திருவீழிமிழலை - 2


3. 080   திருவீழிமிழலை    திருவிராகம்      பண் - சாதாரி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சீர்மருவு தேசினொடு தேசமலி
         செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றைஅணி தாழ்சடையி
         னான்அமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயம் உயர்ந்தவயல்
         சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை
         கவின்பெருகு வீழிநகரே.

         பொழிப்புரை : சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு, தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள் வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வெற்றிமிகும் பதியாவது, பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களும், மேகம் சூழ்ந்த வெண்மையான , செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 2
பட்டமுழவு இட்டபணி லத்தினொடு
         பன்மறைகள் ஓதுபணிநல்
சிட்டர்கள்ச யத்துதிகள் செய்யஅருள்
         செய்தழல்கொள் மேனியவன்ஊர்
மட்டுஉலவு செங்கமல வேலிவயல்
         செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுஉலவு தென்றல்விரை நாறுபதி
         வேதியர்கள் வீழிநகரே.

         பொழிப்புரை : கொட்டும் முழவின் ஓசையும் , ஊதும் சங்கின் ஒலியும் , பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும் , சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான் . அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும் , செந்நெல் பெருகும் வயல்வளமிக்கதும் , வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும், தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான திருவீழிநகர் என்னும் பதியாகும்.


பாடல் எண் : 3
மண்இழிசு ரர்க்குவள மிக்கபதி
         மற்றும்உள மன்னுயிர்களுக்கு
எண்இழிவுஇல் இன்பநிகழ்வு எய்தஎழில்
         ஆர்பொழில் இலங்குஅறுபதம்
பண்இழிவு இலாதவகை பாடமட
         மஞ்ஞைநடம் ஆடஅழகுஆர்
விண்இழி விமானம்உடை விண்ணவர்
         பிரான்மருவு வீழிநகரே.

         பொழிப்புரை : தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு வளமிக்க பதி , மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத் தரும் பதி , அழகிய சோலைகளில் வண்டுகள் பாட , இள மயில்கள் நடனமாட, அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும் விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிறப்புடைய திருவீழிமிழலை என்னும் தலமாகும்.


பாடல் எண் : 4
செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு
         நல்கலைதெ ரிந்தஅவரோடு
அந்தம்இல்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்
         செய்யஅமர் கின்றஅரன்ஊர்,
கொந்துஅலர்பொ ழில்பழன வேலிகுளிர்
         தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி
         ரும்புபதி வீழிநகரே.

         பொழிப்புரை : பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும் , தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும் , சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அறிஞர்களும், நற்குண, நற்செய்கையுடைய ஞானிகளும் அர்ச்சனைகள் செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும், குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும்.


பாடல் எண் : 5
பூதபதி ஆகியபு ராணமுனி
         புண்ணியநல் மாதைமருவிப்
பேதம்அது இலாதவகை பாகமிக
         வைத்தபெரு மானதுஇடமாம்
மாதவர்கள் அன்னமறை யாளர்கள்
         வளர்த்தமலி வேள்விஅதனால்
ஏதம்அது இலாதவகை இன்பம்அமர்
         கின்றஎழில் வீழிநகரே.

         பொழிப்புரை : நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக் கோலம் பூண்டவர் . அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும் , அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி , பிணி , வறுமை , மழையின்மை முதலிய தீங்கு நேராமலும் , உண்டி , நோயின்மை , செல்வம் , பருவ மழை முதலிய நன்மை நிகழவும் , மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும் .


பாடல் எண் : 6
மண்ணின்மறை யோர்மருவு வைதிகமும்
         மாதவமும் மற்றும்உலகத்து
எண்இல்பொரு ளாய்அவை படைத்த,இமை
         யோர்கள்பெரு மானதுஇடமாம்,
நண்ணிவரு நாவலர்கள் நாள்தொறும்
         வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்உலவு மாளிகை நெருங்கிவளர்
         நீள்புரிசை வீழிநகரே.

         பொழிப்புரை : இப்பூவுலகில் அந்தணர்கள் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும் , மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும் , மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும் , வானளாவிய மாளிகைகள் நிறைந்து செல்வம் வளர்வதும் , ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை ஆகும் .


பாடல் எண் : 7
மந்திரநன் மாமறையி னோடுவளர்
         வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தரவி சும்புஅணவி அற்புதம்
         எனப்படரும் ஆழிஇருள்வாய்,
மந்தரநன் மாளிகை நிலாவுமணி
         நீடுகதிர் விட்டஒளிபோய்
வெந்தழல் விளக்குஎன விரும்பினர்
         திருந்துபதி வீழிநகரே.

         பொழிப்புரை : வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திர மலையைப் போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும் . அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய் , மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம் திருவீழிமிழலை யாகும் .
  
 
பாடல் எண் : 8
ஆனவலி யில்தசமு கன்தலை
         அரங்க,அணி ஆழிவிரலால்
ஊன்அமர் உயர்ந்தகுரு திப்புனலில்
         வீழ்தர உணர்ந்தபரன்ஊர்,
தேன்அமர் திருந்துபொழில் செங்கனக
         மாளிகை திகழ்ந்தமதிளோடு
ஆனதிரு உற்றுவளர் அந்தணர்
         நிறைந்தஅணி வீழிநகரே.

         பொழிப்புரை : தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி , அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும் , செம்பொன் மாளிகைகளும் , உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும்.


பாடல் எண் : 9
ஏனஉரு ஆகிமண் இடந்தஇமை
         யோனும்,எழில் அன்னஉருவம்
ஆனவனும், ஆதியினோடு அந்தம்அறி
         யாதஅழல் மேனியவன்ஊர்,
வான்அணவு மாமதில் மருங்கலர்
         நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனல்அமர்வு எய்திட விளங்குஒளியின்
         மிக்கபுகழ் வீழிநகரே.

         பொழிப்புரை : பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய திருமாலும் , அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத் தன் முடியையும் , அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது , வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த , வளமிக்க சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க , விளங்குகின்ற தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும் .


பாடல் எண் : 10
குண்டுஅமணர் ஆகிஒரு கோலமிகு
         பீலியொடு குண்டிகைபிடித்து,
எண்திசையும் இல்லதுஒரு தெய்வம்உளது
         என்பர்அது என்னபொருளாம்,
பண்டைஅயன் அன்னவர்கள் பாவனை
         விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்தரள வாள்நகைநல் மாதர்கள்
         விளங்கும்எழில் வீழிநகரே.

         பொழிப்புரை : சமணர்கள் முரட்டுத்தன்மை உடையவராய் , அழகிய மயிற்பீலியும் , குண்டிகையும் ஏந்தி , எட்டுத் திக்கிலும் மிகுந்த ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது ? வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , வெண்ணிற முத்துப்போன்ற ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய திருவீழிமிழலையாகும் .


பாடல் எண் : 11
மத்தமலி கொன்றைவளர் வார்சடையில்
         வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன்
         விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானம்அமர் செல்வமலி
         கின்றசிவ லோகம்மருவி
அத்தகு குணத்தவர்கள் ஆகிஅனு
         போகமொடு யோகம்அவரதே.

         பொழிப்புரை : பொன்னூமத்தை மலரும் , கொன்றைமலரும் , நீண்ட சடையிலே அணிந்த பெருமானும் , திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி , வெங்குரு என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேத வல்லுநனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓத வல்லவர்கள் , அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை அடைந்து , சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர் .

                                    திருச்சிற்றம்பலம்

3. 085  திருவீழிமிழலை     திருவிராகம்     பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மட்டுஒளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
பட்டுஒளி மணிஅல்குல் உமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடிஅரவு உடன்உறை முடிமிசை
விட்டுஒளி உதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.

         பொழிப்புரை : மலர் விரிய நறுமணம் கமழும், நெளிந்த கூந்தலை யுடையளாய், மடமைப் பண்புடைய பெண்ணானவளாய், பட்டாடையில் ஒளிமிக்க மேகலா பரணத்தை அணிந்தவளான உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான், சடைமுடியின்கண் கட்டப்பட்டு விளங்கும் பிரகாசிக்கின்ற கங்கைநீரோடு, கடிக்கும் பாம்புசேர வசிக்கின்ற சடைமுடியில் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும், தேய்ந்த கலைகளையுடைய சந்திரனையும் அணிந்து வீற்றிருந்தருளும் பதி திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 2
எண்ணிற வரிவளை நெறிகுழல் எழின்மொழி இளமுலைப்
பெண்உறும் உடலினர், பெருகிய கடல்விட மிடறினர்,
கண்உறு நுதலினர், கடியதொர் விடையினர், கனலினர்,
விண்ணுறு பிறையணி சடையினர், பதிவிழி மிழலையே.

         பொழிப்புரை : சிவபெருமான், எண்ணற்ற வரிகளையுடைய வளையல்களையும், சுருண்ட கூந்தலையும் அழகிய மொழியையும், இளமுலைகளையும் உடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். பெருகித் தோன்றிய கடல் விடமுண்ட கண்டத்தினர். நெற்றிக் கண்ணையுடையவர். விரைந்து நடக்கும் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்பேந்திய கையினர். விண்ணில் திகழும் பிறைச்சந்திரனை அணிந்த சடையினர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி, திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.

   
பாடல் எண் : 3
மைத்தகு மதர்விழி மலைமகள் உருஒரு பாகமா
வைத்தவர், மதகரி உரிவைசெய் தவர்,தமை மருவினார்
தெத்தென இசைமுரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்,
வித்தக நகுதலை உடையவர் இடம்விழி மிழலையே.

         பொழிப்புரை : மை பூசிய அழகிய விழிகளையுடைய உமா தேவியை, சிவபெருமான் தம் உடம்பின் இடப்பாகமாக வைத்தவர். மதம் பிடித்த யானையின் தோலை உரித்தவர். தம்மை அடைந்தவர் தாளத்துடன் இசைபாடுகின்ற புகழையுடையவர். பாம்பை அணிந்தவர். அதிசயமான மண்டையோட்டைக் கொண்டவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும்.



பாடல் எண் : 4
செவ்அழல் எனநனி பெருகிய உருவினர், செறிதரு
கவ்வுஅழல் அரவினர், கதிர்முதிர் மழுவினர், தொழுஇலா
முவ்வழல் நிசிசரர் விறல்அவை அழிதர முதுமதிள்
வெவ்அழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.

         பொழிப்புரை : சிவபெருமான் செந்நிறமான அழல்போன்ற மேனியுடையவர் . நெருப்புப் போன்று விடமுடைய , கவ்வும் தன்மையுடைய பாம்பை அரையில் கச்சாக இறுக்கமாகக் கட்டியவர் . சுடர் விடும் மழுப்படை உடையவர் . தம்மைத் தொழாத , பகைமையுடைய , சினம் மிகுந்த மூன்று அசுரர்களின் வலிமை அழியுமாறு அவர்களின் மதில்களை எரியுண்ணும்படி மிகவும் கோபித்தவர் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
பைங்கணது ஒருபெரு மழலைவெள் ஏற்றினர், பலி எனா
எங்கணும் உழிதர்வர், இமையவர் தொழுதுஎழும் இயல்பினர்,
அங்கணர், அமரர்கள் அடியிணை தொழுதுஎழ, ஆரமா
வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.

         பொழிப்புரை : பசிய கண்களையும் , சிறு முழக்கத்தையுமுடைய பெரிய வெண்ணிற இடபத்தைச் சிவபெருமான் வாகனமாகக் கொண்டவர் . எல்லா இடங்களிலும் பிச்சை ஏற்றுத் திரிபவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையர் . தேவர்கள் தொழுது எழும் இயல்பினராகிய அடியவர்களாலும் தொழுது போற்றப்படுபவர் . கொடிய கண்ணையுடைய பாம்பை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
பொன்அன புரிதரு சடையினர், பொடியணி வடிவினர்,
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்,
தென்என இசைமுரல் சரிதையர், திகழ்தரு மார்பினில்
மின்என மிளிர்வதொர் அரவினர் பதிவிழி மிழலையே.

         பொழிப்புரை : இறைவன் பொன்போன்று ஒளிரும் முறுக்கேறிய சடைமுடி உடையவர் . திருவெண்ணீறு அணிந்த திருமேனியர் . தம்மை நினைந்து போற்றும் அடியவர்களின் வினைகளை வேரோடு களைந்து அருள்புரியும் ஒப்பற்றவர் . இனிய இசையுடன் போற்றப்படும் புகழையுடையவர் . அழகிய திருமார்பில் மின்னலைப் போல் ஒளிரும் பாம்பணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதி , திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
அக்கினொடு அரவுஅரை அணிதிகழ் ஒளியதொர் ஆமைபூண்டு,
இக்குஉக மலிதலை கலன்என இடுபலி ஏகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடும் இசைவதொர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

         பொழிப்புரை : சிவபெருமான் , அக்குப்பாசியோடு பாம்பையும் அரையில் அணிந்தவர் . ஒளிரும் ஆமையோட்டை மார்பில் பூண்டவர் . கரும்பின் சுவை போன்று இனிய மொழிகளைப் பேசி , தம் கையில் நீங்காது பொருந்திய மண்டையோடாகிய பாத்திரத்தில் இடப்படுகின்ற பிச்சையை ஏற்பவர் . கொக்கரை , குழல் , முழவு முதலான வாத்தியங்கள் இசைக்க , நிகழும் விழாக்களில் அடியார் செய்யும் சிறப்புக்களை ஏற்று மகிழும் பண்பினர் . தம்மினும் மிக்கவரில்லையாக மேம்பட்ட அப்பெருமான் வீற்றிருந்தருளுவது நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
பாதமொர் விரல்உற மலைஅடர் பலதலை நெரிதரப்
பூதமொடு அடியவர் புனைகழல் தொழுதுஎழு புகழினர்
ஓதமொடு ஒலிதிரை படுகடல் விடம்உடை மிடறினர்
வேதமொடு உறுதொழில் மதியவர் பதிவிழி மிழலையே.

         பொழிப்புரை : தம் பாதத்திலுள்ள ஒரு விரலை ஊன்றி , கயிலை மலையின்கீழ் இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படிச் செய்தவர் . பூதகணங்களும் அடியவர்களும் தம்முடைய அழகிய திருவடிகளைத் தொழுது போற்றத்தக்க புகழையுடையவர் . ஆரவாரத்தோடு ஒலிக்கின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர் . அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , வேதம் ஓதுதலுடன் , தமக்குரிய ஆறு தொழில்களையும் செய்கின்ற அறிஞர்களாகிய அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
நீர்அணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்
நாரணன் எனஇவர் இருவரும் நறுமலர் அடிமுடி
ஓர்உணர் வினர்செலல் உறல்அரும் உருவினொடு ஒளிதிகழ்
வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.

         பொழிப்புரை : நீரில் விளங்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் , நிறைந்த நீருடைய கடலில் துயிலும் திருமாலும் ஆகிய இவர்கள் இருவரும் இறைவனின் நறுமணம் கமழும் மலர் போன்ற திருவடியையும் , மலரணிந்த திருமுடியையும் காண வேண்டும் என்ற ஒரே உணர்வினராய்ச் சென்றும் , காணற்கு அரியவராய்ப் பேரொளியாய் ஓங்கி நின்ற வீரம் பொருந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
இச்சையர் இனிதுஎன இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவுஎன உணர்விலர்,
மொச்சைய அமணரும் உடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சையர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.

         பொழிப்புரை : பிரமனின் மண்டையோட்டில் இடப்படுகின்ற பிச்சையை இனிதென ஏற்கும் விருப்பமுடைய சிவபெருமானின் பெருமையைச் சிறிதும் அறியும் உணர்வில்லாதவர்கள் சமணர்களும் , புத்தர்களும் ஆவர் . நீராடாமையால் துர்நாற்றத்தை உடைய சமணர்களும் , துவைத்து உடுத்தாமையால் முடைநாற்றமுடைய ஆடையைப் போர்ப்பவர்களாகிய புத்தர்களும் அழிவதற்குக் காரணமான வித்தை செய்பவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது நறுமணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
உன்னிய அருமறை ஒலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவர்உறை எழில்திகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர்இலர் வியன்உலகு உறுகதி பெறுவரே.

         பொழிப்புரை : இறைவன் அருளிச்செய்ததாகக் கருதப்படும் அருமறையின் ஒலியினை முறையாக இசையோடு பாடிப் போற்றும் அந்தணர்கள் வசிக்கின்றதும் , அழகிய சோலைகள் விளங்குவதுமான திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி , நிலைபெற்ற புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய இத் திருப்பதிகத்தை ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர் . மறுமையில் வீடுபேறடைவர் .
திருச்சிற்றம்பலம்


3. 098   திருவீழிமிழலை     திருமுக்கால்     பண் - சாதாரி
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வெண்மதி தவழ்மதில் மிழலை உளீர்சடை
ஒண்மதி அணி உடை யீரே,
ஒண்மதி அணி உடை யீர்,உமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.

         பொழிப்புரை : விண்ணிலுள்ள வெண்ணிறச் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்துள்ள மதில்களையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , சடையில் ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ளவருமான சிவபெருமானே ! ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ள உம்மை முதற்பொருளாக உணர்ந்து வழிபடுபவர்கள் சிவஞானம் பெறுவர் .


பாடல் எண் : 2
விதிவழி மறையவர் மிழலை உளீர்,நடம்
சதிவழி வருவதொர் சதிரே,
சதிவழி வருவதொர் சதிர்உடை யீர்,உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.

         பொழிப்புரை : வேதங்களில் விதிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் நிறைந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்றவரும் , தாளத்துக்கு ஏற்ப அழகாகத் திருநடனம் புரிபவருமான சிவபெருமானே ! தாளத்திற்கு ஏற்பத் திருநடனம் புரியும் பெருமையுடைய உம்மைச் சத்துவ குணமுடைய ஞானிகள் போற்றிப் புகழ்வது சிறப்பானது .


பாடல் எண் : 3
விரைமலி பொழில்அணி மிழலை உளீர்,ஒரு
வரைமிசை உறைவதும் வலதே,
வரைமிசை உறைவதொர் வலதுஉடை யீர்,உமை
உரைசெயும் அவைமறை ஒலியே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் பெருமையுடைய கயிலைமலையில் வாழ்வதும் சாமர்த்தியமே . கயிலைமலையில் வாழும் பெருமையுடைய உம்மைப் போற்றிப் புகழ்வன வேதங்கள் .


பாடல் எண் : 4
விட்டுஎழில் பெறுபுகழ் மிழலை உளீர்,கையில்
இட்டுஎழில் பெறுகிறது எரியே,
இட்டுஎழில் பெறுகிறது எரிஉடை யீர்,புரம்
அட்டது வரைசிலை யாலே.

         பொழிப்புரை : மிகுந்த அழகும் , புகழுமுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் கையில் ஏந்தப்பட்டதால் அழகுபெற்ற நெருப்பை உடையவருமான சிவ பெருமானே ! அழகிய நெருப்பேந்திய நீர் திரிபுரத்தை எரித்தது மேரு மலையை வில்லாக வளைத்தும் ( அக்கினியைக் கணையாக எய்தும் ) அல்லவா ?


பாடல் எண் : 5
வேல்நிகர் கண்ணியர் மிழலை உளீர், நல
பால்நிகர் உருவுடை யீரே,
பால்நிகர் உருவுடை யீர், உம துடன்உமை
தான்மிக வுறைவது தவமே.

         பொழிப்புரை : வேல் போன்று கூர்மையும் , ஒளியுமுடைய கண்களையுடைய பெண்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற , நல்ல பால் போன்ற நிறமுடைய சிவபெருமானே ! பால் போன்ற நிறமுடைய உம்முடன் உமாதேவி வீற்றிருந்தருளுவது தவச்சிறப்புடையதாகும் .


பாடல் எண் : 6
விரைமலி பொழில்அணி மிழலை உளீர்,செனி
நிரைஉற அணிவது நெறியே,
நிரைஉற அணிவதொர் நெறிஉடை யீர்,உமது
அரைஉற அணிவன அரவே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளியுள்ளவரும் , மண்டையோட்டால் ஆகிய மாலையை அணிந்துள்ள வருமான ஆளுகையையுடைய சிவபெருமானே ! அவ்வாறு தலை மாலை அணிந்து ஆளுகை உடைய நீவிர் உமது அரையில் கச்சாகக் கட்டியது அரவமே .


பாடல் எண் : 7
விசைஉறு புனல்வயல் மிழலையுளீர், அரவு
அசைஉற அணிவுஉடை யீரே,
அசைஉற அணிவுஉடை யீர், உமை அறிபவர்
நசைஉறு நாவினர் தாமே.

         பொழிப்புரை : வேகமாக ஓடிப் புனல் வற்றாத நீர்வளம் மிக்க வயல்களை உடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , அரவம் அசையும்படி ஆபரணமாக அணிந்துள்ளவருமான சிவபெருமானே! அவ்வாறு அசையும் அரவத்தை ஆபரணமாக அணிந்துள்ள உம்மை அறிபவர்களே , தாம் கூறுவனவற்றை அனைவரும் விரும்பிக் கேட்கும்வண்ணம் உண்மைப் பொருளை உபதேசிக்கும் வல்லுநர் ஆவர் .


பாடல் எண் : 8
விலங்கல்ஒண் மதிள்அணி மிழலை உளீர்,அன்றுஅவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே,
இலங்கைமன் இடர்கெடுத் தீர், உமை ஏத்துவார்
புலன்களை முனிவது பொருளே.

         பொழிப்புரை : மலைபோன்ற உறுதியான மதிலையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் , அன்று இலங்கை மன்னனான இராவணனைக் கயிலையின் கீழ் அடர்த்தபோது , அவன் உம்மைப் போற்றிச் சாமகானம் பாட அவன் துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய சிவபெருமானே ! அவ்வாறு இலங்கை மன்னனின் துன்பத்தைப் போக்கிய உம்மைப் போற்றி வணங்குபவர்களே புலன்களை அடக்கி ஆளும் வல்லமையுடையவர் .


பாடல் எண் : 9
வெற்புஅமர் பொழில்அணி மிழலை உளீர்,உமை
அற்புதன் அயன்அறி யானே,
அற்புதன் அயன்அறி யாவகை நின்றவ,
நற்பதம் அறிவது நயமே.

         பொழிப்புரை : மலைபோன்ற மாளிகைகளும் , சோலைகளுமுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நின்றவருமான சிவபெருமானே ! அவ்வாறு திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நின்ற உம் நல்ல திருவடிகளை இடையறாது நினைப்பதே மானிடப் பிறவி எய்தினோர் அடையும் பயனாகும் .


பாடல் எண் : 10
வித்தக மறையவர் மிழலை உளீர், அன்று
புத்தரொடு அமண்அழித் தீரே,
புத்தரொடு அமண்அழித் தீர், உமைப் போற்றுவார்
பத்திசெய் மனம்உடை யவரே.

         பொழிப்புரை : நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் வாழும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , புத்தமும் , சமணமும் வீழுமாறு செய்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு புத்தமும் , சமணமும் வீழ்ச்சியடையும்படி செய்த உம்மைப் போற்றுபவர்களே பத்தியுடைய நன்மனம் உடையவர்கள் .

  
பாடல் எண் : 11
விண்பயில் பொழில்அணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்,
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழ்இவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.

         பொழிப்புரை : ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்தோங்கிய சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானை , திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளினான் . அவ்வாறு , திருச்சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தின் சீரிய கருத்தை உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு ஆகும் .
                                             திருச்சிற்றம்பலம்



3. 111 திரு வீழிமிழலை        ஈரடி       பண் - பழம்பஞ்சுரம்
                                             திருச்சிற்றம்பலம்


பாடல் எண் : 1
வேலின்நேர்தரு கண்ணினாள்உமை
         பங்கன்அங்கணன் மிழலைமாநகர்
ஆலநீழலின் மேவினான்அடிக்கு அன்பர்துன்பு இலரே.

         பொழிப்புரை : வேல் போன்று கூர்மையும் , ஒளியுமுடைய கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் அழகிய கண்களையுடைய சிவபெருமான் . அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார் . ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர் . அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை .


பாடல் எண் : 2
விளங்குநான்மறை வல்லவேதியர்
         மல்குசீர்வளர் மிழலையான்அடி
உளங்கொள்வார்தமை உளங்கொள்வார்வினை
         ஒல்லை ஆசுஅறுமே.

         பொழிப்புரை : நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற , புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள் , அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும் .


பாடல் எண் : 3
விசையினோடுஎழு பசையும்நஞ்சினை
         அசைவுசெய்தவன் மிழலைமாநகர்
இசையும்ஈசனை நசையின்மேவினால்
         மிசைசெயா வினையே.

         பொழிப்புரை : வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . நஞ்சுண்டும் சாவாது புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால் வினையானது துன்பம் செய்யாது .


பாடல் எண் : 4
வென்றிசேர்கொடி மூடுமாமதில்
         மிழலைமாநகர் மேவிநாள்தொறும்
நின்றஆதிதன் அடிநினைப்பவர்
         துன்பம்ஒன்று இலரே.

         பொழிப்புரை : சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை மூடும்படி விளங்கும் , உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழலை என்னும் மாநகர் . அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும் நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.


பாடல் எண் : 5
போதகந்தனை உரிசெய்தோன்புயல்
         நேர்வரும்பொழில் மிழலைமாநகர்
ஆதரம் செய்த அடிகள்பாதம்
         அலால்ஒர்பற்று இலமே.

         பொழிப்புரை : செருக்குடன் முனிவர்களால் கொடுவேள்வி யினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின் தோலை உரித்த சிவபெருமான் , மேகம்படியும் சோலைகளையுடைய திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிகளைத்தவிர வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை .


பாடல் எண் : 6
தக்கன்வேள்வியைச் சாடினார்மணி
         தொக்கமாளிகை மிழலைமேவிய
நக்கனார்அடி தொழுவர் மேல்வினை
         நாள்தொறும் கெடுமே.

         பொழிப்புரை : சிவபெருமான் , தக்கன் வேள்வியைத் தகர்த்தவர் . இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு மேல்வினை உண்டாகாது .


பாடல் எண் : 7
போர்அணாவுமுப் புரம்எரித்தவன்
         பொழில்கள்சூழ்தரு மிழலைமாநகர்ச்
சேரும்ஈசனைச் சிந்தைசெய்பவர்
         தீவினை கெடுமே.

         பொழிப்புரை : போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான் , சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும் அடியவர்களின் தீவினை அழிந்துவிடும் .


பாடல் எண் : 8
இரக்கம்இல்தொழில் அரக்கனார்உடல்
         நெருக்கினான்மிகு மிழலையான்அடி
சிரக்கொள்பூ என ஒருக்கினார்புகழ்
         பரக்குநீள் புவியே.

         பொழிப்புரை : இரக்கம் அற்ற தொழில்புரியும் அரக்கனான இராவணனின் உடல் நெரியும்படி கயிலைமலையின் கீழ் அடர்த்த சிவபெருமான் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமானின் திருவடிக் கமலங்களை சிரசின்மேல் வைத்த மலர்போலக் கொண்டு , சிந்தையை ஒருமுகப்படுத்தி வழி படுபவர்கள் , உலகில் புகழுடன் விளங்குவர் .


பாடல் எண் : 9
துன்றுபூமகன் பன்றிஆனவன்
         ஒன்றும்ஓர்கிலா மிழலையான்அடி
சென்றுபூம்புனல் நின்றுதூவினார்
         நன்றுசேர் பவரே.

         பொழிப்புரை : இதழ் நெருங்கிய தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனும் , பன்றி உருவெடுத்த திருமாலும் உணர்தற்கரியவனான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றான் . அப்பெருமானின் திருவடிகளை , பூவும் , நீரும் கொண்டு பூசிப்பவர்கள் , முத்தி பெறுவர் .


பாடல் எண் : 10
புத்தர்கைச்சமண் பித்தர்பொய்க்குவை
         வைத்தவித்தகன் மிழலைமாநகர்
சித்தம்வைத்தவர் இத்தலத்தின்உள்
         மெய்த்தவத் தவரே.

         பொழிப்புரை : புத்தர்களும் , சமணர்களும் கூறும் பொய்க் குவியல்களாகிய உபதேசங்களைத் தோற்க வைத்த ஞானசொரூபரான சிவபெருமான் , திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் . அப்பெருமான் மீது சித்தம் வைத்து வழிபடுபவர்கள் இப்பூவுலகில் மெய்யான தவத்தைப் புரிந்தவராவர் .


பாடல் எண் : 11
சந்தம்ஆர்பொழில் மிழலைஈசனைச்
         சண்பைஞானசம் பந்தன்வாய்நவில்
பந்தம்ஆர் தமிழ் பத்தும்வல்லவர்
         பத்தர் ஆகுவரே.

         பொழிப்புரை : சந்தன மணம் கமழும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானைப் போற்றி , சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய திருவருளால் பிணிக்கப்படும் இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கள் பத்தர்கள் ஆவர் .

                                             திருச்சிற்றம்பலம்

3. 116   திருவீழிமிழலை       திருவியமகம்     பண் - பழம்பஞ்சுரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
துன்று கொன்றை நம் சடையதே, தூய கண்டநஞ்சு அடையதே,
கன்றின் மான்இடக் கையதே, கல்லின் மான்இடக் கையதே,
என்றும் ஏறுவது இடவமே என் இடைப் பலிஇட வமே,
நின்ற தும்மிழலை உள்ளுமே நீர்எனைச் சிறிதும் உள்ளுமே.

         பொழிப்புரை : சிவபெருமான் நெருங்கிய கொன்றைமலரைச் சூடியுள்ளது சடையில் . அவருடைய தூயகழுத்து நஞ்சை அடக்கியுள்ளது . மான்கன்றை ஏந்தி உள்ளது இடக்கை . இமயமலையரசன் மகளான மான் போன்ற உமாதேவியைக் கொண்டுள்ளது இடப்பக்கம் . அவர் என்றும் ஏறும் வாகனம் இடபமே . பிச்சாடனரான நீர் நான் பிச்சையிட என்னிடத்து வருவீராக . நீர் வீற்றிருந்தருளுவது திருவீழி மிழலை என்னும் திருத்தலத்தில் , அதுபோல அடியேன் உள்ளத்திலும் எழுந்தருள நினைப்பீராக !


பாடல் எண் : 2
ஓதி வாயதும் மறைகளே, உரைப்ப தும்பல மறைகளே,
பாதி கொண்டதும் மாதையே, பணிகின் றேன்மிகு மாதையே,
காது சேர்கனம் குழையரே, காத லார்கனம் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா, மிழலை மேவிய வேதியா.

         பொழிப்புரை : சிவபெருமான் ஓதுவன வேதங்களே . உரைப்பது பிறர் எவர்க்கும் தெரிவதற்கரிய பொருள்களே . திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டது உமாதேவியை . வழிபடுகின்றேன் அவ்வழகிய கோலத்தை . காதிலே அணிந்திருப்பது கனவிய குழை . அவர் தம்மிடத்து அன்பு செலுத்துபவர்களிடத்துக் குழைந்து நிற்பர் . வீதியிலே மிகுவது வேதஒலி . வேதங்களை அருளிச் செய்த அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் .


பாடல் எண் : 3
பாடு கின்றபண் டாரமே, பத்தர் அன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே, தொழுத என்னைஉன் மத்தமே,
நீடு செய்வதும் தக்கதே, நின் அரைத் திகழ்ந்த அக்கதே
நாடு சேர்மிழலை ஊருமே, நாக நஞ்சுஅழலை ஊருமே.

         பொழிப்புரை : சிவபெருமான் ஊழி இறுதியில் பாடுகின்ற பண் தாரம் என்னும் இசை ஈறாகிய எழுவகை இசையுமே . பக்தர்கட்கு ஞானக்கருவூலமாய் விளங்குபவர் . அவர் சூடுவது ஊமத்த மலர் . அவரை வணங்கும் என்னைப் பித்தனாக்கினார் . அவரையே நீளத் தியானித்துப் போற்றுமாறு செய்தார் . இது தகுமோ ? அவருடைய இடுப்பில் விளங்குவது அக்குப்பாசியே . அப்பெருமான் மிழலை நாட்டிலுள்ள திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுகின்றார் . அவருடைய திருமேனியில் நாகமும் , கண்டத்தில் நஞ்சும் , கரத்தில் நெருப்பும் விளங்குகின்றன .


பாடல் எண் : 4
கட்டு கின்றகழல் நாகமே, காய்ந்ததும் மதனன் ஆகமே,
இட்ட மாவதுஇசை பாடலே , இசைந்த நூலின்அமர்பு ஆடலே,
கொட்டுவான் முழவம் வாணனே, குலாயசீர் மிழலை வாணனே,
நட்டம் ஆடுவது சந்தியே , நான்உய்தற்கு இரவு சந்தியே.

         பொழிப்புரை : சிவபெருமான் திருவடிகளில் வீரக்கழலாக அணிந்துள்ளது நாகத்தையே . அவர் எரித்தது மன்மதனது உடம்பையே . அவர் விரும்புவது அடியவர்கள் பாடும் இசைப் பாடலே. பொருந்திய நூலின் அமைதிக்கு ஏற்றதாயிருப்பது அவர் ஆடலே. அவ்வாடலுக்கு முழவங் கொட்டுபவன் வாணனே . இவை திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் சிறப்புக்கள் . அவர் நடனமாடுவது சந்தி என்னும் நாடக உறுப்பின்படி . நான் காம வாதையினின்றும் பிழைப்பதற்கு இராக்காலம் தக்க சமயமாகும்.


பாடல் எண் : 5
ஓவி லாதுஇடும் கரணமே, உன்னும் என்உடைக் கரணமே,
ஏவு சேர்வுநின் ஆணையே , அருளின் நின்னபொன் தாள்நையே,
பாவி யாதுஉரை மெய்இலே , பயின்ற நின்அடி மெய்யிலே,
மேவி னான்விறல் கண்ணனே, மிழலை மேயமுக் கண்ணனே.

         பொழிப்புரை : மிழலையை உகந்தருளியிருக்கும் முக்கண் இறைவரே படைப்புக் காலமுதல் மகாசங்கார காலம் வரை ஓய்வின்றித் தொழிலாற்றும் கரணபூதர் . மனம் முதலிய அகக்கருவிகள் உம்மையே நினைக்கும் . மன்மதபாணம் என்மேல் தைப்பதும் உம் ஆணையால் , உம் பொன்போன்ற திருவடிகளை நீர் அருளினால் துன்பம் எனக்கு நேருமோ ? உம்மைக் கருதாது உரைப்பன மெய்ம்மையாகாது . வலியோனாகிய திருமால் உம்முடைய திருவடியை உண்மையாகவே பொருந்தப் பெற்றான்.


பாடல் எண் : 6
வாய்ந்த மேனிஎரி வண்ணமே, மகிழ்ந்து பாடுவது வண்ணமே,
காய்ந்து வீழ்ந்தவன் காலனே, கடுநடம் செயும் காலனே,
போந்தது எம்இடை இரவிலே, உம்இடைக் கள்வம் இரவிலே,
வேய்ந்ததும் மிழலை என்பதே, விரும்பியே அணிவது என்பதே.

         பொழிப்புரை : சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையது . அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப் பாடல்களையே . அவரால் உதைக்கப்பட்டு வீழ்ந்தவன் காலன் . அவர் அழகிய திருநடனம் செய்யும் கால்களை உடையவர் . அவர் எங்கள் வீட்டிற்குப் பிச்சையேற்க வந்தது இரவில் . எம் உள்ளம் புகுந்து கவர்ந்தது இரவில் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அவர் விரும்பி அணிவது எலும்பு மாலையே .


பாடல் எண் : 7
அப்பு இயன்றகண் அயனுமே, அமரர் கோமகனும் அயனுமே,
ஒப்பில் இன்றுஅமரர் தருஅதே, ஒண்கையால் அமரர் தருஅதே,
மெய்ப் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர்உமது இருக்கையே
செப்புமின் எருது மேயுமே சேர்வுஉமக்கு எருதும் ஏயுமே.

         பொழிப்புரை : பாற்கடலில், துயிலும் கண்ணுடைய திருமாலும், தேவேந்திரனும், பிரமனும் கேட்டவற்றை ஒப்பின்றி உமது திருக்கரம் வழங்கி வருதலால் அது கற்பக விருட்சம் ஆகும் . மெய்த்தவம் செய்பவர்களின் உள்ளக்கோயில் உமது இருப்பிடமாகும் . திருவீழிமிழலை என்னும் திருத்தலமும் நீர் வீற்றிருந்தருளும் இடமாகும் . உமக்கென்றுள்ள விளைநிலமாகிய என் மனநிலத்தில் எருது புகுந்து கேடு விளைவித்தல் தகுமோ ? அதை ஓட்டி என்னை ஆட்கொள்ள அங்கு வருவதற்கு உமக்கு எருதும் இருக்குமே .


பாடல் எண் : 8
தான வக்குலம் விளக்கியே, தாரகைச் செல விளக்கியே,
வான் அடர்த்த கயில்ஆயமே, வந்து மேவு கயிலாயமே,
தான்எ டுத்தவல் அரக்கனே, தடமுடித் திரள் அரக்கனே,
மேல்ந டைச்செல இருப்பனே, மிழலை நல்பதி விருப்பனே.

         பொழிப்புரை : சிவபெருமான் , பகைத்து நிற்கும் அசுரர் அழிவர் என்பதை விளக்கியவர் . தாரகை முதலான ஒளிதரும் பொருள்களின் ஒளியைத் தம் பேரொளியால் குன்றச் செய்தவர் . வானை முட்டும் உயர்ந்த கயிலைமலையைத் தம் வல்லமையால் எடுத்த அரக்கனான இராவணனின் பெரிய முடிகளைநெரித்தவர் . மனைகள் தோறும் சென்று பிச்சை எடுத்தலில் விருப்பமுடையவர் . திருவீழிமிழலை என்னும் நற்பதியில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .


பாடல் எண் : 9
காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே
ஏய இப்புவி மயங்கவே, இருவர் தாம்மனம் மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே, தோன்றி நின்றமணி கண்டனே,
மேய இத்துயில் விலக்குஅணா, மிழலை மேவிய இலக்கணா.

         பொழிப்புரை : பன்றி உருவெடுத்த திருமால் , பிரமன் ஆகிய இருவரும் சேர்ந்து தேடவும் , உம் உருவத் திருமேனியைக் காண்பதற்கு இயலாதவராய் , இப்புவியில் மயங்கி நின்று , மனம் கலங்கிய நிலையில், தூய சோதித் திரளாய் அகண்ட திருமேனியராய்த் தோன்றி நின்ற நீலகண்டத்தை உடையவரே . எம் தலைவரே ! அடியேனின் தூக்கம் பிடிக்கா நிலையை விலக்குவீராக ! திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அழகரே .


பாடல் எண் : 10
கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர்அமணர் கையரே
அஞ்ச வாதில்அருள் செய்ய நீ, அணைந்திடும் பரிசு செய்யநீ
வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனைச்சிறிதும் வல்லையே
வெஞ்சல் இன்றிவரு இத்தகா மிழலைசே ரும்விறல் வித்தகா.

         பொழிப்புரை : சிவபெருமானே ! கஞ்சி உண்ணும் கையையுடைய பௌத்தர்களும், சமணர்களும் அஞ்சுமாறு , அடியேன் வாதில் வெற்றி கொள்ள அருள்செய்தீர் நீவிர் . பிறர் செய்யும் சூழ்ச்சியை அறிய வல்லீரும் நீவிர் . அடியவரின் துயர் நீக்கிட வருவதற்கு வல்லீர் . நீவிர் என் உரையைச் சிறிதளவேனும் மதித்து விரைவில் வரவும் இல்லையே . குறைதலில்லாமல் மேன்மேலும் வருகின்ற இத்துயரங்கள் எனக்குத் தகா . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வலிமை மிக்க வித்தகரே .


பாடல் எண் : 11
மேய செஞ்சடையின் அப்பனே , மிழலைமே வியஎன் அப்பனே,
ஏயு மாசெய இருப்பனே, இசைந்த வாசெய விருப்பனே,
காய வர்க்கஅசம் பந்தனே, காழி ஞானசம் பந்தனே,
வாய்உரைத்த தமிழ் பத்துமே, வல்லவர்க்கும் இவை பத்துமே.

         பொழிப்புரை : சிவபெருமான் சிவந்த சடையில் கங்கையை அணிந்தவர் . திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் என் அப்பர் . முத்தொழிலையும் அவருடைய சந்நிதியில் அவரவர் செய்ய வாளா இருப்பவர் . தம்மைப் போற்றி வழிபடும் பக்தர்கட்கு விருப்பமானவர் . பஞ்ச பூதங்களோடும் தோய்ந்தும் தோயாமல் இருப்பவர் . அப்பெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களுக்கு , இவை ஞானத்தின் படிநிலைகள் பத்தாய் அமையும் . ( இறுதியில் சிவபோகம் பெறுவர் என்பது குறிப்பு ).

                                             திருச்சிற்றம்பலம்
        

3. 119   திருவீழிமிழலை                       பண் - புறநீர்மை
                                             திருச்சிற்றம்பலம்


பாடல் எண் : 1
புள்ளித்தோல் ஆடை, பூண்பது நாகம்,
         பூசுசாந் தம்பொடி நீறு,
கொள்ளித்தீ விளக்குக் கூளிகள் கூட்டம்,
         காளியைக் குணஞ்செய்கூத்து உடையோன்,
அள்ளல்கார் ஆமை அகடுவான் மதியம்,
         ஏய்க்கமுள் தாழைகள் ஆனை
வெள்ளைக் கொம்புஈனும் விரிபொழில் வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : சிவபெருமான் புலித்தோல் ஆடை உடுத்தவர் . பாம்பை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் திருநீற்றைப் பொடியாகப் பூசியவர் . சுடுகாட்டில் கொள்ளி நெருப்பை விளக்காகக் கொண்டு பூதகணங்கள் சூழக் காளியுடன் நடனம் புரிந்தவர் . சேற்றில் விளங்கும் ஆமையின் வயிறு போன்ற சந்திரனும் , யானையின் கொம்பு போன்ற தாழையும் விளங்கும் சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் கெடும் .

பாடல் எண் : 2
இசைந்தவாறு அடியார் இடுதுவல், வானோர்
         இழுகுசந் தனத்துஇளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய், கரப்பாய்
         பத்திசெய் யாதவர் பக்கல்,
அசும்புபாய் கழனி அலர்கயல் முதலோடு
         அடுத்துஅரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : அடியவர்கள் பக்திப் பெருக்குடன் மலர்தூவிப் போற்றவும் , தேவர்கள் நறுமணம் கமழும் பொற்றாமரை மாலைகளைச் சாத்தவும் அவர்கட்கு அருள்வாய் . பக்தி செயாதவர்கட்கு ஒளிந் திருப்பாய் . ஊற்று நீர் பாயும் கழனிகளில் மலர்களும் , கயல்களும் திகழ , அரிந்த கதிர்களிலிருந்து தூற்றும் நெல்லானது வானத்திலிருந்து உதிர்வன போன்று வளமுடன் விளங்குவது திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திரு நாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .


பாடல் எண் : 3
நிருத்தன், ஆறங்கன், நீற்றன்,நான் மறையன்,
         நீலம்ஆர் மிடற்றன், நெற் றிக்கண்
ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய்
         உளன், இலன், கேடுஇலி, உமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடுநீர்ப் பொய்கை
         சிறியவர் அறிவினில் மிக்க
விருத்தரை ஆடிவீழ்ந்து இடம்புகும் வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : சிவபெருமான் திருநடனம் செய்பவர் . வேதத்தின் அங்கமாக விளங்குபவர் . திருநீறு பூசியுள்ளவர் . நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் பொருளாய் விளங்குபவர் . நீலகண்டத்தர் . நெற்றிக் கண்ணுடையவர் . ஒப்பற்றவர் . எல்லா உயிர்கட்கும் உயிராய் விளங்குபவர் . பதிஞானத்தால் உணர்பவர்க்கு உளராவார் . பசு ஞானத்தாலும் , பாச ஞானத்தாலும் அறிய முற்படுபவர்கட்கு இலராவார் . உயிர்களின் தீமையைப் போக்குபவர் . உமா தேவியின் கணவர் . புனித தீர்த்தத்தால் நாள்தோறும் அபிடேபிக்கப் படுபவர் . வயதில் சிறியோர் அறிவு சால் சான்றோரின் திருப்பாதத்தை அட்டாங்க நமஸ்காரமாக வணங்கிப் போற்றச் சீலம் மிக்கவர்கள் வாழும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர் . அவருடைய திருநாமத்தை ஓத வினை நீங்கும்.


பாடல் எண் : 4
தாங்கஅரும் காலம் தவிரவந்துஇருவர்
         தம்மொடும் கூடினார், அங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோல் எல்லாம்
         பண்ணிய கண்ணுதல் பரமர்,
தேங்கொள்பூங் கமுகு தெங்குஇளம் கொடிமாச்
         செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : மகாசங்கார காலத்தில் திருமால் , பிரமன் ஆகிய இருவரின் எலும்புகளை அழகுற அணிந்து , பின் முன்பு போல் மீண்டும் எல்லாம் படைத்துத் தொழிலாற்றும் நெற்றிக் கண்ணுடையவர் சிவபெருமான் . அவர் கமுகு , தென்னை , மா , செண்பகம் , பலா , இலுப்பை , வேங்கை , மகிழ் , ஆல் முதலியன சேர்ந்த வெயில்புகாத சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுவார் . அப்பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .


பாடல் எண் : 5
கூசுமா மயானம் கோயில்வா யில்கண்
         குடவயிற் றனசில பூதம்,
பூசுமா சாந்தம் பூதி,மெல் ஓதி
         பாதி,நல் பொங்குஅரவு அரையோன்,
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
         மலர்அணைந்து எழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : எவரும் அடைவதற்குக் கூச்சப்படுகின்ற மயானத்தில் பெரிய வயிற்றையுடைய பூதங்கள் சூழ நறுமணம் கமழும் சாந்துபோலத்திருநீறு பூசிப் , பார்வதிபாகராய் , ஆடுகின்ற பாம்பை இடுப்பில் அணிந்து விளங்குபவர் , சிவபெருமான் . அவர் நறுமணம் கமழும் புன்னை , முல்லை , செங்கழுநீர் மலர் ஆகிய மணங்கமழும் மலர்களில் கலந்து தென்றல் வீசும் சோலைகளிலிருந்து தேன்துளிகள் சிதறும் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுவார். அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும்.


பாடல் எண் : 6
பாதிஓர் மாதர், மாலும்ஓர் பாகர்,
         பங்கயத்து அயனும்ஓர் பாலர்,
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற
         அடிகளார், அமரர்கட்கு அமரர்,
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
         பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்து ஒலிஅறா வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : இறைவன் உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர் . திருமாலையும் , பிரமனையும் தம்பாகமாகக் கொண்டு ஏகபாத திரிமூர்த்தியாகத் திகழ்பவர் . அவர் உலகத் தோற்றத்திற்கும் , நிலைபெறுதலுக்கும் , ஒடுக்கத்திற்கும் நிமித்த காரணராய் விளங்கும் தலைவர் . தேவர்கட்குக் கடவுள் . மலரணிந்த தலையையுடைய புரூரவச் சக்கரவர்த்தியால் திருப்பணி செய்யப் பெற்றுப் பிரமனையொத்த வேதியர்கள் ஓதுகின்ற வேத ஒலி இடையறாது ஒலிக்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானின் திருநாமத்தை ஓத வினை யாவும் நீங்கும் .


பாடல் எண் : 7
தன்தவம் பெரிய சலந்தரன் உடலம்
         தடிந்தசக் கரம்எனக்கு அருள்என்று,
அன்றுஅரி வழிபட்டு இழிச்சிய விமானத்து
         இறையவன், பிறையணி சடையன்,
நின்றநாள் காலை இருந்தநாண் மாலை
         கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாஅறா வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : சிவபெருமான் திருவருளால் தோன்றிய சக்கரப்படை சலந்தராசுரனை அழித்ததைக் கண்ட திருமால் , அத்தகைய சக்கரப்படையைத் தனக்கு அருள வேண்டித் தேவ லோகத்திலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து சிவனைப் பூசித்தார் . சிவபெருமான் சந்திரனை அணிந்த சடையையுடையவர் . அவர் வீற்றிருந்தருளும் இடமாவது எல்லாக் காலத்திலும் மண்ணுலகத்தின் சேர்க்கையால் உண்டாகும் துன்பத்தை வென்ற அந்தணர்கள் வாழ்கின்ற , திருவிழாக்கள் நீங்காத திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனுடைய திருநாமத்தை ஓத , வினை யாவும் நீங்கும் .


பாடல் எண் : 8
கடுத்தவாள் அரக்கன் கைலைஅன்று எடுத்த
         கரம்உரம் சிரம்நெரிந்து அலற,
அடுத்ததுஓர் விரலால் அஞ்செழுத்து உரைக்க
         அருளினன் தடமிகு நெடுவாள்,
படித்தநான் மறைகேட்டு இருந்தபைங் கிளிகள்
         பதங்களை ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : கோபமுடைய , வாளேந்தியுள்ள அரக்கனான இராவணன் முன்பு கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவன் கரமும் , சிரமும் நெரிபட்டு அலறும்படி தம் திருப்பாதவிரலை ஊன்றியவர் சிவபெருமான் . பின் இராவணன் தன் தவறுணர்ந்து அஞ்செழுத்தை யாழில் மீட்ட நீண்ட வாளை அவனுக்குக் கொடுத்தருளினார் . அத்தியயனம் செய்த நான்மறைகளைக் கற்றுணர்ந்த வேதியர்கள் ஓதக்கேட்ட கிளிகள் அப்பதங்களை ஓத , அருகிருந்து கேட்ட பசுக் கூட்டங்களும் அவற்றைக் கேட்கத் தம் செவிகளைப் பழக்கும் , விரிந்த சோலைகளையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும் . அங்கு வீற்றிருந் தருளும் இறைவனின் திருநாமத்தை ஓத, வினையாவும் கெடும் . விடைக்குலம் - வேதம் பயிலும் சிறுவர் குழாமுமாம் .


பாடல் எண் : 9
அளவிடல் உற்ற அயனொடு மாலும்
         அண்டம்மண் கெண்டியும் காணா,
முளைஎரி ஆய மூர்த்தியை, தீர்த்த
         முக்கண்எம் முதல்வனை, முத்தை,
தளைஅவிழ் கமலத் தவிசின்மேல் அன்னம்
         தன்இளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கும்
         மிழலையான் எனவினை கெடுமே.

         பொழிப்புரை : பிரமனும் , திருமாலும் முடியையும் , அடியையும் தேட முற்பட்டு , அண்டங்கட்கு மேலெல்லாம் பறந்து சென்றும் , பூமி மண்ணை இடந்து கீழே பாதாளலோகம் முழுவதும் சென்றும் காண முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் விளங்கியவர் முக்கண் உடைய முதல்வரான சிவபெருமான் . முத்துத் தரும் இதழ் விரிந்த தாமரைச் சிம்மாசனத்தில் அன்னப்பறவையானது தனது பெடையுடன் இருக்க , நெற்கதிர்கள் கவரிவீசுவதைப் போன்று விளங்கும் வயல்களை உடைய திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் பெருமானுடைய திருநாமத்தை ஓத வினை தீரும் .

  
பாடல் எண் : 10
கஞ்சிப்போது உடையார், கையிற்கோ சாரக்
         கலதிகள் கட்டுரை விட்டு,
அஞ்சித்தேவு இரிய எழுந்தநஞ்சு அதனை
         உண்டுஅம ரர்க்குஅமுது அருளி,
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
         குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
         மிழலையான் எவினை கெடுமே.

         பொழிப்புரை : கஞ்சியைக் கையில் வாங்கி உண்பவர்களும் , ஆடையணியாத் துறவிகளுமான சமணர்கள் , உரைக்கும் மொழிகளை ஏற்க வேண்டா . தேவர்கள் அஞ்சும்படி எழுந்த நஞ்சைத் தாம் உண்டு அவர்கட்கு அமுதம் அருளியவர் சிவபெருமான் . உயர்ந்த கமுகின் பழக்குலை விழ , அதனால் வாழையின் கனிகள் மதில்மேல் உதிரும் . மிக உயர்ந்த தென்னை மரங்களின் உச்சியில் மேகம் படியும் . இத்தகைய வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமான் திருநாமத்தை ஓத வினையாவும் நீங்கும் .


பாடல் எண் : 11
வேந்தர்வந்து இறைஞ்ச வேதியர் வீழி
         மிழலையுள் விண்இழி விமானத்து,
ஏய்ந்ததன் தேவி யோடுஉறை கின்ற
         ஈசனை, எம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துஉறை மறையோன்
         தூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
         வானவர் வழிபடு வாரே.

         பொழிப்புரை : இந்திரன் முதலான தேவர்கள் வந்து வழிபட , வேதங்களைக் கற்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விண்ணிழி விமானத்தில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனான எங்கள் சிவபெருமானை , நீர்வளம் மிகுந்த தோணிபுரத்தில் அவதரித்த மறைவல்ல தூயமொழி பேசும் ஞானசம்பந்தன் , போற்றி உரைத்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானவர்களால் வணங்கப்படுவார்கள் .

திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 562
மண்ணின் மிசை வான்பொய்த்து, நதிகள் தப்பி,
         மன்உயிர்கள் கண்சாம்பி, உணவு மாறி,
விண்ணவர்க்கும் சிறப்பில்வரும் பூசை ஆற்றா,
         மிக்கபெரும் பசிஉலகில் விரவக் கண்டு,
பண்அமரும் மொழி உமையாள் முலையில் ஞானப்
         பால்அறா வாயருடன் அரசும் 'பார்மேல்
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வி னோர்க்கும்
         கவலைவரு மோ'என்று கருத்தில் கொண்டார்.

         பொழிப்புரை : இம்மண்ணுலகில் மழை மறுத்ததனால் ஆறுகளில் பருவவெள்ளம் பாயாது தவறி, அது காரணமாய் உலகத்து உயிர்கள் வருந்தி, உணவின்றி நின்றமையால், தேவர்களுக்கும் சிறப்பு வழிபாடுகளும் நாள்வழிபாடுகளும் செய்யப்படாமல் மிக்க பெரும் பசியின் கொடுமை உலகில் பொருந்திய நிலையைக் கண்டு, பண் பொருந்திய சொல்லையுடைய உமையம்மையாரின் கொங்கையின் பால் நீங்காத வாயினரான பிள்ளையாருடன் திருநாவுக்கரசரும் `உலகில் நெற்றிக் கண்ணரான திருநீற்றுச் சார்புடைய தொண்டர் களுக்கும் கவலை வருமோ?\' என்று தம் உள்ளங்களில் எண்ணினர்.


பெ. பு. பாடல் எண் : 563
வான்ஆகி, நிலன்ஆகி, அனலும் ஆகி,
         மாருதம்ஆய், இருசுடர்ஆய், நீரும் ஆகி,
ஊன்ஆகி, உயிர்ஆகி, உணர்வும் ஆகி,
         உலகங்கள் அனைத்தும்ஆய், உலகுக்கு அப்பால்
ஆனாத வடிவுஆகி நின்றார், செய்ய
         அடிபரவி அன்றுஇரவு துயிலும் போது,
கானாடு கங்காளர் மிழலை மூதூர்
         காதலித்தார் கனவில்அணைந்து அருளிச் செய்வார்.

         பொழிப்புரை : வானமும், மண்ணும், தீயும், காற்றும், கதிரவன், சந்திரன் ஆகிய இருசுடர்களும், நீரும் ஆகியும், ஊனும் உயிரும் உணர்வுமாகியும், உலகங்கள் எல்லாம் ஆகியும் அவற்றின் அப்பாற்பட்டதாகியும், கேடில்லாத வடிவாகி நின்ற இறைவரின் சிவந்த திருவடிகளைப் போற்றி உறங்கும் போது, சுடுகாட்டில் எலும்பணிந்து கூத்தியற்றுபவராய் இருந்தருளும் திருவீழிமிழலைப் பெருமான் கனவில் தோன்றி அருள்செய்வாராய்,

  
பெ. பு. பாடல் எண் : 564
"உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய
         உறுபசிநோய் உமைஅடையாது, எனினும் உம்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்டம்
         நீங்குதற்கு, நித்தம் ஒர்ஓர் காசு நீடும்
இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும்
         யாம்அளித்தோம், உமக்குஇந்தக் காலம் தீர்ந்தால்
அலகுஇல் புகழீர் தவிர்வது ஆகும்" என்றே
         அருள்புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்.

         பொழிப்புரை : `உலக இயல்பு நிகழ்வினால் வந்து அணைந்த தீமை பொருந்திய பசிநோய், உங்களை அடையாது என்றாலும், உங்களைச் சேர்ந்த அடியவர்களின் வருத்தம் நீங்குதற்காக, நித்தமும் ஒவ்வொரு பொற்காசினைக் கிழக்கிலும் மேற்கிலும் விளங்கும் அழகிய பலிபீடங்களில் உங்களுக்கு அளிப்போம்; அளவற்ற புகழை உடையவர்களே, இப்பஞ்சகாலம் நீங்கினால் அது நிறுத்தப்படும்\' எனத் திருவீழிமிழலை இறைவர் உரைத்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 565
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்க,
         சண்பையார் இளஏறு தாம் உணர்ந்து,
நம்பிரான் அருள்இந்த வண்ணம் என்றே
         நாவின்இசை அரசரொடும் கூட நண்ணி,
வம்புஉலா மலர்இதழி வீழி நாதர்
         மணிக்கோயில் வலஞ்செய்யப் புகுந்த வேலை
அம்பிகா பதிஅருளால் பிள்ளை யார்தாம்
         அபிமுகத்துப் பீடிகைமேல் காசு கண்டார்.

         பொழிப்புரை : தம் இறைவர் இங்ஙனம் கனவில் உரைத்து நீங்கவும், சீகாழியின் தலைவரான இளைய ஏறு போன்ற சம்பந்தர், துயில் உணர்ந்து, `நம் இறைவரின் அருள் இருந்த வண்ணம் இவ்வாறு!' என்று வியப்புக் கொண்டவராய், அவ்வாறே இறைவர் அருளப் பெற்றுத் துயிலுணர்ந்த நாவுக்கரசரோடு கூடச் சேர்ந்து, மணம் கமழும் கொன்றை மலரைச் சூடிய திருவீழிமிழலைநாதரின் மணிக் கோயிலை வலமாக வரப் புகுந்தபோது, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவருளால், பிள்ளையார் தாம் கிழக்குத் திசையில் உள்ள பலிபீடத்தின் மீது ஒரு பொற்காசைக் கண்டார்.


பெ. பு. பாடல் எண் : 566
காதலொடும் தொழுதுஎடுத்துக் கொண்டு நின்று,
         கைகுவித்து, பெருமகிழ்ச்சி கலந்து பொங்க,
'நாதர்விரும்பு அடியார்கள் நாளும் நாளும்
         நல்விருந்தாய் உண்பதற்கு வருக' என்று
தீதுஇல்பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர்
         திருஅமுது கறிநெய்பால் தயிர்என்று இன்ன
ஏதம்உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண்
         இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில்.

         பொழிப்புரை : பத்திமையோடு வணங்கி அப்பொற்காசை எடுத்துக் கொண்டு, நின்று கைகளைக் குவித்து வணங்கிப் பெருமகிழ்ச்சி உள்நிறைந்து பொங்க, `இறைவர் விரும்பும் அடியார்கள் ஒவ்வொரு நாளும் நல்ல விருந்தாய் உணவு உண்பதற்கு வருக!\' என்று தீமையில்லாத பறையறைந்து, அங்ஙனம் வந்த தொண்டர்கள் திருவமுதும், கறிகளும், நெய்யும், பாலும், தயிரும் என்று உள்ள இவற்றைக் குறைவில்லாதபடி இனிதாய் உண்ணும்படி உண்பித்து, அத்திருநகரில் இருபெருமக்களும் தங்கியிருந்தனர். அந்நாள்களில்,

         நாவரசருக்கும் இறைவர் இவ்வாறே மேற்குப் பீடத்தில் பொற்காசு வைத்து வழங்கினார். இதனை அவர் வரலாற்றில் (தி.12 பு.21 பா.247) விளங்க உரைத்திருப்பதால், இங்கு இவ்வளவே கூறுவாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 567
நாவினுக்கு வேந்தர்திரு மடத்தில் தொண்டர்
         நாள்கூறு திருஅமுது செய்யக் கண்டு,
சேவுகைத்தார் அருள்பெற்ற பிள்ளை யார்தம்
         திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி,
"தீவினைக்கு நீர்என்றும் அடைவு இலாதீர்,
         திருவமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவுமிக்க அடியவருக்கு அளியா வண்ணம்
         விளைந்தவாறு என்கொலோ, விளம்பும்" என்றார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசரின் மடத்தில் தொண்டர்கள், நாள் தொறும் ஒளிநிறைவாக விளங்கும் உச்சிப் போதளவில் திருவமுது செய்து முடிப்பதைப் பார்த்த விடையுடைய சிவபெருமானின் திருவருள் பெற்ற சம்பந்தர், தமது மடத்தில் உணவு சமைக்கும் பரிவாரங்களை நோக்கி, `தீய தொழிலுக்கு நீங்கள் எப்போதும் இடம் அளிக்க மாட்டீர் அல்லீரோ! ஆதலால் காலத்தால் உணவு சமைத்து இங்கு வரும் அடியவர்களுக்கு அளிக்காதமைக்கு உரிய காரணம்தான் என்ன? சொல்லுங்கள்!\' என வினவினார்.

  
பெ. பு. பாடல் எண் : 568
திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத்
         திருமடத்தில் அமுதுஅமைப்போர் செப்பு வார்கள்,
"ஒருபரிசும் அறிந்துஇலோம் இதனை, உம்மை
         உடையவர்பால் பெறும்படிக்காசு ஒன்றும் கொண்டு
கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால்
         காசுதனை வாசிபட வேண்டும் என்பார்,
பெருமுனிவர் வாகீசர் பெற்ற காசு
         பேணியே கொள்வு அரிது பிற்பாடு" என்றார்..

         பொழிப்புரை : அந்தணர்களின் தலைவரான பிள்ளையார் மேற்கண்ட வண்ணம் உரைசெய்ய, `இதன் மெய்ம்மையை நாங்கள் ஒருவிதத்திலும் அறியோம்! உம்மை அடிமையாக உடைய இறைவரிடம் பெறுகின்ற படிக்காசு ஒன்றைக் கொண்டு அமுது சமைக்க வேண்டிப் பொருள்களை வாங்குதற்குச் சென்றால், கடைவீதியில் உள்ள வணிகர்கள் காசுக்கு வட்டம் தரவேண்டும் என்று உரைக்கின்றனர்; பெருமுனிவரான திருநாவுக்கரசர் பெற்ற காசுக்கு அங்ஙனம் கூறாது மிக்க விருப்புடனே ஏற்றுக் கொள்கின்றனர். இதுவே காலம் தாழ்தற்குக் காரணம்\' என்று உரைத்தனர்.


பெ. பு. பாடல் எண் : 569
திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச்
         சிந்திப்பார், "சிவபெருமான் நமக்குத் தந்த
ஒருகாசு வாசிபட, மற்றக் காசு
         நன்றுஆகி வாசிபடாது ஒழிவான், அந்தப்
பெருவாய்மைத் திருநாவுக்கு அரசர் தொண்டால்
         பெறுங்காசுஆம், ஆதலினால் பெரியோன் தன்னை
வருநாள்கள் தரும்காசு வாசி தீரப்
         பாடுவன்" என்று எண்ணிஅது மனத்துள் கொண்டார்.

         பொழிப்புரை : திருஞானசம்பந்தர், அதனைக் கேட்டு, எண்ணுப வராய், `இறைவர் நமக்குத் தந்த ஒரு காசு வாசிபட, மற்ற ஒருகாசு வாசிபடாததற்குக் காரணம், அப்பெருவாய்மையுடைய திருமுனிவராய திருநாவுக்கரசர் தம் கைத் தொண்டினால் பெறும் காசாகும்; ஆதலால் இனிவரும் நாளில், வழங்கப்பெறும் காசு வாசி நீங்கியதாக அமைய இறைவரைப் பாடுவன்!' எனத் துணிந்து, தம் மனத்துள் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 570
மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு
         "வாசிதீர்த்து அருளும்"எனப் பதிகம் பாடிப்
பெற்றபடி நல்காசு கொண்டு மாந்தர்
         பெயர்ந்துபோய் ஆவணவீ தியினில் காட்ட
"நல்தவத்தீர் இக்காசு சால நன்று,
         வேண்டுவன நாம்தருவோம்" என்று நல்க
அற்றைநாள் தொடங்கிநாள் கூறு தன்னில்
         அடியவரை அமுதுசெய்வித்து ஆர்வம் மிக்கார்.

         பொழிப்புரை : அடுத்த நாளில் ஞானசம்பந்தர் தம் இறைவரின் கோயிலுள் புகுந்து, `வாசி தீர்த்தருளும்\' என்று வேண்டிப் பதிகம் பாட, அதன் பயனாகப் பிள்ளையார் பெற்ற நல்ல படிக்காசினைக் கைக் கொண்டு பணியாளர்கள் கடைத்தெருவுக்குச் சென்று வணிகர்களிடம் காட்டினர், அதைக் கண்ட வணிகர், நல்ல தவத்தைச் செய்தவர்களே! இக்காசு மிக நல்லது! நீங்கள் வேண்டுவனவற்றை நாங்கள் தருவோம்!\' எனச் சொல்லி அங்ஙனமே வேண்டும் எல்லாப் பண்டங்களும் தர, அந்நாள் தொடங்கி நாள் பகுதியாக நண்பகலில் அடியவர்களுக்கு உணவு உண்ணும்படி செய்வித்து அன்பு பெருக்கினர்.

         வாசி தீரப் பாடிய பதிகம், `வாசி தீரவே' (தி.1 ப.92) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.


பெ. பு. பாடல் எண் : 571
அருவிலையில் பெறும் காசும் அவையே ஆகி,
         அமுதுசெய்யத் தொண்டர்அளவு இறந்து பொங்கி,
வரும்அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும்
         மகிழ்ந்து உண்ண இன்அடிசில் மாளாது ஆக,
திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும்
         சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்க
பெருமைதரு சண்பைநகர் வேந்தர் நாவுக்கு
         அரசர்இவர் பெரும்சோற்றுப் பிறங்கல் ஈந்தார்.

         பொழிப்புரை : அரிய விலைக்கும் பெறுவதற்குரிய காசும் அவைகளேயாகி, அமுதுசெய்வதற்குரிய தொண்டர்கள் அளவு இல்லாது மேன்மேலும் பெருக, வருபவர்கள் எல்லோருக்கும் முன்பு வந்தவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் உணவு உண்ண, இனிய அடிசில் குறைவின்றி இருக்குமாறு, சடையில் திங்களும், பாம்பும், அணியும் இறைவர் திருவருள் செய்ய, சிறப்பால் மிக்க சீகாழி நகரின் அரசரான பிள்ளையாரும், வாக்கின் அரசரான திருநாவுக்கரசரும் என்ற இருவரும் பெருஞ்சோற்று மலைகளை அமுதமாய்த் தந்தருளினர்.


பெ. பு. பாடல் எண் : 572
அவனிமிசை மழைபொழிய, உணவு மல்கி,
         அனைத்து உயிரும் துயர்நீங்கி, அருளி னாலே
புவனம்எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த,
         புரிசடையார் கழல்பலநாள் போற்றி வைகி,
தவமுனிவர் சொல்வேந்த ரோடும் கூடத்
         தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீது
சிவன்மகிழும் தானங்கள் வணங்கப் போவார்
         தென்திருவாஞ் சியமூதூர் சென்று சேர்ந்தார்.

         பொழிப்புரை : உலகில் மழை பெய்ததால் உணவுப் பொருள்கள் பெருகி, அதனால் எல்லா உயிர்களும் துன்பம் நீங்கித் திருவருளினால் உலகம் முற்றும் செழிப்படையும் நற்காலம் வரவே, பிள்ளையார் சுருண்ட சடையையுடைய இறைவரின் திருவடிகளைப் பலநாள்கள் போற்றி, அங்கு எழுந்தருளியிருந்த பின்பு, தவமுனிவரான நாவுக்கரசரோடு கூடத் தம் இறைவரின் திருவருள் பெற்றுக் கொண்டு, உலகத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடங்கள் பலவற்றையும் வணங்கிச் செல்பவராய் அழகிய திருவாஞ்சியம் என்ற பழைய பதியைச் சென்று அடைந்தனர்.


1.092 திருவீழிமிழலை                பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசுஇல் மிழலையீர் ஏசல் இல்லையே.

         பொழிப்புரை :குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை.
  
பாடல் எண் : 2
இறைவர் ஆயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

         பொழிப்புரை :எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெரு மானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.

பாடல் எண் : 3
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே.

         பொழிப்புரை :சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மை யாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.

 
பாடல் எண் : 4
நீறு பூசினீர் ஏறு அதுஏறினீர்
கூறும் மிழலையீர் பேறும் அருளுமே.

         பொழிப்புரை :திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப்பேறும் அருளுவீராக.

பாடல் எண் : 5
காமன் வேவஓர் தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர் சேமம் நல்குமே.

         பொழிப்புரை :காமனை எரிந்து அழியுமாறு செய்தபுகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.

பாடல் எண் : 6
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டு அருளுமே.

         பொழிப்புரை :கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழி மிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.

 
பாடல் எண் : 7
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

         பொழிப்புரை :உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.
   
பாடல் எண் : 8
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர் கரக்கை தவிர்மினே.

         பொழிப்புரை :இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.
  
பாடல் எண் : 9
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர் பயனும் அருளுமே.

         பொழிப்புரை :நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.
  
பாடல் எண் : 10
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவது அரியதே.

         பொழிப்புரை :ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.

பாடல் எண் : 11
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே.

         பொழிப்புரை :இத்திருப்பதிகம் சீகாழிப்பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.

                                             திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 249
சார்ந்தார்தம் புகல்இடத்தை, தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்துஆர்வம் உறப் பணிந்து, கோதுஇல்தமிழ்த் தொடைபுனைந்து,
வார்ந்து ஆடும் சடையார்தம் பதிபலவும் வணங்கி, உடன்
சேர்ந்தார்கள் தம்பெருமான் திருவீழி மிழலையினை.

         பொழிப்புரை : தம்மை வந்து அடைந்தவர்க்கு அடைக்கலந் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமானை, அப்பதியில் உள்ள `தான் தோன்றி மாடம்` என்னும் கோயிலினுள் கண்டு, மிகுந்த அன்பு பொருந்த வணங்கி, குற்றம் இல்லாத தமிழ்த் தொடை மாலை பாடி, அங்கிருந்து புறப்பட்டு, அசைந்து ஆடும் சடையுடைய இறைவர் வீற்றிருந்தருளும் பதிகள் பலவற்றையும் போய் வணங்கிப், பின்னர் அவ்விருவரும் தம் பெருமானின் திருவீழிமிழலையைச் சேர்ந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 250
வீழி மிழலை வந்துஅணைய மேவு நாவுக் கரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க, வணங்கி உள்புக்கார்.

         பொழிப்புரை : திருவீழிமிழலையில் வந்து, முதற்கண் சேர்ந்த நாவுக்கரசரையும், பின்னால் வந்த ஞானசம்பந்தப் பெருமானையும் அன்பு கலந்த உள்ளத்தில் எழுந்த ஆசையால், சக்கரப்படையை உடைய திருமாலும் அறியாத சிவபெருமானின் அடியார்களும், அவர்தம் அடியார்களும் மறையோர்களும் நகர்ப் புறத்து வந்து எதிர்கொண்டு வணங்கத், தாங்களும் அவர்களை வணங்கித் திருப்பதியுள் புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 251
மாட வீதி அலங்கரித்து, மறையோர் வாயில் மணிவிளக்கு
நீடு கதலி தழைப்பூகம் நிரைத்து நிறைபொன் குடம்எடுத்து,
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து, விண்இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : அந்தணர்கள் மாட வீதியினை அணிசெய்து, தம் மாளிகையின் வாயில்களில் மணி விளக்குகளையும், வாழைகளையும், இலை செறிந்த பாக்குகளையும் நிரல்பட வைத்தும், நீர் நிறைந்த பொற்குடங்களை ஏந்தியும், பெருமை மிக்க நாவுக்கரசர், ஆளுடைய பிள்ளையார், தொண்டர்கள் ஆகியோர் அங்கு வந்து கூடும்படி மகிழ்ந்து, விண்ணிழி விமானத்தையுடைய திருக்கோயிலின் வாயிலை அடைந்தார்கள்.


பெ. பு. பாடல் எண் : 252
சென்றுஉள் புகுந்து, திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லி யார்மகிழ்ந்த கோயில் வலமா வந்து, திரு
முன்றில் வணங்கி முன்எய்தி, முக்கண் செக்கர்ச் சடைமவுலி
வென்றி விடையார் சேவடிக்கீழ் விழுந்தார், எழுந்தார், விம்மினார்.

         பொழிப்புரை : சென்று, திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் செம்பொன் மேருமலையை வில்லாகவுடைய சிவபெருமான் மகிழ்ந்த கோயிலை வலமாக வந்து, முற்றத்தே வணங்கி, திருமுன்பு சேர்ந்து, மூன்று கண்களையும் சிவந்த வானம் போன்ற சடைமுடியையும் வெற்றி பொருந்திய ஆனேற்றூர்தியையும் உடைய அப்பெருமானின் திருவடியின் கீழே விழுந்து எழுந்து நாவுக்கரசர் விம்மினார்.


பெ. பு. பாடல் எண் : 253
கைகள் குவித்துக் கழல்போற்றி, கலந்த அன்பு கரைந்து உருக,
மெய்யில் வழியும் கண்அருவி விரவப் பரவும் சொல்மாலை,
'செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறிசேர் கின்றார்'என்று
உய்யும் நெறித்தாண்டகம் மொழிந்துஅங்கு ஒழியாக் காதல் சிறந்துஓங்க.

         பொழிப்புரை : இரு கைகளையும் தலைமீது குவித்து, திருவடிகளை வணங்கி, உள்ளமானது நிரம்பிக் கலந்த அன்பால் கரைந்து உருகத், திருமேனியில் வழியும் கண்ணீர் அருவியைப்போல் ஆக, துதிக்கின்ற சொல்மாலையான பதிகம், `சிவந்த சடையையுடைய பெருமானை அடையாதவர் தீ நெறிக்கே சேர்கின்றார்` என்னும் கருத்துடையதாய உய்யும் நெறியைக் காட்டும் திருத்தாண்டகத்தைப் பாடி, அங்கிருந்து நீங்க முடியாத காதல் மேலே ஓங்கி எழ.

         இம்முடிபு உடைய திருப்பதிகம் `போரானை` (தி.6 ப.50) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும். பாடல்தொறும் `திருவீழிமிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே` எனும் முடிபு உடைமையின் அதனையே போந்த கருத்தாக ஆசிரியர் ஈண்டுக் கூறுவாராயினர்.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்


6. 050    திருவீழிமிழலை              திருத்தாண்டகம்
                                         திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
போர்ஆனை ஈர்உரிவைப் போர்வை யானை,
         புலிஅதளே உடைஆடை போற்றி னானை,
பாரானை, மதியானை, பகல் ஆனானை,
         பல்உயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற
நீரானை, காற்றானை, தீ ஆனானை,
         நினையாதார் புரம்எரிய நினைந்த தெய்வத்
தேரானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :தன்னை எதிர்த்து வந்த யானையின் உதிரப் பசுமை கெடாத தோலை மேலே போர்த்தி , புலித்தோலை ஆடையாக உடுத்தவனாய் , நிலனாய்ச் சந்திரனாய்ச் சூரியனாய் , வானவெளியாய் , நீராய் காற்றாய்த் தீயாய்ப் பல உயிர்களாய் அட்ட மூர்த்தியாய்ப் பரந்து நிற்பவனாய் , பகைவருடைய மும்மதில்களும் எரியுமாறு நினைத்த போது இவர்ந்து சென்ற தெய்வத்தேருடையவனான திருவீழி மிழலைப் பெருமானை அணுகி வழிபடாதவர்கள் தீய வழியிலேயே சென்று கெடுகின்றவர் ஆவார்கள் .


பாடல் எண் : 2
சவந்தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு
         தலைஓடு மயிர்க்கயிறு தரித்தான் தன்னை,
பவந்தாங்கு பாசுபத வேடத் தானை,
         பண்டுஅமரர் கொண்டுஉகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை,
         கழல்அடைந்தான் மேல்கறுத்த காலன் வீழச்
சிவந்தானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :பிணங்களை உடைய சுடுகாட்டுச் சாம்பல், எலும்பு மண்டையோடு பஞ்சவடி என்ற இவற்றை அணிந்தவனாய்ப் பிறப்பைத் தடுக்கின்ற பாசுபத மதத்தினர் விரும்பிக் கொள்ளும் வேடத்தைத் தரித்தவனாய்த் தன்னை ஒழிந்த தேவர்களைத் கொண்டு தக்கன் செய்த வேள்வியை அழித்தவனாய்க் கச்சி ஏகம்பனாய்த் தன் திருவடிகளைத் சார்ந்த அடியவனைக் கோபித்து வந்த கூற்றுவனைக் கீழே விழுமாறு அவனைக் கோபித்து உதைத்தவனாய்த் திரு வீழிமிழலையில் உள்ள பெருமானை அடையாதவர் தீ நெறிக்கண் சேர்கின்றவராவர் .


பாடல் எண் : 3
அன்றுஆலின் கீழ்இருந்துஅங்கு அறம்சொன் னானை,
         அகத்தியனை உகப்பானை, அயன்மால் தேட
நின்றானை, கிடந்தகடல் நஞ்சுஉண் டானை,
         நேரிழையைக் கலந்துஇருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை, மீயச்சூர் மேவி னானை,
         மெல்லியலாள் தவத்தின்நிறை அளக்கல் உற்றுச்
சென்றானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழிருந்து அறத்தை உபதேசித்தவனாய் , அகத்தியனை அவன் பெருமை தோன்ற உயரச் செய்தவனாய்ப் பிரமனும் திருமாலும் தேடுமாறு அனற் பிழம்பாய் நின்றவனாய் , கடல்விடம் உண்டவனாய்ப் பார்வதியோடு சேர்ந்திருந்தே பொறிவாயில் ஐந்து அவித்தவனாய் , மீயச்சூரை உறைவிடமாக விரும்பியவனாய்ப் பார்வதியின் தவத்தின் திண்மையை அளக்கச் சென்றவனாய்த் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .


பாடல் எண் : 4
தூயானை, சுடர்ப்பவளச் சோதி யானை,
         தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானை, சக்கரமாற்கு ஈந்தான் தன்னை,
         சங்கரனை, சந்தோக சாமம் ஓதும்
வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை,
         வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :தூயனாய்ப் பவளத்தின் ஒளியை உடையவனாய் , எல்லா உயிர்களுக்கும் துணையாக நின்ற தாயாய்த் திருமாலுக்குச் சக்கரம் ஈந்தவனாய் , எல்லாருக்கும் நன்மை செய்பவனாய்ச் சந்தோக சாமம் ஓதுபவனாய் , மந்திரங்களை எண்ணுபவர் மனத்து உறைபவனாய்த் திருவைந்தெழுத்தின் பயனைத் தெளியாது ஐயுற்று ஓதுபவர்களுக்குத் தொலைவில் உள்ளவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர்.

  
பாடல் எண் : 5
நல்தவத்தின் நல்லானை, தீதாய் வந்த
         நஞ்சுஅமுது செய்தானை, அமுதம் உண்ட
மற்றுஅமரர் உலந்தாலும் உலவா தானை,
         வருகாலம் செல்காலம் வந்த காலம்
உற்றஅத்தை ஊணர்ந்தாரும் உணரல் ஆகா
         ஒருசுடரை, இருவிசும்பின் ஊர்மூன்று ஒன்றச்
செற்றவனை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :ஞானத்தின் பொருட்டுச் செய்யப்படும் தவத்திற்குப் பயன் அளிக்கும் பெரியவனாய் , தீங்கு செய்வதாய் வந்த விடத்தை அமுதாக உண்டவனாய் , அமுதமுண்ட தேவர்கள் இறந்தாலும் தான் இறவாதவனாய் , முக்காலப் பொருள்களை உணரும் ஞானிகளும் உணரமுடியாத ஒப்பற்ற ஞானப்பிரகாசனாய் , வானத்தின் உலவிய மதில்கள் மூன்றையும் ஒரு சேர அழித்தவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் .


பாடல் எண் : 6
மைவான மிடற்றானை, அவ்வான் மின்போல்
         வளர்சடைமேல் மதியானை, மழையாய் எங்கும்
பெய்வானை, பிச்சுஆடல் ஆடு வானை,
         பிலவாய பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூலம்
பொய்வானை, பொய்இலா மெய்யன் தன்னை,
         பூதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை
செய்வானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :கரிய மேகம் போன்ற நீலகண்டனாய் , வானத்து மின்னல்போலச் சடையில் ஒளிவீசும் பிறை அணிந்தவனாய் , எங்கும் மழையாய் அருளைப் பொழிவானாய் , எங்கும் சென்று பிச்சை எடுப்பானாய்ப் பள்ளம் போன்ற வாயை உடைய பேய்க் கூட்டங்கள் ஆரவாரிக்க நிறைந்த தூணியிலிருந்து அம்பைச் செலுத்துபவனாய்ப் பொய்கலவாத மெய்யனாய்ப் பூமியிலும் மேலுலகங்களிலும் பொருந்தும் வாழ்க்கையில் உயிர்களைப் பிறக்கச் செய்வானாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர்.


பாடல் எண் : 7
மிக்கானை, குறைந்துஅடைந்தார் மேவ லானை,
         வெவ்வேறுஆய் இருமூன்று சமய மாகிப்
புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை,
         பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை, தான்அன்றி வேறுஒன்று இல்லாத்
         தத்துவனை, தடவரையை நடுவு செய்த
திக்கானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :எல்லோருக்கும் மேலானவனாய்க் குறையிரந்து வருபவர்களை விரும்பிக் குறைமுடிப்பவனாய் , அறுவகை வைதிக சமயங்களாகவும் ஆகியவனாய் , எல்லாப் பொருள்களுக்கும் பொதுவானவனாய்த் தேவர்களும் போற்றத்தக்கானாய்த் தன்னைத் தவிர வேறு மெய்ப்பொருள் இல்லாதவனாய் , மேருமலையை நடுவாக வைத்துத் திசைகளைப் பகுக்கச் செய்தவனாய் , உள்ள திருவீழி மிழலையானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவராவர் .


பாடல் எண் : 8
வானவர்கோன் தோள்இறுத்த மைந்தன் தன்னை,
         வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை,
ஊன்அவனை, உயிர்அவனை, ஒருநாள் பார்த்தன்
         உயர்தவத்தின் நிலைஅறியல் உற்றுச் சென்ற
கானவனை, கயிலாயம் மேவி னானை,
         கங்கைசேர் சடையானை, கலந்தார்க்கு என்றும்
தேன்அவனை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :இந்திரனுடைய தோள்களை நீக்கிய வலிமை உடையவனாய் , வளைகுளம் மறைக்காடு என்ற தலங்களில் உறைபவனாய் , உடலாகவும் உயிராகவும் இருப்பவனாய் , ஒரு காலத்தில் அருச்சுனனுடைய தவத்தின் உறுதி நிலையை அறியச் சென்ற வேடுவனாய்க் கயிலாயத்தை விரும்பி உறைபவனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்த் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத் தேன் போல இனியவனாய் , உள்ள திருவீழிமிழலையானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர்.


பாடல் எண் : 9
பரத்தானை, இப்பக்கம் பல ஆனானை,
         பசுபதியை, பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை, வணங்குவார் மனத்து உளானை,
         மாருதம்,மால், எரிமூன்றும் வாய்அம்பு ஈர்க்குஆம்
சரத்தானை, சரத்தையும்தன் தாள்கீழ் வைத்த
         தபோதனனை, சடாமகுடத்து அணிந்த பைங்கண்
சிரத்தானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :மாயைக்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளவனாய் , மாயைக்கு இப்பால் அளவற்ற வடிவங்களும் உடையவனாய் , ஆன்மாக்களுக்குத் தலைவனாய் , அடியவர்களுக்கு முத்தி நிலையைக் காட்டும் மேம்பட்டவனாய்த் தன்னை வணங்குபவர் மனத்து இருப்பவனாய் , வாயுதேவன் திருமால் அக்கினி தேவன் இம்மூவரையும் முறையே அம்பின் சிறகாகவும் அம்பாகவும் அம்பின் கூரிய நுனியாகவும் கொண்டவனாய் , அந்த அம்பையும் பயன் படுத்தாது விடுத்த தவச்செல்வனாய்த் தாருகவனத்து முனிவர் விடுத்த வெண்தலையைச் சடைமுடியில் அணிந்தவனாய்த் திருவீழிமிழலையில் உள்ள பெருமானைச் சேராதார் தீ நெறிக்கண் செல்பவர் ஆவர் .


பாடல் எண் : 10
அறுத்தானை அயன்தலைகள் அஞ்சில் ஒன்றை,
         அஞ்சாதே வரைஎடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை, எழுநரம்பின் இசைகேட் டானை,
         இந்துவினைத் தேய்த்தானை, இரவி தன்பல்
பறித்தானை, பகீரதற்காய் வானோர் வேண்டப்
         பரந்துஇழியும் புனல்கங்கை பனிபோல் ஆங்குச்
செறித்தானை, திருவீழி மிழலை யானைச்
         சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.

         பொழிப்புரை :பிரமனுடைய ஐந்தலைகளுள் ஒன்றனை அறுத்தானாய் , அஞ்சாமல் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் தோள்களை முரித்து அவன் இசைத்த நரம்பின் ஒலியைக் கேட்டவனாய்த் தக்கன் வேள்வியில் சந்திரனைக் காலால் தேய்த்தவனாய் , சூரியன் ஒருவனுடைய பற்களை உடைத்தவனாய்ப் பகீரதனுக்காகவும் தேவர்கள் வேண்டியதற்காகவும் பரவலாக இறங்கிவந்த கங்கையைப் பனித்துளி போலத் தன் சடையில் அடக்கியவனாய் , உள்ள திருவீழிமிழலைப் பெருமானைச் சேராதார் தீ நெறிக் கண் செல்பவராவர் .
                                             திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 254
முன்னாள் அயனும் திருமாலும் முடியும் முதலும் காணாத
பொன்ஆர் மேனி மணிவெற்பை, பூநீர் மிழலை யினில்போற்றி,
பல்நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய்,
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.

         பொழிப்புரை : முற்காலத்தில் நான்முகனும் திருமாலும் முடியும் அடியும் அறிய இயலாத, நீண்ட பொன்னார் மேனியையுடைய மணி மலையான இறைவரை, அழகிய நீர்வளம் கொண்ட திருவீழிமிழலை யில் வணங்கிப், பல நாள்களும் பிரியாது இருக்கும் பண்பால், நாவுக்கரசர், நாளும் வழிபட்டுக் கொண்டிருக்கும் அக்காலத்தில் மறையவர் வாழும் அப்பதியில் மெய்த்தவர்களான அவ்விருவரும், அடியார்களும் தங்கியிருந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 255
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சிலநாள் சென்றதன்பின்,
மாரி சுருங்கி, வளம்பொன்னி நதியும் பருவம் மாறுதலும்,
நீரின் இயன்ற உணவுஅருகி, நிலவும் பலமன் உயிர்கள்எலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர்கூர் வறுமை பரந்ததால்.

         பொழிப்புரை : சீர்மை மிக்க திருத்தொண்டர்கள் இவ்வாறு சில நாள்கள் இருந்து கழிந்த பின்னர், மழைவளம் சுருங்கியதால், வளம் உடைய காவிரி நீர், வரும் பருவத்தில் வாராது மாறுதல் அடைய, அதனால் நீரால் விளையத்தக்க உணவுப் பொருள்கள் குறைய, உணவை முதன்மையாகக் கொண்டு வாழ்கின்ற உயிர்கள் எல்லாம், வறுமை காரணமாகத் துன்ப மிகுதியை அடையுமாறு வறுமை பரவியது.


பெ. பு. பாடல் எண் : 256
வையம் எங்கும் வற்கடமாய்ச் செல்ல, உலகோர் வருத்தம்உற
நையும் நாளில், பிள்ளையார் தமக்கும் நாவுக் கரசருக்கும்
கையில் மானும் மழுவுமுடன் காணக் கனவில் எழுந்துஅருளிச்
செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள்செய்வார்.

         பொழிப்புரை : உலகம் எங்கும் பஞ்சம் நிலவ, உலகத்துயிர்கள் பசியால் வருந்தத் துன்புற்று வாழும் நாளில், சிவந்த சடையையுடையவரான திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர், தம் கைகளில் மானும் மழுவும் காணும்படியாக, ஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் கனவில் தோன்றி அருள் செய்வாராய்.


பெ. பு. பாடல் எண் : 257
"கால நிலைமை யால்உங்கள் கருத்தில் வாட்டம் ஊறீர்,எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க, அளிக்கின் றோம்"என்று
கோலம் காண எழுந்துஅருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்.

         பொழிப்புரை : வறுமை காரணத்தால் உண்டாகும் வேறுபாட்டால் உங்கள் கருத்தில் வாட்டமடைய மாட்டீர்கள் எனினும், உங்களை வழிபட்டு வரும் அடியார்களுக்குத் தருவதற்காக உங்களுக்கு அளிக்கின்றோம் எனக் கூறி, தம் திருக்கோலம் முழுமையும் அவர்கள் கண்டு கொண்டிருக்கும் பொழுதே மறைந்து, திருவீழிமிழலை இறைவர், விளங்கும் பெருமையுடைய பெருமக்களுக்காக உலகம் அறியும்படி படிக்காசு வைத்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 258
விண்நின்று இழிந்த விமானத்தின்
         கிழக்கும் மேற்கும் பீடத்தில்,
அண்ணல் புகலி ஆண்தகையார்
         தமக்கும், ஆண்ட அரசினுக்கும்,
நண்ணும் நாள்கள் தொறும், காசு
         படிவைத்து அருள, நால்நிலத்தில்
எண்இல் அடியா ருடன்அமுது
         செய்து, அங்கு இருந்தார் இருவர்களும்.

         பொழிப்புரை : வானத்தினின்றும் இறங்கிய விமானமான அக்கோயிலின் கிழக்கிலும் மேற்கிலுமாக இறைவன் திருமுன்பு உள்ள பீடங்களில், முறையே ஞானசம்பந்தருக்கும், நாவுக்கரசருக்கும், வணங்கவரும் நாள்தோறும் பெருமையுடைய வீழிமிழலை நாதர், படியாகக் காசை வைத்தருள, இவ்வுலகத்தில் உள்ள எண்ணற்ற அடியார்களுடன் உணவு உண்டு அவ்விருவரும் அங்குத் தங்கியிருந்தனர்.

         குறிப்புரை : கிழக்கில் உள்ள பீடம் இறைவரின் திருமுன்பு உள்ளதாகும். மேற்கிலுள்ள பீடம் இறைவர் திருமுன்பிற்கு நேராகப் பின்புறம் உள்ளதாகும்,


பெ. பு. பாடல் எண் : 259
அல்ஆர் கண்டத் தண்டர்பிரான்
         அருளால் பெற்ற படிக்காசு
பல்ஆ றுஇயன்ற வளம்பெருகப்
         "பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்க என"
         இரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறுஇட்டார்
         துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.

         பொழிப்புரை : கரிய கழுத்தையுடைய தேவ தேவரான இறைவரின் திருவருளால், படியாய்ப் பெற்ற காசினால் பலவாறாகப் பொருந்திய வளங்கள் பலவும் நிறைந்திருப்ப, `முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அடியவர் எல்லாரும் வந்து உணவு உண்ணுக` என நாளின் இருபோதும் பறைசாற்றி உணவு இட்டனர். அதனால் துன்பம் மிகும் வறுமை நோயைத் தொலைத்திட்டனர்.


பெ. பு. பாடல் எண் : 260
ஈசர் மிழலை இறையவர்பால்
         இமையப் பாவை திருமுலைப்பால்
தேசம் உய்ய உண்டவர்தாம்
         திருமா மகனார் ஆதலினால்
காசு வாசி யுடன்பெற்றார்
         கைத்தொண்டு ஆகும் அடிமையினால்
வாசி இல்லாக் காசு படி
         பெற்று வந்தார் வாகீசர்.

         பொழிப்புரை : திருஞானசம்பந்தர் உமையம்மையாரின் திருமுலைப் பாலை, உலகம் உய்யும் பொருட்டு உண்ட திருமாமகனார் ஆதலால், ஈசரான மிழலை நாதரிடத்துக் குற்றம் உடைய காசினைத் திருஞானசம்பந்தர் பெற்றார். கைத் திருத்தொண்டு செய்கின்ற அடிமையானவர் ஆதலால் அக்குற்றம் இல்லாத காசினைத் திருநாவுக்கரசர் பெற்றார்.


பெ. பு. பாடல் எண் : 261
ஆறு சடைமேல் அணிந்துஅருளும்
         அண்ணல் வைத்த படிக்காசால்
ஈறு இலாத பொருள் உடைய
         இருவ ருடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர்மகிழ்ந்து
         உண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவிபோற்ற
         இன்புற்று இருக்கும் அந்நாளில்.

         பொழிப்புரை : கங்கையாற்றைச் சடைமீது அணிந்து விளங்கும் பெருமையுடைய இறைவர் வைத்த படிக்காசின் பேரருளால், முடிவு இல்லாத பொருளைப் பெற்றவர்களான இரு பெருமக்களின் மடங்களிலும், தொண்டர்கள் மகிழ்ந்து நாளும் சோறு உண்ண உண்ணக் குறைவின்றி ஓங்கி வளரும் பெருமையை உலகம் போற்ற இன்பம் அடைந்திருந்த அந்த நாள்களில்,


பெ. பு. பாடல் எண் : 262
காலம் தவறு தீர்ந்து, எங்கும்
         கலிவான் பொழிந்து, புனல்கலந்து,
ஞாலம் எல்லாம் குளிர்தூங்கி,
         உணவு பெருகி, நலம்சிறப்ப,
மூல அன்பர் இருவர்களும்
         மொழிமா லைகளும் பலசாத்தி,
நீல கண்டர் உறைபதிகள்
         பிறவும் வணங்க நினைவுற்றார்.

         பொழிப்புரை : கால நிலைமையால் ஏற்பட்ட வறுமை நீங்கி, ஒலிக்கும் மேகம் மழை பொழிந்து நீர் பெருகிப் பரவி உலகம் எங்கும் குளிர்ச்சி மிகுந்து, உணவுப் பொருள்கள் பெருக விளைந்து, நன்மை பெருக, அதனால் உலகம் நன்மை அடைவதற்குக் காரணமாக நின்ற அப்பெருமக்கள் இருவரும், மொழிமாலையான தேவாரப் பதிகங்கள் பலவற்றையும் பாடிச் சாத்தித், திருநீலகண்டரான இறைவர் எழுந்தருளியிருக்கும் பிற திருப்பதிகளுக்கும் சென்று வணங்க வேண்டும் என்று எண்ணினர்.

         குறிப்புரை : இது பொழுது நாவரசர் சாத்திய மொழி மாலைகள்:

     1.  `பூதத்தின்`                 (தி.4 ப.64)                   - திருநேரிசை
2.    `வான்சொட்ட`         (தி.4 ப.95)                   - திருவிருத்தம்
3.    `என்பொனே`            (தி.5 ப.13)                   - திருக்குறுந்தொகை
4.    `கயிலாய`                  (தி.6 ப.51)                   - திருத்தாண்டகம்
5.     `கண்ணவன்காண்`  (தி.6 ப.52)                     - திருத்தாண்டகம்
6.     `மானேறு`                (தி.6 ப.53)                    - திருத்தாண்டகம்
7.     `கரைந்து`                 (தி.5 ப.12)                   - திருக்குறுந்தொகை.


பெ. பு. பாடல் எண் : 263
வாய்ந்த மிழலை மாமணியை
         வணங்கி, பிரியா விடைகொண்டு
பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப்
         போற்றி, புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பி னால் இறைஞ்சி,
         இசைவண் தமிழ்கள் புனைந்துபோய்ச்
சேர்ந்தார், செல்வத் திருமறைக்காடு
         எல்லை இல்லாச் சீர்த்தியினார்.

         பொழிப்புரை : அரிதில் கிடைக்கப் பெற்ற திருவீழிமிழலையின் பெருமணியாம் இறைவரை வணங்கிப் பிரிய இயலாத நிலையில் விடை பெற்றுக் கொண்டு, அழகான குளிர்ந்த நீரினாலே சூழப்பட்ட திருவாஞ்சியத்திற்குச் சென்று வழிபட்டு, வினையின் நீங்கி விளங்கிய அறிவினனாய சிவபெருமான் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய மற்ற திருப்பதிகளையும் அன்பினால் இறைஞ்சித் தொழுது, இசையும் வளமையுமுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடி, மேற்சென்று, அளவில்லாத சிறப்புடையராய அப்பெருமக்கள் இருவரும், செல்வம் மிக்க திருமறைக்காட்டைச் சென்றடைந்தனர்.

         குறிப்புரை : நாவரசர் திருவாஞ்சியத்திற்கு முன்னரும் (பா.216) எழுந்தருளியிருப்பினும், ஆசிரியர் சேக்கிழார் ஆங்கு அணைந்தார் என்ற அளவிலேயே கூறியுள்ளனர். இம்முறை எழுந்தருளிய பொழுது திருவாஞ்சியத்தைப் போற்றி என்பதால் இதுபொழுது பதிகத்தைப் பாடினர் என்றலே பொருந்துவதாம். அப்பதிகம்: `படையும் பூதமும்` (தி.5 ப.67) - திருக்குறுந்தொகை. `புனிதர் வாழ்பதிகள் ........ வண்டமிழ்கள் புனைந்து` என்பதால் திருவாஞ்சியத்திற்கும் திருமறைக்காட்டிற்கும் இடையில் உள்ள பல பதிகளையும் ஞானசம்பந்தரொடு இவரும் சேர்ந்து சென்றிருப்பதால், அங்கெல்லாம் பதிகங்கள் பாடியே சென்றிருக்க வேண்டும். 

       அப்பதிகளாக அறிவன: திருத்தலையாலங்காடு, திருச்சாத்தங்குடி, திருக்கரவீரம், திருவிளமர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக்கோட்டூர், திருவெண்டுறை, திருத்தண் டலை நீணெறி, திருக்களர் என்பனவாம். (தி.12 பு.28 பா.575) எனி னும் இப்பதிகளுள் திருத்தலையாலங்காடு என்ற பதிக்கு மட்டுமே திருப்பதிகம் கிடைத்துள்ளது, அப்பதிகம்: `தொண்டர்க்கு` (தி.6 ப.79) - திருத்தாண்டகம்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4. 064    திருவீழிமிழலை                 திருநேரிசை
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பூதத்தின் படையர், பாம்பின் பூணினர், பூண நூலர்,
சீதத்தில் பொலிந்த திங்களகொழுந்தர், நஞ்சு அழுந்து கண்டர்,
கீதத்தில் பொலிந்த ஓசைக் கேள்வியர், வேள்வி யாளர்,
வேதத்தின் பொருளர், வீழி  மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : பூதத்தின் படையினராய் , பாம்பாகிய அணிகளை உடையவராய் , பூணூலை அணிந்தவராய் , குளிர்ச்சி , மிகுந்த பிறையைச் சூடியவராய் , விடம் பொருந்திய கழுத்தினராய் , பாடலோடு பொருந்திய ஓசைச் சிறப்பை உடைய வேதம் ஓதுபவராய் , வேள்வியை ஆள்பவராய் வேதத்தின் பொருளராய் வீழிமிழலையில் விகிர்தராம் இயல்புள்ள சிவபெருமான் விளங்குகிறார் .


பாடல் எண் : 2
காலையில் கதிர்செய் மேனி கங்குலில் கறுத்த கண்டர்,
மாலையில் மதியம் சேர்ந்த மகுடத்தர், மதுவும் பாலும்
ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு, அடியார்க்கு என்றும்
வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : காலை ஞாயிற்றின் ஒளியை உடைய திருமேனியராய் , இரவு இருள் போலக் கறுத்த கழுத்தினராய் , மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய் , தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார் .


பாடல் எண் : 3
வருந்தின நெருநல் இன்றாய் வழங்கின நாளர், ஆல்கீழ்
இருந்துநன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர், இருவ ரோடும்
பொருந்தினர், பிரிந்து தம்பால் பொய்யராம் அவர்கட்கு என்றும்
விருந்தினர், திருந்து வீழிமிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : நாளை , நேற்று , இன்று என்னும் முக்காலத்தும் இருப்பவராய் , ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மேம்பட்ட செய்திகளை முனிவர் நால்வருக்கு இயம்பியவராய், திருமாலோடும் பிரமனோடும் பொருந்தியவராய் , தம்மை மறந்து தம்மிடம் பொய்யாக நடந்து கொள்பவருக்குத் தம்மை உள்ளவாறு அறிய இயலாத புதியவராய் வீழிமிழலை விகிர்தர் விளங்குகிறார் .


பாடல் எண் : 4
நிலையிலா ஊர்மூன்று ஒன்ற நெருப்புஅரி காற்றுஅம் பாகச்
சிலையும்நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினால் தரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : எங்கும் இயங்கிக் கொண்டிருந்த மும்மதில்களை அக்கினி , திருமால் , வாயு இவர்களை உறுப்பாகக் கொண்ட அம்பு , மலையாகிய வில் , பாம்பாகிய நாண் இவற்றைக் கொண்டு அழித்தவராய்த் தேவர்களின் தலைமாலையும் , தலைமயிராலாகிய பஞ்சவடி என்னும் பூணூலும் அணிந்தவராய் , யாரும் விலை மதித்தற்கில்லாத வேடத்தை உடையவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .


பாடல் எண் : 5
மறையிடைப் பொருளர், மொட்டின் மலர்வழி வாசத் தேனர்,
கறவுஇடைப் பாலின் நெய்யர், கரும்பினில் கட்டி யாளர்,
பிறைஇடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையுள்நீரர்,
விறகுஇடைத் தீயர், வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவராய், அரும்பு பூக்கும்போது வெளிப்படும் மணமுடைய தேனாகியவராய், கறக்கும் பசுவின் பாலில் கரந்து எங்கும் பரந்திருக்கும் நெய் போன்றவராய், கரும்புச்சாற்றின் கட்டி போன்று இனியராய், பிறை, பாம்பு, கொன்றைமாலை இவற்றைத் தரித்த சடையில் கங்கை நீரை ஏற்றவராய், விறகிடை மறைந்து பரந்திருக்கும் தீப்போலக் கரந்து எங்கும் பரந்தவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .


பாடல் எண் : 6
எண்அகத்து இல்லை அல்லர், உளர்அல்லர், இமவான் பெற்ற
பெண்அகத்து அரையர், காற்றில் பெருவலி இருவர் ஆகி,
மண்அகத்து ஐவர், நீரில் நால்வர், தீ அதனில் மூவர்,
விண்அகத்து ஒருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : எண்ணும் எண்ணத்திலே இல்லாதவரும் அல்லராய், உள்ளவரும் அல்லராய், பார்வதி பாகராய், விண்ணில் ஒலிப் பண்பினராய்க் காற்றில் ஒலி ஊறு என்ற இரு பண்பினராய், தீயிடை ஒலி ஊறு ஒளி என்ற மூன்று பண்பினராய், நீரிடை ஒலி ஊறு ஒளி சுவை என்ற நாற்பண்பினராய், மண்ணில் ஒலி ஊறு ஒளி சுவை நாற்றம் என்ற ஐந்து பண்பினராய் வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .


பாடல் எண் : 7
சந்துஅணி கொங்கை யாள்ஓர் பங்கினார், சாம வேதர்,
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்,
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன்நெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : சந்தனத்தை அணிந்த தனங்களை உடைய பார்வதிபாகர் , சாமவேதர் , அடியேனுக்குத் தந்தையாராகவும் பாட்டனாராகவும் முப்பாட்டனாராகவும் உள்ளவர் . காலை சந்தியிலும் மாலை அந்தியிலும் அந்தணாளர்கள் நெய்யால் வேள்வி செய்யும் விரும்பத் தக்க தீயின் உருவர் என இவ்வாறு வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .


பாடல் எண் : 8
நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம்பூக் கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக்கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன்கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார் .


பாடல் எண் : 9
சித்திசெய் பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம் பறிப்பவர், இறப்பி லாளர்
முத்திசெய் பவள மேனி முதிர்ஒளி நீல கண்டர்,
வித்தினில் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : சித்தியை விரும்புவார் தாம்தாம் சேர்விடஞ் சென்றுகூட வைத்தும் பத்தி செய்பவர்களின் பாவத்தை விலக்கியும் பக்குவர்க்கு முத்தி வழங்கியும் அருள்பவர் பவளம்போல் மேனியும் ஒளியின் முதிர்ந்த நீலகண்டரும் வித்தின் முளைபோல்வாருமாய் உள்ள திருவீழிமிழலை விகிர்தனாரே .


பாடல் எண் : 10
தருக்கின அரக்கன் தேர்ஊர் சாரதி தடை நிலாது
பொருப்பினை எடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டுஅங்கு அலறி மீண்டு நினைந்துஅடி பரவத் தம்வாள்
விருப்பொடும் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

         பொழிப்புரை : செருக்குற்ற இராவணன் தன் தேரைச் செலுத்திய சாரதி தடுத்ததனை மனங்கொள்ளாது கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட தோள்களும் அழகிய பத்துத் தலைகளும் புண்ணாகுமாறு சிவபெருமானால் நெரிக்கப்பட்டு , அலறி , மறுபடி அவன் அன்போடு நினைந்து சிவபெருமான் திருவடிகளைத் துதிக்க , அவனுக்கு வீழிமிழலை விகிர்தனராகிய அப்பெருமான் தம்முடைய வாளினை விருப்பத்தோடு வழங்கினார் .

                                             திருச்சிற்றம்பலம்

                                                                         ----- தொடரும் -----

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...