அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எத்தனை கோடி
(வைத்தீசுரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்)
முருகா!
திருவடி இன்பத்தை அருள்வாய்.
தத்தன
தான தான தத்தன தான தான
தத்தன தான தான ...... தனதான
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில்
சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி
லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள
ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா
பைத்தலை
நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள
பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எத்தனை கோடி கோடி விட்டு உடல் ஒடி ஆடி,
எத்தனை கோடி போனது? ...... அளவு ஏதோ?
இப்படி மோக போகம், இப்படி ஆகி ஆகி,
இப்படி ஆவது ஏது? ...... இனி மேல்
ஓசித்திடில், சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினில் ஆயும் மாயும் ...... அடியேனை,
சித்தினில்
ஆடலோடு, முத்தமிழ் வாணர் ஓது,
சித்திர ஞான பாதம் ...... அருள்வாயே.
நித்தமும்
ஓதுவார்கள் சித்தமெ வீடு அதாக,
நிர்த்தம் அது ஆடும் ஆறு ...... முகவோனே!
நிட்கள
ரூபர் பாதி, பச்சு உரு ஆன மூணு
நெட்டிலை சூல பாணி ...... அருள்பாலா!
பைத்தலை
நீடும் ஆயிரத் தலை மீது பீறு
பத்திர பாத! நீல ...... மயில்வீரா!
பச்சிள
பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.
பதவுரை
நித்தமும் ஓதுவார்கள்
சித்தமெ வீடு அது ஆக --- நாள்தோறும் தேவரீரது
அருட்புகழை ஓதித் துதிப்பவர்களின் உள்ளத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு
நிர்த்தம் அது ஆடும்
ஆறுமுகவோனே
--- அங்கே ஆனந்தத் திருநடம் புரிகின்ற ஆறுமுகப் பெருமானே!
நிட்கள ரூபர் --- உருவம் இல்லாதவரான
சிவபெருமான் கொண்ட அருள் திருமேனியில்,
பாதி பச்சு உருவான --- பாதியைக் கொண்ட
பச்சை நிறத் திருமேனி உடையவரும்,
மூணு நெட்டிலை சூல
பாணி அருள்பாலா --- மூன்று நீண்ட இலைத் தலைகளை உடைய சூலாயுதத்தைத் திருக்கையில்
தரித்துள்ள சிவபெருமான் அருளிய புதல்வரே!
பைத்தலை நீடும்
ஆயிரத் தலை மீது பீறு --- பெரிய ஆயிரம் பணாமகுடங்கள் படைத்த ஆதிசேடனையும்
கிழிக்கும்,
பத்திர பாத நீல மயில் வீரா --- வாள் போன்ற கூரிய நகங்களை உடைய நீலமயில் மீது வரும் வீரரே!
பச்சிள பூக பாளை செய்க்கயல்
தாவு வேளூர் பற்றிய --- பசுமையான இளம் பாக்கு மரத்தின் பாளைகள் மீது வயலில் உள்ள
கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்குவேளூரைத் தனது இடமாகக் கொண்டு அமர்ந்த
மூவர் தேவர் பெருமாளே --- மும்மூர்த்திகளும்
தேவர்களும் போற்றும் பெருமையில் மிக்கவரே!
எத்தனை கோடி கோடி
விட்டு உடல் ஓடி ஆடி --- எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை விட்டு, வேறு உடல்களில் ஓடிப் புகுந்து ஆடி,
எத்தனை கோடி போனது
அளவு ஏதோ ---
எத்தனை கோடிப் பிறவிகள் கழிந்து போயின. இதற்கு ஓர் அளவு உண்டோ?
இப்படி மோக போகம்
இப்படி ஆகி ஆகி --- (எண்ணில் அடங்காப்
பிறவிகள் தோறும்) இப்பிறவியில்
உள்ளது போல் மோக இன்பத்தையும், போக இன்பத்தையும்
கலந்து அனுபவிப்பதும் ஆகி,
இப்படி ஆவது ஏது --- இவ்வாறு பிறந்து
இறந்து உழல்வதனால் ஆன பயன் என்ன?
என்று,
இனிமேல் ஓசித்திடில் --- இனிமேல்
ஆராய்ந்து பார்த்தால்,
சீசி சீசி குத்திர
மாய மாயை
--- சீச்சி, சீச்சி, வஞ்சகமும், மாயமும் நிறைந்ததும்
தோன்றி அழிவதும் ஆகிய இந்த
சிக்கினில் ஆயும் ---
சிக்கலில்
அகப்பட்டும்
மாயும் அடியேனை --- அழிகின்ற
அடியேனை,
சித்தினில் ஆடலோடு --- அறிவு என்னும் வெளியில்
ஆடவிடுவதோடு,
முத்தமிழ் வாணர் ஓது
சித்திர ஞான பாதம் அருள்வாயே --- மூன்று தமிழ்த் துறைகளிலும் வல்ல
புலவர்கள் பாடிப் பரவுகின்ற அழகிய திருவடியை எனக்கு அருள்புரிவீராக.
பொழிப்புரை
நாள்தோறும் தேவரீரது அருட்புகழை ஓதித் துதிப்பவர்களின்
உள்ளத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு அங்கே ஆனந்தத் திருநடம் புரிகின்ற ஆறுமுகப்
பெருமானே!
உருவம் இல்லாதவரான சிவபெருமான் கொண்ட அருள்
திருமேனியில்,பாதியைக் கொண்ட பச்சை
நிறத் திருமேனி உடையவரும், மூன்று நீண்ட இலைத் தலைகளை உடைய சூலாயுதத்தைத்
திருக்கையில் தரித்துள்ள சிவபெருமான் அருளிய புதல்வரே!
பெரிய ஆயிரம் பணாமகுடங்கள் படைத்த ஆதிசேடனையும்
கிழிக்கும், வாள் போன்ற கூரிய
நகங்களை உடைய நீலமயில் மீது வரும் வீரரே!
பசுமையான இளம் பாக்கு மரத்தின் பாளைகள்
மீது வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்குவேளூரைத் தனது இடமாகக் கொண்டு அமர்ந்த மும்மூர்த்திகளும் தேவர்களும் போற்றும்
பெருமையில் மிக்கவரே!
எத்தனையோ கோடிக்கணக்கான உடல்களை
விட்டு, வேறு உடல்களில் ஓடிப்
புகுந்து ஆடி, எத்தனை கோடிப் பிறவிகள்
கழிந்து போயின. இதற்கு ஓர் அளவு உண்டோ? எண்ணில் அடங்காப் பிறவிகள்
தோறும்,
இப்பிறவியில்
உள்ளது போல் மோக இன்பத்தையும், போக இன்பத்தையும்
கலந்து அனுபவிப்பதும் ஆகி, இவ்வாறு பிறந்து இறந்து உழல்வதனால் ஆன
பயன் என்ன? என்று, இனிமேல் ஆராய்ந்து பார்த்தால்,
சீச்சி, சீச்சி, வஞ்சகமும், மாயமும் நிறைந்ததும்
தோன்றி அழிவதும் ஆகியது. இந்த சிக்கலில் அகப்பட்டும்
அழிகின்ற அடியேனை, அறிவு என்னும் வெளியில்
ஆடவிடுவதோடு,
மூன்று
தமிழ்த் துறைகளிலும் வல்ல புலவர்கள் பாடிப் பரவுகின்ற அழகிய திருவடியை எனக்கு
அருள்புரிவீராக.
விரிவுரை
எத்தனை கோடி கோடி விட்டு உடல் ஓடி ஆடி, எத்தனை கோடி போனது அளவு ஏதோ ---
எண்ணில்
அடங்காத கோடிக்கணக்கான பிறவிகளை எடுத்து, ஒரு
உடலை விட்டு,
இன்னோரு
உடலைக் கொண்டு பிறந்து இறந்து இளைத்து வருவன உயிர்கள்.
ஒன்றாகிய
பரமசிவம் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டுத் தமது மேனிலையில் இருந்து
கீழிறங்கி அருவத் திருமேனியாயும், அருவுருவத் திருமேனியாயும், உருவத் திருமேனியாயும், உயிர்களின் பக்குவ
நிலைக்கு ஏற்ப, அவ்வக் காலங்களில்
கொள்ளப் பெறும் திருவுருவங்கள் என்று சொல்லப்படும் மகேசுர வடிவங்கள் பலவாயும்
நின்று, அறியாமையை உண்டாக்கும் ஆணவ மலத்துள்
அழுந்தி மயங்கிக் கிடக்கின்ற பல உயிர்களுக்கு மோட்சம் கொடுத்து அருளும் பொருட்டு, அவ் உயிர்களின் ஆணவ மல நீக்கத்திற்கான
பக்குவம் அடையக் கருணை பொருந்திய
திருக்கடைக்கண் நோக்கத்தை அவ் உயிர்களின் மேல் செலுத்தி அருளி, அவ் உயிர்கள் தூல, சூக்கும உடலைப் பொருந்தும்படி
தருவதற்குக் காரணமான அருவுருவமுடைய சதாசிவமூர்த்தி, தொழில்படுத்த அடுத்து நின்ற
மூலப்பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்தமாயை என்ற மூன்றினோடு
அவ்வந்நிலைக்கு ஏற்பப் பற்று உண்டாகும்படி இறுகக் கட்டுவித்து, பிண்டம் என்னும் சரீரத்தில்
பொருந்திய மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்ற ஆறு அத்துவாக்களையும், அண்டத்தில் உலகத்தில் பொருந்திய ஆறு
அத்துவாக்களையும், முன்னே சொல்லப்பட்ட கட்டில் ஒன்றுபடச்
சேர்ப்பித்து, ஒன்று ஒன்றாக மாறி மாறி வருகின்ற
நால்வகைத் தோற்றத்தினை உடைய, ஏழுவகைப் பிறப்பினுள், எண்பத்து நான்கு
இலட்சம் யோனி பேதமுடைய உயிர்களில்,
அனுபவித்தால்
அன்றி ஒழித்தற்கு அருமையான
இருவினைகளுக்குத் தக்கபடி, காற்றாடியும், வண்டிச் சக்கரமும் போல, பிறந்து பிறந்து உழலும்படி செய்து, பின்பு தத்தம் நிலைகளை அறியா வண்ணம்
மறைப்பை விளைவித்து அருள் புரியும்.
உருவத்
திருமேனிகள் மகேசுவரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன் என்ற நான்கு ஆயினும், மகேசுவரனே முதன்மையானவர்.
உருத்திரனும் விஷ்ணுவும் மகேசுவரனிடத்தில்
தோன்றியவர். பிரமன் விஷ்ணுவினிடத்தில் தோன்றியவர். பிரம, விஷ்ணு, உருத்திரன் இம்மூவரிடத்தும் முதல்வனது
சிவசத்தி பதிந்து நிற்றலால், இவர்கள் மகேசுவரரோடு
ஒப்பாக வைக்கப் பெற்றார்கள்.
அரு
நான்கும், அருஉரு ஒன்றும், உரு நான்குமாக ஒன்பது வகையான இவை நவந்தரு
பேதம் எனப்படும். இம் மூன்று திருவுருவங்களும், ஆன்மாக்களின் பிறப்பை ஒழித்தற்கு இறைவன்
கொண்டு அருளிய கருணை வடிவங்களாம். அடியார்களின்
பக்குவ நிலைக்கு ஏற்பக் கொள்ளப்பெறும் மகேசுவரர் திருவுருவங்கள் பல. அவை, வேக வடிவம், போக வடிவம், போக வடிவம் என மூன்றாகத்
தொகுக்கப்பட்டும், இலிங்கோற்பவர், கலியாணசுந்தரர், சந்திரசேகரர், உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தம், சோமாஸ்கந்தர், சக்ரவரதர், திரிமூர்த்தி, பிச்சாடனர், கங்காளர், திரிபுராந்தகர், சரபேசுவரர், திரிபாதமூரத்தி, ஏகபாதமூர்த்தி, பயிரவர், இடபாரூடர், கங்காதரர், நடராசர், காலசம்மாரர், வீரபத்திரர், சுகாசனர், மதனதகனர், சலந்தரவதர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், முதலிய 25 மகேசுவர மூர்த்தங்கள் எனவும்
கூறப்படும். பாம்பன் சுவாமிகள் அட்டாட்ட விக்திரக லீலை என்று 64 திருமூர்த்தங்களைப் பாடி இருப்பதையும்
நினைவில் கொள்க.
இறைவனின்
திருவுருவங்கள் எல்லாம், இருவினைக்கு ஈடாகத்
தோன்றும் ஆன்மாக்களின் உருவம் போல் அல்லாமல், ஆன்மாக்கள் புரியும் தியானம், பூசை முதலியவற்றின் பொருட்டுப்
பாவிக்கப்படுபவை.
விந்து என்பது சுத்தமாயை, குடிலை என்றும் வழங்கப்படும். இது
அருவமாய் சுத்தப் பிரபஞ்சத்திற்கு முதல்காரணமாய், மயக்கம் இன்றி இருப்பது. மலகன்மங்களோடு
விரவாது இருப்பது. நால்வகையான வாக்குகளுக்கும் பிறப்பிடம் இதுவே.
மோகினி என்பது அசுத்தமாயை ஆகும்.
இது அருவமாய் அசுத்தப் பிரபஞ்சத்திற்கு
முதல் காரணமாய், வினைக்குப்
பற்றுக்கோடாய், மயக்கம் செய்வதாய்
இருப்பது. மலகன்மங்களோடு விரவி இருப்பது.
மூலப்பிரகிருதி
மாயை மான் எனப்படும். இது உருவ நிலையான அசுத்தமாயையின்
காரியமாகிய கலையினின்று தோன்றுவதாய், முக்குணங்களும்
சமமாய், அவிச்சை என்னும்
அறியாமை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என்னும் துக்கங்களை
விளைத்தற்குக்
காரணமாய் இருப்பது. இந்த ஐந்து துக்கங்களும் பஞ்சக் கிலேசம் எனப்படும்.
மாயை - இது எல்லாக்
காரியங்களும் தன்பால் வந்து ஒடுங்குதற்கும், தன்னிடம் இருந்து
தோன்றுதற்கும் காரணமாய் நிற்பது. (மா - ஒடுங்குதல், யா - வருதல்).
அத்துவா
- படிவழி
எனப்படும். ஆன்மாக்களின் மல பந்தத்தை அறுத்து, சிவஞானத்தை உண்டாக்கி முத்தி அடைவதற்காக
வகுத்த வழி. அத்துவசுத்தி என்பது நிர்வாண தீட்சை பெறும் ஒருவருக்கு அத்தீட்சையில்
நடைபெறும் சிறந்த கிரியை. அத்துவசுத்தி
இன்றி முத்தி பெற வழியில்லை.
ஈர்
இரண்டு தோற்றம் - அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்ற நால்வகைத் தோற்றம். அவை வருமாறு....
அண்டசம் - முட்டையில்
தோன்றுவன. (அண்டம் - முட்டை, சம் - பிறந்தது) அவை
பறவை, பல்லி, பாம்பு, மீன், தவளை முதலியன.
சுவேதசம் - வேர்வையில்
தோன்றுவன. (சுவேதம் - வியர்வை) அவை பேன், கிருமி, கீடம், விட்டில் முதலியன.
உற்பிச்சம் - வித்து. வேர், கிழங்கு
முதலியவற்றை மேல் பிளந்து தோன்றுவன (உத்பித் - மேல்பிளந்து) அவை மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலியன.
சராயுசம், கருப்பையிலே தோன்றுவன (சராயு -
கருப்பாசயப்பை) இவை தேவர், மனிதர், நாற்கால் விலங்குகள் முதலியன.
இந்த
நால்வகைத் தோற்றங்கள் எழுவகைப் பிறப்புக்களாகு அமையும். எழு பிறப்பு என்றது தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற எழுவகைப் பிறப்பு. இவற்றுள் முதல் ஆறும் இயங்கியல்பொருள். (இயங்குதிணை, சங்கமம், சரம்) எனவும், இறுதியில் நின்ற
ஒன்று நிலையியல் பொருள் (நிலைத்திணைப் பொருள், தாவரம், அசரம்) எனவும் பெயர்
பெறும்.
எண்பத்து
நான்கு இலட்சம் யோனி போதங்கள் உண்டு.
"உரைசேரும்
எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு
உயிராய் அங்கங்கே நின்றான்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானார்
திருவீழிமிழலைத் தேவாரம்.
யோனி - கருவேறுபாடுகள்.
தேவர் - 14 இலட்சம்,
மக்கள் - 9 இலட்சம்,
விலங்கு - 10 இலட்சம்,
பறவை - 10 இலட்சம்,
ஊர்வன - 11 இலட்சம்,
நீர்வாழ்வன – 10 இலட்சம்,
தாவரம் - 20 இலட்சம்,
ஆக, 84 இலட்சம் பேதம் ஆகும், இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
நீர்பறவை நாற்கால் ஒர் பப்பத்தாம் -
சீரிய
பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் தாவரம் நால்ஐந்து.
என்னும்
பழம் பாடலால் அறியலாம்.
இப்படிப்
எண்ணில் அடங்காத பல பிறவிகளும்,
கன்மத்துக்கு
ஏற்ப அமையும். ஆன்மாவினால்
மன வாக்குக் காயங்களினால் அறிந்தும் அறியாலும் செய்யப்படும் நல்வினை தீவினைகள்.
புண்ணிய பாவங்களான சுகதுக்கங்களை உடையது. நெல்லுக்குள் உமிபோல ஆன்மாவைப் பற்றி
நிற்பதாய் இருப்பது கன்மமே. இது,
நல்வினை, தீவினைகளாகிய ஆகாமியமும், பின்பு புண்ணிய பாவங்களாகிய சஞ்சிதமும், அதன் பின்பு இன்ப துன்பங்களாக வரும் பிராரத்துவமும்
என மூவகை ஆகும். இது காரியப்படும் போது ஆயுளும், போகமும், சாதியுமாக நின்று காரியப்படும். அது
தெய்விக கன்மம், பௌதிக கன்மம், ஆன்மிக கன்மமாகவும் வரும். ஆன்மாக்களுக்கு
இவையெல்லாம் ஊழ்வினையாக ஆர்ச்சித்த ஒழுங்கிலே வரும். அன்றியும் வன்மை
மென்மைகளுக்கு ஈடாக மாறியும் வரும்.
இதனைப்
பின்வரும் பிராணங்களால் அறிந்து தெளியலாம்....
புல்லாகிப்
பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக
மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி
முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ
நின்றஇத் தாவர் சங்கமத்துள்
எல்லாப்
பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் ... திருவாசகம்.
அருள்பழுத்து
அளிந்த கருணை வான்கனி,
ஆரா
இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு
அமிர்த வாரி, நெடுநிலை
மாடக்
கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு
கிழிக்கும் கழுமல வாண! நின்
வழுவாக்
காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன்
இருந்த பரம யோகி!
யான்ஒன்று
உணர்த்துவன், எந்தை! மேனாள்
அகில
லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந்
தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி
எனைப்பல
யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும்
யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர்
ஆகியும், தந்தையர் ஆகியும்
வந்து
இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையர்
ஆகியும், தாயர் ஆகியும்
வந்து
இராததும் இல்லை, முந்து
பிறவா
நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா
நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத்
தின்னா உயிர்களும் இல்லை,
யான்
அவை
தம்மைத்
தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே
காலமும் சென்றது, யான்இதன்மேல்இனி
இளைக்குமாறு
இலனே, நாயேன்,
நந்தாச்
சோதி!நின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம்
பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப்
பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றஓர்
பொழுதின் இட்டது மலரா,
சொன்னது
மந்திரம் ஆக, என்னையும்
இடர்ப்பிறப்பு
இறப்புஎனும் இரண்டின்
கடல்
படா வகை காத்தல்நின் கடனே.
--- பதினோராம்
திருமுறை.
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்,
அருந்தின மலம் ஆம், புனைந்தன அழுக்கு ஆம்,
உவப்பன வெறுப்பு ஆம், வெறுப்பன உவப்பு ஆம்,
என்று இவை அனைத்தும் உணர்ந்தனை, அன்றியும்,
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்தும் நினைக் கொன்றன,
தின்றனை அனைத்தும், அனைத்தும் நினைத் தின்றன,
பெற்றனை அனைத்தும், அனைத்தும் நினைப் பெற்றன,
ஓம்பினை அனைத்தும், அனைத்தும் நினை ஓம்பின,
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை,
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை,
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை.. --- பட்டினத்தடிகள்.
எண்ணிலாத நெடுங்காலம் எண்ணிலாத பலபிறவி
எடுத்தே இளைத்து இங்கு அவை நீங்கி,
இம்மானுடத்தில் வந்து உதித்து,
மண்ணில் வாழ்க்கை மெய்யாக
மயங்கி உழன்றால் அடியேன் உன்
மாறாக் கருணை தரும் பாத
வனசத் துணை என்று அடைவேன்.
---
திருப்போரூர்ச் சந்நிதிமுறை.
எந்தத் திகையினும், மலையினும், உவரியின்
எந்தப் படியினும், முகடினும் உள, பல
எந்தச் சடலமும் உயிர்இயை
பிறவியின் .....உழலாதே
இந்தச் சடமுடன் உயிர் நிலைபெற, நளி-
னம் பொன்கழல் இணைகளில் மருமலர்
கொடு
என் சித்தமும் மனம் உருகி நல்
சுருதியின் ...முறையோடே
சந்தித்து, அரஹர
சிவசிவ சரண்என
கும்பிட்டு, இணைஅடி
அவை என தலைமிசை
தங்க, புளகிதம் எழ, இருவிழி
புனல் ...... குதிபாய,
சம்பைக் கொடிஇடை விபுதையின் அழகுமுன்
அந்தத் திருநடம் இடு சரண் அழகு
உற
சந்தச் சபைதனில் எனது உளம்
உருகவும் .....வருவாயே. --- திருப்புகழ்.
சினத்
திலத் தினை சிறு மணல் அளவு, உடல்
செறித்தது எத்தனை, சிலை கடலினில் உயிர்
செனித்தது எத்தனை, திரள்கயல் என பல.....அதுபோதா.
செமித்தது
எத்தனை, மலைசுனை உலகிடை
செழித்தது எத்தனை, சிறுதன மயல்கொடு
செடத்தில் எத்தனை நமன்உயிர் பறிகொள்வது.....அளவுஏதோ?
மனத்தில்
எத்தனை நினை கவடுகள், குடி
கெடுத்தது எத்தனை, மிருகம் அது என உயிர்
வதைத்தது எத்தனை, அளவிலை, விதிகரம் .....ஒழியாமல்
வகுத்தது
எத்தனை, மசகனை, முருடனை,
மடைக் குலத்தனை, மதிஅழி விரகனை,
மலர்ப் பதத்தினில் உருகவும் இனிஅருள்
.....புரிவாயே.
--- திருப்புகழ்.
..... ..... ..... ஏகத்து
உருவும், அருவும், உருஅருவும் ஆகி,
பருவ வடிவம் பலவாய்,
- இருள் மலத்துள்
மோகம்
உறும் பல்லுயிர்க்கு முத்தி அளித்தற்கு, மல
பாகம் உறவே கடைக்கண் பாலித்து,
- தேகம்உறத்
தந்த
அருஉருவம் சார்ந்த விந்து மோகினி மான்
பெந்தம் உறவே பிணிப்பித்து, - மந்திரமுதல்
ஆறு
அத்துவாவும், அண்டத்து ஆர்ந்த
அத்துவாக்களும், முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து, – மாறிவரும்
ஈர்
இரண்டு தோற்றத்து, எழுபிறப்புள், யோனி எண்பான்
ஆர வந்த நான்கு நூறு ஆயிரத்துள், - தீர்வுஅரிய
கன்மத்துக்கு
ஈடாய், கறங்கும் சகடமும்
போல்
சென்மித்து, உழலத் திரோதித்து, -
என்கின்றது
கந்தர் கலிவெண்பா.
மோக போகம் இப்படி ஆகி ஆகி ---
எண்ணல்
அடங்காத பல பிறவிகளையும் எடுத்த ஆன்மாவை, கொடிய
நரகபோகமான துன்பங்களையும், சொர்க்கம் முதலிய
உலகங்களில் அநுபவிக்கப்படும் எல்லாப் போக இன்பங்களையும் அநுபவிக்கச் செய்து, இவ்வகையில் ஆன்மாக்கள் அடையும்
மலபரிபாகத்தால் முத்தி அடைதற்கு ஏதுவான நல்ல புண்ணியம் சிறிது பொருந்திய அளவில், தம்தம் சமயமே சிறந்தது என, வாதம் புரிதற்கு ஏதுவாக இயற்றப் பெற்று
உள்ள பழமையான நூல்களை உடைய புறச்சமயங்கள் தோறும், அவ் அச்சமய நூல்களே வீட்டுநெறி கூறும்
உண்மை நூல் என்று அறிந்து, அவற்றில் மனம்
அழுந்துமாறு செய்து, அதன்பின், புறச் சமயங்களில் இருந்து அகச் சமயத்துள்
புகுத்தி, முற்பட்ட நூல்களாகிய வேத சிவாகமங்களில்
கூறியுள்ள விரதங்கள் முதலிய பலவகைப்பட்ட உண்மைத் தவத்தின் பயனாக மெய்ந்நெறியினை
உணர்த்தும் சிவாகமத்தில் கூறிய சரியை, கிரியை, யோகம் என்னும் மூன்றையும் ஒன்றன் பின்
ஒன்றாகச் சார்பு கொள்ளச் செய்து,
அவற்றின்
வாயிலாகத் திருவருள் மிக்குப் பெருகா நின்ற சிவசாலோகம், சிவசாமீபம், சிவசாரூபம் என்ற மூன்று பரமுத்திகளையும்
அநுபவிக்கச் செய்து, நான்கு வகைப்பட்ட
சத்திநிபாதங்களை அளித்தற்கு ஏதுவாகிய இருவினை ஒப்பு உண்டாகும் காலம் தோன்றிப்
பாசத்தைத் தருதற்கு மூலகாரணமான ஆணவமலம் ஒடுங்குதற்குரிய பக்குவகாலம் வரும் வரையில்
பலகாலமாக உயிர்கள் இறைவன் அருள் நோக்கி வருந்திக்கொண்டு இருக்கும்.
விரதம் - இன்ன அறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும் தம்
ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்ளுதல் என்பார்
பரிமேலழகர். மனம் பொறிவழி செல்லாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம் வாக்கு காயம் என்ற
மூன்றினாலும் கடவுளைச் சிறப்பாக வழிபடுதல்.
தவம் - நெருப்பு, நீர்நிலை, மழை, வெயில், பனி முதலியவற்றில் நின்று, மனமும் பொறியும் ஒருவழிப்படுமாறு உடம்பை
வருத்திச் செய்யும் சாதனை. உற்ற நோய்
நோன்றல், உயிர்க்கு உறுகண்
செய்யாமை அற்றே தவத்திற்கு உரு என்பார் திருவள்ளுவ நாயனார். உண்டி சுருக்கல்
முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொருத்தலும், தாம் பிற உயிர்கட்குத்
துன்பம் செய்யாமையும் ஆகும்.
சரியை - இது சிவாலயத்திற்கும் சிவன் அடியார்க்கும்
செய்யும் தொண்டு. உருவத் திருமேனிகளாகிய
மகேசுர மூர்த்திகளை வழிபடல் முதலியன.
கிரியை - இது அருவுருவத்
திருமேனியாகிய சிவலிங்கப் பெருமானை அகத்தும் புறத்தும் வழிபடல்.
யோகம் - இது மனத்தை
ஐம்பொறிகளின் வழியே செல்லாவண்ணம் நிறுத்தி அருவத்திருமேனி ஆகிய சிவத்தைத்
தியானித்தல்.
இவை மூன்றும் மனம் வயப்படும் சிறந்த
வழிகள் ஆகும். சரியை, கிரியை, யோகம் இம்மூன்றும் முறையே தாதமார்க்கம், புத்திரமார்க்கம், சகமார்க்கம் எனப்படும். தாதமார்க்கம் - அடிமை நெறி. சரியை, கிரியை, யோக மாரக்கங்களில் நின்று ஒழுகினும், திருவருட் பெருக்கு விளக்கம்
உற்றபோதுதான், சாலோக, சாமீப, சாரூபங்களை அடைதல் கூடும். இதனைப்
பின்வரும் சிவஞானசித்தியார் சுபக்கப் பாடல்களால் அறியலாம்.
தாதமார்க்கம் சாற்றில் சங்கரன்தன்
கோயில்
தலம் அலகுஇட்டு, இலகு மெழுக்கும் சாத்தி,
போதுகளும்
கொய்து பூந்தார் மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்து, புகழ்ந்து பாடி
தீதுஇல்
திரு விளக்கு இட்டு, திருநந்தவனமும்
செய்து திருவேடம் கண்டால் அடியேன்
செய்வது
யாது
பணியீர் என்று பணிந்து அவர்தம் பணியும்
இயற்றுவது, இச் சரியை செயவோர் ஈசன் உலகு இருப்பர்.
புத்திரமார்க்கம் புகலில் புதிய
விரைப் போது
புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு
ஐந்து
சுத்தி
செய்து ஆசனமூர்த்தி மூர்த்தி மானாம்
சோதியையும் பாவித்து ஆவாகிச் சுத்த
பத்தியினால்
அருச்சித்து, பரவிப் போற்றி
பரிவினொடும் எரியில் வரு காரியமும்
பண்ணல்
நித்தலும்
இக்கிரியையினை இயற்றுவோர்கள்
நின்மலன்தன் அருகு இருப்பர்
நிலையும்காலே.
சகமார்க்கம் புலன்ஒடுக்கித்
தடுத்து வளிஇரண்டும்
சலிப்பு அற்று முச்சதுர முதல் ஆதாரங்கள்
அகமார்க்கம்
அறிந்து அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்கு
அணைந்து போய் மேல் ஏறி அலர் மதி
மண்டலத்திலன்
முகமார்க்க
அழுது உடலம் முட்டத்தேக்கி
முழுச்சோதி நினைந்து இருத்தல் முதலாக
வினைகள்
உக, மார்க்க அட்டாங்க யோகம் உற்றும்
உழத்தல் உழந்தவர் சிவன்தன் உருவத்தைப்
பெறுவர்.
சாலோகம் என்பது, சிவபெருமானோடு அவரது அருள் உலகத்தில்
இருத்தல். இங்கு ஒருவர் மனையில்
பணிபுரியும் அகத் தொண்டர்க்கு இருக்கும் உரிமை போல் எங்கும் தடையின்றி இயங்கி
போகங்களை நுகர்ந்து வசித்தலாகும்.
சாமீபம் என்பது, சிவனுக்குச் சமீபத்தில் இருத்தல், இங்கு மைந்தர்க்கு
இருக்கும் உரிமைபோல் வைகி, போக விசேடங்களை
நுகர்ந்து வசித்தல் ஆகும். "திருவாரூரர் தம் அருகிருக்கும் விதியின்றி அறம்
இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே" என்பார் அப்பர் பெருமான்.
சிவசாரூபம் என்பது, சிவன் திருவுருவை (சடைமுடி, முக்கண், மான், மழு முதலியன தாங்கிய சதுர்ப்புயம்
முதலியவற்றை)ப் பெற்று இருத்தல். இங்குத் தோழர்க்கு இருக்கும் உரிமை போல்
விளங்கிப் போக நுகர்ச்சிகளைப் பெற்று இருத்தலாகும்.
கலைஇலங்கும்
மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலைஇலங்கும்
மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலைஇலங்கும்
பிறை தாழ்வடம் சூலம் தமருகம்
அலைஇலங்கும்
புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே
எனவரும்
திருஞானசம்பந்தப் பெருாமானாரின் அருட்பாடலைச் சிந்திக்கவும்.
சத்திநிபாதம் என்பது, சத்தி - சிவசத்தி, அருள். நி - மிகுதியாக. பாதம் - பதிதல், வீழ்ச்சி. மலம் நீங்கியவழி சிவசத்தி மிகுதியாக
ஆன்மாவிடத்தில் பதிதல். நால்வகையாம் சத்திநிபாதம் - மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்ற நான்கு வகைப்
பக்குவங்கள்.
மந்ததரம் - நமக்கு வீடு அருளும் ஒரு பதி உண்டு என்று அறிவு
பெற்று இருத்தல். அது வாழைத் தண்டிலே
நெருப்புப் பற்றினால் போன்றது.
மந்தம் - பதியை அடைவதற்கு
வழி எப்படி என்று ஆராய்தல். ஈர விறகிலே
நெருப்புப் பற்றுவதுபோல.
தீவிரம் - ஆராய்ந்த பதியை
அடைவதற்கு வாழ்க்கையில் வெறுப்பு உற்று, புளியம்பழமும்
அதனுடைய ஓடும் போல நிற்றல். உலர்ந்த
விறகிலே நெருப்புப் பற்றுதல் போல.
தீவிரதரம் - உலக வாழ்க்கையினை
முற்றும் துறந்து, குருநாதனே பொருள்
எனக் கொண்டு வழிபடுதல். கரியிலே
நெருப்புப் பற்றுதல் போல.
மனம்
ஒருவழிப்படும் சரியை, கிரியை, யோக சிவ புண்ணியங்களால் இருவினை ஒப்பும், அதனால் மலபரிபாகமும், அவற்றால் சத்திநிபாதமும்
உண்டாகும்.
..... ..... ..... வெந்நிரய
சொர்க்க
ஆதி போகம் எலாம் துய்ப்பித்து, பக்குவத்தால்
நல்காரணம் சிறிது நண்ணுதலும்,
- தர்க்கமிடும்
தொல்நூல்
பரசமயம் தோறும், அதுஅதுவே
நல்நூல் எனத் தெரிந்து, நாட்டுவித்து, - முன்நூல்
விரதமுத
லாயபல மெய்த்தவத்தின் உண்மை,
சரியை கிரியா யோகம் சார்வித்து,
- அருள்பெருகு
சாலோக
சாமீப சாரூபமும் புசிப்பித்து,
ஆலோகம் தன்னை அகற்றுவித்து,
- நால்வகையாம்
சத்தி
நிபாதம் தருதற்கு, இருவினையும்
ஒத்து வரும் காலம் உளஆகி,
- பெத்த
மலபரிபாகம்
வரும் அளவில், பல்நாள்
அலமருதல் கண்ணுற்று, அருளி,
என்று
கந்தர் கலிவெண்பா இதனை அறிவுறுத்தும்.
இப்படி
ஆவது ஏது
---
இவ்வாறு
பிறந்து இறந்து உழல்வதனால் பயன் ஏதும் இல்லை என்பதால், இதனால் ஆவது ஏது என்கின்றார் அடிகளார்.
இனிமேல்
ஓசித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினில் ஆயும், மாயும் அடியேனை ---
குத்திரம்
- வஞ்சகம், இழிவு, குரூரம், ஏளனம்.
மாயம்
- அறிவு மயக்கத்தை உண்டுபண்ணி, அனுபவத்தைத் தந்து
தெளிவிப்பது.
மாயை
- தோன்றி அழிவது.
இவ்வாறு
பிறந்து இறந்து வந்த செய்தியை ஆராய்ந்து பார்த்தோமானால், இந்தப் பிறவி வெறுக்கத்தக்கதாகவே தோன்றும்.
மாலினால்
எடுத்த கந்தல்,
சோறினால்
வளர்த்த பொந்தி எனப் பின்வரும் திருப்புகழில் அடிகளார் இதனை வகுத்து அருளி இருப்பது
காணலாம்.
பின்
வரும் அப்பர் தேவாரப் பாடல் காண்க...
"நடுவிலாக்
காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணாது
அடுவன
அஞ்சு பூதம்,
அவை
தமக்கு ஆற்றல் ஆகேன்,
படுவன
பலவும் குற்றம்,
பாங்கு
இலா மனிதர் வாழ்க்கை,
கெடுவது
இப் பிறவி,
சீசீ, கிளர் ஒளிச் சடையினீரே".
இதன்
பொழிப்புரை:
செந்நிற
ஒளி வீசும் சடையை உடைய பெருமானே! நீதி உணர்வு இல்லாத கூற்றுவன் வந்து நெருங்கும்போது
உம்மை அறிவதற்கு உடன்படாது என்னைவருத்தும் ஐம்பொறிகளும் என்னை வருத்துவதனைப் பொறுக்க
இயலாதேனாய் உயிருக்குத் துணையாக உதவாத இந்த மனித வாழ்விலே பல குற்றங்களும் நிகழ் கின்றமையின்
இதனை இகழ்ந்து இப்பிறவிப் பிணியை அடியோடு அழித்தொழிக்க வேண்டி உம் அருளை வேண்டுகின்றேன்.
இந்த
உடம்போடு இருப்பது அருவருக்கத்தக்கது என்கின்றார் பட்டினத்து அடிகள்...
மானார்
விழியைக் கடந்து ஏறி வந்தனன், வாழ் குருவும்
கோன்ஆகி
என்னைக் குடியேற்றிக் கொண்டனன், குற்றம்
இல்லை,
போனாலும்
பேறு,
இருந்தாலும்
நற்பேறு இது,பொய் அன்று காண்,
ஆனாலும்
இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே.
பிறந்து
விட்டால்,
சாகும்
வரையில் சஞ்சலம் தான் என்கின்றார் ஔவையார்...
உண்பது
நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது
கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர்
குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும்
சஞ்சலமே தான்.
சித்தினில்
ஆடலோடு, முத்தமிழ் வாணர் ஓது
சித்திர ஞான பாதம் அருள்வாயே ---
சித்து
- அறிவு. இங்கே உண்மை அறிவு எனப்படும் ஞானத்தைக் குறித்து நின்றது.
ஞானநிலையில்
நின்று, முருகப் பெருமான் திருவடியை
முத்தழிலும் வல்ல பெரியோர்கள் நாள்தோறும் ஓதி வழிபட்டு வருகின்றார்கள். "தமிழில்
பாடல் கேட்டு அருள் பெருமாளே" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் போற்றி உள்ளதும்
அறிக.
தமிழ்
முருகனுக்கு மட்டுமல்லாது, சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் உகந்த மொழி.
உலகில்
பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில்
பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய்
இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்,
பெற்றான்
சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும்
அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கல் புணையை நல் புணை ஆக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது
போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச் செய்தது தமிழ். கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது
தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும்
பேரின்பத்தை வழங்குவது தமிழ். ஆதலால் நம் அருணகிரியார் “அரிய தமிழ்” என்று
வியக்கின்றார்.
தென்றல்
தமிழ்த் தென்றல் ஆயிற்று. தமிழ் வழங்கும் திசை தென் திசை.
அத்திசையில் இருந்து வரும் மெல்லியக் காற்று தென்றல், இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்
என்பது நிகண்டு. இனியக் காற்று தென்றல். “தமிழ் மாருதம்” என்று சேக்கிழாரும்
கூறுகின்றனர்.
இறைவனுக்கு
மிகவும் இனிய மொழி தமிழ் ஆகும். இறைவனுக்குத்
திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும், சுந்தரமூர்த்தி
சுவாமிகளும் தமிழ்மாலையைச் சாத்தி வழிபட்டார்கள். "பன்னலம் தமிழால்
பாடுவேற்கு அருளாய்" என இறைவனை வேண்டினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
"வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்" என்றார் அப்பர்
பெருமான். "தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்றார் அவரே.
தமிழ்க்கடவுளும்
குறிஞ்சிக் கிழவனுமாகிய முருகவேள் தமிழ்க்குடியில் பிறந்த தமிழணங்காகிய
வள்ளிநாயகியைத் தமிழ் முறைப்படி களவியலில் மணந்துகொண்டார். களவியலுக்கு இலக்கியமாக வள்ளியம்மையாரையும், கற்பியலுக்கு இலக்கியமாக
தெய்வகுஞ்சரியம்மையாரையும் திருமணம் புரிந்து, உலகிற்கு இரு இயல்புகளையும் இறைவர்
அறிவுறுத்தினார்.
அருமையினும்
அருமையான இனிய தமிழை, ஈசனுக்கு
அர்ப்பணியாமல் அழிந்து போகின்றவர்களும், பரமலோபிகளும், மகா மூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப்
பரதவிக்கின்றார்கள்.
முருகனைத்
தமிழால் பாடி, அந்த மாத்ருகா புட்ப
மாலையை,
ஞானமலர்
மாலையைச் சாத்தி வழிபட்டால் இகம் பரம் ஆகிய இரண்டு நலன்களையும்
வழங்குவான். அப்பரமனை வாழ்த்தக்
கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பான் முருகன்.
மூடர்களாகிய
உலோபிகளை, “தந்தையே! தாயே!
தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து
பாடினாலும் மனம் இரங்கி, அரைக் காசும்
உதவமாட்டார்கள்.
செந்தமிழ்த்
தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப்
பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும்
இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.
அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,
ஆபத்து அகற்றி அன்பாய்
ஆதரிக்கும்
கருணை வள்ளல்நீ, மாரன்நீ,
ஆண்மைஉள விசயன்நீ, என்று
எத்தனை
விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்
இயற்றினும் இரக்கஞ் செயார்,
இலக்கண
இலக்கியக் கற்பனைக் கல்வியால்
இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,
பித்தனொடு
நீலியும் பெறுதகப்பன் சாமி!
பெருவயிற்றான் தம்பி,அப்
பேய்ச்சிமுலை
உண்டகள் வன்மருகன், வேடுவப்
பெண்மணவன், என்றுஏசினும்,
சித்தமகிழ்
அருள் செய்யும் என்றே முழக்கல்போல்
சிறுபறை முழக்கி அருளே!
செம்பொன்
நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,
சிறுபறை முழக்கி அருளே!
--- கம்பை முருகன்
பிள்ளைத் தமிழ்
சுந்தர்
மூர்த்தி நாயனார் பாடுகின்றார்.
நலம்இலாதானை
நல்லனே என்றும்,
நரைத்த மாந்தரை இளையனே,
குலமிலாதானைக்
குலவனே என்று
கூறினும் கொடுப்பார்இலை,
புலம்எலாம்வெறி
கமழும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்,
அலமராது
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
பழய
அடியவர் உடன் இமையவர் கணம்
இருபுடையும் மிகு தமிழ்கொடு, மறைகொடு,
பரவ வரு மதில் அருணையில் ஒருவிசை ......
வரவேணும்.
--- (கொடிய மறலியும்)
திருப்புகழ்.
பலபல
பைம்பொன் பதக்கம் ஆரமும்,
அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,
பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!
--- (மலரணி)
திருப்புகழ்.
இறைவனுக்கு
மலர்மாலை சாத்தியபின் பன்னீர் தெளிப்பார்கள். அதனால் பரிமளம் மிகுதிப்படும்.
கடப்ப
மலர்கள் முருகனுக்குச் சாத்தியபின் திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீர்
தெளிக்கவேண்டும்.
அதனால்
ஞான வாசனை மிகுதிப்படும். இதனால் திருப்புகழின் பெருமையை நன்கு உணர்தல் வேண்டும்.
பூமாலை
சூட்டுதல் கிரியை நெறி.
பாமாலை
சூட்டுதல் ஞானநெறி.
பலப்பல
சங்கப் புலவர்களால் ஆய்ந்து ஆய்ந்து ஒழுங்கு செய்து செப்பம் செய்யப்பட்ட மொழி தமிழ்
மொழி. தமிழ் மொழி ஒன்றே திருக்கயிலாயம் சென்று அரங்கேறியது. சேரமான் பெருமாள் நாயனார்
பாடி அருளிய "திருக்கயிலாய ஞானஉலா" திருக்கயிலையில் அரங்கேறியது. மொழிகளுக்குள்
முதன்மை பெற்றது தமிழ்.
"முத்தமிழால்
வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான்.
நம்பியாரூரைத்
தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார், பனிமதிச்சடை அண்ணல் என்பதைப் பெரியபுராணத்தின்
வாயிலாக அறியலாம்.
"மற்று
நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை
பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல்
தமிழ் பாடுக"
என்றார் தூமறை பாடும் வாயார்.
தேடிய
அயனும் மாலும் தெளிவு உறா ஐந்து எழுத்தும்
பாடிய
பொருளாய் உள்ளான் ‘பாடுவாய் நம்மை’ என்ன
நாடிய
மனத்தர் ஆகி நம்பி ஆரூரர். மன்றுள்
ஆடிய
செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று.
"வேதியன் ஆகி என்னை வழக்கினால்
வெல்ல வந்த
ஊதியம்
அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட
கோதுஇலா
அமுதே! இன்றுஉன் குணப் பெருங் கடலை நாயேன்
யாதினை
அறிந்து என் சொல்லிப் பாடுகேன்?’"
என
மொழிந்தார்.
அன்பனை
அருளின் நோக்கி அங் கணர் அருளிச் செய்வார்
"முன்பு
எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என்
பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார்; நின்ற
வன்
பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.
கொத்து
ஆர் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெய்த்
தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான்
"பித்தா
பிறைசூடி" எனப் பெரிதாம் திருப்பதிகம்
இத்
தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.
"முறையால் வரு மதுரத் துடன்
மொழி இந்தளம் முதலில்
குறையா
நிலை மும்மைப்படிக் கூடும் கிழமையினால்
நிறை
பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால்
இறையான்
மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.
சொல்ஆர்
தமிழ் இசை பாடிய தொண்டன் தனை ‘இன்னும்
பல்
ஆறு உலகினில் நம் புகழ் பாடு’ என்று உறு பரிவில்
நல்லார்
வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா
உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
--- பெரியபுராணம்.
"பழமறைகள்
முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கடவுள்" என்று திருமால் தமிழின்
பின்னர் சென்ற அருள் வரலாற்றைக் குறித்து, மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழில் குமரகுருபர சுவாமிகள்
பாடி அருளினார் என்பதையும் அறிக.
உலகினில்
பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன்.
எப்படிப்பட்ட பிறவி? இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்கு அணிகின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும்
என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.
விரைவிடை
இவரும் நினை, பிறவாமை
வேண்டுநர் வேண்டுக, மதுரம்
பெருகுறு
தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்
பிறவியே வேண்டுவன் தமியேன்;
இருசுடர்களும்
மேல் கீழ்வரை பொருந்த
இடையுறல் மணிக்குடக் காவைத்
தரையிடை
இருத்தி நிற்றல் நேர் சோண
சைலனே கைலைநா யகனே.
இதன்
பொருள் ----
சூரியன்
சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை
ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத்
தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில்
பிறவாமை வேண்டுவோர் வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு
அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.
நித்தமும்
ஓதுவார்கள் சித்தமெ வீடு அது ஆக நிர்த்தம் அது ஆடும் ஆறுமுகவோனே ---
நிர்த்தம்
- திருநடனம். இறைவன் உயிர்களில் புரியும் திருநடனம், உயிர்களில் உள்ள ஊனத்தை நீக்குவதால், ஊனநடனம் எனப்படும்.
சானத்தை விளைப்பதால் ஞானநடனம் எனப்படும். ஞானானந்தத்தை விளைவிப்பதால் ஞானானந்தத் திருநடனம் எனப்படும்.
இறைவன்
அன்பு நிறைந்த அடியார்கள் உள்ளத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளி இருப்பவன்.
"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்று அருளினார் அப்பர் பெருமான். இது
பின்வரும் பிரமாணங்களினால் தெளிவாகும்.
அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
ஐம்புலனும் அடக்கிஞானம்
புகல்உடையோர் தம்உள்ளப் புண்டரிகத்து
உள்இருக்கும் புராணர்கோயில்
தகவுஉடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரிஅட்ட
மணம்செய்யும் மிழலையாமே. ---
திருஞானசம்பந்தர்.
உள்ளத்தில் பொருந்திய அன்பு உடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்து
இருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய
சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை
மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக்
கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்புஎனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறைஎனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவுஎனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்பர் ஆகில்
சிவகதி விளையும் அன்றே. ---
அப்பர்.
காயமே கோயில் ஆகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்று அவிக் காட்டி னோமே. ---
அப்பர்.
உயிரா வணம் இருந்து, உற்று நோக்கி
உள்ளக் கிழியின் உருவு எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத் தந்தால்,
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி,
அயிரா வணம் ஏறாது ஆன்ஏறு ஏறி,
அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிரா வணமே என் அம்மா னே,நின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே. ---
அப்பர்.
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன், கர்ம
துட்ட தேவதைகள் இல்லை,
துரியம் நிறை சாந்த தேவதையாம்
உனக்கே
தொழும்பன், அன்பு அபிடேக நீர்,
உள்உறையில் என் ஆவி நைவேத்தியம், ப்ராணன்
ஓங்கும் மதி தூபதீபம்,
ஒருகாலம் அன்று, இது சதாகால பூசையா
ஒப்புவித்தேன் கருணைகூர்,
தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே!
தெளிந்த தேனே! சீனியே!
திவ்யரசம் யாவும் திரண்டு
ஒழுகு பாகே!
தெவிட்டாத ஆனந்தமே!
கள்ளன்அறிவு ஊடுமே மெள்ளமௌ வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே!
கருதரிய சிற்சபையில் ஆனந்த
நிர்த்தம் இடு
கருணா கரக்கடவுளே. ---
தாயுமானார்.
நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே. --- தாயுமானார்.
மறவாமையால்
அமைத்த
மனக்கோயில் உள் இருத்தி,
உற
ஆதி தனை உணரும்
ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி,
இறவாத
ஆனந்தம் எனும்
திருமஞ்சனம் ஆட்டி,
அறவாணர்க்கு
அன்பு என்னும்
அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.
அகம்
மலர்ந்த அர்ச்சனையில்
அண்ணலார் தமைநாளும்
நிகழவரும்
அன்பினால்
நிறைவழிபாடு ஒழியாமே
திகழ
நெடு நாள்செய்து
சிவபெருமான் அடிநிழற்கீழ்ப்
புகல்
அமைத்துத் தொழுது இருந்தார்
புண்ணிய மெய்த் தொண்டனார். ---
பெரிய புராணம்.
ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு
உரைப்பார்கள் சித்தத்து ......
உறைவோனே!
--- திருவருணைத் திருப்புகழ்.
நினைத்தார் சித்தத்து ...... உறைவோனே!
--- திருக்காளத்தித் திருப்புகழ்.
நிட்கள
ரூபர்
---
நிட்களம்
- உருவம் இன்மை, தூய்மை.
உருவம்
இல்லாதவர் சிவபெருமான்.
பாதி
பச்சு உருவான
---
பச்சு
- பசுமை, பச்சை.
உருவம்
இல்லாத பரம்பொருள் உயிர்கள் உய்யக் கொண்ட திருமேனிகளுள் அர்த்தநாரீசுரர் என்னும் உமையொரு
பாகர் வடிவமும் ஒன்று. சிவபெருமான் திருமேனியில் பாதியை, பச்சை நிறத் திருமேனி உடைய இறைவியார் கொண்டுள்ளார்.
மூணு
நெட்டிலை சூல பாணி அருள்பாலா ---
மூன்று
நீண்ட இலைத் தலைகளை உடைய சூலாயுதத்தைத் திருக்கையில் தரித்துள்ள சிவபெருமான்
அருளிய புதல்வர் முருகப் பெருமான்.
திரிசூலம் சிவபெருமானுடைய ஆயுதம். இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி
என்று மூன்று சத்திகளைக் குறிக்கும். இது உயிர்களின் மும்மலங்களைச் சிதைக்கும் ஆற்றல்
உடையது.
இதனைப் பின்வரும் பெரியபுராணப் பாடல் விளக்கும்.
அருள்பொழியும்
திருமுகத்தில்
அணிமுறுவல் நிலவு எறிப்ப
மருள்பொழி
மும்மலம் சிதைக்கும்
வடிச்சூலம் வெயில் எறிப்பப்
பொருள்பொழியும்
பெருகு அன்பு
தழைத்து ஓங்கிப் புவி ஏத்தத்
தெருள்பொழிவண்
தமிழ்நாட்டுச்
செங்காட்டங் குடிசேர்ந்தார்.
இதன்
பொழிப்புரை ---
அருள்
பொழியும் திருமுகத்தில் புன்முறுவலானது நிலவைப் போன்று குளிர்ந்த ஒளி வீச, மயக்கத்தை மிகச் செய்யும் மும்மலங்களின்
வலியையும் போக்கும் கூரிய சூலம் வெயில் ஒளி வீச, உண்மைப் பொருளை விளக்கும் பெருகும்
அன்பு மேலும் மேலும் தழைத்து ஓங்கி இவ்வுலகம் போற்ற, அறிவு விளக்கம் செய்யும் வளமையுடைய
தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.
பைத்தலை
நீடும் ஆயிரத் தலை மீது பீறு பத்திர பாத நீல மயில் வீரா ---
பைத்தலை
- படத்தைத் தலையில் உடைய நாகம்.
இங்கு
ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைக் குறித்து நின்றது.
பீறுதல்
- கிழித்தல்.
பத்திரம்
- வாள். இதற்குப் பிரமாணம் பின்வரும் பெரியபுராணப் பாடல்....
கைத்தலத்து
இருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம்
அவிழ்ப்பான் போன்று
புரிந்துஅவர் வணங்கும் போதில்,
பத்திரம்
வாங்கி, தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய,
மெய்த்தவ
வேடமே மெய்ப்
பொருள் எனத் தொழுது வென்றார்.
பச்சிள
பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே ---
பூகம்
- பாக்கு மரம்.
செய் - வயல்.
பசுமையான
இளம் பாக்கு மரத்தின் பாளைகள் மீது வயலில் உள்ள கயல் மீன்கள் தாவுகின்ற
புள்ளிருக்குவேளூரைத் தனது இடமாகக் கொண்டு அமர்ந்தவர் மும்மூர்த்திகளும்
தேவர்களும் போற்றும் பெருமையில் மிக்க முருகப் பெருமான்.
திருபுள்ளிருக்குவேளூர்
என்று திருமுறைகளில் வழங்கும் இத்திருத்தலம் தற்போது வைத்தீசுவரன்கோயில் என்று
வழங்கப்படுகிறது. இத்திருத்தலம் சென்னையில் இருந்து
இரயில் பாதையில் 270 கி.மி. தூரத்தில்
இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மி. தூரத்தில் உள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல
முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீசுவரன்கோயிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரியது.
இறைவர்
: வைத்தியநாதர்
இறைவியார்
: தையல்நாயகி
முருகன் : செல்வமுத்துக்குமாரர்
தல
மரம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்த குளம்
திருஞானசம்பந்தராலும், அப்பர்
பெருமானாலும் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.
சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம் (இருக்கு), முருகவேள் (வேள்), சூரியனாம் (ஊர்) ஆகிய நால்வரும் இறைவனை வழிபட்ட திருத்தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
பிறவிப்
பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோயிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும்
போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும்
வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும்
தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோயிலில் கிடைக்கும்
திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.
சிறிய
சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள்
வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம்
வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இறைவி
தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு
அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு
நோக்கி காட்சி தருகிறார்.
அசுரன்
ஆகிய சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற திருத்தலம் இது
என்பர். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது
பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.
கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும்.
அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு
வழிபாடு நடைபெறும்.
தெற்குப் பிரகாரத்தில்
சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது
எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச்
செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும்
சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள்
நீங்கும் என்பதும் ஐதீகம்.
இத்தலம்
நவக்கிரகங்ளில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில்
மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு
இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரகமூர்த்தி
எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில்
இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
இத்தலத்தில்
நவக்கிரங்களுக்கு வலிமை இல்லை. நவக்கிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி
கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர்.
இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பர்.
கருத்துரை
முருகா! திருவடி இன்பத்தை
அருள்வாய்.
No comments:
Post a Comment