தென்சேரிகிரி - 0409. கொண்டாடிக் கொஞ்சு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொண்டாடிக் கொஞ்சும் (தென்சேரிகிரி)

முருகா!
பொதுமாதர் மயல் தீர, உபதேசம் அருள்.


தந்தானத் தந்த தனதன
     தந்தானத் தந்த தனதன
          தந்தானத் தந்த தனதன ...... தனதான


கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
     கண்டாரைச் சிந்து விழிகொடு
          கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக்

குன்றோடொப் பென்ற முலைகொடு
     நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
          கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும்

பண்டாடச் சிங்கி யிடுமவர்
     விண்டாலிக் கின்ற மயிலன
          பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு

பண்டே சொற் றந்த பழமறை
     கொண்டேதர்க் கங்க ளறவுமை
          பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே

வண்டாடத் தென்றல் தடமிசை
     தண்டாதப் புண்ட ரிகமலர்
          மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா

வன்காளக் கொண்டல் வடிவொரு
     சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
          மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே

திண்டாடச் சிந்து நிசிசரர்
     தொண்டாடக் கண்ட வமர்பொரு
          செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே

சிங்காரச் செம்பொன் மதிளத
     லங்காரச் சந்த்ர கலைதவழ்
          தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு,
     கண்டாரைச் சிந்து விழிகொடு,
          கொந்து ஆரச் சென்ற குழல்கொடு, ...... வடமேருக்

குன்றோடு ஒப்பு என்ற முலைகொடு
     நின்று, லக்கம் செய் நிலைகொடு
          கொம்பாய் எய்ப்பு உண்ட இடைகொடு, ...... பலரோடும்

பண்டாடச் சிங்கி இடும் அவர்,
     விண்டு ஆலிக்கின்ற மயில் அன
          பண்பால், இட்டம் செல் மருள் அது ...... விடுமாறு,

பண்டே சொல் தந்த பழமறை
     கொண்டே தர்க்கங்கள் அற, உமை
          பங்காளர்க்கு அன்று பகர் பொருள் ...... அருள்வாயே!

வண்டு ஆடத் தென்றல் தடமிசை
     தண்டாதப் புண்டரிக மலர்
          மங்காமல் சென்று மதுவை செய் ...... வயலூரா!

வன்காளக் கொண்டல் வடிவு ஒரு
     சங்க்ராமக் கஞ்சன் விழ உதை
          மன்றாடிக்கு அன்பு தரு திரு ...... மருகோனே!

திண்டாடச் சிந்து நிசிசரர்,
     தொண்டு ஆட, கண்ட அமர் பொரு
          செஞ்சேவல் செங்கை உடைய சண் ...... முகதேவே!

சிங்காரச் செம்பொன் மதிள்அது
     அலங்காரச் சந்த்ர கலைதவழ்
          தென்சேரிக் குன்றில் இனிது உறை ...... பெருமாளே.


பதவுரை

வண்டு ஆட --- வண்டுகள் மகிழ்ந்து விளையாட,

தென்றல் தடம் மிசை தண்டாத --- தென்றல் காற்று வீசும் குளத்தை நீங்காதுள்ள,

புண்டரிக மலர் மங்காமல் சென்று --- தாமரை மலர்கள் வாட்ட மடையாமல் அவற்றிடம் போய்,

மதுவை செய் --- தேனைப்பருகும்,

வயலூரா --- வயலூர் ஆண்டவனே!

காள கொண்டல் வடிவு --- வலிமைமிக்க கரிய மேகத்தின் வடிவுடையவனாய்,

ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை --- ஒப்பற்ற போர்புரியும் கம்சன் இறந்து விழும்படி உதைத்து,

மன்றாடிக்கு --- வதாடிய கண்ணபிரானுக்கு,

அன்பு தரு --- அன்பை விளைவிக்கும்,

திருமருகோனே --- அழகிய மருகரே!

சிந்து நிசி சரர் திண்டாட --- சிதறுண்ட அசுரர்கள் திண்டாடும்படியாகவும்,

தொண்டாட --- அடிமை பூணும்படியாகவும்,

கண்ட அமர் பொரு --- கண்டித்துப்போர் புரிந்த,

செம்சேவல் செம்கை உடைய --- சிவந்த சேவலைச் செம்கையில் கொண்ட,

சண்முக தேவே --- ஆறுமுகக் கடவுளே!

சிங்கார செம்பொன் மதில் அது --- அழகிய செம்பொன் மதிலின்,

அலங்காரம் --- அலங்காரம் உடையதாய்,

சந்திர கலை தவிழ் --- சந்திரனுடைய கலை தவழுகின்றதாய் விளங்கும்,

தென்சேரி குன்றில் இனிது உறை --- தென்சேரி மலையில் இன்பத்துடன் வீற்றிருக்கும்,

பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

கொண்டாடி --- சிறப்பித்துப் பேசி, கொஞ்சு மொழி கொடு ---கொஞ்சிப் பேசுகின்ற சொற்களைக் கொண்டும்,

கண்டாரை சிந்து விழி கொடு --- தம்மைக் கண்டவர்களின் உள்ளத்தை வெட்டி அழிக்கும் கண்களைக் கொண்டும்,

கொந்து ஆர சென்ற குழல் கொடு --- பூங்கொத்துக்கள் நிரம்பப் புகுத்தியுள்ள கூந்தல் கொண்டும்,

வடமேரு குன்றோடு ஒப்பு என்ற முலை கொடு ---வடமேருமலைக்கு நிகரான முலைகளைக் கொண்டும்,

நின்று ஒலக்கம் செய்நிலை கொடு --- நின்று சபாமண்டபத்தில் கொலு விருப்பது போன்ற நிலை கொண்டும்,

கொம்பாய் எய்ப்பு உண்ட இடைகொடு --- கோல்போல் இளைத்த இடைகொண்டும்,

பலரோடும் --- பலருடனும்,

பண்டு ஆட சிங்கி இடும் அவர் ---- பழமைபோல் பேசி வசப்படுத்துகின்ற பொது மாதர்களின்,

விண்டு ஆலிக்கின்ற --- வாய்விட்டுக் கூவுகின்ற,

மயில் அன பண்பால் --- மயில் போன்ற நடிப்பினால்

இட்டம் செல் மருள் அது விடுமாறு --- என் விருப்பம் அவர்பால் செல்லுகின்ற மயக்கமானது நீங்கும்படி,

பண்டே சொல்தந்த பழமறை கொண்டே --- பழமையான சொற்கள் அமைந்த வேத மொழியைக் கொண்டு,

தர்க்கங்கள் அற --- தருக்க வாதங்கட்கு இடமில்லாதபடித் தெளிவாக,

உமை பங்காளர்க்கு அன்று பகர் --- உமா சமேதராகிய சிவமூர்த்திக்கு அந்நாள் உபதேசித்த,

பொருள் அருள்வாயே --- பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வீராக.


பொழிப்புரை


வண்டுகள் களித்து விளையாடத் தென்றல் காற்று வீசும் குளத்தை நீங்காது அங்குள்ள தாமரை மலர்கள் வாடாவண்ணம் அவற்றிடம் போய்த் தேனைப் பருகும் வயலூர் ஆண்டவரே!

வலிய கரிய மேகத்தின் வடிவுடையவரும், போரில் எண்ணமுள்ள கம்சன் இறந்து விழத்தாக்கி உதைத்து வாதாடியவரும் ஆகிய கண்ணபிரானுடைய திருமருகரே!

அசுரர்கள் சிதறுண்டு திண்டாடவும், சில் அடிமைகளாகவும் போர் புரிந்த ஆறுமுகக் கடவுளே! சிவந்த சேவலைச் செங்கரத்தில் ஏந்தியவரே!

அழகிய மதிலின் அலங்காரம் கொண்டதாய், சந்திரனுடைய, கலை தவழுகின்றதாய் விளங்கும் தென்சேரி மலையில் மகிழ்ந்து வாழும் பெருமிதமுடையவரே!

சிறப்பித்துப் பேசிக் கொஞ்சுகின்ற மொழிகளைக்கொண்டும், தம்மைக் கண்டவர்களின் உள்ளத்தை வெட்டியழிப்பது போன்ற விழிகளைக் கொண்டும், பூங்கொத்துக்களை முடித்த கூந்தலைக் கொண்டும், வட மேருமலைக்கு ஒப்பான தனங்களைக் கொண்டும், சபா மண்டபத்தில் கொலு வீற்றிருப்பது போன்ற நிலைகொண்டும், பலருடனும் பழைய நட்புபோல் பழகி வசப்படுவதும் பொது மாதர்களின் வாய்விட்டுக் கூவுகின்ற மயில்போன்ற நடிப்பால், அடியேனுடைய விருப்பம் அவர்பால் செல்லும் மயக்கமானது நீங்குமாறு, பழமையான சொற்கள் அமைந்த பழைய வேதமொழியை கொண்டு, தருக்க வாதங்களுக்கு இடமில்லாத படி தெளிவாக, உமா நாதருக்கு உபதேசித்தருளிய பொருளை எனக்கு அருள்புரிவீராக.


விரிவுரை


இத் திருப்புகழில் முதற்பகுதி விலைமாதர்களின் இயல்பைக் கூறுகின்றது.

உமைபங்காளற்கு அன்று பகர் பொருள் அருள்வாயே:-

உமையொரு கூறுடைய சிவபிரானுக்கு உபதேசித்த ஓம் என்னும் ஒரு மொழிப் பொருளை அடியேனுக்கு உபதேசித்தருள்வீர் என்று அருணகிரிநாதர் இந்த அடியில் விண்ணப்பம் புரிகின்றார்.

அதுபடியே  ஆண்டவன் அவருக்கு உபதேசித்தருளினார்.

எட்டுஇரண்டும் அறியாத என் செவியில்
  எட்டுஇரண்டும் இதுவாம் இலிங்கம்என
  எட்டுஇரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே”
                                                                              --- (கட்டிமுண்டக) திருப்புகழ்.

புண்டரிகமலர் மங்காமற் சென்று மதுவை செய்:-

வண்டுகள் சென்று தாமரை. மலர்கள் வாடாமல் அத்துணை மெல்லச் சென்று அவற்றில் உள்ள தேனைப் பருகுகின்றன. அதுபோல யாசகர்கள் கொடுக்கின்வர் அகமும் புறமும் கோணாவண்ணம் சென்று யாசிக்க வேண்டும்.

கஞ்சன் விழ உதை:-

கஞ்சன்-கம்சன். இவன் கண்ணபிரானுக்கு நேர் தாய்மாமன் அன்று. புனர்வசு என்பானுடைய மகன் ஆகுகன். ஆகுகனுடைய மக்கள் இருவர். தேவகன், உக்ரசேனன், தேவகனுடைய மகள் தேவகி. உக்ரசேனனுடைய மகன் கம்சன். கம்சனுக்குப் பெரிய தகப்பன் மகள் தேவகி.

தேவகியின் உடன் பிறந்த சகோதரிகள் அறுவர்; திருத்தேவா, சாந்திதேவா, உபதேவா, ஸ்ரீதேவா, தேவரக்ஷிதா, சகதேவா, தேவகியின் மக்கள்; கிரதிவந்தனன், சுனேஷணன், பத்திரசேனன், ருசு, சமந்தன், பத்திராக்கன், சங்கர்ஷன், கிருஷ்ணன், சுபத்திரை.

கம்சன் கண்ணனைப் பலமுறை கொல்ல முயன்றான். கிருஷ்ணர் அவனுடைய மதயானையாகிய குவலயா பீடம் என்ற யானையைக் கொன்று அதன் கொம்பை இடித்து, கம்சனை வதைத்து அருளினார்.
  
தென்சேரிகிரி:-

திருப்பூரிலிருந்து பொள்ளாச்சிக்கு போகும் பேருந்து மூலம் 22கல் சென்று சுல்தான் பேட்டையில் இறங்கி உடுமலைப் பேட்டைக்குப் போகும் பேருந்து ஏறி நான்கு கல் சென்றால் இத்தலத்தை அடையலாம். அழகிய மலை.


கருத்துரை


தென்சேரிமலை மேவும் தேவா! மாதர் மயல் தீர, சிவபெருமானுக்கு உபதேசித்ததை, அடியேனுக்கும் உபதேசித்து அருள்வீர்.








                 


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...