ஞானமலை - 0403. சூதுகொலைகாரர்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சூது கொலைகாரர் (ஞானமலை)

முருகா!
பொதுமாதர் உறவு ஆகாது.

தானதன தான தானதன தான
     தானதன தான ...... தனதான


சூதுகொலை கார ராசைபண மாதர்
     தூவையர்கள் சோகை ...... முகநீலர்

சூலைவலி வாத மோடளைவர் பாவர்
     தூமையர்கள் கோளர் ...... தெருவூடே

சாதனைகள் பேசி வாருமென நாழி
     தாழிவிலை கூறி ...... தெனவோதி

சாயவெகு மாய தூளியுற வாக
     தாடியிடு வோர்க ...... ளுறவாமோ

வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்
     வேதியர்கள் பூச ...... லெனஏகி

வீறசுரர் பாறி வீழஅலை யேழு
     வேலையள றாக ...... விடும்வேலா

நாதரிட மேவு மாதுசிவ காமி
     நாரியபி ராமி ...... யருள்பாலா

நாரணசு வாமி யீனுமக ளோடு
     ஞானமலை மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சூதுகொலை காரர், ஆசை பண மாதர்,
     தூவையர்கள், சோகை ...... முகநீலர்,

சூலைவலி வாதமோடு அளைவர், பாவர்,
     தூமையர்கள், கோளர், ...... தெருஊடே

சாதனைகள் பேசி வாரும் என நாழி
     தாழி விலை கூறு இது ...... என ஓதி,

சாய வெகு மாய தூளி உறவாக
     தாடிஇடுவோர்கள் ...... உறவுஆமோ?

வேத முநிவோர்கள், பாலகர்கள், மாதர்,
     வேதியர்கள், பூசல் ...... எனஏகி,

வீறு அசுரர் பாறி வீழ,அலை ஏழு
     வேலை அளறு ஆக ...... விடும்வேலா!

நாதர் இடம் மேவு மாது, சிவகாமி,
     நாரி, அபிராமி ...... அருள்பாலா!

நாரண சுவாமி ஈனும்  மகளோடு
     ஞானமலை மேவு ...... பெருமாளே.

பதவுரை

      வேத முனிவோர்கள் --- வேதத்தில் வல்ல முனிவர்கள்,

     பாலகர்கள் --- குழந்தைகள்,

     மாதர் ---  பெண்கள்,

     வேதியர் --- அந்தணர்கள் ஆகிய இவர்களை,

     பூசல் என ஏகி --- போர் நடக்கப் போகின்றதென்று அப்புறப்படுத்தி விட்டு,

     வீறு அசுரர் பாறி விழ --- மிகுதியாக வந்த அசுரர்கள் அழிந்து விழவும்,

     அலை ஏழு வேலை அளறு ஆக --- அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் சேறாகுமாறும்,

     விடும் வேலா --- செலுத்திய வேலாயுதரே!

      நாதர் இடம் மேவும் மாது சிவகாமி, நாரி, அபிராமி அருள் பாலா  --- சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உள்ள அழகிய சிவகாமி, பெண்மணி, பேரழகுடையவள் ஆகிய உமாதேவியார் பெற்ற பாலகரே!

      நாராயண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவு பெருமாளே --- நாராயணமூர்த்தி பெற்ற புதல்வியுடன் ஞானமலையில் எழுந்தருளியுள்ள பெருமையிற் மிக்கவரே!

      சூது கொலைகாரர் --- வஞ்சனையும் கொலையுஞ் செய்பவர்கள்.

     பண ஆசை மாதர் --- பணத்தாசை கொண்ட பெண்கள்.

     தூவையர்கள் --- புலால் உண்பவர்கள்,

     சோகை முக --- சோகை நோயால் உதிரங் குறைந்து வெளுத்த முகத்தையுடையவர்கள்.

      நீலர் --- வீஷமிகள்.

     சூலை, வலி, வாதமோடு அனைவர் --- சூலை நோய்,  வலிப்பு, வாதம் முதலிய நோய்களுடன் தொடர்பு கொள்பவர்கள்,

     பாவர் --- பாவிகள்.

      தூமையவர்கள் --- சூதகத்தில் பரிசுத்தம் இல்லாதவர்கள்.

      கோளர் --- கோள் சொல்லுபவர்கள்.

     தெரு ஊடே சாதனைகள் பேசி --- நடுத் தெருவில் நின்று, காரியத்தைச் சாதிக்கும் பேச்சுக்களைப் பேசி,

     வாரும் என --- வாருங்கள் என்று அழைத்துக் கொண்டு போய்,

     நாழி தாழீ விலை கூறு இது என ஓதி --- ஒரு நாழிகைக்கு (இந்த) உடலான பாண்டத்திற்கு விலை இவ்வளவு என்று சொல்லி,

     சாய --- வந்தவர்கள் தம் பக்கத்தில் சாயும்படி,

     வெகு மாய தூளி உற --- மிகுதியாக மாயப் பொடியை அவர்கள் மீது தூவி,

     ஆகம் தாடி இடு வோர்கள் உறவு ஆமோ --- சரீரத்தைத் தட்டி கொடுப்பவர்களாகிய வேசையரது, நட்பு ஆகுமோ (ஆகாது).


பொழிப்புரை

     வேதத்தில் வல்ல முனிவர்கள், குழந்தைகள், பெண்கள், வேதியர்கள், இவர்களைப் போர் நடக்கப் போகின்றதென்று அப்புறப்படுத்தி, மிகுதியாக வந்த அசுரர்கள் அழிந்து விழவும், கடல் சேறாகவும் வேலாயுதத்தை விடுத்தவரே!

     சிவபெருமழனுடைய இடப்பாகத்தில் எழுந்தருளிய அழகிய சிவகாமி, பெண்மணி, பேரழகுடையவள் ஆகிய பார்வதியம்மை பெற்ற குமாரரே!

     நாராயணமூர்த்தி பெற்ற புதல்வியுடன் ஞானமலை மீது வீற்றிருக்கின்ற பெருமிதமுடையவரே!

     வஞ்சனையும் சூதும் புரிபவர்கள், பணத்தாசையுடையவர்கள், மாமிசபட்சணிகள், சோகை, நோயால் வெளுத்த முகத்தையுடைய விஷமிகள், சூலை, வலிப்பு, வாதம் முதலிய நோய்களுடன் கலப்பவர்கள், பாவிகள், சூதகத்தால் தூய்மை யில்லாதவர்கள், கோள் சொல்லுபவர்கள், நடுத்தெருவில் நின்று காரியஞ் சாதிக்கக் கூடிய வார்த்தைகளைப் பேசி வாருங்கள் என்று ஆடவனை அழைத்துச் சென்று, ஒரு நாழிகைக்கு இந்த உம்பாகிய பாண்டத்திற் இவ்வளவு விலையென்று கூறி, தம் பக்கம் சாயும்படி, மிகுந்த மாயப் பொடியைத் தூவுபவர்கள், சரீரத்தைத் தட்டிக் கொடுப்பவர்கள் ஆகிய பொதுமாதருடைய உறவு ஆகுமோ? (ஆகாது).

விரிவுரை

சூது கொலைகாரர் ---

தம்மைப் பகைப்பவரை வஞ்சனையாகக் கொல்லுபவர்கள், பால் தருவதுபோல் பாசாங்கு செய்து அதில் நஞ்சு கலந்து கொல்லுவர்.

ஆசை பண மாதர் ---

எத்தனைதான் தந்தாலும் திருப்தியடையாது, மேலும் மேலும் கவரும் பணத்தாசை படைத்தவர்கள்.

தூவையர்கள் ---

தூ-மாமிசம்.சதா புலால் உண்பவர்கள்.

தூப்போலும் சுவையுடைய கனிபலவுந் தரவல்லேன்” --- கம்பராமாயணம்.

நீலர் ---

நீலம்-விஷம். விஷகுணம் படைத்தவர்கள். விஷம் உண்டாரை மட்டுங் கொல்லும். இவர்கள் கண்டாரையுங் கொல்லும் கொடிய நஞ்சு போன்றவர்கள்.

சூலை வலி வாத மோடு அணைவர் ---

சூலை, வலிப்பு, வாதம் முதலிய நோயாளிகளுடனும் சேர்வார்கள். அதனால் அந்த நோய்களையும் பெற்று அவற்றுடன் சேர்ந்திருப்பார்கள்.

தூமையர்கள் ---

தூயமை இல்லாதவர்கள். சூதகத்தில் வேறாயிருக்கும் தன்மை முதலிய இல்லாதவர்கள்.

கோளர் ---

பிறரைப் பற்றிச் சதா கோள் வார்த்தைகள் கூறுபவர்கள்.

வாருமென நாழி தாழி விலை கூறு இது என ஓதி ---

நாழிகை என்ற சொல் நாழி என வந்தது. தாழி-பாண்டம். இந்த உடம்பாகிய பாண்டம் ஒரு நாழிகைக்கு இவ்வளவு விலையென்று கூறி பொருளைப் பறிப்பார்கள்.

சாய வெகுமாய தூளி உற ---

தம்பால் வந்த ஆடவர்கள் தம் மீது சாயும்படி சொக்குப்பொடி தூவி வசப்படுத்துவார்கள்.

ஆகதாடி இடுவோர்கள் ---

சரீரத்தைத் தட்டிக்கொடுப்போர். இது ஒரு சாகசம். மெல்ல முதுகைத் தட்டுவது போன்ற வித்தை.

வேத முநிவோர்கள் பாலகர் மாதர் வேதியர்கள்
பூசலென ஏகி ---

ஏகி-ஏகுவித்து. போர் தொடங்குமுன் அந்தணர்கள், மாதர்கள், பாலகர்கள், நோயாளிகள் ஆகிய இவர்களைப் பாதுகாவலான இடத்துக்குப் போகுமாறு பறையறைவார்கள். இது பழங்காலத்து அறம்.

தாபதர் நோயோர் பெண்டிரும் நும்மரண்
   ஏகுதிர்பெட்டென்று........பறை சாற்றி    --- காஞ்சிப்புராணம்

ஆவம் ஆனியல் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ திரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்”   --- புறநாநூறு.
  
கருத்துரை

         ஞானமலை முருகா! மாதர் உறவு ஆகாது.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...