படியின் அப்பொழுதே




படியின், அப்பொழுதே வதைத்திடும்
          பச்சை நாவியை நம்பலாம்;
    பழி நமக்கு என வழி மறித்திடும்
          பழைய நீலியை நம்பலாம்;
கொடும் மதக் குவடு என வளர்ந்திடு
          குஞ்சரத் தையும் நம்பலாம்;
    குலுங்கப் பேசி நகைத்திடும் சிறு
          குமரர் தம்மையும் நம்பலாம்;
கடை இலக்கம் அது எழுதிவைத்த
          கணக்கர் தம்மையும் நம்பலாம்;
    காக்கை போல் விழி பார்த்திடும் குடி
          காணி யாளரை நம்பலாம்;
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும்
          நகை நகைத்திடும் மாதரை
    நம்பஒணாது, மெய், நம்பஒணாது, மெய்,
          நம்பஒணாது, மெய் காணுமே.

இதன் பொருள் ---

     வயிற்றிலே போய் படிந்த உடனே சிறுகச் சிறுகக் கொல்லுகின்ற தன்மை உடைய சுத்தி செய்யாத பச்சைப் பாடாணத்தை நம்பி உண்ணலாம். (அதற்கு மாற்று மருந்து உட்கொண்டு தேறலாம்).

     பழிச் செயல் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாது, வழிப்பறி செய்யும் தொழிலில் வல்லவரான பழைய திருடர்களையும் நம்பலாம்.

     குன்றைப் போன்று வளர்ந்துள்ளதும், கொடுமை பொருந்தியதும், மதம் பிடித்ததும் ஆகிய யானையையும் நம்பி அதனருகில் செல்லலாம்.

     உள்ளன்பு இல்லாமல், உடல் குலுங்கப் பேசிச் சிரித்தே நட்புக் கொள்ளுகின்ற சிறியவர்களையும் நம்பலாம்.

     மற்றவருக்குக் கணக்கைக் காட்டாது, தாம் விரும்பிக் கேட்டதைக் கொடாத குடிமக்களைக் கெடுக்கும்படியாக பலவகையான பொய்த் தீர்வைகளை மோசக் கணக்காக எழுதி வைத்த ஊர்க் கணக்கர்களையும் நம்பலாம்.

     ஒரே கண்ணைக் கொண்டு இரு பக்கங்களிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் காக்கையைப் போல, தமது கண்களால், அறுவடைக் காலத்தில் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு இருந்து, பயிரிடுவோருக்கு உரிய பயன் கிடைக்காமல் செய்யும் காணி ஆட்சியாளரையும் நம்பலாம்.

     குலுக்கி நடந்தும், முகத்தை பூச்சுக்களால் மினுக்கியும், பல் எல்லாம் தெரியக் காட்டிச் சிரித்து நடித்தும், ஆண்களை மயக்கும் பொதுமாதரை நம்பக் கூடாது. இது உண்மை. நம்பக் கூடாது. இது உண்மை. நம்பக் கூடாது. இது உண்மை.

     இதனை ஆராய்ந்து அறிந்துக் கொள்ளுங்கள்

     குறிப்பு --- நம்பினால் கேடு வருவது உறுதி என்பதை உணர்த்த, இப் பாடலாசிரியர், நம்பக் கூடாது என்று மூன்று முறையும், இது உண்மை, உண்மை, உண்மை என்று மும்முறையும் சொன்னார். முக்காலும் சொல்லுதல் என்பது உலக வழக்கு. ஒரு முறைக்கு மூன்று முறை சென்னால் அது உறுதியானது என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...