திருச்செங்கோடு - 0399. வருத்தம் காண




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வருத்தம் காண (திருச்செங்கோடு)

முருகா!
எனது பாதக மலம் தீர,
உனது பாத கமலத்தை அருள்.


தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
     தனத்தந் தான தானன ...... தனதான


வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
     மயக்கம் பூண மோதிய ...... துரமீதே

மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
     மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
     பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே

பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
     பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே

இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
     எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா

இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
     எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத்

திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
     செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே

திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
     திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வருத்தம் காண நாடிய குணத்து, அன்பு ஆன மாதரும்,
     மயக்கம் பூண மோதிய ...... துர மீதே,

மலக்கம் கூடி ஏயின உயிர்க்கும் சேதம் ஆகிய,
     மரிக்கும் பேர்களோடு உறவு ...... அணியாதே,

பெருத்தும் பாவம் நீடிய, மலத்தின் தீமை கூடிய
     பிறப்பும் தீரவே, உனது ...... இருதாளே

பெறத் தந்து ஆளவே, உயர் சுவர்க்கம் சேரவே, அருள்
     பெலத்தின் கூர்மை ஆனது ...... மொழிவாயே.

இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி, வேல்கொடு
     எதிர்த்தும் சூரர் மாளவெ ...... பொரும்வேலா!

இசைக்கும் தாள மேளமெ தனத்தந் தான தானன
     என, திண் கூளி கோடிகள் ...... புடைசூழ,

திருத்து அன்பாகவே ஒரு மயில் கொண்டு ஆடியே, புகழ்
     செழித்து, அன்பாக வீறிய ...... பெருவாழ்வே!

திரள்சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும், காவி சூழ்தரு
     திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே.


 பதவுரை

     இரத்தம் பாய --- உதிரம் பெருகிப் பாயும்படி,

     மேனிகள் உரத்தும் சாடி --- உடலிலும் மார்பிலும் தாக்கி,

     வேல் கொடு --- வேலாயுதத்தைக் கொண்டு,

     எதிர்த்தும் --- எதிர்த்தும்,

     சூர் மாளவெ பொரும் வேலா --- சூரபன்மன் இறக்கப் போர் புரிந்த வேலவரே!

      இசைக்கும் தாள மேளம் --- ஒலிக்கின்ற தாளமும் மேளமும்,

     தனத்தந் தான தானன என --- தனத்தந்தான தானன என்றும் முழக்கஞ் செய்ய,

     திண் கூளி கோடிகள் புடை சூழ --- வலிமையுடைய சிவ கணங்களாகிய பூத கணங்கள் கோடிக் கணக்கில் அருகில் சூழ,

     திருத்து அன்பாக --- திருந்திய அன்புடன்,

     ஒரு மயில் கொண்டாடியே --- ஒப்பற்ற மயிலை விரும்பி ஏறியே,

     புகழ் செழித்து --- புகழ் மிக வளர்ந்து,

     அன்பாக வீறிய --- அன்பே வுருவாக மேம்பட்டு விளங்கும்,   பெரு வாழ்வே --- பெருஞ் செல்வமே!

     திரள் சங்கு ஓடை --- திரண்ட சங்குகள் உள்ள ஓடைகளும்,

     வாவிகள் மிகுந்து --- குளங்களும் மிகுத்து,

     காவி சூழ் தரு --- குவளை மலர்கள் சூழ்ந்து மலரும்,

     திருச்செங்கோடு மேவிய --- திருச்செங்கோட்டில் விரும்பி எழுந்தருளிய,

     பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!

     வருத்தம் காண நாடிய --- வருத்தம் உண்டாகும் வழியையே தேடும்,

     குணத்து அன்பான மாதரும் --- குணத்தில் அன்பு கொண்ட மாதர்களும்,

     மயக்கம் பூண மோதிய --- மயக்கங் கொள்ளும்படி அவர்களுடன் தாக்குண்ட,

     துர மீதே --- இந்த சுமையான உடல் மீதும்,

     மலக்கம் கூடி ஏயின --- துன்பங்களோடு கூடிப்பொருந்திய,

     உயிர்க்கும் சேதம் ஆகிய --- உயிர்கள் நற்கதி காணாது கேடு அடையுமாறு,

     மரிக்கும் பேர்களோடு --- இறந்து போகும் மக்களுடைய,

     உறவு அணியாதே --- உறவைக் கொள்ளாமல்,

     பெருத்தும் பரவம் நீடிய --- பெருத்து வளரும் பாவம்மிக்க,

     மலத்தின் தீமை கூடிய --- மும்மலங்களின் கொடுமை கூடிய,

     பிறப்பும் தீரவே --- இப்பிறப்பு ஒழியவே,

     உமது இரு தாளே --- உமது இரண்டு திருவடிகளை,

     பெற தந்து ஆளவே --- அடியேன் பெறுமாறு தந்து என்னை ஆண்டருளவும்,

     உயர் சுவர்க்கம் சேரவே --- மேலான முத்தியுலகை அடியேன் சேரவும்,

     அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே --- தேவரீர் அருள் பாலிக்கும் சக்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுவீர்.


பொழிப்புரை

     உதிரம் பெருகிப்பாய உடலிலும் மார்பிலும் தாக்கி சூரபன்மன் இறக்க எதிர்த்து வேல் கொண்டு போர் புரிந்த வேலவரே!

     ஒலிக்கின்ற தாளமும் மேளமும் தனத்தந்தான தானன என்று முழங்க, வலிமைமிக்க கோடிக்கணக்கான சிவபூத கணங்கள் அருகில் சூழ, திருந்திய அன்புடன், ஒப்பற்ற மயிலின்மீது விரும்பி ஏறி, புகழ்மிக வளர்ந்து, அன்பே ஒருருவுவாக மேம்பட்டு விளங்கும் பெருஞ் செல்வமே!

     திரண்ட சங்குகள் நிறைந்த ஓடைகளும், குளங்களும், குவளை மலர்களுடன் சூழ்ந்துள்ள, திருச்செங்கோட்டில் விரும்பி வாழும் பெருமிதமுடையவரே!

         வருத்தம் உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும், அவர்களுடன் தாக்குண்ட உடற் சுமையும் ஆகிய துன்பங்கள் கூடிய உயிர்கள் நற்கதி காணாது கேடு அடைய இறந்துபோகும் கீழ்மக்களின் உறவைக் கொள்ளாமல், பெருத்து வளரும் பாவம் மிக்க மும்மலங்களின் கொடுமை கூடிய, இப்பிறப்பு நீங்கும்படி, உமது இருபாத கமலங்களை அடியேன் பெறுமாறு, அடியேனுக்குத் தந்து, என்னை ஆண்டருளவும், மேலான முத்தி உலகத்தில் அடியேன் சேரவும், நீர் அருளும் சக்தியின் நுண் பொருளை அடியேனுக்கு உபதேசித்தருளுவீராக.

விரிவுரை

வருத்தங்காண நாடிய குணத்து அன்பான மாதர் ---

பொதுமாதர்கள் தம்பால் வரும் ஆடவர் வருத்தம் அடையும் வழியையே சதா நாடிச் செல்வர்.

மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே ---

அவமே மாண்டு போகும் கீழ்மக்களுடைய உறவு தீமை பயக்கும். ஆதலால் கீழோர் உறவையகற்ற வேண்டும்.

பிறப்புந்தீர ---

ஒவ்வொருவரும் விரும்பி வேண்டுவது பிறவாமை ஒன்றேயாகும். அது, வேண்டாமையைப் பெற்றால் கிடைக்கும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்              --- திருக்குறள்.

பெலத்தின் கூர்மை ---

பெலம்-சக்தி, கூர்மை-நுண்பொருள். சக்தியின் நுண் பொருளை உபதேசிக்குமாறு இங்கே அடிகளார் இறைவனை வேண்டுகின்றார்.

திரள் சங்கு ஓடை வாவிகள் ---

திருச்செங்கோட்டில் சங்குகள் நிறைந்த ஓடைகளும், குவளை மலர்ந்த குளங்களும் சூழ்ந்திருக்கின்றன.

எம்பெருமான் உறையும் திருத்தலங்கள் வளமையால் உயர்ந்து விளங்கும்.

சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில்
நிறைக்கும் சூல்வளை பால்மணி வீசிய திருச்செந்தூர்” --- (அனிச்சங்கார்) திருப்புகழ்.

கருத்துரை

         திருச்செங்கோட்டு வேலவா! பிறவி தீர உபதேசித்தருள்வீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...