எமன் என்னை வணங்குவான்




ஒப்பிலாமணிப் புலவர் பாடல் ஒன்று...

பாட்டானதை வண்டு பாடும்
     குழல் சண்பக வல்லிதன்
தாட்டாமரையைத் தொழுதேன்,
     இனி, என் தலையில் விதி
தீட்டான், கருமுகில் போலே
     வரும் அந்தச் சேட்டு எருமை
மாட்டான், இனிவர மாட்டான், வந்
     தாலும் வணங்குவனே.

இதன் பொருள் ---

வண்டுகள் இனிய இசையைப் பாடும் கூந்தலை உடைய சண்பகவல்லி அம்மையின் திருவடித் தாமரையை நான் தொழுதேன். (இனி எனக்குப் பிறப்பு இல்லை) ஆதலால், பிரமதேவன் என் தலையில் விதியை எழுதமாட்டான். கரிய மேகம் போல் உருவத்தை உடையவனும், எருமை மாட்டை வாகனமாக உடையவனும் ஆகிய இயமன் இனி என் அருகில் வரமாட்டான். வந்தாலும் அவன் என்னை வணங்குவான்.

விளக்கம் ---

பாட்டானதை -- பாட்டு ஆனதை.

தாட்டாமரை. தாள்+தாமரை = தாட்டாமரை. தாள் - திருவடி. திருவடியாகிய தாமரை.

விதி - விதிப்படி உயிர்களைப் படைக்கின்ற பிரமனுக்கு "விதி" என்று பெயர் உண்டு.

எருமை மாட்டான் - எருமையை வாகனமாக உடைய இயமன்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...