திருவொற்றியூர் - 0709. சொருபப் பிரகாச





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சொருபப் பிரகாச (திருவொற்றியூர்)

முருகா!
உனது திருவடிப் பெருமையைப் பலகாலும் பாடிப் பரவி,  
திருவருள் பெற்று,
சிவகதியை அடைய அருள்.


தனதத்தன தானதன தனதத்தன தானதன
     தனதத்தன தானதன ...... தனதானா


சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
     சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா

துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
     தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு

கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
     களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக்

கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
     கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ

குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
     பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே

குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
     குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா

திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
     யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா

திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
     ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


சொருபப் பிரகாச விசுவ ருப, பிரமாக நிச
     சுக, விப்பிர தேச, ரச ...... சுப மாயா,

துலியப் பிரகாச மத சொலி அற்ற ரசா! சவித
     தொகை விக்ரம! மாதர்வயிறு ...... இடை ஊறு

கருவில் பிறவாத படி, உருவில் பிரமோத அடி-
     களை எத்திடு,  ராக வகை ...... அதின் மீறி,

கருணைப் பிரகாச! உனது அருள் உற்றிட, ஆசில்சிவ
     கதிபெற்று, டர் ஆனவையை ...... ஒழிவேனோ?

குரு குக்குட ஆர கொடி செரு உக்கிர ஆதப! அயில்
     பிடி கைத்தல! ஆதி அரி ...... மருகோனே!

குமர! பிரதாப! குக! சிவசுப்பிர மாமணிய!
     குணமுட்டர் அவா அசுரர் ...... குலகாலா!

திரு ஒற்றி உறாமருவு நகர் ஒற்றியுர், வாரி திரை
     அருகு உற்றிடும் ஆதி சிவன் ...... அருள்பாலா!

திகழ் உற்றிடு யோக தவமிகு முக்கிய மாதவர்கள்
     இதயத்திடமே மருவு ...... பெருமாளே.


பதவுரை

      குரு குக்குட ஆர கொடி --- பெருமை நிறைந்து விளங்கும் கோழிக் கொடியை உடையவரே!

      செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல --- போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலாயுதத்தைத் தாங்கியுள்ளவரே!

     ஆதி --- முதற்பொருளாய் உள்ளவரே!

      அரி மருகோனே --- திருமாலின் திருமருகரே!

      குமர --- குமாரக் கடவுளே!

     பிரதாப --- கீர்த்தி உள்ளவரே!

     குக --- அடியார்களின் இதயமாகிய குகையில் வீற்றிருப்பவரே!

      சிவ சுப்பிர மா மணிய --- மங்களகரமான பேரோளியே!

      குண முட்டர் --- குணக் கேடர்களும்,

     அவா அசுரர் குலகாலா --- ஆசை மிக்கவரும் ஆன அசுரர்களின் குலத்துக்கு காலரே!

      திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியுர் --- திருமகள் விரும்பிப் பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில்

      வாரி திரை அருகு உற்றிடும் ஆதிசிவன் அருள்பாலா --- அலை வீசும் கடல் அருகில் வீற்றிருக்கும் ஆதிசிவன் அருளிய பாலகுமாரா!

      திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் --- விளக்கம் கொண்ட யோகம், தவம் இவைகளால் மிக்க சிறப்புப் பெற்று விளங்கும் பெருந்தவர்கள்

      இதயத்திடமே மருவு பெருமாளே --- உள்ளத்தில் விரும்பிச் சேர்ந்திருக்கும் பெருமையில் மிக்கவரே!

      சொருபப் பிரகாச --- இயல்பான சோதி வடிவானவரே!

     விசுவ ருப --- உலகப் பொருள்கள், உலக உயிர்கள் அனைத்துமாய்த் திகழ்பவரே!

      பிரமாக --- பிரமப் பொருளாய் உள்ளவரே!

     நிச சுக --- உண்மையான சுகத்தைத் தருபவரே!

      விப்பிர தேச --- அழகும் ஒளியும் உள்ள திருமேனியை உடையவரே!

     ரச சுப --- இன்ப மங்கலப்பொருளே,  

      மாயா துலியப் பிரகாச --- அழியாத சுத்த ஒளி வடிவானவரே!

       மத சொலி அற்ற ரசா --- மதங்களின் தாக்கத்தைக் கடந்த இன்பப் பொருளே!

      சவித தொகை விக்ரம --- எல்லாப் பராக்கிரமத்தையும் உடையவரே!

       மாதர் வயிறு இடை ஊறு கருவில் பிறவாதபடி --- மாதரின் வயிற்றிடையே ஊறுகின்ற கருவில் உருவாகிப் பிறவாதபடி,

      உரு இல் பிரமோத அடிகளை எத்திடு --- உருவம் இல்லாததும், உயிர்க்குப் பெருமகிழ்ச்சியைத் தருவதும் ஆகிய உமது திருவடிகளைப் பற்றி வழிபடுகின்ற

      இராக வகை அதின் மீறி --- கீத வகைகளில் மேம்பட்டு விளங்கி,

      உனது கருணைப் பிரகாச அருள் உற்றிட --- தேவரீரது கருணை ஒளி திகழும் திருவருளைப் பெற்று,

      ஆசு இல் சிவகதி பெற்று --- குற்றமில்லாத சிவகதியை அடியேன் பெற்று,

     இடர் ஆனவையை ஒழிவேனோ --- துன்பங்கள் யாவையும் விட்டு ஒழிக்கமாட்டேனோ?
  
பொழிப்புரை

      பெருமை நிறைந்து விளங்கும் கோழிக் கொடியை உடையவரே!

      போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலாயுதத்தைத் தாங்கியுள்ளவரே!

     முதற்பொருளாய் உள்ளவரே!

      திருமாலின் திருமருகரே!

      குமாரக் கடவுளே!

     கீர்த்தி உள்ளவரே!

     அடியார்களின் இதயமாகிய குகையில் வீற்றிருப்பவரே!

      மங்களகரமான பேரோளியே!

      குணக் கேடர்களும், ஆசை மிக்கவரும் ஆன அசுரர்களின் குலத்துக்கு காலரே!

     திருமகள் விரும்பிப் பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில் அலை வீசும் கடல் அருகில் வீற்றிருக்கும் ஆதிசிவன் அருளிய பாலகுமாரா!

     விளக்கம் கொண்ட யோகம், தவம் இவைகளால் மிக்க சிறப்புப் பெற்று விளங்கும் பெருந்தவர்கள் உள்ளத்தில் விரும்பிச் சேர்ந்திருக்கும் பெருமையில் மிக்கவரே!

      இயல்பான சோதி வடிவானவரே!

     உலகப் பொருள்கள், உலக உயிர்கள் அனைத்துமாய்த் திகழ்பவரே!

      பிரமப் பொருளாய் உள்ளவரே!

     உண்மையான சுகத்தைத் தருபவரே!

      அழகும் ஒளியும் உள்ள திருமேனியை உடையவரே!

     இன்ப மங்கலப்பொருளே,  

      அழியாத சுத்த ஒளி வடிவானவரே!

      மதங்களின் தாக்கத்தைக் கடந்த இன்பப் பொருளே!

      எல்லாப் பராக்கிரமத்தையும் உடையவரே!

     மாதரின் வயிற்றிடையே ஊறுகின்ற கருவில் உருவாகிப் பிறவாதபடி, உருவம் இல்லாததும், உயிர்க்குப் பெருமகிழ்ச்சியைத் தருவதும் ஆகிய உமது திருவடிகளைப் பற்றி வழிபடுகின்ற கீத வகைகளில் மேம்பட்டு விளங்கி, தேவரீரது கருணை ஒளி திகழும் திருவருளைப் பெற்று, குற்றமில்லாத சிவகதியை அடியேன் பெற்று, துன்பங்கள் யாவையும் விட்டு ஒழிக்கமாட்டேனோ?

விரிவுரை

குரு குக்குட ஆர கொடி ---

குரு - பெருமை.

குக்குடம் - கோழி.

பெருமை நிறைந்து விளங்கும் கோழிக் கொடியை உடையவர் முருகப் பெருமான்.

செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ---

செரு - போர்.

உக்கிரம் --- கோபம், மும்முரம்.

ஆதபம் - சூரியன்.

அயில் - வேல்.

போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலாயுதத்தைத் தாங்கியுள்ளவர் முருகப் பெருமான்.

பிரதாப ---

பிரதாபம் - வீரம், பெருமை, கீர்த்தி, புகழ், ஒளி.

சிவ சுப்பிர மா மணிய ---

சிவம் - மங்களம், நன்மை,

சுப்பிரம் - பேரொளி.

குண முட்டர் ---

முட்டர் - முட்டு - குறைவு, கேடு, குணக் கேடர்கள் ஆகிய அரக்கர்கள்.

அவா அசுரர் குலகாலா ---

அவா -  இன்னும் வேண்டும் என்னும் நினைவு.

பற்று - உள்ள பொருளில் வைத்து இருக்கும் பிடிப்பு.

ஆசை - பிறர் பொருளை விரும்புதல்.

பேராசை - என்ன கிடைத்தாலும் நிறைவு இல்லாமை.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.

அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

இன்பம் இடைஅறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

என்னும் திருக்குறள் கருத்துக்களை எண்ணுக.

ஆசையை அறுப்பதற்கு இறைவன் திருவருள் வேண்டும்.

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா,! முருகா! நினது அன்பு அருளால்
ஆசா  நிகளம் துகள் ஆயினபின்,
பேசா அனுபூதி பிறந்ததுவே.

இறையருளால் ஆசை என்னும் விலங்கு ஆனது அற்ற பின்னரே, பேசாப் பெருநிலை வாய்க்கும்.


திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியுர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதிசிவன் அருள்பாலா ---

திரு - திருமகள். இறையருள்.

உலகியல் நிலையில் உள்ளார்க்கு திரு என்பது பொருட்செல்வத்தைக் குறிக்கும்.

அருளியல் நிலையில் உள்ளார்க்கு திரு என்பது அருட்செல்வத்தைக் குறிக்கும்.

பொருட்செல்வமும், அருட்செல்வமும் பொருந்தி இருக்கும் திருத்தலம் திருவொற்றியூர் ஆகும்.

ஒற்றுதல் - ஒன்றில் சேர்தல், தழுவுதல், ஒட்டிக் கொள்ளுதல்,

ஒற்றி - உரிமை அடைமானம். 

உறுதல் - மிகுதல், சேர்தல், இருத்தல், பொருந்தல், கூடல், பயன் உறல், கிடைத்தல், நன்மை ஆதல், நிகழ்தல்.


திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவு பெருமாளே ---

தன்னை வணங்கும் அடியவர்களின் இதயத்தையே திருக்கோயிலாகக் கொண்டு பெருமான் எழுந்தருளி இருப்பார்.

நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே. ---  தாயுமானார்.

உள்ளம் பெருங்கோயில், ஊன்உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிலிங்கம்,
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.     ---  திருமந்திரம்.

தேடிக் கண்டுகொண்டேன், திருமாலொடு நான்முகனும்
தேடித் தேட ஒணாத் தேவனை என் உள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.                    ---  அப்பர்.

விடிவதுமே வெண்ணீற்றை மெய்யில் பூசி,
         வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று,
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்,
         செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே என்றும்,
துடிஅனைய இடைமடவாள் பங்கா என்றும்,
         சுடலைதனில் நடமாடும் சோதீ என்றும்,
கடிமலர் தூய்த் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

எவரேனும் தாமாக இலாடத்து இட்ட
         திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே
         உகந்து, அடிமைத் திறம் நினைந்து, அங்கு உவந்து நோக்கி,
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
         இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணி,
கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

இலம், காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து
         இடையாதே, யாவர்க்கும் பிச்சை இட்டு,
விலங்காதே நெறி நின்று, அங்கு அறிவே மிக்கு,
         மெய்யன்பு புகப்பெய்து, பொய்யை நீக்கி,
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
         உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம் வைத்து,
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

விருத்தனே! வேலைவிடம் உண்ட கண்டா!
         விரிசடைமேல் வெண்திங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே! உமைகணவா! உலக மூர்த்தீ!
         நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள்
பொருத்தனே! என்றென்று புலம்பி, நாளும்
         புலன்ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி,
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

பொசியினால் மிடைந்து புழுப் பொதிந்த போர்வைப்
         பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப் பட்டே ஈட்டி,
         பலர்க்கு உதவல் அது ஒழிந்து, பவள வாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம்,
         வானவர்கோன் திருநாமம் அஞ்சும் சொல்லிக்
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு
         ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி
மையினால் கண்எழுதி, மாலை சூட்டி,
         மயானத்தில் இடுவதன்முன், மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி, அன்பு மிக்கு,
         அகம்குழைந்து, மெய்அரும்பி, அடிகள் பாதம்
கையினால் தொழும்அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

திருதிமையால் ஐவரையும் காவல் ஏவித்
         திகையாதே, சிவாயநம என்னும் சிந்தைச்
சுருதி தனைத் துயக்கு அறுத்து, துன்ப வெள்ளக்
         கடல்நீந்திக் கரை ஏறும் கருத்தே மிக்கு,
பருதி தனைப் பல் பறித்த பாவ நாசா!
         பரஞ்சுடரே! என்றென்று பரவி, நாளும்
கருதிமிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

குனிந்த சிலையால் புரமூன்று எரித்தாய் என்றும்,
         கூற்று உதைத்த குரைகழல் சேவடியாய் என்றும்,
தனஞ்சயற்குப் பாசுபதம் ஈந்தாய் என்றும்,
         தசக்கிரிவன் மலைஎடுக்க விரலால் ஊன்றி
முனிந்து, அவன் தன் சிரம் பத்தும் தாளுந் தோளும்
         முரண் அழித்திட்டு அருள்கொடுத்த மூர்த்தீ! என்றும்
கனிந்து, மிகத் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே
         கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.     --- அப்பர்.

உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்
மண் ஒடுங்க தான் அளந்த மன்.          --- பேய் ஆழ்வார்.

உளன் கண்டாய், நல் நெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.         --- பொய்கை ஆழ்வார்.       

வானத்தான் என்பாரும் என்க, மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம்என்க, - ஞானத்தான்
முன் நஞ்சத்தால் இருண்ட மொய் ஒளி சேர் கண்டத்தான்
என் நெஞ்சத்தான் என்பன் யான். --- அற்புதத் திருவந்தாதி.

பிரான்அவனை நோக்கும் பெருநெறியே பேணி,
பிரான்அவன்தன் பேரருளே வேண்டி, - பிரான்அவனை
எங்கு உற்றான் என்பீர்கள், என் போல்வார் சிந்தையினும்
இங்கு உற்றான், காண்பார்க்கு எளிது. --- அற்புதத் திருவந்தாதி.


சொருபப் பிரகாச ---

சொருபம் - இயற்கைத் தன்மை. வடிவம் குணம் குறி இன்றி, ஒன்றாய் யாவும் கடந்த நிலை, சிறப்பு இயல்பு, பரம்பொருளின் சச்சிதானந்த வடிவான உண்மை இயல்பு.

சத்து - உண்மை, மெய்ம்மை,

சித்து - அறிவு.

உண்மை அறிவு ஆனந்தப் பொருளாய் விளங்கும் நிலை.


விசுவ ருப ---

விசுவம் - எல்லாம்.  ரூபம் - வடிவு.

உலகப் பொருள்கள், உலக உயிர்கள் அனைத்திலும் உட்பொருளாய் விளங்குபவன் இறைவன்.

பிரமாக ---

பிரமம் - முழுமுதற்பொருள்.

நிச சுக ---

நிசம் - உண்மை. இறையருளால் கிடைப்பதே உண்மையான சுகம். மற்றவை எல்லாம் பொய்யானவை. இருப்பது போல் தோன்றி மாறிவிடும் நிலையை உடையவை.

விப்பிர தேச ---

விப்பிரம் - அழகு.   தேசு - ஒளி.

"திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புகலிக்கு அரசாகிய
திருவளர் விப்ர சிகாமணி செழுமல யத்தமிழ்க் கேசரி" --- பதினோராம் திருமுறை.

ரச சுப ---

இரசம் - இன்பம்.  சுபம் - மங்கலம்.
        
மாயா துலியப் பிரகாச ---

மாயா - அழியா, துலியம் - தூய்மை. பிரகாசம் - ஒளி.

மத சொலி அற்ற ரசா ---

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாம் அருட்பெருஞ்சோதி ....      திருவருட்பா.

......               ......           வேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
     சமய பஞ்ச பாதக ...... ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
     சரண புண்ட ரீகம ...... தருள்வாயே.         --- (நிகரில் பஞ்ச) திருப்புகழ்.

சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பொறிதொரு திருப்புகழில். "கலகல எனச்சில் கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள் உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலை ஆகும்.

ஞானம் என்பது, பசு ஞானம், பாச ஞானம், பதி ஞானம் என மூவகைப்படும்.

பசு ஞானம் என்பது உயிர் அறிவு, ஆன்ம அறிவு. ஆன்மபோதம் எனப்படும்.

பாச ஞானம் என்பது ஆன்மாவானது பண்டங்களால் பெறுகின்ற அறிவு.

பதி ஞானம் என்பது, மேற்குறித்த இரண்டிலும் சாராது இறையைச் சார்வதால் பதிகின்ற உண்மை அறிவு. பதிவதால் பதி அறிவு என்றும் பதிஞானம் என்றும் காட்டப்பட்டது. 

பாச ஞானம்

ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறிவதால் பெறுகின்ற அறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறிகருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையின் காரியங்களே ஆகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாம் அறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் "பாசஞானம்" எனப்படுவது. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானாகவும் தனது என்றும் மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பையோ, அறிகின்ற பொருள்களின் உண்மை இயல்பையோ அறியாது போகிறது.

பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்,
பொன்னில் மறைந்தது பொன் அணி பூடணம்,
தன்னை மறைத்தது தன் கரணங்களாம்,
தன்னில் மறைந்தது தன்கரணங்களே.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதல் பூவே.

என்னும் திருமூலர் திருமந்திரப் பாடல்களின் கருத்தை ஓர்க.

பசு ஞானம்

ஞானாசிரியரை அடைந்து அவரது உபதேசத்தைப் பெற்றால், ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய அறிவுப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாம் அல்ல என்று அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாய் இருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்கு உரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில், அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபக உணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேக படலம் மூடி இருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேக படலம் நீங்கிய போது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்ம உணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும்.

கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அது ஆன்மாவின் பொது இயல்பு செயற்கை இயல்பு. வியாபக அறிவே அதன் உண்மை இயல்பு.

இவ்வாறு கருவி அறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன் என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது, பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரிய ஒளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதே ஆகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன் அறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

நாம் அல்ல இந்திரியம்; நம் வழியின் அல்ல; வழி
நாம் அல்ல; நாமும் அரன் உடைமை. - ஆம் என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை;
முற்செய் வினையும் தருவான் முன்.                   --- சிவஞானபோத வெண்பா.

பார்ஆதி பூதம் நீ அல்லை --- உன்னிப்
பார், இந்திரியம் கரணம் நீ அல்லை,
ஆராய் உணர்வு நீ என்றான் --- ஐயன்
அன்பாய்உரைத்த சொல் ஆனந்தம் தோழி. --- தாயுமானார்.

பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்கும் கால், அப்பரத்தின்
சீர் ஆக நிற்கும் கண்டாய் --- நேர் ஆக
சிற்கும் திருவருளில் நெஞ்சே, யாம் நிற்பது அல்லால்
கற்கும் நெறி யாது இனிமேல் காண்.      --- தாயுமானார்.

பார்ஆதி அண்டம்எலாம் படர்கானல் சலம்போல்
     பார்த்தனையே, முடிவில் நின்று பார், எதுதான் நின்றது?
ஆராலும் அறியாத சத்து அன்றோ? அதுவாய்
    அங்கு இரு நீ, எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய்,
பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்துப்
     புலம்பாதே, சஞ்சலமாப் புத்தியை நாட்டாதே,
ஓராதே ஒன்றையும் நீ, முன்னிலை வையாதே,
    உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே.          --- தாயுமானார்.

பதிஞானம்

இறைவனது அருளின் உண்மையை ஆன்மா உள்ளத்தில் கொள்ளுமாறு ஆசாரியர் அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆவாயோ? பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளே ஆகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோது, தன் அறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது. அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின், அவ்வருளுக்கு முதலாகிய சிவமானது பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறிய வாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறிய ஒண்ணாது.

பதிஞானம் என்னும் உண்மை ஞானம் உணர்ந்தோர் எப்படி இருப்பர் என்பதைப் பட்டினத்து அடிகள் கூறுமாறு காண்க.

பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!

அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து இருளே சிதைய,
வெறி வென்றவரோடு உறும் வேலவனே. --- கந்தர் அனுபூதி.

பதிஞானத்தைப் பெறாதவர்கள், சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டு, தம்மைத் தாமை உவந்துகொண்டும், பிறரைக் காய்ந்து கொண்டும், ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டு, கலகமிட்டுத் திரிவர்.

கலகல கல என, கண்ட பேரொடு
     சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்
     கதறிய, வெகு சொல் பங்கம் ஆகிய ...... பொங்கு அளாவும்,
கலைகளும் ஒழிய, பஞ்ச பூதமும்
     ஒழி உற, மொழியில் துஞ்சு உறாதன
     கரணமும் ஒழியத் தந்த ஞானம் ......இருந்தவாறு என்?    
                                                          --- (அலகில் அவுணரை) திருப்புகழ்.
   
"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்
கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்
செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

என்று பாடினார் மணிவாசகப் பெருமான்.

பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும்
         பார்ப்பரிய பரம்பரனை, பதிஞானத் தாலே
நேசமொடும் உள்ளத்தே நாடி, பாத
         நீழல்கீழ் நில்லாதே நீங்கிப் போதின்
ஆசைதரும் உலகம்எலாம் அலகைத்தே ராம்என்று
         அறிந்து அகல, அந்நிலையே ஆகும், பின்னும்
ஓசைதரும் அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க
         உள்ளத்தே புகுந்து அளிப்பன் ஊனம்எலாம் ஓட.      --- சிவஞானசித்தியார்.

சிவபெருமான் பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும் தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது, இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல் கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத் தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.


சவித தொகை விக்ரம ---

சவித தொகை - எல்லா விதமான.

விக்ரமம் - பேராற்றல், மிகுபலம், திறமை.


மாதர் வயிறு இடை ஊறு கருவில் பிறவாதபடி ---

எத்தனையோ பிறவிகளை அடைந்த இந்த ஆன்மா, மண்ணுலகில் பெறுதற்கு அரிய மானிடப் பிறவியே எடுத்துள்ளது. இந்தப் பிறவியைக் கொண்டு, இனிப் பிறவாத பெருநிலையை அடைய இறைவனை வழிபட்டு உய்யவேண்டும். இனியும் தாயின் வயிற்றில் பிறந்து, துன்பத்தில் உழன்று மடியக் கூடாது. "பிறவியால் வருவன கேடு உள" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். எனவே, கேடு அடையாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால்சலித்தேன்,
வேதாவும் கைசலித்து விட்டானே! - நாதா!
இருப்பையூர் வாழ் சிவனே! இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா

மண்ணும் தணல் ஆற, வானும் புகை ஆற,
எண்ணரிய தாயும் இளைப்பாற, - பண்ணும் அயன்
கை ஆறவும், அடியேன் கால் ஆறவும் காண்பார்,
ஐயா! திருவை யாறா!

எனவரும் பட்டினத்தடிகள் பாடல்களை எண்ணுக.


உரு இல் பிரமோத அடிகளை எத்திடு ---

உரு இல் - உருவம் இல்லாதது.

பிரமோதம் - பெருமகிழ்ச்சி.

ஏத்திடு என்னும் சொல் எத்திடு என வந்தது. ஏத்துதில் - வழிபடுதல்.

தனக்கென ஓர் உருவமில்லாத இறைவன் ஆன்மாக்களுக்காக உருவத்தை அடைகின்றான்.. உருவம் இல்லாத முழு முதற்கடவுள் ஆன்மகோடிகளை உய்விக்கும் பேரருட் பெருக்கால் ஆன்மாக்கள் எந்த எந்த வகையாகச் சிந்திக்கிறார்களோ அந்த அந்த உருவத்தை அடைகின்றான். “சிந்தாமணிக்கு ஒரு நிறமும் இல்லை, அதனருகில் எந்த எந்த நிறப்பொருள் உளவோ அந்த அந்த நிறத்தை அடைகிறது. அதுபோல் எந்த எந்த ரூபமாகச் சாதகன் நினைக்கின்றானோ அந்த அந்த சமயம் அவனுக்கு அந்த அந்த ரூபத்தைச் சிந்தாமணியைப்போல் சிவபெருமான் அடைகிறார்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ”   ---  மணிவாசகம்.

ஆர்ஒருவர் உள்குவார் உள்ளத்துஉள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்”        --- அப்பர் தேவாரம்.

இக்கருத்தை நம் காரைக்காலம்மையார் விளக்குவதைக் காண்க.

நூல்அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக,
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேல்உலந்தது,
எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்.
  
இராக வகை அதின் மீறி ---

இராகம் - பண். எண்ணற்ற பண்கள் உள்ளன. அவையும் இறைவன் சொரூபமாக உள்ளவையே.

பண்ணும், பதம் ஏழும், பலஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றதொர் சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், யிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிம்மிழலையே.     --- திருஞானசம்பந்தர்.

இசையும், அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும் வல்லோசை, மெல்லோசை முதலியனவற்றை உடைய தமிழும், பண்ணைச் சுரத்தானங்களில் நின்று ஆலத்தி பண்ணி, பல ஓசை பொருந்தப் பாடுங்கால் உண்டாகின்ற உள்ளத்து உணர்வாகிய சுவையும். அங்ஙனம் சுவையை அனுபவிக்கும்போது உண்டாகின்ற சச்சபுடம், சாசபுடம் முதலான தாள ஒத்துக்கள் பலவும், மண், புனல், உயிர், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய இறைவனது இடம் திருவீழிமிழலை.

"பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி" என்றார் அப்பர் பெருமான்.

இசை வடிவாக உள்ள இறைவனை, இசை பொருந்தப் பாடல்களால் பாடி வழிபட வேண்டும். அது பாமாலை எனப்படும். இதனை "மாத்ருகா புட்ப மாலை" என்றார் அடிகளார்.

"நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும், ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்னும் தெய்வச் சேக்கிழார் அருள் வாக்கை எண்ணுக.

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

பண்ஒன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்இன்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்இன்றி முக்கோடி வாழ்நாளது உடையானைப்
புண்ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்கு வேளூரே.   --- திருஞானசம்பந்தர்.

விளக்கினால் பெற்ற இன்பம்
     மெழுக்கினால் பதிற்றி ஆகும்,
துளக்குஇல் நன்மலர் தொடுத்தால்
     தூயவிண் ஏறல் ஆகும்,
விளக்கு இட்டார் பேறு சொல்லின்
     மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்,
அளப்பு இல கீதம் சொன்னார்க்கு
     அடிகள்தாம் அருளும் ஆறே.         ---  அப்பர்.
    
திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால், தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும். கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர். எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன.

தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை
     தெரிவதற்கு உள்ளம் ...... உணராமுன்,
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து, வெய்ய
     சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன்,

பரவை புக்கு தொய்யும் அரவு அணைக்குள் வைகு
     பரமனுக்கு நல்ல ...... மருகோனே!
பழுது இல் நின்சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை
     பகர்வதற்கு நன்மை ...... தருவாயே.                ---  திருப்புகழ்.

"தப்பாமல் பாடிச் சேவிப்பார் தத்தாம் வினையைக் களைவோனே" என்றார் திருத்தணிகைத் திருப்புகழில்.

உனது கருணைப் பிரகாச அருள் உற்றிட, ஆசு இல் சிவகதி பெற்று, இடர் ஆனவையை ஒழிவேனோ ---

இறைவனைப் பாடிப் பரவுவதன் மூலம், திருவருளைப் பெற்று, இப் பிறவியில் படுகின்ற உலகியல் துன்பங்களோடு, பிறவித் துன்பத்தையும் ஒழித்து, அழியாத பேரின்ப நிலையை அடையலாம்.

கருத்துரை

முருகா! உனது திருவடிப் பெருமையைப் பலகாலும் பாடிப் பரவி, திருவருள் பெற்று, சிவகதியை அடைய அருள்.




                 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...