வைத்தீசுவரன் கோயில் - 0795. மேக வார்குழல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மேக வார்குழல் (வைத்தீசுவரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்)

முருகா!
விலைமாதர் உறவால் அழியாமல் அருள்.

தான தானதன தானதன தானதன
     தான தானதன தானதன தானதன
     தான தானதன தானதன தானதன ...... தனதான


மேக வார்குழல தாடதன பாரமிசை
     யார மாடகுழை யாடவிழி யாடபொறி
     மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி ......மளமேற

மீனு லாடையிடை யாடமயில் போலநடை
     யோல மோலமென பாதமணி நூபுரமு
     மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல் .....முழவோசை

ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
     வோரை வாருமென வேசரச மோடுருகி
     ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவடு.....அதிபார

ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
     வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
     ரான சூலைபல நோய்கள்கட லாடியுட .....லுழல்வேனோ

நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
     நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
     நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ் .....முநிவோர்கள்

நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
     வேத கீதவொலி பூரையிது பூரையென
     நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட ...... விடும்வேலா

தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
     தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
     சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை...புணர்வோனே

தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
     மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
     சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர் ......பெருமாளே.


பதம் பிரித்தல்


மேக வார்குழல் அது ஆட, தன பாரம் மிசை
     ஆரம் ஆட, குழை ஆட, விழி ஆட, பொறி
     மேனி வாசனைகள் வீச, அல்குல் மோதி பரி ......மளம் ஏற,

மீநூல் ஆடை இடை ஆட, மயில் போல நடை,
     ஓலம் ஓலம் என, பாதம் அணி நூபுரமும்
     மேல் வில் வீச, பணி கீர குயில் போல குரல்.....முழவு ஓசை,

ஆகவே அவைகள் கூடிடுவர், வீதி வரு-
     வோரை வாரும் எனவே சரசமோடு உருகி,
     ஆசை போல மனையே கொடு அணைவார்கள்,குவடு...... அதிபார

ஆணி மாமுலையின் மூழ்கி, சுக வாரி கொடு,
     வேர்வை பாய, அணை ஊடு அமளி ஆடி, இடர்
     ஆன சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல்.....உழல்வேனோ?

நாக லோகர், மதி லோகர், பக லோகர், விதி
     நாடு உளோர்கள், மரோர்கள், கண நாதர், விடை
     நாதர், வேதியர்கள், ஆதிசரச ஓதி திகழ் ......முநிவோர்கள்,

நாதரே, நரர், மன் நாரணர், புராண வகை
     வேத கீத ஒலி, பூரை இது பூரை என,
     நாசமாய் அசுரர் மேவு கிரி தூளிபட ......   விடும்வேலா!

தோகை மாது, குற மாது, முத மாதுவின் நல்
     தோழி மாது, வளி நாயகி மினாளை, சுக
     சோக மோடு இறுகி மார்முலை விடாமல் அணை ......புணர்வோனே!

தோள் ஈராறும் முகம் ஆறும், மயில் வேல் அழகு
     மீதெய்வான வடிவா! தொழுது எணா வயனர்
     சூழு காவிரியும் வேளூர் முருகா!அமரர் ......பெருமாளே.


பதவுரை


      நாகலோகர் --- நாகர் உலகத்தில் உள்ளவர்கள்,

     மதி லோகர் --- சந்திர மண்டலத்தில் உள்ளவர்கள்,

     பகல் லோகர் --- சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள்,

     விதி நாடு உளோர்கள் --- பிரம லோகத்தில் உள்ளவர்கள்,

     அமரோர்கள் --- தேவர்கள்,

     கணநாதர் ---  கணநாதர்கள்,

     விடைநாதர் --- நந்தி கணத்தவர்கள்,

     வேதியர்கள் --- எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தண்மை படைத்தவர்கள்,

     ஆதி --- முதலாக,

     சரசோதி திகழ் முநிவோர்கள் ---  ஒளிநெறியில் விளங்குகின்ற முனிவர்கள்,

      நாதரே --- நவநாதர்கள் உடன்,

     நரர் --- மண்ணுலகத்தில் உள்ளோர்கள்,

     மன் நாரணர் --- நிலைபெற்ற நாராயணர்கள்,

     புராண வகை --- புராண வகைகள்,

     வேதகீத ஒலி --- வேத ஒலியும், கீத ஒலியும்,

     பூரை இது பூரை என --- இதுவே இறுதிக் காலம் என்று வியக்கும்படியாக,

     அசுரர் மேவி நாசமாய் --- அரக்கர்கள் நாசம் அடையவும்,

     கிரி தூளிபட விடும் வேலா --- கிரவுஞ்ச மலையானது தூள் படவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

      தோகைமாது குறமாது --- மயில் போலும் சாயலை உடைய குறமகளும்,

     அமுதமாதுவின் நல்தோழி மாது --- தேவலோகத்தினள் ஆன தேவயானையின் நல்ல தோழியும் ஆகிய,

     வ(ள்)ளி நாயகி மி(ன்)னாளை --- மின்னல் கொடி போன்றவள் ஆகிய வள்ளி நாயகியை

     சுக சோகமோடு இறுகி --- சுகத்தைத் தருகின்ற சோகம் ஆகிய விரகதாபத்துடன் இறுக அணைத்து,

     மார்முலை விடாமல் அணை புணர்வோனே --- அவரது மார்பகங்களை விடாமல் தழுவிப் புணர்பவரே!

      தோள் இராறு --- பன்னிரண்டு திருத்தோள்களும்,

     முகம்ஆறு --- ஆறு திருமுகங்களும்,

     மயில் --- மயில் வாகனமும்,

     வேல் --- வேலாயுதமும்,

     அழகு மீது எய்வான வடிவா --- அழகுறப் பொருந்தி உள்ள அழகரே!

     தொழுது எணா வயனர் சூழும் --- சடாயு, சம்பாதி என்னும் பறவை வடிவினர் தொழுது வணங்குகின்ற,

     காவிரியும் வேளூர் முருகா --- சோலைகள் பரவி உள்ள திருப் புள்ளிருக்குவேளூரில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானே!

     அமரர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      மேக வார்குழல் அது ஆட --- மேகத்தைப் போன்று கருத்து நீண்டு உள்ள கூந்தல் அசைய,

     தனபாரம் மிசை ஆரம் ஆட --- தனபாரங்களின் மீது முத்தாரங்கள் ஆட,

     குழை ஆட --- காதில் உள்ள குழைகள் ஆட,

     விழி ஆட --- கண்கள் சுழன்று ஆட,

     பொறி மேனி வாசனைகள் வீச அல்குல் மோதி பரிமளம் ஏற --- பதுமை போன்ற அழகிய உடலில் வீசுகின்ற மணமானது பெண்குறியின் மீது படர்ந்து நல்ல மணம் வீச,

       மீ நூல் ஆடை இடைஆட --- மேலே உடுத்தி உள்ள உடையானது இடையில் அசைய,

     மயில் போல நடை --- மயிலைப் போலும் சாயலுடன் கூடிய நடை பயிலவும்,

     ஓலம் ஓலம் என பாதம் அணி நூபுரமும் மேல்வில் வீச --- பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு ஒலம் ஒலம் என்ற ஒலிக்க, ஒளி வீச,

     பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை ஆகவே --- பாலைப் போன்று இனிமையாகவும், குயிலைப் போலவும் குரல் ஒலியானது முழங்க,

     அவைகள் கூடிடுவர் --- பலரும் கூடி இருக்கும் இடத்தில் கூடுவார்கள் (விலைமாதர்கள்)

      வீதி வருவோரை வாரும் எனவே --- (அவர்கள்) தெருவில் வருபவரை (முன்பு பழகியோரைப் போல) வாருங்கள் என்று,

     சரசமோடு உருகி --- சரச வார்த்தைகளை உருக்கமாகப் பேசி,

     ஆசை போல மனையே கொடு அணைவார்கள் --- ஆசை மிக்கவர்கள் போலத் தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்த் தழுவுவார்கள்.

      குவடு அதிபார ஆணி மா முலையின் மூழ்கி --- மலைமுகடு போல வளர்ந்து பருத்து, இன்பத்தைத் தருதற்கு ஆதாரமாக உள்ள அழகிய பெரிய முலைகளில் முழுகி இருந்து,

     சுகவாரி கொடு --- இன்பக் கடலில் திளைத்து,

     வேர்வை பாய --- உடம்பு வியர்த்து ஒழுக,

     அணையூடு அமளி ஆடி --- படுக்கையில் ஆரவாரமாக இருந்து,

     இடரான சூலை பலநோய்கள் கடல்ஆடி --- துன்பத்தை விளைவிப்பதான சூலை முதலான பல நோய்களாகிய கடலில் சிக்கி, வேதனைபட்டு,

     உடல் உழல்வேனோ --- இவ்வாறு இந்த உடலுடன் அடியேன் அலைவேனோ?



பொழிப்புரை

     நாகர் உலகத்தில் உள்ளவர்கள், சந்திர மண்டலத்தில் உள்ளவர்கள், சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள், பிரம லோகத்தில் உள்ளவர்கள், விண்ணலகத்தில் உள்ள தேவர்கள், கணநாதர்கள், நந்தி கணத்தவர்கள், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தண்மை படைத்தவர்கள், முதலாக, ஒளிநெறியில் விளங்குகின்ற முனிவர்கள், நவநாதர்கள் உடன், மண்ணுலகத்தில் உள்ளோர்கள், நிலைபெற்ற நாராயணர்கள், புராண வகைகள், வேத ஒலியும், கீத ஒலியும், இதுவே இறுதிக் காலம் என்று எண்ணும்படியாக, அரக்கர்கள் நாசம் அடையவும், கிரவுஞ்ச மலையானது தூள் படவும் வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

     மயில் போலும் சாயலை உடைய குறமகளும், தேவலோகத்தினள் ஆன தேவயானையின் நல்ல தோழியும் ஆகிய, மின்னல் கொடி போன்றவள் ஆகிய வள்ளி நாயகியை சுகத்தைத் தருகின்ற சோகம் ஆகிய விரகதாபத்துடன் இறுக அணைத்து, அவரது மார்பகங்களை விடாமல் தழுவிப் புணர்பவரே!

         பன்னிரண்டு திருத்தோள்களும், ஆறு திருமுகங்களும்,மயில் வாகனமும், வேலாயுதமும், அழகுறப் பொருந்தி உள்ள அழகரே!

     சடாயு, சம்பாதி என்னும் பறவை வடிவினர் தொழுது வணங்குகின்ற, சோலைகள் பரவி உள்ள திருப் புள்ளிருக்குவேளூரில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானே!

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      மேகத்தைப் போன்று கருத்து நீண்டு உள்ள கூந்தல் அசைய, தனபாரங்களின் மீது முத்தாரங்கள் ஆட, காதில் உள்ள குழைகள் ஆட, கண்கள் சுழன்று ஆட, பதுமை போன்ற அழகிய உடலில் வீசுகின்ற மணமானது அவர் தம் பெண்குறியின் மீது படர்ந்து நல்ல மணம் வீச, மேலே உடுத்தி உள்ள உடையானது இடையில் அசைய, மயிலைப் போலும் சாயலுடன் கூடிய நடை பயிலவும், பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு ஒலம் ஒலம் என்ற ஒலிக்க, ஒளி வீச, பாலைப் போன்று இனிமையாகவும், குயிலைப் போலவும் குரல் ஒலியானது முழங்க, பலரும் கூடி இருக்கும் இடத்தில் கூடுவார்கள் விலைமாதர்கள் அவர்கள் தெருவில் வருபவரை முன்பு பழகியோரைப் போல வாருங்கள் என்று, சரச வார்த்தைகளை உருக்கமாகப் பேசி, ஆசை மிக்கவர்கள் போலத் தங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்த் தழுவுவார்கள். மலைமுகடு போல வளர்ந்து பருத்து, இன்பத்தைத் தருதற்கு ஆதாரமாக உள்ள அவர் தம் அழகிய பெரிய முலைகளில் முழுகி இருந்து, இன்பக் கடலில் திளைத்து, உடம்பு வியர்த்து ஒழுக, படுக்கையில் ஆரவாரமாக இருந்து, துன்பத்தை விளைவிப்பதான சூலை முதலான பல நோய்களாகிய கடலில் சிக்கி, வேதனைபட்டு, இவ்வாறு இந்த உடலுடன் அடியேன் அலைவேனோ?


  விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார், விலைமாதர்கள் நங்களைப் புனைந்து கொள்ளுதலையும், அவர்கள் பொருளுக்காகப் புரியும் சரசங்களையும், அவர் அழகில் மயங்கி, பொருளையும் இழந்து, இறுதியில் நோய்களுக்கு இடமாகியும் அழியும் நிலையைத் தவிர்த்து அருளுமாறு முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

அரிதில் தேடிய பொருளை ல்வழியிற் செலவழிக்காமல், பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து, அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய திருவாபரணங்களைப் பூட்டியனுப்புவர்.

வாதம் --- இது பல வகையானது. அண்டவாதம், பட்சவாதம், முடக்குவாதம் முதலியவைகளும், பெரியவர்கள் பேச்சைக் கேளாமல் பிடிவாதம் முதலியவைகளும் அடங்கும்.

சூலை ---  வயிற்றுநோய் முதலியவை.

கண்டமாலை --- கழுத்தில் வரும் ஒருவித கட்டி. இது ஒன்று குணமாகும்; பின் மற்றொன்று வரும். இப்படி குணமாகியும் வந்துகொண்டும் இருக்கும். கழுத்தையும் திருப்ப முடியாமல் இருக்கும்.

குலை நோவு --- குடலில் எரிச்சல் உண்டாகும் ஒரு விதநோய்.

சந்து மாவலி வியாதி --- அடிவயிறும் தொடையும் சந்திக்கும் இடங்களில் இரு பக்கத்திலும் அல்லது ஒரு பக்கத்தில் வரும் கட்டி. இது பெரிய துன்பத்தைத் தரும். நடக்க முடியாது. இதனை அறையாப்புக் கட்டி என்று சிலர் சொல்வார்கள். Bubo என்று ஆங்கிலத்தில் பெயர்.

பரந்த தாமரை --- உடம்பில் வயிறு முதுகு கைகள் முதலிய இடங்களில், பவுன் அகலத்திற்குப் பல பலஒன்றுடன் ஒன்று இணைந்து வருவது. படர்தாமரை யென்றும் சொல்வார்கள்.

அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து
     பிணியுழன்று சுற்றித் திரிந்த
    தமையுமுன் க்ருபைச் சித்தமென்று பெறுவேனோ”
                                                                    --- (கருவடைந்து) திருப்புகழ்.

வலிவாத பித்தமொடு, களமாலை, விப்புருதி
     வறள், சூலை, குட்டமொடு, ...... குளிர், தாகம்,
மலிநீர் இழிச்சல்,பெரு வயிறு, ஈளை, கக்கு, களை,
     வருநீர் அடைப்பின் உடன், ...... வெகுகோடி

சிலைநோய் அடைத்த உடல் புவிமீது எடுத்து உழல்கை
     தெளியா எனக்கும்இனி ......     முடியாதே.
சிவம்ஆர் திருப்புகழை எனு நாவினில் புகழ
     சிவஞான சித்தி தனை ...... அருள்வாயே!    ---  திருப்புகழ்.

வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
     மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
     பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
     ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும் முன்பு, உன்
     ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்.  --- திருப்புகழ்.


பூரை இது பூரை என அசுரர் மேவி நாசமாய், கிரி தூளிபட விடும் வேலா ---

பூரை - பூர்த்தி.  நிறைவு, முடிவு, ஒன்றும் இல்லாமை. இறுதிக் காலம்.

மாயைகள் பலவற்றைப் புரிந்த கிரவுஞ்ச மலையானது அஞ்சும்படியாக முருகப் பெருமான் வேலாயுத்ததை ஏவி அருளினார். ஏழு கடல்களும் வற்றிப் போயின. அரக்கர் குலம் முழுதும் விண்ணுலகுக்குச் சென்றது.

கிரவுஞ்ச மலை - வினைத்தொகுதி.
தாரகன் - மாயை. 
சூரபதுமன் - ஆணவம்.
சிங்கமுகன் - கன்மம்.
கடல் - பிறவித் துன்பம்.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
     இள க்ரவுஞ்சம் தனோடு
      துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்றுமாறு,
     சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

வேல் - வெல்லும் தன்மை உடையது. பதிஞானம். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல்.

அறிவின் தன்மை அஞ்சாமை ஆகும். அஞ்சாமை வீரம் எனப்படும். அறிவின் தன்மை கூர்மை. "கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே" என்பது மணிவாசகம். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் மணிவாசகர். ஆழ்ந்து இருப்பதும், வெற்றியைத் தருவதும், ஆணவமலத்தையும், வினைகளையும் அறுப்பது அறிவே ஆகும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளை அறுப்பதும் அறிவே. ஆதலால், போர்வேல் எனப்பட்டது. அறிவு குறுகி இருத்தல் கூடாது. நீண்டு இருத்தல் வேண்டும். எனவே, வேல், "நெடுவேல்" எனப்பட்டது.

சிவபெருமான் தனது தழல் பார்வையால் மும்மலங்கள் ஆகிய முப்புரங்களையும் எரித்தார். அறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் அமைந்துள்ள ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் மும்மலங்களையும் அறுத்தார்.

அண்டர் உலகும் சுழல, எண் திசைகளும் சுழல,
அங்கியும் உடன் சுழலவே,
அலை கடல்களும் சுழல, அவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,

மண்டல நிறைந்த ரவி, சதகோடி மதிஉதிர,
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருளச் சிரம
வகை வகையினில் சுழலும் வேல்,.           ---  வேல் விருத்தம்.

தேர் அணிஇட்டுப் புரம் எரித்தான் மகன் செங்கையில்வேல்
கூர் அணிஇட்டு அணுவாகிக் கிரௌஞ்சம் குலைந்து, ரக்கர்
நேர் அணிஇட்டு வளைந்த கடகம் நெளிந்தது, சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.                                                                                             ---  கந்தர் அலங்காரம்.

ஓர ஒட்டார், ஒன்றை உன்ன ஒட்டார், மலர் இட்டு உனதாள்
சேர ஒட்டார் ஐவர், செய்வது என் யான்?சென்று தேவர்உய்யச்
சோர நிட்டூரனைச் சூரனைக் கார் உடல் சோரி கக்கக்
கூரகட்டாரி இட்டு ஓர் இமைப் போதினில் கொன்றவனே.                                                                                        --- கந்தர் அலங்காரம்.


தோகைமாது குறமாது அமுதமாதுவின் நல்தோழி மாது ---

தோகை மாது, குறமாது, தோழி மாது - வள்ளிநாயகியைக் குறிக்கும்.

அமுதமாது - தேவயானை அம்மையைக் குறிக்கும்.

தோகைமாதும் குறமாதும் ஆகிய வள்ளியம்மை, அமுதமாது ஆகிய தேவயானை அம்மைக்கு நல்ல தோழி ஆகிய செய்தியை, கந்தபுராணம் விளக்குமாறு காண்க.

கந்த புராணத்தில் வள்ளியம்மை மணம் செய் படலத்தில் பின்வரும் பாடல்களால் தெளியலாம்...

கந்த வெற்பு அதனில் சென்று
     கடி கெழு மானம் நீங்கி
அந்தம் இல் பூதர் போற்றும்
     அம் பொன் ஆலயத்தின் ஏகி                                   
இந்திரன் மகடூஉ ஆகும்
     ஏந்திழை இனிது வாழும்
மந்திரம் அதனில் புக்கான்
     வள்ளியும் தானும் வள்ளல்.

முருகப் பெருமான் வள்ளி நாயகியைத் திருமணம் புணர்ந்த பின்னர், அவளோடு, கந்தமாதன மலையில் இந்திரன் மகளாகிய தெய்வயானை அம்மையார் இனிது வாழுகின்ற மாளிகையில் சென்று புகுந்தனர்.

ஆரணம் தெரிதல் தேற்றா
     அறுமுகன் வரவு நோக்கி
வாரண மடந்தை வந்து
     வந்தனை புரிய அன்னாள்
பூரண முலையும் மார்பும்
     பொருந்து மாறு எடுத்துப் புல்லித்                           
தாரணி தன்னில் தீர்ந்த
     தனிமையின் துயரம் தீர்த்தான்.

வேதங்களாலும் தெளிய முடியாத பரம்பொருளான முருகப் பெருமான் வரவு கண்டு, தேவயானை அம்மையார் வந்து திருவடிகளை வணங்கினார். அவரை மார்போடு மார்பு பொருந்த அணைத்து, இத்தனை காலமும் அம்மையார் தனிமையில் வாடிய துன்பத்தைப் போக்கினார். 

ஆங்கு அது காலை வள்ளி
     அமரர் கோன் அளித்த பாவை                             
பூங் கழல் வணக்கம் செய்யப்
     பொருக் கென எடுத்துப் புல்லி                                    
ஈங்கு ஒரு தமியள் ஆகி
     இருந்திடுவேனுக்கு இன்று ஓர்
பாங்கி வந்து உற்றவாறு
     நன்று எனப் பரிவு கூர்ந்தாள்.

அப்போது, வள்ளி நாயகியார் தேவயானை அம்மையாரின் திருவடிகளை வணங்க, திடுக்கிட்டு கோபமுடன், "இங்கே இதுவரையில் நான் ஒருத்தி தான் இருந்தேன். இப்போது என்னோடு இவளும் வந்து சேர்ந்தது நன்றாய் உள்ளது, சுவாமீ" என்று வருத்தமுடன் கூறினாள்.   

சூர்க் கடல் பருகும் வேலோன்
     துணைவியர் இருவரோடும்                             
போர்க்கு அடல் கொண்ட சீயப்
     பொலன் மணி அணைமேல் சேர்ந்தான்
பால்கடல் அமளி தன்னில்
     பாவையர் புறத்து வைகக்
கார்க்கடல் பவளவண்ணன்
     கருணையோடு அமருமா போல்.

திருப்பாற்கடலில் சீதேவி பூதேவி இருபுறத்தும் விளங்க, திருமால் அருளோடு அமர்ந்து இருத்தல் போன்று, தேவிமார் இருவரோடும், முருகப் பெருமான் பொன்னால் ஆன சிங்கானத்தில் வீற்றிருந்தார்.
                                     
செம்கனல் வடவை போலத்
     திரைக்கடல் பருகும் வேலோன்                                  
மங்கையர் இருவரோடு
     மடங்கலம் பீடம் மீதில்
அங்கு இனிது இருந்த காலை,
     அரமகள் அவனை நோக்கி
இங்கு இவள் வரவு தன்னை
     இயம்புதி எந்தை என்றாள்.    

வடவாமுக அக்கினி போலக் கடலைக் குடித்த வேலாயுதத்தை உடைய முருகப் பெருமான் தேவியர் இருவரோடும் சிங்காதனத்தில் வீற்றிருந்த போது, தேவயானை அம்மையார் பெருமானை நோக்கி, "இவள் இங்கு வந்தது குறித்து இயம்பி அருளவேண்டும், தந்தையே" என்று முருகப் பெருமானே வேண்டினார்.

கிள்ளை அன்ன சொல் கிஞ்சுகச் செய்ய வாய்
வள்ளி தன்மையை வாரணத்தின் பிணாப்
பிள்ளை கேட்ப, பெரும்தகை மேலையோன்
உள்ளம் மா மகிழ்வால் இவை ஓதுவான்.

கிளியைப் போல இனிய சொற்களைப் பேசுகின்ற வள்ளி நாயகியாரின் வரலாற்றை, தேவயானை அம்மையார் கேட்கவும், மேலாகிய பரம்பொருளான முருகப் பெருமான் திருவுள்ளம் மகிழ்ந்து இவ்வாறு சொன்னார்.  

நீண்ட கோலத்து நேமி அம் செல்வர் பால்
ஈண்டை நீவிர் இருவரும் தோன்றினீர்,
ஆண்டு பன்னிரண்டாம் அளவு வெம் புயம்
வேண்டி நின்று விழுத்தவம் ஆற்றினீர்.

வாமன அவதாரத்திலே நீண்ட நெடிய கோலத்தைக் காட்டினவரும், சுதரிசனம் என்னும் சக்கர ஆயுதத்தைத் திருக்கையில் தாங்கினவரும் ஆன திருமாலிடத்து நீங்கள் இருவரும் தோன்றி, அமுதவல்லி, குமுதவல்லி என்னும் திருப்பேர் கொண்டு பன்னிரண்டு வயது ஆகும் ஆளவும் என்னை வேண்டி மேன்மையான தவத்தைச் செய்து வந்தீர்கள்.

நோற்று நின்றிடு நுங்களை எய்தி யாம்
ஆற்றவும் மகிழ்ந்து அன்பொடு சேருதும்
வீற்று வீற்று விசும்பினும் பாரினும்
தோற்றுவீர் என்று சொற்றனம் தொல்லையில்.

அவ்வாறு தவம் புரிந்து கொண்டிருந்த உங்கள் முன் நான் காட்சி அளித்து, நீங்கள் இருவரும் வானுலகிலும், மண்ணிலகிலும் ஆகத் தோன்றி இருப்பீர். நான் உங்களை அன்போடு சேர்வேன் என்று சொன்னேன்.

சொன்னது ஓர் முறை தூக்கி இருவருள்
முன்னம் மேவிய நீ முகில் ஊர் தரு
மன்னன் மா மகள் ஆகி வளர்ந்தனை,
அன்ன போது உனை அன்பொடு வேட்டனம்.

அப்படிச் சொன்ன வண்ணமே, திருமாலின் மூத்த புதல்வியான அமுதவல்லி ஆகிய நீ, என்னைத் திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு, இந்திரன் எதிரில் குழந்தையாகச் சென்று, "சொர்க்காதிபதியே! நான் உன்னுடன் பிறந்த உபேந்திரனுக்குப் புதல்வி. ஆதலால் தந்தையே! நீ என்னைப் பாதுகாக்கக் கடவை" என்று கூற, இந்திரன் ஐராவதம் என்ற வெள்ளையானையை அழைத்து, நமது புதல்வியாகிய இக்குழந்தையை அன்புடன் வளர்த்து வரக் கடவாய் என்று சொல்ல, ஐராவதம் அக்குழந்தையை மனோவதி நகரத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாத்து வந்தது. அது முதல் அப்பெண் தெய்வயானை என்னும் பெயரைப் பெற்றாள். சூரபதுமனைச் சங்கரித்த பின்னர் நான் உன்னைத் திருமணம் புணர்ந்தேன்.
    
பிளவு கொண்ட பிறை நுதல் பேதை! நின்
இளையளாய் வரும் இங்கு இவள், யாம் பகர்
விளைவு நாடி வியன் தழல் மூழ்கியே
வளவிதாம் தொல் வடிவினை நீக்கினாள்.

சந்திரனைப் பிளந்தது போன்ற நெற்றியைக் கொண்ட பெண்ணே! உனக்கு இறையவளாக இப்போது இங்கு வந்துள்ள இவள், நான் சொன்னபடி, மண்ணுலகில் பிறப்பதற்கு வேண்டி, நெருப்பில் மூழ்கி, தனது பழைய வடிவம் நீங்கப் பெற்றாள்.
    
பொள் எனத் தன் புறவுடல் பொன்றலும்,
உள்ளின் உற்ற உருவத்துடன் எழீஇ
வள்ளி வெற்பின் மரம் பயில் சூழல் போய்த்
தெள்ளிதில் தவம் செய்து இருந்தாள் அரோ.

நெருப்பில் பொசுக்கு எ, தனது தூல உடம்பு நீங்கியதும், சூக்கும உடம்புடன், மரங்கள் நிறைந்துள்ள வள்ளிமலையில் சென்று தவத்தைப் புரிந்து கொண்டு இருந்தாள்.

அன்ன சாரல் அதனில், சிவமுனி
என்னும் மாதவன் எல்லை இல் காலமாய்
மன்னி நோற்புழி, மாயத்தின் நீரதாய்ப்
பொன்னின் மான் ஒன்று போந்து உலவு உற்றதே.

அந்த வள்ளிமலையின் சாரலில், சிவமுனிவர் என்னும் தவசி, பலகாலமாய்த் தவம் புரிந்துகொண்டு இருந்தபோது, மாயை வடிவு கொண்டது போல் பொன்மான் ஒன்று வந்து அங்கு ஒலவிக் கொண்டு இருந்தது. 
    
வந்து உலாவும் மறிதனை மாதவன்
புந்தி மாலொடு பொள் என நோக்கலும்,
அந்த வேலை அது கருப்பம் கொள,
இந்த மாது அக் கருவினுள் எய்தினாள்.

அப்படி வந்து உலாவிய அந்த மானை சிவமுனிவர், அறிவு மயங்கிப் பார்க்கையில், அந்த மானானது கருக் கொண்டது.  அந்தக் கருவினுள் இவள் சென்று சேர்ந்தாள்.
    
மான் இவள் தன்னை வயிற்றிடை தாங்கி,
ஆனதொர் வள்ளி அகழ்ந்த பயம்பில்
தான் அருள் செய்து தணந்திட, அங்கண்
கானவன் மாதொடு கண்டனன் அன்றே.

மான் இவளைத் தனது வயிற்றினில் தாங்கி இருந்து, தக்க காலம் வந்துற்ற போது, வள்ளிக் கிழங்கை அகழ்ந்த குழியில் இவளை ஈன்றிட, அங்கு தனது மனைவியோடு வந்த வேடன் இவளைக் குழந்தையாகக் கண்டான்.
    
அவ் இருவோர்களும் ஆங்கு இவள் தன்னைக்
கை வகையில் கொடு, காதலொடு ஏகி,
எவ்வம் இல் வள்ளி எனப் பெயர் நல்கி,
செவ்விது போற்றினர் சீர் மகளாக.

இருவரும் இவளை அன்போடு கொண்டு சென்று, குற்றம் இல்லாத "வள்ளி" என்னும் திருப்பெயர் இட்டு, சீரோடு செம்மையாக வளர்த்து வந்தனர்.

திருந்திய கானவர் சீர் மகளாகி
இருந்திடும் எல்லையில், யாம் இவள்பால் போய்ப்
பொருந்தியும், வேட்கை புகன்றும், அகன்றும்,
வருந்தியும், வாழ்த்தியும் மாயைகள் செய்தேம்.

வேடரின் அன்பு மகளாக இவள் இருந்த காலத்தில், நான் இவளிடத்தில் சென்று சேர்ந்து, எனது வேட்கையை அறிவித்து, அவளைப் பலவாறு போற்றியும், அவளை விட்டு நீங்கி வருந்தியும் பலவாறு மாயைகளைப் புரிந்தேன்.

அந்தம் இல் மாயைகள் ஆற்றியதன் பின்,
முந்தை உணர்ச்சியை முற்று உற நல்கி,
தந்தையுடன் தமர் தந்திட நென்னல்
இந்த மடந்தையை யாம் மணம் செய்தேம்.  

அளவில்லாத மாயைகளைச் செய்த பின்னர், முற்பிறவியின் உணர்ச்சி உண்டாகச் செய்து, தந்தையும் உறவினர்களும் முறையாகத் தர, நேற்று இந்தப் பெண்ணை நான் மணம் புரிந்துகொண்டேன்.
    
அவ்விடை மாமணம் ஆற்றி அகன்றே,
இவ் இவள் தன்னுடன் இம் என ஏகி,
தெய்வ வரைக்கண் ஒர் சில் பகல் வைகி,
மை விழியாய் இவண் வந்தனம் என்றான்.

மை தீட்டிய கண்களை உடையவளே! வள்ளிமலையில் இவளை மணம் புரிந்த பின்னர், தெய்வத் திருமலையாகிய திருத்தணிகையில் சில நாள் இருந்து, இங்கு வந்தேன் என்றார் முருகப் பெருமான்.   

என்று இவை வள்ளி இயற்கை அனைத்தும்
வென்றிடு வேல் படை வீரன் இயம்ப,
வன் திறல் வாரண மங்கை வினாவி,
நன்று என ஒன்று நவின்றிடு கின்றாள்.

இவ்வாறு வள்ளியின் திறத்தை முருகப் பெருமான் சொல்ல, தெய்வயானை அம்மையார் அதனைக் கேட்டு, ஒன்றைச் சொல்லுகின்றாள்.
    
தொல்லையின் முராரி தன்பால்
     தோன்றிய இவளும் யானும்                                    
எல்லை இல் காலம் நீங்கி
     இருந்தனம், இருந்திட்டேமை                                     
ஒல்லையில் இங்ஙன் கூட்டி,
     உடன் உறுவித்த உன் தன்
வல்லபம் தனக்கு யாம் செய்
     மாறு மற்று இல்லை என்றாள்.  

முற்காலத்தில், முரன் என்னும் அசுரனை வதம் செய்த திருமாலுக்கு மக்களாகத் தோன்றிய இவளும் நானும் நெடுங்காலம் பிரிந்து இருந்தோம். அவ்வாறு இருந்த எங்களைக் கூட்டி ஒன்று சேர்வித்த தங்களின் அருள் விளையாடலுக்கு, மறு உபகாரமாக நாங்கள் செய்யக்கூடியது வேறு இல்லை.                                 

மேதகும் எயினர் பாவை,
     விண் உலகு உடைய நங்கை
ஓது சொல் வினவி, மேல் நாள்
     உனக்கு யான் தங்கை ஆகும்,                                     
ஈது ஒரு தன்மை அன்றி
     இம்மையும் இளையள் ஆனேன்,
ஆதலின் உய்ந்தேன், நின்னை
     அடைந்தனன், அளித்தி என்றாள். 

வேடர் குலமகளாகிய வள்ளிநாயகியார், தேவலோக மங்கையாகிய தெய்வயானை அம்மையார் கூறியதைக் கேட்டு, முன் நாளில் நான் உனது தங்கை என்பதும் அல்லாமல், இப்போதும் உனக்கு தங்கை ஆனேன். எனவே, என்னை அன்போடு காப்பாயாக" என்றாள்.                                  

வன் திறல் குறவர் பாவை
     மற்று இது புகன்று, தௌவை
தன் திருப்பதங்கள் தம்மைத்
     தாழ்தலும், எடுத்துப் புல்லி
இன்று உனைத் துணையாப் பெற்றேன்,
     எம்பிரான் அருளும் பெற்றேன்,                            
ஒன்று எனக்கு அரியது உண்டோ
     உளம் தனில் சிறந்தது என்றாள்.

வள்ளிநாயகியார் இவ்வாறு கூறி, தனது தமக்கையின் திருவடிகளைப் பணிய, தெய்வயானை அம்மையார் அவரை எடுத்து அணைத்து, "இன்று உன்னை நான் எனது துணையாகப் பெற்றேன். எம்பிரான் செவ்வேளின் அருளையும் பெற்றேன். இதை விட, நான் பெறுவதற்குச் சிறந்த பேறு உண்டோ?" என்றாள்.
                              
இந்திரன் அருளும் மாதும்
     எயினர் தம் மாதும் இவ்வாறு
அந்தரம் சிறிதும் இன்றி
     அன்புடன் அள வளாவிச்
சிந்தையும் உயிரும் செய்யும்
     செயற்கையும் சிறப்பும் ஒன்றாக்                                      
கந்தமும் மலரும் போலக்
     கலந்து வேறு இன்றி உற்றார்.

இந்திரன் மகளும், வேடர் மகளும் இவ்வாறு தமக்குள் சிறிதும் வேறுபாடு இன்றி, அன்புடன் அளவளாவி, சிந்தையும் உயிரும் போல, மலரும் மணமும் போலக் கலந்து வேறுபாடு இல்லாமல் இருந்தனர்.


வ(ள்)ளி நாயகி மி(ன்)னாளை சுக சோகமோடு இறுகி மார்முலை விடாமல் அணை புணர்வோனே ---

மின்னல் கொடி போன்றவள் ஆகிய வள்ளி நாயகியை சுகத்தைத் தருகின்ற சோகம் ஆகிய விரகதாபத்துடன் இறுக அணைத்து, அவரது மார்பகங்களை விடாமல் தழுவிப் புணர்பவர் முருகப் பெருமான்.

வள்ளிநாயகி - ஜீவான்மா.
முருகப் பெருமான் - பரமான்மா.

பக்குவம் அடைந்த உயிரை, இறைவன் தன்னோடு இணைத்துக் கொள்வான்.


தொழுது எணா வயனர் சூழும் காவிரியும் வேளூர் முருகா ---

வயனர் - பறவை வடிவினர்.

பறவை வடிவை உடையவர்களாகிய சடாயு, சம்பாதி என்போர் திருப்புள்ளிருக்குவேளூரில் எம்பெருமானை வழிபட்டனர்.

"பறவையான மெய்ஞ்ஞானிகள்" என்று அருணகிரிப் பெருமான் வேறொரு திருப்புகழில் அருளி உள்ளபடி, மெய்ஞ்ஞானிகள் துதிக்கின்ற முருகப் பெருமான் என்றும் கொள்ளலாம்.

கா - சோலை. விரி - விரிந்த, பரந்துள்ள.

சோலைகள் பந்துள்ளதால், "காவிரியும் வேளூர்" என்றார் அடிகளார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவால் அழியாமல் அருள்.

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...