சீகாழி - 0788. விடம்என மிகுத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விடம்என மிகுத்த (சீகாழி)

முருகா!
காலன் வரும்போது காத்து அருளவேண்டும்.


தனதனன தத்ததன தனதனன தத்ததன
     தனதனன தத்ததன ...... தனதான


விடமெனமி குத்தவட வனலெனவு யர்த்துரவி
     விரிகதிரெ னப்பரவு ...... நிலவாலே

விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு
     விரைதருவி தட்கமல ...... கணையாலே

அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
     அழலொடுகொ தித்துவரு ...... கடைநாளில்

அணுகிநம னெற்றமயல் கொளுமநிலை சித்தமுற
     அவசமொட ணைத்தருள ...... வரவேணும்

அடவிதனில் மிக்கபரு வரையவர ளித்ததிரு
     அனையமயில் முத்தமணி ...... சுரயானை

அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு
     மதிவிரக சித்ரமணி ...... மயில்வீரா

கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி
     கருணையொட ளித்ததிற ...... முருகோனே

கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி
     கழுமலந கர்க்குமர ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


விடம் என மிகுத்த வட அனல்என, உயர்த்து ரவி
     விரிகதிர் எனப் பரவு ...... நிலவாலே,

விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்துவிடு
     விரை தரு இதழ் கமல ...... கணையாலே,

அடல்அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல்
     அழலொடு கொதித்து வரு ...... கடைநாளில்

அணுகி நமன் எற்ற, மயல் கொளும் அ நிலை சித்தம்உற
     அவசமொடு அணைத்து அருள ...... வரவேணும்.

அடவிதனில் மிக்க பருவரை அவர் அளித்த திரு
     அனைய மயில், முத்தம் அணி ...... சுர யானை,

அழகிய மணிக் கலச முலைகளில் மயக்கம்உறும்
     அதி விரக சித்ர மணி ...... மயில்வீரா!

கடதட களிற்று முகர் இளையவ! கிரிக்குமரி
     கருணையொடு அளித்த திற ...... முருகோனே!

கமல மலர் ஒத்த விழி அரிமருக! பத்தர்பணி
     கழுமல நகர்க் குமர! ...... பெருமாளே.

பதவுரை

      அடவி தனில் மிக்க பருவரையவர் அளித்த --- காட்டில் வாழ்ந்திருந்த பெருத்த வள்ளிமலையின் வாசிகளாகிய வேடர்கள் போற்றி வளர்த்த,

     திரு அனைய மயில் --- திருமகளைப் போன்றவளான வள்ளிநாயகி,

     முத்தம் அணி சுரயானை --- முத்து மாலைகளை அணிந்த தேவயானை (ஆகிய இருவர்களின்)

      அழகிய மணிக் கலச முலைகளில் மயக்கம் உறும் அதிவிரக --- அழகிய, ஒளி பொருந்திய குடம் போன்றுள்ள முலைகளின் மேல் கொண்ட கோகத்தினை உடைய காதலரே!

     சித்ரமணி மயில்வீரா --- அழகிய மணிகள் புனைந்த மயில் மீது இவர்ந்து வரும் வீரரே!

      கடதட களிற்று முகர் இளையவ --- மதமும் பெருமையும் உடைய யானை முகவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளைய பிள்ளையாரே!

     கிரிக் குமரி கருணையோடு அளித்த திற முருகோனே ---இமயமலைக்கு அரசனின் திருமகளான பார்வதிதேவி கருணை கூர்ந்து அருளிய, வல்லமை மிக்க முருகப்பெருமானே!

     கமல மலர் ஒத்த விழி அரி மருக --- தாமரை மலரை ஒத்த திருக்கண்களை உடைய திருமாலின் திருமருகரே!

     பத்தர் பணி கழுமல நகர்க் குமர --- அடியார்கள் பணிகின்ற கழுமலம் எனப்படும் சீகாழி நகரில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

      விடம் என மிகுத்த வட அனல் என --- விஷம் போலப் பெருகிய வடவைத் தீ என்னும்படி.

     உயர்த்து ரவி விரிகதிர் எனப் பரவு நிலவாலே --- உச்சிப்பகலின் சூரியனது வெப்பம் மிகுந்த கதிர்கள் என்று சொல்லும்படியாக, தனது கிரணங்களைப் பரப்பும் சந்திரனால்

     விதனம் மிக உற்று --- துன்பம் மிக அடைந்தும்,

      வரு ரதிபதி கடுத்து விடு விரைதரு இதழ்கமல கணையாலே --- அந்த இரவுக் காலத்தில் வருகின்ற, இரதி தேவியின் மணாளரான காமவேள் சினந்து செலுத்தும் மணம் பொருந்திய தாமரைமலர்க் கணைகளினால்,

     அடல் அமர் இயற்று திசையினில் மருவி --- வலியப் போரைச் செய்யும் சமயத்தில் அடியேனைச் சார்ந்து,

      மிக்க அனல் அழலொடு கொதித்து --- மிக்க நெருப்புத் தணல் போல கொதிப்புடன்

     வரு கடைநாளில் --- அடியேனுக்கு வருகின்ற வாழ்நாள் இறுதிக் காலத்தில்,

     அணுகி நமன் எற்ற --- நமன் என்னை அணுகித் தாக்க,

     மயல் கொளும் அ நிலை ---  புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிகின்ற அந்த நிலையில்,

      சித்தம் உற அவசமோடு --- அடியேனது சித்தம் பரவசப்படும்படியாக

     அணைத்து அருள வரவேணும் --- அணைத்து அருள் புரிய வந்தருள வேண்டும்.


பொழிப்புரை


         காட்டில் வாழ்ந்திருந்த பெருத்த வள்ளிமலை வாசிகளாகிய வேடர்கள் போற்றி வளர்த்த, திருமகளைப் போன்றவளான வள்ளிநாயகி. முத்து மாலைகளை அணிந்த தேவயானை.  இவர்களின் அழகிய, ஒளி பொருந்திய குடம் போன்றுள்ள முலைகளின் மேல் கொண்ட மோகத்தினை உடைய காதலரே!

     அழகிய மணிகள் புனைந்த மயில் மீது இவர்ந்து வரும் வீரரே!

      மதமும் பெருமையும் உடைய யானை முகவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளைய பிள்ளையாரே!

     இமயமலைக்கு அரசனின் திருமகளான பார்வதிதேவி கருணை கூர்ந்து அருளிய, வல்லமை மிக்க முருகப்பெருமானே!

      தாமரை மலரை ஒத்த திருக்கண்களை உடைய திருமாலின் திருமருகரே!

     அடியார்கள் பணிகின்ற கழுமலம் எனப்படும் சீகாழி நகரில் வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

     பெருமையில் மிக்கவரே!

      விஷம் போலப் பெருகிய வடவைத் தீ என்னும்படி, உச்சிப்பகல் போதின் சூரியனது வெப்பம் மிகுந்த கதிர்கள் என்று சொல்லும்படியாக, தனது கிரணங்களைப் பரப்பும் சந்திரனால் துன்பம் மிக அடைந்து, அந்த இரவுக் காலத்தில் வருகின்ற, இரதி தேவியின் மணாளரான காமவேள் சினந்து செலுத்தும் மணம் பொருந்திய தாமரைமலர்க் கணைகளினால், வலியப் போரைச் செய்யும் சமயத்தில் அடியேனைச் சார்ந்து, மிக்க நெருப்புத் தணல் பொல கொதிப்புடன், அடியேனுக்கு வருகின்ற வாழ்நாள் இறுதிக் காலத்தில், நமன் என்னை அணுகித் தாக்க, புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிகின்ற அந்த நிலையில், அடியேனது சித்தம் பரவசப்படும்படியாக அணைத்து அருள் புரிய வந்தருள வேண்டும்.


விரிவுரை

விடம் என மிகுத்த வட அனல் என உயர்த்து ரவி விரிகதிர் எனப் பரவு நிலவாலே ---

காம வயப்பட்டோருக்கு குளிர்ந்த நிலவு ஒளியானது, கொல்லுகின்ற விடத்தைப் போலத் துன்பத்தைப் புரியும். மிக்க வெப்பம் பொருந்தியதான வடவைத் தீயைப்போலத் தனது கதிர்களை வீசும். உலகமெங்கும் விரிந்து பரக்கின்ற சூரியனது கிரணங்களைப் போலச் சுடும்.

பரவையார் மீது கால் கொண்ட நம்பியாரூரர் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் கூறுமாறு காண்க.

ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல்கதிர்
தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர்
நீர்த் தரங்க நெடுங் கங்கை நீள் முடிச்
சாத்தும் வெண்மதி போன்று இலை தண்மதி! 

ஏ! குளிர்ந்த இயல்பினையுடைய சந்திரனே! எனது துன்பத்தைக் கண்ட பின்னும் மேலும்மேலும், எப்போதும் போல் உனது போக்கின்படியே போகாமல் நின்று, உனது இயல்பான குளிர்ந்த கிரணம் அல்லாது இயல்புக்கு மாறான வெப்பக் கதிர்களைத் தூவுவதா? எனைத் தடுத்து ஆளாகக் கொண்ட இறைவன் தனது நீர்மை பொருந்திய அலைகளையுடைய நெடிய கங்கை சூடிய நீண்ட முடியிலே அருளினால் எடுத்து அணிந்து கொண்ட வெள்ளிய சந்திரனைப்போல் நீ அமைந்தாய் இல்லையே.

நம்பியாரூரரை நினைந்து வருந்தும் பரவையாரின் நிலையைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் விளக்குமாறு காண்க.

"ஆரநறும் சேறு ஆட்டி, அரும் பனிநீர்
     நறும் திவலை அருகு வீசி,
ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து, மடவார்
     செய்த இவையும் எல்லாம்
பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன; மற்று
     அதன்மீது சமிதை என்ன
மாரனும் தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி
     மலர்வாளி சொரிந்தான் வந்து".

மணமுடைய கலவைச் சந்தனச் சேற்றைப் பூசியும், அரிய மணமுடைய பனிநீரை மழைபோலச் சிறு துளிகளாகப் பக்கங்களில் எல்லாம் வீசித் தெளித்தும், குளிரியினது ஈரமுள்ள இளந்தளிர்களை இட்டும், இவ்வாறாகத் தோழிப் பெண்கள் செய்த இவைகளும் இவை போன்றன பிறவும் ஆகிய எல்லா உபசாரங்களும் முன்னரே பெருநெருப்பாய் மூண்ட அதன்மேல் அதனை வளர்க்குமாறு நெய்யையும் சொரிந்தது போல் ஆயின. அதன்மேலும்,  அந்த அழலைப் பின்னும் வளர்க்க உணவு தருவது போல, மன்மதனும் வந்து தனது ஒப்பற்ற வில்லின் வலிமையைக் காட்டிப் பூவாகிய அம்புகளை மேன்மேலும் எய்தான்.

"மலர் அமளித் துயில் ஆற்றாள்; வரும் தென்றல்
     மருங்கு ஆற்றாள்: மங்குல் வானில்
நிலவு உமிழும் தழல் ஆற்றாள், நிறை ஆற்றும்
     பொறை ஆற்றாள்; நீர்மையோடும்
கலவமயில் என எழுந்து கருங்குழலின்
     பரம் ஆற்றாக் கையள் ஆகி,
இலவ இதழ்ச் செந்துவர்வாய் நெகிழ்ந்து, ஆற்றா
     மையின் வறிதே இன்ன சொன்னாள்".

பூம்படுக்கையிலே வீழ்ந்த பரவையார் அந்த மலர் அமளியிலே படுத்துத் துயிலைச் செய்யாதவராய், நிலாமுற்றத்திலே துயிலை விளைக்கக் கூடியதாய்த் தமது பக்கத்திலே வந்து மெல்லென வீசும் தென்றல் காற்றுத் தமது மேலே பட, அதனையும் பொறாதவர் ஆயினர். மேகங்கள் தவழும் வானில் இருந்து ஒளி வீசும் நிலாவினுடைய கதிர்கள் நெருப்பை உமிழ்தலால் அவ் வெப்பத்தையும் பொறுக்க முடியாதவர் ஆயினர். தமக்கு உரிய தன்மையோடு காக்கின்ற பெண்மைக் குணமாகிய நிறையைக் கொண்டு செலுத்த வல்ல பொறை எனும் சத்தியைத் தாங்க இயலாதவர் ஆயினர். மலரணையில் வீழ்ந்து கிடந்தவர் இக்குணத்துடன் சிறிய தோகைமயிலைப் போல எழுந்து தமது கரிய கூந்தலின் பாரத்தையும் தாங்கமுடியாத நிலை உடையவராய், இலவம் பூப்போன்று இயல்பிலேயே சிவந்த வாய் நெகிழ்ந்து தரிக்கலாகாத வருத்தத்தாலே தமக்குத் தாமே
பின்வருமாறு சொல்வார் ஆயினார்.

கந்தம் கமழ்மென் குழலீர்! இது என்?
     கலைவாள் மதியம் கனல்வான் எனை இச்
சந்தின் தழலைப் பனிநீர் அளவித்
     தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்!
வந்து இங்கு உலவும் நிலவும் விரையார்
     மலய அனிலமும் எரியாய் வருமால்;
அந்தண் புனலும் மரவும் விரவும்
     சடையான் அருள் பெற்று உடையார் அருளார்.      

வாசனை வீசும் மெல்லிய கூந்தலையுடைய சேடியர்களே! இது என்ன ஆச்சரியம்! அமிர்த கலைகளுடைய ஒளிவீசும் சந்திரனோ என்னைச் சுடுவாயின் ஆயினான். இந்தச் சந்தனக் குழம்பைப் பனிநீருடன் கலந்து என்மேல் பூசுகின்ற கொடியீர்களே!
நீவிரோ இச்செயலைத் தவரீர்! தவிரீர். இங்கு வந்து உலாவி நிற்கும் தென்றலோ தீ உருவமாய் வருகின்றது. அழகிய குளிர்ந்த கங்கைப் புனலையும் பாம்பையும் ஒருங்கே தம்மிடத்து வைத்த சடையவராம் சிவபெருமானது அருள்பெற்று என்னை உடையாராகிய நம்பிகளோ என்பால் அருள் செய்கின்றாரில்லை.


வரு ரதிபதி கடுத்து விடு விரைதரு இதழ்கமல கணையாலே ---

ரதிபதி - இரதி தேவியின் மணாளனான காமவேள்.  அவன் தொடுக்கும் தாமரை மலர்க் கணையானது, உள்ளத்தில் காம உணர்வைத் தூண்டும்.

உயிர் உணர்வில் கலகத்தைப் புரிந்து, தனது தொழிலில் வெற்றி கொள்ளுகின்றவன் மன்மதன். அவன் யாரிலும் வலியவன். இறைவனுக்கு மட்டும் அடியவன்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.

யயாதி, நகுஷன், புரூரவன், சர்யாதி, முதலிய ராஜரிஷிகளையும், காசிபர், சியவனர், கௌதமர், பராசரர், விசுவாமித்திரர் முதலிய பிரம்ம ரிஷிகளையும், இந்திரன், அக்கினி, பிரமன், திருமால் முதலிய இமையவர்களையும் னது மலர்க்கணைகளால் மயக்கி வாகை சூடியோன்.

மன்மதனுக்கு மலர்களே கணைகளாக உள்ளன.

மன்மதன் கணைகள் ஐந்து. அவையாவன --- தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்பன.

இவற்றின் பெயர் முறையே --- உன்மத்தம் (பித்துக் கொள்ளுதல்) மதனம் (புணர்ச்சி விருப்பம்), சம்யோகம் (உள்ளக் கவர்ச்சி), சந்தாபம் (மனத் துன்பம்), வசீகரணம் (வசியப்படுத்துதல்) என்பனவாம்.

இவை செய்யும் அவத்தை --- சுப்ரயோகம், விப்ரயோகம், சோகம், மோகம், மரணம்.

சுப்ரயோகம் --- காதலரைப் குறித்தே சொல்லும் நினைவும் ஆக இருத்தல்.

விப்ரயோகம் --- காதலன் பிரிவினால் வெய்து உயிர்த்து இரங்கல்;

சோகம் --- வெதுப்பும், உணவு தெவிட்டலும்.

மோகம் --- அழுங்கலும், மொழி பல பிதற்றலும்.

மரணம் --- அயற்பும், மயக்கமும்.

மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

வனசம், செழுஞ்சூதம் உடன், அசோகம், தளவம்,
     மலர்நீலம் இவை ஐந்துமே
  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
     மிகஅசோ கம்து யர்செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
     மேவும்இவை செயும்அ வத்தை;

நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

 தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும். நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
     மேல்விடும் கணைகள் அலராம்;
  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
    சார்இரதி யேம னைவிஆம்;
  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
    அமுதமே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
    அறப்பளீ சுரதே வனே!

ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......

---     கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.
---     அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.
---     உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.
---     தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.
---     குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.
---     யானை அழியாத இருளாகும்.
---     மிகுபடை பெண்கள் ஆவர்.
---     உடைவாள் தாழை மடல் ஆகும்.
---     போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடல்
---     கொடி மகர மீன் ஆகும்.
---     சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.
---     பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
---     பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.
---     குடை சந்திரன் ஆவான்.
---     காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.
---     அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.
---     எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

தலைவன் மீது காதல் கொண்ட தலைவிக்கும் குளிர்ந்த சந்திரனது தண்ணொளி வெப்பத்தையும், தென்றல் காற்று அனல் போன்ற வெம்மையையும் செய்யும். ஈண்டு ஜீவான்மாவை நாயகியாகவும், பரமான்மாவை நாயகனாகவும் வைத்து பரமான்மா ஆகிய நாயகன் மீது காதல் கொண்ட நாயகியாக ஜீவான்மா மிகுந்த தாபத்தை அடைந்து வருந்துகின்றது. இங்ஙனம் நாயகி நாயக பாவத்தில் எழுந்த பாடல்கள் பல.

துள்ளுமத வேள் கைக்  கணையாலே
  தொல்லை நெடுநீலக்     கடலாலே
மொள்ளவரு சோலைக்     குயிலாலே
  மெய்யுருகு மானைத்    தழுவாயே     --- திருப்புகழ்.   

தென்றலையம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்
தென்றலையம்புய மின்கோ மருக செழுமறைதேர்
தென்றலையம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்
தென்றலையம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே. --- கந்தரந்தாதி.


இந்தக் கந்தர் அந்தாதிப் பாடலின் பதவுரை -----

தென் - வண்டுகள் இசை பாடுகின்ற, தலை - தலையிலே, அம்பு - கங்கையை, புனைவார் - அணியும் பரமசிவனது, குமார - மைந்தனே, திமிர - இருள் நிறமுடைய, முந்நீர் - கடல் சூழ்ந்த, தென் - அழகிய, தலை - பூதேவிக்கும், அம்புயம் - செந்தாமரைப் பூவில் வாசம் செய்கின்ற, மின் - சீதேவிக்கும், கோ - நாயகனாகிய திருமாலினது, மருக - மருகோனே, செழு - செழுமை தங்கிய, மறை தேர் - நான்கு வேதங்களும் துதிக்கின்ற, தென்றலை - தெற்கு திசையில் உள்ளதாகிய, அம் - அழகிய, புசக - பாம்பு போன்ற, பூதர - திருச்செங்கோட்டு மலை அதிபனே, எரி - நெருப்பை, சிந்தி - கொட்டிக் கொண்டு, மன்றல் - வாசனை தோய்ந்த, தென்றல் - தென்றல் காற்றானது, ஐ அம்பு - (என் தேகத்தில் மன்மதனது) ஐந்து அம்புகளும், படு - தைத்த, நெறி - புண் வழியே, போய் - நுழைந்து, உயிர் - என் உயிரை, தீர்க்கின்றது - (வருத்தி) நீக்குகின்றது.

பொழிப்புரை ---

வண்டுகள் இசை பாடுகின்ற, சென்னியின் கண் கங்கை நீரைத் தரித்திருக்கும் பரமசிவனின் மைந்தனே, இருளின் நிறம் கொண்ட, கடலால் சூழப்பட்ட, அழகிய பூதேவிக்கும், தாமரையில் வசிக்கும் சீதேவிக்கும், தலைவனாகிய திருமாலின், மருகரே,!வளமையான வேதங்கள் எல்லாம், பூசிக்கும், தெற்குத் திசைக் கண் இருக்கும், சிறந்த, சர்ப்பம் போல் காட்சி அளிக்கும் செங்கோட்டு அதிபரே! அக்கினியைக் கொட்டிக் கொண்டு, மணம் நிரம்பிய, தென்றல் காற்று, காமனின் ஐந்து பாணங்களும், என் உடலில் தைத்த புண்வழியே போய், என் உயிரை வருத்திப் போக்குகிறது.


விதனம் மிக உற்று அடல் அமர் இயற்று திசையினில் மருவி ---

விதனம் - மனத்துயர், களைப்பு, உடல் நோவு.

திசை - காலம், நிலைமை.

இப்படி நிலவின் ஒளியாலும், மதனின் அம்புகளாலும் மனம் மிகவும் துன்பத்தை அடையும். உடல் சோரும். காமவேள் இயற்றும் போரினாலும் விளைந்த நிலை இது. அந்தக் காலம் பார்த்து வேறு ஒரு துன்பமும் நிகழும். மேலே பார்ப்போம்.

மிக்க அனல் அழலொடு கொதித்து, வரு கடைநாளில்,  அணுகி நமன் எற்ற, மயல் கொளும் அ நிலை ---

அ நிலை - அந்நிலை - அந்த நிலையில்.

உயிர்கள் பிறவிகள் தோறும் ஈட்டிய புண்ணியப் பயனாக பூதசார உடம்புடன் ஒளி உலகிலும், பாவத்தின் பயனாக பூதமா உடம்புடன் இருள் உலகிலும், இன்ப துன்பங்களை நுகர்ந்தவுடன், விண்ணிலிருந்து மழை வழியாகப் பூதலத்துக்கு வந்து, உண்ணுகின்ற காய் கனிகளில் கலந்து, ஆடவரிடம் கருவுற்று, அறுபது நாட்களுக்குப் பின் தாய் உதரத்திலே தேர்ந்து, பூதபரிணாம சரீரத்தை அடைகின்றன. புண்ணிய பாவக் கலப்பு வினையை இம் மண்ணுலகில் நுகர வருகின்றது. கரு வளர்ந்து உருவாகிப் பருத்து, கை, கால், கண், நரம்பு, மயிர் இவைகளுடன் கூடி வளர்கின்றது. பத்து மாதங்கள் முற்றிய பின் பூமியில் பிறக்கின்றது. அப்போது தாயும் சேயும் எண்ணிறந்த வேதனைகளை அடைகின்றார்கள். முறையே பாலப்பருவம், வாலப் பருவம் முதலிய நிலைகளை அடைகின்றது.

பிறந்த ஆன்மா, தான் உய்யும் நெறியையும், இறைவனையும் கருதாது, சதா பொருளைத் தேடிக் குவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக அலைந்து,  அப் பொருளையே நினைந்து, குவிந்த பொருளைப் பாதுகாக்கும் விதத்தையே கருதி நொந்து நொந்து அல்லல் படுகின்றது. பெண்ணாசை விட்டபாடு இல்லை. அப்படி வாழும் காலத்தில், ஆன்மாவின் ஆயுளைக் கணக்கிட்டு ஆயுளின் முடிவு நேரத்தில் இயமன் வருகின்றான். அறநெறி நில்லாத உயிர்களிடம் மாறுபட்டும், விரைவாகவும் கோபம் மிகுந்தும், காலன் அல்லது காலதூதன் வருகின்றான்.

இன்னார், இனியார், வறியவன், தனவந்தன், கற்றவன், கல்லாதவன், அரசன், ஆண்டி, என்ற உயர்வு தாழ்வுகளை நோக்காமல் சமமாகப் பார்ப்பதனால் அவன் சமன் எனப் பேர் பெற்றான்.

அருகில் உள்ள சுற்றத்தார் செய்வது ஒன்றும் அறியாது துக்கப்படுவார்கள். இயமனிடம் ஒரு கோடி பவுன் கொடுத்து, ஒருநாள் வாழச் செய்ய முடியாது.

அவன் வரும்போது, உயிரின் புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழியும். அப்போது உயிருக்குத் துணையாக வந்து உதவி புரிந்து, காத்து அருள் புரிபவன் இறைவன் ஒருவன் மட்டுமே.
  
நான்முகன் படைத்த நானா வகையுலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்
ஆண் முதிதோ? பெண் முதிதோ? அன்றி அலி முதிதோ
நாள் முதிதோ? கோள் முதிதோ?
நல்வினை முதிதோ? தீவினை முதிதோ?

செல்வம் சிறப்போ? கல்வி சிறப்போ?
அல்லது உலகின் அறிவு சிறப்போ?
தொல்லை மாஞாலம் தோற்றமோ? படைப்போ?
எல்லாப் பிறப்பும் இயற்கையோ? செயற்கையோ?
காலத்தால் சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?

நஞ்சு உறு தீவினை துஞ்சுமோ? துஞ்சாதோ?
துஞ்சும் பது அந்தப் பஞ்சேந்திரியம்
என்செயா நிற்குமோ? எவ்விடத்து ஏகுமோ?
ஆற்றல் உடையீர் அருந்தவம் புரிந்தால்
வேற்று உடம்பு ஆகுமோ? தமது உடம்பு ஆகுமோ?

உண்டியை உண்குவது உடலோ? உயிரோ?
கண்டுஇன் புறுவது கண்னணோ கருத்தோ?

உலகத்தீரே உலகத்தீரே !

நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்,
மனிதர்க்கு வயது நூறுஅல்லது இல்லை
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்,
ஒட்டிய இளைமையால் ஓரைந்து நீங்கும்,

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்,
எழுபது போக நீக்கி இருப்பன முப்பதே (அவற்றுள்)
இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று
துன்புறு நாளும் சிலவே, ஆதலால்
பெருக்காறு ஒத்தது செல்வம், பெருக்காற்று

இடிகரை ஒத்தது இளமை, இடிகரை
வாழ்மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்,
ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்
நன்றே செய்யவும் வேண்டும், அந்நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்

இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்
நாளை நாளை என்பீர் ஆகில்,
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்,
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்,
எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,

அப்போது, அந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான், பொருளொடும் போகான்,
சாற்றவும் போகான், தமரொடும் போகான்,
நல்லார் என்னான், நல்குவு அறியான்,
தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,

தரியான் ஒருகணம், தறுகணாளன்,
உயிர் கொடுபோவான், உடல்கொடுபோகான்,
ஏதுக்கு அழுவீர், ஏழை மாந்தார்காள்,
உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்,

உயிரினை அன்றும் காணீர், இன்றுங்காணீர்,
உடலினை அன்றும் கண்டீர், இன்றுங்கண்டீர்,
உயிரினை இழந்த உடலது தன்னைக்
களவு கொண்ட கள்வனைப் போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்

கூறை களைந்து, கோவணம் கொளுவி,
ஈமத் தீயை எரியெழ மூட்டிப்
பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த் தமரோடும் புந்தி நைந்து அழுவது
சலம் எனப் படுமோ? சதுர் எனப் படுமோ?

........................................................................

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ
மானிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ?
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ?
வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்

கீழ்நான்கு சாதிக்கு உணவு காட்டிலுமோ?
திருவும் வறுமையுஞ் செய்தவப் பேறும்
சாவதும் வேறிலை, தீர் அரணி யோர்க்கே
குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே,
இறப்பும் ஒன்றே, பிறப்பும் ஒன்றே,

வழிபடு தெய்வமும் ஒன்றே, ஆதலால்
முன்னோர் உரைத்த மொழி தவறாமல்
எந்நாள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டுப்
புலையும் கொலையும் களவும் தவிர்ந்து
நிலைபெற, அறத்தில் நிற்பதை அறிந்து,

ஆணும்பெண்ணும் அல்லதை உணர்ந்து,
பேணி உரைப்பது பிழையெனப் படாது
சிறப்புஞ் சீலமும் அல்லது
பிறப்பு நலந்தருமோ பேதையீரே.     ---  கபிலர் அகவல்.

பஞ்ச பாதகம் உறு பிறை எயிறு, எரி
     குஞ்சி, கூர்விட மதர்விழி, பிலவக
     பங்க வாள்முகம் முடுகிய நெடுகிய ...... திரிசூலம்
பந்த பாசமும் மருவிய கரதல,
     மிஞ்சி நீடிய கருமுகில் உருவொடு
     பண்பு இலாத ஒரு பகடு, அது முதுகினில் .....யமராஜன்

அஞ்சவே வரும் அவதரம் அதில், ஒரு
     தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும்
     அன்பினால் உனது அடிபுகழ் அடிமைஎன் ...... எதிரே நீ 
அண்ட கோளகை வெடிபட, இடிபட,
     எண்  திசாமுகம் மடமட நடமிடும்
     அந்த மோகர மயிலினில் இயலுடன் ...... வரவேணும்.  ---  திருப்புகழ்.

கரு பற்றி, பருத்து ஒக்க, தரைக்கு உற்றிட்டு, உருப்பெற்றுக்
     கருத்தின்கண் பொருள்பட்டுப் ...... பயில்காலம்,
கணக்குஇட்டு, பிணக்கு இட்டு, கதித்து இட்டு, கொதித்திட்டு,
     கயிற்று இட்டுப் பிடித்திட்டு, ...... சமன் ஆவி

பெருக்க, புத்தியில் பட்டு, புடை துக்கக் கிளை, பின் பொய்ப்
     பிணத்தைச்சுட்டு, அகத்தில் புக்கு, ...... அனைவோரும்
பிறத்தலு சுற்றம் முற்றுற்றிட்டு அழைத்து, தொக்கு அறக் கத்து,
     பிறப்புப் பற்று அற, செச்சைக் ...... கழல்தாராய்.   ---  திருப்புகழ்.

அடவி தனில் மிக்க பருவரையவர் அளித்த திரு அனைய மயில் ---

பெருத்த வள்ளிமலையில் உள்ள காட்டில் வாழ்ந்திருந்த வேடர்களால் அன்போடு வளர்க்கப்பட்டவர் வள்ளி நாயகியார். திருமகளைப் போன்றவர். மயிலைப் போலும் சாயலை உடையவர்.

முத்தம் அணி சுரயானை ---

சுரர் - தேவர்.  அ + சுரர் - அரக்கர். சுரர் அல்லாதவர்.

தேவலோகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்ந்தவர் தேவயானை. அதனால் அவர் முத்துமாலைகளை அணிந்தவர் ஆகின்றார்.

செழுமுத்து மார்பின் அமுதத் தெய்வானை
     திருமுத்தி மாதின் ...... மணவாளா!

என்றார் அடிகளார் திருமுட்டத் திருப்புகழில்.

கடதட களிற்று முகர் இளையவ ---

கடம் - யானையின் கன்னம்.  இங்கு யானைக்குப் பொழியும் கன்னமதத்தைக் குறித்து நின்றது.

தடம் - உயர்ந்த இடம். விசாலமானது.

"கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிறு" என்பார் நமது அடிகளார் கந்தர் அலங்காரத்தில்.

கன்னமதமும் பெருமையும் உடைய யானை முகவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளைய பிள்ளையார் முருகப் பெருமான்.

யானை முகத்தினை உடைய பெருமானுக்குத் தம்பி முருகப் பெருமான்.

யானை வளர்த்தவள் ஆகிய தெய்வயானையின் மணவாளர் முருகப் பெருமான்.

யானையை உரித்தவராகிய சிவபெருமானின் இளைய புதல்வர் முருகப் பெருமான்.

கிரிக் குமரி கருணையோடு அளித்த திற முருகோனே ---

கிரி என்பது இமயமலையைக் குறிக்கும்.

இமயமலைக்கு அரசனான இமவானால் வளர்க்கப் பெற்றவர் உமாதேவியார்.

பர்வதம் - மலை. பர்வத மகள் ஆகலின், பார்வதி என்று போற்றப்படுபவர்.

பராசத்தியாகிய உமாதேவியார் மகிழ்ந்து அளித்தவர் முருகப் பெருமான். ஆதலினால், அவர் சர்வசத்தியும் பொருந்தியவர்.


கமல மலர் ஒத்த விழி அரி மருக ---

கமலம் - தாமரை.

அரி - உயிர்களின் பாவங்களை அரித்துப் போக்குபவர்.

திருமாலுக்கு கமலக் கண்ணன் என்றும், செந்தாரமைக் கண்ணன் என்றும் திருப்பெயர்கள் உண்டு.

பத்தர் பணி கழுமல நகர்க் குமர ---

அடியார்கள் நாள்தோறும் பணிந்து வழிபாடு இயற்றுகின்ற திருத்தலம் கழுமலம் எனப்படும் சீகாழி நகர்.

குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீசுவரர் இலிங்கமாகவும்,திரு ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.

சீகாழிக்கு உள்ள பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.  ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

கருத்துரை

முருகா! காலன் வரும்போது காத்து அருளவேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...