விராலிமலை - 0361. கொடாதவனை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொடாதவனை (விராலிமலை)

முருகா! மரண பயம் போக்கி ஆண்டு அருள்.

தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
     தனாதனன தான தந்த ...... தனதான


கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
     குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே

எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
     எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன்

சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
     சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல்

கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
     கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன்

தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
     சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா

நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
     நபோமணி சமான துங்க ...... வடிவேலா

படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
     பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான்

விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
     விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொடாதவனையே புகழ்ந்து, குபேரன் எனவே மொழிந்து,
     குலாவி அவமே திரிந்து, ...... புவிமீதே

எடாத சுமையே சுமந்து, எணாத கலியால் மெலிந்து,
     எலா வறுமை தீர, அன்று உன் ...... அருள்பேணேன்,

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி,
     சுக ஆதரம் அது ஆய், ஒழுங்கில் ...... ஒழுகாமல்,

கெடாத தவமே மறைந்து, கிலேசம் அதுவே மிகுந்து,
     கிலாத உடல் ஆவி நொந்து, ...... மடியாமுன்,

தொடாய் மறலியே நி என்ற, சொல் ஆகியது உன் நா வரும்கொல்?
     சொல், ஏழ் உலகம் ஈனும் அம்பை ...... அருள்பாலா!

நடாத சுழி மூல விந்து, நள் ஆவி விளை ஞான நம்ப!
     நபோமணி சமான துங்க ...... வடிவேலா!

படாத குளிர் சோலை அண்டம் அளாவி, உயர்வாய் வளர்ந்து,
     பசேல் எனவுமே தழைந்து, ...... தினமேதான்

விடாது மழை மாரி சிந்த, அநேக மலர் வாவி பொங்கு,
     விராலிமலை மீது உகந்த ...... பெருமாளே!


 பதவுரை

     ஏழ் உலகம் ஈனும் அம்பை அருள் பாலா --- ஏழு உலகங்களைப் பெற்ற பார்வதியம்மை அருளிய திருக்குமாரரே!

     நடாத சுழி --- நட்டு வைக்கப்பட்டாத சுழி முனை,

     மூல விந்து --- மூலாதாரம் முதலிய ஆதாரங்கள்,  விந்து ஆகிய இவற்றின்,

     நள் ஆவி விளை --- நடுவில் உள் உயிரில் உயிர்க்குயிராய் விளங்கும்,

     ஞான நம்ப --- ஞானமூர்த்தியே!

     நபோமணி சமான துங்க --- சூரியனுக்குச் சமானமான ஒளியும் பரிசுத்தமுமுடைய,

     வடிவேலா --- கூரிய வேலாயுதரே!

     படாத குளிர் சோலை --- வெயில் படாத குளிர்ந்த சோலைகள்,

     அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து --- ஆகாயம் வரை ஓங்கி உயர்ந்து வளர்ந்து,

     பசேல் எனவுமே தழைந்து --- பச்சென்ற நிறத்துடன் தழைத்து,

     தினமே தான் --- நாளி தோறும்,

     விடாது மழை மாரி சிந்த --- விடாமல் மழை பெய்வதால்,

     அநேக மலர் வாவி பொங்கு --- பல மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள,

     விராலிமலை மீது உகந்த --- விராலி மலைமீது விரும்பி வாழும்,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     கொடாதவனையே புகழ்ந்து --- தருமமே செய்யாத ஒருவனைப் புகழ்ந்து,

     குபேரன் எனவே மொழிந்து --- அவனைக் குபேரன் என்று கூறி,

     குலாவி அவமே திரிந்து --- அவனை மகிழ்ந்து துதி செய்து வீணாகத் திரிந்து, பு

     வி மீது --- இந்தப் பூமியின் கண்,

     எடாத சுமையே சுமந்து --- சுமக்க முடியாத குடும்பச் சுமையைச் சுமந்து

     எணாத கலியால் மெலிந்து --- நினைக்கவும் முடியாத கொடுமையைத் தரும் கலி புருஷனால் வாடி,

     எலா வறுமை தீர --- எல்லா வறுமைத் துன்பங்களும் தீரும்படி,

     அன்று உன் அருள் பேணேன் --- அந்நாளில் உமது திருவருளை விரும்பாது காலங்கழித்தேன்.

     சுடாத தனம் ஆன கொங்கைகளால் --- நெருப்பில் சுடாத பசும் பொன்போன்ற கொங்கைகளால்,

     இதயமே மயங்கி --- உள்ளம் மயக்கம் பூண்டு,

     சுக ஆதாரமது ஆய் ஒழுங்கில் --- சுகத்தைத் தரக்கூடிய வழியில், ஒழுகாமல் அடியேன் நடக்காமல்,

     கெடாத தவமே மறைந்து --- கெடுதல் இல்லாத தவநெறி மறைந்துபோக,

     கிலேசம் அதுவே மிகுந்து --- துன்பமே மிகவும் பெருகி,

     கிலாத உடல் ஆவிநொந்து --- ஆற்றல் இலாத உடலில் உயிர் நொந்து,

     மடியா முன் --- இறந்து படு முன்பாக,

     தொடாய் மறலியே நீ என்ற சொல் ஆகியது உன் நா வரும் கொல்
--- “யமனே! நீ இவனைத் தொடாதே” என்ற சொல் உமது நாவில் வருமோ?,

     சொல் - அதை எனக்குச் சொல்லி அருளுக.


பொழிப்புரை


     ஏழு உலகங்களையும் ஈன்ற பார்வதிதேவியின் புதல்வரே!

     நட்டு வைக்கப்படாத சுழிமுனை, மூலாதார முதலிய ஆறாதாரங்கள், விந்து என்ற இவற்றில் நடுவில் விளங்கும் உயிரில் தோன்றி விளங்கும் ஞானமூர்த்தியே!

     சூரியவொளி போன்ற தூய கூரிய வேலவரே!

     வெயில் படாத குளிர்ந்த சோலைகள் வனத்தையளாவி உயர்ந்து வளர்ந்து பச்சென்ற நிறத்துடன் தழைத்து? நாள்தோறும் மழை பொழிவதால், பல மலர்த் தடாகங்கள் சூழ்ந்துள்ள, விராலிமலைமீது எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

     தருமஞ் செய்யாதவரைப் புகழ்ந்து, குபேரன் என்று கூறி அவனுடன் கூடி வீணாகத் திரிந்து, இந்தப் பூதலத்தில் தாங்கமுடியாத குடும்பச்சுமையைத் தாங்கி, நினைக்கவும் முடியாத கொடுமையையுடைய கலிபுருஷனால் வாடி, எல்லா வறுமைகளும் தீரும் பொருட்டு உமது திருவருளை விரும்பாது காலங் கழித்தேன்; நெருப்பில் சுடாத பசும் பொன் போன்ற கொங்கைகளால் உள்ளம் மயங்கி, சுகாதாரமான நெறியில் நடக்காமல், கெடுதல் இல்லாத தவநெறியும், மறைந்து போக, துக்கமே மிகவும் பெருகி, வலிமையில்லாத உடம்பில் உயிர் நொந்து இறந்துபோகு முன் தேவரீர் தோன்றி, “இயமனே! நீ இவன் உயிரைத் தொடாதே” என்ற சொல், உமது நாவில் வருமோ? அதை எனக்குச் சொல்லியருளும்.


விரிவுரை


கொடாதவனையே புகழ்ந்து, குபேரன் எனவே மொழிந்து, குலாவி அவமே திரிந்து ---

வறுமையின் கொடுமையால் வறியவர்கள், பொருளுடையாரிடம் போய், அவர்களைக் குபேரன் என்றும், பெரிய கொடையாளி யென்றும் கூறிப் புகழ்வார்கள். ஆனால் அவர்கள் ஒரு காசும் கொடுக்காத பரம லோபிகள்.

இதனை பல திருப்புகழ்ப் பாடல்களிலும் சுவாமிகள் பாடி உள்ளனர்.

எடாத சுமையே சுமந்து ---

அளவுக்கு மேற்பட்ட குடும்பச்சுமை, வியாபாரச்சுமை முதலிய பாரங்களைத் தங்கள் தலையில் சுமந்து பலர் வாடுகின்றார்கள்.

எணாத கலியால் மெலிந்து ---

கலிபுருஷன் மனத்தால் நினைக்க முடியாத அளவு கொடுமையுடையவன். அவன் அநேக கொடுஞ் செயல்களைச் செய்விப்பான். அதனால் மக்கள் மெலிந்து வாடுகின்றார்கள்.

எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன் ---

அறிவில் வறுமை; பொருளில் வறுமை; குணத்தில் வறுமை; இப்படிப் பல வறுமைகள் தீர முருகனை ஏத்தி அவருடைய திருவருளை விரும்பாமல் வறிதே வாழ்நாளைத் தொலைத்து விடுகின்றார்கள்.

கிலாத உடலாவி நொந்து மடியாமுன் ---

இலாத-ஆற்றல்இலாத, வலிமையற்ற உடலில் உயிர் நொந்து இறக்குமுன் முருகா! உன் அருள் வெளிப்பட வேண்டும்.

தொடாய் மறலியே நி என்ற சொல் ஆகியது உன் நா வருங்கொல் சொல் ---

எம்பெருமானே! அடியேனுடைய உயிரை இயமன் பிடிக்க வரும்போது, தேவரீர் அப்போது தோன்றி, “இயமனே! நீ இவன் உயிரைத் தொடாதே, அவன் நம் அடியவன்” என்று கூறும் அருள் உரை உமது நாவில் இருந்து வராதே? அப்படி வரும் என்று எனக்கு ஓர் உறுதிமொழி கூறி அருளுவீராக.

நின்னடியே வழிபடுவான் நிமலா! நினைக் கருத,
"என் அடியான் உயிரை வவ்வேல்" என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.  ---  திருஞானசம்பந்தர்.

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
     அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை
     வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு அடியேன், 
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின்,
      இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்
     செழும் பொழில் திருப் புன்கூர் உளானே! .--- சுந்தரர்.


நடாத சுழி மூல விந்து நளாவிவிளை ஞானநம்ப ---

ஒருவரால் நடப்படாமல் ஆறு ஆதாரங்களிலும் ஊடுருவியுள்ள சுழிமுனையிலும் விந்துவிலும் இடையில் விளங்கும் உயிர்க்கு உயிராய் இறைவன் விளங்குகின்றான்.

கருத்துரை

விராலிமலை மேவும் வேலவரே! இயமபயம் நீக்கி எனை ஆண்டருளும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...