திருச்செங்கோடு - 0389. துஞ்சு கோட்டி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

துஞ்சு கோட்டி (திருச்செங்கோடு)

முருகா!
உலக மயலில் உழலாவண்ணம்,
ஞானோபதேசம் தந்து ஆட்கொள்.

தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
     தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
          தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான


துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
     கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்
     கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார்

தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
     தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
     துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே

கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
     கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
     கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ

கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
     தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
     தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ

வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
     துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
     பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே

வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
     தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
     தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே

கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
     குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
     கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே

கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
     கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
     கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


துஞ்சு கோட்டிச் சுழல்கண் காட்டி,
     கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டி,
     கொண்டு அணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார்,

தொண்டை வாய்ப்பொன் கருப்பஞ் சாற்றைத்
     தந்து சேர்த்து, கலக்குந் தூர்த்த,
     துன்ப வாழ்க்கைத் தொழில்பண்டு ஆட்டத்து.... உழலாதே

கஞ்சம் வாய்த்திட்டவர்க்கும், கூட்டிக்
     கன்று மேய்த்திட்டவர்க்கும், கூற்றைக்
     கன்ற மாய்த்திட்டவர்க்கும் தோற்றக் ...... கிடையா நீ,

கண்டு வேட்டுப் பொருள் கொண் டாட்டத்து,
     இன்ப வாக்யத்து எனக்குங் கேட்கத்
     தந்து காத்து, திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ?

வஞ்சமாய்ப் புக்கு ஒளிக்கும் சூல்கை,
     துன்று சூர்ப்பொட்டு எழச்சென்று ஓட்டி,
     பண்டு வாட்குள் களிக்கும் தோள் கொத்து ......உடையோனே!

வண்டு பாட்டு உற்று இசைக்குந் தோட்டத்
     தண் குரா பொற்பு உரக் கும்பு ஏற்றித்
     தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து....இளையோனே!

கொஞ்சு வார்த்தைக் கிளி, தண் சேல்கண்,
     குன்ற வேட்டிச்சியைக் கண் காட்டிக்
     கொண்டு, வேட்டுப் புனப் பைங் காட்டில் ...... புணர்வோனே!

கொங்கு உலாத்தித் தழைக்கும் கா, பொன்
     கொண்டல் ஆர்த்துச் சிறக்கும் காட்சிக்
     கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே.


 பதவுரை


     வஞ்சம் ஆய் புக்கு ஒளிக்கும் --- வஞ்சகமாகப் புகுந்து ஒளிக்கும்,

     சூல் கை --- சூலம் ஏந்திய கையையுடைய,

     துன்று சூர்பொட்டு எழ --- நெருங்கிய சூரபன்மன் அழியும்படி,

     சென்று ஓட்டி --- போர்க்களஞ் சென்று அவனை ஓட வைத்து,

     பண்டு வாட்கு உள் களிக்கும் --- முன்னாள் வாளாயுதத்துள் செலுத்தி மகிழும்,

     தோள் கொத்து உடையோனே --- கொத்தாக தோள்களை உடையவரே!

     வண்டு பாட்டு உற்று இசைக்கும் --- வண்டு பொருந்திய பாடல் பாடும்,

     தோட்ட --- தோட்டத்தில் உள்ள,

     தண் குரா பொற்பு உர --- குளிர்ந்த குரா மலர் அணிந்த அழகிய திருமார்பை உடையவரே!

     கும்பு ஏற்றி தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே --- கும்பு கூட்டி அடியார் கூட்டத்தில் இருந்து காட்சியளிக்கும் இளம் பூரணரே!

     கொஞ்சு வார்த்தை கிளி --- கொஞ்சும் சொற்களையுடைய கிளி போன்றவரும்,

     தண் சேல்கண் --- குளிர்ந்த சேல் மீன் போன்ற கண்களை யுடையவரும்,

     குன்ற வேட்டிச்சியை --- மலையில் வாழும் வள்ளி நாயகியாரை,

     கண் காட்டி கொண்டு --- கண்காட்டி அழைத்துபோய்,

     வேட்டுபுன பைகாட்டில் புணர்வோனே --- அவரை விரும்பி தினைப்புனத்துக்கு அடுத்த பசுங்காவில் அணைந்தவரே!

     கொங்கு உலாத்தி --- வாசனையை வீசி உலவச்செய்து,

     தழைக்கும் கா --- தழைத்துள்ள சோலைகளில்,

     பொன் கொண்டல் ஆர்த்து சிறக்கும் காட்சி --- அழகிய மேகங்கள் நிறைந்து சிறக்குங் காட்சியைக் கொண்ட,

     கொங்கு நாட்டு --- கொங்கு நாட்டில் உள்ள,

     திருச்செங்கோட்டு --- திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     துஞ்சு கோட்டி சுழல் கண் காட்டி --- சோர்வு உற்றதுபோல், கண்களைச் சுழற்றிக்காட்டி,

     கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி --- தனங்கள் தெரியும்படி பலருக்கும் காட்டி,

     கொண்டு அணாப்பி --- அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி,

     துலக்கம் சீர்த்து --- தங்கள் பெருமை விளங்க,

     திரி மானார் --- திரிகின்ற மாதர்களின்,

     தொண்டை வாய் --- கொவ்வைக் கனி போன்ற வாயிதழின்,

     பொன் கருப்பம்சாற்றை தந்து --- அழகிய கருப்பஞ் சாற்றினைப் போன்ற இனிமையைத் தந்து,

     சேர்த்து கலக்கும் தூர்த்த --- அணைத்துச் சேரும் கொடிய,

     துன்ப வாழ்க்கை தொழில் --- துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய,

     பண்டு ஆட்டத்து உழலாதே --- பழைய ஆட்டங்களில் சுழன்று திரியாமல்,

     கஞ்சம் வாய்த்திட்டவர்க்கும் --- தாமரை மலரில் வாழும் பிரம தேவனுக்கும்,

     கன்று மேய்த்திட்டவர்க்கும் --- ஒன்று சேரச்செய்து கன்றுகளை மேய்த்த திருமாலுக்கும்,

     கூற்றை கன்ற மாய்த்திட்டவர்க்கும் --- இயமன் வாட்டமுற்று மாயும்படிச் செய்த சிவமூர்த்திக்கும்,

     தோற்ற கிடைய நீ --- காண்பதற்கு அரியவராகத் திகழும் தேவரீர்,

     கண்டு --- அடியேனைப் பார்த்து,

     வேட்டு --- என்மீது பொருள் அமைந்த,

     இன்ப வாக்யத்து --- இன்ப உபதேச வாக்கியத்தை,

     எனக்கும் கேட்க --- அடியேனும் கேட்குமாறு,

     தந்து காத்து --- உபதேசித்துக் காத்தருளி,

     திருக்கண் சாத்த பெறுவேனோ --- உமது திருக்கண்ணோக்கம் படுமாறு அருளும் பெரும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?

பொழிப்புரை

     வஞ்சனையாய் கடலிற் சென்று ஒளித்த சூலத்தையேந்திய சூரபன்மனை ஓடச்செய்து, அவனை வேலினால், அழியும்படிச் செய்து மகிழும் பன்னிரு தோள்களை உடையவரே!

     வண்டுகள் சென்று இசைபாடும், சோலையில் மலரும் குளிர்ந்த குராமலர் அணிந்த அழகிய திருமார்பை உடையவரே!

     கூட்டமாகக் கூடிய அடியார்களின் சபை நடுவில் காட்சியளிக்கும் இளம் பூரணரே!

     கொஞ்சும் கிளிபோன்ற சொற்களை யுடையவரும், குளிர்ந்த சேல் மீன்போன்ற கண்களையுடையவரும், மலையில் வாழ்பவருமாகிய வள்ளி பிராட்டியாரைக் கண்காட்டி அழைத்துக் கொண்டு போய், வேடர்களின் தினைப்புனம், உள்ள கானகத்தில் தழுவிக் கொண்டவரே!

     வாசனை வீசிப் பரப்பித் தழைக்கின்ற சோலைகளில் மேகங்கள் நிறைந்து சிறக்குங் காட்சியுடைய கொங்கு நாட்டில் விளங்கும் திருச்செங்கோட்டில் வாழும் பெருமிதம் உடையவரே!

     சோர்வுற்றது போல் கண்களைச் சுழற்றிக் கொண்டுபோய் ஏமாற்றித் தங்கள் பெருமை ஓங்கத் திரிகின்ற பொது மாதர்களின், கொவ்வைக் கனி போன்ற வாயிதழின் கரும்புச் சாறு போன்ற இனிமையைத் தந்து மறுவுகின்ற கொடிய துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களில் அடியேன் சுழன்று திரியாமல், தாமரை மலரில் வாழும் பிரம தேவனுக்கும், ஒன்றுபடுத்திப் பசுவின் கன்றுகளை மேய்யத்த திருமாலுக்கும் இயமனை பாடும்படிமாய்ந்த சிவமூர்த்திக்கும் காண்பதற்கு அரியவரான தேவரீர், அடியேனை ஒரு பொருளாகக் கருதி என்னைக் கண்டு விரும்பி, கொண்டாடத்தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வாக்கியத்தை அடியேன் கேட்டு உணரும்படி திருக்கண்ணோக்கம செய்யும் பெரும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?

விரிவுரை

துன்ப வாழ்க்கைத் தொழிற்பண்டாட்டத் துழலாதே ---

ஆசா பாசத்தில் சிக்கிக் கொண்டாட்டம் என்ற துன்பத்தினால் துடித்து வாடுவது மாந்தர் இயல்பு.


கஞ்சம் வாய்த்திட்டவர்க்கும் கூட்டிக் கன்று மேய்த்திட்டவர்க்கும் கூற்றைக் கன்ற மாய்த்திட்டவர்க்குந் தோற்றக் கிடையாநீ கண்டுவேட்டு ---

இந்த அடியில் முருகப் பெருமானுடைய பரத்துவங் கூறப்படுகின்றது.

பிரமதேவனுக்கும் திருமாலுக்கும், உருத்திர மூர்த்திக்குங் காணக் கிடையாதவர். இங்கு வரும் உருத்திரன் என்பவர் மூவரில்
ஒருவர்; சிவம்வேறு, உருத்திரர் வேறு, அயன், அரி அரன் என்ற மூவருக்கும் அரியர் முருகர்.

இத்தகைய மூவர்க்குங் கிடையாத நீர் சிறியவனாகிய அடியேனை வலியவந்து கண்டு, என்னை விரும்பியாட் கொள்ள வேண்டும்” என்று சுவாமிகள் மிகவும் உருக்கமாக விண்ணப்பஞ் செய்கின்றார்.

பொருட் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்கத் தந்து காத்து ---

கொண்டாடத்தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வாக்கியத்தை அடியேனுங் கேட்டு உய்யும்படி உபதேசித்து தந்துருளுவீர்.

இந்தப்பாடலில் சுவாமிகள் விண்ணப்பித்தவாறு, முருகன் அவருக்கு உபதேசித்தருளினார்.

தேன்என்று பாகுஎன்றுஉவமிக்க ஒணா மொழித் தெய்வ வள்ளிக்
கோன்அன்று எனக்கு உபதேசித்தது ஒன்றுஉண்டு, கூறவற்றோ
வான்அன்று, கால்அன்று, தீஅன்று, நீர்அன்று, மண்ணும்அன்று,
தான்அன்று, நான்அன்று, அசரீரிஅன்று, சரீரிஅன்றே.    --- கந்தரலங்காரம்.

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது சண்முகனே?       --- கந்தர்அநுபூதி.


திருக்கண் சாத்தப் பெறுவேனோ ---

முருகா! உமது திருக்கண்ணால் அடியேனை நோக்கி அருள்புரியும்” என்று இப்பாடலில் வேண்டுகின்றார். இந்த விண்ணப்பத்தின் படியே முருகன் அருணகிரிநாதரை அருட் கண்ணால் நோக்கி ஆட்கொண்டார்.

கனகத்தினு நோக்கு இனிதாய்,டி
   யவர் முத்தமிழால் புகவே பர
   கதிபெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே”    --- (சதுரத்தரை-திருப்புகழ்)


தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே ---

அடியார்களின் திருக்கூட்டத்தில் முருகவேள் இருந்து அருள்புரிவார்.

பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திகு
   பட்சிந டத்திய குக‘                       --- திருப்புகழ்.

கருத்துரை

         திருச்செங்கோட்டுத் திருமுருகா! அடியேனுக்கு அருள் உபதேசம் புரிந்து அருட் கண்ணோக்கஞ் செய்தருள்வீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...