பழநி - 0110. அவனிதனிலே பிறந்து


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அவனிதனிலே  (பழநி)

பெண் மயலில் அழியாமல், அடியார்களுடன் கூடிவாழ அருள்


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான


அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து,
     அழகுபெறவே நடந்து, ...... இளைஞோனாய்,

அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று,
     அதிவிதம் அதாய் வளர்ந்து, ...... பதினாறாய்,

சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
     திருவடிகளே நினைந்து ...... துதியாமல்,

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையாய் உழன்று
     திரியும், டியேனை உன்தன் ...... அடிசேராய்.

மவுன உபதேச சம்பு, மதி, றுகு, வேணி, தும்பை,
     மணிமுடியின் மீது அணிந்த ...... மகதேவர்

மனம் மகிழவே அணைந்து, ஒருபுறம் அதாக வந்த
     மலைமகள் குமார! துங்க ...... வடிவேலா!

பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து,
     படி அதிரவே நடந்த ...... கழல்வீரா!

பரமபதமே செறிந்த முருகன் எனவே உகந்து,
     பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே.

பதவுரை


         மவுன உபதேச சம்பு --- (வேதாகமங்களின் முடிவாகிய அத்துவித உண்மையை வாய்திறந்து கூறாமல்) மௌனமாகவே இருந்து (கல்லாலின் கீழ் நால்வர்க்கும்) உபபேசித்தருளிய சுக காரணரும்,

     மதி --- சந்திரனையும்,

     அறுகு --- அறுகம் புல்லையும்,

     வேணி --- கங்கா நதியையும்,

     தும்பை --- தும்பை மலரையும்,

      மணிமுடியின் மீது அணிந்த மக தேவர் --- அழகிய சடையின் மீது தரித்துக் கொண்டுள்ள தேவ தேவருமாகிய சிவபெருமான்,

     மன மகிழவே அணைந்து --- திருவுள்ளம் களிப்புறுமாறு கலந்து,

     ஒரு புறமதாக வந்த --- அப்பெருமானது இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ளவரும்,

     மலைமகள் --- மலையரையனது திருப்புதல்வியாருமாகிய உமாதேவியாருடைய,

     குமார --- திருக்குமாரரே!

         துங்க வடிவேலா --- வெற்றி பொருந்தியதும், கூர்மையுள்ளதுமாகிய வேற்படையை உடையவரே!

         பவனி வரவே உகந்து --- திருஉலாப் போந்தருள அன்பு கொண்டு,

     மயிலின் மிசையே திகழ்ந்து --- மயில்வாகனத்தின் மீது (கோடி சூரிய) ஒளியுடன் வீற்றிறிருந்து,

     படி அதிரவே நடந்த --- உலகம் கிடு கிடு என்று அதிருமாறு எழுந்தருளி வந்த,

     கழல் வீரா --- வீரக் கழலையணிந்துள்ள வீரரே!

      பரமபதம் ஆய செந்தில் --- பூவுலக மோக்ஷமாக விளங்கும் திருச்செந்தூரில்,

     முருகன் எனவே உகந்து --- தெய்வத் தன்மையுடையவர் என்று அடியார்கள் துதிக்குமாறு எழுந்தருளி இருந்து,

      பழநி மலைமேல் அமர்ந்த ---- பழநியங்கிரி மேல் வீற்றிருந்தருளும்,

     பெருமாளே ---- பெருமையில் மிக்கவரே!

      அவனிதனிலே பிறந்து --- பூதலத்தில் (குழந்தையாகப்) பிறந்து,

     மதலை எனவே தவழ்ந்து --- பிள்ளைப் பருவத்திலே மெல்லத் தவழ்ந்து,

     அழகு பெறவே நடந்து --- (காண்பார் கண்கவருங்) கவினுடன் தளர் நடையிட்டு நடந்து,

     இளைஞோன் ஆய் --- சிறிது வளர்ந்து பாலகனாகி,

     அரு மழலையே மிகுந்து --- இனிமையான (எழுத்துக்கள் நிரம்பாத) இளஞ்சொற்களையே மிகவும் பேசி,

     குதலை மொழியே புகன்று --- கேட்பதற்கு இனிய சிறிது திருந்திய குதலைச் சொற்களைக் கூறி,

     அதிவிதமாய் வளர்ந்து --- பெற்றோர்களால்) அநேக விதமாக வளர்க்கப்பெற்று வளர்ந்து,

     பதினாறாய் --- பதினாறாட்டைப் பருவமடைந்த பின்,

     சிவ கலைகள் --- சிவ சம்பந்தமான பதிநூல்களாகிய சைவசித்தாந்த சாத்திரங்களையும்,

     ஆகமங்கள் --- சிவாகமங்களையும்,

     மறை --- வேதங்களையும்,

     மிகவும் ஓதும் அன்பர் --- நன்றாகக் கற்றுத் தெளிந்து மிகுதியாக அதனையே ஓதுகின்ற மெய்யன்பர்களுடைய,

     திருவடிகளே நினைந்து துதியாமல் --- சிறந்த பாதங்களையே பற்றுக்கோடாக எண்ணி தோத்திரஞ் செய்யாமல்,

     தெரிவையர்கள் ஆசை மிஞ்சி --- பெண்கள் மீது மிக்க ஆசையையுடையவனாகி,

     வெகு கவலையாய் உழன்று திரியும் --- அவ்வாசை காரணமாக மிகுந்த வருத்தத்தை அடைந்து சுற்றித் திரிகின்ற,

     அடியேனை உன்தன் அடி சேராய் --- அடியேனைத் தேவரீருடைய திருவடியில் சேர்த்து அருள்புரிவீர்.

பொழிப்புரை


     (ஆலின் புடை அமர்ந்து அருந்தவர் நால்வர்கட்கும் ஆரண ஆகம சாரமாகிய அத்துவிதத்தின் உண்மையை) மௌன முத்திரையைக் காட்டியே நன்கு விளங்குமாறு உபதேசித்தருளியவரும் சுக காரணரும், பிறைச் சந்திரனையும், அறுகம் புல்லையும், கங்கா நதியையும், தும்பை மலரையும் அழகிய சடைமுடியின் மீது தரித்துக் கொண்டுள்ள பெரிய தேவரும் ஆகிய சிவமூர்த்தியினுடைய திருவுள்ளமானது மகிழ்ச்சி அடையுமாறு கலந்து இடப்பாகத்தில் எழுந்தருளியவரும் மலைமன்னனது திருமகளாருமாகிய உமையம்மையாருடைய திருக்குமாரரே!

         வெற்றியை உடையதும் கூர்மையை உடையதுமாகிய வேலாயுதத்தைக் கரத்தில் தரித்தவரே!

         திரு உலாப் போந்து அருளத் திருவுளங் கொண்டு மரகத மயிலின் மீது ஊர்ந்து, மிகுந்த ஒளியுடன் விளங்கி உலகம் அதிரும்படி எழுந்தருளி வரும் வீரக்கழலை அணிந்த வீராதி வீரரே!

         பூதலத்தில் மோக்ஷ உலகம்போல் விளங்கும் செந்திலம்பதியில், அடியார்கள் ழுமுருகக்கடவுளே என்று வணங்கி உய்யுமாறு இருந்தும் பழநிமலையின்மேல் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

         மண்ணுலகில் (அடியேன்) பிறந்து, மதலைப் பருவத்தில் தவழ்ந்து, பாலப் பருவத்தில் இளநடையுடன் அழகாக நடந்து, இளைஞனாய் அருமையான மதலைச் சொற்கள் மிகுந்து இனிய குதலை மொழிகளையே பேசி, பதினாறாம் ஆண்டு நிரம்பியபின், சைவ சமய சித்தாந்த நூல்களையும் சிவாகமங்களையும், வேதங்களையும் நன்கு உணர்ந்து, ஓதுகின்ற மெய்யன்பர்களுடைய திருவடிகளை உள்ளத்தில் நினைத்து (ஆவியீடேறும் பொருட்டு) துதிக்காமல், பெண்களின் மீது பெரிய மயக்கமும் ஆசையும் கொண்டு அதனால் மிகுந்த கவலையை யடைந்து, பெண்களையடையும் பொருட்டு (காற்றாடி போல்) சுற்றித் திரிகின்ற அடியேனைத் தேவரீரது திருவடித் தாமரைகளில் சேர்த்து அருள்புரிவீர்.

விரிவுரை

பதினாறாய் ---

உலகில் மனிதனாகப் பிறந்து, இனிது வளர்ந்து, பதினாறாண்டு நிறைந்தவுடன், நல்லாரோடு கூடி ஆவி ஈடேறும் வழியை நாடி, கள்ளப் புலக் குரம்பைக் கட்டு அழித்து, மீட்டு இங்கு வாராத மெய்க் கதியை அடைவதற்கு முயற்சிக்காமல், அவநெறி சென்று பாழ்படுகின்றதைக் குறித்துக் கருணை வடிவாம் அருணகிரிநாதர் வற்புறுத்தி உபதேசிக்கின்றனர்.

சிவ கலைகள் ---

ஆன்மாக்களுடன் அநாதியே இருந்து, பதியை அடைய ஒட்டாது மறைத்து, தன்னையும் காட்டாது பிறவற்றையும் அறிய ஒட்டாமல் செய்யும் ஆணவ மலத்தினின்று நீங்கி, சிவத்தை அடையும் செந்நெறியை உணர்த்தி, உயிர்க்கு உறுதியை நல்கும் பதிநூல்களே சிவகலைகளாகும். அவை அடியிற்கண்ட பதினான்கு நூல்களாகும்.

உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தஅருட்
பண்புவினா போற்றி கொடிபாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று.

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், திருபாவிருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்பன.

இப்பதினான்கு நூல்களை நற்குணம் அடைந்த சற்குரு மூர்த்தியை அடுத்து, அவர்பால் ஓதியுணர்ந்து, "பொய் கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித" நிலையை அடைதல் வேண்டும். இந்நூல்களையே மெய்கண்ட சாத்திரம் என்பர். இச்சித்தாந்த சாத்திரங்களை ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெறுவார்களாக.

ஆகமங்கள் ---

ஆகமம் என்பதற்கு ஆ-பாசம், க-பசு, ப-மலநாசம்; முப்பொருள்களை உணர்த்துவது என்பது பொருள்.

ஆ-சிவஞானம், க-மோக்ஷம், ம-மலநாசம் மலத்தைக் கெடுத்து மோக்ஷத்தை யருளுவது என்றும் பொருள்படும். இறைவன் திருமுகத்தினின்றும் வந்தது என்றும் பொருள்படும். ஆகமம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதங்களையுடையது. “நாலாரு மாமகத்தின் நூல்” என்றார் பிறிதோரிடத்தில்; பதி பசுபாச இலக்கணங்களைத் தெளிவாகக் கூறுவது சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்ரமார்க்கம், தாசமார்க்கம் என்ற நான்கு வழிகளையுடையது. இவ்வாகமம் 28 வகை. அவையாவன காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விஜயம், நிச்சுவாகம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேச்சுரம், கிரணம், வாதுளம்.

மறை ---

எல்லாப் பொருள்களையும் தன்னகத்தே கொண்டு மறைத்து வைத்திருப்பதனால் வேதத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று. வேதம் பொதுநூல்; ஆகமம் சிறப்பு நூல்.

ஓதும் அன்பர் திருவடிகளே நினை துதியாமல் ---

வேத சிவாகம சித்தாந்த நூல்களை ஓதியுணர்ந்த நல்லன்பர்களை அடுத்து அவர்களுடன் கலந்து அவர்களது திருவடித் தாமரைகளை உள்ளத்தில் உன்னித் துதிப்பது சிவகதி அடைதற்கு எளிய தவநெறியாம்; அவ் அன்பர்களது உதவியால் அவ் அருள் நூல்களின் உண்மைக் கருத்துக்களை உணர்ந்து உய்யலாம். அவர் உதவியின்றி அந்நூல்களின் கருத்துக்களை உணர முடியாது.

தண்ணீர் விடாய் கொண்டோன் கடல்நீரை நேரே சென்று பருகுவானேயானால் விடாய் தீருமா? மேலும் மிகுதியுறும். மேகம் சென்று, கடல் நீரைப்பருகி, அதனிடத்துள்ள உப்பை நீக்கி, நன்னீரைத் தர, அதன் வாயிலாக வந்த நீரைக் குடிப்பவனுக்கே விடாய் நீங்கும்.

அதுபோல் நல்லோரை அடுக்காது, தாமே சாத்திரங்களை ஓத முயல்பவன் மனந்தெளிவு அடையாது. மேலும் மேலும் ஐயம், விபரீதம், மயக்கம் முதலியவற்றை யடைந்து கெடுவன். குருவாயிலாகவே கற்றல் வேண்டும். குருநாதனாகிய மேகம், வேதாகமாதி கடலில் சென்று, அதைப் பருகி, அதனிடத்துள்ள ஐய விபரீதங்களாகிய உவரை நீக்கி, நல்லுணர்வாகிய நன்னீரை அருளும்.

சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே-ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு     --- திருக்களிற்றுப்படியார்.


வெகு கவலையாய் உழன்று திரியும் ---

நல்லார் இணக்கம் இன்மையால், பெண்மயக்கம் என்னும் பேய் வாய்ப்பட்டு, கங்குல் பகலாகக் கறங்குபோல் திரிந்து, மிகுந்த துன்பத்தை அடைகின்றார்கள். ஆதலால் துன்ப நீக்கத்திற்கும் இன்ப ஆக்கத்திற்கும் ஏது நல் அன்பர் இணக்கமே ஆம். அரிவையர் ஆசை அல்லற்கு இருப்பிடமாம்.

மவுன உபதேச சம்பு ---

எண்ணுதற்கு எட்டாக் கண்ணுதற்கடவுள், அன்று ஆலின் கீழ் இருந்து குன்றாத் தவத்தினர்க்கு, ஞான வரம்பாகிய மோனநிலையை வாய்மலர்ந்து உரையாது மௌனமாகவே சின்முத்திரையாலேயே காட்டி சகலாகமசாரமாகிய அத்துவித உண்மையை உபதேசித்தருளினார்.

ஒன்று எனற்குச் சுட்டு விரலினையும், ஓர்இரண்டு
என்றிடற்கு அஃதோடு ஒன்றினையும், இரண்டு - ஒன்றுமென
ஆட்டிஒன்று ஆக்குதலும் காட்டாமல் அத்துவிதம்
காட்டியதே கல்லாலில் கை.      --- காசி யாத்திரை-பாம்பன் சுவாமிகள்


மௌனோபதேச வரலாறு

உமாதேவியார் தக்கன் சிவ அபராதியானதால் அவனால் வளர்ந்த உடம்பும் பேரும் நீங்குதற் பொருட்டு, சிவபெருமான்பால் அருளும் விடையும் பெற்று மலையரையனிடம் மகளாகி வளர்ந்து சிவமூர்த்தியைக் குறித்து தவமேற் கொண்டிருந்தனர்.

அக்காலையில் பிரம குமாரர்களாகிய சநகர், சநந்தனர், சநாதனர், சனத்குமாரர் என்னும் முனிவர் நால்வரும் வேதங்களை யாராய்ந்து அதனால் மனமடங்கப் பெறாராய், பற்பல தவங்களைச் செய்து, உள்ளுவார் வினை அகற்றும் வெள்ளி மலையை அடைந்து, திருநந்தி தேவரிடம் பணிந்து விடைபெற்று திருச்சந்நிதியுள் சென்று, ஆலமுண்ட நீலகண்டப் பெருமானை வணங்கி, கரமலரை சிரம் மிசை கூப்பி, “மலைமகள் மகிண! அருட்கடலே! ஆதிபுராதன! அநந்த வகையாகிய ஆரணப் பொருளை ஆராய்ச்சி செய்தும் அடியேங்களுடைய மனம் அலைந்து கொண்டே இருக்கிறது. மனம் அடங்கி யாங்கள் கடைத்தேறும் பொருட்டு வேதங்களின் உட்கிடையாக உள்ள பொருளை உபதேசித்தருள வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தனர். சிவபெருமான் தவமுனிவர்கட்கு அருள் புரிந்து “இங்கு இருந்தீர்” என்று அருள் புரிய, அவர்கள் அண்ணலாரது பொன்னடி மலரின் கீழ்த் தங்கினர்.

அந்திவண்ணர் நந்திதேவரை அழைத்து, “எம்மைத் தரிசிக்க மூவர் தேவாதிகளில் யாவர் எய்தினும் சந்நிதிக்குள் விடாதொழிக; மதனன் வரில் வர விடுக” எனப் பணித்து, கயிலைமலையில் கவினுறத் திகழும் கல்லாலின் கீழிருந்து நால்வர்கட்கும் சிவாகமங்களிற் கூறப்பட்ட பதி பசு பாசங்களாகிய முப்பொருள் இலக்கணங்களை விளக்கி வெளியிட்டருளினர். சனகாதியர் “அருள் வடிவாகிய குருநாத! எங்கள் மனம் விரிந்திருப்பதால் மனமடங்கும் வகை ஞானோபதேசம் புரிந்தருள வேண்டும்” என்று வேண்ட, புரமெரித்த பரமசிவனார் புன்முறுவல் பூத்து, வாய்மலர்ந்து ஒன்றும் கூறாது, “அப்பொருள் இவ்வாறிருக்கும்” என்று குறிப்பாற்காட்ட, திருக்கரம் ஒன்றனைத் திருமார்பிற் சேர்த்து சின்முத்திரை காட்டி, முனிவர்போல் ஒருகணப் பொழுது மோன நிலையில் நின்றருளினார். அதனால் அந்நால்வர்களும் மனமடங்கி, ஞானநிலை யுணர்ந்து, பேரின்பப் பெருவெள்ளத்தில் அழுந்திச் செயலற்று சித்திர விளக்கென இருந்தனர்.

இருவரும் உணரா அண்ணல் ஏனவெள் ளெறியாமை
சிர நிரை அநந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள்
கரதலம் ஒன்று சேர்த்தி மோன முத்திரையைக் காட்டி
ஒருகணம் செயல் ஒன்றின்றி யோகு செய்வாரின் உற்றான்.   --- கந்தபுராணம்

ஆலமரத்தின் கீழ் ஓர் அதிசயம் உண்டு! குரு வயது முதிர்ந்தவராகவும், சீடர் இளைஞராகவும் இருப்பது உலக வழக்கம்; அந்த ஆலமரத்தின் கீழ் குரு இளைஞர், சீடர்கள் வயது முதிர்ந்தவர்கள். குரு வியாக்யானம் செய்வதும் சீடர் மௌனமாக இருந்து கேட்பதும் உலக வழக்கம். அந்த ஆலமரத்தின் கீழ் குரு மௌனமாக இருக்கிறார். சீடர் ஐயமெல்லாம் நீங்க வியாக்யானஞ் செய்து கொண்டிருக்கிறார். இந்த அதிசயத்தை ஆலமரத்தின் கீழ் கண்டேன் என்று ஆதிசங்கரர் கூறினார்.


துங்கமிகு சனகன்முதல் முனிவோர்
         தொழுது அருகில் வீற்றிருப்ப,
சொல்லஅரிய நெறியைஒரு சொல்லால்
         உணர்த்தியே, சொருப அநுபூதி காட்டி,
செங்கமல பீடமேல் கல்லால் அடிக்குள் வளர்
         சித்தாந்த முத்தி முதலே!
சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே!
         சின்மயானந்த குருவே!”         --- தாயுமானவர்


படி அதிரவே நடந்த கழல் வீரா :-

முருகப் பெருமான் மயில் மிசை பவனி வருங்கால் உலகங்கள் அதிர்கின்றன என அவருடைய பவனிச் சிறப்பை வியக்கின்றனர். மேலும் அப்பெருமான் குழவிப் பருவம் மேற்கொண்டு தளர் நடையிட்ட போது, ஆதிசேடனது ஆயிரமுடிகளும், கீழ் ஏழுலகங்களும், நெறு நெறு என்று அதிர்ந்தன. வடமேருகிரி இடிந்து பொடிபட்டது: இந்திரன் தனது அமராவதியிற் குடி புகுந்தான்: நிருதர்கள் வயிற்றில் எரிபுகுந்தது எனப் பிறிதோரிடத்தில் வியந்தோதுகின்றனர்.

இமையவர்கள் நகரில் இறை குடிபுகுத, நிருதர்வயிறு
 எரிபுகுத, உரகர்பதி அபிஷேகம் ஆயிரமும்
 எழுபிலமும் நெறுநெறு என முறிய, வட குவடு இடிய
 இளைய தளர் நடை பழகி விளையாடல் கூருவதும்”        --- சீர்பாத வகுப்பு


பரமபதம் ஆய செந்தில் :-

திருச்செந்தூர் உலகில் பரமபதமாக விளங்கி இகபர நலன்களை எளிதில் வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது. “பரமபதமே செறிந்த” என்றும் பாடமுளது.


கருத்துரை

சிவபெருமானது இடப்புறமாகிய மலைமகள் குமரா! வடிவேல! மயில்மிசை பவனிவரும் கழல் வீரா! செந்திலதிப! பழனாபுரிப் பகவ! அடியேன் உலகிற் பிறந்து வளர்ந்து வாலப்பருவமடைந்து பெண்மயக்கில் சிக்கி வீணே அலையாமல், சிவகலை உணர்ந்த அடியாருடன் கலந்து தேவரீரது திருவடியிற் சேருமாறு அருள்புரிவீர்.







1 comment:

  1. மிக ஆழ்ந்த விளக்கம்.அருமை.நன்றி

    ReplyDelete

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...