திருச்செங்கோடு - 0392. பந்துஆடி அம்கை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பந்துஆடி அம்கை (திருச்செங்கோடு)

முருகா!
பொதுமாதர் மீது ஆசை மிகுந்து,
எனது ஆவி நைந்து மங்காமல் அருள்.

தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான


பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
     பைந்தார் புனைந்த ...... குழல்மீதே

பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
     பங்கே ருகங்கொள் ...... முகமீதே

மந்தார மன்றல் சந்தார மொன்றி
     வன்பாத கஞ்செய் ...... தனமீதே

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
     மங்காம லுன்ற ...... னருள்தாராய்

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
     கன்றா முகுந்தன் ...... மருகோனே

கன்றா விலங்க லொன்றாறு கண்ட
     கண்டா வரம்பை ...... மணவாளா

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
     திண்டோள் நிரம்ப ...... அணிவோனே

திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பந்துஆடி அம்கை நொந்தார் பரிந்து
     பைந்தார் புனைந்த ...... குழல்மீதே,

பண்புஆர் சுரும்பு பண்பாடு கின்ற
     பங்கேருகம் கொள் ...... முகமீதே,

மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி
     வன் பாதகம் செய் ...... தனமீதே,

மண்டுஆசை கொண்டு விண்டு, வி நைந்து
     மங்காமல் உன்தன் ...... அருள்தாராய்.

கந்தா! அரன் தன் மைந்தா! விளங்கு
     கன்றா முகுந்தன் ...... மருகோனே!

கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட
     கண்டா! அரம்பை ...... மணவாளா!

செந்தாது அடர்ந்த கொந்துஆர் கடம்பு
     திண்தோள் நிரம்ப ...... அணிவோனே!

திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு
     செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

       கந்தா --- கந்தவேளே!

       அரன் தன் மைந்தா --- சிவபெருமானுடைய திருப்புதல்வரே!

       விளங்கு கன்றா முகுந்தன் மருகோனே  --- விளங்குகின்றவரும், கோபிக்காதவருமாகிய, முகுந்தனுடைய மருகரே!

      கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா --- கோபித்து மலை ஒன்றை வழி திறக்கச் செய்த வீரரே!

      அரம்பை மணவாளா --- தேவமாதாவாகிய தெய்வயானைக்கு நாயகரே!

      செம்தாது அடர்ந்த --- செவ்விய பூந்தாது நிரம்பிய,

     கொந்து ஆர் --- பூங்கொத்துக்கள் நிறைந்துள்ள,

     கடம்பு --- கடப்பமலர் மாலையை

     திண் தோள் நிரம்ப அணிவோனே --- வலிய தோளின் மீது நிரம்பவும் தரித்துக் கொள்பவரே!

      திண் கோடாரங்கள் --- வலிமையுடைய குரங்குகள்,

     எண்கோடு உறங்கும் --- கரடிகளுடன் தூங்குகின்ற

     செங்கோடு அமர்ந்த பெருமாளே --- திருச்செங்கோட்டில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

      பந்து ஆடி --- பந்து விளையாடி,

     அம் கை நொந்தார் பரிந்து --- அழகிய கை நொந்துள்ள மாதர்கள் ஆசையுடன்,

     பைந் தார் புனைந்த குழல் மீதே --- பசுமை வாய்ந்த பூமாலை தரித்துள்ள கூந்தல் மேலும்,

     பண்பு ஆர் சுரும்பு --- அழகு நிறைந்த வண்டுகள்,

     பண் பாடுகின்ற --- இசை பாடுகின்ற,

     பங்கேருகங்கொள் முக மீதே --- தாமரை போன்ற முகத்தின் மீதும்,

     மந்தார மன்றல் -- மந்தார மலரின் வாசனையும்,

     சந்து --- சந்தனமும்,

     ஆரம் --- முத்து மாலையும்,

     ஒன்றி வன் பாதகம் செய் --- சேர்ந்து கொடிய பாதகங்களைச் செய்யத் தூண்டுகின்ற

     தன மீதே --- கொங்கைகளின் மீதும்,

     மண்டு ஆசை கொண்டு --- நிறைந்த ஆசையைக் கொண்டு

     விண்டு ஆவி நைந்து மங்காமல் --- ஆவி பிரிவது போன்ற துன்பத்தை அடைந்து அடியேன் அழிந்து போகா வண்ணம்

     உன்றன் அருள்தாராய் --- உமது திருவருளைத் தந்தருளுவீர்.


பொழிப்புரை

     கந்தவேளே!

     சிவகுமாரரே!

     கோபிக்காமல் விளங்குகின்ற முகுந்தனுடைய திருமருகரே!

     கோபித்து கிரவுஞ்ச மலையைப் பிளந்து வழிகண்ட வீரமூர்த்தியே!

     தெய்வயானையின் கணவரே!

     சிவந்த பூந்தாதுகள் நிரம்பிய கடம்ப மலர்க் கொத்துக்களால் ஆகிய மாலையை வலிமையுடைய தோளில் தரித்தவரே!

     வலிய குரங்குகள் கரடிகளுடன் தூங்குகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

     பந்து விளையாடி அழகிய கரங்கள் நொந்த மாதர்கள் விரும்பி புதிய பூமாலையை யணிந்த கூந்தலின் மீதும், அழகிய வண்டுகள் இசைபாடுகின்ற தாமரை மலர்போன்ற முகத்தின் மீதும், மந்தார மலரின் வாசனை, சந்தனம், முத்துமாலை, இவை பொருந்தி, கொடிய பாதங்களைச் செய்ய இடந்தரும் தனங்களின் மீதும், மிகுந்த ஆசைகொண்டு ஆவி பிரிவது போல் நொந்து அடியேன் மங்காமல் உமது திருவருளைத் தந்தருள்வீராக.


விரிவுரை

பந்தாடி அங்கை நொந்தார் ---

பெண்கள் பந்தாடிக் களைத்துப் போவார்கள். பந்தாட்டம் பெண்களுக்கே உரியது.

பந்தாடு மங்கையர் செய்கயல் பார்வையில்” --- கந்தரலங்காரம்

பகைவர் இங்கு வந்தால் பெண்களைப் போல் பந்து ஆடவேண்டும் என்று குறிக்கும் பொருட்டு மதுரை கோபுர வாயிலில் பந்தையும் பாவையையும் தொங்க விட்டிருக்கின்றார்கள்.

வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர்அருவாயில்”  ---திருமுருகாற்றுப்படை

கன்றா முகுந்தன் ---

கன்றுதல் - கோபித்தல், கோபிக்காத காருண்யமூர்த்தி திருமால்.

கன்று ஆ முகுந்தன். கன்றுகளையும் பசுக்களையுங் காத்தவன் என்றும் பொருள்படும்.

முகுந்தன்-மு,முத்தி, கு.பூதலச் செல்வம், இகபர சித்திகளை வழங்குபவர் முகுந்தம்.

கன்றா விலங்கல் ஒன்றாறு கண்ட கண்டா ---

கன்றா-சினந்து. விலங்கல்-மலை. கிரவுஞ்சம்.

வீரவாகுதேவர் முதலியோர் அம்மலையில் சென்று மயங்க, முருகவேள் வேலால் பிளந்து வழியை உண்டாக்கி யருள் புரிந்தார்.

திண்கோடரங்கள் எண்கோடு உறங்கு ---

கோடரம்-குரங்கு. எண்கு-கரடி. குரங்கு சாதுவானது. கரடி கொடியது. இரண்டும் ஒற்றுமைப்பட்டு உறங்குகின்றன. இறைவனுடைய சந்நிதியில் எல்லாம் ஒன்றுபடுகின்றன.

கருத்துரை

         திருச்செங்கோட்டுத் திருமுருகா! ஆசையால் அடியேன் மங்காதவண்ணம் அருள்செய்வீர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 13

  "பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில் வல்லார் அறிவார், அறியார் தமக்கு ம...