வாழ்மனை தனக்கு


9.  இதற்கு இது அழகு

வாழ்மனை தனக்கு அழகு குலமங்கை; குலமங்கை
     வாழ்வினுக்கு அழகு சிறுவர்;
  வளர்சிறுவ ருக்குஅழகு கல்வி;கல் விக்குஅழகு
     மாநிலம் துதிசெய் குணமாம்;

சூழ்குணம் அதற்குஅழகு பேரறிவு; பேரறிவு
     தோன்றிடில் அதற்கு அழகுதான்
  தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை
     சொல்லரிய பெரியோர் களைத்

தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை
     சாற்றும்இவை அழகுஎன் பர்காண்;
  சௌரி, மலரோன், அமரர், முனிவர், முச்சுடரெலாம்
     சரணம் எமை ரட்சி எனவே.

ஆழ்கடல் உதித்து வரு விடம்உண்ட கண்டனே!
     அண்ணல்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     சௌரி, மலரோன், அமரர், முனிவர், முச்சுடர் எலாம் சரணம் எமை ரட்சி என --- திருமால், பிரமன், வானவர், முனிவர், முதலியோரும், சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய முச்சுடர்களும், "அடைக்கலம் எங்களை ஆதரிப்பாயாக" என்று வேண்டி நின்ற போது,

     ஆழ்கடல் உதித்துவரும் விடம் உண்ட கண்டனே ---- ஆழ்ந்த பாற்கடலில் தோன்றி வந்த நஞ்சத்தை உண்டு அருளி அவர்கள் எல்லோரையும் காத்து அருள் புரிந்த உண்ட நீலம் பொருந்திய கண்டத்தை உடையவனே!,

     அண்ணல் எமது அருமை மதவேள் --- தலைவனாகிய எம்முடைய அருமையான மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     வாழ் மனை தனக்கு அழகு குலமங்கை - வாழுகின்ற இல்லத்திற்கு அழகு நல்ல குடியிலே பிறந்த மங்கையாவாள்.

     குலமங்கை வாழ்வினுக்கு அழகு சிறுவர் - அந்தக் குலமங்கையின் வாழ்விற்கு அழகு செய்வோர் நன்மக்கள் ஆவர்.

     வளர் சிறுவருக்கு அழகு கல்வி - வளரும் சிறுவர்களுக்கு அழகு செய்வது கல்வி.

      கல்விக்கு அழகு மாநிலம் துதி செய் குணம் ஆம் - கல்விக்கு அழகாவது பெரிய உலகத்தில் உள்ளோர் புகழுகின்ற நல்ல பண்பாகும்.

      சூழ்குணம் அதற்கு அழகு பேரறிவு --- கல்வியின் பயனாகப் பொருந்திய அந்த நற்பண்புக்கு அழகுசெய்வது பெருமை மிக்க அறிவு.

     பேரறிவு தோன்றிடில் அதற்கு அழகுதான் --- பேரறிவு உண்டானால் அதற்கு அழகு செய்பவை,  அவன் பால் விளங்கும்,

     தூய தவம் --- உற்ற நோய் நோன்றலும், உயிர்க்கு உறுகண் செய்யாமையாகிய நல்ல தவ உணர்ச்சி.

     மேன்மை -- பெருந்தன்மை.

     உபகாரம் - பிறருக்கு உதவி செய்யும் உதார குணம்.

     விரதம் --- உண்டி சுருக்கல் முதலியவைகளால் ஐம்புலன்களை அடக்குதல்,

     பொறுமை --- தன்னைப் போற்றாதவர்களையும், தனக்குத் தீங்கு இழைத்தவர்களையும் பொறுத்துக்கொள்ளுகின்ற பொறை,

     சொல் அரிய பெரியோர்களைத் தாழ்தல் --- புகழ்தற்கரிய பெரியோர்களை வணங்குதலும்,

     பணிவிடை புரிதல் --- அவர்கட்கு வேண்டும் உபகாரங்களையும், பணிவிடைகளையும் புரிதல்.  

     சிவநேசம் --- சைவத்திலே பற்று. அன்புடைமை. (அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் - திருமூலர்)

     கருணை --- பிற உயிர்கள் பால் செலுத்தும் அருள். (அன்பு இருந்தால் அருள் பிறக்கும். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றார் திருவள்ளுவர்)

     சாற்றும் இவை அழகு என்பர் --- கூறப்பட்ட இவையே அழகாகும் என்று அறிஞர்கள் கூறுவர்.

     மேலே கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று அழகு செய்வன. தொடர்பு உடையன.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...