திரு மீயச்சூர்




திரு மீயச்சூர்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் இரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோயில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. முயற்சி நாதேசுவரர் (மேகநாதர்) கோயிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோயில் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் இருக்கிறது.


இறைவர்                   : முயற்சி நாதர், மேகநாதர்

இறைவியார்               : சௌந்திரநாயகி, சுந்தரநாயகிலலிதாம்பாள்

தல மரம்                   : வில்வம்

தீர்த்தம்                    : சூரிய புஷ்கரணி

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - காயச்செவ்வி.


         கோச்செங்கட் சோழ நாயனார் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டினார்.  காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு. சோழர்காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள "கஜப்ரஷ்ட விமானம்" மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

         திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர் சுயம்புலிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும் துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும் கல் தூண்களும் சோழர்காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

         கோயிலின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது. இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

         சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப் போன சூரியன் சாபவிமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக் குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றது. இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது. இந்த சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இது.

          சித்திரை மாதம் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உதய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகின்றது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள இலிங்கத்தின் மீது விழுவதைக் காணலாம். இங்குள்ள இலிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுப் பல நன்மைகள் அடைந்தான். எனவே தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம்பெறுவர் என்று நம்பப்படுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "யோகு ஆள, காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் மீயச்சூர் தண் என்னும் வெண் நெருப்பே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 537
தக்க அந்தணர் மேவும்அப்
         பதியினில், தான்தோன்றி மாடத்து,
செக்கர் வார்சடை அண்ணலைப்
         பணிந்து, இசைச் செந்தமிழ்த் தொடைபாடி,
மிக்க கோயில்கள் பிறவுடன்
         தொழுதுபோய், மீயச்சூர் பணிந்துஏத்தி,
பக்கம் பாரிடம் பரவநின்று
         ஆடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.

         பொழிப்புரை : தகுந்த அந்தணர்கள் வாழ்கின்ற அப்பதியில், தான் தோன்றிமாடக் கோயிலில் சிவந்த நீண்ட சடையையுடைய இறைவரைப் பணிந்து, இசையையுடைய செந்தமிழ்ப் பதிக மாலையைப் பாடி, பெருமை பொருந்திய பிற கோயில்களையும் உடனே தொழுது சென்று, `திருமீயச்சூரினையும்' வணங்கி, பூத கணங்கள் அருகிலிருந்து போற்ற நின்று ஆடும் இறைவரின் `திருப்பாம்புர' நகரத்தை அடைந்தார்.

         திருமீயச்சூரில் அருளிய பதிகம் `காயச் செவ்வி' (தி.2 ப.62) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


2.062 திருமீயச்சூர்                        பண் - காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி,
மாயச் சூர்அன்று அறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.

         பொழிப்புரை :அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.


பாடல் எண் : 2
பூஆர் சடையின் முடிமேல் புனலர், அனல்கொள்வர்,
நாஆர் மறையர், பிறையர், நறவெண் தலைஏந்தி
ஏஆர் மலையே சிலையாக் கழிஅம்பு எரிவாங்கி
மேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

         பொழிப்புரை :திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடை முடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.


பாடல் எண் : 3
பொன்நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்,
மின்நேர் சடைகள் உடையான், மீயச் சூரானைத்
தன்நேர் பிறர்இல் லானைத் தலையால் வணங்குவார்
அந்நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிதுஅன்றே.

         பொழிப்புரை :பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரி தன்று.

பாடல் எண் : 4
வேக மதநல் லியானை வெருவ உரிபோர்த்துப்
பாகம் உமையோடு ஆகப் படிதம் பலபாட
நாகம் அரைமேல் அசைத்து நடம் ஆடியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.

         பொழிப்புரை :வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான்.


பாடல் எண் : 5
விடைஆர் கொடியார், சடைமேல் விளங்கும் பிறைவேடம்,
படைஆர் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்,
பெடைஆர் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்
விடைஆர் நடைஒன்று உடையார் மீயச் சூராரே.

         பொழிப்புரை :திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்த பூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர்.


பாடல் எண் : 6
குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர்கொன்றை
ஒளிரும் பிறைஒன்று உடையான் ஒருவன், கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்,
மிளிரும் அரவம் உடையான் மீயச் சூரானே.

         பொழிப்புரை :திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்கும் அரவினை அணிந்தவன்.


பாடல் எண் : 7
நீல வடிவர், மிடறு நெடியர், நிகர்இல்லார்,
கோல வடிவு தமதுஆம் கொள்கை அறிவொண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர், மீயச் சூராரே.

         பொழிப்புரை :திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர். யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப்படைப்பவர்.


பாடல் எண் : 8
புலியின் உரிதோல் ஆடை, பூசும் பொடிநீற்றர்,
ஒலிகொள் புனல்ஓர் சடைமேல் கரந்தார், உமைஅஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.

         பொழிப்புரை :திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர்.


பாடல் எண் : 9
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்,
போதில் அவனும் மாலும் தொழப்பொங்கு எரிஆனார்,
கோதி வரிவண்டு அறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.

         பொழிப்புரை :வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர்: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர்.


பாடல் எண் : 10
கண்டார் நாணும் படியார், கலிங்கம் உடைபட்டைக்
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த கொள்கையார்
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.

         பொழிப்புரை :கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.


பாடல் எண் : 11
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர்ஐந்து மொழிந்து, உள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே.

         பொழிப்புரை :பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...