அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பாடகச் சிலம்போடு
(வைத்தீசுரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்)
முருகா!
விரைமாதர் மயக்கு அற அருள்வாய்
தான
தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன
தான தத்தனந் தான தத்ததன ...... தனதான
பாட
கச்சிலம் போடு செச்சைமணி
கோவெ னக்கலந் தாடு பொற்சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டுடையி ......னிடைநூலார்
பார பொற்றனங் கோபு ரச்சிகர
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
மாகு நற்கரும் போடு சர்க்கரையின் ...... மொழிமாதர்
ஏட
கக்குலஞ் சேரு மைக்குழலொ
டாட ளிக்குலம் பாட நற்றெருவி
லேகி
புட்குலம் போல பற்பலசொ ...... லிசைபாடி
ஏறி
யிச்சகம் பேசி யெத்தியிதம்
வாரு முற்பணந் தாரு மிட்டமென
ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் ......
செயலாமோ
சேட
னுக்கசண் டாள ரக்கர்குல
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
சேர வற்றநின் றாட யிற்கரமி ......
ரறுதோள்மேல்
சேணி
லத்தர்பொன் பூவை விட்டிருடி
நோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
சேசெ நொத்தசெந் தாம ரைக்கிழவி ......
புகழ்வேலா
நாட
கப்புனங் காவ லுற்றசுக
கோக னத்திமென் தோளி சித்ரவளி
நாய கிக்கிதம் பாடி நித்தமணி ......
புனைவோனே
ஞான
வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும்
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
பாடகச்
சிலம்போடு செச்சை மணி
கோ எனக் கலந்து ஆடு பொன் சரணர்,
பாவை சித்திரம் போல்வர், பட்டு உடையின் ....இடைநூலார்,
பார பொன் தனம் கோபுரச் சிகரம்
ஆம் எனப் படர்ந்து ஏமலிப்பர், இதம்
ஆகு நல் கரும்போடு சர்க்கரையின் ...... மொழிமாதர்,
ஏடகக்
குலம் சேரும் மைக்குழலொடு,
ஆடு அளிக்குலம் பாட, நல் தெருவில்
ஏகி, புள்குலம் போல, பற்பலசொல் ...... இசைபாடி,
ஏறி
இச்சகம் பேசி, எத்தி இதம்,
வாரும் முன்பணம் தாரும் இட்டம் என,
ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் ......செயல்ஆமோ?
சேடன்
உக்க, சண்டாள அரக்கர் குலம்
மாள, அட்ட குன்று, ஏழு அலைக்கடல்கள்
சேர வற்ற நின்று ஆட அயில்கரம் ......ஈரறுதோள்மேல்
சேண்
நிலத்தர் பொன் பூவை விட்டு, இருடி
யோர்கள் கட்டியம் பாட, எட்டு அரசர்,
சேசெ ஒத்த செந்தாமரைக் கிழவி ......
புகழ்வேலா!
நாடகப்
புனம் காவல் உற்ற, சுக
மோகனத்தி, மென் தோளி, சித்ரவளி,
நாயகிக்கு இதம் பாடி நித்தம் அணி ......புனைவோனே!
ஞான
வெற்பு உகந்து ஆடும் அத்தர், தையல்
நாயகிக்கு நன்பாகர், அக்கு அணியும்
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் ....பெருமாளே.
பதவுரை
சேடன் உக்க --- ஆதிசேடன் மெலிவு
கொள்ள,
சண்டாள அரக்கர் குலம் மாள --- நீசர்கள் ஆகிய அரக்கர்கள்
குலம் அழிய,
அட்ட குன்று --- எட்டுக் குல மலைகளும்,
ஏழு அலைக் கடல்கள் சேர --- அலைகள் வீசுகின்ற
ஏழு கடல்களும் ஒரு சேர
வற்ற நின்று ஆட --- உலர்ந்து போகும்படியாக திருவிளையாடல் புரிந்த,
அயில் கரம் ஈரறு தோள் மேல்
--- வேலேந்திய திருக்கையோடு, பன்னிரு தோள்களின்
மீது,
சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு --- விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய,
இருடியோர்கள் கட்டியம் பாட ---
முனிவர்கள் உமது பொருள்சேர் புகழைப் பாட,
எட்டு அரசர் சே செ ஒத்த --- எட்டுத் திக்கிலும்
உள்ள அரசர்கள் யாவரும் போற்றி போற்றி என்று ஒத்திசை முழங்க,
செம் தாமரைக் கிழவி புகழ் வேலா --- செந்தாமரையில்
திகழ்பவள் ஆகிய திருமகள் போற்றும் வேலாயுதக் கடவுளே!
அகம் நாடு --- தேவரீரது மனம் விரும்பிய, (மலைநாட்டில் இருந்து)
புனம் காவல் உற்ற சுகமோகனத்தி --- உமக்கு
இன்பமயக்கத்தைத் தருபவள் ஆகி, தினைப்புனத்தைக் காவல் புரிந்து இருந்தவரும்,
மென் தோளி --- மெல்லிய தோள்களை உடையவரும்
ஆகிய
சித்ர வளிநாயகிக் கீதம் பாடி நித்தம் அணி
புனைவோனே --- அழகிய வள்ளிநாயகியைப் புகழ்ந்து நாள்தோறும் இனிமையான பாடல்களை அணிவித்து மகிழ்பவரே!
ஞானவெற்பு உகந்து
ஆடும் அத்தர்
--- ஞானமலை என்னும் திருக்கயிலாயத்தை விரும்பி
உறையும் பெருமானும்,
தையல் நாயகிக்கு நன்பாகர் ---
தையல்நாயகி என்னும் திருநாமம் உடைய உமாதேவியைத் தமது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டவரும்,
அக்கு அணியும் நாதர் மெச்ச வந்து --- எலும்புகளை
மாலையாக அணிந்துள்ளவரும் ஆன சிவபெருமான் மகிழும்படியாக வந்து
முத்தம் ஆடு அருள் பெருமாளே --- முத்தம்
தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!
பாடகம் சிலம்போடு
செச்சைமணி கோ எனக் கலந்து ஆடு பொன் சரணர் --- பாடகம் என்னும் காலணி, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள், ஒன்று சேர்ந்து கோ என ஒலிக்க அசைகின்ற அழகிய
பாதங்களை உடையவர்கள்.
பாவை சித்திரம் போல்வர்
--- ஓவியப் பதுமை போன்றவர்கள்.
பட்டு உடையின் இடை நூலார் --- பட்டு
உடை அணிந்துள்ள நூல் போன்ற இடையை உடையவர்கள்.
பார பொன்தனம் கோபுரச் சிகரமாம் எனப்
படர்ந்த ஏமலிப்பர் --- பருத்த அழகிய மார்பகங்கள், கோபுர உச்சி என்று சொல்லும்படியாக
வளர்ந்து களிப்பு கோள்பவர்கள்.
பாகு நல்கரும்போடு
சர்க்கரையின் இதம் மொழிமாதர் --- வெல்லப்பாகு, நல்ல கரும்பு, சருக்கரை போல இனிய சொற்களைப் பேசும் மாதர்கள்.
ஏடகக் குலம் சேரும் மைக்குழலொடு ஆடு
அளிக்குலம் பாட --- மலர்களைச் சூடியுள்ள கரிய கூந்தலைச் சூழ்ந்து விளையாடும்
வண்டுகள் பாட,
நல்தெருவில் ஏகி --- அழகிய தெருக்களில்
சென்று,
புட்குலம் போல --- பறவை இனத்தைப் போல,
பற்பல சொல் இசைபாடி --- பலப்பல சொற்களை இசையோடு
பேசி,
ஏறி இச்சகம் பேசி எத்தி --- வலிய வந்து
முகத் துதியான சொற்களைப் பேசி வஞ்சித்து,
இதம் வாரும் --- இனிதே வருக,
முன்பணம் தாரும் இட்டம் என --- முன்னதாகப்
பணத்தோடு உமது அன்பையும் தருக என்று சொல்லி,
ஏணி வைத்து வந்து ஏற --- ஏணியை வைத்து
ஏறவிடுவது போல் வந்து, பின்னர் ஏறமுடியாமல்படிக்கு
விட்டிடுவர் செயல் ஆமோ --- (ஏணி எடுத்து)
விட்டுச் செல்பவராகிய விலைமாதர்களின் செயல் (நன்மையைத் தருவது) ஆகுமோ? ஆகாது.
பொழிப்புரை
ஆதிசேடன் மெலிவு கொள்ள, நீசர்கள் ஆகிய அரக்கர்கள்
குலம் அழிய, எட்டுக் குல மலைகளும் அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் ஒரு சேர
உலர்ந்து போகும்படியாக திருவிளையாடல் புரிந்த வேலேந்திய திருக்கையோடு, பன்னிரு தோள்களின் மீது விண்ணுலகத்தினர் பொன் மலரைப் பொழிய, முனிவர்கள் உமது பொருள்சேர்
புகழைப் பாட, எட்டுத் திக்கிலும் உள்ள
அரசர்கள் யாவரும் போற்றி போற்றி என்று ஒத்திசை முழங்க, செந்தாமரையில் திகழ்பவள்
ஆகிய திருமகள் போற்றும் வேலாயுதக் கடவுளே!
தேவரீரது மனம் விரும்பிய, (மலைநாட்டில் இருந்து) உமக்கு இன்பமயக்கத்தைத் தருபவள் ஆகி, தினைப்புனத்தைக் காவல் புரிந்து இருந்தவரும் மெல்லிய தோள்களை உடையவரும்
ஆகிய அழகிய வள்ளிநாயகியைப் புகழ்ந்து நாள்தோறும் இனிமையான பாடல்களை அணிவித்து மகிழ்பவரே!
ஞானமலை என்னும் திருக்கயிலாயத்தை விரும்பி உறையும் பெருமானும், தையல்நாயகி என்னும் திருநாமம் உடைய உமாதேவியைத்
தமது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்டவரும், எலும்புகளை மாலையாக அணிந்துள்ளவரும் ஆன
சிவபெருமான் மகிழும்படியாக வந்து முத்தம் தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!
பாடகம் என்னும் காலணி, சிலம்பு இவற்றுடன் சிவந்த மணிகள், ஒன்று சேர்ந்து கோ என ஒலிக்க அசைகின்ற அழகிய
பாதங்களை உடையவர்கள். ஓவியப் பதுமை போன்றவர்கள். பட்டு உடை அணிந்துள்ள நூல் போன்ற இடையை
உடையவர்கள். பருத்த அழகிய மார்பகங்கள், கோபுர உச்சி என்று சொல்லும்படியாக
வளர்ந்து களிப்பு கொள்பவர்கள். வெல்லப்பாகு, நல்ல கரும்பு, சருக்கரை போல இனிய சொற்களைப் பேசும் மாதர்கள். மலர்களைச் சூடியுள்ள
கரிய கூந்தலைச் சூழ்ந்து விளையாடும் வண்டுகள் பாட, அழகிய தெருக்களில் சென்று, பறவை இனத்தைப் போல, பலபல சொற்களை இசையோடு பேசி, வலிய
வந்து முகத் துதியான சொற்களைப் பேசி வஞ்சித்து, "இனிதே வருக, முன்னதாகப் பணத்தோடு உமது
அன்பையும் தருக" என்று சொல்லி,
ஏணியை
வைத்து ஏறவிடுவது போல் வந்து, பின்னர் ஏறமுடியாமல்
படிக்கு
விட்டுச் செல்பவராகிய விலைமாதர்களின் செயல் (நன்மையைத் தருவது) ஆகமோ? ஆகாது.
விரிவுரை
பாடகம்
சிலம்போடு செச்சைமணி கோ எனக் கலந்து ஆடு பொன் சரணர் ---
பாடகம்
- மகளிர் காலில் அணியும் அணிவகைகளுள் ஒன்று.
செச்சை
- சிவந்த.
பொன்
- அழகு.
சரணர்
- மகளிரின் பாதத்தைக் குறித்து நின்றது.
பாடகம்
முதலிய அணிவகைகள் ஒலிக்கும் அழகிய பாதங்களை உடைய பெண்கள்.
பாடகம்
மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடகம்
ஆடும் நள்ளாறு உடைய
நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்,
சூடக
முன்கை மடந்தைமார்கள்
துணைவரொடும் தொழுது ஏத்திவாழ்த்த
ஆடகமாடம்
நெருங்குகூடல்
ஆலவாயின்கண் அமர்ந்தவாறே. --- திருஞானசம்பந்தர்.
பார பொன்தனம் கோபுரச் சிகரமாம் எனப் படர்ந்த ஏமலிப்பர்
---
பார
- பருத்துள்ள
பொன்
- அழகிய
ஏமலித்தல்
- களிப்போடு இருத்தல்.
பருத்த
அழகிய மார்பகங்கள், கோபுர உச்சி என்று சொல்லும்படியாக வளர்ந்து இருப்பதால் செருக்குக் கொண்டு இருப்பவர்கள் விலைமாதர்கள்.
ஏடகக்
குலம் சேரும் மைக்குழலொடு ஆடு அளிக்குலம் பாட ---
ஏடகம்
- மலர். ஏடகக் குலம் - மலர் வகைகள்.
மை
- குருமை குறித்து நின்றது.
அளி
- வண்டு. அளிக்குலம் - வண்டுகை கூட்டங்கள்.
நல்தெருவில்
ஏகி புட்குலம் போல பற்பல சொல் இசைபாடி, ஏறி இச்சகம் பேசி எத்தி ---
விலைமாதர்கள்
கூச்சம் சிறிதும் இன்றி தெருவில் உலாத்துபவர்கள். நடு வீதியில் நின்று அவ்வீதி வழியே
செல்லும் இளைஞர்களை வலிந்து அழைத்து,
மயில்
குயல் காடை புறா போலக் குரலை எழுப்பி, பல
இனிய வார்த்தைகளைக் கூறி, கண்வலை வீசித் தமது
நடை உடைகளால் மயக்குவார்கள். ஆடவர் மனம் மயங்கும்படி
இச்சகமாகப் பேசுவார்கள். அவர்கள் ஆடவரின் மனத்தை மட்டும்
அல்லாது, பொருளையும் ஆவியையும்
பறிமுதல் புரியும் சாகசங்கள் பல. பொருளைக் கவர்ந்த பிறகு வஞ்சகமாக ஏமாற்றுவார்கள்.
இவர்கள் நிலை குறித்து எடுத்துக் கூறி, அவர்களிடத்து
மயங்கா வண்ணம் விழிப்பை உண்டுபண்ணுகிறார் அடிகளார். சிவஞானம் தலைப்படுமாறு
பக்திநெறி சென்று முத்தி நிலையடைய விழைவார்க்கு முதற்படி மாதராசையை நீக்குவதே ஆகும்.
முதலில் விலைமகளிரை வெறுத்து இல்லறத்திலிருந்து பின்னர் அதனையும் வெறுத்து
நிராசையை மேற்கொள்ள வேண்டும்.
சிந்துர
கூர மருப்புச் செஞ்சரி
செங்கை குலாவ நடித்துத், தென்பு உற
செண்பக மாலை முடித்து, பண்புஉள ...... தெருஊடே
சிந்துகள்
பாடி முழக்கி, செங்கயல்
அம்புகள் போல விழித்து, சிங்கியில்
செம்பவள ஆடை துலக்கிப் பொன் பறி ......விலைமாதர்,
வந்தவர்
ஆர் என அழைத்து, கொங்கையை
அன்புற மூடி, நெகிழ்த்தி, கண்பட
மஞ்சள் நிர் ஆடி மினுக்கி, பஞ்சணை ...... தனில்ஏறி
மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட,
முன்தலை வாயில் அடைத்துச் சிங்கிகொள்,
மங்கையர் ஆசை விலக்கிப் பொன்பதம்....அருள்வாயே.
--- பழநித் திருப்புகழ்.
அங்கை
மென்குழல் ஆய்வார் போலே,
சந்தி நின்று அயலோடே போவார்,
அன்பு கொண்டிட, நீரோ போறீர்? ...... அறியீரோ?
அன்று
வந்து ஒரு நாள் நீர் போனீர்,
பின்பு கண்டு அறியோம் நாம், ஈதே?
அன்றும் இன்றும் ஒர் போதோ போகா, ...... துயில்வாரா,
எங்கள்
அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?
பண்டு தந்தது போதாதோ? மேல்
இன்று தந்து உறவோதான்? ஈதுஏன்? ......இதுபோதாது?
இங்கு
நின்றது என்? வீடே வாரீர்,
என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே.
--- திருச்செந்தூர்த்
திருப்புகழ்.
கோமள
வெற்பினை ஒத்த தனத்தியர்,
காமனை ஒப்பவர், சித்தம் உருக்கிகள்,
கோவை இதழ்க்கனி நித்தமும் விற்பவர், ......மயில்காடை
கோகில
நல்புற வத்தொடு குக்குட
ஆரணியப் புள் வகைக்குரல் கற்று,இகல்
கோல விழிக்கடை இட்டு மருட்டிகள், ...... விரகாலே
தூம
மலர்ப் பளி மெத்தை படுப்பவர்,
யாரையும் எத்தி மனைக்குள் அழைப்பவர்,
சோலை வனக்கிளி ஒத்த மொழிச்சியர், ...... நெறிகூடா
தூசு
நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர்,
காசு பறிக்க மறித்து முயக்கிகள்,
தோதக வித்தை படித்து நடிப்பவர் ...... உறவுஆமோ? --- திருப்புகழ்.
இதம்
வாரும் முன்பணம் தாரும் இட்டம் என ---
"இனிதே
வருக"
என்று நல்லபடியாக வரவேற்பினைத் தருவார்கள். தம் வசப்பட்ட ஆடவர்கள்
மீண்டு செல்லாவண்ணம், “நீங்கள் மிகவும்
தாராள சிந்தனை உடையவர். கர்ணனும் தங்களைக் கண்டால் நாணித் தலை கவிழ்ப்பான். தங்கள்
அழகைக் கண்டு மன்மதனும் வெந்து நீறானான். ஆடவர்கள் தங்களைக் கண்டால் அவாவுகின்றர் என்றால்
பெண்ணாகப் பிறந்தவர் யார் தான் தங்கள் கட்டழகைக் கண்டால் மயங்கமாட்டார்கள்? என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் உங்களைத்
தவிர யாரும் இல்லை. எங்கள் அழகு என்னை மயக்குகின்றது. விரைந்து என்னைத் தழுவிக் கொள்ளுங்கள். விரக தாபத்தால் வெதும்புகின்ற என்னை
நீர் தழுவவில்லை என்றால் என் உயிர் நீங்கிவிடும். உங்களுக்கு என் மீது அன்பு உள்ளது
என்பதை நீங்கள் விரும்பித் தருகின்ற பொருள் சிறிதாக இருந்தாலும் காட்டும்” என்று
பசப்பு மொழிகளைக் கூறி அவர் மனத்தைக் கவர்ந்து, முன்னதாகவே பொருளையும் பெற்றுக் கொண்டு, மீளா நரகுக்கு
ஆளாக்குவர்.
விலைமகளிர்
தமது வலையில் பட்டோருடைய பூமி வீடு மாடு பொன் ஆடை ஆபரணம் முதலிய யாவற்றையும்
பறித்துக் கொள்வதோடு அமையாது, அவருடைய உயிர்க்கும்
உலை வைத்து விடுவர்.
“உயிர் ஈர்வார்
மேல்வீழ்ந்து தோயும் தூர்த்தன்”
“மனம் உடனே
பறிப்பவர்கள்”
---
(குமரகுருபரமுருககுகனே)
திருப்புகழ்.
விளக்கு
ஒளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்குஅற
நாடின் வேறுஅல்ல,-விளக்குஒளியும்
நெய்அற்ற
கண்ணே அறுமே, அவர்அன்பும்
கைஅற்ற
கண்ணேஅறும். --- நாலடியார்.
வாரும்
இங்கே வீடு இதோ, பணம் பாஷாணம்,
மால் கடந்தே போம் ...... என்இயல் ஊடே,
வாடி
பெண்காள், பாயை போடும் என்று ஆசார
வாசகம் போல் கூறி, ...... அணை மீதே
சேரும்
முன், காசு ஆடை வாவியும் போதாமை,
தீமை கொண்டே போம் ...... என் அட மாதர்
சேர்
இடம் போகாமல், ஆசுவந்து ஏறாமல்,
சீதளம் பாதாரம் ...... அருள்வாயே. --- திருப்புகழ்.
எங்கேனும்
ஒருவர்வர, அங்கேகண் இனிதுகொடு,
"இங்குஏவர் உனதுமயல் தரியார்"என்று
"இந்தாஎன்
இனியஇதழ் தந்தேனை உறமருவ"
என்றுஆசை குழைய,விழி இணையாடி
தங்காமல்
அவருடைய உண்டான பொருள் உயிர்கள்
சந்தேகம் அறவெ பறி கொளுமானா
சங்கீத
கலவிநலம் என்று ஓது முத்திவிட
தண்பாரும் உனது அருளை அருள்வாயே” --- திருப்புகழ்.
அங்கை
மென்குழல் ஆய்வார் போலே,
சந்தி நின்று அயலோடே போவார்,
அன்பு கொண்டிட, நீரோ போறீர்? ...... அறியீரோ?
அன்று
வந்து ஒரு நாள் நீர் போனீர்,
பின்பு கண்டு அறியோம் நாம், ஈதே?
அன்றும் இன்றும் ஒர் போதோ போகா, ......துயில்வாரா,
எங்கள்
அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?
பண்டு தந்தது போதாதோ? மேல்
இன்று தந்து உறவோதான்? ஈதுஏன்? ......இதுபோதாது?
இங்கு
நின்றது என்? வீடே வாரீர்,
என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே.
---
திருப்புகழ்.
அம்கை
நீட்டி அழைத்து, பாரிய
கொங்கை காட்டி மறைத்து, சீரிய
அன்பு போல் பொய் நடித்து, காசுஅளவு ...... உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு, தோதக
இன்ப சாஸ்த்ரம் உரைத்து, கோகிலம்
அன்றில் போல் குரல் இட்டு, கூரிய ...... நகரேகை
பங்கம்
ஆக்கி அலைத்து, தாடனை
கொண்டு வேட்கை எழுப்பி, காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்
பண்டு
இராப் பகல் சுற்றுச் சூளைகள்,
தங்கள் மேல் ப்ரமை விட்டு, பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே..
--- திருப்புகழ்.
ஏணி
வைத்து வந்து ஏற விட்டிடுவர் ---
தாழ்ந்த
நிலையில் உள்ள ஒருவரை மேல் நிலைக்கு உயர்த்துவதை, ஏணி வைத்து ஏற விடுதல் என்பர். இது உயர்ந்தவர்கள்
செயல். இறைவனும், உலகியல் நிலையில் ஆழ்ந்து இருக்கும் உயிர்களை, அருள் நிலைக்கு உயர்த்த, சரியை, கிரியை, யோகம் என்னும் படிநெறிகளை
வைத்து உள்ளான். அன்பர்களை செந்நெறியில் செலுத்தி, மேல் நிலைக்கு உயர்த்தி, பின்பு கீழ் இறங்காவண்ணம்
ஏணியை எடுத்து விடுவது இறைவன் அருள். அருளாகிய தனது கையைக் கொடுத்து, அன்பர்களை மேல்நிலைக்கு
ஏற்றுவது இறைவன் திருவடி.
போற்றும்
தகையன, பொல்லா முயலகன்
கோபப்புன்மை
ஆற்றும்
தகையன, ஆறு சமயத்து அவர்
அவரைத்
தேற்றும்
தகையன, தேறிய தொண்டரைச்
செந்நெறிக்கே
ஏற்றும்
தகையன, இன்னம்பரான்
தன்இணைஅடியே.
இரள்
தரு துன்பப் படல மறைப்ப, மெய்ஞ்ஞானம் என்னும்
பொரள்
தரு கண் இழந்து, உண்பொருள் நாடி, புகல் இழந்த
குருடரும்
தம்மைப் பரவ, கொடு நரகக்குழி நின்று
அருள்தரு
கைகொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.
பேணித்
தொழும் அவர் பொன்னுலகு ஆள, பிறங்கு அருளால்
ஏணிப்
படிநெறி இட்டுக் கொடுத்து, இமையோர் முடிமேல்
மாணிக்கம்
ஒத்து,
மரகதம்
போன்று வயிரம் மன்னி
ஆணிக்
கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே.
என்று
அப்பர் பெருமான் அருளியது காண்க.
ஆனால், விலைமாதர்கள், தம்மை நாடி வந்தவரின்
பொருளைப் பறித்து, அவரது பெருமைகள் அத்தனையும் சிதைந்து போகுமாறு செய்து, அவரை பொருள் நிலையிலும், அருள் நிலையிலும்
தாழ்ந்த போக விட்டு, மீளா நரகம் என்னும் படுகுழியில் தள்ளி விடுவார்கள். அதில் இருந்து
மீளச் செய்ய,
ஏணி
இட,
அவர்கள்
இடம் தரமாட்டார்கள். உயிர்க்கூடு விடும் அளவும் உம்மைக் கூடி மருவுவதை ஒருக்காலும்
மறவேன் என்று சூள் உரைப்பார்கள். எல்லாம் பொருள் வரும் அளவு மட்டுமே. பொருள் இருந்தால்
பிணத்தையும் கூடத் தழுவுவார்கள். அது இல்லை என்றால் யாரையும் கைவிட்டு விடுவார்கள்.
விளக்கு
ஒளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்குஅற
நாடின் வேறுஅல்ல,-விளக்குஒளியும்
நெய்அற்ற
கண்ணே அறுமே, அவர்அன்பும்
கைஅற்ற
கண்ணேஅறும். --- நாலடியார்.
செம்
தாமரைக் கிழவி புகழ் வேலா ---
செந்தாமரைக்
கிழவி - செந்தாமரையில் திகழ்பவள் ஆகிய திருமகள்.
அகம்
நாடு புனம் காவல் உற்ற சுக மோகனத்தி ---
அகம்
என்பது மனத்தையும் குறிக்கும்.
முருகப்
பெருமான் மனத்தால் நாடிய வள்ளிநாயகி காவல் கொண்டு இருந்த தினைப்புனம். அவள் மோகசுகத்தைத்
தருபவள்.
அன்றியும், அகம் என்பது மலையையும் குறிக்கும் என்று
கொண்டு மலைநாடாகிய வள்ளிமலையில் தினைப் புனத்தைக் காவல் கொண்டிருந்த வள்ளிநாயகி என்றும்
கொள்ளலாம்.
சித்ர
வளிநாயகிக் கீதம் பாடி நித்தம் அணி புனைவோனே ---
சித்ரம்
- சித்திரம் போல அழகு மிக்கவர் வள்ளிநாயகி.
வள்ளிநாயகி
என்பது இடைக் குறுகி, வளிநாயகி என வந்தது.
அழகிய
வள்ளிநாயகியை விரும்பி நாள்தோறும் முருகப் பெருமான் புரிந்த அருள் விளையாடல்களைப்
பின்வரும் பிரமாணங்களால் அறிக.
முருகப் பெருமான் கிழவேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது...
குறவர்
கூட்டத்தில் வந்து, கிழவனாய்ப் புக்கு
நின்று,
குருவி ஓட்டித் திரிந்த ...... தவமானை,
குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
குமரகோட்டத்து அமர்ந்த ...... பெருமாளே. --- கச்சித்
திருப்புகழ்.
புன
வேடர் தந்த பொன் குறமாது இன்புறப்
புணர் காதல் கொண்ட அக் ...... கிழவோனே! --- பழநித்
திருப்புகழ்.
செட்டி
வேடம் பூண்டு வள்ளிநாயகியிடம் சென்றது....
செட்டி
என்று வன மேவி, இன்ப ரச
சத்தியின் செயலினாளை அன்பு உருக
தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர்
......பெருமாளே.
---
சிதம்பரத் திருப்புகழ்.
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர,
செட்டி
என்று எத்தி வந்து, ஆடி நிர்த்தங்கள் புரி
சிற்சிதம் பொற்புயம் சேர முற்றும் புணரும்
......எங்கள் கோவே!
---
சிதம்பரத் திருப்புகழ்.
வள்ளிநாயகிக்ககாக
மடல் ஏறியது ....
பொழுது
அளவு நீடு குன்று சென்று,
குறவர்மகள் காலினும் பணிந்து,
புளிஞர் அறியாமலும் திரிந்து, ...... புனமீதே,
புதியமடல்
ஏறவும் துணிந்த,
அரிய பரிதாபமும் தணிந்து,
புளகித பயோதரம் புணர்ந்த ......
பெருமாளே.--- பொதுத்
திருப்புகழ்.
முருகப்
பெருமான் வள்ளிமலையில் திரிந்தது .....
மஞ்சு
தவழ் சாரல் அம் சயில வேடர்
மங்கை தனை நாடி, ...... வனமீது
வந்த, சரண அரவிந்தம் அது
பாட
வண்தமிழ் விநோதம் ...... அருள்வாயே.
குஞ்சர
கலாப வஞ்சி, அபிராம
குங்கும படீர ...... அதி ரேகக்
கும்பதனம்
மீது சென்று அணையும் மார்ப!
குன்று தடுமாற ...... இகல் கோப! ---
நிம்பபுரத் திருப்புகழ்.
மருவு
தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என, இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,
வலிய
சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,
அருகு
சென்று அடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் .....அணைவோனே
--- திருவருணைத் திருப்புகழ்.
வள்ளிநாயகி
தந்த தினைமாவை முருகப் பெருமான் உண்டது...
தவநெறி
உள்ளு சிவமுனி, துள்ளு
தனி உழை புள்ளி ...... உடன் ஆடித்
தரு
புன வள்ளி, மலை மற வள்ளி,
தரு தினை மெள்ள ...... நுகர்வோனே! --- வெள்ளிகரத் திருப்புகழ்.
வள்ளிநாயகி
முன்னர் அழகனாய் முருகப் பெருமான் தோன்றியது....
மால்
உற நிறத்தைக் காட்டி, வேடுவர் புனத்தில்
காட்டில்,
வாலிபம் இளைத்துக் காட்டி, ...... அயர்வாகி,
மான்மகள்
தனத்தைச் சூட்டி, ஏன் என அழைத்துக்
கேட்டு,
வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே. --- பொதுத்
திருப்புகழ்.
வள்ளிநாயகியின்
திருக்கையையும், திருவடியையும்
பிடித்தது...
பாகு
கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய ...... மணவாளா! --- சுவாமிமலைத்
திருப்புகழ்.
கனத்த
மருப்பு இனக் கரி, நல்
கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
கருத்து உருகத் தினைக்குள் இசைத்து, ...... இசைபாடி
கனிக்
குதலைச் சிறுக் குயிலைக்
கதித்த மறக் குலப் பதியில்
களிப்பொடு கைப் பிடித்த மணப் ......
பெருமாளே. --- பொதுத்
திருப்புகழ்.
வள்ளிநாயகியின்
எதிரில் துறவியாய்த் தோன்றியது...
பாங்கியும்
வேடுவரும் ஏங்கிட மாமுனியும்
வேங்கையும் ஆய் மறமின் ...... உடன்வாழ்வாய்.
--- திருவேங்கடத்
திருப்புகழ்.
வள்ளிநாயகியைக்
கன்னமிட்டுத் திருடியது....
கன்னல் மொழி, பின்அளகத்து, அன்னநடை, பன்ன உடைக்
கண் அவிர் அச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக்
கன்னம்
இடப் பின் இரவில் துன்னு புரைக் கல்முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து ...... நின்ற வாழ்வே!
--- கண்ணபுரத்
திருப்புகழ்.
முருகப்
பெருமான் வள்ளிநாயகியைத் தோளில் ஏற்றி ஓடியது...
ஒருக்கால்
நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள் சித்தத்து ...... உறைவோனே!
உரத்தோள்
இடத்தில் குறத்தேனை வைத்திட்டு,
ஒளித்து ஓடும் வெற்றிக் ...... குமரஈசா!
--- திருவருணைத்
திருப்புகழ்.
வள்ளிநாயகியை
முருகப் பெருமான் வணங்கி,
சரசம்
புரிந்தது.....
மருவு
தண்டை கிண்கிணி பரிபுரம் இவை
கலகலன் கலின் கலின் என, இருசரண்
மலர்கள் நொந்து நொந்து அடிஇட, வடிவமும்...மிகவேறாய்,
வலிய
சிங்கமும் கரடியும் உழுவையும்
உறை செழும் புனம், தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண்கொடி தனை, ஒருதிரு ....உளம் நாடி,
அருகு
சென்று அடைந்து, அவள் சிறு பதயுக
சத தளம் பணிந்து, அதி வித கலவியுள்
அற மருண்டு, நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் ......அணைவோனே
--- திருவருணைத் திருப்புகழ்.
தழை
உடுத்த குறத்தி பதத் துணை
வருடி, வட்ட முகத் திலதக் குறி
தடவி, வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து, இரு
குழை திருத்தி, அருத்தி மிகுத்திடு
தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ......
பெருமாளே.
---
திருத்தணிகைத் திருப்புகழ்.
ஞானவெற்பு
உகந்து ஆடும் அத்தர் ---
ஞானவெற்பு
என்பது ஞானமலை என்னும் திருத்தலத்தைக் குறிக்கும் என்பர் சிலர். அது எந்த மலை எது என்பதில்
மாறுபட்ட கருத்து உடையோரும் உண்டு.
ஞானவெற்பு
என்பது இறைவன் விரும்பி எழுந்தருளி இருக்கின்ற திருக்கயிலாய மலையைக் குறிக்கும். அங்கே
உயிர்களுக்கு எல்லாம் தந்தையாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்து அருளிகின்றார்.
தையல்
நாயகிக்கு நன்பாகர் ---
தையல்நாயகி
என்னும் திருநாமம் திருப்புள்ளிருக்கு வேளூரில் எழுந்தருளி உள்ள அம்மையின் திருப்பெயர்
ஆகும். உமாதேவியைத் தமது திருமேனியின் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான்.
அக்கு
அணியும் நாதர் ---
அக்கு
- எலும்பையும் குறிக்கும். உருத்திராக்கத்தையும் குறிக்கும்.
எலும்புகளை
மாலையாக அணிந்துள்ள தலைவர் ஆன சிவபெருமான். உருத்திராக்க மலையைத் தரித்தவர்.
கருத்துரை
முருகா! விரைமாதர் மயக்கு
அற அருள்வாய்
No comments:
Post a Comment