விராலிமலை - 0363. நிராமய புராதன

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிராமய புராதன (விராலிமலை)

முருகா!
உலகப் பற்றை விடுத்து, உனது பற்றையே பற்ற அருள்.

தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனத் ...... தனதான


நிராமய புராதன பராபர வராம்ருத
     நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி

நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
     நிராயுத புராரியச் ...... சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்
     சொரூபமி வராதியைக் ...... குறியாமே

துரால்புகழ் பராதின கராவுள பராமுக
     துரோகரை தராசையுற் ...... றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண
     இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென்

றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
     யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே

விராகவ சுராதிப பொராதுத விராதடு
     விராயண பராயணச் ...... செருவூரா

விராவிய குராவகில் பராரைமு திராவளர்
     விராலிம லைராஜதப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


நிர்ஆமய, புராதன, பராபர, வரஅம்ருத,
     நிர்ஆகுல சிரஅதிகப் ...... ப்ரபையாகி,

நிர்ஆச, சிவராஜ தவராஜர்கள் பராவிய
     நிர்ஆயுத புரஅரி, ச் ...... சுதன்,வேதா

சுர ஆலய, தர அதல, சராசர பிராணிகள்
     சொரூபம் இவர் ஆதியைக் ...... குறியாமே,

துரால்புகழ் பர ஆதின கரா உள பராமுக
     துரோகரை தராசை உற்று ...... அடைவேனோ?

இராகவ இராமன்முன், இராவண, இரா வண,
     இராவண இராஜன்உட் ...... குடன்மாய்வென்ற

இராகன் மலர்ஆள் நிஜ புராணர் குமரா! கலை
     இராஜ!  சொல் அ வாரணர்க்கு ...... இளையோனே!

விராகவ! சுரஅதிப! பொராது, தவிராது, டு
     விர அயண பராயணச் ...... செருவூரா!

விராவிய குரா அகில் பராரை முதிரா வளர்
     விராலி மலை ராஜதப் ...... பெருமாளே!


பதவுரை


     இராகவ இராமன் முன் --- இரகுவின் மரபில் வந்த இராமபிரான் முன்னாளில்,

     இராவண --- அழு குரலுற்றவனும்,

     இரா வண --- இரவின் நிறம் உடையவனும்,

     இராவண இராஜன் --- இராவணன் என்ற அரசன்,

     உட்குடன் மாய் வென்ற ---- அச்சப்பட்டு மாயும்படி வென்ற,

     இராகன் --- அன்பு உடையவரான திருமாலின்,

     மலர் ஆள் நிஜ புராணர் ---- கண்ணையே மலராகக் கொண்டருளிய பழைய வரலாற்றையுடைய சிவபெருமானுடைய,

     குமரா --- புதல்வரே!

     கலை இராஜ --- கலைகளுக்குத் தலைவரே!

     சொல் அ வாரணர்க்கு இளையோனே --- புகழ்ப்படும் அந்த யானை முகவர்க்கு இளையவரே!

     விராகவ --- ஆசையில்லாதவரே!

     சுர அதிப --- தேவர்கட்கு தலைவரே!

     பொராது --- போர் புரியாமலே,

     தவிராது --- தவறுதல் இல்லாமலே,

     அடு --- வெல்ல வல்ல,

     விர அயண பராயண --- வீர வழியில் விருப்பம் உடையவரே!

     செரு ஊரா --- திருப்போரூரில் உறைபவரே!

     விராவிய குரா --- கலந்து விளங்கும் குராமரமும்,

     அகில் --- அகில் மரமும்,

     பராரை முதிரா வளர் --- பருத்த அடிமரத்துடன் முதிர்ந்து வளருகின்ற,

     விராலிமலை --- விராலிமலையில் வாழ்கின்ற,

     ராஜத --- அரச குணமுடைய,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

         நிர் ஆமய --- நோயில்லாததும்,

     புராதன --- பழமையானதும்,

     பராபர --- எல்லாவற்றுக்கும் மேலானதும்,

     வர அம்ருத --- வரத்தைத்தரும் அழிவில்லாததும்,

     நிர் ஆகுல --- கவலை இல்லாததும்,

     சிர அதிக --- முதன்மையாகிச் சிறந்ததும்,

     ப்ரபை ஆகி --- ஒளிமயமாய் விளங்கி,

      நிர் ஆச --- ஆசையற்றதும்,

     சிவராஜ --- சிவத்துடன் மகிழும்,

     தவ ராஜர்கள் ---  தவ வேந்தர்கள்,

     பராவிய --- புகழுகின்றதும்,

     நிர் ஆயுத புர அரி --- ஆயுதத்தை விடாமலேயே புரங்களை எரித்த சிவன்,

     அச்சுதன் --- திருமால்,

     வேதா --- பிரமன்,

     சுர ஆலய --- தேவலோகம்,

     தராதல --- மண்ணுலகம்,

     சர அசர பிராணிகள் --- இயங்குவன, நிலைத்திருப்பன ஆகிய உயிர்கள்,

     சொரூபம் இவர் --- இந்த உருவங்களில் கலந்துள்ளதும் ஆகிய,

     ஆதியை குறியாமே --- ஆதிப்பொருளை அடியேன் குறித்துத் தியானிக்காமல்,

     துரால் புகழ் --- பயனற்ற புகழைக் கொண்டு,

     பர ஆதீன --- பிறருக்கு அடிமைப்பட்டு,

     கரா உள - முதலைபோன்ற உள்ளத்தை உடையவனாய்,

     பராமுக துரோகரை --- அலட்சியம் புரியும் பாவிகளை,

     தராசை உற்று அடைவேனோ --- மண்ணாசை கொண்டு சேர்வேனோ?

பொழிப்புரை


     இரகுவின் மரபில்வந்த இராமர் முன்பு, அழுதவனாகிய இராவின் நிறமுடைய இராவணன் என்ற அரசன் அச்சப்பட்டு மாயும்படி வென்ற அன்புடைய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டு ஆண்டருளிய, உண்மையான பழை புகழுடைய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

     கலைகளின் தலைவரே!

     புகழ் பெற்ற விநாயகமூர்த்திக்கு இளையவரே!

     ஆசையில்லாதவரே!

     தேவர்கட்குத் தலைவரே!

     போர் புரியாமல், தவறுதல் இல்லாமல் வெல்லவல்ல வீரவழியில் விருப்பம் உள்ளவரே!

     திருப்போரூரரே!கலந்து விளங்கும் குரா, அகில் முதலிய மரங்கள் பருத்து அடியுடன் வளர்ந்து முதிர்ந்துள்ள விராலிமலையில் வீற்றிருக்கும் அரசரே!

     பெருமிதமுடையவரே!

         நோயில்லாததும், பழமையானதும், எல்லாவற்றுக்கும், மேலானதும், வரத்தைத் தருவதும், அழிவற்றதும், கவலையில்லாததும், சிறந்த முதன்மையானதும், ஒளிமயமாக விளங்கி ஆசையற்றதும், சிவமயமான முனிவர்கள் புகழ்வதும், ஆயுதம் இன்றிப் புரங்களை எரித்தசிவன், திருமால் பிரமன், விண்ணுலகம், மண்ணுலகம், அசையும் உயிர்கள், அசையாத வுயிர்கள் ஆகிய அனைத்திலும் கலந்து விளங்குவதுமாகிய ஆதி்பொருளை அடியேன் தியானிக்காமல், பயனில்லாத புகழைக்கொண்டு பிறருக்கு அடிமைப்பட்டு முதலையின் கொடிய உள்ளத்தை உடையவராய் வேறுமுகமாய்த் திரியும் பாவிகளுடன் மண்ணாசையினால் சேர்வேனோ?(சேரமாட்டேன்)


விரிவுரை


இந்தத் திருப்புகழில் சுவாமிகள் எப்பொருட்கும் மூலமாகிய இறையைத் தியானிக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றார். இப்பாடல் பூராவும் தனாதன தனாதன என்ற சந்தத்தால் ஆனது. இதே சந்தத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், “நிராமய பராபர புராதன” என்று ஒரு தேவாரம் அருளிச் செய்திருக்கிறார்.

நிராமயம் ---

ஆமயம் - நோய்.நோயில்லாதது நிர் ஆமயம்.

புராதன ---

புராதனம்-பழமையானது. இறைவன் "முன்னைப்பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளாக" விளங்குபவன்.

பராபர ---

பரம்-மேலானது.பராபரம்-மேலான பொருள் அனைத்துக்கும் மேலான பொருள்.

வராம்ருத ---

அம்ருதம்-அழிவில்லாதது.அடியார்க்கு கேட்ட வரங்களையருள வல்ல அழியாத பொருள் இறை.


சிராதிக ---

சிரம் - தலைமையானது, அதிகம் - மேம்பட்டது. மேலான முதற்பொருள்.

நிராச ---

ஆசையில்லாதது நிராசை. இறைவன் ஒன்றிலும் விருப்பில்லாதவன்.

சிவராஜ தவராஜர்கள் பராவிய ---

சிவத்தடன் ஒன்றிய தவமன்னர்கள் துதி செய்கின்ற பொருள்.

நிராயுத புராரி ---

ஆயுதம் இன்றி சிரித்துப் புரங்களை எரித்தவர் சிவமூர்த்தி.

அச்சுதன் ---

அச்சுதன் - அழிவில்லாதவன். திருமால்

வேதா ---

வேதங்களில் வல்ல பிரமன்.


சொரூபம் இவர் ---

விண் மண் சராசரம்ஆகிய எல்லாவற்றிலும் கலந்தவர் இறைவன். இவர் தல்-கலத்தல்.

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக்
   குலவரையைக் கலந்து நின்ற பெரியானை”        --- அப்பர்

எல்லாவற்றிலும் இறைவன் கலந்து நிற்பினும் உலகமாயை அவரைப் பற்றாது.

கடலில் பிறந்து, உவர் நீரைப் பருகி, உவர் நீரிலே வாழுகின்ற கடல்மீனுக்கு உவர் பற்றாததது போல், இறைவன் எங்கும் கலந்து நிற்பினும் உலகமாயை அவரைச் சேராது என்று அறிக.

ஆதியைக் குறியாமே ---

ஆதிப்பொருளாகிய இறைவனைத் தியானிதது அசைவற்றிருக்க வேண்டும். இது உய்யும் நெறி.

துரால் புகழ் ---

துரால்-செத்தை, செத்தைபோன்ற பயனற்ற புகழைப் பெற்று பலர் வாடுகின்றார்கள்.

பராதின ---

பிறருக்கு அடிமைப்பட்டு நிற்கின்றார்கள்.

கராவுள ---

கரா-முதலை. முதலைபோன்ற கடின மனம் படைத்தவர்கள். “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்பது பழமொழி. அதுபோல் தீமையை விடாது பற்றிக் கொண்டிருக்கும் உள்ளம் கராவுளம்.

பராமுகம் ---

இறைவனை நோக்காமல் வேறு வழியில் திரும்பிய முகம் பராமுகம்.

துரோகரை தராசை உற்று அடைவேனோ ---

தரை-ஆசை-தராசை, மண்ணின்மீது ஆசைவைத்த பாவிகளை அடைதல் கூடாது.

இராகவ இராமன் ---

இரகு என்பன் சூரியகுலத்துத் தோன்றிய சிறந்தமன்னன். அவன் குலத்திற பிறந்தவர் இராமர். அதனால் இராகவர் என்று பேர் பெற்றார். இராமன்- அழகுடையவன்.

இராவண இராவண இராவண இராஜன் ---

இராவணன் - அழுதவன். இராவணன் - இரவில் கரிய நிறமுடையவன். இராவண இராஜன் - இராவணனாகிய அரசன்.

இராகன் மலர் ஆள் நிஜ புராணர் ---

இராகன் மலர் ஆள் நிஜ புராணர். இராகம் - அன்பு - திருமால் சக்கராயுதம் பெறும்பொருட்டுத் திருவீழிமிழமையில் தினம் ஒன்றுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சித்து, சிவமூர்த்தியை வழிபட்டு வந்தார்.

அவருடைய அன்பைக் காணும் பொருட்டுச் சிவபெருமான் ஒரு மலரை மறைத்தருளினார். அர்ச்சனை புரிந்து கொண்டிருந்த திருமால் ஒருமலர் குறைந்தது கண்டு, தாமரைமலர் போன்ற தமது விழியை எடுத்து அருச்சித்தார். சிவபெருமான் அவருடைய அன்புக்கு உவந்து சக்ராயுதத்தை வழங்கியருளினார்.

நயனார்ப்பணம்” என்ற இந்தச் செய்தியை ஆதிசங்கரர் சிவானந்தலகரியிலும் கூறுகின்றார்.

“..........................மாசலந்தரன் நொந்துவீழ
   உடல்தடியும் ஆழி தாஎன, ம்புய
  மலர்கள் சதநூறு தான் இடும்பகல்
  ஒரு மலர் இலாது கோவணிந்திடு   செங்கண்மாலுக்கு
உதவிமகேசர்”                                            --- (படர்புவியின்) திருப்புகழ்

பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குக்றையத்
தங்கண் இடந்துஅரன் சேவடிமேற் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற்கு அருளியவாறு
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.     --- திருவாசகம்

மலர் பொருட்டு ஆட்கொண்ட பழமையான புகழையுடைய சிவபெருமான்.

கலையிராஜ சொல்வாரணர் ---

கலைகள் புகழ்கின்ற அந்த யானைமுகமுடையவர் என்றும் பொருள் செய்யலாம். கலை இராஜ சொல் அவாரணர் எனப் பதப்பிரிவு செய்க.


விராகவ ---

வீர அயனம் பராயணம்.வீரவழியில் விருப்பம்.

செருவூர் ---

செருவூர் - திருப்போரூர்.

குரா அகில் பராரை முதிர் ---

பரு அரை-பராரை. குரா, அகில் முதலிய மரங்கள் பருத்த அடியுடன் முதிர்ந்து வளமையுடன் சூழ்ந்துள்ள தலம் விராலிமலை.

கருத்துரை


விராலிமலை வேலவா! ஆதிப்பொருளாகிய உன்னை இடையறாது தியானிக்க அருள்புரிவாய்.


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...