திருச்செங்கோடு - 0398. வண்டார் மதங்கள்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வண்டார் மதங்கள் (திருச்செங்கோடு)

முருகா!
பொதுமாதரை நினைந்து அழியாமல்,
உன்னை நினைந்து உய்ய அருள்
 

தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான


வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி
     வந்தூரு கொண்ட ...... லதனோடும்

வண்காம னம்பு தன்கால்ம டங்க
     வன்போர்ம லைந்த ...... விழிவேலும்

கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க
     நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக்

கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து
     குன்றாம லுன்ற ...... னருள்தாராய்

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
     பண்போனு கந்த ...... மருகோனே

பண்சார நைந்து நண்போது மன்பர்
     பங்காகி நின்ற ...... குமரேசா

செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
     நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே

செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

வண்டார் மதங்கள் உண்டே, மயங்கி
     வந்து ஊரு கொண்டல் ...... அதனோடும்,

வண்காமன் அம்பு தன் கால் மடங்க
     வன் போர் மலைந்த ...... விழிவேலும்,

கொண்டே வளைந்து கண்டார் தியங்க
     நின்றார் குரும்பை ...... முலைமேவி,

கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து
     குன்றாமல், ன்தன் ...... அருள்தாராய்.

பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு
     பண்போன் உகந்த ...... மருகோனே!

பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர்
     பங்கு ஆகி நின்ற ...... குமரேசா!

செண்டு ஆடி அண்டர் கொண்டாட, மன்றில்
     நின்று ஆடி சிந்தை ...... மகிழ்வாழ்வே!

செஞ்சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற
     செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


     பண்டு ஆழி சங்கு கொண்டு --- பழமையான சக்கரமும் சங்கும் கொண்டு,

     ஆழி தங்கும் --- கடலில் தங்கியுள்ள,

     பண்போன் உகந்த --- பண்புடைய திருமால் மகிழ்ந்த,

     மருகோனே --- திருமருகரே!

     பண் சார --- இசை பொருத்தவும்,

      நைந்து --- உள்ளம் உருகவும்,

     நண்பு ஓதும் அன்பர் --- துதிகளை ஓதுகின்ற அடியார்களின்,

     பங்கு ஆகி நின்ற --- பக்கத்தில் துணையாகி நின்ற,

     குமர ஈசா --- குமாரக் கடவுளே!

     செண்டு ஆடி --- அசுரர்களைச் சிதற அடித்து,

     அண்டர் கொண்டாட --- தேவர்கள் புகழும்படி,

     மன்றில் நின்று ஆடி --- சபையில் நின்று ஆடுகின்ற சிவபிரான்,

     சிந்தை மகிழ் வாழ்வே --- திருவுள்ளத்தில் மகிழ்கின்ற செல்வமே!

     செம்சாலி மிஞ்சி --- செந்நெல் மிகுந்,


     மஞ்சு ஆடுகின்ற --- மேகங்கள் உலாவுகின்ற

     செங்கோடு அமர்ந்த --- திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     வண்டார் --- வண்டுகள்,

     மதங்கள் உண்டே --- தேனை உண்டு,

     மயங்கி வந்து ஊரு --- மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற,

     கொண்டல் அதனோடும் --- மேகம் போன்ற கூந்தலுடன்,

     வண் காமன் அம்பு தன் கால் மடங்க --- வளப்பம் பொருந்திய மன்மதனுடைய மலர்ப் பாணத்தின் செவ்வி குறைய,

     வன்போர் மலைந்த விழி வேலும் --- வலிய போரை எதிர்த்த கண் என்ற வேற்படையையும்,

     கொண்டே வளைந்து --- கொண்டு வளைந்து,

     கண்டார் தியங்க நின்றார் --- பார்த்தவர்கள் அப்படியே தியங்கும்படி நின்றவர்களாம் பொது மாதர்களின்,

     குரும்பை முலை மேவி --- தென்னங் குரும்பை போன்ற தனத்தின் மீது விருப்பம் வைத்து,

     கொந்து ஆர் அரும்பும் --- பூங்கொத்துக்கள் நிரம்பித் தோன்றும்,

     நின் தாள் மறந்து --- உமது திருவடியை மறந்து,

     குன்றாமல் --- அடியேன் அழியாவண்ணம்,  

     உன்தன் அருள் தாராய் --- உமது திருவருளை தந்தருளுவீராக.


பொழிப்புரை

     பழையான சக்கரமும் சங்கும் ஏந்தி, கடலில் தங்கியுள்ள பண்புடைய திருமால் மகிழ்ந்த திருமருகரே!

     இசை பொருந்தவும், உள்ளம் உருகவும் துதிக்கின்ற அனபர்களின் அருகில் நிற்கின்ற குமாரக் கடவுளே!

     அரக்கர்களைச் சிதற அடித்துத் தேவர்கள் கொண்டாடும்படி சபையில் நின்று நடிக்கின்ற சிவபெருமான் திருவுள்ளத்தில் மகிழ்கின்ற செல்வமே!

     செந்நெல் மிகுந்த, மேகங்கள் உலாவுகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள, பெருமிதம் உடையவரே!

     வண்டுகள் தேனையுண்டு மயங்கி வந்து மொய்க்கின்ற மேகம் போன்ற கூந்தலையும், வளப்பமுள்ள மன்மதனுடைய மலர்க் கணையின் செவ்வி குறைய வலிய போர் புரிந்த கண்களாகிய வேலையுங் கொண்ட கண்டவர் தியங்குமாறு வளைந்து நிற்கின்ற பொது மாதரின் குரும்பை போன்ற தனத்தை விரும்பி, பூங்கொத்துக்கள் நிறைந்த உமது திருவடியை மறந்து அடியேன் அழியாதபடி உமது திருவருளைத் தந்தருளுவீராக.


விரிவுரை

வண்டார் ---

வண்டுகள். அஃறிணையை உயர் திணையாக்க கூறினார். திணைவழுவமைதி. (நன்னூல்)

விரகின்மை கொண்ட குருகார்”           --- கந்தபுராணம்

மதங்கள் ---

மதம்-தேன் ‘மதங் கமழ் கோதை” (சிந்தாமணி)

கொண்டால் ---

கொண்டல்-மேகம். உவம ஆகுபெயராகக் கூந்தலைக் குறிக்கின்றது.

கால்மடங்க ---

கால்-செவவி.

பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் ---

பண்டு-பழமை.சக்கரமும் சங்கும் தாங்கி ஆழியில் துயின்ற திருமால்.

பண்சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா ---

பண் - இராகம். நல்ல இசையுடன்பாடி உள்ளம் உருகும் அன்பர்களின் அருகில் நின்று முருகன் கருணை புரிகின்றான்.

பண்பொருந்த இசை பாடும் பழனம்சேர் அப்பனை ..... அப்பர்.

பண்ஒன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்இன்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்...---  திருஞானசம்பந்தர்.

செஞ்சாலி மிஞ்சி ---

அருணகிரியார் திருச்செங்கோட்டைப் பாடுகின்ற போது பல இடங்களில் செந்நெல் விளையுந் திருத்தலம் என்றே குறிப்பிடுகின்றார்.

செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு”  --- (அன்பாகவந்து) திருப்புகழ்.

செகதலம் மிடிகெட விளைவன வயல்அணி செங்கோடு” --- (கரையறவுருகு) திருப்புகழ்.

கருத்துரை

         திருச்செங்கோட்டுத் தெய்வமே! உமது திருவடியை மறவாத வரம் தந்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...