திரு மீயச்சூர் -
இளங்கோயில்
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயிலின்
உள்ளே வடக்குத் திருச்சுற்றில் திருமீயச்சூர் இளங்கோயில் உள்ளது.
திரு நன்னிலத்திலே உள்ளது பெருங்கோயில்.
திருக் கடம்பூரிலே உள்ளது கரக்கோயில்.
திருவிளநகரிலே உள்ளது ஞாழல் கோயில்.
திருக் கருப்பறியலூரிலே உள்ளது கொகுடிக்கோயில்.
திருக்கச்சூரிலே உள்ளது ஆலக்கோயில்.
திருமீயச்சூரிலே உள்ளது இளங்கோயில்.
இறைவர்
: சகல புவனேசுவரர்
இறைவியார்
: மின்னு மேகலையாள், வித்வன் மேகலாம்பாள்
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - தோற்றும்
கோவிலும்.
திருமீயச்சூர் மேகநாதசுவாமி திருக்கோயிலின்
உள்ளே வடக்குப் பிரகாரத்தில் திருமீயச்சூர் இளங்கோயில் என்றொரு தனிக்கோயில்
உள்ளது. இதில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும்
தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம்.
அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 6-வது பாடலில் இத்தல இறைவியை மின்னு
மேகலையாள் என்று குறிப்பிடுகிறார். இறைவன் கருவறைச் சுற்றில் வழக்கமாக
துர்க்கை காணப்படும் இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் காணப்படுகிறார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி உள்ள விண்ணப்பக் கலிவெண்பாவில்,
"மாயக் களம் கோயில் நெஞ்சக் கயவர் மருவா இளங்கோயில் ஞான இனிப்பே" என்று போற்றி
உள்ளார்.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 248
சீர்மன்னும்
திருக்கடவூர்த் திருமயா னமும்வணங்கி,
ஏர்மன்னும்
இன்னிசைப்பாப் பலபாடி, இனிது அமர்ந்து,
கார்மன்னும்
கறைக்கண்டர் கழல்இணைகள் தொழுது, அகன்று,
தேர்மன்னும்
மணிவீதித் திருஆக்கூர்
சென்றுஅணைந்தார்.
பொழிப்புரை : அவ்விருவரும், சீர்மை பொருந்திய திருக்கடவூர்த்
திருமயானம் என்ற திருப்பதிக்கும் சென்று வணங்கி, அழகு உடைய இனிய இசை கொண்ட தேவாரப்
பாடல்கள் பலவற்றையும் பாடி வணங்கி,
இனிதாய்
அங்கு வீற்றிருந்தருளி, மேகத்தின் தன்மை
பொருந்திய நீலகண்டரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுத் தேர்
பொருந்திய திருஆக்கூரைச் சென்று சேர்ந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 249
சார்ந்தார்தம்
புகல்இடத்தை, தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்துஆர்வம்
உறப்பணிந்து, கோதுஇல்தமிழ்த் தொடை
புனைந்து,
வார்ந்து
ஆடும் சடையார்தம் பதிபலவும்
வணங்கியுடன்
சேர்ந்தார்கள்
தம்பெருமான் திருவீழி மிழலையினை.
பொழிப்புரை : தம்மை வந்து
அடைந்தவர்க்கு அடைக்கலந் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமானை, அப்பதியில் உள்ள `தான் தோன்றி மாடம்` என்னும் கோயிலினுள் கண்டு, மிகுந்த அன்பு பொருந்த வணங்கி, குற்றம் இல்லாத தமிழ்த் தொடை மாலை பாடி, அங்கிருந்து புறப்பட்டு, அசைந்து ஆடும் சடையுடைய இறைவர்
வீற்றிருந்தருளும் பதிகள் பலவற்றையும் போய் வணங்கிப், பின்னர் அவ்விருவரும் தம் பெருமானின்
திருவீழிமிழலையைச் சேர்ந்தனர்.
பதிபலவும் என
ஆசிரியர் கூறுதற்கு இயைய திருமீயச்சூர், திருவன்னியூர்
ஆகிய பதிகளைக் கொள்ளலாம்.
1. திருமீயச்சூர்
இளங்கோயில்: `தோற்றும் கோயிலும்` (தி.5 ப.11)- திருக்குறுந்தொகை.
2.திருவன்னியூர்: `காடு கொண்டரங்கா` (தி.5 ப.26) - திருக் குறுந்தொகை.
5. 011திருமீயச்சூர் இளங்கோயில் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தோற்றும்
கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக்
கோயில் பலஉள, மீயச்சூர்க்
கூற்றம்
பாய்ந்த குளிர்புன் சடைஅரற்கு
ஏற்றம்
கோயில்கண் டீர்இளங் கோயிலே.
பொழிப்புரை : இந்நாள்வரை தோன்றிய
கோயில்களும் , இனித் தோன்றும்
கோயில்களும் , வேற்றுக்கோயில்களும்
பலவுளவேனும் , கூற்றுவனைத்தடிந்த
குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும் ; காண்பீராக .
பாடல்
எண் : 2
வந்த
னைஅடைக் கும்அடித் தொண்டர்கள்
பந்த
னைசெய்து பாவிக்க நின்றவன்,
சிந்த
னைதிருத் தும்திரு மீயச்சூர்
எம்த
மைஉடை யார்இளங் கோயிலே.
பொழிப்புரை : திருவடிக்கு வழிபாடு
செய்தலையே உள்ளத் தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்க
நின்றவனும் , எம்மை அடிமையாக
உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத்
திருத்தவல்லது ஆகும்
பாடல்
எண் : 3
பஞ்ச
மந்திரம் ஓதும் பரமனார்,
அஞ்ச
ஆனை உரித்துஅனல் ஆடுவார்,
நெஞ்சம்
வாழி நினைந்துஇரு, மீயச்சூர்
எம்த
மைஉடை யார்இளங் கோயிலே.
பொழிப்புரை : நெஞ்சமே ! ஈசானம்
முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும், ஆனை
அஞ்சுமாறு உரித்தவனும், அனல் ஆடு வானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை
உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு ; அந்நினைப்பால்
வாழ்வாய் .
பாடல்
எண் : 4
நாறு
மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு
வேறு விரித்த சடைஇடை
ஆறு
கொண்டுஉகந் தான்,திரு மீயச்சூர்
ஏறு
கொண்டுஉகந் தார்இளங் கோயிலே.
பொழிப்புரை : மணம் வீசும் மல்லிகை , கூவிளம் , செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக
விரித்த சடையிடை ஆற்றோடு கொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற்
கொண்டு உகந்த பெருமானே ! ( அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று
மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து )
பாடல்
எண் : 5
வெவ்வ
வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ
வண்ணக் கனல்விரித்து ஆடுவர்,
செவ்வ
வண்ணம் திகழ்திரு மீயச்சூர்
எவ்வ
வண்ணம் பிரான்இளங் கோயிலே.
பொழிப்புரை : வெம்மையான
வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய
கனல் விரித்தாடுவார் , திருமீயச்சூர்
இளங்கோயில் செவ் வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை !
பாடல்
எண் : 6
பொன்அம்
கொன்றையும் பூஅணி மாலையும்
பின்னும்
செஞ்சடை மேல்பிறை சூடிற்று,
மின்னு
மேகலை யாளொடு மீயச்சூர்
இன்ன
நாள்அக லார்இளங் கோயிலே.
பொழிப்புரை : திருமீயச்சூர்
இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள
பெருமான் பின்னிக்கொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது , பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் (
கொடுக்கும் ) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம் .
பாடல்
எண் : 7
படைகொள்
பூதத்தன், பைங்கொன்றைத் தாரினன்,
சடைகொள்
வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன்,
விடைகொள்
ஊர்தியி னான்திரு மீயச்சூர்
இடைகொண்டு
ஏத்தநின் றார்இளங் கோயிலே.
பொழிப்புரை : பூதங்களைப் படையாகக்
கொண்டவனும் , கொன்றைமாலையனும், சடையில் வெள்ளம் உடையவனும் , சாந்த வெண்ணீற்றனும் , விடையூர்தியானும் , திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செவ்வி
தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன் .
பாடல்
எண் : 8
ஆறு
கொண்ட சடையினர், தாமும்ஓர்
வேறு
கொண்டதொர் வேடத்தர், ஆகிலும்
கூறு
கொண்டுஉகந் தாளொடு மீயச்சூர்
ஏறு
கொண்டுஉகந் தார்இளங் கோயிலே.
பொழிப்புரை : சடையினில் ஓர் ஆறு
கொண்ட இயல்பினரும் , வேறுவேறுகொண்ட
வேடத்தராமியல்பினரும் . கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர்
இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர் .
பாடல்
எண் : 9
வேதத்
தான்என்பர், வேள்வி உளான்என்பர்,
பூதத்தான்
என்பர், புண்ணியன் தன்னையே
கீதத்
தான்கிள ரும்திரு மீயச்சூர்
ஏதம்
தீர்க்கநின் றார்இளங் கோயிலே.
பொழிப்புரை : புண்ணியனாகிய இறைவனை
வேதத்தான் என்றும் , வேள்வியுளான் என்றும்
, பூதத்தான் என்றும்
கூறுவர் ; கீதம் கிளரும்
திருமீயச்சூரில் , இளங்கோயிலின்கண்
அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர் .
பாடல்
எண் : 10
கடுக்கண்
டன், கயி லாய மலைதனை
எடுக்கல்
உற்ற இராவணன் ஈடுஅற
விடுக்கண்
இன்றி வெகுண்டவன், மீயச்சூர்
இடுக்கண்
தீர்க்கநின் றார்இளங் கோயிலே.
பொழிப்புரை : விடமுண்டகண்டனும் , கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற
விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண்
தீர்க்க நின்ற இறைவனேயாவன்.
திருச்சிற்றம்பலம்
குறிப்பு --- திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் இணைந்தே இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி இருந்த போதிலும், திருமீயச்சூருக்கு, அப்பரு பாடிய திருப்பதிகம் கிடைக்காதது போலவே, இளங்கோயிலில், திருஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய திருப்பதிகம் கிடைக்கப்பெறவில்லை.
No comments:
Post a Comment