திருச்செங்கோடு - 0383. இடம் பார்த்து
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இடம் பார்த்து (திருச்செங்கோடு)

முருகா!
அழியும் பொருள் உடையாரைப் பாடி அலையாமல்,
அழியாத பதம் தரும் உன்னைப் பாட அருள்.

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
     தனந்தாத் தனத்தம் ...... தனதான


இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
     றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
     கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
     துளங்காத் திடப்புன் ...... கவிபாடி

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
     துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ

கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
     கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய்

கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
     துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா

அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
     கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி

அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
     கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இடம்பார்த்து இடம்பார்த்து இதம் கேட்டு, ரந்தேற்கு
     இணங்காப் பசிப் பொங்கு ...... அனல்மூழ்கி,

இறுங்காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு,
     இரங்கார்க்கு இயல்தண் ...... தமிழ்நூலின்

உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா, தயங்கா,
     துளங்கா, திடப் புன் ...... கவிபாடி,

ஒதும் காப்பு ஒதுங்கா, பதுங்கா புகன்று, த்து
     உறும்பால் குணக்கு அன்பு ...... உறல்ஆமோ?

கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு, ரும் தாட்கு
     அணைந்தாட்கு அணித் திண் ...... புயம் ஈவாய்.

கரும்போற்கு அரும்போர் குளங்காட்டி கண்டு ஏத்து
     செங்கோட்டில் நிற்கும் ...... கதிர்வேலா!

அடைந்தோர்க்கு, உணந்தோர்க்கு, அளிந்தோர்க்கு, அமைந்தோர்க்கு,
     அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று ...... இலது ஆகி

அலைந்தோர்க்கு, லைந்தோர்க்கு, னைந்தோர்க்கு அலந்தோர்க்கு
     அறிந்தோர்க்கு அளிக்கும் ...... பெருமாளே.


பதவுரை

     கடம் --- மதம் பொழியும்,

     தோல் --- யானை,

     கடம் தோற்ற --- காட்டில் எதிர்ப்பட,

     அறிந்தாட்கு --- அறிந்தவளாய்,

     அரும் தாட்கு அணைந்தாட்கு --- அருமையான திருவடியை அணைந்த வள்ளி நாயகிக்கு,

     அணி திண்புயம் ஈவாய் --- அழகிய வலிய புயத்தைத் தந்தவரே!

     கரும்போற்கு அரும்போர் --- கரும்பு வில்லை மன்மதனுக்கு அரிய போராக,

     குளம் காட்டி--- நெற்றிக் கண்காட்டிய சிவபெருமான்,

     கண்டு ஏத்து --- கண்டு போற்றும்

     செங்கோட்டில் நிற்கும் --- திருச்செங்கோட்டில் நிற்கின்ற,

     கதிர் வேலா --- ஒளி மிகுந்த வேலவரே!

     அடைந்தோர்க்கு --- உம்மைச் சரணம் என அடைந்தோர்க்கும்,

     உணந்தோர்க்கு --- மெலிந்தவர்க்கும்,

     அளிந்தோர்க்கு --- கருணையுள்ளம் படைத்தோர்க்கும்,    அமைந்தோர்க்கு --- மனஅமைதி கொண்டவர்க்கும்,

     அவிழ்ந்தோர்க்கு --- பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும்,

     உணற்கு ஒன்று இலது ஆகி அலைந்தோர்க்கு --- உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்க்கும்,

     உலைந்தோர்க்கு --- நிலைகுலைந்தவர்க்கும்,

     இனைந்தோர்க்கு --- கவலையால் வருந்துபவர்க்கும்,

     அலந்தோர்க்கு --- துன்பம் உற்றவர்க்கும்,

     அறிந்தோர்க்கு --- ஞானிகட்கும்,

     அளிக்கும் --- திருவருள் மாபலிக்கும்,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     இடம் பார்த்து, இடம் பார்த்து --- இடம் பார்த்து, இடம் பார்த்து,

     இதம் கேட்டு --- இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி,

     இரந்தோர்க்கு --- யாசிக்கின்ற அடியேனுக்கு,

     இணங்கா --- யாசிப்பதற்கே மனம் பொருந்தி,

     பசி பொங்கு அனல் மூழ்கி --- பொங்கி எழுகின்ற பசி நெருப்பில் மூழ்கி,

     இறும் காற்கு --- அழிந்து போகும் காலத்தில் கூட,

     இறும் காக்கு - உள்ளம் உறுதியடையாதவரிடம், இருப்பார்க்கு

     நெஞ்சார்க்கு ---இரும்பு போன்ற கடின நெஞ்சத்தவரிடம்,

     இரங்கார்க்கு --- இரக்கம் இல்லாதவரிடம்,

     இயல் தண் தமிழ் நூலின் --- தகுதி பெற்ற குளிர்ந்த தமிழ் நூல்களில்,

     உடம் பாட்டுடன் --- மன ஒருமையுடன்,

     பாட்டு இயம்பா --- பாடல்களை கூறி,

     தயங்கா --- வாட்டமுற்று,

     துளங்கா --- மனத்தில் கலக்கங் கொண்டு,

     திட புன் கவி பாடி --- உறுதியுடன் புல்லிய கவிகைப் பாடி

     ஓதும் காப்பு ஒதுங்கா --- சொல்லப்பட்ட காவலுக்கு ஒதுங்கியும்,

     பதுங்கா--- பதுங்கியும்,

     புகன்று ஏத்து உறும்பால் --- தான் கூறிய பாடல்களை மறுபடியும் புகழும் இயல்பினைக் கொண்ட,

     குணக்கு அன்பு உறலாமோ --- குணத்துக்கு நான் அன்பு வைக்கலாமோ?

பொழிப்புரை

மதம் பொழியும் யானை காட்டில் தோன்ற, அறிந்தவளாய், உமது அருமையான திருவடிகளை அணைந்த வள்ளிநாயகிக்கு அழகிய வலிய திருப்புயங்களைத் தந்தவரே!

கரும்பு வில்லுடைய மன்மதனுக்கு அரிய போராக, நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவ பெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில் விளங்கி நிற்கும், ஒளி பெற்ற வேலாயுதரே!

உம்மைத் தஞ்சமாக அடைந்தவர்க்கும், மெலிந்தவர்க்கும், கருணையுடையவர்க்கும், உள்ளம் நெகிழ்ந்தவர்க்கும், உணவு இன்றி அலைகின்றவர்க்கும், நிலையற்று அலைபவர்க்கும், கவலையால் வருந்துவோர்க்கும், துன்பம் உற்றவர்க்கும், ஞானிகட்கும் அருள்புரியும் பெருமிதம் உடையவரே!

எங்கு எவரிடம் போனால் பொருள் கிடைக்கும் என்று, இடம் பார்த்து இடம் பார்த்துப் போய் இதமான மொழிகளைச் சொல்லி யாசிக்கின்ற அடியேன், இணக்கமாக நடந்து, பசித் தீயில் முழுகி இறக்கும் தருவாயினும், உறுதியான உள்ளம் இன்றி, இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், இயலுடன் கூடிய இனிய தமிழ் நூலில், மன ஒருமைப்பாட்டுடன், பாடல்களைக் கூறியும், வாட்டமும் கலக்கமும் அடைந்து, திடத்துடன் புல்லிய கவிகளைப் பாடி சொல்லுகின்ற காவலுக்கு ஒதுங்கியும் பதுங்கியும், மறுபடியும் பாடல் சொல்லிப் புகழும் குணத்துக்கு அடியேன் அன்பு கொள்ளலாமோ?

விரிவுரை

இத்திருப்புகழில் சுவாமிகள் தமிழ்ப் புலவர்கள், பொருளுடையாரைப் புகழ்ந்து பாடி புன்மையுறும் அவல நிலையைக் கண்டிக்கின்றார்.

இடம் பார்த்து இடம் பார்த்து ---

இன்று எங்கே போனால் பொருள் கிடைக்கும்? யாரிடம் போனால் பணம் கிடைக்கும்?” என்ற சிந்தித்துச் செல்லுவார்கள். இடம் பார்த்து இடம் பார்த்துச் சென்று பாடுவார்கள்.

இரந்தேற்கு ---

இரந்தவரே இறந்தவர். இறந்தவர் இறந்தவரல்லர்.

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர், எந்தாய்,
வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவ ரேனும்,
ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.     --- கம்பராமாயணம்.

உலகிலே எல்லாத் தொழிலும் இழிந்தவையல்ல; ஏற்பது ஒன்றே இகழ்ச்சி.

பசிப்பொங்கு அனல் மூழ்கி ---

பசித்தீ கொடிய அனலுக்கு நிகரானது. பசி வந்தால் மானங் குலங் கல்வி முதலிய பத்தும் பறந்து போகும்.

பசி வந்தபோது கண் பார்வை குறையும்; கை கால்கள் தள்ளாடும்; நாடி நரம்பு தளரும்; க்ஷயம், குஷ்டம், ஆஸ்துமா முதலிய நோய்கள் வந்தால் பல வருஷம் அவற்றுடன் போராடிக் காலந் தள்ளலாம்; பசி நோய் வந்தால் சில நிமிஷங்கள் கூட அதனைத் தாங்கிக் கொள்ளமுடியாது.

இறுங்காற் கிறுங்கார்க்கு ---

இந்தத் திருப்புகழில் சுவாமிகள் பதங்களை அமைத்திருக்கின்ற
அழகு மிக மிக வியப்பாக உளது.

இருங் காற் கிறுங்கார்க்
உடம்பாட்டுடன் பாட்
ஒதுங் காப் பொதுங்கா
கடற்தோற் கடந்தோற்
கரும்போற் கரும்போர்க்

இவை மிகவும் சமத்காரமான பிரயோகங்கள். இறும்கால்-அழிந்து போகும் காலம். இருகுதல்-உறுதி யடைதல். இருங்கார்க்கு-உள்ளம் உறுதியடையாதவர். தனக்கு அழிவு வந்த போதும், பக்தி ஞானம் எய்தி உறுதியை நாடாதவர்கள்.

இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு ---

இரும்பு போன்ற நெஞ்சு படைத்தவர்; ஏழை எளியவர்களிடத்தில் சிறிதும் கருணையின்றி இரும்பு மனத்துடன் இருப்பர்.

இரங்கார்க்கு ---

பிறர் படுந்துன்பங்களைக் கண்டு உள்ளம் பச்சாத்தாபப் படாது இருப்பர்.

ஒதுங்காப் பொதுங்கா ---

ஒதுங் காப்பு ஒதுங்கா. "ஓதம் காப்பு" என்ற சொல் சந்தத்துக்காக "ஒதுங் காப்பு" என் வந்தது. காவலர், “அப்படிபோ; இப்படி வா; என்று ஓதுவார்கள்.

குணக்கு அன்புறலாமோ ---

குணத்துக்கு என்ற சொல் குணக்கு என வந்தது. நல்ல இனிய தமிழைக் கற்று, செந்தமிழால் இறைவனைப் பாடாது, காமதேனுவின் பாலைக் கமரில் விட்டதுபோல், இனிய தமிழை கொடாத லோபிகளைப் பாடி அவமாக்குவர். அந்தக் குணம் கூடாது என்று இங்கே அடிகளார் கூறுகின்றார்.

கடந்தோற் கடந்தோற்றறிந்தாள் ---

கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாள். கடம்-மதம்; தோல்-யானை. கடம்- காடு.

மதம் பொழியும் யானையாக விநாயகர் காட்டில் வர வள்ளியம்மை யஞ்சி இறைவனை அடைக்கலம் புகுந்த வரலாற்றை இது தெரிவிக்கின்றது.

கரும்போர்க் கரும் போர்க்குளம் ---

கரும்போன்-கரும்பு வில்லையுடைய மன்மதன். அவனுக்கு அரும் போராக. சிவபெருமான் நெற்றிக் கண்ணால் தண்டனை விதித்தார். குளம்-நெற்றிக் கண்.

அடைந்தோர்க்கு, ணந்தோர்க்கு, ளிந்தோர்க்கு, அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி அலைந்தோர்க்கு உலைந்தோர்க்கு இளைந்தோர்க்கு, அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் ---

சரணமடைந்தவர்; மெலிந்தவர்; இரக்கமுள்ளவர்; உள்ளம் நெகிழ்ந்தவர்; அமைதியுள்ளவர்; உணவின்றி அலைபவர்; உலைபவர்; துன்பத்தால் துடிப்பவர்; வருத்தமுள்ளவர்; அறிஞர்கள்; ஆகிய அனைவர்க்கும் முருகப் பெருமான் அருள் பாலிக்கின்றார்.
  
கருத்துரை

         திருச்செங்கோட்டுத் திருமுருகா! மனிதனைப் பாடாத வரம் அருள் செய்வீர்.


                 

No comments:

Post a Comment

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...