திருச்செங்கோடு - 0391. பத்தர்கண ப்ரிய





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பத்தர் கணப்ரிய (திருச்செங்கோடு)

முருகா!
நால்திசையில் உள்ளோர் வியக்கும் திருப்புகழைப் பாட அருள் புரிந்ததை மறவேன்.

தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான


பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
     பட்சிந டத்திய ...... குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள
     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
     சித்தவ நுக்ரக ...... மறவேனே

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
     கட்டிய ணைத்தப ...... னிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
     கப்பனு மெச்சிட ...... மறைநூலின்

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பத்தர் கண ப்ரிய! நிர்த்தம் நடித்திடு
     பட்சி நடத்திய ...... குக! பூர்வ

பச்சிம தட்சிண உத்தர திக்கு உள
     பத்தர்கள் அற்புதம் ...... எனஓதும்

சித்ர கவித்துவ சத்த மிகுத்த,
     திருப்புகழைச் சிறிது ...... அடியேனும்

செப்ப என வைத்து, லகிற் பரவ, தெரி-
     சித்த அநுக்ரகம் ...... மறவேனே.

கத்திய தத்தை களைத்து விழத் திரி
     கல்கவண் இட்டு எறி ...... தினைகாவல்

கற்ற குறத்தி, நிறத்த கழுத்து அடி
     கட்டி அணைத்த ...... பனிருதோளா!

சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த,
     தகப்பனும் மெச்சிட, ...... மறைநூலின்

தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய
     சர்ப்ப கிரிச் சுரர் ...... பெருமாளே.

 பதவுரை

      பத்தர் கண ப்ரிய --- அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவரே!

      நிர்த்தம் நடித்திடு பட்சி நடத்திய குக --- நடனம் ஆடவல்ல மயிலை வாகனமாகக் கொண்டு நடாத்துகின்ற குகமூர்த்தியே!

      கத்திய தத்தை களைத்து விழ --- கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி,

     திரி கல் கவண் இட்டு எறி --- சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற,

     தினை காவல் கற்ற --- தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்றுக் கொண்ட,

     குறத்தி நிறத்த கழுத்து அடி --- வள்ளிபிராட்டியாருடைய நல்ல நிறமுடைய கழுத்தின் அடியில்

     கட்டி அணைத்த பன் இருதோளா ---    கட்டித் தழுவிய பன்னிரு தோள்களை உடையவரே!

      சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த --- பராசக்தியைப் பொருந்தும்படி இடப் பாகத்தில் வைத்தருளிய,

     தகப்பனும் மெச்சிட --- தந்தையராகிய சிவபெருமானும் மெச்சும்படி,

     மறை நூலின் தத்துவம் தற்பரம் முற்றும் உணர்த்திய --- வேத நூலின் உண்மைப் பொருள் பரம்பொருள் ஆகிய எல்லாவற்றையும் உபதேசித்து விளக்கிய,

     சர்ப்ப கிரி சுரர் பெருமாளே --- நாக கிரியில் வாழ்கின்ற, தேவர்கள் போற்றும் பெருமையில் மிகுந்தவரே!

      பூர்வ, பச்சிம, தட்சிண, உத்தர திக்கு உள பத்தர்கள் --- கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளில் உள்ள அன்பர்கள்,

     அற்புதம் என ஓதும் --- இது அற்புதம் அற்புதம் எனக் கொண்டாடுகின்ற,

     சித்ர கவித்துவ --- அழகிய கவிபாடுந் திறத்தின்,

     சத்தம் மிகுந்த திருப்புகழை ---  ஒலி மிகுந்துள்ள திருப்புகழை,

     சிறிது அடியேனும் செப்பு என வைத்து --- சிறிதளவு அடியேனும், சொல்லும்படியாக வைத்து,

     உலகில் பரவ --- அப்பாடல்கள் உலகில் பரவும்படியாக,

     தெரிசித்த அநுக்ரகம் மறவேனே --- உம்மை தெரிசித்த அருள் புரிந்ததை அடியேன் மறக்கமாட்டேன்.

பொழிப்புரை

      அடியார் திருக்கூட்டத்தில் அன்புள்ளவரே!

     நடனம் ஆடவல்ல மயிலை வாகனமாகக் கொண்டவரே!

     குக மூர்த்தியே!

     ஒலி செய்கின்ற கிளிகள் சோர்ந்து விழும்படி, சுழற்றும் கவணில் கல்லை விட்டு எறிந்த தினைப்புனத்தின் காவலைக் கற்றுக் கொண்ட வள்ளிநாயகியின், நல்ல நிறமுள்ள கழுத்தின் அடியில் கட்டித் தழுவிய பன்னிரு தோள்களை உடையவரே!

     பராசக்தியை இடப்பாகத்தில் பொருந்த வைத்த தந்தையாகிய சிவபெருமான் மெச்சும்படி, வேத நூலின் உண்மைப் பொருள்களையும், உயர்ந்த பொருள்களையும் உபதேசித்தவரே!

     நாககிரியில் வாழுபவரே!

     தேவர்கள் போற்றும் பெருமிதமுடையவரே!

         கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்ற நான்கு திசைகளில் உள்ள அடியார்கள், இது அற்புதம் அற்புதம் என்று மெச்சும்படி, அழகிய கவி பாடுந் திறத்தின் ஒலி மிகுந்த திருப்புகழை அடியேன் சிறிது சொல்லும்படிச் செய்து அப்பாடல்கள் உலகெலாம் பாவும் படியும் செய்த அருள் திறத்தை ஒருபோதும் மறவேன்.

விரிவுரை

பத்தர் கணப்ரிய ---

முருகப்பெருமான் அடியார் திருக் கூட்டத்தின் மீது மிகுந்த அன்புள்ளவர்.

அடியார்க்கு நல்ல பெருமாள்”        --- கந்தரலங்காரம்.

"எங்கே மெய் அன்பர் உளர், அங்கே நலம் தர
எழுந்தருளும் வண்மைப் பதம்"        ---  திருவருட்பா.

நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக ---

கலைகளில் சிறந்தது ஆடற்கலை. தெய்வங்களில் சிறந்தது நடராஜமூர்த்தி. இயல்பாக, கற்றுக் கொடுப்பார் யாரும் இன்றி, ஆடுவது மயில்.

பூர்வ பச்சிம தெட்சிண உத்திர திக்குள பத்தர்கள் அற்புதம் என ஓதும் ---

திருப்புகழைக் கேட்டு, நான்கு திசைகளில் உள்ள அடியார்கள், ஆ! ஆ! இது அரியது, அற்புதமானது என்று வியந்து புகழ்கின்றார்கள்.

சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழ் ---

சித்ரம்-அழகு.கவியில், சொல்லழகு, பொருளழகு, நடையழகு, தொடையழகு முதலிய பல அழகுகள் அமைந்திருக்க வேண்டும்., கவித்துவம்-கவி பாடுந் திறன்.

“சித்ரவித்துவ சத்த மிகுந்த திருப்புகழைப் பாடுந் திறத்தை முருகன் அருளினார். அந்த அநுக்கிரகத்தை மறக்கமாட்டேன்” என்று கூறுகின்றார்.

செப்பு என வைத்து ---

தீ திருப்புகழைச் செப்பு என்று முருகன் அருள் புரிந்தார். “செய்ப்பதி வைத்து” எனவும் பாடம். செய்ப்பதி-வயலூரை வைத்துப்பாடு என்று முருகன் அருளியதை இது குறிக்கின்றது.

கருத்துரை

         நாககிரி மேவும் வள்ளி மணவாளா! திருப்புகழைப் பாடும் திறத்தினை அருளிய அநுக்கிரகத்தை ஒரு போதும் மறவேன்.


1 comment:

  1. simple explanation of this song, based on Variyar Swamigal's commentary

    https://youtu.be/qLt4s4hjV4Y

    ReplyDelete

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...