குன்றக்குடி - 0373. ககுபநிலை குலைய





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ககுபநிலை குலைய (குன்றக்குடி)

முருகா! உனது திருவடியைத் தந்து அருள்


தனதனன தனதனன தனதனன தனதனன
     தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
தனதனன தனதனன தனதனன தனதனன
     தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
தனதனன தனதனன தனதனன தனதனன
     தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா


ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
     தந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள
அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
     அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ
களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி
     யஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத ...... னபிஷேகங்

கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
     இன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ
பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
     புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ
கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
     சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ ...... முலைமாதர்

வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத
     மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
     னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய
வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
     கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக ......  நுதிரேகை

வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்
     உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி
செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்
     உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி
வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர
     துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப ...... அருளாதோ

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
     தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண
     சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன
     தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
     தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
     டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
     தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ......    யெனதாளந்

தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்
     தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை
பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை
     மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு
துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென
     வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர ...... முதுபேய்கள்

சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்
     வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென
வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
     திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
     மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் ......பெருமாளே.


பதம் பிரித்தல்


ககுபநிலை குலைய,இகல் மிகு பகடின் வலிஉடைய
     தந்தத்தினைத் தடிவ, தொந்தத் திரத்தை உள
அகிலமறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும்
     அம்பொன் பதத்தர் தநு அம்பொன் பொருப்பு அடர்வ,
களப பரிமளம் மெழுகும் எழிலில் முழுகுவ, முளரி
     அஞ்சப் புடைத்து எழுவ, வஞ்சக் கருத்து மதன் ...... அபிஷேகம்

கடிவபடு கொலைஇடுவ, கொடிய முகபடம் அணிவ,
     இன்பச் சுடர்க் கனக கும்பத்தரச் செருவ
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர்இளைஞர்
     புந்திக்கு இடர்த் தருவ, பந்தித்த கச்சு அடர்வ,
கயல்மகரம் நிகர, மிக வியன்மருவு நதியில்முதிர்
     சங்கு இப்பி முத்து அணிவ, பொங்கிக் கனத்து ஒளிர்வ ....முலைமாதர்

வகுளமலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம்
     ஒன்றிக் கறுத்து, முகில் வென்றிட்டு, நெய்த்தகுழல்
அசைய, ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில்குயில்
     எனும் புட் குரல் பகர, வம்புஉற்ற மல் புரிய,
வருமறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள்
     கன்றிச் சிவக்க, மகிழ் நன்றிச் சமத்து, நக ......     நுதிரேகை

வகைவகை மெய் உற, வளைகள் கழல, இடை துவள, இதழ்
     உண்டு, ள் ப்ரமிக்க, நசை கொண்டு, ற்று அணைத்து, வதி
செறிகலவி வலையில் எனது அறிவு உடைய கலை படுதல்
     உந்தி, பிறப்பு அற நினைந்து, ட்டம் உற்று, ன்அடி
வயலிநகர் முருக! செரு முயல் பனிருகர! குமர!
     துன்றட்ட சிட்டகுண குன்றக்குடிக்கு அதிப! ...... அருளாதோ?

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
     தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண
     சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன
     தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
     தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
     டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
     தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ......    எனதாளம்

தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில்
     தம்பட்டம் மத்தளம் இனம் பட்டடக்கை பறை
பதலை பல திமிலை முதல் அதிர, திர் பெரியதலை
     மண்டைத் திரள் பருகு சண்டைத் திரள் கழுகு
துடர் நிபிட கருடன் அடர் தர, கரடம் மொகுமொகு என
     வந்து உற்றிட, குடர்நிணம் துற்று இசைத்து அதிர, ...... முதுபேய்கள்

சுனகன் நரி நெறுநெறென இனிது இனிது தின, வினைசெய்
     வெம் குக்குடத்த கொடி துங்குக்கு குக்குகென
அடனம் இடு திசைபரவி நடனம் இட, அடல் இரவி
     திங்கள் ப்ரபைக் கதிர்கள் மங்க, ப்ரசித்த குல
துரக கஜ ரத கடகம் முரண் அரண, நிருதர் விறல்
     மிண்டைக் குலைத்து, மர்செய்து அண்டர்க்கு உரத்தை அருள்....பெருமாளே.

பதவுரை

            தகுகு தகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத் தகுத்தககு திங்குத் திகுத்திகிரு சகணசகசகணகண செகண செகசெகசெகெண சங்கச்சகச்சகண செங்கச்செ கச்செகண தனனதன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனனானா தெனதெனன தந்தத்தனத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா தகுததகு தகுதகுதி திகுதிதிகுதி திகுதிகு தங்குத் தகுத்தகுகு திங்குத் திகுத் திகுகு டணணடண டணடணணடிணிணிடிடணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண திரித்திரிரி என --- தகுகுதகு தகுதகுகு..... ..... ..... .....திரித் தரத்தரா தின்றித் திரித்திரிரி என்ற ஒலிகளுடன்,

     தாளம் தொகுதி --- தாளக் கூட்டங்களும்,

     வெகுமுரசு - பலமுரசு வாத்தியங்களும்,

     கரடிகை --- கரடிகை,

      டமரு --- உடுக்கை,

     முழவு ---- முழவு,

     தவில் --- தவில்,

     தம்பட்டம் --- தம்பட்டம்,

     மத்தளம் --- மத்தளம்,

     இனம் பட்டடக்கை --- பறையினத்தைச் சேர்ந்த இடக்கை,

     பறை --- பறை,

     பதலை --- பதலை,

     பல திமிலை முதல் --- பல திமிலைகள் முதலிய வாத்தியங்கள்,

     அதிர --- பேரொலியைச் செய்யவும்,

     உதிர் பெரிய தலை மண் அடை திரள் பருகு --- போரில் அறுபட்டு உதிர்ந்த பெரிய தலை மண்டைக் குவியலை உண்ணுகின்ற,

     சண்டை திரள் கழுகு --- சண்டையிடும் கழுகின் கூட்டங்களும்,

     துடர் நிபிட கருடன் அடர்தர --- அவற்றைக் தொடர்ந்து கூட்டமாய் கருடன்கள் நெருங்கி வரவும்,

     கரடம் --- காக்கைகள்,

     மொகு மொகு என வந்து உற்றிட --- மொகு மொகு என்று வந்து சேரவும்,

     குடர் --- குடலையும்,

     நிணம் --- மாமிசத்தையும்,

     துற்று இசைத்து அதிர --- உண்டு கூச்சலிட்டு இரையவும்,

     முதுபேய்கள் --- பழைய பேய்கள்,

     சுனகன் --- நாய்களும்,

      நரி --- நரிகளும்,

     நெறு நெறு என --– நெறு நெறு என்ற ஓசையுடன்,

     இனிது இனிது தின --- சுவைக்கின்றது சுவைக்கின்றது தின்ன என்று,

     வினைசெய ---- உண்ணும் தொழிலைச் செய்யவும்,

      வெம் குக்குடத்த கொடி --- வெப்பமான கோழிக்கொடி,

     துங்குக் குகுக்குக என --- துங்குக் குகுக்குக என்று ஒலிக்கவும்,

     அடனம் இடு திசை பரவி --- அலைந்து திரியும் திசையைப் போற்றி செய்து,

     நடனம் இட --- கூத்தாடவும்,

     அடல் இரவி --- வலிமை வாய்ந்த சூரியன்,

     திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க  --- சந்திரன் இவை தம் ஒளிக்கிரணங்கள் மங்கவும்,

     ப்ரசித்த குல --- பேர் பெற்ற சிறந்த,

     துரக --- குதிரை,

     கஜ --- யானை,

     ரத --- தேர்,

     கடகம் --- சேனை,

     முரண் அரணம் --- வலிய கோட்டை இவற்றைக் கொண்ட,

     நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர்செய்து --- அசுரர்களின் வலிமையையும் துடுக்கையும் அடக்கிப்போர் செய்து,

     அண்டர்க்கு உரத்தை அருள்  --- தேவர்கட்கு வலிமையை அருளிய,

     பெருமாளே --- பெருமிதம் உடையவரே!

       ககுபம் நிலை குலைய --- திசைகளின் நிலையைக் குலைக்கவல்ல,

     இகல் மிகு --- வலிமை மிகுந்த,

     பகடின் --- யானையின்,

     வலி உடைய --- வலிமையுடைய,

     தந்தத்தினை தடிவ --- தந்தங்களை அழிக்க வல்லனவும்,

     தொந்த திரத்தை உள --- புணர்ச்சிக்கு உரிய வலிமை கொண்டனவும்,

     அகில மறை புகழ் பரமர் ---- சகல வேதங்களும் புகழ்கின்ற பெரியவரும்,

     ஞெகிழி கல கல கல எனும் --- சிலம்பு கல கல என ஒலிக்கும்,

     அம் பொன் பதத்தர் --- அழகிய சிறந்த திருவடிகளை உடையவருமாகிய சிவபெருமான் ஏந்திய,

     தநு அம்பொன் பொருப்பு அடர்வ --- வில்லாகிய அழகிய பொன் மலையாகிய மேருவைத் தாக்க வல்லனவும்,

     பரிமள களப மெழுகும் --- நறுமணமுள்ள களப் சாந்து பூசப்பட்ட,

     எழிலில் முழுகுவ --- அழகில் முழுகுவனவும்,

     முளரி அஞ்சு புடைத்து எழுவ --- தாமரையின் மொட்டு அஞ்சும்படி பருத்து எழுவனவும்,

     வஞ்ச கருத்து மதன் --- வஞ்சனையுள்ள எண்ணத்தையுடைய மன்மதனுடைய,

     அபிஷேகம் --- முடியை,

     கடிவ --- அடக்க வல்லனவும்,

     படு கொலை இடுவ --- பொல்லாத கொலைத் தொழிலுக்கு இடங்கொடுப்பனவும்,

     கொடிய முகபடம் அணிவ --- கொடிதான மேலாடை அணிவனவும்,

     இன்ப சுடர் --- இன்பந்தரும் ஒளி பொருந்திய,

     கனக கும்பதர செரு --- தங்கக்குடத்துடன் தக்கபடி போர் புரிவனவும்,

     பிருதில் --- வெற்றிச் சின்னமாக,

     புளகித சுகமும் --- புளகாங்கித சுகத்தாலும்,

     மிருது உள்ளமும் --- மென்மையாலும்,

     வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ --- வளர்கின்ற இளைஞர்களின் புத்துக்கு வருத்தத்தைத் தருவனவும்,

     பந்தித்த கச்சு அடர்வ ---- கட்டப்பட்ட இரவிக்கையால் நெருக்குண்பனவும்,

     கயல் மகர --- கயல்மீனும் மகரமீனும்,

     நிகரம் --- கூட்டமாக,

     மிக வியன் மருவு --- மிகுந்துள்ள பெருமையுடைய,

     நதியில் முதிர் --- ஆற்றில் முதிர்ந்துள்ள,

     சங்கு இப்பி முத்து அணிவ --- சங்கு இப்பி முத்து இவற்றை அணிவனவும்,

     பொங்கி கனத்து ஒளிர்வ --- மேலெழுந்து பாரங்கொண்டு விளங்குவனவுமாகிய,

     முலை மாதர் --- தனங்களையுடைய மாதர்கள்,

     வகுள மலர் --- மகிழம்பூ,

     குவளை இதழ் தரு மணமும்  --- குவளை மலரின் இதழ்கள் தருகின்ற மணமும்

     மிருகமதம் ஒன்றி --- கஸ்தூரியுங் கலந்து,

     கருத்து முகில் வென்றிட்டு --- கருநிறத்தால் மேகத்தையும் வென்று,

     நெய்த்த குழல் அசைய --- வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசையவும்,

     ருசி அமிர்த க்ருத --- சுவையுள்ள அமுதமும் நெய்யும் போல்,

     வசிய மொழி --- வசியஞ் செய்யும் மொழியானது,

     மயில் குயில் எனும் புள் குரல் பகர --- மயில் குயில் என்கின்ற பறவைகளின் குரலைக் காட்டவும்,

     வம்பு உற்ற மல் புரிய --- வம்புத் தனமாகக் கலவிப் போர் புரியவும்,

     வரு மறலி அரணமொடு --- வருகின்ற இயமனுடைய வேலை ஒத்து, முடுகு சமர் விழி இணைகள் --- முடுகிப் போர் புரியும் இரு கண்களும்,

     கன்றி சிவக்க --- மிகவும் சிவக்கவும்,

     மகிழ் நன்றி சமத்து --- மகிழ்ந்து கொடுத்த பொருளுக்கு நன்றி பாராட்டுவதான கலவிப் போரில்,

     நக நுதி ரேகை வகை வகை மெய் உற --- நகத்தின் நுனிக் குறிகள் வகை வகையாக உடலிற் பொருந்தவும்,

     வளைகள் கழல --- வளைகள் கழன்று விழவும்,

     இடை துவள --- இடுப்பு நெகிழ்ச்சியுறவும்,

     இதழ் உண்டு --- அதரத்தைப் பருகி,

     உள் ப்ரமிக்க --- உள்ளம் அதிசயம் அடையவும்,

     நகை கொண்டு --- ஆசை பூண்டு,

     அணைத்து அவதி நெறி --- பொருந்தி அணைக்கும் துன்பம் நிறைந்த,

     கலவி வலையில் --- புணர்ச்சி வலையில்,

     எனது அறிவு உடைய கலை படுதல் உந்தி --- என்னுடைய அறிவு கொண்டுள்ள கலைகள் அழிவு படுதல் நீங்கி,

     பிறப்பு அற --- அடியேனுடைய பிறப்பு அற,

     நினைந்து --- திருவுளத்தில் கருதி,

     இட்டம் உற்று --- என்மீது அன்பு வைத்து,

     உன் அடி --- உமது திருவடியை,

     வயலி நகர் முருக --- வயலூர் வாழும் முருகவேளே!

       செரு முயல் பன் இருகர --- போருக்கு முயலும் பன்னிரு கரங்களை உடையவரே!

       குமர --- குமாரக் கடவுளே!

     துன்று அட்ட சிட்டகுண --- பொருந்திய சிரேஷ்டமான எண் குணங்களை உடையவரே!

     குன்றக்குடிக்கு அதிப --- குன்றக்குடிக்குத் தலைவரே!

     அருளாதோ --- உன் பதமலரைத் தந்தருளாதோ?

பொழிப்புரை

            தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத் தகுத்தககு திங்குத் திகுத் திகிகு சகணசக சகசகண செகண செக செகசெகெண சங்ச் சகச்சகண செங்கச் செகச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத் தனத்திகுதி திகுதிகுதி தங்குத் தகுத்தகுகுதிங்கத் திகுத் திகுத் திகுகு டணணடணடணடணண டிணிணிடிணிடிணிணிடண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிணி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரிதன்றத் தரத்தரர தின்றித் திரித்திரிரி என்ற ஒலியுடன், தாளக் கூட்டங்களும், பல முரச வாத்தியங்களும், கரடிகை, தமருகம், முழவு, தவில், தம்பட்டம், மத்தளம், இடக்கை, பறை, பதலை, திமிலை முதலிய வாத்தியங்கள் மிகவும் முழங்கவும், போரில் அற்று விழுந்த பெரிய தலை மண்டைகளை உண்ணும்-சண்டை யிடும் கூட்டமான கழுகுகளும், அவற்றைத் தொடர்ந்து நெருங்கிக் கூட்டமாக கருடன்கள் வரவும், காக்கைகள் மொகு மொகு என்று வந்து சேரவும், இவையாவும் குடல் நிணம் இவற்றை யுண்டு இரச்சலிடவும், பழம் பேய்கள், நாய்கள், நரிகள் சத்தஞ் செய்து இனிக்கின்றது என்று உண்ணவும், உக்கிரமான கோழிக்கொடி, துங்குக் குகுக்கு என்று ஒலிக்கவும், அலைந்து திரியும் திசையைப் போற்றி செய்து நடன மிடவும், வலிமை மிகுந்த சூரிய சந்திரர்களின் ஒளிமங்கவும், சிறந்த குதிரை, யானை, தேர், சேனை, கோட்டை மதில்களையுடைய அசுரர்களின் ஆற்றலையும் துடுக்கையும் அடக்கி ஒடுக்கிப் போர்புரிந்து, தேவர்களுக்கு வலிமையை அருளிய பெருமிதம் உடையவரே!

     திசைகளின் நிலையைக் குலைக்கவல்ல வலிமை மிகுந்த யானையின் வலிய தந்தங்களை அழிக்கவல்லனவும், புணர்ச்சிக்கு உரிய வலிமை பூண்டனவும், சகல வேதங்களும் புகழ்கின்ற பெரியவரும், சிலம்பு கலகல என்று ஒலிக்கும் அழகிய திருவடிகளையுடையவரும் ஆகிய சிவபெருமான் ஏந்திய வில்லாகிய அழகிய மலையாகிய மேருவைத் தாக்க வல்லனவும், நறுமணமுள்ள களபச் சாந்து பூசப்பட்ட எழிலில் முழுகுவனவும், தாமரையில் மொட்டு அஞ்சும்படி பெருத்து எழுவனவும், வஞ்சனைக் கருத்தையுடைய மன்மதனுடைய மகுடத்தை அடக்க வல்லனவும், கொடிய கொலைத் தொழிலுக்கு இடங்கொடுப்பனவும், கொடிபோன்ற மேலாடை அணிவனவும், இன்பந்தரும் ஒளி பொருந்திய தங்கக் குடத்துடன் நன்றாகப் போர்புரிய வல்லனவும், வெற்றிச் சின்னமாக புளகாங்கித சுகத்தாலும், மென்மையாலும், வளர்கின்ற, இளைஞர்களின் அறிவுக்குத் துன்பந்தருவனவும், கட்டப்பட்ட இரவிக்கையால் நெருக்குண்பனவும், கயல்மீன் மகரமீன் இவற்றின் கூட்டம் மிகுந்து சிறந்துள்ள நதியில் விளைகின்ற சங்கு, சிப்பி, முத்து இவற்றை அணிவனவும், மேலெழுந்து பாரங்கொண்டு விளங்குவனவும் ஆகிய தனங்களையுடைய மாதர்களின், மகிழம்பூ குவளை மலரின் இதழ் இவற்றின் மணமும் கஸ்தூரியும் கலந்து, கருநிறத்தால் மேகத்தையும் வென்று, வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசையவும், இனிமையான அமுதும் போன்றதும் வசப்படுத்துவதுமாகிய மொழி மயில், குயில் என்கின்ற பறவைகளின் குரல்களைக் காட்டவும், வம்பு செய்கின்ற கலவிப் போர் செய்யவும், இயமனுடைய வேல் போல் போர் புரியுங் கண்கள் இரண்டும் மிகவுஞ்சிவக்கவும், மகிழ்ந்து நன்றி பாராட்டுவதான கலவிப்போரில் நகக்குறிகள் வகைவகையாக உடலில் பொருந்த வைத்தும், வளையல்கள் கழன்று விழவும், இடைநெகிழவும், அதரபானஞ் செய்தும் உள்ளம் அதிசயம் அடையவும், ஆசையுடன் அணைக்கும் அவதிநிறைந்த புணர்ச்சி வலையில் என்னுடைய கலைதானம் அழிவு படுதல் நீங்கி, என் பிறவித்துயர் அகலும் வழியைத் தேவரீர் திருவுளம் பற்றி, அடியேன்மீது அன்பு வைத்து, வயலூர் முருகவேளே! போருக்கு உற்ற பன்னிரு கரத்தையுடையவரே! எண்குணங்களையுடையவரே! குன்றக்குடிக்குத் தலைவரே! உமது பதமலரைத் தந்தருளாதோ!

விரிவுரை

ககுப நிலை குலைய ---

ககுபம்-திசை.

கலைபடுதல் உந்தி---

உந்தாத அன்பொடு உருத்திரம் சொல்லி”  ---  திருத்தொண்டர்திருஅந்தாதி.

பிறப்பற நினைந்து ---

முருகா! அடியேனுடைய பிறவியறுமாறு தேவரீர் திருவுள்ளத்தில் நினைத்து அருளவேண்டும்.”

அட்ட சிட்டகுண ---

இறைவனுடைய எண்குணங்கள்;

தன் வயத்தனாதல்,
தூயவுடம்பினாதல்,
இயற்கையுணாவினனாதல்,
முற்றுமுணர்தல்,
இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல்,
பேரருளுடைமை,
முடிவிலாற்றலுடைமை,
வரம்பில் இன்பமுடைமை.

இத்திருப்புகழின் பிற்பகுதி போர்க்களத்தில் வர்ணனைகளையும் வாசிக்கும் வாத்திய வகைகளையும் விரிவாகக் கூறுகின்றது.

கருத்துரை

குன்றக்குடி மேவும் குமரா! உமது திருவடியைத் தந்தருள்வீர்.






No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...