அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அளிசுழல் அளக
(கரியவனகர்)
முருகா!
விலைமாதர் மயக்கை நீக்கி,
திருவடியைத் தந்து ஆண்டு
அருள்வாய்.
தனதன
தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன
தனதன தனனத் தான தாத்தன ...... தனதான
அளிசுழ
லளகக் காடு காட்டவும்
விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
அமளியில் முடியப் போது போக்கவும் ......இளைஞோர்கள்
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
அளவிய தெருவிற் போயு லாத்தவும் ......
அதிபார
இளமுலை
மிசையிற் றூசு நீக்கவும்
முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ......
இனிதாக
எவரையு
மளவிப் போய ணாப்பவும்
நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் .....அருள்தாராய்
நெளிபடு
களமுற் றாறு போற்சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள் ......
கழுகாட
நிரைநிரை
யணியிட் டோரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா
களிமயில்
தனில்புக் கேறு தாட்டிக
அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
கனகிரி புயமுத் தார மேற்றருள் ......
திருமார்பா
கரியவ
னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி
கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அளி
சுழல் அளகக் காடு காட்டவும்,
விழிகொடு கலவித் தீயை மூட்டவும்.
அமளியில் முடியப் போது போக்கவும்.
.....இளைஞோர்கள்
அவர்
வசம் ஒழுகிக் காசு கேட்கவும்,
அழகிய மயிலில் சாயல் காட்டவும்,
அளவிய தெருவில் போய் உலாத்தவும், ...... அதிபார
இளமுலை
மிசையில் தூசு நீக்கவும்,
முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும்,
இருநிதி இலரைத் தூர நீக்கவும், ...... இனிதாக
எவரையும்
அளவிப் போய் அணாப்பவும்,
நினைபவர் அளவில் காதல் நீக்கி, என்
இடர்அது தொலையத் தாள்கள் காட்டி,நின் .....அருள்தாராய்.
நெளிபடு
களம்உற்று, ஆறு போல் சுழல்
குருதியில் முழுகி, பேய்கள் கூப்பிட,
நிணம் அது பருகிப் பாறு காக்கைகள் ......
கழுகு ஆட,
நிரை
நிரை அணிஇட்டு ஓரி ஆர்த்திட,
அதிர்தரு சமரில் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேல்கொடு ...... பொரும்வீரா!
களிமயில்
தனில்புக்கு ஏறு தாட்டிக!
அழகிய கனகத் தாமம் ஆர்த்து ஒளிர்
கனகிரி புயம் முத்தாரம் ஏற்று அருள் ......திருமார்பா!
கரியவ
னகரில் தேவ பார்ப்பதி
அருள் சுத! குறநல் பாவை தாள்பணி
கருணைய! தமிழிற் பாடல் கேட்டுஅருள்... பெருமாளே.
பதவுரை
நெளி படுகளம் உற்று --- வருத்தத்தைத்
தருகின்ற போர்க்களத்தில் வந்து,
ஆறு போல் சுழல் குருதியில் முழுகி
--- அங்கு ஆறு போலப் பெருகி ஓடும் இரத்த வெள்ளத்தில் முழுகி,
பேய்கள் கூப்பிட --- பேய்கள் ஆரவாரம்
செய்ய,
பாறு --- பருந்துகள்,
காக்கைகள் --- காக்கைகள்,
கழுகு --- கழுகுகள்
நிணம் அது பருகி ஆட --- பிணங்களில்
உள்ள நிண நீரைக் குடித்தும், தசையைத் தின்றும் ஆரவாரிக்க,
நிரை நிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட ---
நரிகள் வரிசையாக வந்து அணிஅணியாக நின்று ஆர்ப்பரிக்க,
அதிர் தரு சமரில் --- அதிர்ச்சியைத்
தருகின்ற போரில்,
சேனை கூட்டிய நிசிசரர் மடியச் சாடு
--- சேனைகளோடு திரண்டு வந்து எதிர்த்த அரக்கர்கள் மடியும்படியாகக் குத்திக்
கிழிக்கின்ற,
வேல் கொடு பொரும் வீரா --- வேலாயுதத்தைக்
கொண்டு போர்புரிந்த வீரரே
களி மயில் தனில்
புக்கு ஏறு தாட்டிக --- இன்பமாய் ஆடுகின்ற மயிலின் மீது இவர்ந்து வருகின்ற வல்லமை
மிக்கவரே!
அழகிய கனகத் தாமம் ஆர்த்து ஒளிர் கனகிரி
புய --- அழகிய பொன்மாலைகள் நிறைந்து ஒளிரும் அழகிய
மலை போன்ற திருத்தோள்களை உடையவரே!
முத்தாரம் ஏற்று
அருள் திரு மார்ப --- முத்துமாலைகளைச் சூடி அருளுகின்ற திருமார்பினை உடையவரே!
கரியவனகரின் தேவ --- கரியவனகர்
என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள தேவரே!
பார்ப்பதி சுத --- பார்வதி தேவியின்
திருமகனே!
குற நல் பாவை தாள்
பணி கருணைய
--- நல்ல குறமகளாகிய வள்ளிநாயகியின் திருத்தாள்களைப் பணிகின்ற கருணாமூர்த்தியே!
தமிழில் பாடல் கேட்டு
அருள் பெருமாளே --- தமிழ்ப் பாடல்களைக் கேட்டு அருள் புரியும் பெருமையில்
மிக்கவரே!
அளி சுழல் அளகக் காடு
காட்டவும்
--- வண்டுகள் மொய்த்துள்ள கூந்தலாகிய காட்டைக் காட்டுவதற்கும்,
விழி கொடு கலவித்
தீயை மூட்டவும் --- கண்களால் புணர்ச்சித் தீயை மூட்டுவதற்கும்,
அமளியில் முடியப் போது போக்கவும் --- சதாகாலமும் படுக்கையில் பொழுது போக்குதற்கும்,
இளைஞோர்கள் அவர்
வசம் ஒழுகிக் காசு கேட்கவும் --- இளைஞர்களைக் கண்டால் அவர்
வசப்பட்டதுபோல் பழகிப் பொருளைக் கேட்பதற்கும்,
அழகிய மயிலின் சாயல்
காட்டவும்
--- அழகிய மயில் போன்ற தமது சாயலைக் காட்டவும்,
அளவிய தெருவில் போய்
உலாத்தவும்
--- தெருச் சந்தியில் போய் உலாத்துதற்கும்,
அதிபார இளமுலை
மிசையில் தூசு நீக்கவும் --- மிகக் கனத்த இளமையான மார்பின்
மேலுள்ள ஆடையைத் திருத்துவதுபோல் நீக்குதற்கும்,
முகமொடு முகம்
வைத்து ஆசை ஆக்கவும் --- தன்னை நாடி வந்தவரின் முகத்தோடு முகம் வைத்து காம ஆசையை
வளர்க்கவும்,
இரு நிதி இலரைத் தூர
நீக்கவும்
--- தமக்குப் தருதற்குப் பெரும்பொருள் இல்லாதவரைத் துரத்தி அடித்தற்கும்,
இனிதாக எவரையும் அளவிப் போய் அணாப்பவும்
--- இனிமையாகப் பேசி யாரையும் கலந்து இருந்து ஏமாற்றவும்,
நினைபவர்
அளவில் காதல் நீக்கி --- (இவ்வாறெல்லாம்) நினைப்பினை உடைய விலைமாதர்கள் மீது
உண்டாகும் காதலை ஒழித்து,
என் இடரது தொலைய --- எனது துன்பங்கள்
எல்லாம் தொலைந்து போகும்படி,
தாள்கள் காட்டி --- திருவடிகளைக்
காட்டி ஆட்கொண்டு,
நின் அருள்தாராய் --- உமது
திருவருளைத் தந்து அருள் புரிவீராக.
பொழிப்புரை
வருத்தத்தைத் தருகின்ற போர்க்களத்தில்
வந்து, அங்கு ஆறு போலப்
பெருகி ஓடும் இரத்த வெள்ளத்தில் முழுகிப் பேய்கள் ஆரவாரம் செய்ய, பருந்துகள் காக்கைகள் கழுகுகள் பிணங்களில் உள்ள நிண
நீரைக் குடித்தும், தசையைத்
தின்றும் ஆரவாரிக்க,
நரிகள்
வரிசையாக வந்து அணிஅணியாக நின்று ஆர்ப்பரிக்க, அதிர்ச்சியைத்
தருகின்ற போரில், சேனைகளோடு திரண்டு
வந்து எதிர்த்த அரக்கர்கள் மடியும்படியாகக் குத்திக் கிழிக்கின்ற, வேலாயுதத்தைக்
கொண்டு போர் புரிந்த வீரரே
இன்பமாய் ஆடுகின்ற மயிலின் மீது
இவர்ந்து வருகின்ற வல்லமை மிக்கவரே!
அழகிய பொன்மாலைகள் நிறைந்து ஒளிரும் அழகிய
மலை போன்ற திருத்தோள்களை உடையவரே!
முத்துமாலைகளைச் சூடி அருளுகின்ற
திருமார்பினை உடையவரே!
கரியவனகர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி
உள்ள தேவரே!
பார்வதி தேவியின் திருமகனே!
நல்ல குறமகளாகிய வள்ளிநாயகியின் திருத்தாள்களைப்
பணிகின்ற கருணாமூர்த்தியே!
தமிழ்ப் பாடல்களைக் கேட்டு அருள் புரியும்
பெருமையில் மிக்கவரே!
வண்டுகள் மொய்த்துள்ள கூந்தலாகிய
காட்டைக் காட்டுவதற்கும், கண்களால் புணர்ச்சித் தீயை மூட்டுவதற்கும், சதாகாலமும்
படுக்கையில் பொழுது போக்குதற்கும், இளைஞர்களைக் கண்டால்
அவர் வசப்பட்டதுபோல் பழகிப் பொருளைக் கேட்பதற்கும், அழகிய மயில் போன்ற தமது சாயலைக்
காட்டவும், தெருச் சந்தியில் போய் உலாத்துதற்கும், மிகக்
கனத்த இளமையான மார்பின் மேலுள்ள ஆடையைத் திருத்துவதுபோல் நீக்குதற்கும், தன்னை நாடி வந்தவரின் முகத்தோடு முகம்
வைத்து காம ஆசையை வளர்க்கவும், தமக்குப்
தருதற்குப் பெரும்பொருள் இல்லாதவரைத் துரத்தி அடித்தற்கும், இனிமையாகப் பேசி
யாரையும் கலந்து இருந்து ஏமாற்றவும், நினைப்பினை
உடைய விலைமாதர்கள் மீது உண்டாகும் காதலை ஒழித்து, எனது துன்பங்கள் எல்லாம் தொலைந்து
போகும்படி, திருவடிகளைக் காட்டி
ஆட்கொண்டு,
உமது
திருவருளைத் தந்து அருள் புரிவீராக.
விரிவுரை
இத்
திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதியில், விலைமாதர்களின் இழல்பினை அடிகளார் எடுத்துக்
காட்டி,
அவர்கள்
தரும் கலவிச் சுகத்தை விரும்பி, அவர்கள் பால் காதல் கொள்ளுவதையும், பின்னர் அதனால்
வருகின்ற துன்பங்கள் தொலையவும், தனது திருவடிக் காட்சியைத் தந்து, ஆண்டு அருள்
புரியுமாறு முருகப் பெருமானை வேண்டுகின்றார்.
திருவிடைமருதூர்
மும்மணிக்கோவை என்னும் நூலில், பட்டினத்தடிகள், அடியர் அல்லாதவர்
செல்வச் செருக்கால் இறுமாந்து கண்டபடி வாழும் செல்வ வாழ்க்கையினால் வரும்
இழிவினைதெ தெள்ளத் தெளிவாகக் காட்டி உள்ளார். அந்த வாழ்வை விட, இறைவனுக்குத்
தொண்டுபட்டு,
திருவருளில்
அடங்கி, நெறிநின்று வாழும்
வறுமை வாழ்க்கை உயர்வைத் தரும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
பழிமலைந்து
எய்திய ஆக்கத்தின், சான்றோர்
கழி
நல்குரவே தலை.
நல்லார்கண்
பட்ட வறுமையின் இன்னாதே,
கல்லார்கண்
பட்ட திரு.
எனத்
திருவள்ளுவ நாயனாரும் காட்டி உள்ளது காண்க.
செல்வச்
செழிப்போடு வாழுகின்ற காலத்தில்,
தம்மை
நாடி வந்தவர்க்கு எள்ளில் பிளவு அளவேனும் பகிராது, தாமே வயிறு புடைக்க
உண்டு களித்து இன்புற்றிருக்க வேண்டும் எனக் கருதி, பிறர்
பொருளுக்கு ஆசைப்பட்டு, அதனைத் தேடி, "இதை இதை இன்று
சமைக்க வேண்டும், இப்படி இப்படிச் சமைக்க
வேண்டும்" தனது இல்லத்தில் அட்டில் தொழில் புரிவோர்க்கு
நாளும் கட்டளை இட்டு, வயிறு நிறைந்தாலும், உணவின் சுவை மிகுதியால் மனம்
நிறையாது, மேலும் அளவில்லாமல் உணவை
உட்கொண்டு, உண்ணும் போது
தூர்ந்து விட்டது போலத் தோன்றி, பின்னர் வெறிது ஆகி, ஒரு நாளும் தூராத
குழியாகிய வயிற்றை நிரப்பி, பெருமையும், நல்ல குலமும், ஒழுக்கமும், கல்வி அறிவும்
நிறைந்த பெரியோரைக் கூவி அழைத்து, தனது ஏவல் வழி நின்று செயல்பட வேண்டும் என்று, சிறுமைத் தனமான
சொற்களைப் பேசி அவர்களை மனம் நோகச் செய்தும், கைவிடாமல்
காப்பாற்றுவான் என்று தன்னைத் தேர்ந்து, தனக்கு மணம் முடித்து வைத்த, நல்ல இல்லக்
கிழத்தியானவள்,
தான்
சாகும் வரையிலும் தனக்குப் பணிவிடைகளைச் செய்பவளாக இருந்தும், அவளைக் கலந்து, தானும்
இன்புற்று,
அவளுக்கும்
இன்பத்தைச் செய்யாமல், அன்புள்ள மனைவியாகிய அவள் தனது இல்லத்தில் இருக்கும்போதே, கிடைக்கின்ற
பொருளின் அளவிற்கு, தாம் தருகின் போகத்தை விற்று வாழுகின்ற, அன்பும் அருளும்
இல்லாத விலைமதார்களின் போகத்தை விரும்பி வாழும் மடமையைக் கண்டித்து அருளுகின்றார்.
பட்டினத்தடிகளின்
பாடதலில் ஒரு பகுதியைக் காண்போம்...
"வாழ்ந்தனம்
என்று தாழ்ந்தவர்க்கு உதவாது,
தன்ன்
உயிர்க்கு இரங்கி, மன் உயிர்க்கு இரங்காது,
உண்டிப்
பொருட்டால் கண்டன வெஃகி,
அவி
அடுநர்க்குச் சுவை பல பகர்ந்து ஏவி,
ஆரா
உண்டி அயின்றனர் ஆகி,
தூராக்
குழியைத் தூர்த்து, பாரா
விழுப்பமும்
குலனும் ஒழுக்கமும் கல்வியும்
தன்னில்
சிறந்த நன் மூதாளரைக்
கூஉய், முன் நின்று தன் ஏவல்
கேட்கும்
சிறாஅர்த்
தொகுதியின் உறாஅப் பேசியும்,
பொய்யொடு
புன்மை தன் புல்லர்க்குப் புகன்றும்,
மெய்யும்
மானமும் மேன்மையும் ஒரீஇத்
தன்னைத்
தேறி முன்னையோர் கொடுத்த
நன்மனைக்
கிழத்தி ஆகிய, அந்நிலைச்
சாவுழிச்
சாஅந் தகைமையள் ஆயினும்,
மேவுழி
மேவல் செய்யாது, காவலொடு
கொண்டோள்
ஒருத்தி உண்டிவேட்டு இருப்ப,
எள்ளுக்கு
எண்ணெய் போலத் தள்ளாது
பொருளின்
அளவைக்குப் போகம் விற்று உண்ணும்
அருள்இல்
மடந்தையர் ஆகம் தோய்ந்தும்
ஆற்றல்செல்
லாது...." --- திருவிடைமருதூர்
மும்மணிக்கோவை.
நெளி
படுகளம் உற்று, ஆறு போல் சுழல்
குருதியில் முழுகி, பேய்கள் கூப்பிட ---
படுகளம்
- போர்க்களம்.
வருத்தத்தோடு, உடம்பை விட்டு உயிர் போகும்
நிலையில் நெளிகின்ற பிணங்கள் நிறைந்துள்ளதால், "நெளி படுகளம்" என்றார். போர்க்களத்தில்
துணிபட்ட உடல்களில் இருந்து இரத்தமானது ஆறு பல் பெருகிப் பாயும். அந்த இரத்த
வெளத்தில் பேய்கள் குளித்துக் களிக்கின்றன.
பாறு, காக்கைகள், கழுகு நிணம் அது
பருகி ஆட
---
பருந்துகள், காக்கைகள், கழுகுகள் கூட்டங்களாக் வந்து, பிணங்களில் இருந்து
வழியும் நிண நீரைக் குடிக்கின்றன. தசையைத் தின்று ஆரவாரித்து ஆடுகின்றன.
நிரை
நிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட ---
நிரை
- வரிசை. நிரை நிரை - வரிசை வரிசையாக.
ஓரி
என்பது ஆண் நரியைக் குறித்த சொல். ஆயினும் நரிகளின் இருபாலும் பிணத்தைத் தின்பவை.
ஆதலால் அவை வரிசை வரிசையாக வந்து பிணங்களைத் தின்று ஆர்ப்பரிக்கின்றன.
அதிர்
தரு சமரில்
---
இப்படியாக
அதிர்ச்சியைத் தருவது போர்க்களம்.
சேனை
கூட்டிய நிசிசரர் மடியச் சாடு வேல் கொடு பொரும் வீரா ---
சூரபதுமனாதியோர்
புரியும் கொடுமைகளில் இருந்து தேவர்களை விடுவிக்க வேண்டி, சிவபெருமான் திருக்கருணையுடன், தன்னையே
நிகர்க்குமாறு, அருளியவர்
முருகப் பெருமான். அரக்கர்களைப் போரில் மடிந்து போகுமாறு தேவர்களின் சேனைக்குத்
தலைமைப் பொறுப்பினை ஏற்று, தேவசேனாபதி ஆகி, பகைவர்க்கு அச்சத்தைத் தரும் நெடிய
வேற்படையினை உடைய தாரகாசூரனும், மாயம் செய்தலை உடைய கிரவுஞ்ச மலையும்
அழிந்து ஒழியுமாறு வீரம் மிக்க கூரிய வேலை விடுத்து அருளினார் முருகப் பெருமான். சிறந்த
கடலில் தெள்ளிய அலைகள் இரத்தினங்களைக் கொழித்து வீசுகின்ற, திருச்செந்தூர்க்குச் சென்று, அருள் வெள்ளம் போல் அங்கு
சிங்காதனத்தில் வீற்று இருந்து, வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கு "அஞ்சாதே"
என்று ஆறுதல் அளித்து அருளி, கடலால் சூழப்பட்ட மகேந்திபுரிக்குச்
சென்று, தேவர்கள் நல்வாழ்வு
பெறும் வண்ணம், "வெற்றியில் உயர்ந்தவனான சூரபன்மனைக்
கண்டு, தேவர்களை சிறை
விடுகின்றனையா? அல்லது போருக்கு
வருகின்றனையா? என, அவன் மனக்கருத்தை நன்கு ஆராய்ந்து வினாவி
வருவாயாக" என்று, அகன்ற தோள்களை உடைய
வீரவாகுதேவரை தூதாக அனுப்பி அருளினார். கரிய நிறத்தை உடைய அசுரனாகிய சூரபன்மன்
தேவர்களை சிறைவிடுத்து வணங்காது,
போருக்கு
எழுந்தமையால், கொடுமை நிறைந்த
அசுரர்களுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படைகளையும் அடியோடு
அழித்து, பானுகோபன் முதலான
அக்கினி முகன், இரணியன், வச்சிரவாகு, மூவாயிரவர் என்னும் சூரபன்மனுடைய
மக்களோடு, சிங்கமுகாசூரனையும்
வென்று, வெற்றி மாலை சூடினார். பூவுலத்திற்கு ஆடைபோல் சூழ்ந்து உள்ள
கடலில் புதிய மாமரமாக நின்ற நெடிய சூரபன்மனுடைய உடலை இரு கூறு ஆக்கிய
ஒளிமிக்க வேல் படையினைக் கொண்டு அழித்து அருள் புரிந்தார்.
களி
மயில் தனில் புக்கு ஏறு தாட்டிக ---
களி
- இன்பம், மகிழ்ச்சி.
பெருமானைச்
சுமக்கின்றோம் என்னும் உள்ள மகிழ்வால், இன்பமாய்
ஆடுகின்ற மயிலின் மீது இவர்ந்து வருகின்றவர் முருகப் பெருமான். அவர் சர்வ வல்லமை
மிக்கவர் என்பதால், அவரைத்
"தாட்டிக" என்றார் அடிகளார். தாட்டிகன் என்பது பலவானைக் குறிக்கும் சொல்
ஆகும்.
அழகிய
கனகத் தாமம் ஆர்த்து ஒளிர் கனகிரி புய ---
கனகம்
- பொன். அழகு.
தாமம்
- மாலை.
கனம்
- பெருமை, கனத்த.
பொன்மாலைகளைச்
சூடியுள்ள மலை போன்ற திருத்தோள்களை உடையவர் முருகப் பெருமான் என்று பொருள்
கொள்ளலாம். அழகிய மாலைகளைத் தரித்த திருத்தோள்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
முத்தாரம்
ஏற்று அருள் திரு மார்ப ---
முத்து
ஆரம் - முத்து மாலை.
முத்து
- விடு படுவது. முத்து பிறக்குமிடம் பதின்மூன்று எனவும் இருபது எனவும்
கூறப்படுகின்றது.
அவையாவன...
சங்கு, மேகம், மூங்கில், பாம்பு, பன்றிக்கோடு, நெல், இப்பி, மீன்தலை, கரும்பு, யானைக்கோடு, சிங்கம், கற்புடை மகளிர் கழுத்து, கொக்கின் கழுத்து, நந்து, முதலை, உடும்பு, பசுவின்பல், கழுகு, வாழை, தாமரை.
இதுவேயும்
அன்றி சந்திரனிடத்தும் முத்து பிறக்கும் எனக் கூறுவர். ஆனால், இப்போது சிப்பியிலிருந்து முத்து
தோன்றுவது தான் காணக் கிடக்கின்றது.
தக்கமுத்து
இரண்டு வேறு
தலசமே சலசம் என்ன,
இக்கதிர்
முத்தம் தோன்றும்
இடன்பதின் மூன்று, சங்கம்,
மைக்கரு
முகில்,வேய், பாம்பின்
மத்தகம், பன்றிக் கோடு,
மிக்கவெண்
சாலி, இப்பி,
மீன்தலை, வேழக் கன்னல்.
இதன்
பொருள் --- தக்க
முத்து தலசமே சலசமே என்ன இரண்டு வேறு - குற்றமில்லாத
முத்துக்கள் தலசமென்றும் சலசமென்றும் இரண்டு வகைப்படும்; இ கதிர் முத்தம் தோன்றும் இடன்
பதின்மூன்று - இந்த ஒளியையுடைய முத்துக்கள் தோன்றும் இடம் பதின்மூன்றாம்; சங்கம் மைக்கரு முகில் வேய் பாம்பின்
மத்தகம் பன்றிக்கோடு - சங்கும் மிகக் கரிய முகிலும் மூங்கிலும் அரவின்
தலையும் பன்றிக் கொம்பும், மிக்க வெண்சாலி இப்பி
மீன் தலை வேழக் கன்னல் - மிகுந்த வெண்ணெல்லும் சிப்பியும் மீனினது தலையும்
வேழக்கரும்பும்.
தலசம்
- நிலத்தில் தோன்றுவது. சலசம் - நீரில் தோன்றுவது.
வேழக்
கன்னல் - வேழமாகிய கன்னல். வேழம் - கரும்பின் ஒரு வகை.
கரிமருப்பு, ஐவாய் மான்கை,
கற்புடை மடவார்
கண்டம்,
இருசிறைக்
கொக்கின் கண்டம்,
எனக்கடை கிடந்த
மூன்றும்
அரியன, ஆதிப் பத்து
நிறங்களும், அணங்கும் தங்கட்கு
உரியன
நிறுத்த வாறே
ஏனவும் உரைப்பக்
கேண்மின்.
இதன்
பொருள் --- கரிமருப்பு
ஐவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம் - யானையின் தந்தமும் சிங்கத்தின் கையும்
கற்புடை மகளிரின் கழுத்தும், இருசிறைக் கொக்கின்
கண்டம் என - இரண்டு சிறைகளையுடைய கொக்கின் கழுத்தும் என்று; கடை கிடந்த மூன்றும் அரியன ஈற்றிற்
கூறிய மூவகையும் கிடைத்தற்கரியன;
ஆதிப்பத்து
நிறங்களும் - முதற்கண் உள்ள பத்து வகை
முத்துக்களின்
நிறங்களும் தங்கட்கு உரியன அணங்கும் - அவற்றிற்கு உரியவாகிய தெய்வங்களும், ஏனவும் - பிறவும், நிறுத்தவாறே உரைப்பக் கேண்மின் -
நிறுத்த முறையே சொல்லக் கேளுங்கள்.
---
திருவிளையாடல்
புராணம்.
முருகவேள்
உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த முத்துக்குமாரசுவாமி ஆவார்.
கஞ்ச
முகத்தில் முழுமுத்தம்,
கண்ணில் பனிரண்டு உயர் முத்தம்,
கன்னத்தினில்
ஆறு இரு முத்தம்,
கனிவாயினில் மூவிரு முத்தம்,
அஞ்சல்
கரத்து ஆறு இரு முத்தம்,
அகன்ற பார்பில் ஓர் முத்தம்,
அம்பொன்
புயத்து ஆறு இரு முத்தம்,
அழகுஆர் உந்திக்கு ஒரு முத்தம்,
தஞ்சத்து
அருள் சேவடி மலரில்
தகவு ஆர் இரண்டு முத்தம் எனத்
தழுவிக்
கவுரி அளித்து மகிழ்
தனயா! எனை ஆள் இனியோனே!
செஞ்சல்
குறமின் முத்து உகந்த
சேயே! முத்தம் தருகவே!
தெய்வத்
தணிகை மலைவாழும்
தேவே! முத்தம் தருகவே. --- திருத்தணிகை முருகன்
பிள்ளைத்தமிழ்.
கத்தும்
தரங்கம் எடுத்து எறியக்
கடுஞ்சூல் உளைந்து, வலம்புரிகள்
கரையில்
தவழ்ந்து வாலுகத்தில்
கான்ற மணிக்கு விலை உண்டு,
தத்துங்
கரட விகடதட
தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை
தரளம்
தனக்கு விலை உண்டு,
தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்
கொத்தும்
சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத்தினுக்கு விலை உண்டு,
கொண்டல்
தரு நித்திலம் தனக்குக்
கூறும் தரம் உண்டு, உன்கனிவாய்
முத்தம்
தனக்கு விலைஇல்லை,
முருகா! முத்தந் தருகவே!
முத்தம்
சொரியும் கடல் அலைவாய்
முதல்வா! முத்தந் தருகவே. --- திருச்செந்தூர்
முருகன் பிள்ளைத்தமிழ்.
பிற
மணிகள் பட்டை தீட்டினால் அன்றி ஒளி விடா. முத்து இயல்பாகவே ஒளி விடும். பட்டை
தீட்ட வேண்டுவது இல்லை. முத்து நவமணிகளுள் சிறந்தது. முத்தினை உடம்பில் அணிந்து
கொள்வதால் நன்மைகள் பல உண்டு. குளர்ச்சியைத் தரும்.
முத்துநல்
தாமம்பூ மாலை தூக்கி,
முளைக்குடம்
தூபம்நல் தீபம் வைம்மின்
என்பார்
மணிவாசகர்.
முத்தே
பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன்
உள்ளத் தெளிவே பராபரமே
என்பார்
தாயுமானார்.
இப்பொன்
நீ, இம் மணி நீ, இம்முத்தும் நீ,
இறைவன்
நீ ஏறுஊர்ந்த செல்வன் நீயே
என்பார்
அப்ப மூர்த்திகள்.
உயிர்களுக்கு
முத்தி இன்பத்தினை அருள்பவர் என்னும் குறிப்புத் தோன்ற, முத்து மாலை
சூடியவர் என்றார் அடிகளார்.
கரியவனகரின்
தேவ
---
கரியவனகர்
என்பது, சீகாழி இரயில்
நிலையத்திற்கு மேற்கில் ஆறு கி.மீ. தொலைவில் உள்ள "கொண்டல் வண்ணன்குடி" என்னும் தலமாய் இருக்கலாம்
என்பர் தணிகைமணி அவர்கள். கொண்டல் முருகன் கோயில் என வழங்கப்படுகின்றது.
இன்று
இது "கொண்டல் வள்ளுவகுடி" என வழங்கப்படுகிறது. "கொண்டல்" என்பது
முருகன் திருக்கோயில் அமைந்துள்ள இடம். வள்ளுவகுடி அடுத்துள்ள கிராமம். அங்கும் சிவன்
கோயில் உள்ளது.
பார்ப்பதி
சுத
---
சுதன்
- மகன்.
பார்வதி
தேவியின் திருமகன்.
குற
நல் பாவை தாள் பணி கருணைய ---
நல்ல
குறமகளாகிய வள்ளிநாயகியின் திருத்தாள்களைப் பணிகின்ற கருணாமூர்த்தி.
"வடிவார்
குறத்தி தன்பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது
உற்று உகந்து பணிவோனே" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்பகழில்.
"பாகு
கனமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா"
என்றும் ஒரு திருப்புகழில் அடிகளார் காட்டினார்.
கனத்த
மருப்பு இனக் கரி, நல்
கலைத் திரள், கற்புடைக் கிளியுள்
கருத்து உருகத் தினைக்குள் இசைத்து, ...... இசைபாடி
கனிக்
குதலைச் சிறுக் குயிலைக்
கதித்த மறக் குலப் பதியில்
களிப்பொடு கைப் பிடித்த மணப் ......
பெருமாளே. --- பொதுத்
திருப்புகழ்.
கூன்ஏறு
மதிநுதல் தெய்வக் குறப்பெண்
குறிப்புஅறிந்து அருகுஅணைத்து, "உன்
குற்றேவல்
செய்யக் கடைக்கண் பணிக்க" எனக்
குறையிரந்து அவள் தொண்டைவாய்த்
தேன்ஊறு
கிளவிக்கு வாய்ஊறி நின்றவன்
செங்கீரை ஆடி அருளே.
செத்துப்
பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடி அருளே” ---
குமரகுருபரர்.
பக்குவப்பட்ட
ஆன்மாக்களுக்கு வேண்டியதை எல்லாம் அருள் புரிந்து, அவர்களை அழியாத இன்பத்தில் எம்பெருமான் வைத்து
அருள்வான் என்பதையே இது உணர்த்தும். தெளிந்து கொள்ளவும்.
"திணியான
மனோ சிலை மீது, உன தாள்
அணி
ஆர் அரவிந்தம் அரும்பும் அதோ?
பணி
யா என வள்ளி பதம் பணியும்
தணியா
அதிமோக தயாபரனே"
எனக்
கந்தர் அநுபூதியில் அடிகளார் போற்றி உள்ளது அறிக.
பதம்
என்பது பக்குவம் என்பதைக் குறிக்கும். ஆன்ம பக்குவம் என்பது தியானத்தால் வருகின்ற
வெப்பம். அந்த வெப்பமானது குண்டலி சத்தியின் உறக்க நிலையைப் போக்கி அசையும்படிச்
செய்து, அதனை மேல் நோக்கி
செல்வதற்கான வழியை உண்டுபண்ணும். தியான வெப்பம் மிகுதி ஆக ஆக, உது செல்லும்
வழியில் உள்ள அடைப்பு நீங்கும். இதனையே, வள்ளல் பெருமான் 'திரை நீக்கம்' என்று
தெளிவாக்கினார்.
வள்ளிபிராட்டியின்
திருவடிகளை முருகன் பணிந்தார் என்பது புராணம். இதன் தாத்பரியம் அல்லது உட்கருத்து
என்னவெனில், குண்டலியோடு
இறைவனைப் பணியும் ஆன்மாவை, இறைவன் இறங்கி வந்து மேல்நிலைக்கு அழைத்துச்
செல்வான் என்பதாகும். மேல் நிலை என்பது புருவநடுவைக் குறிக்கும். "நெற்றிக்கு
நேரே புருவத்து இடைவெளி உற்று உற்று நோக்க ஒளிவிடும் ஆனந்தம்" என்னும்
திருமூலர் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக.
இந்த
நிலை வள்ளிக்கும் முருகனுக்கும் மட்டுமே தெரிந்த காதல் நிலை ஆகும். அதாவது இந்த
நிலையை ஆன்மாவும் இறைவனும் மட்டுமே அனுபவித்து அறிய முடியும். பிறரால் அறிந்து
கொள்ள முடியாது. காதல் நிலையானது,
பிறர்
அறியும் போது,
கற்பு
நிலையாக மாறும்.
காதல்
நிலையில் முருகன் வள்ளிநாயகியைப் பணிந்தார். கற்பு நிலையில் வள்ளிநாயகி முருகனைப்
பணிவாள்.
தமிழில்
பாடல் கேட்டு அருள் பெருமாளே ---
உலகில்
பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில்
பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆகும். இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய்
இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்,
பெற்றான்
சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும்
அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கல் புணையை நல் புணை ஆக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது
போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச் செய்தது தமிழ். கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது
தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும்
பேரின்பத்தை வழங்குவது தமிழ். ஆதலால் நம் அருணகிரியார் “அரிய தமிழ்” என்று
வியக்கின்றார்.
தென்றலு
தமிழ்த் தென்றல் ஆயிற்று. தமிழ் வழங்கும் திசை தென் திசை.
அத்திசையில் இருந்து வரும் மெல்லியக் காற்று தென்றல், இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்
என்பது நிகண்டு. இனியக் காற்று தென்றல். “தமிழ் மாருதம்” என்று சேக்கிழாரும்
கூறுகின்றனர்.
இறைவனுக்கு
மிகவும் இனிய மொழி தமிழ் ஆகும். இறைவனுக்குத்
திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும்
தமிழ்மாலையைச் சாத்தி வழிபட்டார்கள். "பன்னலம் தமிழால் பாடுவேற்கு அருளாய்"
என இறைவனை வேண்டினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். "வடமொழியும் தென்தமிழும் மறைகள்
நான்கும் ஆனவன்" என்றார் அப்பர் பெருமான். "தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்"
என்றார் அவரே.
தமிழ்க்கடவுளும்
குறிஞ்சிக் கிழவனுமாகிய முருகவேள் தமிழ்க்குடியில் பிறந்த தமிழணங்காகிய
வள்ளிநாயகியைத் தமிழ் முறைப்படி களவியலில் மணந்துகொண்டார். களவியலுக்கு இலக்கியமாக வள்ளியம்மையாரையும், கற்பியலுக்கு இலக்கியமாக
தெய்வகுஞ்சரியம்மையாரையும் திருமணம் புரிந்து, உலகிற்கு இரு இயல்புகளையும் இறைவர்
அறிவுறுத்தினார்.
அருமையினும்
அருமையான இனிய தமிழை, ஈசனுக்கு
அர்ப்பணியாமல் அழிந்து போகின்றவர்களும், பரமலோபிகளும், மகா மூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப்
பரதவிக்கின்றார்கள்.
முருகனைத்
தமிழால் பாடி, அந்த மாத்ருகா புட்ப
மாலையை,
ஞானமலர்
மாலையைச் சாத்தி வழிபட்டால் இகம் பரம் ஆகிய இரண்டு நலன்களையும்
வழங்குவான். அப்பரமனை வாழ்த்தக்
கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பான் முருகன்.
மூடர்களாகிய
உலோபிகளை, “தந்தையே! தாயே!
தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து
பாடினாலும் மனம் இரங்கி, அரைக் காசும்
உதவமாட்டார்கள்.
செந்தமிழ்த்
தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப்
பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும்
இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.
அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,
ஆபத்து அகற்றி அன்பாய்
ஆதரிக்கும்
கருணை வள்ளல்நீ, மாரன்நீ,
ஆண்மைஉள விசயன்நீ, என்று
எத்தனை
விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்
இயற்றினும் இரக்கஞ் செயார்,
இலக்கண
இலக்கியக் கற்பனைக் கல்வியால்
இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,
பித்தனொடு
நீலியும் பெறுதகப்பன் சாமி!
பெருவயிற்றான் தம்பி,அப்
பேய்ச்சிமுலை
உண்டகள் வன்மருகன், வேடுவப்
பெண்மணவன், என்றுஏசினும்,
சித்தமகிழ்
அருள் செய்யும் என்றே முழக்கல்போல்
சிறுபறை முழக்கி அருளே!
செம்பொன்
நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,
சிறுபறை முழக்கி அருளே!
--- கம்பை முருகன்
பிள்ளைத் தமிழ்
சுந்தர்
மூர்த்தி நாயனார் பாடுகின்றார்.
நலம்இலாதானை
நல்லனே என்றும்,
நரைத்த மாந்தரை இளையனே,
குலமிலாதானைக்
குலவனே என்று
கூறினும் கொடுப்பார்இலை,
புலம்எலாம்வெறி
கமழும் பூம்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்,
அலமராது
அமருலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.
பழய
அடியவர் உடன் இமையவர் கணம்
இருபுடையும் மிகு தமிழ்கொடு, மறைகொடு,
பரவ வரு மதில் அருணையில் ஒருவிசை ......
வரவேணும்.
--- (கொடிய மறலியும்)
திருப்புகழ்.
பலபல
பைம்பொன் பதக்கம் ஆரமும்,
அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரோடு,
பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!
--- (மலரணி)
திருப்புகழ்.
இறைவனுக்கு
மலர்மாலை சாத்தியபின் பன்னீர் தெளிப்பார்கள். அதனால் பரிமளம் மிகுதிப்படும்.
கடப்ப
மலர்கள் முருகனுக்குச் சாத்தியபின் திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீர்
தெளிக்கவேண்டும்.
அதனால்
ஞான வாசனை மிகுதிப்படும். இதனால் திருப்புகழின் பெருமையை நன்கு உணர்தல் வேண்டும்.
பூமாலை
சூட்டுதல் கிரியை நெறி.
பாமாலை
சூட்டுதல் ஞானநெறி.
பலப்பல
சங்கப் புலவர்களால் ஆய்ந்து ஆய்ந்து ஒழுங்கு செய்து செப்பம் செய்யப்பட்ட மொழி தமிழ்
மொழி. தமிழ் மொழி ஒன்றே திருக்கயிலாயம் சென்று அரங்கேறியது. சேரமான் பெருமாள் நாயனார்
பாடி அருளிய "திருக்கயிலாய ஞானஉலா" திருக்கயிலையில் அரங்கேறியது. மொழிகளுக்குள்
முதன்மை பெற்றது தமிழ்.
"முத்தமிழால்
வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான்.
நம்பியாரூரைத்
தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார், பனிமதிச்சடை அண்ணல் என்பதைப் பெரியபுராணத்தின்
வாயிலாக அறியலாம்.
"மற்று
நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை
பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்
சொல்
தமிழ் பாடுக"
என்றார் தூமறை பாடும் வாயார்.
தேடிய
அயனும் மாலும் தெளிவு உறா ஐந்து எழுத்தும்
பாடிய
பொருளாய் உள்ளான் ‘பாடுவாய் நம்மை’ என்ன
நாடிய
மனத்தர் ஆகி நம்பி ஆரூரர். மன்றுள்
ஆடிய
செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று.
"வேதியன் ஆகி என்னை வழக்கினால்
வெல்ல வந்த
ஊதியம்
அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட
கோதுஇலா
அமுதே! இன்றுஉன் குணப் பெருங் கடலை நாயேன்
யாதினை
அறிந்து என் சொல்லிப் பாடுகேன்?’"
என
மொழிந்தார்.
அன்பனை
அருளின் நோக்கி அங் கணர் அருளிச் செய்வார்
"முன்பு
எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
என்
பெயர் பித்தன் என்றே பாடுவாய்" என்றார்; நின்ற
வன்
பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார்.
கொத்து
ஆர் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
மெய்த்
தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான்
"பித்தா
பிறைசூடி" எனப் பெரிதாம் திருப்பதிகம்
இத்
தாரணி முதலாம் உலகு எல்லாம் உய்ய எடுத்தார்.
"முறையால் வரு மதுரத் துடன்
மொழி இந்தளம் முதலில்
குறையா
நிலை மும்மைப்படிக் கூடும் கிழமையினால்
நிறை
பாணியின் இசை கோள் புணர் நீடும் புகழ் வகையால்
இறையான்
மகிழ் இசை பாடினன் எல்லாம் நிகர் இல்லான்.
சொல்ஆர்
தமிழ் இசை பாடிய தொண்டன் தனை ‘இன்னும்
பல்
ஆறு உலகினில் நம் புகழ் பாடு’ என்று உறு பரிவில்
நல்லார்
வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா
உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்.
--- பெரியபுராணம்.
உலகினில்
பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன்.
எப்படிப்பட்ட பிறவி? இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்கு அணிகின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும்
என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.
விரைவிடை
இவரும் நினை, பிறவாமை
வேண்டுநர் வேண்டுக, மதுரம்
பெருகுறு
தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்
பிறவியே வேண்டுவன் தமியேன்;
இருசுடர்களும்
மேல் கீழ்வரை பொருந்த
இடையுறல் மணிக்குடக் காவைத்
தரையிடை
இருத்தி நிற்றல் நேர் சோண
சைலனே கைலைநா யகனே.
இதன்
பொருள் ----
சூரியன்
சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை
ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத்
தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில்
பிறவாமை வேண்டுவோர் வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு
அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.
எனவே, "தமிழில் பாடு கேட்டு அருள்
பெருமாளே" என்று போற்றினார் அருணகிரிநாதப் பெருமான்.
கருத்துரை
முருகா! விலைமாதர் மயக்கை
நீக்கி, திருவடியைத் தந்து
ஆண்டு அருள்வாய்.
No comments:
Post a Comment