பாட்டெழுத வேண்டாம்





40.  பாட்டெழுத வேண்டாம்.

பாரதியார்' ‘அண்ணாவி' ‘புலவர்' என்பார்
     கல்வியினில் பழக்கம் இல்லார்!
சீர்அறியார் தளை அறியார் பல்லக்கு
     ஏறுவர்! புலமை செலுத்திக் கொள்வார்!
ஆர் அணியும் தண்டலைநீள் நெறியாரே!
     இலக்கணநூல் அறியாரேனும்
காரிகை ஆகிலும் கற்றுக் கவிசொல்லார்
     பேரி கொட்டக் கடவர் தாமே.

இதன் பொருள் ---

     ஆர் ஆணியும் தண்டலைநீள் நெறியாரே --- ஆத்தி மலர் மாலையை அணிந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருள் உள்ள இறைவரே!,

     கல்வியினில் பழக்கம் இல்லார் பாரதியார் அண்ணாவி புலவர் என்பார் --- கல்வியினை முறையாகப் பயின்று அறிவு பெறாத சிலர், பாரதியார் என்றும், அண்ணாவி என்றும் புலவர் என்றும் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வர்.

     சீர் அறியார், தளை அறியார் --- பாடல்களின் உறுப்பாக அமைந்த சீர் என்பதும், தளை என்பதும் அறிந்திருக்க மாட்டார்.

     பல்லக்கு ஏறுவர் --- பல்லக்கில் ஏறுவார்கள்.

     புலமை செலுத்திக் கொள்வார் --- புலவர் போலத் தம்மைக் காட்டிக் கொள்வார்.

     இலக்கண நூல் அறியாரேனும் --- இலக்கண நூலை முழுதும் பயின்று அறியாவிட்டாலும்,

     காரிகையாகிலும் கற்றுக் கவி சொல்லார் --- யாப்பு இலக்கணம் என்று சொல்லப்படும் காரிகை என்னும் ஒரு நூலையாவது கற்று, கவி பாடும் திறமை இல்லாத இவர்கள்,

     பேரி கொட்டக் கடவர் --- பறை கொட்டி வாழக் கடவர்.

       விளக்கம் --- ஆர் - ஆத்தி. காரிகை கற்றுக்  கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நல்லது என்பதை உணராதவர்களின் இழி நிலையைக் காட்ட, ‘காரிகையாகிலும் கற்றுக் கவி சொல்லார்' என்றார் ஆசிரியர்.

      சிலர் காரிகை என்னும் நூலைக் கற்றாலும், கவி சொல்லும் ஆற்றல் இல்லாது உள்ளனர். இவை எல்லாம் கடந்த காலம். இக்காலத்தில் பலரும் யாப்பிலக்கணத்தைப் பயிலாமலே பாட்டு எழுதிப் பெயரும், புகழும், பெரும்பொருளும் ஈட்ட எண்ணுகின்றனர்.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...