திருஅம்பர்ப்
பெருந்திருக்கோயில்
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை
மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் இருக்கிறது.
பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற
ஊரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
அம்பர் மாகாளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் பிரம்மபுரீசுரர் ஆலயத்தில்
இருந்து மேற்கே 1 கி.மீ. தொலைவில்
உள்ளது.
அம்பகரத்தூர் தலத்திற்கு மிக
அருகில் உள்ளது கந்தன்குடி. வேலெடுத்து அம்பரன், அம்பன் ஆகிய அசுரர்களை வதைக்க கந்தன்
தானும் முன் வந்தபோது, அம்பாள் அவரைத்
தடுத்து, "‘நீ இத்தலத்திலேயே
இருக்க!" என்றருளி, தான் மட்டும் சென்று
அசுரர்களை வதைத்தாளாம். அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் கந்தன்குடியில் உள்ள
முருகன் கோவில்.
இறைவர்
: பிரமபுரீசுவரர், பிரமபுரிநாதர்.
இறைவியார்
: பூங்குழல்நாயகி, சுகந்த குந்தளாம்பிகை.
தலமரம் : புன்னை.
தீர்த்தம் : பிரம தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - எரிதர அனல்கையில்
ஏந்தி
அரிசிலாற்றின் வடகரையில் அமைந்துள்ள
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கோயிலின் பெயர் அம்பர் பெருந்திருக்கோயில்.
யானை ஏறமுடியாதவாறு படிக்கட்டுகள் அமைத்துச் சிறு குன்று போல் கோயில்
அமைந்துள்ளதால் இக்கோயிலுக்கு பெருந்திருக்கோயில் என்ற பெயர் ஏற்பட்டது.
கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் சந்நிதிக்குச்
செல்லும் படிக்கட்டுகள் தெற்கு நோக்கயவாறு அமைந்துள்ளன. இராஜகோபுரம் வழியாக உள்ளே
சென்றால் விசாலமான முற்றம் உள்ளது.சுதையாலான பெரிய நந்தி இங்குள்ளதைக் காணலாம்.
இடப்பக்கத்தில் உள்ள கிணறு "அன்னமாம் பொய்கை" என்று வழங்குகிறது.
பக்கத்தில் சிவலிங்க மூர்த்தம் உள்ளது. பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, பக்கத்தில் உள்ள சிவலிங்கமூர்த்தியை
வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப்பெற்றார் என்பது தலவரலாறு.
படியேறிச் செல்வதற்கு முன்னரே கிழக்கு
மதிற்சுவர் மாடத்தில் கிழக்கு நோக்கித் தல விநாயகரான படிக்காசு விநாயகர்
எழுந்தருளி இருக்கிறார். இவர் சந்நிதியில் அடுத்தடுத்து மூன்று சிறிய விநாயக
மூர்த்தங்கள் உள்ளன. அதே போன்று பிரகாரத்திலுள்ள விநாயகர் சந்நிதியிலும் மூன்று
விநாயகர் சிலைகளும் இருக்கின்றன. பிரகாரத்தில் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஜம்புகேசுவரர் ஆகியோரின் சந்நிதிகளும்
உள்ளன. அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. நின்ற திருமேனி. சந்நிதிக்கு வெளியில்
இருபுறமும் ஆடிப்பூர அம்மன் சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. வலம் முடித்துப்
படிகளேறி மேலே சென்றால் சோமாஸ்கந்தர் சந்நிதியும் மறுபுறம் விநாயகர், கோச்செங்கட் சோழன், சரசுவதி, ஞானசம்பந்தர், அப்பர் ஆகிய மூலத்திருமேனிகளும் உள்ளன.
துவாரபாலகர்களையும் விநாயகரையும் வணங்கிச் சென்று சிறிய வாயில் வழியாக
உள்ளிருக்கும் மூலவரைத் தரிசிக்கலாம். இங்கு பிரம்மபுரீசுவரர் சுயம்புமூர்த்தியாக
காட்சி தருகிறார். மூலவரின் பின்னால் சோமாஸ்கந்தர் காட்சியளிக்கின்றார். வலதுபுறம்
நடராச சபை உள்ளது. இக்கோயிலில் அம்பலவாணர் மூர்த்தங்கள் மூன்று உள்ளன. கோஷ்ட
மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர்.
ஒரு முறை படைப்புக் கடவுளான
பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான
திருமாலுக்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி
உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார்.
பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி
முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட
இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர்
மலையாக மாறி திருவண்ணாமலையில் காட்சி கொடுத்தார். ஆயினும் பிரம்மா அன்னப்பறவை
உருவெடுத்து சிவபெருமானின் முடியைக் கண்டதாக பொய் கூறியதால் சிவபெருமான் பிரம்மாவை
அன்னமாகும்படி சபித்தார். பிரம்மா பிழைபொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான்
புன்னாகவனம் என்னும் இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரம்மாவும்
அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உண்டாக்கி அதன் நீரால் இறைவனுக்கு
அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டார்.
பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று
நடக்கிறது. பிரம்மா உண்டாக்கிய பொய்கை "அன்னமாம் பொய்கை" என்று பெயர்
பெற்றது.
அம்பன், அம்பரன் என்ற இரு அசுரர்கள் இத்தல
இறைவனை பூசித்து இறவா வரம் பெற்றனர். அவர்கள் வழிபட்டதால் இத்தலம் அம்பர் எனப்
பெயர் பெற்றது. அம்பன், அம்பரன் ஆகிய
இருவரும் தாங்கள் பெற்ற தவ வலிமையால் உலகிற்கு இடையூறு விளைவித்து வந்தனர்.
தேவர்கள் வழக்கப்படி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். பெருமான் பார்வதியை
நோக்க, குறிப்பறிந்த தேவி
காளியாக உருமாறினாள். காளி கன்னி உருவெடுத்து அவர்கள் முன் வர, வந்த அம்பிகையை இருவரும் சாதாரணப் பெண்
எனக்கருதி அவரை அடைய சண்டையிட்டனர். இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில்
மூத்தவன் இறந்தான். இளையவனைக் காளி கொன்றாள். காளி அம்பரனைக் கொன்ற இடமே
அம்பகரத்தூர் ஆகும்.
நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாற
நாயனார் அவதரித்த திருத்தலம் இதுவே. இவருக்கு சோமயாகம் செய்ய வேண்டும் என்ற ஆசை
ஏற்பட்டது. யாகத்தின் அவிர்பாகத்தை சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என
விரும்பினார். இறைவனை நேரடியாக அழைக்க வேண்டுமானால், அவரது நண்பர் சுந்தரரின் நட்பை முதலில்
பெறவேண்டும் என்று நினைத்தார். இந்நிலையில் சுந்தரருக்கு தூதுவளை கீரை மிகவும்
பிடிக்கும் என்பதை அறிந்த சோமாசிமாறர் அவருக்கு தினமும் தூதுவளை கீரை கொடுத்து
அனுப்பினார். இதைக் கொடுத்து அனுப்புவது யாரென்பது சுந்தரருக்குத் தெரியாது. ஆனால், மனைவி பரவை நாச்சியாருக்கு கீரை
கொடுத்தனுப்புவது யார் என்று தெரியும். கீரையைக் கொடுத்தனுப்பியவரை பார்க்க
வந்தார் சுந்தரர். அப்போது சோமாசி மாறனார், தான் நடத்தும் யாகத்திற்கு இறைவனை
அழைத்து வரும்படி சுந்தரரிடம் வேண்டினார். சுந்தரரும் அதற்கு சம்மதித்து இறைவனிடம்
வேண்ட, இறைவனும், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில்
நடக்கும் யாகத்திற்கு வருவதாக வாக்களித்தார்.
இக் கதைக்கு ஆதாரம் ஏதும் இருப்பின்
நல்லது. ஆனாலும் பெரியபுராணம் நமக்குக் காட்டும் சோமாசிமாற நாயனார் இவர்தான்....
சோமாசிமாற நாயனார் சோழ நாட்டில் உள்ள
திருஅம்பர் என்னும் தலத்தில் வேதியர் குலத்தில் தோன்றியவர். சிவனடியார்.
அடியார்களுக்கு அமுது படைப்பவர். யாகம் செய்பவர். திருவைந்தெழுத்து
ஓதுபவர். அடியார் யாராயிருப்பினும் அவர்களைச் சிவமாகவே கொண்டு வழிபாடு செய்பவர். அவர், திருவாரூரை அடைந்து, வன்தொண்டப் பெருமானுக்கு இடையறாத
பேரன்பைச் செலுத்தி, புலன்களை வென்று
சிவலோகத்தை அடைந்தார்.
சோமாசி மாறநாயனாரின்
அவதாரப்பதி.
அவதாரத் தலம் : அம்பல் / அம்பர்.
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம் : திருவாரூர்.
குருபூசை நாள் : வைகாசி - ஆயில்யம்.
இறைவனே நேரடியாக வருவதால் நாட்டில் பல
பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக
நடந்தது. நான்கு வேதங்களை நான்கு நாய்களாக மாற்றி, இறந்த ஒரு கன்றினை சுமந்தபடி நீசனைப்
போல் உருமாறி வந்தார் சிவன். அவருடன் பார்வதி தேவி தலையில் மதுக்குடத்துடன்
வந்தாள். கீழ்சாதிப் பிள்ளகள் போல் உருமாறிய பிள்ளையாரும், முருகனும் அவர்களுடன் வந்தனர். இவர்களை
அடையாளம் தெரியாததால், யாகத்தில் ஏதோ தவறு
நடந்து விட்டதாகக் கருதி வேதியர்கள் ஓடிவிட்டனர். சோமாசிமாற நாயனார் இறைவன்
வருவார் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவ்வாறு நீசன் ஒருவன் குடும்பத்தோடு
வந்திருக்கிறானே என்று வருத்தப்பட்டார். உடனே விநாயகர் தன் சுயரூபத்தில்
சோமாசிமாறருக்கும், அவர் மனைவிக்கும்
காட்சி தந்து, வந்திருப்பது சிவன்
என்பதை உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாறர் சிவனாகிய தியாகராஜருக்கு அவிர்பாகம்
கொடுத்து சிறப்பு செய்தார். தியாகராஜரும் நீசக்கோலம் நீங்கி, பார்வதி சமேதராக சோமசிமாறருக்கு காட்சி
கொடுத்து அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். சோமாசிமாறர் யாகம் செய்த இடம்
அம்பர் பெருந்திருக்கோவிலில் இருந்து அம்பர் மாகாளம் செல்லூம் சாலை வழியில்
சாலையோரத்தில் உள்ளது.
கோச்செங்கணாரின்
மாடக் கோயிலாகும்; இத்திருக்கோயிலே
கோட்செங்கச் சோழ நாயனாரின் கடைசித் திருப்பணியாகச் சொல்லப்படுகிறது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "கூட்டாக கரு வம்பர்
தம்மைக் கலவாத மேன்மைத் திரு அம்பர் ஞானத் திரட்டே" என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் அடியார் குழாத்தோடும்
திருஅம்பர் பெருந்திருக் கோயிலுக்கு எழுந்தருளி, வலம் கொண்டு, திருமுன் நின்று உருகும் அன்பொடு
தாழ்ந்து பாடியருளிய திருப்பதிகம்.
பெரிய
புராணப் பாடல் எண் : 525
புள்அ
லம்புதண் புனல்புக
லூர்உறை புனிதனார்
அருள்பெற்று,
பிள்ளை
யாருடன் நாவினுக்கு
அரசரும் பிறபதி
தொழச்செல்வார்,
வள்ள
லார்சிறுத் தொண்டரும்
நீலநக் கரும்வளம்
பதிக்குஏக,
உள்ளம்
அன்புஉறு முருகர்அங்கு
ஒழியவும், உடன்பட இசைவித்தார்.
பொழிப்புரை : நீர்ப்பறவை
ஒலித்தற்கு இடமான குளிர்ந்த நீர்நிலை சூழ்ந்த திருப்புகலூரில் எழுந்தருளிய புனித
இறைவரின் அருளைப் பெற்று, பிள்ளையாருடன்
திருநாவுக்கரசரும் இறைவரின் மற்றப் பதிகளையும் தொழும் பொருட்டுச் செல்பவராய், வள்ளலாரான சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் தத்தம் வளம்
பொருந்திய பதிகளுக்குச் செல்லவும்,
உள்ளத்தில்
அன்பு கொண்ட முருக நாயனார் அங்கே தங்கியருக்கவும் அவர்கள் உடன்படத் தாமும்
இசைந்தார்கள்.
பெ.
பு. பாடல் எண் : 526
கண்அ
கன்புக லூரினைத்
தொழுதுபோம்
பொழுதினில், கடற்காழி
அண்ண
லார்திரு நாவினுக்கு
அரசர்தம் அருகுவிட்டு
அகலாதே
வண்ண
நித்திலச் சிவிகையும்
பின்வர வழிக்கொள
உறும்காலை,
எண்ணில்
சீர்த்திரு நாவினுக்கு
அரசரும்
மற்றுஅவர்க்கு இசைக்கின்றார்.
பொழிப்புரை : இடம் அகன்ற
திருப்புகலூரைத் தொழுது மேற்செல்கின்ற போதில், கடற்கரையில் உள்ள சீகாழிப் பதியில்
தோன்றிய பிள்ளையார், திருநாவுக்கரசரை
விட்டு நீங்காது அழகிய முத்துச் சிவிகை பின் வரச் செலவு நயப்பைத் தொடங்கிய பொழுது, ஞானியரின் உளத்தில் நிற்கும் சிறப்புடைய
திருநாவுக்கரசர், சம்பந்தருக்கு எடுத்துக்
கூறுபவராய்,
பெ.
பு. பாடல் எண் : 527
"நாயனார்உமக்கு
அளித்து அருள்
செய்தஇந் நலங்கிளர்
ஒளிமுத்தின்
தூய
யானத்தின் மிசை எழுந்து
அருளுவீர்"
என்றலும், "சுடர்த்திங்கள்
மேய
வேணியார் அருளும்இவ்
வாறுஎனில், விரும்புதொண்
டர்களோடும்
போயது
எங்குநீர், அங்குயான்
பின்வரப் போவது"
என்று அருள்செய்தார்.
பொழிப்புரை : `இறைவன் உமக்கு அருள் செய்த இந்த நன்மை
பொருந்திய அழகிய ஒளிபொருந்திய தூய முத்துச் சிவிகையில் இவர்ந்து வருவீராக!' என்று அருளுதலும், `ஒளி பொருந்திய பிறைச் சந்திரனை அணிந்த
சடையையுடைய இறைவரின் திருவருளும் இவ்வாறே இருக்குமாயின், விரும்பும் தொண்டர்களுடனே நீவிர் முன்
செல்வது எப்பதியோ? அப்பதிக்கு யானும்
பின்தொடர்ந்து வரும்படியாகப் போவது'
என
விடையளித்தார்.
பெ.
பு. பாடல் எண் : 528
என்று
பிள்ளையார் மொழிந்து அருள்
செய்திட, இருந்தவத்து
இறையோரும்
"நன்று நீர்அருள்
செய்ததே
செய்வன்" என்று
அருள்செய்து, நயப்புஉற்ற
அன்றை
நாள்முதல் உடன்செலும்
நாள்எலாம் அவ்இயல்
பினில்செல்வார்,
சென்று
முன்உறத் திருஅம்பர்
அணைந்தனர், செய்தவக்
குழாத்தோடும்.
பொழிப்புரை : என்று சம்பந்தர்
உரைத்திடவும், பெரிய தவவேந்தரான
திருநாவுக்கரசரும் `நல்லது! நீவிர்
அருளியவாறே செய்வேன்\' என்று அருள் செய்து, விரும்பிய அந்நாள் முதற் கொண்டு, பிள்ளையாருடன் செல்லும் எல்லா
நாள்களிலும் அவ்வியல்பில் செல்பவராய், செய்தவக்
கூட்டமான தொண்டர்களோடும் முன் செல்ல, திருவம்பர்
என்ற நகரை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 529
சண்பை
மன்னரும் தம்பிரான்
அருள்வழி நிற்பது
தலைச்செல்வார்,
பண்பு
மேம்படு பனிக்கதிர்
நித்திலச் சிவிகையில்
பணிந்துஏறி,
வண்பெ
ரும்புக லூரினைக்
கடந்துபோய், வரும்பரி சனத்தோடும்
திண்பெ
ருந்தவர் அணைந்தது எங்கு,
என்றுபோய்த்
திருஅம்பர் நகர்புக்கார்.
பொழிப்புரை : சீகாழிப் பதியில்
தோன்றிய பிள்ளையாரும், தம் இறைவரின் அருள்
வழியே ஒழுகுவதை மேற்கொண்டு செல்வாராய்ச் சிவப் பண்பினால் மேம்படும் குளிர்ந்த
ஒளியையுடைய முத்துச் சிவிகையில் அமர்ந்து, வண்மையும் பெருமையும் கொண்ட
திருப்புகலூரைக் கடந்து சென்று,
`தண்ணிய
பெருமையையுடைய தவமுனிவரான அரசு எங்குச் சென்றனர்?' எனக் கேட்டுத் தாமும் சென்று, அவர் சேர்ந்த திருவம்பர் நகரத்தை
அடைந்து புகுந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 530
அம்பர்
மாநகர் அணைந்து, மா
காளத்தில் அண்ணலார்
அமர்கின்ற
செம்பொன்
மாமதில் கோயிலை
வலங்கொண்டு, திருமுன்பு
பணிந்துஏத்தி,
வம்பு
உலாம்மலர் தூவிமுன்
பரவியே, வண்தமிழ் இசைமாலை
உம்பர்
வாழநஞ்சு இண்டவர்
தமைப்பணிந்து உருகும்
அன்பொடு தாழ்ந்தார்.
பொழிப்புரை : திருவம்பர் என்ற
பதியை அடைந்து மாகாளத்தில் இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னால் ஆன
பெருமதிலையுடைய கோயிலை வலம் வந்து,
இறைவரின்
திருமுன்பு தாழ்ந்து வணங்கிப் போற்றி, மணமுடைய
மலர்களைத் தூவியும் முறைப்படி வழிபட்டும், வண்மையுடைய தமிழிசை மாலை பாடிப்
போற்றித் தேவர் வாழும் பொருட்டு நஞ்சையுண்ட இறைவரை வணங்கி, உள்ளம் உருகிய அன்பினால் நிலத்தில்
விழுந்து வணங்கினார்.
அம்பர் - பதியின்
பெயர். மாகாளம் - கோயிலின் பெயர். இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.
பெ.
பு. பாடல் எண் : 531
தாழ்ந்து
நாவினுக்கு அரசுடன்
தம்பிரான் கோயில்முன்
புறம்எய்தி,
சூழ்ந்த
தொண்டரோடு அப்பதி
அமர்பவர் சுரநதி
முடிமீது
வீழ்ந்த
வேணியர் தமைப்பெறும்
காலங்கள்
விருப்பினால் கும்பிட்டு,
வாழ்ந்து
இருந்தனர், காழியார்
வாழவந்து அருளிய
மறைவேந்தர்.
பொழிப்புரை : சீகாழியினர் வாழ்வு
அடையுமாறு தோன்றிய மறைத்தலைவரான பிள்ளையார் வணங்கிப் பின் திருநாவுக்கரசு
நாயனாருடன் திருக்கோயிலின் வெளியே வந்து, தம்மைச்
சூழ்ந்த தொண்டருடனே அப்பதியில் விரும்பித் தங்குபவராய், கங்கை தாங்கிய தாழ்ந்த சடையையுடைய
சிவபெருமானைப் பெருகும் காலங்கள் தோறும் விருப்பத்துடன் கும்பிட்டுப் பெருவாழ்வு
அடைந்திருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 532
பொருஇ
லாதசொல் "புல்குபொன்
நிற"முதல்
பதிகங்க ளால்போற்றி,
திருவின்ஆர்ந்தகோச்
செங்கணான்
அந்நகர்ச் செய்தகோ
யிலைச் சேர்ந்து,
மருவு
வாய்மைவண் தமிழ்மலர்
மாலைஅவ் வளவனைச்
சிறப்பித்து,
பெருகு
காதலில் பணிந்து, முன்
பரவினார் பேணிய
உணர்வோடும்.
பொழிப்புரை : ஒப்பற்ற சொற்களையுடைய
`புல்கு பொன்னிறம்' எனும் தொடக்கம் உடைய பதிகம் முதலாய பல
பதிகங்களினால் போற்றி செய்து, சைவமெய்த்திருவால்
நிறைவுடைய கோச்செங்கட் சோழர், அத்திருஅம்பர்
நகரத்தில் செய்த மாடக் கோயிலை அடைந்து, வாய்மையுடைய
வண்மையான தமிழ்மாலையில் அச்சோழர் பெருமானாரைச் சிறப்பித்து, பெருகும் ஆசையினால் பணிந்து, பேணிக் கொண்ட உணர்வுடன் திருமுன்பு
நின்று போற்றினார்.
`புல்கு பொன்னிறம்' (தி.2 ப.103) எனத் தொடங்குவது நட்டராகப் பண்ணிலமைந்த
பதிகம் ஆகும். இவ்வாறு காலங்கள் தொறும் வழிபட்டுப் போற்றிய பதிகங்கள் மேலும்
இரண்டுள.
அவை: 1. `அடையார்புரம்' (தி.1 ப.83) - குறிஞ்சி.
2. `படியுளார்' (தி.3 ப.93) - சாதாரி.
கோச்செங்கணார் இப்பதியில் எடுப்பித்த
கோயில் திரு அம்பர்பெருந் திருக்கோயிலாகும், இப்பெருமானின் திருமுன்பு அருளிய பதிகம்
`எரிதர' (தி.3 ப.19) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப்
பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருக்கோயில் கோச்செங்கட் சோழரால் எடுப்பிக்கப்
பெற்றது என்பதை இப்பதிகத்தில் 1,
2, 5, 9
ஆகிய பாடல்களில் குறித்துப் போற்றுகின்றார் பிள்ளையார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
3. 019 திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில் பண்-காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
எரிதர
அனல்கையில் ஏந்தி, எல்லியில்
நரிதிரி
கான்இடை நட்டம் ஆடுவர்,
அரிசில்அம்
பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங்
கண்ணவன் கோயில் சேர்வரே.
பொழிப்புரை :இறைவர் எரிகின்ற
நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிருளில், நரிகள்
திரிகின்ற மயானத்தில் திருநடனம் புரிகின்றார். அப்பெருமானார் அரிசில் ஆறு
பாய்வதால் நீர்வளமிக்க அம்பர் மாநகரில் பெருமையிற் சிறந்த, சிவந்த கண்களையுடைய கோச்செங்கட்சோழன்
கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .
பாடல்
எண் : 2
மையகண்
மலைமகள் பாகம் ஆய்இருள்
கையதுஓர்
கனல்எரி கனல ஆடுவர்,
ஐயநன்
பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண்
இறைசெய்த கோயில் சேர்வரே.
பொழிப்புரை :மைபூசிய கண்ணையுடைய
மலைமகளான உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு, இருளில், இறைவர் கையில் கனன்று எரிகின்ற
நெருப்பானது சுவாலை வீச, நடனம் ஆடுவார்.
அப்பெருமானார் கரையை மோதுகின்ற அரிசிலாற்றினால் நீர்வளமிக்க அழகிய நல்ல அம்பர்
மாநகரில் கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .
பாடல்
எண் : 3
மறைபுனை
பாடலர் சுடர்கை மல்கஓர்
பிறைபுனை
சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல்
நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை
எழில்வளர் இடமது என்பரே.
பொழிப்புரை :வேதங்களை அருளிப்
பாடுகின்ற இறைவர், சுடர்விடு நெருப்பு
கையில் விளங்கவும், பிறைச்சந்திரன்
சடைமுடியில் அசையவும் ஆடுவார். ஒலிக்கின்ற அரிசிலாற்றினால் நீர் நிறைந்த
வயல்களையுடைய அம்பர் மாநகரில், கோச்செங்கட்சோழ
மன்னன் எழுப்பிய அழகுமிகு கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
பாடல்
எண் : 4
இரவுமல்கு
இளமதி சூடி ஈடுஉயர்
பரவமல்கு
அருமறை பாடி ஆடுவர்
அரவமோடு
உயர்செம்மல் அம்பர்க் கொம்புஅலர்
மரவமல்கு
எழல்நகர் மருவி வாழ்வரே.
பொழிப்புரை :இரவில் ஒளிரும்
இளம்பிறைச் சந்திரனைச் சூடி, தம் பெருமையின்
உயர்வைத் துதிப்பதற்குரிய அருமறைகளை இறைவர் பாடி ஆடுவார். பாம்பணிந்து உயர்ந்து
விளங்கும் செம்மலாகிய சிவபெருமான்,
கொம்புகளில்
மலர்களையுடைய வெண்கடம்ப மரங்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய அம்பர் மாநகரில்
வீற்றிருந்தருளுகின்றார்.
பாடல்
எண் : 5
சங்குஅணி
குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல்
கனல்தர வீசி ஆடுவர்
அங்கணி
விழவுஅமர் அம்பர் மாநகர்ச்
செங்கண்நல்
இறைசெய்த கோயில் சேர்வரே.
பொழிப்புரை :இறைவர் சங்கினாலாகிய
குழை அணிந்த காதினர். சாமவேதத்தைப் பாடுவார். மிகுந்த வெப்பமுடைய நெருப்புச்
சுவாலை வீசத் தோள்வீசி ஆடுவார். அழகிய திருவிழாக்கள் நடை பெறும் அம்பர் மாநகரில்
கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய திருக்கோயிலில் அப்பெருமானார்
வீற்றிருந்தருளுகின்றார்.
பாடல்
எண் : 6
கழல்வளர்
காலினர் சுடர்கை மல்கஓர்
சுழல்வளர்
குளிர்புனல் சூடி ஆடுவர்
அழல்வளர்
மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர்
நெடுநகர் இடமது என்பரே.
பொழிப்புரை :இறைவர் வீரக்கழல்கள்
அணிந்த திருவடிகள் உடையவர். சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியுள்ளவர்.
நீர்ச்சுழிகளையுடைய குளிர்ந்த கங்கையைச் சடையில் சூடி ஆடுவர். அப்பெருமானார், வேள்வித் தீ வளர்க்கும் அந்தணர்கள்
வாழ்கின்ற அம்பர் மாநகரில் அழகிய சோலைகளையுடைய நிழல்தரும் பெருந் திருக்கோயிலில்
வீற்றிருந்தருளுகின்றார்.
பாடல்
எண் : 7
இகல்உறு
சுடர்எரி இலங்க வீசியே
பகல்இடம்
பலிகொளப் பாடி ஆடுவர்
அகல்இடம்
மலிபுகழ் அம்பர் வம்புஅவிழ்
புகல்இடம்
நெடுநகர் புகுவர் போலுமே.
பொழிப்புரை :இறைவர், வலிமைமிக்க சுடர்விட்டு எரியும்
நெருப்பை ஏந்தித் தோள்களை வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப் பாடி ஆடுவர்.
அப்பெருமானார் அகன்ற இப்பூவுலகெங்கும் பரவிய மிகு புகழையுடைய அம்பர் மாநகரில், தெய்விக மணம் கமழும் திருக்கோயிலைத்
தமது இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.
பாடல்
எண் : 8
எரிஅன
மணிமுடி இலங்கைக் கோன்தன
கரிஅன
தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர்
வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர்
பிரிவிலாப் பூதஞ் சூழவே.
பொழிப்புரை :சிவபெருமான் , நெருப்புப் போன்று ஒளிவீசும்
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிந்த இலங்கை மன்னனான இராவணனின் கரிய, பருத்த கைகளை அடர்த்த திருவடிகளை
யுடையவர். அருந்தவத்தோர் வாழ்கின்ற வளம் பொருந்திய அம்பர் மாநகரில், தம்மைப் பிரிவில்லாத பூதகணங்கள் புடைசூழ
இனிதே வீற்றிருந்தருளுகின்றார் .
பாடல்
எண் : 9
வெறிகிளர்
மலர்மிசை யவனும், வெந்தொழில்
பொறிகிளர்
அரவுஅணைப் புல்கு செல்வனும்
அறிகில
அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழல்
இறைசெய்த கோயில் சேர்வரே.
பொழிப்புரை :நறுமணம் கமழும் தாமரை
மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும்,
கொல்லும்
தன்மையுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்டுள்ள செல்வனாகிய திருமாலும், அறிதற்கு அரியரான இறைவர் திருஅம்பர்
மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய திருக்கோயிலில் தம் கழலணிந்த திருவடி
பொருந்த வீற்றிருந்தருளு கின்றார்.
பாடல்
எண் : 10
வழிதலை
பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப்
பயன்என மொழியல் வம்மினோ
அழிதுஅலை
பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை
ஒழிந்துஉளர் உமையும் தாமுமே.
பொழிப்புரை :மழித்த தலையையும், முடி பறித்த தலையையும் உடைய
புத்தர்களும், சமணர்களும்
கட்டுரையாகக் கூறியவற்றைப் பயனுடையவெனக் கொள்ள வேண்டா. கங்கையைச் சடையிலே தாங்கி, அங்குமிங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து, அம்பர் மாநகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இறைவனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள்.
பாடல்
எண் : 11
அழகரை
அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ்
சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை
உலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு
விரகினன் தமிழ்செய் மாலையே.
பொழிப்புரை :அழகரை, அடிகளை, திருஅம்பர் மாநகரில் எழுந்தருளியிருக்கும்
ஒளிர்கின்ற சடைமுடியுடைய நீலகண்டரான சிவபெருமானை, அலைவீசுகின்ற கடலுடைய இவ்வுலகினில், முத்தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன்
அருளிய இத்தமிழ்ப் பாமாலையாகிய திருப்பதிகத்தை ஓதிச் சிவகதி பெறுமின்.
திருச்சிற்றம்பலம்
குறிப்பு --- பெரியபுராணத்தை அருளிய
தெய்வச் சேக்கிழார் பெருமானாரின் அருள்வாக்குப்படி, திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும், சேர்ந்தே இத்திருத்தலத்தை வழிபட்டனர். என்றாலும், அப்பர் பெருமான் பாடியருளிய திருப்பதிகம்
கிடைக்காதது நமது தவக்குறை.
No comments:
Post a Comment