விராலி மலை - 0354. இலாபமில் பொலாவுரை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இலாபமில் (விராலிமலை)

முருகா!
சமாதி மனோலயம் அருள்


தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனன ...... தனதான


இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
     ரியாவரு மிராவுபக ...... லடியேனை

இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
     மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய

சலாபவ மலாகர சசீதர விதாரண
     சதாசிவ மயேசுரச ...... கலலோக

சராசர வியாபக பராபர மநோலய
     சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே

நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
     நியாயப ரிபாலஅர ...... நதிசூடி

நிசாசர குலாதிப திராவண புயாரிட
     நிராமய சரோருகர ...... னருள்பாலா

விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
     வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா

விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
     விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இலாபம் இல் பொ(ல்)லா உரை சொலா மன தபோதனர்,
     இயாவரும் இராவு  பகல்.....        அடியேனை,

இராகமும் விநோதமும் உலோபமுடன் கோகமும்
     இலான், இவனு மாபுருஷன்.....     என ஏய,

சலாப அமல ஆகர சசீதர விதாரண!
     சதாசிவ! மயேசுர!.....               சகலலோக

சராசர வியாபக! பராபர! மநோலய
     சமாதி அநுபூதி பெற.....            நினைவாயே.

நிலா விரி நிலா மதி, நிலாத அநில அசன
     நியாய பரிபால அர,....            நதிசூடி,

நிசாசர குல அதிபதி ராவண புய அரிட,
     நிர் ஆமய, சரோருக அரன்,..... அருள்பாலா!
 
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இத ஆகவ
     வியாதர்கள் விநோத மகள்..... மணவாளா!

விராவு வயலார் புரி, சிராமலை, பிரான்மலை,
     விராலிமலை மீதில்உறை.....       பெருமாளே.


பதவுரை


      நிலா விரி நிலாமதி --- சந்திரிகை விரிந்து ஒளிசெய்கின்ற பிறைச் சந்திரனையும்,

     நிலாத அநில அசனம் --- நில்லாது அலைகின்ற காற்றை உணவாகக் கொள்ளுபவனும்,

     நியாய பரிபால --- நியாயத்தைக் காக்கவல்லவனும் ஆகிய,

     அர ---- ஆதிசேடனாகிய பாம்பையும்,

     நதி சூடி --- கங்காநதியையும் சூடினவரும்,

     நிசாசரகுல அதிபதி --- அரக்கர் குலத்துக்குத் தலைவனான,

     ராவண புய அரிட --- இராவணனுடைய தோள்களை வருந்தச் செய்தவரும்,

      நிர் ஆமய --- நோயற்றவரும்,

     சரோருக அரன் --- தாமரையின் வீற்றிருப்பவருமான சிவபெருமான்,

     அருள் பாலா --- அருளிய புதல்வரே!

     வில் ஆசுகம் வலார் எனும் --- வில்லிலும், அம்புகள், விடுதலிலும் வல்லவர் என்னும்

     உலாச இத --- மகிழ்ச்சியினால் இன்பங்கொண்டு,

     ஆகவ --- போர் செய்யும்,

     வியாதர்கள் --- வேடர்களின்,

     விநோத மகள் மணவாளா --- அற்புதப் புதல்வியாகிய வள்ளி நாயகியின் கணவரே!

      விராவு வயல் ஆர்புரி --- பொருந்திய வயலூர்,

     சிராமலை --- திரிசிராப்பள்ளி,

     பிரான் மலை --- கொடுங்குன்றம் இவற்றில் வாழ்வதுடன்,

     விராலிமலை மீதில் உறை --- விராலிமலையின் மேலும் வாழ்கின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      இலாபம் இல்பொலா உரை சொலா மன தபோதனர் --- பயன் இல்லாத பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தையுடைய தவமுனிவர்கள்,

     இயாவரும் --- எல்லோரும்,

     இரவு பகல் --- இரவும் பகலும்,

     அடியேனை --- அடியேனைக் குறித்து, இவன்,

     இராகமும் --- ஆசையும்,

     விநோதமும் --- விளையாடல்களும்,

     உலோபமுடன் --- உலோப குணமும்,

     மோகமும் இலான் --- காம மயக்கமும் இல்லாதவன்,

     இவனும் மாபுருஷன் என ஏய --- இவனும் ஓர் உயர்ந்த உத்தம புருஷன் என்று சொல்லும் சொல் பொருந்தும் படியாக,

     சலாபம் --- இனிய குணத்ததான,

     அமல ஆகர --- தூய்மைக்கு இருப்பிடமான,

     சசீதர --- சந்தினைத் தரித்த,

     விதாரண --- கருணை நிறைந்தவேர!

     சதாசிவ --- சதாசிவமாக இருப்பவரே!

     மயேசுர --- மகேச்சுரரே!

     சகல லோக --- எல்லாவுலகங்களிலும் உள்ள,

     சர அசர வியாபக --- இயங்குவன நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவரே!

     பராபர --- பரம்பொருளே!

     மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே --- மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை அடியேன் பெறுமாறு நினைத்தருள வேணும்.


பொழிப்புரை


     சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைச்சந்திரனையும், நிலைபெறாது அலைகின்ற காற்றைப் பருகுகின்றவனும், நீதி நெறிகளைக் காப்பவனுமான ஆதிசேடனையும், கங்கா நதியையும், சூடியவரும், அரக்கர் குலத் தலைவனான இராவணனுடைய தோள் வருந்துமாறு செய்தவரும், நோயற்றவரும, தாமரையில் வாழ்பவருமாகிய சிவபெருமானுடைய குமாரரே!

     வில்லில் அம்பு விடுவதில் வல்லவர்களும், மனமகிழ்ச்சியுடன் போர் புரிபவருமான வேடர்களின் அற்புதமான குமாரியாகிய வள்ளிபிராட்டியின் கணவரே!

     பொருந்திய வயலூரிலும், திரிசிராமலையிலும், பிரான்மலையிலும், விராலிமலையிலும், வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே!

     பயனற்ற வார்த்தகைளச் சொல்லாத நன் மனமுடைய தவமுனிவர் யாவரும் இரவும் பகலும் அடியேனைக் குறித்து, இவன், ஆசையும், விளையாடல்களும், உலோபமும், மோகமும் இல்லாத பெரிய புருஷன் என்று கூறும் சொல் எனக்குப் பொருந்துமாறு,

     இனிய குணத்ததான, தூய்மைக்கு இருப்பிடமான சந்திரனைத் தரித்த கருணை நிறைந்தவரே! சதாசிவ மூர்த்தியே! மகேச்சுரரே! எல்லா வுலகங்களிலும் உள்ள அசையும் பொருள் அசையாத பொருள் என்ற எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவரே! பரம்பெருளே!

     மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றி நிற்கும் நிலையை அடியேன் பெறத் தேவரீர் நினைந்தருவேண்டும்.

விரிவுரை
 

இலாபம் இல் பொலா உரை ---

பயனில்லாத தீய சொற்களைப் பேசுவர் சிலர்.

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்,
மக்கட் பதடி எனல்                               --- திருக்குறள்.


மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
     வாய் இலாதவன் ஒரு பதர்;
  வாள்பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
     மனக்கோழை தான்ஒரு பதர்;

ஏறா வழக்குஉரைத்து அனைவரும் சீசியென்று
     இகழநிற் பான்ஒரு பதர்;
  இல்லாள் புறஞ்செலச் சம்மதித்து அவளோடு
     இணங்கிவாழ் பவன்ஒரு பதர்;

வேறுஒருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி
     வீண்பேசு வான்ஒரு பதர்;
  வேசையர்கள் ஆசைகொண்டு உள்ளளவும் மனையாளை
     விட்டுவிடு வான்ஒரு பதர்;

ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்
     அமல! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!                       --- அறப்பளீசுர சதகம்.

தபோதனர் ---

வீண் வார்த்தை பேசாத முனிவர் பயனுடைய சொற்களையே பகர்வார்கள்.

அடியேனை இராகமும் விநோதமும் உலோபமுடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய:-

தவமுனிவர்கள் என்னைப் பார்த்து “இவன் ஆசை, களியாட்டம், உலோபம், மோகம் முதலிய குற்றங்கள் இல்லாதவன்; உத்தமமான சிறந்த புருஷன்” என்று புகழ வேண்டும். பெரியோர்களால் பாராட்டப்பட வேண்டும்.

மநோலய சமாதி அநுபூதி பெற ---

அஷ்டாங்க யோகத்தில் சமாதி எட்டாவது படி. அங்கு மநோலயம் உண்டாகும்.

பகர ஒணாதது சேர ஒணாதது
   நினைய ஒணாதது ஆ, னதயாபர
   பதி அதான சமாதி மநோலயம் வந்து தாராய்”         ---  (தறையின்மா) திருப்புகழ்.

நிலா விரி நிலாமதி ---

நிலா - சந்திரிகை. அமிர்த சீத ஒளியை உலகெங்கும் பரப்புகின்ற சந்திரன்.

நிலாதவ நிலாசன ---

நிலாத அநில அசன.

எங்கும் நில்லாமல் அலைகின்ற காற்றை ஆகாரமாகக் கொள்ளும் பாம்பு.

பாம்புக்கு காற்று ஆகாரம்.

காலே மிகவுண்டு காலே இலாத கணபணம்”  --- கந்தரலங்காரம்.

நியாய பரிபால அர ---

அர - பாம்பு;இது ஆதிசேடனைக் குறிக்கின்றது. ஆதிசேடன் நாகராஜன். சிறந்த நியாயத்தைப் பரிபாலிக்கன்றவன். நல்ல அறிஞன். அறப்பண்புள்ளவன்.

ஆதிசேடனைச் சிவபெருமான் நாகாபரணமாக அணிந்திருக்கின்றார்.


ராவண புய அரிட ---

அரிட்டம் - கேடு. இராவணன் சிவபெருமானை மதியாது வெள்ளிமலையைப் பேர்த்து எடுத்தான். சிவபெருமான் புன்னகை புரிந்து திருவடியின் விரலின் நகத்தினால் சிறிது ஊன்றினார். அவன் புயம் நெரிந்து ஓ என்று கதறி அழுதான். அழுததனால் “இராவணன்” என்று பேர் பெற்றான்.

பிரமதேவருடைய புதல்வர் புலத்தியர். புலத்தியருடைய புதல்வர் விச்சிரவசு.விச்சிரவசு என்பவருடைய மகன் குபேரன்.

விச்சிரவசு என்ற அந்தண முனிவரிடம் கேகசி என்ற அரக்க மகள் நெடுநாள் பணிவிடை புரிந்தாள்.

மாலி, சுமாலி, மாலியவான் என்ற மூன்று அசுர வேந்தர்களில் நடுப்பிறந்த சுமாலியின் மகள் கேகசி.

இவள் புரிந்த பணிவிடையை மெச்சி என்ன வரம் வேண்டும் என்றார் விச்சிரவசு. அவள் புத்திர வரம் கேட்டாள்.

அந்த அரக்கியின்பால் விச்சிரவசு என்ற முனிவருக்குப் பிறந்தவர்கள் தசக்கிரீவன், கும்பகர்ணன், வீடணன், சூர்ப்பணகை என்ற நால்வரும்.

தசக்கிரீவன் தன் தமையனாகிய குபேரனுடன் போர் புரிந்து அவனுடைய புஷ்பக விமானத்தைக் கவர்ந்து கொண்டான்

அவ் விமானம் ஊர்ந்து விண்மிசை சென்றான். திருக்கயிலாய மலைக்குமேல் விமானம் செல்லாமல் தடைப்பட்டது. “செல்” “செல்” என்று செலுத்தினான்

திருக்கயிலாயமலைத் திருவாயிலைப் பொற்பிரம்பு தாங்கிக் காவல் புரிகின்ற திருநந்திதேவர் நகைத்து, “தசக்கிரீவா! இது சிவமூர்த்தி எழுந்தருளியுள்ள திருக்கயிலாயமலை. இது தேவர்களும் மூவர்களும் கதிர் மதியாதிகோள்களும் விண்மீன்களும் வலம் வரத்தக்க பெருமையுடையது; நீ வலமாகப் போ” என்று கூறி அருளினார். தசக்கிரீவன் அகந்தையால் சினந்து, “குரங்குபோல் முகம் உடைய நீ எனக்குப் புத்தி புகட்டுகின்றனையா?” என்றான்.

திருநந்திதேவர் சிறிது சீற்றங்கொண்டு, “மூடனே என்னைக் குரங்குபோல் என்று பழித்தபடியால் உனது நாடு நகரங்களும் தானைகளும் குரங்கினால் அழியக் கடவது” என்று சாபமிட்டனர். இதைக் கேட்டுந் திருந்தாத அக்கொடிய அரக்கன் விமானத்தை விட்டு இறங்கி, வெள்ளி மலையைப் பேர்த்து அசைத்தான். உமாதேவியார் “பெருமானே! மலையசைகின்றதே” என்று வினவியருளினார். சிவமூர்த்தி “தேவி! ஒரு மூட அரக்கன் நம் மலையைப் பேர்த்து அசைக்கின்றான்” என்று கூறி, ஊன்றிய இடச் சேவடியின் பெருவிரல் நகத்தால் ஊன்றி யருளினார்.

அவன் அப்படியே மலையின் கீழ் அகப்பட்டுக்கொண்டு என்பு முறிந்து உடல் நெரிந்து “ஓ” என்று கதறி அழுதான்

சிவமூர்த்தி நகம் ஒன்றால் அடர்க்க அகப்பட்டு அழுத இராவணனை, ஸ்ரீராமர் எழுபது வெள்ளம் வானரங்கள் புடைசூழப் பத்து நாள் போரிட்டு அழித்தார்.

"ஓ" என்று கதறி அழுததனால் இராவணன் என்ற பேர் உண்டாயிற்று.

அருவரை எடுத்த வீரன் நெரிபட வீரற்கள் ஊணும் அரன்”        ---திருப்புகழ்

சரோருக அரன் ---

சரோருகம் - தாமரை; சிவபெருமான் தாமரையில் வீற்றிருக்கின்றார்.

பதும நன்மலரது மருவிய சிவன்”  --- திருஞானசம்பந்தர்

விலாசுகம் வலார் ---

வில் ஆசுகம்.ஆசுகம்-அம்பு. வில்லிலிருந்து அம்புவிடுவதில் வல்லவர்கள் வேடவர்கள்.

ஆகவ வியாதர்கள் ---

ஆகவம் - போர். வியாதர் - வேடர். வேடர்கள் போர் புரிவதில் சமர்த்தர்கள்.

விராவு வயலார் புரி சிராமலை பிரான்மலை ---

வயலூர், திருச்சிராப்பள்ளி, பிரான்மலை என்ற கொடுங்குன்றம். இவை விராலிமலைக்கு அருகில் விளங்குகின்றன.

கருத்துரை

விராலிமலையுறை விமலா! சமாதி மநோலயம் அடியேனுக்குக் கிடைக்க அருள்புரிவீர்.




        


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...