விராலிமலை - 0365. மாயா சொரூப





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாயா சொரூப (விராலிமலை)

முருகா! மாதர் மயக்கில் விழாமல் அருள்

தானா தனான தனத்த தத்தன
     தானா தனான தனத்த தத்தன
          தானா தனான தனத்த தத்தன ...... தனதான


மாயா சொரூப முழுச்ச மத்திகள்
     ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
          வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும்

மாலா கிவாட நகைத்து ருக்கிகள்
     ஏகா சமீது தனத்தி றப்பிகள்
          வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம்

ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்
     ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்
          ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம்

ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
     கோமா ளமான குறிக்க ழுத்திகள்
          ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ

காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை
     ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
          காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே

கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு
     போர்போ லசோதை பிடித்த டித்திட
          காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும்

வேயா லநேக விதப்ப சுத்திரள்
     சாயா மல்மீள அழைக்கு மச்சுதன்
          வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா

வீணாள் கொடாத படைச் செருக்கினில்
     சூர் மாள வேலை விடுக்கும் அற்புத!
          வேலா! விராலி மலைத் தலத்து உறை ......பெருமாளே!


பதம் பிரித்தல்


மாயா சொரூப முழுச் சமத்திகள்,
     ஓயா உபாய மனப் பசப்பிகள்,
          வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
          'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
          ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
          ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ?

காயாத பால் நெய் தயிர்க் குடத்தினை
     ஏயா எணாமல் எடுத்து, இடைச்சிகள்
          காணாத ஆறு குடிக்கும் அப்பொழுது, ...... உரலோடே

கார் போலும் மேனி தனைப் பிணித்து, ஒரு
     போர் போல் அசோதை பிடித்து அடித்திட,
          காதோடு காது கையில் பிடித்து அழுது, ......இனிது ஊதும்

வேயால், நேக விதப் பசுத் திரள்
     சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்,
          வீறுஆன மாமன் எனப் படைத்து அருள் ...... வயலூரா!

வீணாள் கொடாத படைச் செருக்கினில்
     சூர் மாள, வேலை விடுக்கும் அற்புத!
          வேலா! விராலி மலைத் தலத்துஉறை ...... பெருமாளே.


பதவுரை

      காயாத பால் - காய்ச்சாத பால்,

     நெய், தயிர் குடத்தினை --- நெய் தயிர்க்குடங்கள்,

     ஏயா --- பொருந்திய மனத்துடன்,

     எணாமல் எடுத்து --- சற்றும் சிந்தியாமல் எடுத்து,

     இடைச்சிகள் காணாத ஆறு --- இடைச்சிமார்கட்குத் தெரியாதபடி,

     குடிக்கும் அப்பொழுது --- குடித்துக் கொண்டிருக்கும் பொழுது,

     உரலோடே --- உரலுடன்,

     கார்போலும் மேனிதனை பிணித்து --- நீலமேகம் போன்ற திருமேனியைக் கட்டி,

     ஒரு போர் போல் --- ஒரு போரிடுவது போல்,

     அசோதை --- யசோதை,

     பிடித்து அடித்திட --- பிடித்து அடிக்க,

     காதோடு காது கையில் பிடித்து அழுது --- இரண்டு காதுகளையுங் கையில் பிடித்துக் கொண்டு அழுதவரும்,

     இனிது ஊதும் வேயால் --- இனிமையாக ஊதுகின்ற புல்லாங்குழலால்,

     அநேக வித பசு திரள் சாயாமல் --- பலவிதமான பசுக்கூட்டங்கள் தவறாதபடி,

     மீள அழைக்கும் அச்சுதன் --- மீண்டு வரும்படி அழைத்தவரும் ஆகிய திருமாலை,

     வீறு ஆன மாமன் என படைத்து அருள் --- சிறப்பு வாய்ந்த மாமனாக் கொண்டருளும்,

     வயலூரா --- வயலூர்ப் பெருமானே!

     வீணாள் கொடாத --- வீணாக நாள் செலவழிக்காமல்,

     படை செருக்கினில் --- படைகள் நம்மிடம் இருக்கின்றது என்ற அகங்காரத்துடன் இருந்த,

     சூர் மாள --- சூரபன்மன் மாளும்படி,

     வேலை விடுக்கும் --- கடலில் விடுத்தருளிய,

     அற்புத வேலா --- அற்புதமான வேலாயுதரே!

     விராலி மலைதலத்து உறை --- விராலி மலை என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      மாயா சொரூப --- மாயையே உருவெடுத்தாற் போன்ற,

     முழு சமத்திகள் --- முழுச் சாமர்த்திய சாலிகள்;

     ஓயா உபாய --- முடிவே இல்லாத தந்திரம் நிறைந்த,

     மன பசப்பிகள் --- மனத்துடன் பசப்புகின்றவர்கள்;

     வாழ்நாளை ஈரும் --- வாழ்நாளை அறுத்து அழிக்கின்ற,

     விழி கடைச்சிகள் --- கடைக்கண்ணினர்;

     முநிவோரும் மால் ஆகி வாட --- முனிவர்களும் மயக்கமுற்று வருந்தும்படி,

     நகைத்து உருக்கிகள் --- சிரித்து அவர்களை உருக்க வல்லவர்கள், ஏகாச மீது --- மேலாடையின் மீது,

     தன திறப்பிகள் --- கொங்கையைத் திறந்து காட்டுபவர்கள்,

     வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் --- வாருங்கள், இருங்கள் என்று கூறும் முழு மோசக்காரிகள்,

     ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள் --- ஆராய்வதற்கு இடமில்லாத ஆசையையும் எழுப்புகின்ற ஏமாற்றுக்கரிகள்,

     ஈயாத போதில் --- காசு கொடுக்க முடியாத போது,

     அறபிணக்கிகள் --- மிகவும் பிணங்குபவர்கள்,

     ஆவேச நீர் உண் --- கள்ளைக் குடிக்கின்ற;

     மத பொறிச்சிகள் --- வெறி கொள்ளுகின்ற ஐம்பொறிகளை உடையவர்கள்;

     பழி பாவம் ஆமாறு எணாத --- பழிபாவம் ஆகுமோ என்று எண்ணாத,

     திருட்டு மட்டைகள் --- திருட்டு வீணிகள்;

     கோமாளம் ஆன --- வேடிக்கையான,

     குறி கழுத்திகள் --- நகக் குறி அமைந்த கழுத்தை உடையவர்கள்;

     ஆசார ஈன --- ஆசாரம் குறைந்த,

     விலை தனத்தியர் --- விலைக்கு விற்கும் தனத்தை உடையவர்கள் ஆகிய பொதுமாதர்களின்,

     உறவு ஆமோ --- உறவு ஆகுமோ? ஆகாது.


பொழிப்புரை


         காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களைச் சற்றும் சிந்தியாமல் எடுத்து, கோபிகைகள் காணாதபடி குடித்தபோது, உரலில் காட்டி நீலமேகம் போன்ற திருமேனியை அசோதை அடித்த போது, இரு காதுகளையும் கையால் பற்றிக்கொண்டு அழுதவரும், புல்லாங்குழல் ஊதி பலவிதமான பசுக்களை அழைத்தவருமாகிய திருமாலை பெருமை மிகுந்த மாமன் எனக் கொண்ட வயலூர் வள்ளரே!

     படைகளின் அகங்காரத்தினால் வீணாள் படாமல் இருந்த சூரபன்மன் மாயும்படி அற்புதமான வேலாயுதத்தைக் கடலின் மீது ஏவியவரே!

     விராலிமலையில் வாழும் பெருமிதமுடையவரே!

         மாயையின் வடிவான முழுச்சமர்த்திகள், ஒழியாமல் தந்திரம் புரியும் மனத்துடன் பசப்புகின்றவர்கள்; வாழ்நாளை அறுத்தழிக்கும் கடைக்கண்ணுடையவர்கள்; முனிவர்களும் மயக்கமுற்று வாடும்படிச் சிரித்து மனத்தை உருக்குபவர்கள்; மேலே மூடிய ஆடைக்குமேல் தனங்கள் தெரியும்படி நிற்பவர்கள்; “வாருங்கள்” “இருங்கள்” என்று கூறும் முழு வஞ்சனைக்காரிகள்; மிகுந்த போகத்தையும், ஆராய்ச்சியில்லாத ஆசையையும் எழுப்புகின்ற ஏமாற்றுக்காரிகள்; பணங்கொடுக்க முடியாதபோது அறவே பிணங்குபவர்கள்; மயக்கத்தைத் தரும் கள்ளைக் குடிப்பவர்கள்; பழி பாவம் என்று எண்ணாத திருட்டு மௌடிகள்; வேடிக்கையாக நசுக் குறிகள் அழுத்திய கழுத்தினர்கள்; ஆசாரம் குறைந்த, விலைக்கு விற்கும் தனத்தினர்கள் ஆகிய பொது மகளிரின் உறவு நல்லதாகுமோ? ஆகாது.

விரிவுரை


முநிவோரும் மால் ஆகிவாட நகைத்து உருக்கிகள் ---

முற்றுந்துறந்த முனிவர்களும் தங்களைக் கண்டு மயங்கித் தியங்கி உருகி நிற்குமாறு அழகில் மிகுந்து நிற்பர் பொதுமகளிர்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே, துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?                                                                                                                      --- கந்தலங்காரம்.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநரகம், - ஓத அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.            --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார்.

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.

ஏகாசம் ---

ஏகாசம்-மேற்போர்வை, மேலாடை.

பொருபூதரம் உரித்து ஏகாசமிட்ட புராந்தகர்.”   --- கந்தரலங்காரம்.

ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீபற,
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீபற.         ---  திருவாசகம்.

ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
         இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்
மேகஆசம் கட்டுஅழித்த வெள்ளி மாலை
         புனலார் சடைமுடிமேல் புனைந்தார் போலும்
மாகாசம் ஆயவெண் ணீருந் தீயும்
         மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாசம் என்றுஇவையும் ஆனார் போலும்
         ஆக்கூரில் தான்தோன்றி அப்ப னாரே.          --- அப்பர்.

ஆவேச நீர் ---

கள்ளை உண்டவர் ஆவேசம் வந்தவர்போல ஆடுவர். அதனால் ஆவேசநீர் என்றார்.

ஆவேசநீரைக் குடீத்த துட்டர்கள்”  --- (ஆசாரவீன) திருப்புகழ்

காயாத பால் நெய்............அச்சுதன் ---

இந்த மூன்று அடிகளில் பாகவதத்தில் கண்ணபிரான் செய்த திருவிளையாடல்களை எடுத்து இனிது கூறுகின்றார்

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு,
பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,
வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது, அங்கு
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்,
அடியுண்டு அழுதானால் இன்று முற்றும். --- பெரியாழ்வார்.


கருத்துரை

விராலி மலை முருகா! மாதர் மயக்கம் கொடியது. அது கூடாது.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...