திரு அம்பர் மாகாளம்




திருஅம்பர் மாகாளம்

     சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.

          இத்தலம் மக்கள் வழக்கில் "கோயில் திருமாளம்" என்று வழங்குகின்றது. அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள தலம்.

     பேரளம் - திருவாரூர் இரயில் பாதையில் பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 4-கி.மீ. தூரத்தில் உள்ளது.


இறைவர்              : காளகண்டேசுவரர், மாகாளேச்வரர்

இறைவியார்         : பட்சநாயகி

தல மரம்              : கருங்காலி

தீர்த்தம்               : மாகாள தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - 1. அடையார் புரமூன்றும்,
                                                        2. புல்கு பொன்னிறம்,
                                                        3. படியுளார் விடையினர்.

          அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இஃது "மாகாளம்" எனப்பட்டது.

சோமாசி மாற நாயனார் யாகம் செய்த பதி.

          சோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டைச் செய்து வந்தார். சுந்தரரின் துணைவியாரான பரவையாரும் அதை நன்கு சமைத்துப் பரிமாற, சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் சுந்தரர் "நாள்தோறும் இக்கீரை கொணர்ந்து தருபவர் யார்?" என்று கேட்டு, சோமாசிமாறரைப் பற்றியறிந்து நேரில் கண்டு, அவர் விருப்பம் யாது என வினவினார். அதற்கு சோமாசிமாறர், "தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மறுக்க விரும்பாத சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக் கொண்டுத் திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு இசைந்த இறைவன், "தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்" என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார்.

          யாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராசப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார்; வெறுக்கத்தக்க இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர். ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே (அச்சத்துடன் நிற்க - தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்நீச வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க - இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு.

          சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே "காட்சிகொடுத்த நாயகர்" எனப் போற்றப்படுகின்றார்.

          இறைவன் யாகத்திற்கு நீச வடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள் குடம் பொங்கிய இடம் "பொங்கு சாராயநல்லூர்" (இன்று வழக்கில் "கொங்கராய ' நல்லூர்") என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் "அடியுக்க மங்கலம்" (இன்று வழக்கில் "அடியக்கமங்கலம்") என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் "கடா மங்கலம்" என்றும் இன்றும் வழங்குகின்றது.

          சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் "பண்டாரவாடை திருமாளம்" என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது.

         இக் கதைக்கு ஆதாரம் ஏதும் இருப்பின் நல்லது. ஆனாலும் பெரியபுராணம் நமக்குக் காட்டும் சோமாசிமாற நாயனார் இவர்தான்....

         சோமாசிமாற நாயனார் சோழ நாட்டில் உள்ள திருஅம்பர் என்னும் தலத்தில் வேதியர் குலத்தில் தோன்றியவர்.  சிவனடியார்.  அடியார்களுக்கு அமுது படைப்பவர். யாகம் செய்பவர். திருவைந்தெழுத்து ஓதுபவர்.  அடியார் யாராயிருப்பினும் அவர்களைச் சிவமாகவே கொண்டு வழிபாடு செய்பவர்.  அவர், திருவாரூரை அடைந்து, வன்தொண்டப் பெருமானுக்கு இடையறாத பேரன்பைச் செலுத்தி, புலன்களை வென்று சிவலோகத்தை அடைந்தார்.

சோமாசி மாறநாயனாரின் அவதாரப்பதி.

          அவதாரத் தலம்   : அம்பல் / அம்பர்.
          வழிபாடு             : குரு வழிபாடு.
          முத்தித் தலம்      : திருவாரூர்.
          குருபூசை நாள்    : வைகாசி - ஆயில்யம்.

          ஆண்டு தோறும் வைகாசி மாதம் சோமாசி மாறனார் யாக விழா நடைபெறுகிறது.

          அதிகார நந்தி மானிட உருவம். திருக்கோயிலில் ஐந்து கால பூசைகள் நடைபெறுகின்றன.  சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஒருவந்தர் மா காளம் கொள்ள, மதனைத் துரத்துகின்ற மாகாளத்து அன்பர் மனோலயமே" என்று போற்றி உள்ளார்.


----------------------------------------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

         திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் அடியார் குழாத்தோடும் திருஅம்பர் பெருந்திருக் கோயிலுக்கு எழுந்தருளி, வலம் கொண்டு, திருமுன் நின்று உருகும் அன்பொடு தாழ்ந்து பாடியருளிய திருப்பதிகம்.


பெரிய புராணப் பாடல் எண் : 525
புள்அ லம்புதண் புனல்புக
         லூர்உறை புனிதனார் அருள்பெற்று,
பிள்ளை யாருடன் நாவினுக்கு
         அரசரும் பிறபதி தொழச்செல்வார்,
வள்ள லார்சிறுத் தொண்டரும்
         நீலநக் கரும்வளம் பதிக்குஏக,
உள்ளம் அன்புஉறு முருகர்அங்கு
         ஒழியவும், உடன்பட இசைவித்தார்.

         பொழிப்புரை : நீர்ப்பறவை ஒலித்தற்கு இடமான குளிர்ந்த நீர்நிலை சூழ்ந்த திருப்புகலூரில் எழுந்தருளிய புனித இறைவரின் அருளைப் பெற்று, பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் இறைவரின் மற்றப் பதிகளையும் தொழும் பொருட்டுச் செல்பவராய், வள்ளலாரான சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும் தத்தம் வளம் பொருந்திய பதிகளுக்குச் செல்லவும், உள்ளத்தில் அன்பு கொண்ட முருக நாயனார் அங்கே தங்கியருக்கவும் அவர்கள் உடன்படத் தாமும் இசைந்தார்கள்.


பெ. பு. பாடல் எண் : 526
கண்அ கன்புக லூரினைத்
         தொழுதுபோம் பொழுதினில், கடற்காழி
அண்ண லார்திரு நாவினுக்கு
         அரசர்தம் அருகுவிட்டு அகலாதே
வண்ண நித்திலச் சிவிகையும்
         பின்வர வழிக்கொள உறும்காலை,
எண்ணில் சீர்த்திரு நாவினுக்கு
         அரசரும் மற்றுஅவர்க்கு இசைக்கின்றார்.

         பொழிப்புரை : இடம் அகன்ற திருப்புகலூரைத் தொழுது மேற்செல்கின்ற போதில், கடற்கரையில் உள்ள சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையார், திருநாவுக்கரசரை விட்டு நீங்காது அழகிய முத்துச் சிவிகை பின் வரச் செலவு நயப்பைத் தொடங்கிய பொழுது, ஞானியரின் உளத்தில் நிற்கும் சிறப்புடைய திருநாவுக்கரசர், சம்பந்தருக்கு எடுத்துக் கூறுபவராய்,


பெ. பு. பாடல் எண் : 527
"நாயனார்உமக்கு அளித்து அருள்
         செய்தஇந் நலங்கிளர் ஒளிமுத்தின்
தூய யானத்தின் மிசை எழுந்து
         அருளுவீர்" என்றலும், "சுடர்த்திங்கள்
மேய வேணியார் அருளும்இவ்
         வாறுஎனில், விரும்புதொண் டர்களோடும்
போயது எங்குநீர், அங்குயான்
         பின்வரப் போவது" என்று அருள்செய்தார்.

         பொழிப்புரை : `இறைவன் உமக்கு அருள் செய்த இந்த நன்மை பொருந்திய அழகிய ஒளிபொருந்திய தூய முத்துச் சிவிகையில் இவர்ந்து வருவீராக!\' என்று அருளுதலும், `ஒளி பொருந்திய பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருவருளும் இவ்வாறே இருக்குமாயின், விரும்பும் தொண்டர்களுடனே நீவிர் முன் செல்வது எப்பதியோ? அப்பதிக்கு யானும் பின்தொடர்ந்து வரும்படியாகப் போவது\' என விடையளித்தார்.


பெ. பு. பாடல் எண் : 528
என்று பிள்ளையார் மொழிந்து அருள்
         செய்திட, இருந்தவத்து இறையோரும்
"நன்று நீர்அருள் செய்ததே
         செய்வன்" என்று அருள்செய்து, நயப்புஉற்ற
அன்றை நாள்முதல் உடன்செலும்
         நாள்எலாம் அவ்இயல் பினில்செல்வார்,
சென்று முன்உறத் திருஅம்பர்
         அணைந்தனர், செய்தவக் குழாத்தோடும்.

         பொழிப்புரை : என்று சம்பந்தர் உரைத்திடவும், பெரிய தவவேந்தரான திருநாவுக்கரசரும் `நல்லது! நீவிர் அருளியவாறே செய்வேன்\' என்று அருள் செய்து, விரும்பிய அந்நாள் முதற் கொண்டு, பிள்ளையாருடன் செல்லும் எல்லா நாள்களிலும் அவ்வியல்பில் செல்பவராய், செய்தவக் கூட்டமான தொண்டர்களோடும் முன் செல்ல, திருவம்பர் என்ற நகரை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 529
சண்பை மன்னரும் தம்பிரான்
         அருள்வழி நிற்பது தலைச்செல்வார்,
பண்பு மேம்படு பனிக்கதிர்
         நித்திலச் சிவிகையில் பணிந்துஏறி,
வண்பெ ரும்புக லூரினைக்
         கடந்துபோய், வரும்பரி சனத்தோடும்
திண்பெ ருந்தவர் அணைந்தது எங்கு,
         என்றுபோய்த் திருஅம்பர் நகர்புக்கார்.

         பொழிப்புரை : சீகாழிப் பதியில் தோன்றிய பிள்ளையாரும், தம் இறைவரின் அருள் வழியே ஒழுகுவதை மேற்கொண்டு செல்வாராய்ச் சிவப் பண்பினால் மேம்படும் குளிர்ந்த ஒளியையுடைய முத்துச் சிவிகையில் அமர்ந்து, வண்மையும் பெருமையும் கொண்ட திருப்புகலூரைக் கடந்து சென்று, `தண்ணிய பெருமையையுடைய தவமுனிவரான அரசு எங்குச் சென்றனர்?' எனக் கேட்டுத் தாமும் சென்று, அவர் சேர்ந்த திருவம்பர் நகரத்தை அடைந்து புகுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 530
அம்பர் மாநகர் அணைந்து, மா
         காளத்தில் அண்ணலார் அமர்கின்ற
செம்பொன் மாமதில் கோயிலை
         வலங்கொண்டு, திருமுன்பு பணிந்துஏத்தி,
வம்பு உலாம்மலர் தூவிமுன்
         பரவியே, வண்தமிழ் இசைமாலை
உம்பர் வாழநஞ்சு இண்டவர்
         தமைப்பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்.

         பொழிப்புரை : திருவம்பர் என்ற பதியை அடைந்து மாகாளத்தில் இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னால் ஆன பெருமதிலையுடைய கோயிலை வலம் வந்து, இறைவரின் திருமுன்பு தாழ்ந்து வணங்கிப் போற்றி, மணமுடைய மலர்களைத் தூவியும் முறைப்படி வழிபட்டும், வண்மையுடைய தமிழிசை மாலை பாடிப் போற்றித் தேவர் வாழும் பொருட்டு நஞ்சையுண்ட இறைவரை வணங்கி, உள்ளம் உருகிய அன்பினால் நிலத்தில் விழுந்து வணங்கினார்.

         அம்பர் - பதியின் பெயர். மாகாளம் - கோயிலின் பெயர். இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.


பெ. பு. பாடல் எண் : 531
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன்
         தம்பிரான் கோயில்முன் புறம்எய்தி,
சூழ்ந்த தொண்டரோடு அப்பதி
         அமர்பவர் சுரநதி முடிமீது
வீழ்ந்த வேணியர் தமைப்பெறும்
         காலங்கள் விருப்பினால் கும்பிட்டு,
வாழ்ந்து இருந்தனர், காழியார்
         வாழவந்து அருளிய மறைவேந்தர்.

         பொழிப்புரை : சீகாழியினர் வாழ்வு அடையுமாறு தோன்றிய மறைத்தலைவரான பிள்ளையார் வணங்கிப் பின் திருநாவுக்கரசு நாயனாருடன் திருக்கோயிலின் வெளியே வந்து, தம்மைச் சூழ்ந்த தொண்டருடனே அப்பதியில் விரும்பித் தங்குபவராய், கங்கை தாங்கிய தாழ்ந்த சடையையுடைய சிவபெருமானைப் பெருகும் காலங்கள் தோறும் விருப்பத்துடன் கும்பிட்டுப் பெருவாழ்வு அடைந்திருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 532
பொருஇ லாதசொல் "புல்குபொன்
         நிற"முதல் பதிகங்க ளால்போற்றி,
திருவின்ஆர்ந்தகோச் செங்கணான்
         அந்நகர்ச் செய்தகோ யிலைச் சேர்ந்து,
மருவு வாய்மைவண் தமிழ்மலர்
         மாலைஅவ் வளவனைச் சிறப்பித்து,
பெருகு காதலில் பணிந்து, முன்
         பரவினார் பேணிய உணர்வோடும்.

         பொழிப்புரை : ஒப்பற்ற சொற்களையுடைய `புல்கு பொன்னிறம்\' எனும் தொடக்கம் உடைய பதிகம் முதலாய பல பதிகங்களினால் போற்றி செய்து, சைவமெய்த்திருவால் நிறைவுடைய கோச்செங்கட் சோழர், அத்திருஅம்பர் நகரத்தில் செய்த மாடக் கோயிலை அடைந்து, வாய்மையுடைய வண்மையான தமிழ்மாலையில் அச்சோழர் பெருமானாரைச் சிறப்பித்து, பெருகும் ஆசையினால் பணிந்து, பேணிக் கொண்ட உணர்வுடன் திருமுன்பு நின்று போற்றினார்.

         `புல்கு பொன்னிறம்' (தி.2 ப.103) எனத் தொடங்குவது நட்டராகப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்வாறு காலங்கள் தொறும் வழிபட்டுப் போற்றிய பதிகங்கள் மேலும் இரண்டுள.

         அவை:   1. `அடையார்புரம்' (தி.1 ப.83) - குறிஞ்சி.
                           2. `படியுளார்' (தி.3 ப.93) - சாதாரி.

         கோச்செங்கணார் இப்பதியில் எடுப்பித்த கோயில் திரு அம்பர்பெருந் திருக்கோயிலாகும், இப்பெருமானின் திருமுன்பு அருளிய பதிகம் `எரிதர' (தி.3 ப.19) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருக்கோயில் கோச்செங்கட் சோழரால் எடுப்பிக்கப் பெற்றது என்பதை இப்பதிகத்தில் 1, 2, 5, 9 ஆகிய பாடல்களில் குறித்துப் போற்றுகின்றார் பிள்ளையார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


2.103 திருஅம்பர்மாகாளம்            பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
         போழ்இள மதிசூடிப்
பில்கு தேன்உடை நறுமலர்க் கொன்றையும்
         பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்துறை அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
அல்லு நண்பக லும்தொழும் அடியவர்க்கு
         அருவினை அடையாவே.

         பொழிப்புரை :பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம் பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர் மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள் அடையா .


பாடல் எண் : 2
அரவம் ஆட்டுவர் அம்துகில் புலிஅதள்
         அங்கையில் அனல்ஏந்தி
இரவும் ஆடுவர் இவைஇவர் சரிதைகள்
         இசைவன பலபூதம்
மரவம்தோய்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந்து ஏத்தவல் லார்அவர்
         பயன்தலைப் படுவாரே.

         பொழிப்புரை :பாம்பினைப் பிடித்து ஆட்டுபவர் , புலித்தோலை ஆடையாக உடுப்பவர் . அழகிய கையில் அனலேந்தி இரவுப் பொழுதில் ஆடுபவர் , அவர்தம் சரிதைகளாகிய இவற்றைப் பல பூதங்கள் பாடித்துதிக்கின்றன . வெண்கடம்ப மரச்சோலைகளை உடையதும் அரிசிலாற்றின் வடகரையிலுள்ளதுமாகிய திருமா காளத்தில் உறையும் அப்பெருமானைப் பரவிப் பணிந்து ஏத்த வல்லவர் விழுமிய பயனை அடைவர் .


பாடல் எண் : 3
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும்
         குரைகழல் அடிசேரக்
கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும்
         கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோடு அணையவல் லார்களை
         வல்வினை அடையாவே.

         பொழிப்புரை :அவன் குணங்களைக் கூறியும் தம் குற்றங்களை எடுத்துரைத்தும் அவன் திருவடிகளை அடைய முற்படின் , பூதகணங்கள் பாடவும் , அன்பர்கள் பரவித்துதிக்கவும் வீற்றிருக்கும் அப் பெருமான் நம் , கருத்தறிந்து அருள் செய்யும் இயல்பினனாவான் . அவ் விறைவன் மேவிய திருமாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடு அத்தலத்திற்குச் செல்லவல்லவர்களை வல்வினைகள் அடையா .


பாடல் எண் : 4
எங்கும் ஏதும்ஓர் பிணிஇலர் கேடுஇலர்
         இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும்
         தாம்மகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
கங்கு லும்பக லும்தொழும் அடியவர்
         காதன்மை உடையாரே.

         பொழிப்புரை :மேகங்கள் தோயும் பொழில் சூழ்ந்ததும் , அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய திருமாகாளத்தில் இழையால் கட்டிய மணம்கமழும் கொன்றைமாலை , தாமம் , கண்ணி ஆகியவற்றை அணிந்த இறைவரை இரவும் பகலும் தொழும் அன்புடை அடியவர் எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணியிலராவர் .


பாடல் எண் : 5
நெதியம் என்உள, போகம்மற்று என்உள,
         நிலமிசை நலமாய
கதியம் என்உள, வானவர் என்உளர்,
         கருதிய பொருள்கூடில்,
மதியம் தோய்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்டு
         ஏத்துதல் புரிந்தோர்க்கே.

         பொழிப்புரை :திங்கள் தோயும் பொழில்களால் சூழப்பெற்றதும், அரிசிலாற்றின் வடகரையில் விளங்குவதுமாகிய திருமாகாளத்து இறைவரைப் பூக்கள் சந்தனம் நறுமணப் புகைகளைக் கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியம் உடையோருக்கு அச்சிவபூசையால் எய்தும் திருவருளினும் வேறு நிதியம், சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள் உலகில் உண்டோ ?


பாடல் எண் : 6
கண்உ லாவிய கதிர்ஒளி முடிமிசைக்
         கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமும் நகுதலை
         திகழவைத் தவர்மேய
மண்உ லாம்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
உள்நி லாநினைப்பு உடையவர் யாவர்இவ்
         உலகினில் உயர்வாரே.

         பொழிப்புரை :கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள் தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில் சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே கொண்டு வழிபடுபவர் யாவரோ ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர் .


பாடல் எண் : 7
தூசு தான்அரைத் தோல்உடை, கண்ணிஅம்
         சுடர்விடு நறுங்கொன்றை,
பூசு வெண்பொடிப் பூசுவது அன்றியும்
         புகழ்புரிந் தவர்மேய
மாசு உலாம்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவர்இவ் வுலகினில்
         பெருமையைப் பெறுவாரே.

         பொழிப்புரை :தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடை யாகும் . கொன்றையே அவர்தம் கண்ணி , பூசுவது வெண்பொடி . புகழை விரும்புபவர் . அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில் பெருமையைப் பெறுவர்.


பாடல் எண் : 8
பவ்வம் ஆர்கடல் இலங்கையர் கோன்தனைப்
         பருவரைக் கீழ்ஊன்றி
எவ்வம் தீரஅன்று இமையவர்க்கு அருள்செய்த
         இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
கவ்வை யால்தொழும் அடியவர் மேல்வினை
         கனல்இடைச் செதிள்அன்றே.

         பொழிப்புரை :கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து , இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள் செய்தவர் . அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம் . அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும் .


பாடல் எண் : 9
உய்யுங் காரணம் உண்டுஎன்று கருதுமின்
         ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்புஅணைப் பள்ளிகொள் அண்ணலும்
         பரவநின் றவர்மேய
மைஉலாம்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
கையி னால்தொழுது அவலமும் பிணியும்தம்
         கவலையும் களைவாரே.

         பொழிப்புரை :கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள் . நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர் பொழில்சூழ்ந்த அரிசிலாற்றின் கரையில் உள்ள திருமாகாளத்தில் உள்ளார் . அவரைக் கையினால் தொழுவாரே அவலமும் பிணியும் கவலையும் இலராவர் .


பாடல் எண் : 10
பிண்டி பாலரும், மண்டைகொள் தேரரும்,
         பீலிகொண்டு உழல்வாரும்,
கண்ட நூலரும், கடுந்தொழி லாளாரும்,
         கழறநின் றவர்மேய
வண்டு ஊலாம்பொழில் அரிசிலின் வடகரை
         வருபுனல் மாகாளம்
பண்டு நாம்செய்த பாவங்கள் பற்றுஅறப்
         பரவுதல் செய்வோமே.

         பொழிப்புரை :மாவுக்கஞ்சி உண்டு தம்மைப் பசியிலிருந்து காப் பவரும், மண்டை என்னும் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்பவரும், பீலிகொண்டு உழல்வோரும், கண்டநூல்களை வேதங் களாகக் கொண்டு கூறுவோரும், கடுந்தொழில்புரிவோரும் ஆகிய சமணர் புத்தர் ஆகியோர் புறங்கூறும் பொய்யுரைகளைக் கேளாது மாகாளம் மேவிய பெருமானை முற்பிறவிகளில் நாம் செய்தபாவங் களின் தொடர்ச்சி நீங்கப் பரவுதல் செய்வோம் .


பாடல் எண் : 11
மாறு தன்னொடு மண்மிசை இல்லது
         வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை
         ஏறுஅமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
         பந்தன தமிழ்மாலை
கூறு வாரையும் கேட்கவல் லாரையும்
         குற்றங்கள் குறுகாவே.

         பொழிப்புரை:இவ்வுலகில் தன்னொடு ஒப்புக்கூறத்தக்க தலம் ஒன்றும் இல்லாத மாகாளத்தில் உறையும் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியை, விடை ஏறும் பெருமானை, ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தமிழ்மாலையைக் கூறி வழிபடுவோரையும், கேட்போரையும் குற்றங்கள் குறுகா.

                                    திருச்சிற்றம்பலம்


1.083   திருஅம்பர்மாகாளம்                   பண் - குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அடையார் புரமூன்றும் அனல்வாய் விழஎய்து
மடைஆர் புனல்அம்பர் மாகா ளம்மேய
விடைஆர் கொடிஎந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழல்ஏத்தச் சாரா வினைதானே.

         பொழிப்புரை :பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணைஎய்தவனும், நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.


பாடல் எண் : 2
தேன்ஆர் மதமத்தம் திங்கள் புனல்சூடி
வான்ஆர் பொழில்அம்பர் மாகா ளம்மேய
ஊன்ஆர் தலைதன்னில் பலிகொண்டு உழல்வாழ்க்கை
ஆனான் கழல்ஏத்த அல்லல் அடையாவே.

         பொழிப்புரை :தேன் பொருந்திய செழுமையான ஊமத்தம் மலர், பிறைமதி, கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, வானளாவிய பொழில்சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட பெருமான் திருவடிகளைப் போற்றத் துன்பங்கள் நம்மை அடையா.


பாடல் எண் : 3
திரைஆர் புனலோடு செல்வ மதிசூடி
விரைஆர் பொழில்அம்பர் மாகா ளம்மேய
நரைஆர் விடைஊரும் நம்பான் கழல்நாளும்
உரையா தவர்கள்மேல் ஒழியா ஊனம்மே.

         பொழிப்புரை :அலைகள் பொருந்திய கங்கை நதியோடு, கண்டாரை மகிழ்விக்கும் சிறப்பு வாய்ந்த பிறைமதியை முடியில் சூடி, மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய வெண்மையான விடையை ஊர்ந்து வரும் சிவபிரான் திருவடிப்புகழை நாள்தோறும் உரையாதவர்கள் பால் பழிபாவங்கள் நீங்கா.


பாடல் எண் : 4
கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலிஅம்பர் மாகா ளம்மேய
கந்தம் கமழ்கொன்றை கமழ்புன்சடை வைத்த
எந்தை கழல்ஏத்த இடர்வந்து அடையாவே.

         பொழிப்புரை :பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் அழகிய வரிவண்டுகள் பாடும் மந்தச் சுருதி இசை நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, மணம் கமழும் கொன்றை மலர்களை இயல்பாக மணம் வீசும் தனது சிவந்த சடைமிசைவைத்துள்ள எம் தந்தையாகிய சிவபிரானின் திருவடிகளை ஏத்தினால் இடர்கள் நம்மை வந்தடையமாட்டா.



பாடல் எண் : 5
அணிஆர் மலைமங்கை ஆகம் பாகமாய்
மணிஆர் புனல்அம்பர் மாகா ளம்மேய
துணிஆர் உடையினான் துதைபொன் கழல்நாளும்
பணியா தவர்தம்மேலே பறையா பாவம்மே.

         பொழிப்புரை :அழகு பொருந்திய மலைமங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் இடப்பாகமாய்க் கொண்டவனாய் மணிகளோடு கூடிய புனல் வளம் உடைய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, துணிக்கப்பட்ட கோவணஉடையினன் ஆகிய சிவபெருமானின் பொன்னிறம் துதைந்த திருவடிகளை நாள்தோறும் பணியாதவரைப் பாவம் நீங்கா.


பாடல் எண் : 6
பண்டுஆழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி
வண்டுஆர் பொழில்அம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழல்ஏத்தக் குறுகா குற்றம்மே.

         பொழிப்புரை :முற்காலத்தில் ஆழ்ந்த கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு, களிப்புற்று வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் வெந்தழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டருளியவனுமான சிவபெருமான், திருவடிகளைப் போற்ற, குற்றங்கள் நம்மைக் குறுகா.



பாடல் எண் : 7
மிளிரும் அரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழில்அம்பர் மாகா ளம்மேய
கிளரும் சடைஅண்ணல் கேடுஇல் கழல்ஏத்தத்
தளரும் உறுநோய்கள் சாரும் தவம்தானே.

         பொழிப்புரை :விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை முடியிற்சூடி, வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால், மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து அடையும்.


பாடல் எண் : 8
கொலைஆர் மழுவோடு கோலச் சிலைஏந்தி
மலையார் புனல்அம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்
நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.

         பொழிப்புரை :கொல்லும் தொழிலில் வல்ல மழுவாயுதத்தோடு, அழகிய வில்லையும் கையில் ஏந்தி, கரையோடு மோதும் நீர்நிரம்பிய அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், இலைவடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா.


பாடல் எண் : 9
சிறைஆர் வரிவண்டு தேன்உண்டு இசைபாட
மறையார் நிறைஅம்பர் மாகா ளம்மேய
நறைஆர் மலரானும் மாலும் காண்புஒண்ணா
இறையான் கழல்ஏத்த எய்தும் இன்பம்மே.

         பொழிப்புரை :சிறகுகளை உடைய வரிவண்டுகள் தேனுண்டு இசைபாட, வேதம் ஓதும் அந்தணர் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காணஒண்ணாத தலைமையாளனுமாய சிவபிரான் திருவடிகளை ஏத்தினால் இன்பம் கிடைக்கும்.

பாடல் எண் : 10
மாசுஊர் வடிவுஇன்னார் மண்டை உணல்கொள்வார்
கூசாது உரைக்கும்சொல் கொள்கை குணம்அல்ல
வாசுஆர் பொழில்அம்பர் மாகா ளம்மேய
ஈசா என்பார்கட்கு இல்லை இடர்தானே.

         பொழிப்புரை :அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி, மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய புத்தரும், சமணரும் மனம் கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர்வாராது.


பாடல் எண் : 11
வெரிநீர் கொளஓங்கும் வேணு புரம்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலிஅம்பர் மாகா ளம்பேணி
உருகா உரைசெய்வார் உயர்வான் அடைவாரே.

         பொழிப்புரை :அஞ்சத்தக்க ஊழி வெள்ளம். உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே ஓங்கிமேல் மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர்மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரைசெய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

                                             திருச்சிற்றம்பலம்


3. 093    திருஅம்பர்மாகாளம்                 பண் - சாதாரி
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
படிஉளார் விடையினர், பாய்புலித் தோலினர், பாவநாசர்,
பொடிகொள்மா மேனியர், பூதம்ஆர் படையினர், பூணநூலர்,
கடிகொள்மா மலர்இடும் அடியினர், பிடிநடை மங்கையோடும்
அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : சிவபெருமான் உலகில் பொருந்திய இடப வாகனம் உடையவர் . பாய்கின்ற புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளவர் . மன்னுயிர்களின் பாவத்தைப் போக்குபவர் . திருவெண்ணீறணிந்த திருமேனியர் . பூதங்களாகிய படைகளை உடையவர் . முப்புரி நூலணிந்த மார்பினர் . பூசிக்கும் அடியவர்களால் நறுமணம் கமழும் மலர்கள் இடப்படுகின்ற திருவடிகளையுடையவர் . அத்தகைய பெருமான் பெண்யானை போன்ற நடையுடைய உமாதேவியோடும் அன்பர்களுக்கு அருள்புரிந்து வீற்றிருந்தருளும் இடமாவது திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 2
கையின்மா மழுவினர், கடுவிடம் உண்டஎம் காளகண்டர்,
செய்யமா மேனியர், ஊன்அமர் உடைதலைப் பலிதிரிவார்,
வையம்ஆர் பொதுவினின் மறையவர் தொழுதுஎழ நடமதாடும்
ஐயன்மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : சிவபெருமான் கையில் பெருமையான மழுப் படையை உடையவர் . கொடிய விடமுண்டதால் கரிய கண்டத்தை உடையவர் . சிவந்த திருமேனியர் . ஊன்பொருந்திய உடைந்த மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவர் . உலகனைத்திற்கும் உரியதான சிற்சபையில் அந்தணர்கள் தொழுது போற்ற நடனமாடும் தலைவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர், பரிவுஇலார்பால்
கரவினர், கனல்அன உருவினர், படுதலைப் பலிகொடுஏகும்
இரவினர், பகல்எரி கான்இடை ஆடிய வேடர்,பூணும்
அரவினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : இறைவர் தம்மை வணங்கிப் போற்றும் அடியவர்கள் படும் துயரத்தைத் தீர்ப்பவர் . தம்மிடத்து அன்பில்லாதவர்கள்பால் தோன்றாத நிலையில் மறைந்திருப்பவர். நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமுடையவர் . பிரமகபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் . நண்பகல் போல் சுடுகின்ற முதுகாட்டில் இரவில் நெருப்பேந்தி ஆடும் வேடத்தை உடையவர் . பாம்பை அணிந்துள்ளவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும் .


பாடல் எண் : 4
நீற்றினர், நீண்டவார் சடையினர், படையினர்,
         நிமலர்,வெள்ளை
ஏற்றினர், எரிபுரி கரத்தினர், புரத்துஉளார்
         உயிரைவவ்வும்
கூற்றினர், கொடிஇடை முனிவுற நனிவரும்
         குலவுகங்கை
ஆற்றினர், அரிவையோடு இருப்பிடம்
         அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : சிவபெருமான் திருவெண்ணீறணிந்த மேனியர் . நீண்டு தொங்கும் சடையினர் . கரங்களில் பலவகை ஆயுதங்களை ஏந்தியுள்ளவர் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர் . வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர் . நெருப்பேந்திய கரத்தினர் . திரிபுர அசுரர்களின் உயிரைக் கவரும் எமனாக விளங்கியவர் . கொடிபோன்ற இடையுடைய உமாதேவி கோபம் கொள்ளும்படி கங்கையாகிய நங்கையை மகிழ்வுடன் சடையில் தாங்கியவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
புறத்தினர் அகத்துளர் போற்றிநின்று
         அழுதுஎழும் அன்பர்சிந்தைத்
திறத்தினர், அறிவிலாச் செதுமதித்
         தக்கன்தன் வேள்விசெற்ற
மறத்தினர், மாதவர் நால்வருக்கு
         ஆலின்கீழ் அருள்புரிந்த
அறத்தினர், அரிவையோடு இருப்பிடம்
         அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : இறைவர் உள்ளும் , புறமும் நிறைந்தவர் . உள்ளம் உருகிப் போற்றிக் கண்ணீர் மல்கும் அன்பர்களின் சிந்தையில் விளங்குபவர் . அறிவில்லாத , அழிதற்கேதுவாகிய புத்தி படைத்த தக்கனின் வேள்வியை அழித்தவர் . சனகர் , சனந்தரர் , சனாதரர் , சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்கட்குக் கல்லாலின் கீழிருந்து அறமுரைத்து அருள்புரிந்தவர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
பழகமா மலர்பறித்து இண்டைகொண்டு
         இறைஞ்சுவார் பால்செறிந்த
குழகனார், குணம்புகழ்ந்து ஏத்துவார்,
         அவர்பலர் கூடநின்ற
கழகனார் கரிஉரித்து ஆடுகங்
         காளர்நம் காளிஏத்தும்
அழகனார் அரிவையோடு இருப்பிடம்
         அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : இறைவர் , தினம்தோறும் மலர் பறித்து மாலை கட்டி வழிபாடு செய்யும் அடியவர்களைவிட்டு நீங்காத இளையர் . தம் குணங்களைப் புகழ்ந்து போற்றும் அன்பர்கள் கூட்டத்திலிருக்கும் அழகர் . யானைத் தோலை உரித்துப் போர்த்தி ஆடுபவர் . எலும்பு மாலை அணிந்துள்ளவர் . காளியால் வணங்கப்பட்ட அழகர் . அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருஅம்பர் மாகாளம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
சங்கவார் குழையினர், தழல்அன
         உருவினர், தமதுஅருளே
எங்குமாய் இருந்தவர் அருந்தவ
         முனிவருக்கு அளித்துஉகந்தார்
பொங்குமா புனல்பரந்த அரிசிலின்
         வடகரை திருத்தம்பேணி
அங்கம்ஆறு ஓதுவார் இருப்பிடம்
         அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : இறைவர் சங்கினாலாகிய குழையைக் காதிலணிந்துள்ளவர் . நெருப்புப் போன்ற செந்நிற மேனியர் . தமது அருளால் எங்கும் வியாபித்துள்ளவர் . அரிய தவம் செய்யும் முனிவர்களுக்குத் தம்மையே அளித்து மகிழ்பவர் . அவர் அங்கு , பொங்கும் நீர் பரந்த அரிசிலாற்றினைத் தீர்த்தமாகக் கொண்டு , வேதத்தின் ஆறு அங்கங்களை ஓதுபவராய் வீற்றிருந்தருளும் இடம் ஆற்றின் வடகரையில் உள்ள திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
பொருசிலை மதனனைப் பொடிபட
         விழித்தவர், பொழில்இலங்கைக்
குரிசிலைக் குலவரைக் கீழ்உற
         அடர்த்தவர் கோயில்கூறில்
பெருசிலை நலமணி பீலியோடு
         ஏலமும் பெருகநுந்தும்
அரிசிலின் வடகரை அழகுஅமர்
         அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : சிவபெருமான் , போர்புரியும் வில்லுடைய மன்மதனை எரித்துச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து விழித்தவர் . சோலைகளையுடைய இலங்கை மன்னனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்த அப்பெருமான் வீற்றிருந்தருளும் கோயில் , பெரிய மலையினின்றும் நவமணிகளையும் , மயிற்பீலி, ஏலம் முதலியவற்றையும் மிகுதியாக அடித்துக் கொண்டு வரும் அரிசிலாற்றின் வட கரையில் அமைந்துள்ள அழகிய திருஅம்பர்மாகாளம் என்னும் திருத் தலமாகும் .


பாடல் எண் : 9
வரிஅரா அதன்மிசைத் துயின்றவன்
         தானும்,மா மலர்உளானும்
எரியரா அணிகழல் ஏத்தவொண்
         ணாவகை உயர்ந்துபின்னும்
பிரியராம் அடியவர்க்கு அணியராய்ப்
         பணிவுஇலா தவருக்குஎன்றும்
அரியராய் அரிவையோடு இருப்பிடம்
         அம்பர்மா காளந்தானே.

         பொழிப்புரை : வரிகளையுடைய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் உணர்ந்து போற்ற முடியாவண்ணம் எரியுருவாய்ச் சிவபெருமான் உயர்ந்து நின்றவர் . தம்மிடத்து அன்புசெலுத்தும் அடியவர்கட்கு அணியராகியும் , பணிவில்லாதவர்கட்கு அரியராயும் விளங்குபவர் . அவர் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திரு அம்பர்மாகாளம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
சாக்கியக் கயவர்வன் தலைபறிக்
         கையரும் பொய்யினால் நூல்
ஆக்கிய மொழியவை பிழையவை
         ஆதலில் வழிபடுவீர்
வீக்கிய அரவுஉடைக் கச்சையான்
     இச்சையா னவர்கட்குஎல்லாம்
ஆக்கிய அரன்உறை அம்பர்மா
         காளமே அடை மின்நீரே.

         பொழிப்புரை : புத்தர்களாகிய கீழ்மக்களும் , தலைமயிர் பறிக்கும் இயல்புடைய வஞ்சகர்களாகிய சமணர்களும் , இறைவனை உணராது , பொய்யினால் சிருட்டித்த நூல்களிலுள்ள உபதேசங்கள் குற்றமுடையவை . அவற்றைக் கேட்கவேண்டா . பாம்பைக் கச்சாக அணிந்தவனும் , தன்னிடத்துப் பக்தி செலுத்தும் அடியவர்கட்கு அருள் புரிபவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக !.


பாடல் எண் : 11
செம்பொன்மா மணிகொழித்து எழுதிரை
         வருபுனல் அரிசில்சூழ்ந்த
அம்பர்மா காளமே கோயிலா
         அணங்கினோடு இருந்தகோனைக்
கம்பினார் நெடுமதில் காழியுள்
         ஞானசம் பந்தன்சொன்ன
நம்பிநாள் மொழிபவர்க்கு இல்லையாம்
         வினை,நலம் பெறுவர்தாமே.

         பொழிப்புரை : செம்பொன்னையும் , இரத்தினங்களையும் அடித்துக் கொண்டு அலை வரும் நீரையுடைய அரிசிலாறு சூழ்ந்த திருஅம்பர்மாகாளம் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள , உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி , சங்கு , சுட்ட சுண்ணாம்பு இவற்றால் சுதை பூசப்பட்ட நெடிய மதில்களையுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி, நாள்தோறும் பாடுபவர்களுக்கு வினை இல்லை . அவர்கள் எல்லா நலன்களும் பெறுவர் . இது உறுதி .

                                    திருச்சிற்றம்பலம்

குறிப்பு --- பெரிய புராணத்தை அருளிய தெய்வச் சேக்கிழார் பெருமானாரின் அருள்வாக்குப்படி, திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும், சேர்ந்தே இத்திருத்தலத்தை வழிபட்டனர்.  என்றாலும், அப்பர் பெருமான் பாடியருளிய திருப்பதிகம் கிடைக்காதது நமது தவக்குறையே.



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...