கொடுங்குன்றம் - 0371. எதிர் பொருது
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

எதிர்பொருது (கொடுங்குன்றம்)

முருகா! 
உன் திருவடி மலரை ஒருபோதும் மறவேன்


தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன ...... தந்ததான.


எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
     குத்தித்தி றந்துமலை
யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி
     முத்துச்செ றிந்தவட
மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி
     னிற்கொத்து மங்குசநெ ......           ருங்குபாகர்

எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப
     தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு
     முட்கத்தி ரண்டிளகி
யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
     டைத்துச்சி னந்துபொரு ......            கொங்கையானை

பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
     யொக்கத்து வண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
     செக்கச்சி வந்தமுது
பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய
     முத்தத்து டன்கருணை ......           தந்துமேல்வீழ்

புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்
     தட்டுப்ப டுந்திமிர
புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய
     சட்டைக்கு ரம்பையழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
     னிர்த்தச்ச ரண்களைம ......            றந்திடேனே

திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
     தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத
     திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
     தக்கத்த குந்தகுர்த ......                     திந்திதீதோ

திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
     டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
     டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
     குக்குக்கு குங்குகுகு ......                    என்றுதாளம்

முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
     டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
     கத்திக்க ளும்பரவ
முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய
     மிக்கக்க வந்தநிரை ......                    தங்கியாட

முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர
     வுக்ரப்பெ ருங்குருதி
முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ
     டிக்கத்து ணிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி
     வெட்டிக்க ளம்பொருத ......            தம்பிரானே.

பதம் பிரித்தல்


எதிர் பொருது கவி, கடின கச்சுக்களும் பொருது,
     குத்தித் திறந்து, மலை
இவைகள் என அதி ம்ருகமதப் பட்டு, நின்று ஒழுகி,
     முத்துச் செறிந்த வடம்
எனும் நிகளம் அவைஅற உதைத்திட்டு, அணைந்து உகிரி-
     னில் கொத்தும் அங்குச நெ- ...... ருங்குபாகர்

எதிர்பரவ உரமிசை துகைத்து, கிடந்து உடல்
     பதைக்க கடிந்து, மிக
இரதிபதி மணிமவுலி எற்றி, த்ரி யம்பகனும்
     உட்கத் திரண்டு, ளகி,
இளைஞர் உயிர் கவளம்என மட்டித்து, அசைந்து, திர்
     புடைத்துச் சினந்து பொரு ......      கொங்கை யானை

பொதுவில் விலை இடும் மகளிர் பத்மக் கரம் தழுவி
     ஒக்கத் துவண்டு, மளி
புக, இணைய வரிபரவு நச்சுக் கருங்கயல்கள்
     செக்கச் சிவந்து, முது
பொதியும் மொழி பதற, அளகக் கற்றையும் குலைய,
     முத்தத்துடன் கருணை ......           தந்து, மேல்வீழ்

புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி, உயிர்
     தட்டுப்படும் திமிர
புணரி உததியில் மறுகி, மட்டற்ற இந்திரிய
     சட்டைக் குரம்பை அழி
பொழுதினிலும், அருள்முருக! சுத்தக் கொடுங்கிரியின்
     நிர்த்தச் சரண்களை ......               மறந்திடேனே.

திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
     தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத
     திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
     தக்கத்த குந்தகுர்த ......                     திந்திதீதோ

திகுடதிகு தொகுட தொகு திக்கட்டி கண்டிகட
     டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
     டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
     குக்குக்கு குங்குகுகு ......                    என்றுதாளம்

முதிர் திமிலை, கரடிகை, இடக்கை, கொடும் துடி,
     உடுக்கை, பெரும் பதலை,
முழவுபல மொகுமொகு என ஒத்தி, கொடும் பிரம
     கத்திக்களும் பரவ,
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய
     மிக்கக் கவந்த நிரை ......                   தங்கிஆட,

முதுகழுகு, கொடி, கருடன் ஒக்கத் திரண்டு வர,
     வுக்ரப் பெரும் குருதி
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு, அகண்டமும் வெ-
     டிக்க, துணிந்து, திரம்
முடுகி வரு நிசிசரரை முட்டிச் சிரம் திருகி
     வெட்டிக் களம் பொருத ......           தம்பிரானே.


பதவுரை

     திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி தத்தத்த தந்ததத தெதததெந தெதததெத தெத்தெத்ததெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகெண கெண ஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்தி தீதோ திகுடதிகு தொகுட திகுதொகுட தொகு திக்கட்டி கண்டிகட டக்கட்டகண்டகட டுண்டுட்டு டுண்டுடுடு திகுகுதிகு திகுகுகுகு திக்குத்திந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம் --- திதிதிதி.....குங்குகுகு என்ற ஒலியுடன் தாளங்கள்,

     முதிர் திமிலை --- முற்பட்டொலிக்குந் திமிலை,

     கரடிகை --- கரடிகை,

     இடக்கை --- இடக்கை,

     கொடுந்துடி உடுக்கை --- வளைந்த துடியென்ற உடுக்கை,

     பெரும்பதலை --- பெரிய பதலை,

     முழவு பல மொகு மொகு என ஒத்தி --- முரசு முதலிய வாத்தியங்கள் மொகு மொகு என்று ஒலிக்கவும்,

     கொடும் பிரமகத்திகளும் பரவ --- கொடிய கொலைத் தொழிலால் ஏற்பட்ட பேயுருவங்கள் போற்றவும்,

     முகடு புகும் --- மேலே உச்சியில் புகும்,

     வெகு கொடிகள் --- பல காக்கைகள்,

     பக்கத்து எழுந்து அலைய --- பக்கங்களிலே பறந்து எழுந்து அலையவும்,

     மிக்க கவந்த நிரை தங்கி ஆட --- அதிகமாக தலையற்ற உடல்களின் வரிசை அங்கங்கு தங்கி ஆடவும்,

     முது கழுகு --- பழைய கழுகுகள்,

     கொடி --- காகங்கள்,

     கருடன் --- கருடன்கள்,

     ஒக்கத் திரண்டு வர --- இவை யாவும் ஒன்றுகூடித் திரண்டு வரவும்,

     உக்ர பெரும் குருதி முழுகி எழும் --- உக்கிரத்துடன் பெரிய உதிர வெள்ளத்தில் முழுகி எழுகின்ற,

     பயிரவர் நடித்திட்டு --- பயிரவர் நடனஞ்செய்யும்.

     அகண்டமும் வெடிக்க --- அண்டங்கள் எல்லாம் வெடிபடவும்,

     அதிர --- பூமி அதிரவும்,

     துணிந்து, முடுகி வரு --- துணிவுடன் முடுகி வந்த,

     நிசிசரரை முட்டி சிரம் திருகி --- அசுரர்களின் தலைகளைத் தாக்கித் திருகி,

     வெட்டி களம் பொருத --- வெட்டிப் போர்க்களத்தில் போர் புரிந்த,

     தம்பிரானே --- தனிப்பெருந்தவைரே!

       எதிர் பொருது கவி --- எதிரில் போர் புரிவதுபோல் மூடப்பட்டுள்ள,

     கடின கச்சுக்களும் பொருது --- கடினமான இரவிக்கையுடன் போர் செய்து,

     குத்தி திறந்து --- அதைக்குத்தித் திறந்து கொண்டு,

     மலை இவை என வதி --- மலையே இவை என்று கூறும்படி இருக்கின்றவனவும்,

      ம்ருகமதம் பட்டு நின்று ஒழுகி --- கஸ்தூரி பூசப்பட்டு அதில் நின்று ஒழுகவும்,

     முத்து செறிந்த வடம் எனும் நிகளம் அவை அற --- முத்து நிறைந்த மாலையாகிய சங்கிலிகள் இற்றுப் போகும்படி,

     உதைத்திட்டு அணைந்து --- இடித்து அணைந்து,

     கொத்தும் பாகர் --- அங்குசத்துடன் நெருங்குகின்ற பாகர்களாகிய காமுகர்கள்,

     எதிர் பரவ --- எதிரில் நின்று போற்ற,

     உரமிசை துகைத்து கிடந்து --- மார்பை மிதித்து உழக்கிக் கிடந்து,

     உடல் பதைக்க கடிந்து --- கண்டவர்களின் உடல் பதைக்கும்படி அடக்கி,

     மிக இரதிபதி --- நன்றாக இரதிதேவியின் கணவனாகிய மன்மதனுடைய,

     மணி மவுலி எற்றி --- மணி மகுடத்தை மோதியும்,

     த்ரியம்பகனும் உட்க --- முக்கண்ணனும் அஞ்சும்படி,

     திரண்டு இளகி --- பருத்தும் இளகியும்,

     இளைஞர் உயிர் கவளம் என --- இளைஞர்களின் உயிரையே உண்ணுங்க கவளமாகக் கொண்டும்,

     மட்டித்து அசைந்து --- வட்ட வடிவுடன் நின்று அசைந்தும்,

     எதிர் புடைத்து  --- முன்னே பருத்தும்,

     சினந்து பொரு --- கோபித்துப் போர்புரிகின்ற,

     கொங்கை யானை --- யானை போன்ற கொங்கைகளை,

     பொதுவில் விலை இடும் மகளிர் --- பொதுவான இடத்தில் நின்று விலைக்கு விற்கும் மாதர்களுடைய,

     பத்ம கரம் தழுவி --- தாமரை போன்ற கரங்களைத் தழுவி,

     ஒக்க துவண்டு --- ஒரு சேர நெகிழ்ந்து,

     அமளி புக இணைய --- படுக்கையில் சென்று சேர,

     வரி பரவு --- வரி பரந்துள்ள,

     நச்சு கரும் கயல்கள் --- நச்சுத்தன்மையுள்ள கயல் மீன் போன்ற கண்கள்,

     செக்க சிவந்து --- நன்கு சிவக்கவும்,

     அமுது பொதியும் மொழி பதற --- அமுதம் கொண்ட சொற்கள் குழறவும்,

     அளக கற்றையும் குலைய --- கூந்தற்கட்டு குலைந்து அவிழவும்,

     முத்துத்து உடன் --- முத்தமிடுவதுடன்,

     கருணை தந்து மேல் வீழ் --- அன்பு செய்து மேலே விழுகின்ற,

     புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி --- புதுமையான இன்பத்தைத் தருகின்ற புணர்ச்சி வலையில் அகப்பட்டு,

     உயிர் தட்டுபடும் --- உயிர் தடைப்பட்டு,

     திமிர புணரி உததியில் மறுகி  --- இருண்ட ஆசைப் பெருங்கடலில் பெருங்கடலில் சுழன்று,

     மட்டு அற்ற --- அளவில்லாத,

     இந்திரிய சட்டைக் குரம்பை --- இந்திரியந் தங்கும் சட்டையாகிய இந்த உடல்,

     அழி பொழுதினிலும் --- அழிகின்ற போதிலும்,

     அருள் முருக --- அருள்பாலிக்கும் முருக வேளே!

     சுத்த கொடுங்கிரியில் --- தூய கொடுங்குன்றத்தில்,

     நிர்த்த சரண்களை --- எனக்கு நீர் காட்சி அளித்துத் திருநடனஞ்செய்த திருவடிகளை,

     மறந்திடேனே --- ஒருபோதும் மறக்கமாட்டேன்.
  
பொழிப்புரை

     திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத தெதததெத தெதததெ தெந்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த தந்தகுர்த திந்திதீதோ திகுடதிகு தொகுட தொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட டிடிடுடுடுடு டுண்டுடுடு திகுகுதிகு திகுகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்குகுங்குகுகு என்று தாள ஒத்துடன், முற்பட்ட திமிலை, கரடிகை இடக்கை, வளைந்த துடியாகிய உடுக்கை, பெரிய தபலை பேரிகை முதலிய வாத்தியங்கள் பல மொகுமொகு என்று ஒலிக்கவும், கொடிய பிரமகத்திப் பேய்கள் போற்றவும், மேலே உச்சியில் பறக்கும் கொடிகள் பக்கத்தில் பறந்து அலையவும், அதிகமாக கவந்தங்களின் வரிசை அங்கங்கே தங்கியாடவும், பழைய கழுகுகளும், காக்கைகளும், கருடன்களும் ஒன்றுகூடி வரவும், உக்கிரத்துடன் பெரிய உதிர வெள்ளத்தில் முழுகி ஒழுகின்ற பயிரவர்கள் நடனஞ்செய்யவும், உலகம் யாவும் வெடி படவும், பூமி அதிரத் துணிந்து வந்த அசுரர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களின் தலைகளைத் திருகியும் வெட்டியும் போரில் அமர் செய்த தனிப் பெருந்தலைவரே!

            எதிர்த்துப் போர் புரிவது போல் (கவசம்போல்) மூடப்பட்டுள்ள வலிய இரவிக்கையுடன் போர் புரிந்து, அதைக்குத்தித் திறந்து, மலையே இவை என்று இருக்கின்றனவும் கஸ்தூரி ஒழுகவும், முத்துமணிகளாலாய மாலையாகிய சங்கிலிகள் இற்றுப்போகும் படி இடித்து, நகங்களாகிய அங்குசத்துடன் நெருங்குகின்ற பாகர்களாகிய இளைஞர்கள் எதிர் நின்று புகழவும், மார்பை மிதித்து உழக்கிக் கிடந்தும், கண்டோர்களின் உடல் பதைக்கும்படி அடக்கியும், இரதியின் கணவனாகிய மன்மதனுடைய மணிமகுடத்தை மோதியும், முக்கண்ணரும் அஞ்சும் படிப் பருத்தும் நெகிழ்ந்தும், இளைஞரின் உயிராகிய கவளத்தை உண்பதும், வட்ட வடிவுடன் நின்று அசைந்து முன்னே பருத்தும் பொருதற்கு உற்றனவும் ஆகிய யானை போன்ற கொங்கைகளை, பொதுவில் நின்று விலைக்கு விற்கும் மாதர்களுடைய தாமரை மலர் போன்ற கரங்களைத் தழுவி, ஒருசேர நெகிழ்ந்து, படுக்கையில் சேர்ந்து, வரிபரந்துள்ள நச்சுக்கண்கள் சிவக்கவும், அமுதம் போன்ற மொழிகள் குழறவும், கூந்தல் அவிழவும், முத்தந் தந்து அன்புடன் மேல் வீழ்ந்து, புதுமையைத் தரும் புணர்ச்சி வலையிற்பட்டு உயிர் தடைப்பட்டு ஆசையாகிய இருட்கடலில் துன்புற்று, இந்திரியும் தங்கும் இந்த உடம்பாகிய கூடு அழிந்து போகும் பொழுதிலும், அருள் பாலிக்கும் முருகவேளே! தூய கொடுங்குன்றத்தில் அடியேனுக்குக் காட்டி அருளிய திருநடனத் திருவடியை அடியேன் மறவேன்.
   
விரிவுரை

இந்தத் திருப்புகழின் முற்பகுதியில் மாதரின் தனத்தை யானையாக உருவம் புரிகின்றார்.

யானையின் முகபடாம் இரவிக்கை என்றும், கஸ்தூரி மதம் ஒழுகுவது என்றும், முத்துமாலையான சங்கிலிகளை அறுப்பது என்றும், இளைஞர்கள் அதை அடக்கும் பாகர்கள் என்றும், அவர்களின் கை நகம் அங்குசம் என்றும், இளைஞரின் உயிர் யானை உண்ணும் கவளம் என்றும் சமர்த்தாகக் கூறுகின்றார்.

அழி பொழுதினிலும் அருள் முருக, சுத்தக் கொடுங்கிரியில் நிர்த்தச் சரண்களை மறந்திடேனே ---

அருணகிரிநாதருக்கு கொடுங்குன்றத்தில், திருநடன தரிசனந் தந்தருளினார். அந்த நடன கோலத்தை உயிர் போம் பொழுதும் மறவேன்” என்று சுவாமிகள் கூறுகின்றார்கள்.

கருத்துரை

கொடுங்குன்றக் குமரா! உன் திருநடனப் பதமலரை ஒரு போதும் மறவேன்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...