ஞானமலை - 0404. மனையவள் நகைக்க

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மனையவள் நகைக்க (ஞானமலை)

முருகா! திருவடியை அருள்

தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான


மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
     மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும்

மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
     வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை

அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
     னகமதை யெடுத்த சேம ...... மிதுவவோவென்

றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
     மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே

தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
     தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத்

தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
     சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே

எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
     எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா

இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
     இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக
     மகளிரும் நகைக்க, தாதை ...... தமரோடும்

மனமது சலிப்ப, நாயன் உளம்அது சலிப்ப, யாரும்
     வசைமொழி பிதற்றி, நாளும் ...... அடியேனை

அனைவரும் இழிப்ப, நாடு மனஇருள் மிகுத்து, நாடின்
     அகம்அதை எடுத்த சேமம் ...... இதுவோ? என்று

அடியனும் நினைத்து, நாளும் உடல்உயிர் விடுத்த போதும்,
     அணுகி முன் அளித்த பாதம் ...... அருள்வாயே.

தனதன தனத்த தான எனமுரசு ஒலிப்ப, வீணை
     தமருகம் மறைக் குழாமும் ...... அலைமோதத்

தடிநிகர் அயில் கடாவி, அசுரர்கள் இறக்குமாறு
     சமர்இடை விடுத்த சோதி ...... முருகோனே!

எனை மனம் உருக்கி, யோக அநுபுதி அளித்த பாத!
     எழுத அரிய பச்சை மேனி ...... உமைபாலா!

இமையவர் துதிப்ப, ஞான மலைஉறை குறத்தி பாக!
     இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.

 பதவுரை

      தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப,  --- தனதன தனத்த தான என்ற ஒலியுடன் முரசு என்ற வாத்திய ஒலிக்கவும்,

     வீணை, தமருகம் --- வீணை, உடுக்கை,

     மறை குழாமும் அலைமோத --- வேதங்களின் கூட்டம் ஆகிய இவையும், அலை மோதுவது போல் ஒலி செய்யவும்,

     தடி நிகர் அயில் கடாவி --- மின்னல் போல் ஒளிவிடும் வேலாயுதத்தை செலுத்தி,

     அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த --- அசுரர்கள் மாளும்படி போர்க்களத்தில் விடுத்தருளிய

     சோதி முருகோனே --- ஒளி மயமான முருகக்கடவுளே!

      எனை மனம் உருக்கி --- அடியேனுடைய மனத்தை உருக்கி,

     யோக அநுபூதி அளித்த பாத --- யோக அநுபூதியை வழங்கிய திருவடியை உடையவரே!

      எழுத அரிய பச்சைமேனி உமை பாலா --- எழுதுவதற்கு அரிய பச்சை மேனியையுடைய உமாதேவியின் திருக்குமாரரே!

      இமையவர் துதிப்ப --- தேவர்கள் துதி செய்ய,

     ஞானமலை உறை குறத்தி பாக --- ஞானமலையில் வீற்றிருக்கும் வள்ளியம்மையைப் பக்கத்தில் உடையவரே!

      இலகிய சசி பெண் மேவு பெருமாளே --- விளங்குகின்ற இந்திராணியின் மகளாகிய தேவயானை விரும்புகின்ற பெருமையில் மிகுந்தவரே!

      மனையவள் நகைக்க --- மனைவி நகைக்கவும்,

     ஊரின் அனைவரும் நகைக்க --- ஊரில் உள்ள யாவரும் நகை செய்யவும்,

     லோக மகளிரும் நகைக்க, --- உலக மாதர்கள் சிரிக்கவும்,

      தாதை தமரோடும் மனம் அது சலிப்ப --- தந்தையும் சுற்றத்தாரும் உள்ளம் வெறுப்படையவும்,

     நாயன் உளம் அது சலிப்ப --- அடியேனும் உள்ளம் வெறுப்படையவும்,

     யாரும் வசைமொழி பிதற்றி --- எல்லோரும் வசைமொழி கூறி இகழவும்,

     நாளும் அடியேனை அனைவரும் இழிப்ப --- நாள்தோறும் அடியேனை எல்லாரும் இகழவும்,

     நாடும் மன இருள் மிகுந்து --- எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து,

     நாடின் --- ஆராய்ந்து பார்த்தால்

     அகம் அதை எடுத்த சேமம் இதுவோ --- நான் இந்த உடம்பை எடுத்த இன்பம் இதுதானோ!

     என்று அடியேனும் நினைத்து நாளும் --- என்று அடியேனும் நினைத்து, நாள்தோறும் இதனை நினைத்து,

     உடல் உயிர் விடுத்த போதும் --- உடலினின்றும் உயிரைவிடத் துணிந்த சமயத்தில்,

     அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே --- அடியேனிடம் வந்து முன் அருளிய திருவடியைத் தந்து அருளுவீராக.


பொழிப்புரை

         தனதன தனத்த தான என்று முரசு வாத்தியம் ஒலிக்கவும், வீணை, உடுக்கை, வேதங்களின் கூட்டம் ஆகிய இவை கடலின்
அலைபோல் ஒலிக்கவும், போரில் அசுரர்கள் இதற்கு மாறும், மின்னல் போல் ஒளி செய்யவும் வேலாயுதத்தை விடுத்தருளிய சோதி முருகரே!

     அடியேனுடைய மனத்தை உருக்கியோக அநுபூதியைத் தந்த திருவடிகளை உடையவரே!

     எழுதுதற்கு அரிய பச்சை மேனியையுடைய உமையம்மையின் பாலகரே!

     தேவர்கள் துதிக்க, வள்ளியம்மையுடன் ஞானமலையில் வாழ்பவரே!

     இந்திராணியின் புதல்வியாகிய தேவயானை விரும்புகின்ற பெருமிதம் உடையவரே!

     மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும், நகைக்கவும், சுற்றத்தாருடன், தந்தை மனம் சலிக்கவும், அடியேனுடைய உள்ளம் வெறுக்கவும், நாள்தோறும் அடியேனை இகழ்ந்து எல்லோரும் வசைமொழி கூறி இகழவும், எண்ணுகின்ற மனத்தில் இருள் மிகுதியாகவும், இவற்றை எண்ணி அடியேன் இந்த உடம்பை எடுத்ததன் பயன் இதுவோ என்று எண்ணி, உடலிலிருந்து உயிரை விடத்துணிந்தபோது, அடியேன் முன் தோன்றி முன்னே அருளிய திருவடியைத் தந்தருளுவீராக.


விரிவுரை

இத்திருப்புகழ் அருணகிரியாருடைய வரலாற்றின் தொடர்புடையது. முதற்பகுதியில் தன்னை உலகம் பழித்தனால் அவர் உயிர் விடத் துணிந்தபோது, முருகவேள் அவர் முன் தோன்றி திருவடியருளிய அருள் திறத்தைக் கூறுகின்றனர். ஏழாவது அடியிலும் தனக்கு அருளிய அநுபூதியை உரைக்கின்றார்.

மனையவள் நகைக்க ---

அருணகிரிநாதர் இளமையில் பொது மகளிரது உறவு பூண்டு ஒழுகியதனால் மனைவி அவரைக் கண்டு நகைக்கலானாள். இதனால் அருணகிரி நாதருக்கு மனைவியிருந்ததாகத் தெரிகின்றது.

ஊரின் அனைவரும் நகைக்க லோக மகளிரு நகைக்க ---

திருவண்ணாமலையில் வாழ்ந்த மாந்தர்களும், உலகிலுள்ள மாதர்களும் எள்ளி நகையாடினார்கள்.

அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோது ---

எல்லோரும் பழித்து இழித்து உரைத்த படியால், அருணகிரிநாதருடைய மனம் நொந்தது. அதனால் அவர் “நாம் பிறந்த பயன் இதுவோ?” என்று கருதி உள்ளம் உடைந்து திருவருளைத் கோபுரத்தின் உச்சியிலேறி வீழ்ந்தனர். அப்போது
முருகப் பெருமான் அவரைத் திருக்கரத்தால் தாங்கி உய்வித்து உபதேசித்து அருள்புரிந்தார்.

எனை மனமுருக்கி யோக அநுபூதி அளித்த பாத ---

அருணகிரிநாதருக்கு ஆறுமுகப் பெருமானே குருநாதராகத் தோன்றி அநுபூதி யளித்தருளினார். அநுபூதி - இரண்டற்ற நிலை.

கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி சொன்ன எந்தை”       --- தாயுமானார்.

எழுதரிய பச்சைமேனி உமை ---

ஞானமே வடிவாக அம்பிகையைக் கருவி கரணங்களைக் கொண்டு வர்ணங்கள் குழைத்து எழுதிக் காட்ட இயலாது.

கருத்துரை

ஞானமலையுறை ஞானபண்டிதா! முன் அளித்த பாதமலரை மீண்டும் தந்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...