திருக் கற்குடி - 0347. குடத்தைத் தகர்த்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குடத்தைத் தகர்த்து (திருக்கற்குடி)

முருகா!
பொதுமாதர் கலவிக் கடலில் முழுகுவதை விடுத்து,
உன் அருட்கலில் முழுகி இருக்க அருள்.


தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
     தனத்தத் தனத்தத் ...... தனதான

குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
     குவட்டைச் செறுத்துக் ...... ககசாலக்

குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
     குருத்தத் துவத்துத் ...... தவர்சோரப்

புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
     புறப்பட் டகச்சுத் ...... தனமாதர்

புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
     புரித்துப் பதத்தைத் ...... தருவாயே

கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக்
     கருத்திச் சையுற்றுப் ...... பரிவாகக்

கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட்
     கடைப்பட் டுநிற்கைக் ...... குரியோனே

தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
     தழைப்பித் தகொற்றத் ...... தனிவேலா

தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
     தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


குடத்தைத் தகர்த்து, களிற்றைத் துரத்தி,
     குவட்டைச் செறுத்து, ...... கக சாலக்

குலத்தைக் குமைத்து, பகட்டிச் செருக்கி,
     குருத் தத்துவத்துத் ...... தவர் சோர,

புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
     புறப்பட்ட கச்சுத் ...... தனமாதர்,

புணர்ச்சிச் சமுத்ரத்து இளைப்பு அற்று இருக்கப்
     புரித்து, பதத்தைத் ...... தருவாயே.

கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
     கருத்து இச்சையுற்று, ...... பரிவாகக்

கனக்க ப்ரியப்பட்டு, அகப்பட்டு, மைக்கண்
     கடைப்பட்டு நிற்கைக்கு ...... உரியோனே!

தடத்து உற்பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
     தழைப்பித்த கொற்றத் ...... தனிவேலா!

தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்கு,
     தரு கற்குடிக்குப் ...... பெருமாளே.


பதவுரை

       கடத்துப் புனத்துக் குறத்திக்கு --- காட்டில் உள்ள தினைப்புனத்தில் இருந்த வள்ளி பிராட்டிக்கு,

     மெத்த கருத்து இச்சை உற்று --- மிகவும் திருவுள்ளத்தில் விருப்பங்கொண்டு,

     பரிவு ஆக கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு --- அன்பாக, மிகவும் காதல்கொண்டு, அம்மாதரசியின் அன்பு வலையில் சிக்குண்டு,

     மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே --- மையணிந்த கடைக் கண்ணில் வசப்பட்டு நிற்பதற்கு ஆளானவரே!

       தடத்து உற்பவித்து --- சரவணப்பொய்கையில் உதித்து,

     சுவர்க்க தலத்தை தழைப்பித்து --- பொன்னுலகை வாழ வைத்த,

     கொற்ற தனி வேலா --- வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலாயுதரே!

       தமிழ்க்குக் கவிக்கு புகழ் செய்பதிக்கு --- தமிழுக்கும், தமிழ் கவிகட்கும், புகழ் மிகுந்த வயலூருக்கும்,

     தரு கற்குடிக்கு பெருமாளே --- மரங்கள் நிறைந்த கற்குடி மலைக்கும் தலைவரான பெருமையிற் சிறந்தவரே!

       குடத்தை தகர்த்து --- குடத்தை நொறுக்கியும்,

     களிற்றை துரத்தி --- யானையைத் துரத்தியும்,

     குவட்டை செறுத்து --- மலையை அடக்கியும்,

     ககசால குலத்தை குமைத்து --- பட்சிகள் கூட்டத்தின் குலத்தை வருத்த வைத்தும்,

     பகட்டி --- ஆடம்பரமாக இருந்தும்,

     செருக்கி --- அகந்தை பூண்டும்,

     குருதத்துவத்து தவர் சோர --- குருவாக இருந்து உண்மைகளை உரைக்கும் தவமுனிவர்களும் சோர்ந்து மயங்கும்படி,

     புடைத்து --- பருத்து,

     பணைத்து --- செழிப்புற்று,

     பெருக்க கதித்து --- மிகவும் எழுச்சியுற்று,

     புறப்பட்ட --- வெளித் தோன்றுவதும்,

     கச்சு --- இரவிக்கை அணிந்ததுமான,

     தனமாதர் --- தனத்தை உடைய பொது மாதர்களின்,

     புணர்ச்சி சமுத்ர --- சேர்க்கையென்ற கடலில்,

     திளைப்பு அற்று இருக்க --- முழுகுதலை ஒழித்து இருக்கும்படி,

     புரித்து, பதத்தைத் தருவாயே --- அருள்புரிந்து, உமது திருவடியைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை

            காட்டில் தினைப்புனத்தில் இருந்த வள்ளி பிராட்டியின் மேல் திருவுள்ளத்தில் மிகவும் விருப்பங்கொண்டு, அன்போடு மிக்க காதல் பூண்டு, அவருடைய அன்பு வலையில் அகப்பட்டு, மை பூசிய கடைக் கண்ணில் வசமாகி நிற்பதற்கு உரியவரே!

     சரவணப் பொய்கையில் உதித்துப் பொன்னுலகை வாழ வைத்த வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலாயுதரே!

     தமிழுக்கும் கவிகட்கும், புகழ்பெற்ற வயலூருக்கும், மரங்கள் நிறைந்த திருக் கற்குடிக்கும் தலைவராக விளங்கும் பெருமிதமுடையவரே!

            குடத்தை நொறுக்கியும் யானையைக் காட்டிற்குப் போகுமாறு துரத்தியும், மலையை அடக்கியும், பறவைகள் கூட்டத்தின் குலத்தை வருந்த வைத்தும், ஆடம்பரமும் அகந்தையும் கொண்டும், குருவாக இருந்து உண்மைப் பொருளை உணர்த்துகின்ற தவமுனிவர்களும் சோர்வு அடையுமாறு பருத்தும், செழிப்புற்றும், மிகவும் உயர்ந்தும் வெளிப்பட்டுத் தோன்றுவதும், இரவிக்கையுடன் கூடியதுமான தனத்தையுடைய பொது மாதர்களின் கலவிக் கடலில் முழுகுவது நீங்கி அருளில் சேர்ந்து இருக்கும்படி அருள்புரிந்து உமது பாத மலரைத் தருவீராக.
    
விரிவுரை

குடத்தைத் தகர்த்து ---

இத்திருப்புகழில் முதல் மூன்றடிகளில் தனத்தின் சிறப்பைக் கூறுகின்றார்.

குடம் உடையும் இயல்புடையது. தனம் உடையாதது.

ஆதலால் இயல்பாக குடம் உடைவதை, தனம் தனக்கு நிகராகாமல் தோல்வியுறச் செய்து உடைப்பதாகக் கூறுகின்றார்.

களிற்றைத் துரத்தி ---

யானையின் மத்தகம் தனத்துக்கு உவமையாகாததால் யானைகளை இந்த தனம் காட்டிற்கு விரட்டி அடித்துவிட்டது. இயல்பாகக் காட்டில் யானை வாழ்கின்றது. தனம் அதை ஓட்டி விட்டதாகக் கூறுகின்றது தற்குறிப்பேற்றம் என்ற அணி.

குவட்டைச் செறுத்து ---

மேருவுடன் பகைத்த விந்தமலை வளர்ந்து நின்றது. அகத்தியர் அம்மலையை அடக்கிப் பாதலம் புகுமாறு செய்தார். இந்திரன் மலைகளின் சிறகுகளை அரிந்து அடக்கினான். அதனால் மலைகளும் தனத்துக்கு நிகராக முடியாமல் போய் விட்டன.

கக சாலக் குலத்தைக் குமைத்து ---

ககம்-பட்சி. சாலம்-கூட்டம்.

பறவைகளின் கூட்டத்தின் தலைமையானது சக்கரவாகப்புள். அது தனத்துக்கு உவமை கூறப் பெறுவது. அது பறக்கும் இயல்புடையது. தனம் பறவாது நிலைபெற்றிருப்பதனால், அந்த சக்கரவாகப் பட்சியையும் வருந்த வைத்தது.

பகட்டி ---

பகட்டுதல்-ஆடம்பரம் செய்தல்; நன்றாக அலங்கரிக்கப் பட்டு விளங்குவது தனம்.

குருத் தத்துவத்துத் தவர் சோரா ---

குருவாகவும், மடாதிபதிகளாகவும், துறவிகளாகவும் உள்ள முனிவர்களும் சோர்ந்து பதைபதைக்கச் செய்யவல்லது தனம்.

துறவினர் சோரச் சோர நகைத்துப்
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
          துயர்அறவே பொற் பாதம் எனக்குத் ...... தருவாயே.           --- (அரிசன) திருப்புகழ்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே.    ---  கந்தர் அலங்காரம்.

புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்து புறப்பட்ட கச்சுத் தனமானார் ---

பருத்தும் செழித்தும் மிகவும் உயர்ந்தும் தோன்றுகின்ற தனத்தையுடைய பொதுமாதர்கள்.

தடத்து உற்பவித்து ---

தடம்-குளம்.

சரவணப் பொய்கையில் செந்தாமரைக் கமலத்தில் முருகவேள் மூவருந் தேவரும் போற்ற அவதரித்தருளினார்.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்க ஒணாமல்
நிறைவுடன் யாண்டும் ஆகி நின்றிடும் நிமல மூர்த்தி
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந் தருளினானே.              --- கந்தபுராணம்.

தமிழ்க்குக் கவிக்குப் புகச் செய்ப்பதிக்குத் தருக்கற் குடிக்குப் பெருமாளே ---

           தமிழ்க்குப் பெருமாளே!
           கவிக்குப் பெருமாளே!
           செய்ப்பதிக்குப் பெருமாளே!
           கற்குடிக்குப் பெருமாளே!

என்று விரித்துக் கொள்க.

அருணகிரியாருக்கு இரண்டாவது முறையாக வயலூரில் முருகன் அருள் புரிந்து வயலூரையும் வைத்துத் திருப்புகழ் பாடுமாறு பணித்தருளினார்.

அதனால் எந்தத் தலத்தில் சென்று தரிசித்தாலும் “வயலூரா! வயலூரா” என்று மறவாமல் வயலூரைப் பாடுவாராயினார்.

திருச்சிராப்பள்ளிக்கு இப்போது கிடைத்துள்ள பாடல்கள் பதினைந்து. அவற்றுள் ஒன்பது திருப்புகழில் வயலூரைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.

இதுபோல் வயலூருக்கு அடுத்துள்ள இந்த திருக்கற்குடி என்ற தலத்துத் திருப்புகழிலும் “வயலூருக்குத் தலைவரே” என்று சிறப்பித்துக் கூறுகின்றார்.

தமிழுக்குத் தலைவன், தமிழ்க் கவிக்குத் தலைவன், வயலூருக்குத் தலைவன், கற்குடிக்குத் தலைவன் முருகன்.

கருத்துரை

திருக்கற்குடி மேவும் திருமுருகா! உனது பாதம லரைத் தந்தருள்வாய்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...