திருச்செங்கோடு - 0393. புற்புதம் எனாம




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புற்புதம் (திருச்செங்கோடு)

முருகா!
உன் திருவடியில் நிலைத்த அன்பைப் பெற அருள்

தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான


புற்புதமெ னாம அற்பநிலை யாத
     பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும்

புத்திரரும் வீடு மித்திரரு மான
     புத்திசலி யாத ...... பெருவாழ்வு

நிற்பதொரு கோடி கற்பமென மாய
     நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான்

நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
     நிற்கும்வகை யோத ...... நினைவாயே

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
     சக்ரகதை பாணி ...... மருகோனே

தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
     வைத்தவொரு காழி ...... மறையோனே

கற்புவழு வாது வெற்படியின் மேவு
     கற்றைமற வாணர் ...... கொடிகோவே

கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
     கற்பதரு நாடர் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


புற்புதம் என் நாம அற்பம் நிலையாத
     பொய்க் குடில், குலாவு ...... மனையாளும்,

புத்திரரும், வீடும், மித்திரரும் ஆன
     புத்தி சலியாத ...... பெருவாழ்வு,

நிற்பது ஒரு கோடி கற்பம் என, மாய
     நிட்டையுடன் வாழும் ...... அடியேன் யான்,

நித்தம் நின தாளில் வைத்தது ஒரு காதல்
     நிற்கும் வகை ஓத ...... நினைவாயே.

சற்ப கிரி நாத! முத்தமிழ் விநோத!
     சக்ர கதை பாணி ...... மருகோனே!

தர்க்க சமண் மூகர் மிக்க கழு ஏற
     வைத்த ஒரு காழி ...... மறையோனே!

கற்பு வழுவாது வெற்பு அடியின் மேவு
     கற்றை மறவாணர் ...... கொடிகோவே!

கைத்த அசுர ஈசர் மொய்த்த குல கால!
     கற்பதரு நாடர் ...... பெருமாளே. 

 பதவுரை

      சற்பகிரி நாத --- நாககிரிக்குத் தலைவரே!

      முத்தமிழ் விநோத --- முத்தமிழில் பொழுது போக்குபவரே;

       சக்ர கதை பாணி மருகோனே --- சக்கரத்தையும் கதையையும் ஏந்திய கரத்தினராகிய திருமாலின் திருமருகரே!

      தர்க்க சமண் மூகர் --- வாது செய்து வாயிழந்த ஊமைகள் போல் நின் சமணர்களை

     மிக்க கழு ஏற வைத்த ஒரு காழி மறையோனே --- மிகுந்த கழுவில் ஏறுமாறு செய்த ஒப்பற்ற சீகாழி அந்தணரே!

      கற்பு வழுவாது --- கற்பு நிலை தவறாமல்

     வெற்பு அடியில் மேவு --- வள்ளிமலையின் அடிவாரத்தில் இருந்த

     கற்றை மறவாணர் கொடி கோவே --- கூட்டமான வேடர்களின் கொடி போன்ற வள்ளிபிராட்டியின் தலைவரே!

      கைத்த அசுர ஈசர் மொய்த்த குல கால --- வெறுப்புடைய அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு முடிவைச் செய்தவரே!

      கற்பதரு நாடர் பெருமாளே --- கற்பத்தருவுடைய விண்ணாட்டுத் தேவர்கள் போற்றும் பெருமையின் மிகுந்தவரே!

      புற்புதம் என் நாம ---  நீர்க்குமிழி என்று பேர் படைத்து,

     அற்பம் நிலையாத --- சிறிது நேரம்கூட நிலைத்திராத

      பொய் குடில் குலாவு மனையாளும் --- பொய்க்குடிசையான இந்த உடம்புடன் குலவுகின்ற மனையாளும்

      புத்திரரும் --- புதல்வர்களும்,

     வீடும் --- வீடும்,

     மித்திரரும் ஆன --- நண்பர்களும் ஆன சூழலில்

     புத்தி சலியாத பெருவாழ்வு --- புத்தி சோர்வு அடையாமல் இவ்வாழ்வு பெருவாழ்வு,

     நிற்பது ஒருகோடி கற்பம் என் --- இது நிலைத்து நிற்பது ஒரு கற்ப காலம் என்று கருதும்,

     மாய நிட்டை உடன் வாழும் --- மயக்கத் தியான நிலையில் வாழுகின்ற,  

     அடியேன் யான் --- அடியவனாகிய நான்,

     நித்தம் நினதாளில் வைத்தது ஒரு காதல் ---  தினந்தோறும் உமது திருவடியில் வைத்துள்ள ஒப்பற்ற அன்பானது

     நிற்கும் வகை ஓத நினைவாயே --– நிலைத்து நிற்கும் வழியை உபதேசிக்க தேவரீர் நினைத்தருள வேண்டும்.


பொழிப்புரை

         நாக மலைக்கு நாதரே!

     இயல் இசை நாடகம் என்ற முத்தமிழில் பொழுது போக்குபவரே!

     சக்கரத்தையும் கதையையும் கைகளில் ஏந்திய திருமாலின் திருமருகரே!

     தர்க்கஞ் செய்து வாயிழந்து ஊமைகள் போல் தோல்வியுற்ற சமணர்களை மிகுந்த கழுவில் ஏறவைத்த ஒப்பற்ற சீகாழி அந்தணரே!

     கற்பு நெறி வழுவாமல், வள்ளிமலை அடிவாரத்தில் வாழ்ந்த கூட்டமான வேடர் குலக்கொடியாகிய வள்ளிநாயகியின் கணவரே!

     வெறுப்புடைய அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு முடிவைச் செய்தவரே!

     கற்பக மரம் பொருந்திய விண்ணவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே!

         நீர்க் குமிழியைப் போல், சிறிது நேரமும் நிலைத்திராத பொய்யான இந்த உடம்புடன் குலவுகின்ற மனைவி, மக்கள், வீடு, நண்பர்கள் ஆன சூழலில் அறிவு சோர்வடையாமல், இது பெருவாழ்வு, இது ஒரு கற்ப கோடி காலம் நிலைத்து நிற்பது என்று மாய மயக்கத் தியானத்தில் வாழுகின்ற அடியேன், நாள்தோறும் உமது திருவடியில் வைத்த ஒப்பற்ற அன்பு நிலைத்து நிற்கும் வகையை உபதேசித்தருள வேண்டும்.


விரிவுரை

புற்புத மெனாம அற்ப நிலையாத பொய்க்குடில் ---

புற்புதம்-நீர்க்குமிழ். நீர்க் குமிழியைப்போல் இந்த உடம்பு விரைவில் அழியுந் தன்மையது.

நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை” --- கந்தரலங்காரம்.

பெருவாழ்வு நிற்பதொரு கோடி கற்ப மென ---

அற்ப ஆயுளை மூடமதியால் கற்பகாலம் வாழ்வதாக எண்ணுகின்றார்கள். ஒரு கற்பமன்று. ஒருகோடி கற்ப காலம் நாம் வாழ்வோம் என்று கருதுகின்ற பேதை மதியை என்னென்று இகழ்வது?

நித்த  நினதாளில் வைத்தது ஒரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே ---

முருகப்பெருமான் திருவடியில் வைத்த அன்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும். இதைத்தான் வரமாக வேண்டுகின்றார் காரைக்காலம்மையார்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்”

முத்தமிழ் விநோத ---

முருகப்பெருமான் தமிழில் அளவற்ற அன்புள்ளவர் தமிழிலேயே பொழுது போக்குகின்றவர்.

முத்தமிழ்வித்வ விநோதா கீதா”     --- (மைக்குழ) திருப்புகழ்.

"அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
   அடிதொழு தமிழ்த்ரய விநோதக் கலாதரனும்"    --- வேடிச்சிகாவலன் வகுப்பு

"மீனவனும் மிக்கபுல வோரும்உறை பொற்பலகை
மீதுஅமர் தமிழ்த்ரய விநோதக் காரனும்"             --- திருவேளைக்காரன் வகுப்பு.

தர்க்க சமண்மூகர் ---

திருஞானசம்பந்தருடன் சமணர்கள் அனல் வாதம் புனல் வாதம் புரிந்து வாய் அடங்கி ஊமைகள் போல் ஆனார்கள்.

கற்பு வழுவாது வெற்படியில் மேவு.......................கொடி ---

வள்ளியம்மையின் கற்புத்திறனை வியந்து கூறுகின்றார்.

கருத்துரை

         நாககிரி நாதா! உன் பாத மலரில் நீங்காத அன்புடன் நிற்கும் வகை அருள் செய்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...