திருச்செங்கோடு - 0397. மெய்ச்சார்வு அற்றே
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மெய்ச்சார்வு அற்றே (திருச்செங்கோடு)

முருகா!
நீ அடியார்க்கு, பாலைக் கற்பகம் போல அருள்பவன்
 

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான


மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
     நிச்சார் துற்பப் ...... பவவேலை

விட்டே றிப்போ கொட்டா மற்றே
     மட்டே யத்தத் ...... தையர்மேலே

பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
     பத்தார் விற்பொற் ...... கழல்பேணிப்

பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
     முற்பா லைக்கற் ...... பகமேதான்

செச்சா லிச்சா லத்தே றிச்சே
     லுற்றா ணித்துப் ...... பொழிலேறுஞ்

செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
     நித்தா செக்கர்க் ...... கதிரேனல்

முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
     முத்தார் வெட்சிப் ...... புயவேளே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மெய்ச்சார்வு அற்றே, பொய்ச்சார்வு உற்றே,
     நிச்ச ஆர் துற்பப் ...... பவவேலை

விட்டு,  ஏறிப்போக ஒட்டாமல், தே
     மட்டே அத் தத்- ...... தையர் மேலே,

பிச்சாய் உச்சாகிப் போர் எய்த்தார்,
     பத்தார் வில்பொன் ...... கழல்பேணி,

பிற்பால் பட்டே, நற்பால் பெற்றார்,
     முன் பாலைக் கற்- ...... பகமே தான்.

செச்சாலிச் சாலத்த் ஏறி, சேல்
     உற்று அணித்துப் ...... பொழில் ஏறும்

செக்கோடைக் கோடுக்கே நிற்பாய்
     நித்தா! செக்கர்க் ...... கதிர் ஏனல்

முச்சாலிச் சாலித்தாள் வெற்பாள்
     முத்துஆர் வெட்சிப் ...... புயவேளே!

முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!
     முத்தா! முத்திப் ...... பெருமாளே.

 
பதவுரை


     செம் சாலி சாலத்து ஏறி --- செந்நெல் கதிர்க் கூட்டத்தில் ஏறி,

     சேல் உற்று --- சேல்மீன்கள் அடைந்து,

     அணிந்து பொழில் ஏறு --- அருகில் உள்ள சோலைகளில் சென்ற சேரும் வளமையுள்ள,

     செங்கோட்டைக் கோடுக்கே நிற்பாய் --- திருச்செங்கோட்டு மலையின் உச்சியில் நிற்பவரே!

     நித்தா --- அழிவில்லாதவரே!

     செக்கர் கதிர் ஏனல் --- சிவந்த கதிர்களைக் கொண்ட,

     தினை முசாலி சாலிதாள் வெற்பாள் --- மூன்று போகம் விளையும் நெற்பயிர்கள் நிறைந்த மலையில் வாழும் வள்ளி பிராட்டியின்,

     முத்து ஆர் --- முத்துமாலை நிறைந்த,

     வெட்சி புய வேளே --- வெட்சி மாலை அணிந்த புயத்தையுடைய உபகாரியே!

     முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!

     முத்தி அத்தா --- காருக பத்தியம் ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூன்று வேதாக்கினிக்கும் தலைவரே!

     சுத்தா --- தூயவரே!

     முத்தா --- முத்துக்குமார சுவாமியே!

     முத்தி பெருமாளே --- முத்தியைத் தரும் பெருமையில் சிறந்தவரே!

     மெய் சார்வு அற்றே --- உண்மையான சார்பை விட்டு,

     பொய் சார்வு உற்றே --- பொய்யான துணையைப் பற்றி,

     நிச்ச ஆர் துற்ப --- எப்பொழுதும் நிறைந்த துன்பமுள்ள,

     பவ வேலை விட்டு ஏறி --- பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரையேறி,

     போக ஒட்டாமல் --- அப்புறம் போக வொட்டாமல்,

     தேம் மட்டே --- தேனும் இனிமையில் குறைந்ததுவே என்று சொல்லத்தக்க,

     அ தத்தையர் மேலே --- அந்த கிளிபோன்ற பொது மாதர் மீது,

     பிச்சு ஆய் --- பைத்தியமாகி,

     உச்சாகி --- உச்ச நிலை அடைந்தவராகி,

     போர் எய்த்தார் --- கலவிப் போரில் இளைத்தவர்கள்,

     பத்தார் --- பக்தர்களின்,

     வில் பொன் கழல் பேணி --- ஒளியும் அழகும் பொருந்திய திருவடியை விரும்பி (அந்த நல்ல தொண்டினால்)

     பின் பால் பட்டே --- பின்பு நல்ல வழியில் நின்று,

      நல் பால் பெற்றார் முன் --- நல்ல ஒழுக்கத்தைப் பெற்றவர்களிடத்தில் முன்,

     பாலை கற்பகமே தான் --- தேவரீர் பாலை வனத்தில் கிடைத்த கற்பகமரம் போல் அருள்வாய்.


பொழிப்புரை

     செந் நெற்பயிர்க் கூட்டங்களின் மீது சேல் மீன்கள் ஏறி, அருகில் உள்ள சோலைகளில் செல்லும் வளமை மிக்க, திருச்செங்கோட்டின் மலையின் உச்சியில் நிற்பவரே!

     என்றும் உள்ளவரே!

     சிவந்த கதிர்களையுடைய தினைப்பயிரும், முப்போகம் விளையும் செந்நெல் வயலும் சூழ்ந்துள்ள மலையில் வாழும் வள்ளிநாயகியின் மார்பில் உள்ள முத்துமாலைகள் பொருந்தும் வெட்சியணிந்த புயங்களுடைய உபகாரியே!

     அநாதி மல முத்தரே!

     ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்ற மூன்று வகையாய வேதாக்கினிகட்குத் தலைவரே!

     தூயவரே!

     முத்தையரே!

     முத்தி நலம் வழங்கும் பெருமிதமுடையவரே!

         உண்மையான சார்பினைத் துறந்து, பொய்ம்மையான சார்பை அடைந்து, நாளும் நிறைந்த துன்பத்தைத் தரும் பிறவிக் கடலைத் தாண்டிக் கரை ஏறி, அப்பால் போகாதபடி, தேனினும் இனிய சொற்களையுடைய கிளி போன்ற பொது மாதர்களின் மீது, பைத்தியமாய், உச்ச நிலையில் சேர்ந்தவராகி, கலவிப் போரில் இளைத்தவர்கள், பக்தர்களின், ஒளியும் அழகும் பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்தொண்டினால், பின்பு நல்ல வழியில் நின்று, நற்குணம் பெற்றவர்களிடத்தில். தேவரீர் பாலைவனத்தில் கிடைத்த கற்பகம் போல் அருள்புரிவீர்.


விரிவுரை

மெய்ச் சார்வு அற்றே ---

ஆன்மா நல்ல உத்தமமான சார்பை அடைதல் வேண்டும்.

சார்பு உணர்ந்து சார்பு கெடஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.                    --- திருக்குறள்.

மூடர்கள் உத்தமரின் சார்பை விடுத்து பொய்ச்சார்பு அடுத்துக் கெடுவர்.

நிச்சார்துற் பவவேலை ---

நிச்ச ஆர் துற்பம். நிச்சம்-நித்தம். ஆர்-நிறைந்த துற்பம்-துன்பம். பவேலை- பிறவிக்கடல்.

விட்டேறிப்போ கொட்டாமல் ---

விட்டு ஏறிப்போக வொட்டாமல் தடுக்கும் மாதராசை

தேமட்டே ---

தேம்-இனிமை. தேன். மட்டு-குறைவு.

மாதர்கள் சொல்லின் இனிமையை நோக்க தேனின் இனிமை குறைந்தது என்ற சொல்லுவர் காமுகர்.

தத்தையர் ---

தத்தை-கிளி. கிளிபோல் கொஞ்சிப் பேசும் பொதுமாதர்.

பிச்சாயுச்சாகி ---

அம்மாதர் மீது பிச்சு-பயித்தியமாவர், உச்சம்-அப்பைத்தியம் உச்சத்தையடைவர்.

போர் எய்த்தார் ---

போர்-கலவிப் போர். எய்த்தல்-இளைத்தல். பொது மாதரின் சேர்க்கைப் போரில் இளைத்த இளைஞர்கள்.

பத்தார் விற்பொற் கழல் பேணி ---

பத்தர்களின் திருவடி ஒளியும் அழகும் பொருந்தியது. வில்-ஒளி. பொன்- அழகு.

பிற்பால் பட்டே ---

அவ்வாறு அடியார்களின் பாதத்துக்குத் தொண்டாகிய பின், அந்த அரிய தொண்டின் பயனால் நல்லவழியில் நிற்கும் தன்மையுண்டாகும். பால்-தகுதி.

நற்பால் பெற்றார் ---

பால்-குணம், நற்குணம் பெற்றவர்கள்.

பாலை கற்பகமே தான் ---

நிழலே இல்லாத - ஈரமே இல்லாத பாலைவனத்தில் ஒரு கற்பகம் எதிர்பட்டால் எத்துணை இன்பம் பயக்கும். அதுபோல் முருகன் அடியார்க்கு அருள்புரிவார்.

அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்
நிழல் மரம்போல் நேர் ஒப்பத் தாங்கி, - பழுமரம்போல்
பல்லார் பயன்துய்ப்ப, தான்வருந்தி வாழ்வதே
நல்ஆண் மகற்குக் கடன்                      --- நாலடியார்.

நிழலின் நீள் இடைத் தனிமரம்போல
   இரவலர்க்கு ஈயும் வள்ளியோன்”           --- புறநானூறு.

அருஞ்சுரத்தின் மரம்போல் அடைந்தார்க்கு
   அளித்தல் அவற்கு இயல்பு”       --- நச்சினார்க்கினியர் உரை.

மனிதன் முதலில் பிழை புரிந்திருப்பினும், பின்னர் பிழை செய்தோமே என்று வருந்தி, அதனின்றும் திருந்தி, அடியாருடன் பொருந்தி நிற்பானேல், முன் செய்த பிழைகளை முருகவேள் மன்னித்து, பாலை வனத்தின் கற்பகம் போல் அருள்புரிவான் என்று சுவாமிகள் திருப்புகழில் மிகமிக அருமையாக உரைக்கின்றார்.

அருணகிரியார் தம் வரலாற்றில் கண்ட அனுபவத்தையே இங்கு கூறுகின்றார். புல்லறிவினால் உழன்றவர்க்கு நல்லறிவு தோன்ற “பாலைக் கற்பகம்” பன்னிருகைப் பரமன் என்று மிக அற்புதமாகக் கூறும் அழகு மிகவும் அருமைப்பாடுடையது. தித்திக்குஞ் சொல்.

செச்சாலிச் சாலத் தேறிச் செல் ---

திருச்செங்கோட்டின் வளமையைக் கூறுகின்ற அழகு சுவையாகவுளது. செஞ்சாலி என்ற செச்சாலி என வந்தது.

சாலி-நெற்பயிர். சாலம்-கூட்டம். சேல் மீன்கள் நெற்பயிர்கள் மீது ஏறி சோலையில் சென்று உலாவும் வளமையுடையது திருச்செங்கோடு.

முச்சாலிச் சாலித்தாள் வெற்பாள் ---

மூன்று போகம் விளையும் நெல்லின் தாள்களும் தினைக் கதிர்களும் சூழ்ந்த மலையில் வாழ்ந்த வள்ளி.

முத்தீ ---

வேதாக்கினிகள் மூன்று, வட்ட வடிவாகவும், சதுர வடிவாகவும், அர்த்த சந்திர வடிவாகவும் உள்ள குண்டத்தில் வளர்க்கும், காருகபத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்கினி என்ற மூவகை வேள்வித்தீ.

கருத்துரை

         திருச்செங்கோட்டுத் திருமுருக! நீ அடியார்க்குப் பாலைக் கற்பகம் போன்றவன்.


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...