திருச்செங்கோடு - 0387. கொடிய மறலியும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொடிய மறலியும் (திருச்செங்கோடு)

முருகா! அடியேன் முன் எழுந்தருளி வரவேணும்.

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான


கொடிய மறலியு மவனது கடகமு
     மடிய வொருதின மிருபதம் வழிபடு
     குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
     மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
     கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும்

படியு நெடியன எழுபுண ரியுமுது
     திகிரி திகிரியும் வருகென வருதகு
     பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப்

பழய அடியவ ருடனிமை யவர்கண
     மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
     பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும்

சடில தரவிட தரபணி தரதர
     பரசு தரசசி தரசுசி தரவித
     தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத்
  
தரணி தரதநு தரவெகு முககுல
     தடினி தரசிவ சுதகுண தரபணி
     சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே

நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
     எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
     நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும்

நிலனும் வெருவர வருநிசி சரர்தள
     நிகில சகலமு மடியவொர் படைதொடு
     நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கொடிய மறலியும் அவனது கடகமும்
     மடிய, ஒரு தினம் இருபதம் வழிபடு
     குதலை அடியவன், நினது அருள் கொடு பொரும் ....அமர்காண

குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும்,
     அறுமுகமும் வெகு நயனமும், ரவிஉமிழ்
     கொடியும், அகிலமும் வெளிபட இருதிசை ...... இருநாலும்

படியும் நெடியன எழு புணரியும், முது
     திகிரி திகிரியும் வருக என வரு தகு
     பவுரி வரும் ஒரு மரகத துரகத ...... மிசை ஏறிப்

பழய அடியவர் உடன் இமையவர் கணம்
     இருபுடையும் மிகு தமிழ்கொடு, மறைகொடு,
     பரவ வரு மதில் அருணையில் ஒருவிசை ...... வரவேணும்.

சடில தர, விட தர, பணி தர, தர
     பரசு தர, சசி தர, சுசி தர, வித
     தமருகம் மிருக தர, வனி தர, சிர ...... தர, பாரத்

தரணி தரதநு தர,வெகு முக குல
     தடினி தர, சிவ சுத! குண தர! பணி
     சயில! விதரண! தருபுர சசி தரு ...... மயில்வாழ்வே!

நெடிய உடல்உரு இருள்எழ, நிலவுஎழ,
     எயிறு சுழல்விழி தழல்எழ, எழுகிரி
     நெரிய, அதிர்குரல் புகைஎழ, இடிஎழ, ...... நெடுவானும்

நிலனும் வெருவர, வரு நிசி சரர் தளம்
     நிகில சகலமு மடிய, ஒர் படை தொடு
     நிருப! குருபர! சுரபதி பரவிய ...... பெருமாளே.


 பதவுரை

     சடில தர --- சடாபாரத்தைத் தாங்குபவரும்,

     விட தர --- ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தவரும்,

     பணி தர --- பாம்புகளை ஆபரணமாகத் தரித்தவரும்,

     தர பரசு தர --- மேன்மை தங்கிய மழுவைத் தாங்கியவரும்,

     சசி தர --- சந்திரனை முடியில் தரித்தவரும்,

     சுசி தர --- தூய்மையை உடையவரும்,

     இத தமருக மிருக தர - இனிய நாதத்தையுடைய உடுக்கையையும், மானையும் திருக்கரங்களில் தரித்தவரும்,

     வனி தர --- பார்வதி தேவியை இடப்பாகத்தில் தரித்தவரும்,

     சிர தர --- பிரம சிரங்களைத் தாங்குபவரும்,

     பார தரணி தர --- சுமையை உடைய பூமியைத் தாங்குபவரும்,

     தநு தர --- மேருகிரியை வில்லாகத் தரித்தவரும்,

     வெகுமுக குல தடினி தர --- ஆயிரம் முகங்களையுடைய சிறந்த கங்காதேவியைத் தரித்தவரும் ஆகிய,

     சிவ சுத --- சிவபெருமானுடைய திருப்புதல்வரே!

     குண தர --- அருட்குணங்களை யுடையவரே!

     பணி சயில --- திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருப்பவரே!

     விதரண --- தயாளம் உடையவரே!

     தருபுர சசி தரு --- கற்பக நாட்டிலுள்ள இந்திராணி பெற்றெடுத்த,

     மயில் வாழ்வே --- மயில்போன்ற தெய்வயானை அம்மையாருக்கு வாழ்வாக விளங்குபவரே!

     நெடிய உடல் உரு இருள் எழ --- (அசுரர்களுடைய) நீண்ட உடம்பின் கரிய வடிவத்திலிருந்து இருள் வீசவும்,

     எயிறு நிலவு எழ --- பற்களிலிருந்து ஒளி வீசவும்,

     சுழல் விழி தழல் எழ --- சுழல்கின்ற கண்களில் நெருப்புப்பொறி வீசவும்,

     எழுகிரி நெரிய --- ஏழு குல மலைகள் நெரிந்து பொடிபடவும்,

     அதிர் குரல் புகை எழ --- அதிர்கின்ற குரலிலிருந்து புகை எழவும்,

     இடி எழ --- இடியோசையைப் போன்ற ஒலியுண்டாகவும்,

     நெடு வானும் --- விசாலமான ஆகாயமும்,

     நிலனும் --- பூமண்டலமும்,

     வெருவர --- அச்சப்படவும்,

     வரு நிசிசரர் தளம் --- வருகின்ற இரக்கதர்களுடைய சேனைகள்,

     நிகில சகலமும் மடிய --- சிறிதும் இல்லாமல் முழுவதும் அழிந்தொழிய,

     ஓர் படைதொடு --- ஒப்பற்ற சர்வ சங்கார படையை ஏவிய,

     நிருப --- தலைவரே!

     குரபர --- மேலான குருநாதரே!

     சுரபதி பரவிய --- தேவர் கோமானாகிய இந்திரனால் துதிசெய்யப் பெற்ற,

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

     கொடிய மறலியும் --- கொடுமை மிக்க கூற்றவனும்,

     அவனது கடகமும் --- அக்கூற்றுவனுடைய சேனையும்,

     மடிய --- மாண்டொழியுமாறு,

     ஒரு தினம் --- ஒரு நாளில்,

     இரு பதம் வழிபடும் --- தேவரீருடைய திருவடிகள் இரண்டையும் வழிபடுகின்ற,

     குதலை அடியவன் --- சிறு குழந்தையாகிய அடியேன்,

     நினது அருள்கொடு --- தேவரீருடைய திருவருளைத் துணையாகக் கொண்டு,

     பொரும் அமர் காண --- போர் செய்கின்ற யுத்தத்தைப் பார்க்கும் பொருட்டு,

     குறவர் மகள் புணர் --- வள்ளிநாயகியார் தழுவுகின்ற,

     புயகிரி சமுகமும் --- மலைபோன்ற தோள்களின் கூட்டமும்,

     அறுமுகமும் --- ஆறு திருமுகங்களும்,

     வெகு நயனமும் --- பல கண்களும்,

     ரவி உமிழ் கொடியும் --- சூரியனை உமிழ்கின்ற கோழிக் கொடியுடனும்,

     அகிலமும் வெளிபட --- பிற யாவும் வெளிப்படவும்,

     இருதிசை இருநாலும் --- மேல் கீழ் ஆகிய இரண்டு திசைகளுடன் எட்டுத் திசைகளும்,

     படியும் --- பூமியும்

     நெடியன எழுபுணரியும் --- நீண்ட ஏழு கடல்களும்,

     முது திகிரி திகிரியும் --- பழமையான வளைந்துள்ள சக்கரவாளகிரியும்,

     வருக என வரு தகு --- வா என்ற அழைக்க உடன் வந்து அசைவதுபோல் அசையவும்,

     பவுரி வரும் --- கூத்தாடுகின்ற,

     ஒரு மரகத துரகத மிசை --- ஒப்பற்ற பச்சை மயில் வாகனத்தின் மீது,

     ஏறி --- ஆரோகணித்து,

     பழைய அடியவருடன் --- பழமையான அடியார்களுடனும்,

     இமையவர் கணம் --- தேவர்களுடைய கூட்டம்,

     இருபுடையும் --- இருப்பக்கங்களிலும்,

     மிகு தமிழ்கொடு மறைகொடு --- பெருமை மிகுந்த தமிழ்ப்பாடலையும், வேதகீதங்களையும் கொண்டு,

     பரவ --- துதித்துக்கொண்டு வரவும்,

     வரும் அதில் --- முன்னொரு முறை வந்தருளியதுபோல்,

     அருணையில் ஒரு விசை --- திருவண்ணாமலையில் இன்னொரு முறை,

     வரவேணும் --- வந்தருளவேண்டும்.


பொழிப்புரை

         சடாபாரத்தைத் தாங்கியவரும், ஆலகால விடத்தைக் கண்டத்தில் தரித்தவரும், நாகாபரணரும், சிறந்த மழுவை ஏந்தியவரும், பிறைச் சந்திரனைத் தரித்தவரும், தூய்மை யுடையவரும், இனிய நாகத்தையுடைய உடுக்கையையும் மானையும் ஏந்திய திருக்கரத்தினரும், இமய வல்லியை இடப்பாகத்தில் உடையவரும், பிரம சிகரங்களை மாலையாகத் தரித்தவரும், பாரமான பூமியைத் தமது திருவருளால் தாங்குபவரும், மேரு கிரியை வில்லாகவுடையவரும், ஆயிரமுகங்களையுடைய கங்கா நதியைத் திருமுடியில் தரித்தவரும் ஆகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

         அருட்குணங்களை அடையவரே!

         சாப்ப சயிலமாகிய திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருப்பவரே!

         தயா சீலரே!

         கற்பத்தருவுடன் கூடிய பொன்னகரத்தாசியாகிய இந்திராணியின் திருமகளாராகிய தெய்வயானை யம்மையாருக்கு வாழ்வாக விளங்குபவரே!

         நீண்ட உடலிலிருந்து இருள் வீசவும், பற்களிலிருந்து ஒளிவீசவும், சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப்பொறி வீசவும், குலைமகள் ஏழும் நெரிந்து தூள்படவும், அதிர்கின்ற குரலிலிருந்து புகையெழவும், இடியைப்போன்ற ஓசை எழவும், அகன்ற வானுலகமும் மண்ணுலகமும் அச்சப்படவும், அசுரர்களுடைய சேனைகள் யாவும் மாய்ந்தொழியுமாறு ஒப்பற்ற சர்வசங்காரப் படையை ஏவியருளிய தனிப்பெருந் தலைவரே!

     மேலான குருநாதரே!

      இந்திரன் புகழும் பெருமிதமுடையவரே!

      தேவரீருடைய சரணாரவிந்தங்கள் இரண்டையும் வழிபடுகின்ற அடியேன் உமது திருவருளைத் துணையாகக் கொண்டு, கொடிய கூற்றுவனும், அவனுடைய சேனைகளும் மடியுமாறு போர் செய்கின்ற நாள் ஒன்று உண்டல்லவா?

     அன்று அப்போரைக் கண்டு மகிழும் பொருட்டு வள்ளியம்மையாருடனும், பன்னிரு புயாசலங்களுடனும், ஆறு திருமுகங்களுடனும், பதினெட்டு திருக்கண்களும், சூரியனை அங்கப் பிரத்தியங்கங்களும் வெளிப்படவும், பத்துக் திக்குகளும் பூமியும் நீண்டகடல்கள் ஏழும் பழைய சக்கரவாளகிரியும் உடன்வந்து அசைய ஆடுகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வாகனத்தின்மீது ஏறி, பழைய திருத்தொண்டர்களும் தேவர்களும் இருபக்கங்களில் மிகுந்த இனிமையுடைய தமிழ்ப்பாடல்களையும் வேதப்பாடல்களையும், பாடித் துதித்துவரவும், முன்னொரு விசை அடியேன் முன்வந்ததுபோல், திருவண்ணாமலையில் இன்னொரு விசை வந்தருளல் வேண்டும்.

 
விரிவுரை

இப்பாடலின் பிற்பகுதியில் 'தர' என்பது 13 முறையும் 'எழ' என்பது 6 முறையும் வந்ததிருப்பது கவனிக்கத் தக்கது

கொடிய மறலியும்...................அமர்காண ---

உலகில் ஒருவர்க்கொருவர் மாறுபட்டுப் போர்புரிகின்ற இடத்தில் உடனே பெருங் கூட்டங் கூடிவிடுவது இயற்கை. சண்டையைப் பார்ப்பதில் யாருக்கும் விருப்பந்தானே? ஆதலால், கூற்றுவனுக்குந் தனக்கும் நிகழப்போகும் ஒரு பெரும் போரைக் காண்பதற்கு அருணகிரியார் முருகக்கடவுளை யழைக்குந் திறம் எத்துணை அழகும் வியப்பும் தருகின்றது. இதனை ஊன்றிச் சிந்திக்குந் தோறும் சிறுமுறுவலும் தோன்றுகின்றது. முருகன் சிறுகுழந்தையல்லவா? குழந்தைகளுக்குச் சண்டையைப் பார்ப்பதில் மிகுந்த விருப்பமுண்டல்லவா? ஆனபடியால் இப்பாடல் 7ஆவது அடியில் “சிவசுத” என்றனர்.

கூற்றுவனுடன் தான் செய்யும் போரும் முருகனுடைய திருவளையே துணையாகக் கொண்டு செய்வதாகவும் தற்போதமும் முனைப்பும் கொண்டு செய்யவில்லை என்றும் குறிப்பிடுதற்பொருட்டு, “நினதருள் கொடு” என்றனர்.

இனி இப்போரில் வெற்றியும் தோல்வியும் எவர்பால் நிகழுமோ? என்று ஐயுற வேண்டாம்; நிச்சயமாக வெற்றி தனக்கே என்ற துணிவு கொள்ளும் பொருட்டு, “மடிய” என்றனர். கூற்றுவனுக்குப் படைத்துணை அதிகமாயிற்றே? அதனால் எப்படி வெல்ல முடியும்? என்னும் ஐயத்தை விலக்கும் பொருட்டு, “அவனது கடகமும் மடிய” என்றனர். “அப்படி யாவரையும் அடக்கும் எமனை வெல்லும் ஆற்றலுடையேன் நான்” செருக்கு ஒரு சிறிதுமில்லை என்று விளக்கும் பொருட்டு, “இருபதம் வழிபடும் குதலை யடியவன்” என்றனர். எமனை ஏன் கொல்கின்றாய்? என்ற வினாவுக்கு விடையாக “கொடிய மறலி” என்று விடை பகர்கின்றனர். இயமனை வெல்லுதற்கு நீ மிகப்பெரியவனோ? என்னில் “இல்லை, சிறுவன்தான்” என்பதாக “குதலை” என்றனர், “இக்குழந்தைப் பருவத்திலேயே இயமனைக் கொல்வதாயின் இன்னும் யெவனப்பருவம் எத்தனை ஆற்றல் மிகும்” என்னும் குறிப்பும் வெளிப்படுகின்றது. இவற்றையெல்லாம் சிந்திப்பார்க்குச் சித்தம் தித்திக்குமல்லவா?

குறவர் மகள் புணர் புயகிரி ---

வள்ளியம்மையார் இச்சா சக்தியாதலின் “குறவர் மகள் தழுவுகின்றதோள்” என்றனர்.

வெகு நயனம் ---

அஷ்டாதச விலோசனம்” என்ற கந்தபுராணத் திருவாக்கின்படி முருகக் கடவுளுக்குப் பதினெட்டுக் கண்கள்.

ரவியுமிழ் கொடிய ---

சேவல் கூவிய பிறகே கதிரவனுதிப் பனாதலினால்
சூரியனையுமிழ்கின்ற சேவல் என்றனர்.

ரவியுமிழ் துவசமும்”             --- (நெடிவட) திருப்புகழ்.

இருதிசை இருநாலும் ---

எட்டுதிக் குடன் மேல் கீழ் ஆக பத்துத்திசை.
  
பழைய அடியவர்......................பரவ ---

இறைவனாகிய முருகவேள் அருளுருக் கொண்டு அருணகிரியார்க்குத் தோன்றி காட்சி அளித்தபோது, ஒரு புறத்தே பழந் தொண்டர் செந்தமிழ்த் தீஞ்சுவைப் பாடல்களையும், மற்றொருபுறம் வேதப் பாடல்களையும் பாடித் துதித்து வந்தனர் என்னுங் குறிப்பை அன்பர்கள் உற்று நோக்குக.

முன்னே தமிழையும், பின்னே வடமொழியையும் வைத்துப் பேசியிருப்பதை உய்த்துண்க.

இறைவனுக்கு முன்னே வருவது தமிழ். பின்னே வருவது வடமொழி.

திருமால் கோயிலில் இன்றும் இங்ஙனம் நிகழ்வது கண்கூடு.

பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
   பச்சைப் பசுங் கொண்டலே”              --- குமரகுருபரர்.

பழமையான வேதங்கள் முறையிடவும், பைந்தமிழின் பின்னால் சென்றவனே என்று மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழில் குமரகுருபர அடிகள் திருமாலைப் பாடி இருப்பதை எண்ணுக,

வருமதில் அருணையில் ஒருவிசை வரவேணும் ---

வரும் அதில் - வந்தது போல், முன்னே சொல்லிய வண்ணமாக முன் தனக்கு காட்சி தந்ததுபோல், கூற்றுவனுடன் பொருது அவனை மடியச் செய்யும் வீரப்போரைக் காண்பதற்கு இன்னொருவிசை வரவேணும் என்று சுவாமிகள் வேண்டுகின்றனர்.

வனிதர ---

வனிதைதர என்பது கடைக்குறையாக வனிதர என வந்தது. வ(ன்)தர- நெருப்பைக் கையில் தாங்கியவரே என்றும் பொருள் கொள்ளலாம்.

தரணிதர தநுதர ---

தரணிதர - .பூமியைத் தாங்குபவர். தநு தர - மேருகிரியை வில்லாகத் தரித்தவர்.

தரணிதர - .மலை; (மேரு) மலையகிய வில்லைத் தரித்தவரே என்றும் பொருள் கொள்ளலாம்.

சசிதரு மயில் ---

தெய்வயானை அம்மையாரை, இந்திரனுக்கும் இந்திராணிக்கும் புதல்வி என்பது உபசாரம். அமுதவல்லியம்மை தானே குழந்தையாகி இந்திரனிடம் செல்ல, அவன் சூரனுக்கஞ்சி மேருகிரியில் ஒளிந்திருந்தானாதலின், ஐராவதத்திடம் தர, அது
மனோவதியில் வளர்த்தலின் தெய்வயானை எனப் பெயர் போந்தது.

கருத்துரை

         சிவகுமாரரே! செங்கோடரே! தெய்வயானை கணவரே! அசுரகுல காலரே! அடியேன் அந்தகனுடன் பொரும் போரைக் காண தேவரீர் முன் வந்தது போல் மற்றொரு முறை வரவேணும்.

                 


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...