விராலிமலை - 0357. ஐந்துபூதமும் ஆறுசமயமும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஐந்து பூதமும் (விராலிமலை)

முருகா!
குரு சம்பிரதாயத்துடன் பொருந்தும் நெறியை அருள்


தந்த தானன தான தனதன
     தந்த தானன தான தனதன
     தந்த தானன தான தனதன ...... தனதான


ஐந்து பூதமு மாறு சமயமு
     மந்த்ர வேதபு ராண கலைகளும்
     ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப

அண்ட ராதிச ராச ரமுமுயர்
     புண்ட ரீகனு மேக நிறவனும்
     அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்
     விந்து நாதமு மேக வடிவம
     தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம்

தங்க ளாணவ மாயை கருமம
     லங்கள் போயுப தேச குருபர
     சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ

வந்த தானவர் சேனை கெடிபுக
     இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
     மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி

வன்கண் வீரிபி டாரி ஹரஹர
     சங்க ராஎன மேரு கிரிதலை
     மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா

வெந்த நீறணி வேணி யிருடிகள்
     பந்த பாசவி கார பரவச
     வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும்

விண்டு மேல்மயி லாட இனியக
     ளுண்டு காரளி பாட இதழிபொன்
     விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

ஐந்து பூதமும், ஆறு சமயமும்,
     மந்த்ர வேத புராண கலைகளும்,
     ஐம்பது ஓர் விதம் ஆன லிபிகளும், ...... வெகுரூப

அண்டர் ஆதி சராசரமும், உயர்
     புண்ட ரீகனும், மேக நிறவனும்,
     அந்தி போல் உரு வானும், நிலவொடு ...... வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமும், அசபையும்
     விந்து நாதமும், ஏக வடிவம்,
     அதன் சொரூபம் அது ஆக உறைவது ...... சிவயோகம்,

தங்கள் ஆணவ மாயை கரும
     மலங்கள் போய், பதேச குருபர
     சம்ப்ரதாயமொடு ஏயும் நெறி அது ...... பெறுவேனோ?

வந்த தானவர் சேனை கெடி புக,
     இந்த்ர லோகம் விபுதர் குடி புக,
     மண்டு பூத பசாசு பசிகெட, ...... மயிட அரி,

வன்கண் வீரி, பிடாரி ஹரஹர,
     சங்கரா என, மேரு கிரிதலை
     மண்டு தூள் எழ வேலை உருவிய ...... வயலூரா!

வெந்த நீறு அணி வேணி இருடிகள்,
     பந்த பாச விகார பரவச
     வென்றி ஆன சமாதி முறுகு கல் ...... முழைகூடும்

விண்டு மேல் மயில் ஆட, இனிய கள்
     உண்டு கார் அளி பாட, இதழி பொன்
     விஞ்ச வீசு, விராலி மலைஉறை ...... பெருமாளே.


 பதவுரை


      வந்த தானவர் சேனை கெடி புக --- போருக்கு வந்தடைந்த அகர சேனைகள் புகழ்பெறவும்,

     விபூதர் இந்த்ர லோகம் குடி புக --- தேவர்கள் பொன்னுலகத்தில் குடிபுகுந்து இன்புறவும்,

     மண்டு பூத பசாசு பசி கெட --- நெருங்கிய பூதங்களும் பைசாசங்களும் பசியாறவும்,

     மயிட அரி --- மகிடாசுரனை வதைத்தவளும்,

     வண்கண் வீரி பிடாரி --- கொடிய தொழிலும் வீரமும் உடையவளும் ஆகிய காளிதேவி,

     ஹரஹர சங்கரா என --- அரஹரா! சங்கரா! என்று துதி செய்யவும்,

     மேருகிரி தலை --- மகா மேருகிரியில் உச்சியில்

     மண்டு தூள் எழ --- நெருங்கிய புழுதி உண்டாகவும்,

     வேலை உருவிய --- வேலாயுதத்தை விடுத்தருளிய,

     வயலூரா --- வயலூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ளவரே!

      வெந்த நீறு அணி --- நெருப்பால் வெந்த திருநீற்றைத் தரிக்கின்ற,

     வேணி இருடிகள் --- சடாமகுடத்தையுடைய மாமுனிவர்கள்,

     பந்தபாச விகார பரவச --- பந்த பாசத்தில் வசமாகும் தன்மையை,

     வென்றி ஆன --- வெற்றி பெற்ற,

     சமாதி --- சமாதி நிலையில்,

     முறுகு கல் முழை கூடும் --- முதிர்ந்த கற்குகையில் பொருந்தியுள்ள,

     விண்டு மேல் --- மலையின் மேல்,

      மயில் ஆட --- மயில் ஆடவும்,

     இனிய கள் உண்டு --- இனிய தேனைப் பருகி,

     கார் அளி பாட --- கரிய வண்டுகள் பாடவும்,

     இதழி --- கொன்றை மரங்கள்,

     பொன் விஞ்ச வீசு --- பொற்கட்டிகள் போன்ற மலர்களை மிகுதியாக வீசுகின்ற,

     விராலிமலை உறை --- விராலிமலை என்னும் திருமலையில் வாழ்கின்ற

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      ஐந்து பூதமும் --- மண் நீர் தீ காற்று விண் என்று ஐம்பெரும் பூதங்களும்,

     ஆறு சமயமும் --- சைவம் வைணவம் காணாபத்தியம் கொளமாரம் சாத்தேயம் சௌரம் என்ற ஆறு சமயங்களும்,

      மந்த்ர --- மந்திரங்களும்,

     வேத --- வேதங்களும்,

     புராண –-- பதினெண் புராணங்களும்,

     கலைகளும் --- அறுபத்து நான்கு கலைகளும்,

     ஐம்பதோர் விதமான லிபிகளும் --- ஐம்பத்தொரு வகையான எழுத்துக்களும்,

     வெகு ரூப --- அநேக உருவங்களுடன் கூடிய,

     அண்டர் ஆதி --- தேவர்கள் முதலிய,

     சர அசரமும் --- அசைகின்ற உயிர்களும் அசையாத உயிர்களும் ஆகிய யாவும்,

     உயர் புண்டரீகனும் --- உயர்ந்த தாமரை மலரில் வாழும் நான்முகக்கடவுளும்,

     மேக நிறவனும் --- நீருண்ட நீலமேகம் போன்ற வடிவுடைய நாராயணமூர்த்தியும்,

     அந்தி போல் உருவானும் --- அந்தி வானம் போன்ற செம்மேனியுடைய உருத்திர மூர்த்தியும்,

     நிலவொடு வெயில் காலும் --- நிலவுடன் வெயிலை வீசுகின்ற,

     சந்திர சூரியர் தாமும் --- சந்திர சூரியரும்,

     அசபையும் --- அம்ச மந்திரமும்,

     விந்து நாதமும் --- விந்து நாதமும்,

     ஏக  வடிவம் --- ஒரே வடிவமாகும்.

     அதன் சொரூபமது ஆக உறைவது --- சுட்டறிவு அற்று எல்லாம் சிவவடிவாகக் காண்பதுவே,

     சிவயோகம் --- சிவயோகமாம்,

     தங்கள் ஆணவமாயை கரும மலங்கள் போய் அற --- தங்களுடைய ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் அறவே நீங்கப்பெற்று,

     உபதேச குருபர --- உபதேசிக்கின்ற குருபரருடைய,

     சம்ப்ரதாயமொடு --- தொன்றுதொட்டு வருகின்ற நியமத்துடன்,

     ஏயும் நெறி அது --- பொருந்துகின்ற வழியை,

     பெறுவேனோ --- அடியேன் பெறக்கடவனோ?


பொழிப்புரை


         போருக்கு வந்த அசுர சேனைகள் (வேற்படையால் அழியும் ஒரு சிறந்த) புகழைப் பெறவும், தேவர்கள் பொன்னாட்டில் குடிபுகுந்து இன்புறவும், நெருங்கிய பூதங்களும் பைசாசங்களும் பசியாறவும், மகிடாசுரனை அழித்தவளும் பயங்கரமான தொழிலை உடையவளும் வீரத்தில் மிக்கவளுமாகிய காளிதேவி அஞ்சி, “அரஹரா! சங்கரா!” என்று துதி செய்யவும், மாமேருகிரியின் உச்சியில் மிகவும் புழுதி எழவும் வேற்படையை விடுத்துருளிய வயலூர் ஆண்டவரே!

         நெருப்பால் வெந்த திருநீற்றைத் தரிக்கின்ற சடாமகுடத்தையுடைய மாமுனிவர்கள் பந்த பாசமாய விகாரத்தினாலே தன் வசமற்றிருப்பதை வெல்லற்குக் காரணமான சமாதியை முதிர்ந்த கற்குகையின்கண் கூடுகின்ற மலையின் மேல், மயில்களாகிய நடனமாதர்கள் ஆடவும், இனிய கள்ளுண்டு கரிய வண்டுகளாகிய நட்டுவர் பாடவும். (அவ்வாடலையும் பாடலைவும் கண்டுங் கேட்டும் உள்ளம் உவந்து) கொன்றை மரங்கள் மலர்கள் என்ற பொற்கட்டிகளை மிகுதியாகப் பரிசாக வீசி வழங்கவும், ஆகிய நலங்களுடன் கூடிய விராலிமலையின்கண் எழுந்தருளிய பெருமிதமுடையவரே!

         ஐந்து பூதங்களும், ஆறு சமயங்களும், மந்திரங்களும், வேதங்களும், புராணங்களும், கலைகளும், ஐம்பத்தொரு வகையான அட்சரங்களும், தேவர்முதல் தாவரம் ஈறாக உள்ள பலவித வடிவங்களையுடைய சர அசரங்களும், உயர்ந்த பிரமதேவனும் திருமாலும், உருத்திரமூர்த்தியும், நிலவையும் வெயிலையும் வீசுகின்ற சந்திர சூரியரும், அம்ச மந்திரமும், விந்துநாதமும் ஒரே வடிவந்தான்! வேறு வேறாகப் பிரித்துச் சுட்டியறிகின்ற அறிவு நீங்கி எல்லாம் சிவமாகப் பார்க்கின்ற அகண்டாகார நிலையில் நிலைத்திருப்பது சிவயோகமாகவும், ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் நீங்கி உபதேச குருபர சம்ப்ரதாயத்துடன் பொருந்தும் நன்னெறியை அடியேன் பெற்று உய்வேனோ?


விரிவுரை

ஐந்து பூதமும் ---

மண், நீர், தீ,காற்று, வெளி என்பன.

ஆறுசமயமும் ---

சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாக்தம, சௌரம் என்பன. இறைவனுடைய அருட்குணங்கள் ஆறினையும் தனித்தனியே தமக்குரியவாகக் கொள்வன.

மந்த்ர ---

மந்-நினைப்பு;திர-விடுப்பது; நினைப்பவரைப் பாவத்தினின்றும் விடுப்பது, அது ஏழு கோடிகளையுடையது. நம;, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வௌஷட், பட், ஹும்பட், என்பன.


வேத ---

இருக்கு, யஜுர், ஸாமம், அதர்வணம், என்பன. ஆயுர்வேதம், காந்தர்வவேதம், அர்த்தவேதம், தநுர்வேதம், என்பன உபவேதங்களாம்.

புராண ---

புராணங்கள் பதினெட்டு.

சைவம், பௌஷ்யம், மார்க்கண்டேயம், இலிங்கம், காந்தம், வராகம், வாமன்ம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காருடம், நாரதீயம், வைணவம், பாகவதம், பிரமம், பதுமம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம் என்பன.

ஐம்பதோர் விதமான லிபிகளும் ---

ஆறாதாரங்களில் அடங்கியுள்ள அகராதி க்ஷகாராந்த மாகவுள்ள மாத்ருகா அட்சரங்கள்.

 
அசபை ---

உதடு அசையச் செய்வது ஜபம். உதடு அசையாமல் மானஸீகமாகச் செய்வது அஜபாநலம். அதனை ஹம்ஸமந்திரம் என்பர்.

ஏகவடிவம் ---

சுட்டி அறிகின்ற அறிவு நீங்கி எல்லாம் சிவவடிவாகப் பார்த்தல்.

சிவயோகம் ---

யோகம் என்னும் சொல்லுக்குப் பொருந்துதல் என்று பொருள். பொருந்துதல் என்ற உடனே (1) பொருந்துகின்ற பொருள் எது? (2) எந்தப்பொருளோடு பொருந்த வேண்டும்? (3) பின் பொருந்தற்குரிய காரணம் யாது? (4) முன் பொருந்தாதிருந்த மைக்குக் காரணம் யாது? (5) ஒன்றை மற்றொன்றனொடு பொருத்துகின்ற உபகார சக்தி எது? (6) பொருந்திய பின்விளையும் பயன் யாது? என்ற வினாக்கள் எழும். இவ்வினாக்கட்கு முறையே விடை பின்வருமாறு:

1.பொருந்துகின்ற பொருள் ஜீவான்மா;

2.பொருந்தப்படும்பொருள் பரமான்மா;

3..பின் பொருந்துதற்குரிய காரணம் பிரமானந்த வேட்கை;

4.முன் பொருந்தா திருந்தாமைக்குக் காரணம் ஆணவமல மறைப்பு;

5.பொருந்துகின்ற பொருள் இறைவனோடு தாதான்மியப்பட்டு நிற்கும் அனுக்கிரக சக்தி;

6.பொருந்தியபின் விளைவது சிவானந்தம்.

ஒருத்தியும் ஒருவனும் கூடி இன்புறுவார்களானால், கூடுகின்ற மங்கையும், கூட்டப்படுகின்ற மணாளனும், அவள் அவனைக் கூடுவதற்குரிய காமவேட்கையும், முன் அவனைக் கூடாதிருந்தமைக்குக் காரணம் அவனை அறியாமையும், அவனை அவளுடன் கூட்டிவைத்து உதவி புரிகின்ற தோழியும், கூடியபின் விளைகின்ற இன்பமும் போலென்றுணர்க.

இனி, ஓர் அறிவற்ற பொருள் மற்றோர் அறிவற்ற பொருளுடன் கூடி இன்புறுவதில்லை. ஒரு மரப்பலகை ஒரு மாம்பழத்துடன் கலந்து அதன் மதுரத்தை அறியாது. அறிவற்ற பொருளாயினும் அறிவுடைய பொருளுடன் கூடுங்கால் அறிவுடைய பொருள் இன்புறும். ஒரு மாங்கனியை ஒரு மனிதம் நுகர்ந்து இன்புறுவன். ஆயினும் அல்ப இன்பமேயாம்; அதனினும் சிறந்தது அறிவுடைய பொருள் மற்றோர் அறிவுடைய ஒருத்தியுங் கூடுகின்ற பொழுது, மிகுந்த இன்பம் உண்டாகும். ஆயினும் அவ்வின்பம், கணப்பொழுதில் மறைவதும், தூய்மையில்லாததும், நோய் செய்வதும், வெறுக்கத்தக்கதுமாம்.

சிற்றறிவுடைய சீவான்மா பேரறிவுடைய பரமான்மாவோடு கூடுகின்ற பொழுது, தெவிட்டாத பேரின்பமும், அநுபவிக்க அநுபவிக்கக் குறையாத ஆனந்தமும், நிலைபேறான உண்மை யின்பமும் உண்டாகும். ஆதலால், இது சிவனுடன் பொருந்துதல் எனப் பொருள்படும்.
  
அட்டாங்க யோகமும், ஆதாரம் ஆறும், வத்தை ஐந்தும்
விட்டு, றிப் போன வெளி தனிலே வியப்பு ஒன்றுகண்டேன்,
வட்டு ஆகி, செம்மதிப் பால் ஊறல் உண்டு மகிழ்ந்து இருக்க,
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே.      ---பட்டினத்தார்.

நிற்க, பிராணவாயுவை முறைப்படி ஒடுக்கி உள்ளத்தை ஒடுக்குவது ஒருமுறை; அதற்கு அடயோகம் என்றுபேர். அது குருவின்பால் முறையே கற்றுப்பயின்று செய்யத்தக்கதாம். மிகவும் அரிய சாதனம், அதனை தூலயோகம் என்னலாம்.

அதனை விடுத்து, சூட்சும முறையாக உள்ளத்தை ஒடுக்கி அவ்வழியே பிராணவாயு முதலியவற்றை ஒடுக்கி சிவத்துள் ஆழ்ந்து ஒடுங்குவதுவே சிவயோகம்.

அதுவே எளிது. ஒரு பொருளை ஆழ்ந்து சிந்திக்கும்போது பிராணவாயு ஒடுங்குவது கண்கூடு. நாடோறும் சிவத்தை உன்னி சிந்தை முழுவதும் அப்பொருளிடம் வைத்து அசைவற்று சித்திரதீபம் போலிருக்கின், கருவிகரணங்கள் யாவும் ஒடுங்கும், அப்போது சிவவொளி நன்றாக வீசும், மலமறைப்பு அறவே நீங்கும். அவ்வழி சிவனந்தப் பெருவெள்ளம் பெருகி ஓடும்.

அடயோகத்தை அருணகிரி சுவாமிகள் மறுத்துரைக்குமாறு காண்க.

துருத்தி எனும்படி கும்பித்து, வாயுவைச் சுற்றிமுறித்து,
அருத்தி உடம்பை ஒறுக்கில் என் ஆம்? சிவ யோகம் என்னும்
குருத்தை அறிந்து முகம்ஆறுஉடைக் குருநாதன் சொன்ன
கருத்தை மனத்தில் இருந்தும் கண்டீர்,முத்தி கைகண்டதே.  --- கந்தரலங்காரம்.

சிவயோக முறையாக பிராணவாயுவை செம்மைப் படுத்துவதே செந்நெறியென தவயோகர் போற்றுஞ் சிவயோகச் செம்மலாகிய எமது திருமூலர் கருமூலம் கெடுமாறு கூறுவதைக் காண்க.


ஆரிய நல்லன், குதிரை இரண்டுஉள,
வீசிப்பிடிக்கும் விரமுஅறி வாரில்லை,
கூரிய நாதன்குருவினு அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.              --- திருமந்திரம்.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மலம் ஆக்கில்,
உறுப்புச் சிவக்கும், உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.       --- திருமந்திரம்.

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்குஅறி வாரில்லை,
காற்றைப் பிடிக்குங் கணக்குஅறி வாளர்க்குக்.
கூற்றை உதைக்குங் குறியது வாமே.           --- திருமந்திரம்.

கால்பிடித்து மூலக் கனலை மதி மண்டலத்தின்
மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே       --- தாயுமானார்.

யோகம் என்பதனைப் பலர் பலவாறு கூறினும் யாம் கூறும் சிவத்தொடு கலத்தலே பொருள் என்பதனை காசிகாண்ட அருமை வாக்காலறிக.

இந்திய விடயம்தன்னொடு சிவணல்
         யோகம் என்பார்ச் சிலர், சிலர்தம்
சிந்தனை உயிரோடு அடைதல்
         நல் யோகமந் என்பர், இது அன்றியும் சிலர்தாம்
முந்திய பிராணன் அபானனோடு அடைதல்
         என்பர், இம் மொழிந்தவை அனைத்தும்
அந்தம்இல் யோகமல்ல, நற்சீவன்
         பரத்துடன் அடைவதே யோகம்.

வெந்த நீறணி இருடியர் ---

விராலிமலையில் குகைகளில் முனிவர்கள் சமாதி நிலையில் உறைகின்றனர். அவர்கள் திருநீறு தரித்து விளங்குகின்றனர். அத்திருநீற்றின் அளவிடற்கரிய பெருமையைச் சிறிது கூறுதும்.
  
திருநீறு செய்யும் விதி

முத்தி தருவது நீறு முநிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே.

திருநீறு, பசிதம், இரட்சை, விபூதியெனப் பல நாமங்கள் பெற்று விளங்கும். அறியாமையை யகற்றி சிவசோதியைத் தரலால் பசிதம்;

பேய் பழிபாவம் நோய் ஆகிய தீகைளின்றுங் காப்பதனால் இரட்சை; அளவற்ற செல்வத்த் தருதலால் விபூதி; எனப் பெயர் பெறும்.

இரும்புக்கவசம் பூண்டவனுக்கு ஆயுதங்களின் துன்பம் நேராது. அதுபோல், திருநீறு என்ற வஜ்ரகவசம் பூண்டார்க்கு யாதோர் இடரும் எய்தாது. வினைநீங்கி வீடுபெறுவர்.

கங்காளன் பூசங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசிமகிழ்வரே யாமாகிற்
றங்கா வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே.          --- திருமூலர்.

திருநீறு கற்பம்,அநுகற்பம், உபகற்பம், என மூன்று வகைப்படும்.

கற்பம்:-

கன்று போடாதது, மலடு, இளங்கன்றுடையது, கருவுற்றது, முதிர்ந்த கன்றுடையது, அங்கப்பழுதுடையது. ஆகிய பசுக்களை நீக்கி, நல்ல அழகுடைய சிறந்த கன்றோடு கூடிய பசுவை பங்குனி மாதத்தில் நெல்லறுத்த வயலில் மேயவிட்டு, அப்பசு விடுகின்ற கோமய (சாண) த்தை அட்டமி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாள்களில்,காலை நீராடி சிவபூஜை முதலியன செய்து, சாணம் கீழே விழாமற்படிக்கு, தாமரை, பலாசம், வாழை ஆகிய இலைகளில் ஏதாவதொன்றில், சத்யோஜாத மந்திரஞ் சொல்லி ஏற்கவேண்டும். மேல் வழும்பினை எடுத்துவிட்டு, வாமதேவ மந்திரஞ் சொல்லி, பஞ்ச கவ்வியம் விட்டு, அகோர மந்திரம், கொல்லிப் பிசைந்து, தற்புருட மந்திரஞ் சொல்லி உருண்டை செய்தல் வேண்டும். ஓமத்தீ மூட்டிபதடியுடன் சேர்த்துச் சுட்டு, நல்லபதத்தில் ஈசான மந்திரஞ் சொல்லி எடுத்து, புதிய ஆடையில் வடிகட்டி, பொன், வெள்ளி, தாமிரம், ஆகிய பாத்திரம் உத்தமம், மத்திமம், அதமம், இன்றேல் புதியமண் பித்தளை, சுரை ஆகிய பாத்திரங்களிலும் வைக்கலாம். அவ்வாறு்வைக்கும் போது அத்திருநீற்றை சிவபெருமானுடைய திருவுருமாக எண்ணி பஞ்சப் பிரமமந்திரமும், சடங்க மந்திரமும் சொல்லி, அவற்றுடன் சண்பகம், தாழை, பலாசம்புன்னாகம், தாமரை, துளசி, பாதிரி, தக்கோலம், நாயுருவி, தருப்பையின் நுனி முதலியவற்றை விபூதியிலிட்டு, மலர் சூட்டி வெண் துகிலால் வாய்கட்டு, காயத்திரி மந்திரஞ் சொல்லி தேனுமுத்திரைகாட்டி பத்திரப்டுத்துதல் வேண்டும். அதில் வேண்டியபோது சிவமந்திரஞ் சொல்லி எடுத்து உபயோகித்துக் கொள்ளவேண்டும்.

அநுகற்பம்:-

சித்திரை மாதத்தில்காட்டிற்குச் சென்று அங்குள்ள பசுவின் உலர்ந்த கோமய (சாணத்)தைக் கொண்டுவந்து இடித்து பஞ்சகவ்வியம் விட்டு முன் கூறிய முறைப்படி நீற்றிஎடுக்கவேண்டும்.


உபகற்பம்:-

காட்டுத்தீயால் வெந்நீற்றைக் கொணர்ந்து இடித்து கோ நீர் விட்டுப் பிசைந்து, முன் கூறிய முறைப்படி நீற்றி எடுத்து வைக்கவேண்டும். இனி கற்பம் என்றும் ஒருவகை உண்டு. அது உபகற்பத்தின் சிறு பிரிவாம்.

சர்வ சங்கார காலத்தில் சிவபெருமான் மூவரையும், தேவரையும், நெற்றிக் கண்ணால் எரித்து அம்மயானத்தில் நடித்தனர். அப்பொழுது அவருடைய அருள் திருமேனியில் அந்நீறு முழுவதும் படிந்தது. அதனைச் சிவபெருமான் திருக்கரத்தால் வழித்து எறிந்தனர். அதனை இடபதேவ் உண்டு தன் வீரியத்தைப் பசுக்கள் பால் விடுத்தனர். அதனாலும் தேவர்கள் யாவரும் பசுவின் உடம்பில் வசிப்பதாலும், பசுவின் சாணத்தை எரித்த நீறு மிகவும் புனிதம் பெற்றது.

அத் திருநீற்றை ஒரு கரத்தில் வாங்குதலும், தலை கவிழ்ந்து பூசுதலும் குற்றம். இனி, திரிபுண்டரமாக அணிகின்ற விதியை தத்தம் குருமூர்த்தியிடம் கேட்டுத் தெளிக. சென்னியில் அணிவதால் கழுத்து வரை செய்த பாவங்கள் தீரும். மார்பில் அணிவதால் உள்ளத்தால் செய்த பாவம் தீரும். கரத்தில் அணிவதால் கரத்தால் செய்யும் பாவங்கள் தீரும். முழங்தாளில் அணிவதால் கால்களால் செய்யும் பாவங்கள் தீரும். இங்ஙனம் திருநீறு எல்லாப் பாவங்களையும் போக்கவல்லது. மிகுந்த பாவம் செய்தவர்க்கு திருநீற்றில் வெறுப்பு உண்டாகும். திருநீறு இடாத வரைக் கண்டு பெரியவர்கள் அஞ்சுகின்றனர்.

பிணியெலாம் வரினும் அஞ்சேன்,
     பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்,
துணிநிலா அணியினான் தன்
     தொழும்பராடு அழுந்தி, அம்மால்
திணிநிலம் பிளந்து காணாச்
     சேவடி பரவி, வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால்
     அம்ம நாம் அஞ்சுமாறே.                            --- மாணிக்கவாசகர்.

போற்றி நீறு இடாப் புலையரைக் கண்டால்
         போக போகநீர் புலம் இழந்து அவமே,
நீற்றின் மேனியர் தங்களைக் கண்டால்
         நிற்க நிற்க, அந் நிமலரைக் காண்க,
சாற்றின் நன்னெறி ஈதுகாண் கண்காள்!
         தமனி யப்பெரும் தனுஎடுத்து எயிலைக்
காற்றி நின்ற நம் கண்நுதற் கரும்பைக்
         கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.     --- திருவருட்பா


திருநீறு அணியாது செய்யும் தான தருமங்களாலும், விரதங்களாலும், தவங்களாலும், ஒருபோதும் பலன் அடையார். ஆதலால் திருநீற்றை ஒவ்வொருவரும் அன்புடன் அணிதல் வேண்டும்.

சிவநாமத்தைக் கூறி திருநீறு இட்டார், நிச்சயமாக சிவகதி பெறுவர். “திருவாய்ப் பொலிய சிவாயம வென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி” என்று அப்பமூர்த்திகள் கூறுகின்ற அருமையை உன்னுமின். “சுந்தரமாவது நீறு” “கவினைத் தருவது நீறு” என்ற திருவாக்குகளையும் உய்த்து உணர்மின்; மேல் நாட்டாரும் இன்று அழகு செய்ய வெண் பொடியை முகத்திற் பூசி உவக்கின்றனர் அன்றோ? சிவப்பொடி பூசிற் பவப்பொடியாகும். சிவநாமயத்தை கூறி திருநீறிட்டார்க்கு பேய் பில்லி பூதங்களாலும், நோய்களாலும், துன்பம் நேராது என்பதை இன்றைக்கும் கண்கூடாகக் காண்கின்றோம். “நீறில்லா நெற்றி பாழ்” என்ற தமிழ்ன்னையின் அமிழ்த உரையையும் நினைமின். அன்பர்கள் அனைவரும் அன்புடன் அரன் நாமங் கூறி திருநீறிட்டு வினைகளை வேரோடு களைந்து இருமை நலன்களை எளிதிற் பெறுவார்களாக.

திருநீறு வாங்கும் முறை, திருநீற்றைத் தரிக்கும் முறை குறித்து, குமரேச சதகம் கூறுவதைக் காண்க.

திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

          குதிரைமீது அமர்ந்தும், அழகிய பல்லக்கில் அமர்ந்தும், உயரமான மணைமீது அமர்ந்தும்,  அழகிய பொதுவிடத்திலே நன்றாக அமர்ந்தும், பெரிய திண்ணைகளில் அமர்ந்தும்,  திருநீறு அளிப்போர்கள் கீழேயிருக்க (வாங்குவோர்) மேலிடத்திலிருந்து வாங்கி அணிந்தாலும், ஒரு கையாலும் மூன்று விரல்களாலும் ஏற்றாலும், (வாயில்) தரித்த தாம்பூலத்தோடும், அருமையான வழியொன்றிற் செல்லும்பொழுதும்,  அழுக்கு நிலத்திலும், (ஆகிய) அந்த இடங்களிலே அணிந்தாலும், அளித்தபோது மறுத்தாலும், அவர்கட்கு நரகம் கிடைக்கும் என்று அறிஞர் கூறுவர்.

     
திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     பேரன்புடன் சிவசிவா என்று துதித்து விருப்பத்துடன் திருநீற்றைக் கையினால் அள்ளி, நிலத்தில் சிந்தாதவாறு மேல்நோக்கியவாறு காதுகளின் மீதும் தோள்களின்மீதும் படியும்வண்ணம், நெற்றியில் பதியும்படி மூன்று விரல்களால் ஒவ்வொரு நாளும் (சிவ) நினைவுடன் அணிபவர்க்கு, நீண்ட நாளைய பழவினை நெருங்காது;   உடம்பு தூயது ஆகும்; அவர்களிடமிருந்து பரம்பொருள் விலகாமல் உமையம்மையாருடன் எப்போதும் விளையாடுவான்;  முகத்திலே திருமகள் நடம்புரிவாள்; மனக்கலக்கம் உண்டாகாது;  மேலான வீடு தரும்;  இவர்களையே சத்தியும் சிவனும் என விளம்பலாம்.


விண்டுமேல் மயிலாட..............பொன் விஞ்ச வீசு ---

அருணகிரியார் இயற்கைக் காட்சியில் நம்மை ஈடுபடுக்கின்றனர். விராலிமலையில் எந்நேரமும் ஒரு நடனக் கச்சேரி நடக்கின்றது. நடனமாடுகின்ற நட்டுவனார் வண்டு; அந்த நடனத்தைக் கண்டு கொன்றைமரம் என்ற தனவந்தன் தனது மலர்களாகிய பொற்கட்டிகளை அலட்சியமாக அப்படி வீசுகின்றது. என்ன அழகு?

இவ்வண்ணமே எமது திருஞானசம்பந்தப் பெருந்தகையாருங் கூறுமாறு காண்க.

வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர் பொன் இதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே.

கருத்துரை

அசுரரை அழிக்க வேல் விடுத்தருளிய வயலூராண்டவரே! விராலிமலையுறை வித்தகரே! எல்லாம் சிவவடிவாகப் பார்த்து சிவயோகத்தில் நிலைபெற சற்குரு பரம்பரையோடு சேர அருள் புரிவீர்.




No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...