குன்றக்குடி - 0377. நேச ஆசார





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நேசா சாரா (குன்றக்குடி)

முருகா! மாதர் மயலில் ஆழாமல் ஆண்டு அருள்


தானா தானா தந்தன தத்தன
     தானா தானா தந்தன தத்தன
          தானா தானா தந்தன தத்தன ...... தனதான


நேசா சாரா டம்பர மட்டைகள்
     பேசா தேயே சுங்கள மட்டைகள்
          நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே

நீயே நானே யென்றொரு சத்தியம்
     வாய்கூ சாதோ துங்க படத்திகள்
          நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும்

ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
     மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
          காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம்

ஆகா தாவே சந்தரு திப்பொழு
     தோகோ வாவா வென்று பகட்டிக
          ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ

பேசா தேபோய் நின்றுறி யிற்றயிர்
     வாயா வாவா வென்று குடித்தருள்
          பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது

பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
     வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
          பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ......மருகோனே

மாசூ டாடா டும்பகை யைப்பகை
     சூரா ளோடே வன்செரு வைச்செறு
          மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே

வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
     தேனா றேசூழ் துங்க மலைப்பதி
          மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நேச ஆசாரா ஆடம்பர மட்டைகள்,
     பேசாதே ஏசும் களம் அட்டைகள்,
          நீச ஆளோடு ஏயும் பழகிக் கவர் ...... பொருளாலே

நீயே நானே என்று ஒரு சத்தியம்
     வாய் கூசாது ஓதும் கபடத்திகள்,
          நேராலே தான் நின்று பிலுக்கிகள், ...... எவர்மேலும்

ஆசா பாசா தொந்தரை இட்டு அவர்
     மேல் வீழ்வார்பால் சண்டிகள், கட்டுஅழகு
          ஆயே மீதோல் எங்கும் மினுக்கிகள், ...... "வெகுமோகம்

ஆகாது, ஆவேசம் தருது, இப்பொழுது
     ஓகோ வாவா" என்று பகட்டிகள்,
          ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் ...... உறவுஆமோ?

பேசாதே போய் நின்று, உறியில் தயிர்
     வாயா வாவா என்று குடித்து, அருள்
          பேராலே நீள் கஞ்சன் விடுத்து எதிர் ...... வருதூது,

பேழ்வாய் வேதாளம் பகடைப் பகு-
     வாய் நீள் மானாளும், சரளத்தொடு
          பேய் ஆனாள் போர் வென்று, திர் இட்டவன் ......மருகோனே!

மாசு ஊடாடாடும் பகையைப் பகை
     சூர் ஆளோடே வன்செருவைச் செறு
          மாசூரா! பார் எங்கும் அருள்பொலி ...... முருகோனே!

வான்நாடு, ழ்நாடும் புகழ் பெற்றிடு
     தேன் ஆறே சூழ் துங்க மலைப்பதி
          மாயூரா! வாழ் குன்றை தழைத்து அருள் ...... பெருமாளே.


பதவுரை

       பேசாதே போய் நின்று --- சத்தம் உண்டாகா வண்ணம் மௌனமாகப் போய் ஆய்ச்சியர்களின் வீடுகளில் நின்று,

     உறியில் தயிர் வாய் ஆஆஆ என்று குடித்து அருள் ---- உறியில் வைத்திருந்த தயிரை எடுத்து, வாயில் அள்ளி ஆஆஆ என்று அவசமாகக் குடித்தருளியும்,

     பேராலே நீள் கஞ்சன் விடுத்து எதிர்வரு தூது --- எங்கும் புய பலத்தால் புகழ்பெற்ற கம்சன் கண்ணனைக் கொல்லுமாறு விடுக்க தூதுபோல் எதிர்வந்த,

     பேழ்வாய் வேதாளம் --- பெரிய வாயை உடையவளும், பூதம் போன்ற பெரிய சரீரத்தை உடையவளும்,

     பகடைப் பகுவாய் --- இடம்பமாகப் பேசிக் கொண்டு வந்த அகன்றவாயை உடையவளும்,

     நீள் மானாளும் --- நீண்ட பெண்ணுருவத்தைக் கொண்டவளும்,

     சரளத்தொடு பேய் ஆனாள் --- தடையின்றி வந்தவளுமாகிய பூதகியின்,

     போர் வென்று எதிர் இட்டவன் --- போரை வெற்றி பெற்றவருமாகிய திருமாலினது,

     மருகோனே - திருமருகரே!

       மாசு ஊடாடும் --- குற்றத்துடன் கலந்து பழகியவனும்,

     பகையைப்பகை --- பகைவரைப் பகைப்பவனுமாகிய,

     சூர் ஆளோடே --- சூரபன்மனோடு,

     வன் செருவைச் செறு --- பொருது வலிபெற்ற போரை ஒழித்த,

     மா சூரா --- பெரிய சூரரே!

       பார் எங்கும் அருள்பொலி முருகோனே --- உலக முழுவதும் திருவருள் புரிந்து பொலிகின்ற முருகக் கடவுளே,

       வான் நாடு, ஏழ் நாடு புகழ் பெற்றிடு --- வானவர் உலகமும், சத்த தீவுகளும் புகழ்ந்து பேசும் பெருமை பெற்றுள்ளதும்,

     தேன் ஆறு சூழ் --- தேனாறு சூழப்பெற்றதும்,

     துங்க மலை பதி --- தூய மலைத்தலமானதும் ஆகிய,

     மாயூரா --- மயூரகிரி என்னும் தலத்தினரே!

       வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே --- வளம் வாழ்கின்ற குன்றக்குடி என்னும் அத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

       நேச ஆசார ஆடம்பர மட்டைகள் --- பிறர் கண்டு நேசிக்கும் பொருட்டு ஆசாரம்போல் நடிக்கும் ஆடம்பரமான பயனற்றவர்களும்,

     பேசாதே ஏசும் களம் அட்டைகள் --- வாய்ப்பேச்சு இல்லாமலேயே கையாலும் கண்ணாலும் ஜாடை காட்டி வையும் அட்டைபோலும் பிடித்துக் கொள்ளுபவர்களும்,

     நீச ஆளோடேயும்  --- நீச குணம் உடையோருடனும் பழகி,

     கவர் பெருளாலே --- அவரிடமிருந்து பறிக்கும் பொருள் பற்றி,

     நீயே நானே என்று ஒரு சத்தியம் --- “நீயே நான்; நானே நீ” என்று ஒரு சத்தியத்தை

     வாய் கூசாது ஓதும் கபடத்திகள் --- வாய்கூசாமல் சொல்லும் கபடமுள்ளவர்களும்,

     நேராலே தான் நின்று பிலுக்கிகள் - நேரில் மட்டும் ஒய்யாரமாக நின்று பகட்டுபவர்களும்,

     எவர் மேலும் ஆசாபாசா தொந்தரை இட்டு --- எத்தகையோரிடத்தும்,  ஆசைபாசம், வைத்தவர்போல் நடித்து தொந்தரை செய்து,

     அவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் --- அவர்கள்மேல் மயங்கி வீழ்ந்து தழுவுபவர்களிடம் கொடுமை செய்பவர்களும்,

     கட்டழகாலே தோல் ஏங்கு மினுக்கிகள் - நல்ல அழகுடன் மேல்தோலை மினுக்குபவர்களும்,

     வெகு மோகம் --- உன்மீது மிகவும் மோகங்கொண்டு உள்ளேன்,

     ஆகாத ஆவேசம் தருது  --- சகிக்க முடியாத ஆவேசம் வருகிறது.

     இப்பொழுது ஓகோ வாவா என்று பகட்டிகள் --- இத் ததியில் ஓகோ விரைவில் வந்து என்னைச் சேர் என்று பகட்டு செய்பவரும்,

     ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ --- தகுதியற்ற மோகத்தை யுடைய வம்பு செய்பவர்களுமாகிய விலைமகளிருடைய சம்பந்தம் தக்கதாமோ? (ஆகாது).

பொழிப்புரை

     மௌனமாகப் போய் கோபிகைகள் வீட்டிலே நின்று உறியில் உள்ள தயிரை ஆஆஆ என்று வாய் நிறைய உண்டு அருளினவரும், புயவலியாற் புகழ்பெற்ற கம்சன் (கண்ணனை) கொல்லுமாறு விடுக்க வந்தவளும், இடம்பமாகப் பேசும் பெரிய அகன்ற வாயையுடையவளும், பெண்போன்று தடையின்றி வந்தவளுமான பூதகி என்ற பேயைக் கொன்றவருமாகிய நாராயண மூர்த்தியினுடைய திருமருகரே!

       குற்றத்தோடு பழகுபவனும் பகைவரைப் பகைப்பவனுமாகிய சூரபன்மனுடன் பொருதுவலிய போரை யொழித்த பெரிய சூரரே!

       உலகமெங்கணு நின்று அருள் புரிந்து விளங்குகின்ற முருகக்கடவுளே!

       வானுலகிலும் ஏழுதீவுகளிலும் புகழ்பெற்றதும் தேனாறு பாயுந் திருவுடையதும் தூய மலைத் தலமுமாகிய மயூரகிரியினரே!

       வாழ்வுக்கிடமான அக்குன்றக்குடி தழைக்குமாறு எழுந்தருளியுள்ள பெருமித முடையவரே!

       பிறர் நேசிக்குமாறு ஆசாரம்போல் நடிக்கும் ஆடம்பரத்தை உடைய பயனற்றவர்களும், வாய்திறவாமல் கையாலும் கண்ணாலும் ஜாடைகாட்டி வையும் விஷத்தை ஒத்து அட்டைபோல் ஒட்டிக் கொள்பவர்களும், நீச மனிதருடன் பழகிப் பொருளைக் கவரும் பொருட்டு, “நீயே தான்; நானே நீ” என்று வாய் கூசாமல் சத்தியஞ்செய்யும் கபட குணம் உடையவர்களும், நேரில் பட்டும் நின்று பகட்டுபவர்களும், எத்தகையோரிடத்தும் ஆசாபாசம் வைத்துத் தொந்தரை செய்து, தங்களின்மேல் மயங்கி வீழ்ந்து தழுவுவோர்பால் கொடுமை செய்பவர்களும், (காதல் கொண்டவரைக் கண்டு) “ஆகா! உம்மேல் மிகுந்த மோகங் கொண்டிருக்கின்றேன். என்னால் பொறுக்க முடியவில்லை; இப்பொழுது ஓகோ விரைவில் வந்து சேரும்” என்று பகட்டு செய்பவர்களுமாகிய தகுதியற்ற மோகத்தைச் செய்யும் விலைமாதர் உறவு தகுதி ஆகுமோ?(ஆகாது).

விரிவுரை

நேச ஆசார...................உறவாமோ ---

விலைமகளிரது மாயச் செயல்களை உரைக்குந் திறத்தை இதில் நன்கு காண்க. இதனைக் கண்டு உலகம் திருந்தி உய்க.

பேயானாள் ---

கண்ணபிரான் ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டில் யசோதையிடம் வளர்ந்து வர, மாயையால் அவர் தன்னைக் கொல்ல இருக்கும் தன்மையை உணர்ந்த கம்சன், பூதகி என்ற கொடிய ஓர் அரக்கியைக் கண்ணனைக் கொல்லுமாறு விடுத்தான். அவள் அரமடந்தை உருவெடுத்து உலகிலுள்ள குழந்தைகளை எல்லாம் நச்சுப் பாலூட்டிக் கொன்று கொண்டு, இறுதியில் ஆயர்பாடிக்கு வந்தாள். வந்தவள் நந்தகோபர் வீட்டில் நுழைந்து ஒரு புறம் விளையாடிக் கொண்டிருந்த கமலக்கண்ணனை எடுத்து, “கண்ணப்பா! என் முலையை உண்ணப்பா!” என்று முலை ஊட்டினள். அவள் வஞ்சனையை உணர்ந்த கண்ணன்,

அறிந்து நகை யாடிமுலை அங்கைகொடு பற்றி
மறங்குலவு வஞ்சமகள் மாமுலை மணிக்கண்
திறந்தொழுகு பாலினொடு செய்ய தளிரென்னப்
பிறங்குகனி வாய்முகில் பிழிந்துயிர் குடித்தான்.

பூதகி உயிர்துறந்து ஒரு பெரிய கரியமலைபோல் விழுந்தாள். பெருமான் முலையுண்ட புண்ணியத்தால் முத்திபெற்று உய்ந்தனள்

பார் எங்கும் அருட் பொலி முருகோனே ---

உலகமு ழுவதும் திருவருள் புரிந்து விளங்குகின்ற தெய்வமணி
திருவேலிறைவனேயாம். கலியுக வரதனாங் கந்தக் கடவுளைக் கருதினவர்க்கு கருதிய யாவுங் கைகூடும்.

குன்றை ---

இது குன்றக்குடி எனவும் மயூரகிரி எனவும் பெயர் பெறும். காரைக்குடிக்கு அருகில் உள்ளது. இங்கு சுவாமி ஆறு திருமுகங்களோடு விளங்குகின்ற காட்சி இரும்பு நெஞ்சையும் உருக்கும்.

கருத்துரை

திருமால்மருகரே! அருள் நலமிக்க முருகவேளே! குன்றக்குடி அமர்ந்த குமரகுருபர! விலைமகளிர் வலைப்படா வண்ணம் ஆண்டருள்வீர். 

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...