வஞ்சகர் தமை




8.  கூடாதது - தவிர்க்க வேண்டியது.

வஞ்சகர் தமைக்கூடி மருவஒணாது, அன்புஇலார்
     வாசலில் செல்ல ஒணாது;
  வாதுஎவ ரிடத்திலும் புரியஒணாது, அறிவிலா
     மடையர்முன் நிற்க ஒணாது;

கொஞ்சமே னும்தீது செய்யஒணாது, ஒருவர்மேல்
     குற்றஞ்சொல ஒண்ணாது, அயல்
  கோதையர்க ளோடுபரி காசஞ்செய ஒண்ணாது;
     கோள்உரைகள் பேசஒணாது;

நஞ்சுதரும் அரவொடும் பழக ஒணாது, இருள்வழி
     நடந்து தனி ஏக ஒணாது,
  நதிபெருக்கு ஆகின் அதில் நீஞ்சல்செய்ய ஒண்ணாது;
     நல்வழி மறக்க ஒணாது;

அஞ்சாமல் அரசர்முன் பேசஒணாது, இவையெலாம்
     அறியும்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     இவையெலாம் அறியும் --- இங்குக் கூறப் பட்டவற்றை
எல்லாம் அறிந்தவராகிய,

     எமது அருமை மதவேள் --- எமது அரிய மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

      வஞ்சகர் தமைக் கூடி மருவ ஒணாது --- வஞ்சக நெஞ்சம் உள்ளவரோடு கூடிப் பழகுதல் கூடாது.

     அன்பு இலார் வாசலில் செல்ல ஒண்ணாது --- அன்பு இல்லாதவரின் வீட்டுவாயிலை அடைதல் கூடாது.

     வாது எவரிடத்திலும் புரிய ஒணாது --- எவரிடமும் வாதாடுதல் கூடாது.

      அறிவு இலா மடையர் முன் நிற்க ஒணாது --- அறிவு இல்லாத பேதைகளின் முன்னர் செல்லக் கூடாது.

      கொஞ்சமேனும் தீது செய்ய ஒணாது --- சிறிதாகினும் தீய செயலைச் செய்தல் கூடாது.

     ஒருவர் மேல் குற்றம் சொல ஒண்ணாது --- ஆராயாமல் ஒருவர் மேல் குறை கூறுதல் கூடாது.

     அயல் கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது --- பிற மங்கையருடன் நகைத்து, பரிகசித்துப் பேசுதல் கூடாது,

     கோள் உரைகள் பேச ஒணாது --- பிறரைக் காணாத இடத்துப் புறம் கூறுதல் கூடாது. (புறம் கூறாமை என்று ஒரு அதிகாரத்தையே வைத்துள்ளார் நாயனார்)

     நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது --- நஞ்சைத் தரும் பாம்பொடு பழகுதல் கூடாது. (அரவம் ஆட்டேல் என்பது ஆத்திசூடி)

     இருள்வழி நடந்து தனி ஏக ஒணாது --- இருண்ட வழியிலே தனியே நடந்து செல்லுதல் கூடாது. (அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் என்பது உலகநீதி)

      நதி பெருக்கு ஆகின் அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது - ஆறு பெருகிச் சென்றால் அதை நீந்திச் செல்லுதலோ, நீந்தி விளையாடுதலோ கூடாது.

     நல்வழி மறக்க ஒணாது --- நன்னெறியை மறத்தல் கூடாது.

     அஞ்சாமல் அரசர் முன் பேச ஒணாது --- அரசரிடம் மனதில் அச்சம் இல்லாமல் பேசுதல் கூடாது.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...