திருவொற்றியூர் - 0708. கரியமுகில் போலும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரிய முகில் போலும் (திருவொற்றியூர்)

முருகா!
விலைமாதர் மயக்கில் விழுந்து பரிகசிக்கப்படும் முன்,  
அடியேனுக்குத் திருவருள் ஞானத்தைத் தந்து அருள்வாயாக.


தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான


கரியமுகில் போலு மிருளளக பார
     கயல்பொருத வேலின் ...... விழிமாதர்

கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
     களபமுலை தோய ...... அணையூடே

விரகமது வான மதனகலை யோது
     வெறியனென நாளு ...... முலகோர்கள்

விதரணம தான வகைநகைகள் கூறி
     விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய்

அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
     அவர்கள்புக ழோத ...... புவிமீதே

அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
     அமரர்குல நேச ...... குமரேசா

சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
     திகழ்கனக மேனி ...... யுடையாளர்

திருவளரு மாதி புரியதனில் மேவு
     ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

கரியமுகில் போலும் இருள் அளக பார,
     கயல் பொருத வேலின் ...... விழி, மாதர்

கலவிகளில் மூழ்கி, ம்ருகமதப டீர
     களபமுலை தோய, ...... அணை ஊடே

விரகம் அது ஆன மதனகலை ஓது
     வெறியன் என நாளும் ...... உலகோர்கள்

விதரணம் அது ஆன வகை நகைகள் கூறி
     விடுவதன்முன், ஞான ...... அருள்தாராய்.

அரி, பிரமர், தேவர், முனிவர், சிவயோகர்
     அவர்கள் புகழ் ஓத, ...... புவிமீதே

அதிக நடராஜர் பரவு குருராஜ!
     அமரர் குல நேச! ...... குமர ஈசா!

சிர கர கபாலர், அரிவை ஒரு பாகர்,
     திகழ் கனக மேனி ......உடையாளர்,

திருவளரும் ஆதிபுரி அதனில் மேவு
     ஜெயமுருக! தேவர் ...... பெருமாளே.


பதவுரை

      அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத --- திருமால், பிரமன், தேவர்கள், முனிவர்கள், சிவயோகிகள் ஆகியோர் உனது திருப்புகழைப் பாடி வழிபட,

     புவி மீதே அதிக நடராஜர் பரவு குருராஜ ---  பூமியில் மேம்பட்டு விளங்கும் அம்பலவாணப் பெருமான் போற்றுகின்ற குருராஜனே!

      அமரர் குல நேச --- தேவர்கள் குலத்துக்கு அன்பு உடையவரே!

     குமர ஈசா --- குமாரக் கடவுளே!

      சிர கர கபாலர் --- பிரம கபாலத்தைத் திருக்கையில் தரித்தவர்,

     அரிவை ஒரு பாகர் --- உமாதேவியைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் உடையவர்,

     திகழ் கனக மேனி உடையாளர் --- விளங்குகின்ற பொன் போலும் திருமேனி உடையவர் ஆகிய சிவபெருமான்,

      திரு வளரும் --- திருவருள் பாலிக்கின்,

     ஆதிபுரி தனில் மேவு ஜெயமுருக --- ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள வெற்றிமுருகனே!

     தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

      கரிய முகில் போலும் இருள் அளகபார --- கருமேகம் போன்று கருத்த கூந்தலை உடையவர்கள்,

     கயல் பொருத வேலின் விழிமாதர் ---  கயல் மீனோடு போர் புரியும் வேல் போன்ற கண்களை உடைய விலைமாதர்களின்

      கலவிகளில் மூழ்கி --- புணர்ச்சி இன்பத்தில் மூழ்கி,

     ம்ருகமத படீர களபமுலை தோய --- கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள முலைகளில் படிந்து,

      அணை ஊடே --- படுக்கையில் இருந்து,

     விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என --- காம உணர்வு மேலிட்டு, காமரச சாத்திரங்களை ஓதுகின்ற வெறி பிடித்தவன் இவன் என்று என்னை

      நாளும் உலகோர்கள் --- நாள்தோறும் உலகில் உள்ளவர்கள்,

     விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் --- தமது கூர்த்த மதியால் எனது நிலையை நன்கு உணர்ந்து, பரிகாசமாகப் பேசி இகழ்வதன் முன்னம்

     ஞான அருள் தாராய் --- திருவருள் ஞானத்தைத் தந்து அருள்வீராக.


பொழிப்புரை
 

         திருமால், பிரமன், தேவர்கள், முனிவர்கள், சிவயோகிகள் ஆகியோர் உனது திருப்புகழைப் பாடி வழிபட, பூமியில் மேம்பட்டு விளங்கும் அம்பலவாணப் பெருமான் போற்றுகின்ற குருராஜனே!

      தேவர்கள் குலத்துக்கு அன்பு உடையவரே!

     குமாரக் கடவுளே!

      பிரம கபாலத்தைத் திருக்கையில் தரித்தவர், உமாதேவியைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் உடையவர், விளங்குகின்ற பொன் போலும் திருமேனி உடையவர் ஆகிய சிவபெருமான், திருவருள் பாலிக்கின்ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள வெற்றிமுருகனே!

     தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

      கருமேகம் போன்று கருத்த கூந்தலை உடையவர்கள், கயல் மீனோடு போர் புரியும் வேல் போன்ற கண்களை உடைய விலைமாதர்களின் புணர்ச்சி இன்பத்தில் மூழ்கி, கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள முலைகளில் படிந்து, படுக்கையில் இருந்து, காம உணர்வு மேலிட்டு, காமரச சாத்திரங்களை ஓதுகின்ற வெறி பிடித்தவன் இவன் என்று என்னை நாள்தோறும் உலகில் உள்ளவர்கள், தமது கூர்த்த மதியால் எனது நிலையை நன்கு உணர்ந்து, பரிகாசமாகப் பேசி இகழ்வதன் முன்னம் திருவருள் ஞானத்தைத் தந்து அருள்வீராக.


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் விரைமாதர் இன்பத்தையே மிக விழைந்து, அவர் தரும் கலவியைக் கருதி வாழ்நாளை வீணாக்குவோர் வெறியர்கள் என்கின்றார் அடிகளார். வெறியர்கள் ஆனாலும், எம்பெருமான் முருகனைச் சரணடைந்தால் அவன் திருவருள் வாய்க்கும் என்பதால் திருவருள் ஞானத்தை அருள் புரிய வேண்டி, இத் திருப்புகழை அருள் செய்தார் சுவாமிகள்.

ஆதிபுரி தனில் மேவு ஜெயமுருக ---

        தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில் உள்ள திருத்தலம் திருவொற்றியூர்.

        இறைவர் ஆதிபுரீசுரர், படம்பக்க நாதர், தியாகராஜர். இறைவி, வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி.

          மூவர் முதலிகள் திருப்பதிகங்களைப் பெற்ற சிறப்புடைய திருத்தலம்.

         திருக்கோயில் வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் சங்கிலி நாச்சியாரைத் துரமணம் புணர்ந்த சிறப்புடைய திருத்தலம்.

         ஞாயிறு என்னும் ஊரிலே வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் ஞாயிறுகிழார் என்பவர். திருக்கயிலையிலே நம்பியாரூரரைக் காதலித்த இருவருள் அனிந்திதையார் என்பவர் ஞாயிறு கிழாருக்குத் திருமகளாகப் பிறந்தார். அவருக்குச் சங்கிலியார் என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. சங்கிலியார் உமையம்மையாரிடத்து இயற்கை அன்பு உடையவராக வளர்ந்தார். திருமணப் பேச்சு வந்தபோது, "நான் ஒரு சிவனடியாருக்கு உரியவள், இவர்கள் என்ன செய்வார்களோ" என்று மனம் கலங்கி மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்ததும், மணம் பேச முயன்ற தந்தையைப் பார்த்து, "நீங்கள் பேசிய வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள். இனி, நான் திருவொற்றியூரை அடைந்து திருவருள் வழி நடப்பேன்" என்றார். பெற்றோருக்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின. சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

         ஞாயிறு கிழாரின் மரபில் தோன்றிய ஒருவன் சங்கிலியாரை மணம்பேச ஞாயிறு கிழார்பால் சில முதியோரை அனுப்பினான். அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது. அம் முதியவர்கள் ஞாயிறு கிழாரிடம் வந்து தாங்கள் வந்த கருத்தைத் தெரிவித்தார்கள். ஒருவாறு இனிய மொழி பேசி வந்தவர்களை அனுப்பி வைத்தார் ஞாயிறு கிழார். அவர்களை அனுப்பினவன் ஏதோ ஒரு தீங்கு செய்து மாண்டவனைப் போல் மாண்டான். அச் செய்தி ஞாயிறு கிழாருக்கு எட்டியது.  இனிச் சங்கிலியார் கருத்தின் வழி நடப்பதே சரி என்று பெற்றோர் எண்ணினர். திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றைச் சமைத்து, அதில் சங்கிலியாரை இருத்தினர்.

         சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்துகொண்டு ஆண்டவனை வழிபட்டு வந்தார். அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத்தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று.  பூமண்டபத்தில் திரை சூழ்ந்த ஓரிடத்தில் இருந்து பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பி வந்தார்.

         திருக்காளத்தியை வழிபட்ட நம்பியாரூர் பெருமான் திருவொற்றியூர் வந்தார். வழக்கம்போல் ஒரு நாள் திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனைத் தொழுதவர், அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளையும் தனித்தனியே கண்டு வணங்கி, பூமண்டபத்தினுள் சென்றபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிவிக்கும் பொருட்டு, பூமாலையைத் தோழிகளிடம் தந்து மின்போல் மறைந்தார்.  பண்டைவிதி கடைக்கூட்ட சங்கிலியாரை நம்பியாரூரர் கண்டார்.

         வெளியே வந்தவர், அங்கிருந்த சிலரைப் பார்த்து, "பூமண்டபத்திலே இருந்த நங்கை என் மனதைக் கவர்ந்தாள்.  அவள் யார்" என்று வினவினார். அவர்கள், "சங்கிலியார் அவர் பேர். கன்னிகை, சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவர்" என்றார்கள். அது கேட்ட நம்பியாரூரர், "இப் பிறவி இருவர் பொருட்டு அளிக்கப்பட்டது. அவருள் ஒருத்தி பரவை.  மற்றொருத்தி இவள்தான்" என மருண்டார். திருக்கோயிலுக்குச் சென்றார். "திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்" என்று இறைவரை வேண்டினார். வெளியே வந்து திருக்கோயிலின் ஒருபுறத்திலே இருந்து சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார். மாலைக் காலம் வந்தது. 

         சிவபெருமான் தம் தோழர்பால் வந்து, "சங்கிலியை உனக்குத் தருகின்றோம். கவலையை ஒழி" என்றார். நம்பியாரூரர், "பெருமானே, அன்று என்னைத் தடுத்து ஆட்கொண்டு அருளீனீர்.  இன்று என் விருப்பத்திற்கு இணங்கி வந்து அருள் செய்தீர்" என்று வியந்து, வணங்கி, மகிழ்ந்தார்.

         சங்கிலியார் கனவிலே சிவபெருமான் தோன்றினார். "என் தவமே தவம். பெருமான் எழுந்தருளினார்" என்று சங்கிலியார் எழுந்தார், தொழுதார், ஆனந்த பரவசமாயினார். "நம்பியாரூரன் என்பவன் நம் மாட்டுப் பேரன்பு உடையவன். நம்மால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவன். அவன் உன்னை விரும்பி, என்னை  வேண்டினான். அவனை மணம் செய்து கொள்வாய்" என்றார்.  சங்கிலியார், "பெருமான் ஆணைப்படி இசைகின்றேன். ஆனால், திருமுன்னே முறையிட்டுக் கொள்ள வேண்டுவது ஒன்று உண்டு. திருவாரூரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர் அவர். இதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். சிவபெருமான், "உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதம் செய்து கொடுப்பான்" என்றார்.

         சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரர் பால் எழுந்தருளி, "சங்கிலியிடம் உன் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு குறை உண்டு.  அக் குறையைத் தீர்த்தல் வேண்டும்" என்றார். "அவள் முன்னிலையில் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்று இரவே செய்து கொடு" என்றார். நம்பியாரூரர், "எதைச் செய்தல் வேண்டுமோ, அதைச் செய்வேன். உமது அருள் வேண்டும்" என்றார்.

         இச் சபதம் பிற பதிகளை வணங்குதற்கு இடையூறாக இருக்குமே என்று எண்ணிய நம்பியாரூரர்,  சிவபெருமான வணங்கி, "பெருமானே, சபதம் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச்சந்நிதிக்கு வருவேன். அப்போது, அடிகள் திருமகிழ்க்கீழ் எழ்ந்தருளல் வேண்டும்" என்று வேண்டினார். அதற்கிசைந்த பெருமான், சங்கிலியாரிடம் சென்று, "ஆரூரன் சபதம் செய்து கொடுக்க இசைந்தான். உன்னுடன் கோயிலுக்கு வருவான்.  அப்பொழுது மகிழமரத்தின் அடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்பாயாக" என்றார்.

         சங்கிலியார் திருவருளை நினைந்து துயிலாதவரானார்.  தோழிமார்களை எழுப்பி நிகழ்ந்ததை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் மகிழ்வெய்தி அம்மையாரைத் தொழுதார்கள்.  திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுத்துத் தோழிமார்களுடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழர் முன்னே எழுந்து, சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  சங்கிலியாரைக் கண்டு அவர் அருகே சென்று சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார் நாணத்தால் ஏதும் பேசாமல் திருக்கோயிலுக்குச் சென்றார். நம்பியாரூரரும் தொடர்ந்தார்.  சந்நிதியை அடைந்தனர்.

         நம்பியாரூரர் சங்கிலியைப் பார்த்து, "நான் உன்னைப் பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும். முன்னே வா" என்றார். சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்திருந்த தோழிமார்கள், "அடிகள், இதற்காக இறைவன் திருமுன்னர் சபதம் செய்தல் ஆகாது" என்றனர். "சபதம் எங்கே செய்து தருவது" என்றார். "மகிழின் கீழ்" என்றனர். நம்பியாரூரர் மருண்டார். வேறு வழியில்லை. "அப்படியே செய்கிறேன்" என்றார். மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து, "நான் சங்கியிலைப் பிரியேன்" என்று சபதம் செய்து கொடுத்தார்.  அதைக் கண்ட சங்கிலியார் மனம் வருந்தினார். "சிவபெருமான் ஆணையால் பாவியேன் இக் காட்சியைக் காண நேர்ந்தது" என்று நைந்து ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார். நம்பியாரூரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுச் சென்றார். சங்கிலியார் தமது திருத்தொண்டினைச் செய்து கன்னிமாடத்தில் இருந்தார்.

         அன்று இரவு சிவபெருமான் திருவொற்றியூரில் உள்ள தொண்டர்கள் கனவில் தோன்றி, நம்பியாரூரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டளை இட்டார். தொண்டர்கள் அச் சிவப்பணியை அடுத்த நாளே நிறைவேற்றினார்கள். தம்பிரான் தோழர் சங்கிலியாரோடு திருவொற்றியூரிலே இன்பம் நுகர்ந்து வந்தார்.

         வசந்த காலம் வந்தது. தென்றல் காற்றானது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவினை நினைவூட்டியது. "எத்தனை நாள் பிரிந்து இருக்கேன், என் ஆரூர் இறைவனையே" என்று மனமுருகப் பாடினார். நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை முடுகி எழ, ஒருநாள் திருக்கோயிலுக்குப் போய்த் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினதும், அவருடைய இரு விழிகளும் மறைந்தன. நம்பியாரூரர் மூர்ச்சித்தார், திகைத்தார், பெருமூச்சு விட்டார். சபதம் தவறியமையால் இது நேர்ந்தது என்று எண்ணி, பெருமானையே பாடி இத் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டு, "அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்" என்னும் திருப்பதிகத்தை அருளினார். சிலர் வழிகாட்டத் திருமுல்லைவாயிலுக்கு எழுந்தருளினார்

         நம்பியாரூரர் சங்கிலியார் திருமணம் நிகழ்ந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது "மகிழடி சேவை" விழாவாக நடைபெறுகிறது.

         தல விருட்சம் அத்தி மரம். மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கலிய நாயனாரின் அவதாரத் தலம்.

         தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போல் குறைய, வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபில் உள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால், கூலிக்குச் செக்காடி, அக்கூலி கொண்டு விளக்கு எரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால், வீடு முதலிய பொருட்களை விற்று, விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகர் எங்கும் விலை கூறி, வாங்குவார் இல்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கு ஏற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத் துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடம்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேல் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியில் பொலிந்திருக்க அருள் புரிந்தார்.


         ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம்.  திருஒற்றியூரின் சிறப்பைப் பட்டினத்து அடிகள் பாடியுள்ள சில பாடல்கள்....

ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து,
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான்,
செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டுக்
கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே.

         பொழிப்புரை ---  அலங்காரங்கள் செய்து அமைந்த திருவொற்றியூரிலே கோயில் கொண்டு எழுந்தருளிய பெருமானே!  நெஞ்சிலே கோழை மிகுந்து வரவும், கண்கள் பஞ்சடைந்து போகவும், அறிவும் அழிந்து கிடக்கவும்,  இதுவரை மெய் என்று நம்பியிருந்த இந்த உடம்பும் பொய்யாகிப் போகின்ற காலத்தில் அடியேன் ஒன்றை வேண்டிக் கொள்வேன்.  திருநீற்றை உடம்பில் தரித்து, கைகளைக் கூப்பி, உம்மைத் தொழுது, திருவைந்தெழுத்தை உச்சரிக்க எனக்குக் கற்பித்து அருள்வாயாக.

சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்
திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்குஉருண்டு
கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே.

         பொழிப்புரை --- மனமே! முப்புரங்களையும் எரித்த பெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன்.  அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பது தான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்த பிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.

கண்டம் கரியதாம், கண்மூன்று உடையதாம்,
அண்டத்தைப் போல அழகியதாம் - தொண்டர்
உடல்உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடல்அருகே நிற்கும் கரும்பு.

         பொழிப்புரை---  மிக்க புகழினை உடைய திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தின் கடல் அருகில் விளங்குகின்ற கரும்பானது, கரிய நிறம் பொருந்திய கண்டத்தை உடையது.  மூன்று கண்களை உடையது. வானைப் போல அழகு உடையது. அடியார்களின் உடலும் குழைந்து உருகும்படி இனிக்கும் அது.
  
ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு
இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன் - கடுஅருந்தும்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியில் பொடி.

         பொழிப்புரை---  புண்கள் உண்டாகி சீழானது ஒழுகுகின்ற, ஒன்பது  துளைகளை உடைய உடலாகிய இந்தப் புண்ணுக்கு இடவேண்டிய மருந்தினை நான் கண்டுகொண்டேன். அது என்ன என்றால், பால்கடலில் வந்த ஆலகால விடத்தை உண்ட, தேவர்களுக்கு எல்லாம் தலைவனான, சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தின் வீதிகளில் நடப்பவர்களுடைய பாதத் தூளியே ஆகும்.

வாவிஎல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் சிவலிங்கம்,
காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்
ஈது சிவலோகம் என்றுஎன்றே மெய்த்தவத்தோர்
ஓதும் திருவொற்றி யூர்.

         பொழிப்புரை---  இது பூலோக சிவலோகம் என்று உண்மைத் தவம் உடையார் சொல்லுகின்ற திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் உள்ள குளங்கள் எல்லாம் தீர்த்தங்கள். மணல் அனைத்தும் சிவலிங்கம். சோலைகளும், நந்தனவனங்களும் சிவகணநாதர்கள்.

     வள்ளல் பெருமான் பல திருப்பதிகங்களைப் பாடி, நாளும் வழிபட்ட திருத்தலம். பெருமான் பாடி அருளிய வடிவுடை மாணிக்க மாலை சிறப்பு. வள்ளல் பெருமானின் வாழ்வோடு இயைந்த திருத்தலம் திருவொற்றியூர் ஆகும்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மயக்கில் விழுந்து உலகவரால் பரிகசிக்கப்படும் முன்னர் அடியேனுக்குத் திருவருள் ஞானத்தைத் தந்து அருள்வாயாக.

No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...