாமல், அவன் கொடுஞ்சிறையிலும் இருக்க நேர்ந்தது எதனால்?

     என்றும் ஒரு பொய்சொலா மன்னவன் விலைபோனது என்ன --- எப்போதும் பொய் சொல்லாத அரிச்சந்திரன் என்னும் மன்னன் அடிமைப்பட்டது எதனால்?

      வல்லமையினால் எண்ணத்தினால் ஒன்றும் வாராது --- எதுவும் ஒருவருடைய வலிமையினாலும் எண்ணத்தினாலும் நடந்து விடாது.

      பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் --- பரமசிவன் ஆணை வழியே எல்லாம் முடியும்.

      விளக்கம் ---

     கங்காதரன் - கங்கையைத் தனது திருமுடியிலே தரித்த சிவபெருமான்.

     வர புத்ர --- அருளால் வந்த புத்திரன்.

     லபித்தல் --- சித்தித்தல், வாய்த்தல்.

     எத்தனம் --- முயற்சி, ஆயத்தம்.

     ஊழ்வினையின் பெரு வல்லமையைக் கூற வந்த, இந்நூல் ஆசிரியர், புராண நிகழ்வுகள் சிலவற்றினை ஆதாரமாக எடுத்து வைத்தார்.

பரம்பொருளாகிய சிவபெருமானுடைய திருருவள் ஆணைப்படியே எல்லாம் நடக்கும் என்று முடிவில் கூறியவர்,
பரமசிவன் ஆலம் உண்டது விதியின் வலிமை என்று சொல்லுவது சிறிதும் பொருத்தம் அற்றது.

இராமபிரான் கனகம் சேர்ந்த்து, முருகப் பெருமான் வள்ளியைக் களவுமணம் புணர்ந்த்து, பிமதேவன் சிறைப்பட்டது, அரிச்சந்திரன் விலைபோனது எல்லாம் பரம்பொருளின் அருள் விளையாடல்கள். புராணங்களை ஆழ்ந்து படித்தால் இது புரியும்.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...