தென்சேரிகிரி - 0408. எங்கேனும் ஒருவர்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எங்கேனும் ஒருவர் (தென்சேரிகிரி)

முருகா!
மாதர் மயல் என்னும் கடலில் இருந்து
முத்திக் கரை ஏற அருள்.

தந்தான தனதனன தந்தான தனதனன
     தந்தான தனதனன ...... தனதான


எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு
     இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென்

றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
     என்றாசை குழையவிழி ...... யிணையாடித்

தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
     சந்தேக மறவெபறி ...... கொளுமானார்

சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
     தண்பாரு முனதருளை ...... யருள்வாயே

சங்கோடு திகிரியது  கொண்டேயு நிரைபிறகு
     சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித்

தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
     தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ்

சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
     சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச்

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
     தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


எங்கேனும் ஒருவர் வர, அங்கே கண் இனிது கொடு
     "இங்கு ஏவர் உனது மயல் ...... தரியார்", ன்று,

"இந்தா என் இனிய இதழ் தந்தேனை உற மருவ"
     என்று, சை குழைய விழி ...... இணையாடி,

தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள்
     சந்தேகம் அறவெ பறி ...... கொளும் மானார்,

சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததிவிட
     தண்பாரும் உனது அருளை ...... அருள்வாயே.

சங்கோடு திகிரி அது கொண்டு ஏயும் நிரை பிறகு
     சந்துஆரும் வெதிரு குழல் ...... அது ஊதித்

தன் காதல் தனை உகள என்று, ழு மடவியர்கள்
     தம் கூறை கொடு, மரமில் ...... அது ஏறும்

சிங்கார அரி மருக! பங்கேருகனும் மருள
     சென்று, யும் அமரர் உடை ...... சிறைமீள,

செண்டாடி அசுரர்களை, ஒன்றாக அடியர் தொழு
     தென்சேரி கிரியில் வரு ...... பெருமாளே.


பதவுரை

      சங்கோடு திகிரி அது --- சங்கத்துடன் சக்கரத்தை,

     கொண்டு --- கரங்களில் தாங்கிக் கொண்டு,

     ஏயும் நிரை பிறகு --- சேர்ந்து வாழும் பசுக்கூட்டத்தின் பின்னே,

     சந்து ஆரும் வெதிரு குழல் அது ஊதி --- ஏழிசைகளை உண்டாக்கும் தொளைகளோடு கூடிய மூங்கிற் குழலை இசையுடன் ஊதியும்,

     தன் காதல் தனை உகள என்று ---- தன்னிடத்துக் கொண்ட காதலை மேலும் வளர்க்க என்று,

     எழு மடவியர்கள் தம் --- மன எழுச்சியையுடைய கோப கன்னிகைகளுடைய,

     கூறை கொடு --- சீலைகளைக் கவர்ந்து கொண்டு,

     மரம்இல் --- மரத்தில்,

     ஏறும் --- ஏறியும் திருவிளையாடல் செய்த,

     சிங்கார --– மிக்க அழகுடைய,

     அரி மருக --- திருமாலுடைய திருமருகரே!

      பங்கேருகனும் மருள --- பிரமதேவரும் திகைக்கும்படி,

     சென்று --- போர்க்களத்திற் போய்

     ஏயும் அமரர் உடை --- பொருந்தியுள்ள தேவர்களுடைய,

     சிறை மீள --- சிறைமீட்கும் பொருட்டு,

     அசுரர்களை செண்டு ஆடி --- அசுரர்களைச் செண்டுபோல் எறிந்து அழித்து,

     ஒன்றாக அடியார் தொழு --- ஒருமைப்பாட்டுடன் அடியார்கள் தொழுகின்ற,

     தென் சேரிகிரியில் வரு --- தென்சேரிமலை யென்னும் திருத்தலத்தில் வந்து அமர்ந்த,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      ஏங்கேனும் --- எவ்விடத்திலாயினும்,

     ஒருவர் வர --- ஒரு மனிதன் வந்தால்,

     அங்கே --- அவ்விடத்திலே,

     கண் இனிது கொடு --- குளிர்ச்சியாகப் பார்த்துக் கண்வலையை வீசி,

     இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று --- “இவ்விடத்தில் உங்களைக் கண்டால் யார்தான் மோகமுற்று மயங்கமாட்டார்கள்? யாரும் மயங்கி விடுவார்கள்” என்று பேசி,

     என் இனிய இதழ் இந்தா --- “என்னுடைய இனிமையான அதரபானம் இந்தா பெற்றுக் கொள்ளுங்கள்,

     தந்தேனை உற மருவ --- இதழ் தந்த என்னைப் பொருந்தத் தழுவுங்கள்”,

     என்று ஆசை குழைய --- என்று சொல்லி ஆசையால் உள்ளமும் உடம்பும் குழையும்படி,

     விழி இணை ஆடி --- இரண்டு கண்களையும் சுழற்றி,

     அவருடைய --- தம்மை வந்தடைந்த ஆடவர்களுடைய,

     உண்டான பொருள் உயிர்கள் --- அவர்களுக்கு உள்ள பொருள் அத்தனையும் உயிரையும்,

     தங்காமல் --- அவர்களிடத்தில் தங்குதலின்றி,

     சந்தேகம் அறவே பறிகொள்ளும் --- ஐயஞ்சிறிதுமின்றி சூயைாடுகின்ற,

     மானார் --- விலைமாதர்களுடைய,

     சங்கீத கலவி நலம் என்று ஓது --- இசையோடு கூடிய கலவி இன்பம் என்று சொல்லப்படுகின்ற,

     உததி விட --- காமசமுத்திரத்தை விட்டுக் கரையேறுமாறு,

     தண்பாரும் --- குளிர்ச்சி மிக்க,

     உனது அருளை --- தேவரீருடைய திருவருளை,

     அருள்வாயே --- கொடுத்தருள்வீர்.


பொழிப்புரை

         சங்கு சக்கரத்தைத் திருக்கரத்தில் தாங்கியும், கலந்து வாழும் நற்குணமுடைய பசுக்கூட்டத்தின் பின் சென்று அவற்றை மகிழ்விக்கும் பொருட்டு, (ஏழிசைகளை வெளிப்படுத்துகின்ற) தொளைகளையுடைய வேய்ங்குழலை இனிது இசைத்தும், தன்னிடத்துக் கொண்ட காதலை மேலும் வளர்க்கும் பொருட்டு,
(நீராடுகின்ற) கோபிகை கன்னிகளின் சீலைகளை எடுத்துக் கொண்டு மரத்தில் ஏறிக்கொண்டும் திருவிளையாடல் புரிந்த அழகிய நாராயணமூர்த்தியின் திருமருகரே!

         பிரமதேவரும் திகைக்குமாறு போர்க்களத்திற் சென்று, பொருந்தியுள்ள தேவர்களுடைய சிறை மீளும்படி, அசுரர்களை வதைத்து, ஒருமையுடைய அடியார்கள் தொழ, தென்சேரிகிரியால் வந்தமர்ந்த பெருமிதமுடையவரே!

         எவ்விடத்திலேனும் ஒரு மனிதர் வந்தால் அவ்விடத்தில் அவனைக் கண்வலை வீசிப்பிடித்து, “இங்கே உம்மைக் கண்டால் யார்தான் மோகத்தால் மயங்க மாட்டார்கள்? உமது அழகு யாரையும் மயங்கச் செய்யும்” என்று சொல்லி, “எனது இனிமையான இதழ்க் கனி இந்தா பெற்றுக் கொள்ளுங்கள்; இதழைத் தந்த என்னைக் கட்டியணைக்க வாருங்கங்கள்” என்று விரக வார்த்தைகளைக் கூறி ஆசையை மூட்டி, அவ்வாசையால் உடலையும், உள்ளத்தையும் உருக்கி, இரு கண்களையும், கீழும் மேலும் புரட்டி, அவர்கள் வலைப்பட்ட ஆடவர்களுக்கு உடைய பொருள்களையும், அவர்கள் உயிரையும், சிறிதும் சந்தேகமின்றிப் பறித்துக்கொள்ளும் விலைமகளிருடைய, சங்கீதப் பாடலோடு கூடிய கலவி இன்பமாகிய பெருங்கடலை விட்டுக் கரையேறி உய்ய, தேவரீருடைய தட்பமிக்க திருவருளைத் தந்து ஆட்கொண்டருள்வீர்.

விரிவுரை


எங்கேனும் ஒருவர் வர ---

விலைமகளிர், வீதியோ, சந்தியோ, மற்ற எவ்விடமாயினும் எதிர்ப்பட்ட ஆடவரை விழிவலை வீசி மயக்குவர்.

இங்கு ஏவர் உனது மயல்.............மருவ ---

தம் வசப்பட்ட ஆடவர்கள் மீண்டும் செல்லாவண்ணம், “நீங்கள் மிகவும் தாராள சிந்தனையுடையவர். கர்ணனும் தங்களைக் கண்டால் நாணித்தலைகவிழ்ப்பான். தங்கள் அழகைக் கண்டு மன்மதனும் வெந்து நீறானான். ஆடவர்கள் தங்களைக் கண்டால் அவாவுகின்றரென்றால் பெண்ணாகப் பிறந்தவர் யார் தான் தங்கள் கட்டழகைக் கண்டால் மயங்கமாட்டார்கள்? என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உத்தம! விரைந்து என்னைத் தழுவும்; விரக தாபத்தால் வெதும்புகின்ற என்னை நீர் தழுவவில்லை என்றால் என் உயிர் நீங்கிவிடும்” என்று பசப்பு மொழிகளைக் கூறி அவர் மனத்தைக் கவர்ந்து மீளா நரகுக்கு ஆளாக்குவர்.

அவருடைய உண்டான பொருள் உயிர்கள்........பறிகொளும் மானார் ---

விலைமகளிர் தம் வலைப்பட்டோருடைய பூமி வீடு மாடு பொன் ஆடை ஆபரணம் முதலிய யாவற்றையும் பறித்துக் கொள்வதோடு அமையாது, அவருடைய உயிர்க்கும் உலைவைத்துவிடுவர்.

உயிர் ஈர்வார் மேல்வீழ்ந்து தோயும் தூர்த்தன்”
மனம் உடனே பறிப்பவர்கள்”                     --- (குமரகுருபரமுருககுகனே) திருப்புகழ்.

விளக்கு ஒளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்குஅற நாடின் வேறுஅல்ல,-விளக்குஒளியும்
நெய்அற்ற கண்ணே அறுமே, அவர்அன்பும்
கைஅற்ற கண்ணேஅறும்.                     --- நாலடியார்.

கலவி நலம் என்று ஏகும் உததி ---

மாதர் மயக்கம் ஒரு பெருங்கடல். கடலைக் கடப்பது எத்துணையரியதோ அதேபோலும் மாதராசையைத் தவிர்ப்பதும். கலையறிவாலும் முயற்சியாலும் பிற சாதனங்களாலும் அதை அறவே நீக்கமுடியாது. நீக்கினும் பிறது ஒரு சமயம் அது சிறிது தலை நீட்டும். எந்தை கந்தவேள் திருவருட் பலம் ஒன்றாலே பிறவிகடோறும் தொடர்ந்து வரும் பெண்ணாசை முற்றிலும் நீங்கி யுய்யலாம். அதுதான் அருணகிரிநாதர் காட்டிய செந்நெறி.

கடலில் நீர் பாம்பு, சங்கு, பவளம், அல்குல்ல் படமும், நீர்ச்சுழி; மலைகள் முதலிய இருக்கும், காமக்கடலிலும், அல்குற்படமும், கழுத்தாகிய சங்கும், உந்தியாகிய நீர்ச்சுழியும், தனமாகிய மலையும் இருந்து இடர் செய்யும் என்பதை கந்தலங்காரம் 29ஆவது பாடலில் உபதேசிப்பதைப் பலமுறை படித்து உண்மையுணர்ந்து உய்யுநெறி பெற்று உலகம் இன்புறுக.

சந்தாரும் வெதிருகுழல் ---

மூங்கிலால் செய்யப்படும் இசைக்கருவி; புல்லாங்குழல் என்பர். தோற்கருவி, தொளைக்கருவி, நரம்புக்கருவி, சஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி, என்று ஐங்கருவிகளுள், புல்லாங்குழல் தொளைக் கருவியாம்.

புல்லாங்குழல், கருங்காலி, சந்தனம், செங்காலி, வெண்கலம் முதலியவைகளாற் செய்யப்படுமாயினும் உத்தமம் மூங்கிலே. இதன் விளக்கத்தைத் திருப்புகழ் விரிவுரை 2ஆம் தொகுதி களபமொழுதிய என்ற பாடலின் விரிவுரையில் பார்க்கவும்.

தங்கூறை கொடு மரமில் ---

மரமில் என்பதில் அத்துச்சாரியை கெட்டிருக்கின்றது.

ஆயர்பாடியில் கோபி கன்னிகைகள் கண்ணனைக் கணவனாகப் பெறும்பேற்றை விரும்பி மார்கழி மாதம் 30 நாட்களும் யமுனையில் நீராடி கௌரி நோன்பு நோற்க, முடிவு நாளையில், விரத பலனைத் தரும் பொருட்டும், ஆடையின்றி நீராடுவது தவறு என்பதை உணர்த்தும் பொருட்டும் கண்ணபிரான் அவர்கள் ஆடைகளை கவர்ந்து மரத்தின் மீது ஏறி அவர்கள் வணங்க அளித்த வரலாற்றைத் தெரிவிக்கின்றது.


உடுத்து அலால் நீராடார், ஒன்றுஉடுத்து உண்ணார்,
உடுத்தஆடை நீருள் பிழியார், விழுத்தக்கார்
ஒன்றுஉடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.              --- ஆசாரக் கோவை

கோபிகையரது குற்றத்தை உணர்த்துவான் பொருட்டு, அந்த ஆடைகளை யெல்லாம் எடுத்துச் சுருட்டி மூட்டையாகக் கட்டி, அருகில் இருந்த குருந்த மரத்தில் ஏறிக்கொண்டார் கண்ணன். நீராடிய இளஞ் சிறுமிகள் கரையை அடைந்து தமது உடைமைகளைக் காணாது, பிறகு நாணிக் கோணி, மீளவும் நீரில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தார்கள். மரத்தின்மீது நின்ற மணிவண்ணனைக் கண்டு நாண மீதூர்ந்தார்கள். “யசோதை பெற்ற இளஞ் சிங்கமே! எங்கள் ஆடையைக் கொடுத்தருளும்” என்று வேண்டினார்கள். பகவான், “சிறுமியர்களே! புண்ணிய நதியில் ஆடையின்றி நீராடுவது, குற்றம். ஆதலால் அப்பிழை தீரக் கும்பிட்டால் தருவேன்” என்று அருளச் செய்தார். அங்ஙனமே அவர்கள் தொழுது உடைகளைப் பெற்றார்கள். 

மருமாலிகைப் பூங் குழல் மடவார்
     வாவி குடைய, அவர் துகிலை
வாரிக் குருந்தின் மிசை ஏறி,
         மட நாண் விரகம் தலைக்கொண்டு,
கருமா நாகம் செந்நாகம்
         கலந்தது என, அவ் வனிதையர்கள்
கையால் நிதம்பத் தலம் பொதிந்து,
         கருத்தும் துகிலும் நின்று இரப்ப,
பெருமா யைகள் செய்து இடைச்சியர்கள்
         பின்னே தொடர, வேய் இசைத்து,
பேய்ப்பெண் முலைஉண்டு உயிர் வாங்கி,
         பெண்களிடத்தில் குறும்பு செய்யும்
திருமால் மருகன் அலவோ நீ?
         சிறியேம் சிற்றில் சிதையேலே.
செல்லுத் தவழும் திருமலையில்
         செல்வா! சிற்றில் சிதையேலே.      ---  திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்

ஆடைகளைப் பெருமான் கவர்ந்தான் என்ற வரலாற்றின் உட்பொருள் தேகாபிமானத்தைக் கவர்ந்தார் என்பதாகும்.

தென்சேரிகிரி:-

இத்திருத்தலம்  பல்லடத்திற்குத் தெற்கே 12 மைல் தூரத்தில் உள்ளது.

கருத்துரை
  
திருமால் மருக! தென்சேரிகிரி நாதா! மாதர் மயக்கமாகிய கடலினின்று கரையேறி உய்ய அருள்புரிவீர்.






No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...