திருச்செங்கோடு - 0385. கலக்கும் கோதுஅற

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கலக்கும் கோது (திருச்செங்கோடு)

முருகா!
அடியேன் திருவடி ஞானம் பெற ஆசை வைத்தேன்,
ஆனாலும் என் வினை தடுக்கிறது. வினை தீர்த்து ஆள்வாய்.


தனத்தந் தானன தனத்தந் தானன
     தனத்தந் தானன ...... தனதான


கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
     கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே

கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
     கடைக்கண் பார்வையி ...... லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
     விருப்பஞ் சாலவு ...... முடையேனான்

வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
     விடற்கஞ் சேலென ...... அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
     அறுக்குங் கூரிய ...... வடிவேலா

அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
     யடுக்கும் போதக ...... முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
     திருச்செங் கோபுர ...... வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
     திருச்செங் கோடுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய
     கருப்பம் சாறு எனும் ...... மொழியாலே,

கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள்
     கடைக்கண் பார்வையில் ...... அழியாதே,

விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற
     விருப்பம் சாலவும் ...... உடையேன்நான்.

வினைக் கொண்டே மனம் நினைக்குந் தீமையை
     விடற்கு அஞ்சேல் என ...... அருள்வாயே.

அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை
     அறுக்கும் கூரிய ...... வடிவேலா!

அழைத்து உன் சீரிய கழல் செந் தாமரை
     அடுக்கும் போதகம் ...... உடையோராம்

சிலர்க்கு, ன்றே கதி பலிக்கும் தேசிக!
     திருச்செங் கோபுர ...... வயலூரா!

திதிக்கும் பார்வயின் மதிப்பு உண்டாகிய
     திருச்செங்கோடு உறை ...... பெருமாளே.


பதவுரை

     அலைக்கும் தானவர் குலத்து --- தேவர் முதலிய சாதுக்களை அலைத்து வருத்திய அசுரர்களின் குலத்துவந்த,

     சேனையை அறுக்கும் --- சேனைக் கூட்டங்களை அறுத்த,

     கூரிய வடிவேலா --- கூர்மை பொருந்திய வடிவேலவரே!

     அழைத்து --- அன்புடன் அழைத்து!

     உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் --- உமது சிறந்த செந்தாமரை போன்ற திருவடிகளைப் பற்றியுள்ள,

     போதகம் உடையோராம் --- ஞானத்தையுடையவர்களாகிய,

     சிலர்க்கு --- சிலருக்கு,

     அன்றே கதி பலிக்கும் --- அப்பொழுதே வீடு பேற்றினைத் தந்தருளும்,

     தேசிக --- குருமூர்த்தியே!

     திருச் செம்கோபுர வயலூரா --- அழகும் செவ்வையும் உடைய கோபுரம் அமைந்த வயலூர் ஆண்டவரே!

     திதிக்கும் பார்வையின் --- தேவரீர் காத்தருளும் இந்த பூமியிடத்தே,

     மதிப்பு உண்டாகிய --- மதிப்பு ஓங்கியுள்ள,

     திருச்செங்கோடு உறை --- திருச்செங்கோட்டில் வாழ்கின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     கலக்கும் கோது அற --- கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க,

     வடிக்கும் சீரிய கருப்பம் சாறு எனும் மொழியாலே --- வடித்தெடுத்த சிறந்த கரும்பின் சாறு போன்ற மொழியினால்,

     கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் --- உள்ளத்தையும் பார்வையையும் உருக்குகின்ற, பாவிகளாகிய பொது மாதர்களின்,

     கடைக் கண் பார்வையில் அழியாதே --- கடைக்கண் பார்வையினால் அடியேன் அழியாதவாறு,

     விலக்கும் போதகம் --- அறியாமையை விலக்கவல்ல ஞானோபதேசத்தை,

     எனக்கு என்றே பெற --- அடியேனுக்கு என்றே பெறுமாறு,

     விருப்பம் சாலவும் உடையேனான் --- மிகவும் அன்பு கொண்டுள்ள அடியேன்,

     வினை கொண்டே --- ஊழ்வினையின் பயனாக,

     மனம் நினைக்கும் தீமையை விடற்கு --- மனதில் தீயகுணங்களை விட்டு உய்யும் பொருட்டு,

     அஞ்சேல் என அருள்வாயே --- அஞ்சேல் என்று கூறி என்னைக் காத்தருளுவீராக.

  
பொழிப்புரை

         தேவர்கள் முதலிய நல்லோர்கள் அலைக்கழித்த அசுர குலுத்துச் சேனைகளை அழித்த கூரிய வடிவேலவரே!

உமது செந்தாமரை போன்ற திருவடியைச் சார்ந்து சிவஞானமுடைய சிலரை அழைத்து அப்பொழுதே முத்தி நலத்தை வழங்கியருளும் குருநாதரே!

அழகிய சிறந்த கோபுரம் விளங்கும் வயலூர் அரசே! தேவரீர் காத்தளிக்கும் இப்பூமியில் மதிப்பு மிகுந்த திருச்செங்கோட்டில் வாழும் பெருமித முடையவரே!

         கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க, வடித்து எடுத்த சிறந்த கருப்பஞ்சாறு போன்ற இனிய மொழியால், உள்ளத்தையும், பார்வையையும் உருக்குகின்ற பாவிகளாகிய பொதுமாதர்களின் கடைக்கண் பார்வையினால் அடியேன் அழியாதபடி, அறியாமையை விலக்கும் ஞானோபதேசத்தை, “அடியேனுக் கென்றே பெறும்படி, மிகவும் விருப்பங்கொண்டுள்ள அடியேன், ஊழ் வினையினால் மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் படி அஞ்சேல்” என்ற கூறி அருள்புரிவீராக


விரிவுரை

கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறெனு மொழியாலே ---

கோது முதலிய குற்றம் அகன்ற கருப்பஞ் சாறுபோல இனிக்க இனிக்கப் பொதுமாதர்கள் பேசுவார்கள். அவ்வாறு பேசி ஆடவர்களின் உள்ளத்தையும் உணர்வையும் நீராக உருக்கி விடுவார்கள்.

போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேனான் ---

அருணகிரிநாதர் யாரும் பெறாத ஞானத்தையும், வாக்கு வன்மையையும் பெறவேண்டும் என்ற விருப்பங்கொண்டிருந்தார். “பிறருக்குக் கிட்டாத வகையில் சிறப்பாக நான்ஞானம் பெற்று விளங்க வேண்டும்” என்று விரும்புகின்றார்.

எனக்கு என்ற அப் பொருள் தங்க
 தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்”      --- (பருத்தந்தம்) திருப்புகழ்

சீரும் திருவும் பொலியச் சிவலோக
   நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற்றேன்,பெற்றது
   ஆர்பெறு வார் உலகில்,
ஊரும் உலகும் கழற உழறி
   உமை மணவாளனுக்கு ஆள்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
   பல்லாண்டு கூறுதுமே.                --- திருப்பல்லாண்டு.
                                                                            
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்?
     வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும்
     கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த
     திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய்,
     பாசுபதா! பரஞ்சுடரே! .                   --- சுந்தரர்.


அழைத்து உன் சீரிய கழற் செந்தாமரை அடுக்கும் போதம் உடையோராம் சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக ---

முருகனுடைய திருவடிகளைச் சார்ந்து சிவஞான போதகம் உடைய அடியார்களை, முருகன் தானே வலிய அழைத்துத் தாமதம் இன்றி அப்பொழுதே அருள் வழங்குவான். பாலிக்கும் என்ற சொல் பலிக்கும் என வந்தது.

அடியவர் இச்சையில் எவையெவை உற்றன
 அவை தருவித்தருள் பெருமாளே”            --- (கலகலெனச்சிலை) திருப்புகழ்.

கூப்பிட்டு அருள் வழங்கும் அருளாளன் ஆறுமுகன்.

திருச்செங்கோபுர வயலூரா ---

வயலூரில் அழகிய கோபுரம் அருணகிரியார் காலத்திலேயே சிறந்திருந்தது.

திதிக்கும் பார்வையின் மதிப்புண்டாகிய திருச்செங்கோடு ---

திதிக்கும்-காத்தல், பார் வயின்-பூமியிடத்தே, முருகப் பெருமானால் காப்பற்றப்படுகின்ற இப்பூமியின் கண் மிகவும் மதிப்புடைய திருத்தலம் திருச்செங்கோடு என சுவாமிகள் தெரிவிக்கின்றார்கள். 

கருத்துரை

         திருச்செங்கோட்டு வேலா! மனமாசு அற அஞ்சேல் என்று கூறி ஆட்கொள்வீர்.


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...