சென்னிமலை - 0352. பகல் இரவினில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பகல் இரவினில் (சிரகிரி - சென்னிமலை)

முருகா!
உண்மைப் பொருளை உபதேசித்து,
அநுபூதி இனிமையில் திளைக்கும் அருளைப் புரிவாய்


தனதனதனத் ...... தனதான
     தனதனதனத் ...... தனதான


பகலிரவினிற் ...... றடுமாறா
     பதிகுருவெனத் ...... தெளிபோத

ரகசியமுரைத் ...... தநுபூதி
     ரதநிலைதனைத் ...... தருவாயே

இகபரமதற் ...... கிறையோனே
     இயலிசையின்முத் ...... தமிழோனே

சகசிரகிப் ...... பதிவேளே
     சரவணபவப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பகல் இரவினில் ...... தடுமாறா,
     பதிகுரு எனத் ...... தெளி, போத

ரகசியம் உரைத்து, ...... அநுபூதி
     இரத நிலை தனைத் ...... தருவாயே.

இகபரம் அதற்கு ...... இறையோனே!
     இயல்இசையின்முத் ...... தமிழோனே!

சக சிர கிரிப் ...... பதிவேளே!
     சரவணபவப் ...... பெருமாளே!


பதவுரை

இகபரம் அதற்கு இறையோனே --- இகம் பரம் என்ற இரு நலன் கட்கும் அதிபரே!

இயல் இசையின் முத்தமிழோனே --- இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழுக்கும் உரியவரே!

சக சிரகிரி பதி வேளே --- இந்த வுலகில் உள்ள சென்னிமலையில் வாழும் செவ்வேட் பரமரே!

சரவண பவ --- சரவணபவத் தெய்வமே!

பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

பகல் இரவினில் தடுமாறா --- நினைவு, மறப்பு என்ற சகல கேவலத்தில் தடுமாற்றத்தை அடையாமல்,

பதி குரு என தெளி போத --- முருகனே குரு என்று தெளிகின்ற ஞானத்தின்,

ரகசியம் உரைத்து --- பரம இரகசியத்தை அடியேனக்கு உபதேசித்து,

அநுபூதி இரத நிலை தனை தருவாயே --- ஒன்றுபடும் இனிய பேரின்ப நிலையை அருள்புரிவீராக.


பொழிப்புரை


இகத்துக்கும் பரத்துக்கும் தலைவரே!

இயல் இசை நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவரே!

பூதலத்தில் புகழ் பெற்ற சென்னி மலையில் வாழும் செவ்வேளே!

சரவணபவப் பரம்பொருளே! பெருமிதம் உடையவரே!

நினைப்பு மறப்பு என்ற வகையில் தடுமாறாமல், முருகனே குருவென்று தெளிகின்ற ஞான ரகசியத்தை உபதேசித்து அநுபூதிப் பேரின்ப நிலையைத் தந்தருளுவீராக.

  
விரிவுரை

பகலிரவு ---

பகல் - நினைவு (சகலம்) இரவு-மறப்பு (கேவலம்)

அந்திபகல்அற்ற நினைவருள்வாயே”  --- (ஐங்கரனை) திருப்புகழ்.

பதி குரு எனத் தெளி போத ரகசியம் ---

முருகனே குரு என்று தெளிகின்ற ஞானம். "குருவே சிவம் எனக் கூறினன் நந்தி" என்பார் திருமூல நாயனார். இதை அவன் அருளால் தான் தெளிய முடியும்.  அருள் கொண்டு அறியார் அறியும் தரம் அல்ல என்கின்றார் அருணை அடிகள்.

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?
உரு அன்று, அரு அன்று, உளது அன்று இலது அன்று
இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே!”   --- கந்தர் அநுபூதி

அநுபூதி இரதம் ---

இரதம்-இனிமை, அநுபூதி-ஒன்றுபடுதல், முருகனுடன் ஒன்றுபட்டு அதனால் வருகின்ற பேரின்ப நிலை.

இகபரம் அதற்கு இறையோனே ---

இகத்துக்கும் பரத்துக்கும் முருகனே தலைவன். அடியார்க்கு அவற்றை எளிதில் வழங்க வல்லவனும் அப்பரமேன.

இகபர சௌபாக்யம் அருள்வாயே”        --- (வசன) திருப்புகழ்.


இயல் இசையின் முத்தமிழோனே ---

இனம் பற்றி நாடகத்தமிழும் வருவிக்கப்பட்டு முத்தமிழாயின. இயல் இசை நாடகம். இம்மூன்று தமிழுக்கும் உரியவர் முருகவேளே.


சிரகிரி

சிரகிரி - சென்னிமலை.

சிரம் - சென்னி. கிரி - மலை.

இது முருகனுக்குரிய அருமையான திருத்தலம். ஒரு கற்பத்தில் ஆதிசேடனுக்கும் வாயு தேவனுக்கும் வலிமை விஷயமாக விவாதம் நடந்தது. அப்பொழுது ஆதிசேடன் தனது ஆயிரம் பணா மகுடங்களால் மேருமலையை மூடினான். வாயுதேவன் பேராற்றலுடன் வீசி, மேருமலையின் சிகரங்களில் மூன்றைப் பறித்து எறிந்தான். அவற்றில் ஒன்று திருச்செங்கோடு. மற்றொன்று கொடுமுடி. இன்னும் ஒன்று சென்னிமலை. இது

பூந்துறை நாட்டில் விளங்குவது. ஈரோடுக்கு அப்பால் உள்ள ஈங்கூர் என்ற புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள அரிய திருத்தலம். ஈரோடிலிருந்து பேருந்து வசதி உண்டு. மலை மீது கார் போகப் பாதையுள்ளது. சுவாமி மிக்க வரதர். சித்தர்கள் பலர் தவஞ்செய்த இடம்.

கருத்துரை


சென்னிமலை மேவும் செம்மலே! அநுபூதி ஞான இன்பத்தைத் தந்தருள்வீர்.








No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...