விராலிமலை - 0359. கரிபுராரி காமாரி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரிபுராரி காமாரி (விராலிமலை)

முருகா! சிவலோகத்தை அருள்

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான


கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
     கயிலை யாளி காபாலி ...... கழையோனி

கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
     கணமொ டாடி காயோகி ...... சிவயோகி

பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
     பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி

பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
     பரம ஞான வூர்பூத ...... அருளாயோ

சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
     துரக கோப மீதோடி ...... வடமேரு

சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
     சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும்

திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
     திரளி னோடு பாறோடு ...... கழுகாடச்

செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
     திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கரிபுர அரி, காம அரி, திரிபுர அரி, தீஆடி,
     கயிலை ஆளி, காபாலி, ...... கழையோனி,

கர உதாசன ஆசாரி, பரசு பாணி, பான்ஆளி
     கணமொடு ஆடி, காயோகி, ...... சிவயோகி,

பரம யோகி, மா யோகி, பரிய அரா ஜடாசூடி,
     பகர ஒணாத மாஞானி, ...... பசுஏறி,

பரதம் ஆடி, கான்ஆடி, பர, வயோதிக அதீத,
     பரம ஞான ஊர்பூத ...... அருளாயோ?

சுருதி ஆடி தாதா, விவெருவி ஓட, மூதேவி
     துரக, கோப மீதுஓடி, ...... வடமேரு

சுழல, வேலை தீமூள, அழுது அளாவி, வாய்பாறி,
     சுரதி னோடு சூர்மாள, ...... உலகேழும்

திகிரி மாதிர ஆவார திகிரி சாய, வேதாள
     திரளி னோடு பாறோடு ...... கழுகு ஆட,

செருவில் நாடு வான் நீப! கருணை மேருவே! பார
     திருவிராலி ஊர்மேவு ...... பெருமாளே.


பதவுரை

     சுருதி ஆடி தாதா --- வேதங்களை அத்யயனம் செய்யும் பிரமன்,

     வி வெருவி ஓட --- மிகவும் பயந்து ஓடவும்,

     மூதேவி துரக --- மூதேவி அகன்று ஓடவும்,

      கோபம் மீது ஓடி --- கோபம் மிகவும் கொண்டு,

     வடமேரு சுழல --- வடதிசையிலுள்ள மேருமலை சுழலவும்,

     வேலை தீ மூள --- கடலில் எரிமூளவும்,

     அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர்மாள --- வாய் கிழிய அழுது சப்தத்துடன் சூரபன்மன் இறங்கவும்,

     உலகு ஏழும் --- ஏழு உலகங்களும்,

     திகிரி --- வட்டமாய்,

      மாதிர ஆவார --- திசைகளை மறைக்கின்ற,

     திகிரி சாய --- சக்கிரவாளகிரி சாயவும்,

     வேதாள திரளினோடு --- பேய்க்கூட்டங்களுடன்,

     பாறோடு --- பருந்தும்,

     கழுகு ஆட --- கழுகுகளும் ஆடவும்,

     செருவில் நாடு --- போரை நாடிச்சென்ற,

     வான் நீப --- தூய கடப்ப மலர் மாலை அணிந்தவரே!

     கருணை மேருவே --- கருணையில் மேருமலை போன்றவரே!

     பார --- பெருமை பொருந்திய,

     திருவிராலி ஊர் மேவு --- திருவிராலி ஊரில் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே ---  பெருமையிற் சிறந்தவரே!

     கரி புர அரி --- யானையின் உடலை அழித்தவரும்,

     காம அரி --- மன்மதனை அழித்தவரும்,

     திரி புர அரி --- முப்புரங்களை அழித்தவரும்,

     தீ ஆடி --- தீ அபிஷேகங் கொள்பரும்,

     கயிலை ஆளி --- கயிலை மலைக்கு இறைவரும்,

     கபாலி --- கபாலத்தைக் கையில் ஏந்தியவரும்,

     கழையோனி --- மூங்கிலடியில் தோன்றியவரும்,

     கர உதாசன ஆசாரி ---  திருக்கையில் நெருப்பை ஏந்தியவரும்,

     பரசு பாணி --- திருக்கையிலு மழுவைத் தரித்தவரும்,

     பான் ஆளி --- நள்ளிருளை உகந்தவரும்,

     கணமொடு ஆடி --- பேய்க் கூட்டங்களுடன் ஆடுபவரும்,

     கா யோகி --- உலகங்களைக் காக்கும் யோகியும்,

     சிவயோகி --- சிவயோகியும்

     பரமயோகி --- பெரிய யோகியும்,

      மா யோகி --- பெருமைமிகுந்த யோகியும்,

     பரிய அரா ஜடாசூடி --- பெரிய பாம்பைச் சடைமுடியில் தரித்தவரும்,

     பகர ஓணாத மாஞானி --- சொல்லுதுற்கு அரிய பெரிய ஞானியும்,

     பசு ஏறி --- பசுவை வாகனமாகக் கொண்டவரும்,
    
     பரதம் ஆடி --- பரத நாடகம் ஆடுபவரும்,

     கான்ஆடி --- கானமத்தில் நடிப்பவரும்,

     பர --- மேலானவரும்,

     வயோதிக அதீத --- மூப்பைக் கடந்தவரும் ஆகிய சிவபெருமானுடைய,

     பரமஞான ஊர் பூத --- பெரிய ஞான இடத்தில் அடியேன் புகும்படி     அருளாயோ --- திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


     வேதங்களை ஓதுகின்ற பிரமன் மிகவும் அஞ்சி ஓடவும். மூதேவி விலகி ஓடவும், கோபம் மிகவுங் கொண்டு, வடமேருகிரி சுழன்று கலங்கவும், கடல் தீப்பட்டு எரியவும், சூரபன்மன் வாய் கிழியும்படி அழுது மாளவும், ஏழு உலகங்களும், வட்டமாகிய திசைகளை மறைக்கின்ற சக்கிரவாளகிரியும் சாயவும், பேய்க் கூட்டங்களும் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும், போரை நாடிச்சென்ற, தூய கடப்பமலர் மாலை தரித்தவரே!

     கருணையில் மேருமலை போன்றவரே!

     சிறந்த திருவிராலி மலையாகிய இடத்தில் எழுந்தருளியிருக்கும், பெருமிதம் உடையவரே!

         யானையின் உடலை அழித்தவரும், மன்மதனை அழித்தவரும், திரிபுரங்களை அழித்தவரும், நெருப்பில் முழுகுபவரும், கயிலை மலைக்கு அதிபரும், பிரமகபாலத்தை ஏந்தியவரும், மூங்கிலடியில் தோன்றியவரும், கரத்தில் நெருப்பை ஏந்திய குருநாதரும், மழுவை ஏந்தியவரும், நடு இரவில் ஆடுபவரும், பேய்க்கூட்டங்களுடன் ஆடுபவரும், உலகங்களைக் காக்கும் யோகியும், சிவயோகியும், பெரிய யோகியும், சிறந்த யோகியும், பெரிய பாம்பைச் சடைமுடியில் தரித்தவரும், சொல்லுதற்கு அரிய பெரிய ஞானியும், பசுவில் ஏறுபவரும் பரதக்கூத்து ஆடுபவரும், மயானத்தில் நடிப்பவரும், மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய சிவபெருமானுடைய சிறந்த ஞான உலகில் அடியேன் புகும்படி அருள்புரிவீர்.

விரிவுரை

கரிபுராரி ---

கரிபுர அரி. புரம் - சரீரம்.

தாருகவனத்து முனிவர்கள் அபிசார ஓமம் செய்து அனுப்பிய யானையை உரித்துச் சிவபெருமான் போர்த்தியருளினார்.

காமாரி ---

ஆசையை உண்டுபண்ணுகின்ற அதி தேவதையாகிய மன்மதனை எரித்தவர்.

தீயாடி ---

சிவபெருமான் நெருப்பு மயமானவர். அவருக்கு கார்த்திகை பௌர்ணமியில் நெருப்பினால் அபிஷேகம் புரிய வேண்டும்.

கார்த்திகை பௌர்ணமியன்று இறைவனை எழுந்தருளப் புரிந்து, கோயிலுக்கு முன் நிறுத்தி, பனை ஒன்றை நிறுவி, ஓலை மூடி, அதில் சிவத்தை ஆவாகனம் புரிந்து கொளுத்துவர். இதனைச் “சொக்கப்பனை கொளுத்துவது” என்கிறார்கள். இது இறைவனை நெருப்பினால் வழிபடுவதாகும்.

கழையோனி ---

சிவபெருமான் மூங்கில் அடியில் முளைத்தருளினார். அதனால் வேய்முத்தர் என்று அவருக்கு ஒரு பேருண்டு.

கரவுதாசனாசாரி ---

கர உதாசன ஆசாரி, உதாசனன்-அக்கினி. கையில் நெருப்பை ஏந்தியவர்.

வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே” --- திருஞானசம்பந்தர்.


பரசுபாணி ---

பரசு--மழு. மழுவையேந்தியவர்.

பரசு பாணியர்”                 --- திருஞானசம்பந்தர்.

பானாளி ---

பான் நாள் -- நடுஇரவு.

நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே”        --- திருவாசகம்

கழுது கண்படுக்கும் பானாள்”                --- பரஞ்சோதியார்.

கணமொடாடி ---

இறைவர் மகாசம்மார ஊழியாகிய நள்ளிருளில் நடம் புரிவார். பேய்கள் முதலிய சிவகணங்கள் அவருடன் ஆடும்.

கா யோகி ---

கா--காப்பாற்றுகின்ற, அகில வுலகங்களையுங் காப்பாற்றுபவர்.

சிவபெருமான் சிறந்த யோகமூர்த்தி. அதனால் நான்கு முறை யோகி என்று கூறுகின்றார். “காயோகி, சிவயோகி, பரம்யோகி, மாயோகி” என்று அழகிய சொற்களால் அருண கிரிநாதர் சிவபெருமானைக் கூறியருளுகின்றார்.

நான் மறை பாடும் பரமயோகி”           --- திருஞானசம்பந்தர்.

பசுவேறி ---

பசு என்பது கட்டுப்பட்டது என்ற பொருளையுடையது.

பசு ஏறும் எங்கள் பரமன்”           --- திருஞானசம்பந்தர்.

பரதம் ஆடி ---

ப-பாவம்; ர-ராகம்; த-தாளம்.

இந்த மூன்றுடன் கூடியது பரதம். பரத நாடகம் புரியும் ஆசிரியர் சிவமூர்த்தி.

திமிதம்என முழஒலி முழங்கச் செங்கைத்
   தமருகம் அதுஅதிர் சதியொடு அன்பர்க்கு இன்பத்
   திறம் உதவு பரதகுரு”         --- (அமுதுததிவிட) திருப்புகழ்.

கானாடி ---

சர்வ சங்கார காலத்தில் மகாமயானமாகிய காட்டில் இறைவன் தன்னந்தனியில் நடனம் புரிவான்.

வயோதிகாதீக ---

வயோதிக அதீத. சிவபெருமான் என்றும் இளைவர்.

பரமஞான ஊர் பூத அருள்வாயே ---

புகுத என்ற சொல் பூத என்று வந்தது. சிவலோகம் அடைய அருள் செய்க என்று விண்ணப்பம் செய்கின்றார்.

சுருதியாடி தாதா ---

பிரமன் சதாவேதங்களை ஓதுபவர். அதனால் அவர் வேதன் எனப்படுவார்.

மூதேவி துரக ---

துரக-அகல. மூதேவியானவள் போரின் அதிர்ச்சியால் அகன்று ஓடிவிட்டாள்.

சுரதினோடு ---

சுரத்தினோடு-என்ற சொல் சுரதினோடு என வந்தது. சுரம் போல் ஓசை செய்து வாய்கிழியும்படி சூரபன்மன் அழுது மாண்டான்.

திகிரி மாதிர ஆவார திகிரி ---

திகிரி வட்டமாகிய திசைகளை மூடிய சக்கிரவாளகிரி, மாதிர ஆவாரம். ஆவரம்-மூடுதல்.

வானீப ---

வான்-தூய்மை. நீபம்-கடப்பம்.

கருணை மேரு ---

முருகப்பெருமான் கருணையில் மேரு போன்றவான்.


கருத்துரை


விராலிமலையுறை வேலவரே! சிவலோகம் அடைய அருள்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...