இறைவனிடம் வேண்டுவது





"முகமன்" என்பது "முகஸ்துதி" என்று வடமொழியில் வழங்கப் பெறும். இன்றைய தமிழில் "உபசார"மாகப் பேசுவது ஆகும்.

இன்றைய உலகியலில் முகமன் கூறுவதுதான் மிகுதியாக உள்ளது. உள்ளதை உள்ளவாறு கூறுவது குறைவு. சொல்லப்படுகின்ற முகமன் உண்மையாகவும் இருக்கலாம். உண்மை இல்லாமலும் இருக்கலாம். எப்படியாயினும், முகமன் என்னும் உபசார வார்த்தையில் மயங்காதவர் இல்லை என்று கூறலாம்.

ஆனால், இறைவன் சந்நிதியில், "இறைவா! நீயே உயிர்களுக்கு எல்லாம் தாயும் தந்தையும் ஆனவன்" என்றும், "தாயும் நீயே, தந்தை நீயே, சங்கரனே!" என்றும் "ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய், உடன் தோன்றினராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தவன்" என்றும், "அப்பன் நீ, அம்மை, நீ, ஐயனும் நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ" என்றும் பலபடப் புகழ்ந்து கூறுவது, இறைவனுடைய பொருள்சேர் புகழ் ஆகும். அது உண்மையான முகமன் ஆகும். வெறும் உபசார வார்த்தை ஆகாது.

"இறைவா! உன்னை நிறைந்து உருகும் புலன் அறிவைப் பெற்றுள்ள மனிதப் பிறவிக்கு, உனது அருளால் வந்த நான், உனது பெருங்கருணையை நினைந்து, இந்த உடம்பில் உயிர் உள்ளவரை உன்னை நினைப்பேன். எனது ஆவி கழியும்போதும் உன்னை நினைந்துகொண்டே தான் கழியும். உயிர் போனபிறகு உன்னை நினைக்க முடியாது.
இப்படிப்பட்ட அடியவனான என்னை, எனது உயிர் உடம்பில் இருந்து கழிந்த பின்னும் நீ என்னை மறக்க வேண்டாம். இதுவே நான் உன்னிடம் வேண்டுவது" என்னும் பொருள்பட, அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல் இது...

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்;      
      இம்மூவுலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்,அழல்வண்ணா!
     நீ அலையோ?
உன்னை நினைந்தே கழியும் என் ஆவி;
     கழிந்ததன் பின்
என்னை மறக்கப் பெறாய்; எம்பிரான்!
     உன்னை வேண்டியதே.   

இது நித்திய வழிபாட்டுக்கு உரிய பாடல் ஆகும்.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...