திருப் பூவனூர்
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
வெண்ணாற்றின் தென்கரையில் உள்ள திருத்தலம்.
மன்னார்குடி - நீடாமங்கலம் சாலையில்
மன்னார்குடியில் இருந்து 8 கி.மீ. தூரத்திலும், நீடாமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்திலும் இத்திருத்தலம்
இருக்கிறது.
திருவாரூர், நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும்
பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம்
சென்றால் கோயிலை அடையலாம். ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் உள்ளது. பாலத்தில்
போகும்போது பார்த்தாலே கோபுர தரிசனம் கிட்டும்.
மன்னார்குடி - அம்மாப்பேட்டை, வலங்கைமான் - மன்னார்குடி நகரப்
பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன. இவற்றில் வந்து பூவனூர் நிறுத்தத்தில்
இறங்கிக் கோயிலை அடையலாம்.
இறைவர்
: புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்.
இறைவியார்
: கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி.
தல
மரம் : பலா.
தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - பூவனூர்ப் புனிதன்.
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயில் 147 அடி அகலம், 304 அடி நீளம் கொண்டதாகும். நீண்டு
நெடிதுயர்ந்த மதிற்சுவரும் கருத்தைக் கவரும் கல்மண்டபங்களும் அகன்று விரிந்த
உள்-வெளிப் பிரகாரங்களும் கலை நுணுக்கமுள்ள விமானங்களும் இவ்வாலயத்தின்
சிறப்பம்சமாகும். வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய
சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோவில்
கொண்டிருக்கிறார்கள். உட்பிரகாரத்தில் புஷ்பவனநாதர் என்றும் சதுரங்கவல்லபநாதர்
என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது. அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில்
தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது. இத் தலத்தில் கோயில்
கொண்டுள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். விஷ நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவில் தீர்த்தத்தில்
நீராடி சாமுண்டீஸ்வரி அம்மன் சந்நிதியில் வேர்கட்டிக்கொண்டு கடி நோய்களிலிருந்து
விடுபடுகின்றனர். தர்மவர்மன் என்னும் அரசன் இக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி தனது
கரும்குஷ்டநோய் நீங்கபெற்றிருக்கிறான். நந்திதேவர் மற்றும் சித்தர்கள் பலர்
இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். கருவறை கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆக்யோரின் சந்நிதிகள்
அமையபெற்றுள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
இத்திருத்தல இறைவனுக்கு
சதுரங்கவல்லபநாதர் என்ற பெயர் ஏற்பட ஒரு சுவையான வரலாறு உள்ளது. தெண்பாண்டி நாட்டு
அரசன் வசுசேனன் அவன் மனைவி காந்திமதி ஆகியோருக்கு வெகு காலமாக குழந்தை இல்லை.
நீண்ட நாட்களாக அவர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இறைவன் அவர்களுக்கு அருள
முன்வந்தார். அரசன் ஒருநாள் நீராடிய குளத்தில் ஒரு தாமரை மலரில் ஒரு சங்கைக்
கண்டான். இறைவன் திருவருளால் உமாதேவியே அவர்களுக்கு மகளாகப் பிறக்க அங்கு சங்கு
ரூபத்தில் தென்பட அரசன் அச்சங்கை கையில் எடுத்தவுடன் அது ஒரு அழகிய பெண்
குழந்தையாக உருவெடுக்கக் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்து அக்குழந்தைக்கு
ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்து வந்தான். சப்த
மாதர்களில் ஒருவரான சாமுண்டிதேவி அக்குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக வர ராஜராஜேஸ்வரி
சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று வளர்ந்தாள். குறிப்பாக சதுரங்க விளையாட்டில்
மிகவும் புகழ் பெற்று எல்லோரையும் வென்று விளங்கினாள். அரசன் மகளுக்கு மணம்
முடிக்க வேண்டி, தகுந்த வரன் அமைய
வேண்டும் என்ற நோக்கில் மகளை சதுரங்க விளையாட்டில் வெல்பவருக்கே மணமுடிப்பது என்று
தீர்மானித்தான். பல அரசகுமாரர்கள் வந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் அவளிடம்
தோற்றுப் போனார்கள். மன்னன் யாராலும் மகளை வெல்ல முடியவில்லையே என்று
வருத்தப்பட்டு, இறைவன் மீது
பாரத்தைப் போட்டு தலயாத்திரை மகளுடன் கிளம்பிச் சென்றான். அநேக சிவத்தலங்களை
தரிசித்துவிட்டு திருப்பூவனூர் வந்து சேர்ந்தான். இறைவன் புஷ்பவனநாதரை வழிபட்டு
கவலையுடன் தன் இருப்பிடம் திரும்பினான். மறுநாள் காலை ஒரு வயோதிகர் அரசனைத் தேடி
வந்தார். ராஜராஜேஸ்வரியைப் பார்த்து என்னுடன் சதுரங்கம் ஆடி உன்னால் என்னை வெல்ல
முடியுமா என்று கேட்டார். அரசன் மகளும் சம்மதிக்க சதுரங்க ஆட்டம் துவங்கியது.
அன்றுவரை இந்த ஆட்டத்தில் தோல்வியே காணாத அவள் அன்று அந்த முதியவரிடம் தோற்றுப்
போனாள். அரசன் மகளை ஒருவர் வென்று விட்டாரே என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு
வயோதிகருக்கு தன் வாக்குப்படி மகளை மண்முடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான்.
உள்ளம் உருக சிவபெருமானை தியானித்தான். கண் சிமிட்டும் நேரத்தில் அங்குள்ள
முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் நிற்கக் கண்டான். சதுரங்க ஆட்டத்தில்
ராஜராஜேஸ்வரியை வென்று அவளுக்கு மாலையிட்டவர் புஷ்பவனநாதரே ஆவார். சதுரங்க
ஆட்டத்தில் இறைவியை வென்றதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயரும் பெற்றார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், " காட்டிய நம் தேவன்
ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற பூவனூர் மேவும் புகழ் உடையோய்" என்று
போற்றி உள்ளார்.
காலை 7-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 198
கருகாவூர்
முதலாக, கண்ணுதலோன்
அமர்ந்துஅருளும்
திருஆவூர், திருப்பாலைத் துறை,பிறவும்
சென்றுஇறைஞ்சி,
பெருகுஆர்வத்
திருத்தொண்டு செய்து,பெருந் திருநல்லூர்
ஒருகாலும்
பிரியாதே உள்உருகிப் பணிகின்றார்.
பொழிப்புரை : நெற்றியில்
திருவிழியையுடைய சிவபெருமான் வீற்றிருக்கின்ற திருக்கருகாவூர் முதலாகவுள்ள
திருஆவூர், திருப்பாலைத்துறை
முதலாய பிற பதிகளுக்கும் சென்று வணங்கி, ஆர்வம்
பெருகும் திருத்தொண்டுகளைச் செய்து,
திருநல்லூரை
ஒரு காலமும் பிரியாது உள்ளம் நெகிழ்ந்துருகி அங்குத் தங்கியிருப்பவர்.
குறிப்புரை : இப்பாடற்கண்
குறிக்கப் பெற்ற திருப்பதிகளுள் திரு ஆவூருக்கு உரிய பதிகம் கிடைத்திலது. ஏனைய
இரண்டாம்:
1. திருக்கருகாவூர்: `குருகாம்` (தி.6 ப.15) - திருத்தாண்டகம்.
2. திருப்பாலைத் துறை: `நீலமாமணி` (தி.5 ப.51) - திருக்குறுந்தொகை.
இனிப்
`பிறவும் சென்றிறைஞ்சி` என்பதால் குறிக்கத்தகும் பதிகள்
மூன்றாம்:
2. திருவெண்ணியூர்: (அ). `முத்தினை` (தி.5 ப.17) - திருக்குறுந்தொகை.
(ஆ). `தொண்டிலங்கும்` (தி.6 ப.59) - திருத்தாண்டகம்
3. திருப்பூவனூர்: `பூவனூர்ப் புனிதன்` (தி.5 ப.65) - திருக்குறுந்தொகை.
5. 065
திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பூவ
னூர்ப்புனி தன்திரு நாமந்தான்
நாவில்
நூறுநூறு ஆயிரம் நண்ணினார்
பாவம்
ஆயின பாறிப் பறையவே
தேவர்
கோவினும் செல்வர்கள் ஆவரே.
பொழிப்புரை : பூவனூரில்
எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர் , தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர்
தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர் .
பாடல்
எண் : 2
என்னன், என்மனை, எந்தை, என்ஆருயிர்,
தன்னன், தன்அடி யேன்தனம் ஆகிய
பொன்னன், பூவனூர் மேவிய
புண்ணியன்,
இன்னன்
என்றுஅறி ஒண்ணான் இயற்கையே.
பொழிப்புரை : பூவனூர் மேவிய இறைவன்
என்னை உடையவன் ; என் மனையாளாகவும்
உள்ளவன் ; என் தந்தை ; என் உயிர் ; தனக்குத்தானே உவமையானவன் ; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன்
; தன் இயல்பினால்
இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன் .
பாடல்
எண் : 3
குற்றம்
கூடிக் குணம்பல கூடாதீர்,
மற்றும்
தீவினை செய்தன மாய்க்கலாம்,
புற்று
அராவினன், பூவனூர் ஈசன்பேர்
கற்று
வாழ்த்தும், கழிவதன் முன்னமே.
பொழிப்புரை : குற்றங்களே மிகப்
பெருகிக் குணம்பல கூடாதவர்களே ! புற்றிற்பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர்
இறைவன் திருநாமத்தை நீர் மடிவதன் முன்பே கற்று வாழ்த்துவீராக ; அங்ஙனம் வாழ்த்தினால் நீர் செய்த
வினைகளை மாய்க்கலாம் .
பாடல்
எண் : 4
ஆவின்
மேவிய ஐந்துஅமர்ந்து ஆடுவான்,
தூவெண்
ணீறு துதைந்தசெம் மேனியான்,
மேவ
நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவனூர்
புகுவார் வினை போகுமே.
பொழிப்புரை : பஞ்சகவ்வியங்களை
விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும் , தூய
வெண்ணீறு செறிந்த செம்மேனியனும் ,
விரிகின்ற
பூணூல் மேவியவனும் ஆகிய பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரைக் கண்ணதுமாகிய
பூவனூரின்கண் புக்குத்தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும் .
பாடல்
எண் : 5
புல்லம்
ஊர்தியூர் பூவனூர், பூம்புனல்
நல்லம்
ஊர்திநல் லூர்,நனி பள்ளியூர்,
தில்லை
யூர்,திரு வாரூர்,சீர் காழி,நல்
வல்லம்
ஊர்,என வல்வினை மாயுமே.
பொழிப்புரை : புல்லமும் , ஊர்தியூரும் , பூவனூரும் , புனல் வளம் உடைய நல்லமும் , ஊர்திநல்லூரும் , நனிபள்ளியூரும் , தில்லையூரும் , திருவாரூரும் , சீர்காழியும் , நல்ல வல்லமும் ஆகியவற்றைக்
கூறியவளவிலேயே வல்வினை நீங்கும் .
பாடல்
எண் : 6
அனுச
யப்பட்டு அதுஇது என்னாதே,
கனிம
னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனிதனை, பூவனூரனைப்
போற்றுவார்
மனிதரில்
தலையான மனிதரே.
பொழிப்புரை : கனிந்த மனத்தொடு
கண்கள் நீர் நிறைந்து , ஐயப்பட்டபொருளன்று
இது ; தெளிந்தது என்று
கருதிப் பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே எல்லா மனிதர்களிலும் தலையான
மனிதராவர் .
பாடல்
எண் : 7
ஆதி
நாதன், அமரர்கள் அர்ச்சிதன்,
வேத
நாவன்,வெற் பின்மடப்
பாவைஓர்
பாதி
ஆனான், பரந்த பெரும்படைப்
பூத
நாதன், தென் பூவனூர் நாதனே.
பொழிப்புரை : அழகிய பூவனூர் இறைவன்
ஆதியில் தோன்றியவனும் , தேவர்களால்
அருச்சிக்கப்படுபவனும் , வேதம் ஓதும்
நாவினனும் , மலைமங்கையை ஒரு
பாதியிற் கொண்டவனும் , பரவிய பெரும்
படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன்.
பாடல்
எண் : 8
பூவ
னூர்,தண் புறம்பயம், பூம்பொழில்
நாவ
லூர், நள் ளாறொடு, நன்னிலம்,
கோவ
லூர்,குட வாயில், கொடுமுடி,
மூவ
லூரும், முக் கண்ணன்ஊர்
காண்மினே.
பொழிப்புரை : பூவனூரும் , குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில்
சூழ்ந்த நாவலூரும் , நள்ளாறும் , நன்னிலமும் , கோவலூரும் , குடவாயிலும் , கொடுமுடியும் , மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன்
ஊர்கள் ; காண்பீர்களாக .
மூவலூர் வைப்புத்தலம் .
பாடல்
எண் : 9
ஏவம்
ஏதும் இலாஅமண் ஏதலர்,
பாவ
காரிகள் சொல்வலைப் பட்டு,நான்
தேவ
தேவன் திருநெறி ஆகிய
பூவ
னூர்புகு தப்பெற்ற நாள்இன்றே.
பொழிப்புரை : விதிவிலக்குகள் ஏதும்
இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும் ; பாவகாரிகளுமாகியோர்
சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர்
புகப்பெற்ற நாள் இன்றேயாகும் .
பாடல்
எண் : 10
நார
ணன்னொடு நான்முகன் இந்திரன்
வார
ணன்கும ரன்வணங் கும்கழல்
பூர
ணன்,திருப் பூவனூர் மேவிய
கார
ணன்,எனை ஆள்உடைக் காளையே.
பொழிப்புரை : திருமாலும் , பிரமனும் , இந்திரனும் , விநாயகரும் , முருகனும் வணங்கும் கழலை உடைய
நிறைவானவனும் , திருப்பூவனூரில்
பொருந்திய உலககாரணனுமாகிய பெருமானே , என்னை
ஆளுடைய காளைபோல்வான் .
பாடல்
எண் : 11
மைக்கு
அடுத்த நிறத்து அரக்கன்,
வரை
புக்கு
எடுத்தலும், பூவனூ ரன்அடி
மிக்கு
அடுத்த விரல்சிறிது ஊன்றலும்,
பக்க
டுத்தபின் பாடி உய்ந்தான்அன்றே.
பொழிப்புரை : மேகத்தையொத்த நிறத்தை
உடைய இராவணன் திருக்கயிலையைப் புகுந்தெடுத்தலும் , பூவனூர் இறைவன் திரு வடியில் மற்ற
விரல்களினும் சிறப்புமிக்குள்ள பெருவிரலைச் சற்று ஊன்றுதலும் தன் உறுப்பெல்லாம்
பிளந்து வருந்தியபிறகு பாடி அருள்பெற்று உய்ந்தான் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment