அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உரத்துறை போத
(வைத்தீசுவரன் கோயில் - திருப்புள்ளிருக்குவேளூர்)
பவரோக வயித்திய நாதா!
அடியேன் ஆணவத்தால் அழியாமல்
காத்து அருள்.
தனத்தன
தானத் ...... தனதான
உரத்துறை போதத் ...... தனியான
உனைச்சிறி தோதத் ...... தெரியாது
மரத்துறை போலுற் ...... றடியேனும்
மலத்திருள்
மூடிக் ...... கெடலாமோ
பரத்துறை
சீலத் ...... தவர்வாழ்வே
பணித்தடி
வாழ்வுற் ...... றருள்வோனே
வரத்துறை
நீதர்க் ...... கொருசேயே
வயித்திய
நாதப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
உரத்து
உறை போதத் ...... தனி ஆன,
உனைச்
சிறிது ஒதத் ...... தெரியாது,
மரத்துறை போல்உற்று ......அடியேனும்,
மலத்து
இருள் மூடிக் ...... கெடல்ஆமோ?
பரத்து
உறை சீலத் ...... தவர்வாழ்வே!
பணித்து
அடி வாழ்வு உற்று ...... அருள்வோனே!
வரத்துறை
நீதர்க்கு ...... ஒரு சேயே!
வயித்திய
நாதப் ...... பெருமாளே.
பதவுரை
பரத்து உறை சீலத்தவர்
வாழ்வே ---
மேலான நிலையில் நல்லொழுக்க நெறியில் நின்றவர்க்கு வாய்த்த அருட்செல்வமே!
பணித்து --- தேவரீரிது
திருவடியில் பணிந்து இருக்கும்படி நெறிப்படுத்தி,
அடி வாழ்வு உற்று அருள்வோனே --- உன்
திருவடிப் பணியிலேயே வாழுகின்ற நல்வாழ்வை அருள்பவரே!
வரத்து உறை நீதர்க்கு
ஒரு சேயே
--- அடியார் வேண்டுவதை வழங்குவதையே தனது நீதியாகக் கொண்ட சிவபரம்பொருள் அருளிய
ஒப்பற்ற குழந்தையே!
வயித்திய நாதப்
பெருமாளே ---
வயித்திய நாதராகிய பெருமையில் மிக்கவரே!
உரத்து உறை போதத்
தனி ஆன உனை ---
திண்மையான அறிவிலே உறைகின்ற சிறந்த ஞானப்பொருளான உன்னை
சிறிது ஓதத் தெரியாது --- சிறிதளவேனும்
ஓதி வழிபடும் நெறியை அறிந்து கொள்ளாமல்,
மரத்து உறை போல் உற்று --- மரக்கட்டை போன்று கிடந்து
அடியேனும் மலத்து இருள்
மூடிக் கெடலாமோ --- எனது உயிர் அறிவினை ஆணவம் என்னும் வல்லிருள் மூடிக் கிடந்து அடியேன்
கெட்டுப் போகலாமோ. ஆகாது.
பொழிப்புரை
மேலான நிலையில் நல்லொழுக்க நெறியில்
நின்றவர்க்கு வாய்த்த அருட்செல்வமே!
தேவரீரிது திருவடியில் பணிந்து
இருக்கும்படி நெறிப்படுத்தி,
உன்
திருவடிப் பணியிலேயே வாழுகின்ற நல்வாழ்வை அருள்பவரே!
அடியார் வேண்டுவதை வழங்குவதையே தனது
நீதியாகக் கொண்ட சிவபரம்பொருள் அருளிய ஒப்பற்ற குழந்தையே!
வயித்திய நாதராகிய பெருமையில் மிக்கவரே!
திண்மையான அறிவிலே உறைகின்ற சிறந்த ஞானப்பொருளான
உன்னைச் சிறிதளவேனும் ஓதி வழிபடும் நெறியை அறிந்து கொள்ளாமல், மரக்கட்டை போன்று கிடக்கும் எனது
உயிர் அறிவினை ஆணவம் என்னும் வல்லிருள் மூடிக் கிடந்து அடியேன் கெட்டுப் போகலாமோ. ஆகாது.
விரிவுரை
உரத்து
உறை போதத் தனி ஆன உனைச் சிறிது ஓதத் தெரியாது, மரத்து உறை பபோல் உற்று ---
உரம்
- அறிவு, மனத்திண்மை, ஊக்கம்.
உண்மை
அறிவு விளங்குதல், மனத்திண்மை, ஊக்கம் மிகுதி
ஆகியவையே ஒருவனுக்கு நல்ல செல்வம் ஆகும். அது இல்லாதவன் மரத்திற்கு நிகர் ஆவான்.
அறிவு ஒருவனுக்கு இருக்கலாம். அது வெற்றுக் கல்வி அறிவாக இருக்கும். அதனால் தானும்
கற்றோம் என்னும் செருக்கே மிகுந்து இருக்கும். உள்ளத்தில் கசடு இருக்கும்.
கற்பதனால் கசடு அறவேண்டும் என்பதால், "கற்க கசடு அற"
என்றார் திருவள்ளுவ நாயனார்.
ஏட்டுக்
கல்வியால் உண்மை அறிவு விளங்கவேண்டும். அது நுண்ணுணர்வு எனப்படும். "நுண்ணுணர்வு
இன்மை வறுமை,
அஃது
உடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்" என நாலடியார் காட்டுவது உணர்க.
நுண்ணுணர்வினால்
மனமானது பக்குவப்படும். மனமானது அடங்கும். மனம் அடங்கவில்லையானால், ஒருவன் கற்ற
கல்வியினால் அவனுக்கும் பயனில்லை. அவனைச் சார்ந்தோருக்கும் பயனில்லை.
"சினம்
அடங்கக் கற்றாலும், சித்தி எலாம் பெற்றாலும்,
மனம்
அடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே"
என்றார்
தாயுமானார்.
உண்மை
அறிவிலே உறைபவன் இறைவன். உண்மை அறிவு என்பது ஞானம் எனப்படும். ஞானமே வடிவானவன்
இறைவன். எனவே,
அவன்
ஞானம் விளங்கிய இடத்திலே உறைவான் என்பது நிச்சயம்.
உண்மை
அறிவு விளங்கவேண்டுமானால், இறைவனது அருட்புகழை ஓதித் தெளிய வேண்டும்.
ஓதுவதன் பயன் ஒழுக்கமுடைமை.
ஒழுக்கம் இல்லாதார் ஓதியும் பயனில்லை.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ---
உலகநீதி.
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.---
கொன்றைவேந்தன்.
ஓதலின் நன்று ஒழுக்கம் உடைமை.. --- கொன்றைவேந்தன்.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம். --- கொன்றைவேந்தன்.
கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல். --- வெற்றிவேற்கை.
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை. --- முதுமொழிக் காஞ்சி.
எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின். --- அறநெறிச்சாரம்.
பேருரை கண்டு அறியாது தலைச்சுமை
ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,
போரில் நடந்து அறியாது பதினெட்டு
ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,
ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்
பொருள் சுமந்த அறிவிலோனும்,
காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த
கழுதைக்குஒப் பாவர் தாமே. ---
தண்டலையார் சதகம்.
இனி, ஓதுகின்ற
நாள்களும் குற்றமில்லாத நாள்களாக அமைய வேண்டும். அட்டமி, சதுர்த்தசி, புவுரணமி, அமாவாசை, பிரதமை. எனவே மாதத்தில் எட்டு
நாள்கள் ஓதக் கூடாது.
அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது,
சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும், --- கெட்டஉவா
வித்தைக்கு நாசமாம், வெய்ய பிரதமையில்
பித்தரும் பேசார் பிழை. ---
ஔவையார்.
ஆசிரியர் கற்பிக்கும்போது கவனமின்றிக் கேட்டல், பராக்குப் பார்த்தல், சிந்தையை வேறு இடத்தில் செலுத்துதல், அசட்டையாக இருத்தல், அவமதிப்புடன் நிற்றல் முதலியவைகளும் குற்றம் என அறிக. எனவே, குற்றம் கடிந்து, குணம்கொண்டு அடக்கமும் பணிவும் மேற்கொண்டு, அறிவை வளர்க்கும் அறநூல்களை ஓதுதல் வேண்டும்.
நாளும் சிறிதாவது இறைவன் திருப்புகழை விளக்கும் அருள் நூல்ளை ஓதுவது
வேண்டும். என்பதால், "உனைச் சிறிது ஒத"
என்று அடிகளார் காட்டிய அருமையை உணர்க.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குஉரைத்தும், தான்அடங்காப்
பேதையில் பேதையர் இல். --- திருக்குறள்.
இப்படி ஒதி உய்வதை அறியாதவன் உணர்வில்லாத மரத்தைப் போன்றவன் என்கின்றார்
அருணகிரிநாதப் பெருமான். எனவே, "மரத்து
உறை போல் உற்று" என்றார்.
மரத்து உறை என்பது, மரக்கட்டை ஒன்று, வாளுக்கு உறையாக இருந்து, கைப்பிடியாக இருந்து,
வேறு ஒரு மரத்தை அறுக்கத் துணை புரிவது போல, தனக்குத்
தானே கேட்டினைத் தேடிக் கொள்பவன் என்னும் கருத்தில், "மரத்து
உறை" என்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.
மனிதனுக்கு இருக்கவேண்டிய பண்புகள் இல்லாதவன், மனித வடிவில் இருந்தாலும், அவன்
மரத்தைப் போன்றவனே என்றார் திருவள்ளுவ நாயனார்.
உரம்
ஒருவற்கு உள்ள வெறுக்கை,
அஃது
இல்லார்
மரம், மக்கள் ஆதலே வேறு. --- திருக்குறள்.
ஒருவற்குத்
திண்ணிய அறிவாவது ஊக்கம் மிகுதியே ஆகும். அந்த
ஊக்க மிகுதி இல்லாதார் மக்கள் ஆகார், மரங்கள்
ஆவார்; சாதி மரங்களோடு
இம்மரங்களிடையே வேற்றுமை வடிவு மக்கள் வடிவே பிறிது இல்லை.
மரத்திற்கு
உள்ள பயன் ஆகிய பழம் முதலிய அறித்தலும், திருக்கோயில்
பணிக்கு உதவுதலும், வீடுகள் சமைக்க உதவுதலும், தேர், படகு முதலியவற்றுக்கு
உதவுதலும் ஆகியவை. அப்பயன்கள் இல்லாதவை வடிவினால் மரங்களே அல்லாது அவற்றால் ஒரு
பயனும் இல்லை.
அரம்போலும்
கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள்
பண்பு இல்லாதவர். ---
திருக்குறள்.
கூர்மையான
அரத்தைப் போன்ற அறிவுக் கூர்மை உள்ளவர் ஆனாலும், மக்களுக்கு உரிய
நற்பண்புகள் அமையப் பெறாதவர் மரத்தைப் போன்றவர் ஆவார். நற்பண்பு ஆவது,
அறவினால்
ஆகுவது உண்டோ,
பிறிதன்
நோய்
தம்
நோய் போல் போற்றாக் கடை. ---
திருக்குறள்.
பிறருக்கு
நேரும் துன்பத்தைத் தனக்கு நேர்ந்த துன்பமாகக் கருதி, அதனைக் களையவில்லையானால், ஒருவன் பெற்ற
அறிவினால் என்ன பயன் விளையும் என்றார் திருவள்ளுவ நாயனார்.
மண்ணோடு
இயைந்த மரத்தனையர், கண்ணோடு
இயைந்து, கண் ஓடா தவர். --- திருக்குறள்.
‘அற்ற தலை போக, அறாத தலை நான்கினையும்
பற்றித்
திருகிப் பறியேனோ? – வற்றும்
மரம்
அனையானுக்கு இந்த மானை வகுத்திட்ட
பிரமனை
நான் காணப் பெறின்’
என்னும்
ஔவையார் தனிப்பாடலும் சிந்தனைக்கு உரியது.
மலத்து
இருள் மூடிக் கெடலாமோ ---
மலம்
என்பது உயிருக்கு இயல்பாகவே அமைந்துள்ள மூலமலமாகிய ஆணவ மலத்தைக் குறிக்கும்.
பொதுவாக ஆணவம், மாயை, கன்மம் ஆகியவை
மலம் எனப்படும்.
மலம்
என்றால், அது ஆணவ மலத்தையே
குறிக்கும். அது "மூலமலம்" ஆகும். மாயை, கன்மம் ஆகிய இரண்டும் "ஆகந்துக மலம்"
ஆவன.
மலம்
என்றால் அழுக்கு, தேவையற்றது, விரும்பத்தகாதது
என்ற பொருள். அது கழுவக் கூடியதே ஆகும்.
தெருவில்
உள்ள மண்ணில் நீர் கலந்த போது சேறு ஆகிறது. அந்தச் சேறு நம் மேல் பட்டாலோ, அல்லது நமது ஆடையில் பட்டாலோ, நீரைக் கொண்டு
கழுவிக் கொள்ளுகின்றோம். அது
போல, ஆணவ மலத்தோடு, மாயையும், நமது கன்மமும்
சேர்ந்து வினைகளால் துன்பம் விளைகிறது. துன்பம் இந்த உடல் வந்தபோது நேருகின்றது.
இந்த உடலைக் கொண்டே நல்வினைகளைச் செய்து, முன்வினைகளால் வந்த துன்பத்தைக் கழுவிக்
கொள்ளலாம்.
உயிர்
அறிவை மறைத்து, உண்மை அறிவினை
விளங்காமல் செய்வது ஆணவ மலத்தின் இயல்பு. கண்ணிருந்தும் பொருள்களை நாம்
காணவொட்டாது மறைப்பது இருள். இது புற இருள். அறிவை மறைப்பதால், ஆணவத்தை அக
இருள் என்பர் பெரியோர். அறிவு விளங்காத நிலையில் உயிருக்குப் பிறவித் துன்பமாகிய
கேடு நீங்காது.
இதனை, சைவசித்தாந்த
சாத்திர நூலாகிய "திருவருட்பயன்" விளக்குமாறு காண்க.
"இருளானது
அன்றி இலது, எவையும் ஏகப்
பொருள்ஆகி
நிற்கும் பொருள்".
உலகத்திலுள்ள
பல வகைப்பட்ட பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் தானேயாய்த் தோன்றும்படியும், மறைத்து நிற்கும் பொருள் இருளை அல்லாமல்
வேறு இல்லை. இந்தப் புற இருளைப் போலப் பதி, பசு, பாசம் ஆகிய அறியத்தக்க பலவகைப்
பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடி மறைத்து நிற்பது ஆணவ மலம் ஆகிய அக இருளாகும்.
இரவு
நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று விளக்குகள் அணைகின்றன. எங்கும்
இருள் சூழ்கின்றது. பக்கத்தில் உள்ள பொருள் கூடத் தெரியவில்லை. மெழுகுவர்த்தியைத்
தேடலாம் என்று எழுகிறோம். சில அடி தூரம் நடந்திருப்போம். அங்குள்ள சுவரில்
தெரியாமல் முட்டிக் கொள்கிறோம். வழியில் ஒரு நாற்காலி கிடக்கிறது. அது நமக்குத்
தெரியவில்லை. அது நம் காலை இடறிக் காயப்படுத்துகிறது. அதையும் தாண்டிச்
செல்லும்போது கீழே கிடந்த கயிற்றின் மீது காலை வைக்கிறோம். என்னவோ, ஏதோ என்ற பதைப்புடன் தாவிக்
குதிக்கிறோம். நல்ல வேளையாக அப்பொழுது விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அந்த
விளக்கொளியில் கீழே கிடந்தது கயிறுதான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல்
அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில்,
சுவர்
சுவராகத் தோன்றவில்லை. நாற்காலி நாற்காலியாகத் தோன்றவில்லை. கயிறு கயிறாகத்
தோன்றவில்லை. எல்லாம் இருளாகத் தோன்றுகின்றன.
இருளானது
அவற்றின் தன்மையை மறைத்து, எவையும் தானேயாய்த்
தோன்றும்படி நிற்கிறது. இந்தப் புற இருளைப் போல கடவுள், ஆன்மா, உலகம் ஆகியவற்றின் தன்மையைத்
தெரியவொட்டாதபடி உயிரின் அறிவை மறைத்து நிற்கின்ற அக இருள் உண்டு. அதுவே "ஆணவம்"
எனப்படும். அது பிறவித் துன்பத்தை மறைத்து, அதை இன்பமாகக் காட்டி அதன் மீது ஆசை
கொள்ளும்படி செய்யும். அழியாத வீட்டின்பத்தை மறைத்து அதைப் பெறுதற்குரிய வழியில்
செல்லவிடாது தடுக்கும். இறைவனைப் பற்றிய எண்ணம் எழாதபடி மறைத்து அகந்தையை
உண்டாக்கி மயக்கும்.
இந்த
ஆணவத்தின் செயற்பாட்டினைச் சூரபதுமனின் நடத்தையில் நன்கு காணலாம். போர்க்களத்தில்
சூரபதுமன் முருகப் பெருமானது பேருருவக் காட்சியினைக் கண்டு நல்லுணர்வு பெற்றான்.
இவர்தான் யாவர்க்கும் தலைவர் என்று தெளிந்தான். இவரை வலம் வர வேண்டும். கை குவித்து வணங்க வேண்டும். இவருக்கு அடிமையாய் வாழவேண்டும்
என்றெல்லாம் எண்ணினான். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
மாண்பு இறந்த மானம் அவனைத் தடுத்துவிட்டது. "தடுத்தது மானம் ஒன்றே"
என்றார் கச்சிய்யப்பர். அதுவும் ஆணவத்தின் வெளிப்பாடுதான். அகந்தை பழையபடி
தலையெடுத்தது. என்னைப் போன்ற வீரன் யார் இருக்கமுடியும்? முருகப் பெருமானுக்கு நேர் நின்று போர்
செய்தேன் என்ற புகழ் எனக்கு எப்போதும் இருக்கும். இந்த உடம்பு நில்லாது. இது
போனால் போகட்டும் என்று சொல்லிப் போர் செய்யப் புறப்பட்டான். நன்மை தராது எனத்
தெரிந்த பின்பும், முன் தொடங்கிய செயலை
விடாமல் செய்து முடிக்கப் புறப்பட்ட சூரபன்மன் ஆணவத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு.
இதனைக்
கந்தபுராணத்தில் கச்சிய்யப்பர் காட்டுமாறு காண்க.
இறுதியும்
முதலும் இல்லா
இப்பெரு வடிவம் தன்னைக்
கறை
விடம் உறழும் சூரன்
கண்டு, விம்மிதத்தின் நிற்ப
அறிவரும்
உணர்தல் தேற்றா
ஆறுமா முகத்து வள்ளல்
சிறிது
நல் உணர்ச்சி நல்க
இனையன செப்பல் உற்றான்.
எண்
இலா அவுணர் தானை
யாவையும் இமைப்பில்செற்று
விண்
உலா அண்டம் தோறும்
வியன் சமர் ஆற்றி என்பால்
நண்ணினார்
தம்மை எல்லாம்
நாமறத் தடிந்து வீட்டி
வண்ண
மான் தேரும் மீண்டு
வரா நெறி தடுத்தான் மன்னோ
திண்திறல்
உடையேன் தூண்டும்
திறல்படை யாவும் நீக்கிக்
கொண்ட
என் மாயம் முற்றும்
கொடுஞ்சரம் அதனல் மாற்றி,
அண்டமும்
புவனம் யாவும்
அமரரும் பிறவும் தன்பால்
கண்டிடும்
வடிவம் ஒன்று
காட்டி என் கண்முன் நின்றான்.
கோலமா
மஞ்ஞை தன்னில்
குலவிய குமரன் தன்னைப்
பாலன்
என்று இருந்தேன் அந் நாள்
பரிசு இவை உணர்ந்திலேன் யான்
மால்
அயன் தனக்கும் ஏனை
வானவர் தமக்கும் யார்க்கும்
மூல
காரணமாய் நின்ற
மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ.
ஒற்று
என முன்னம் வந்தோன்
ஒரு தனி வேலோன் தன்னைப்
பற்றி
இகல் இன்றி நின்ற
பராபர முதல்வன் என்றே
சொற்றனன், சொற்ற எல்லாம்
துணிபு எனக் கொண்டிலேன் ஆல்
இற்றை
இப் பொழுதில் ஈசன்
இவன் எனும் தன்மை கண்டேன்.
ஆயிர
கோடி காமர்
அழகு எலாம் திரண்டு ஒன்றாகி
மேயின
எனினும் செவ்வேள்
விமலமாஞ் சரணம் தன்னில்
தூய
நல் எழிலுக்கு ஆற்றாது
என்றிடின் இனைய தொல்லோன்
மா
இரு வடிவிற்கு எல்லாம்
உவமை யார் வகுக்க வல்லார்.
இங்கு
எனது உயிர் போல் உற்ற
இளவலும் இளைய சேயும்
"செங்கையில்
வேலோன் தன்னைச்
சிறுவன் என்றுஎண்ணல் கண்டாய்,
பங்கயன்
முதலோர் காணாப்
பரமனே ஆகும் என்றார்
அங்கு
அவர் மொழிந்த வாறும்
சரதமே ஆனது அன்றே".
"அண்ணலார்
குமரன் மேனி
அடி முதல் முடியின் காறும்
எண்
இலா ஊழிகாலம்
எத்திறம் நோக்கினாலும்
கண்ணினால்
அடங்காது உன்னி
கருத்தினால் அடங்காது, என்பால்
நண்ணினான்
அமருக்கு என்கை
அருள் என நாட்டலாமே".
திருகிய
வெகுளி முற்றும்
தீர்ந்தன, செருவின் ஊக்கம்
அருகியது, உரோமம் புள்ளி
ஆயின, விழியில் தூநீர்
பெருகியது, இவன் பால் அன்பு
பிறந்தன தமியேற்கு உள்ளம்
உருகியது
என்பு தானும்
உலை மெழுகு ஆகும் அன்றே.
போயின
அகந்தை, போதம்
புகுந்தன, வலத்தது ஆன
தூயது
ஓர் தோளும் கண்ணும்
துடித்தன, புவனம் எங்கும்
மேயின
பொருள்கள் முற்றும்
வெளிப்படுகின்ற, விண்ணோர்
நாயகன்
வடிவம் கண்டேன்
நற்றவப் பயன் ஈது அன்றே.
சூழுதல்
வேண்டும், தாள்கள்
தொழுதிடல் வேண்டும், அங்கை
தாழுதல்
வேண்டும், சென்னி
துதித்திடல் வேண்டும், தாலும்
ஆழுதல்
வேண்டும், தீமை
அகன்று, நான் இவற்கு ஆள் ஆகி
வாழுதல்
வேண்டும், நெஞ்சம்
தடுத்தது மானம் ஒன்றே.
ஒன்னலர்
பொருட்டால் ஏகி
உறு சமர் இழைத்த செம்மல்
தன்
உரு அதனை காண்கின்
முனிவதே தகுதி ஆகும்
வன்னி
கொள் வெண்ணெயே போல்
வலி அழிந்து உருகிற்று என்றால்
என்னுடை
வயத்த அன்றோ
உணர்ச்சியும் இயாக்கை முற்றும்.
ஏடு
அவிழ் அலங்கல் மார்பன்
என்னுடன் இந்நாள் காறும்
நீடிய
இகல் போர் ஆற்றி
நீங்கலான் நின்றது எல்லாம்
ஆடலின்
இயற்கை என்றே
அறிந்தனன் அஃது ஆன்று தன்னால்
சாடிய
வேண்டும் என்னின்
யார் அது தாங்கற் பாலார்.
ஏதம்
இல் அமரர் தம்மை
யான் சிறை செய்தது எல்லாம்
தீது
என உரைத்தார் பல்லோர்
அன்னதன் செயற்கை யாலே
வேதமும்
அயனும் ஏனை
விண்ணவர் பலரும் காணா
நாதன்
இங்கு அணுகப் பெற்றேன்
நன்றதே ஆனது அன்றே.
ஒன்று
ஒரு முதல்வன் ஆகி
உறைதரு மூர்த்தி முன்னம்
நின்று
அமர் செய்தேன் இந்நாள்
நெஞ்சு இனித் தளரேன், அம்மா!
நன்று
இதோர் பெருமை பெற்றேன்,
வீரனும் நானே ஆனேன்,
என்றும்
இப்புகழே நிற்கும்,
இவ்வுடல் நிற்பது உண்டோ.
வான்
உளோர் சிறையை நீக்கி,
வள்ளலை வணங்கி, இந்த
ஊன்
உலாம் உயிரைப் போற்றி
அளியர் போல் உறுவன் என்னின்,
ஆனதோ
எனக்கு இது அம்மா!
ஆயிர கோடி அண்டம்
போனது
ஓர் புகழும் வீரத்
தன்மையும் பொன்றிடாவோ.
என்ன
இத்தகைய பன்னி
நிற்றலும், எவர்க்கும் மேலோன்
உன்ன
அரும் தகைத்தாய் நின்ற
ஒரு பெரும் தோற்றம் நீத்து,
மின்இவர்
கலாபம் ஊர்ந்த
வியன் உருக் கொண்டு நண்ணி,
துன்னலன்
போதம் ஆற்றித்
தொன்மை போல் ஆகச் செய்தான்,
காரணன்
ஆகி, தானே
கருணையால் எவையும் நல்கி,
ஆருயிர்
முழுது மேவி,
அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண
முதல்வன் மைந்தன்
போதகம் அளித்து மாற்றிச்
சூரனை
மயக்கம் செய்யும்
சூழ்ச்சியோ அரியது அன்றே.
அத்தகு
காலை தானே
அவுணர் கோன் உணர்ச்சி நீங்கிச்
சித்தமது
இடையே தொல்லைச்
சீற்றமும் இகலும் உற்ற
மெய்த்தகு
குழவித் திங்கள்
விண்ணெறி செல்லச் செல்லும்
எத்திசை
இருளும் அன்னது
அகன்றுழி எழுந்ததே போல்.
பிணி
முகம் உயர்த்து நின்ற
பெருந்தகை தோற்றம் காணூஉத்
தணிவரும்
சினம் மேற் கொண்டு
சமரின் மேல் ஊக்கம் சேர்த்தி,
அணியது
என்று திண்மை என்னா,
அங்கையோடு அங்கை தாக்கி,
மணி
முடி துளக்கி நக்கு,
மற்று இவை புகலல் உற்றான்.
சேய்
உரு அமைந்த கள்வன்
செருவினை இழக்கல் ஆற்றால்,
மாயையின்
ஒன்று காட்டி
எனை இவண் மையல் செய்தான்
ஆயது
துடைத்தேன் என்றால்
ஆர் எனக்கு ஒப்பு உண்டு என்றும்
காயம்
அது அழிவு இலாதேன்,
கருத்து அழிகின்றது உண்டோ.
குன்றினை
எறிந்த வேல் கைக்
குமரனோடு அமர் அது ஆற்றி,
வென்றிடுகின்றேன்
மெல்ல,
மேலது நிற்க இந்த
வன்
திறல் சமரை மூட்டி
நின்ற வானவரை எல்லாம்
தின்று
உயிர் குடித்து முன் என்
சினம் சிறிது அகல்வன் என்றான்.
ஆயது
துணிவாக் கொண்ட
அவுணர்கள் மன்னன் பின்னும்
தீயது
ஓர் தொல்லை மாயச்
சீர் கொள் மந்திரத்தைப் பன்னி
ஞாயிறு
மருட்கை கொள்ள
ஞாலமும் ககன முற்றும்
மாஇருள்
உருவம் கொண்டு
மறைந்து நின்று ஆர்க்கல் உற்றான்.
இந்த
அக
இருள் ஆகிய ஆணவம், புற இருளினும்
கொடியது
"ஒரு
பொருளும் காட்டாது, இருள் உருவம்
காட்டும்,
இரு
பொருளும் காட்டாது இது".
புற
இருளளானது, ஒரு பொருளையும் காண
ஒட்டாதபடி நமது கண்ணை மறைத்து விடும். ஆயினும் தன்னை இருள் எனக் காட்டி நிற்கும். அதாவது, தான் ஒரு பொருள் உண்டு என்பதை நாம் உணர
நிற்கும். அக இருளாகிய இந்த ஆணவ மலம் இறைவன். உயிர் முதலிய பிற பொருள்களையும் அறிய
வொட்டாது. தன்னையும் காட்டிக் கொள்ளாது. இவ்வாறு பிற பொருள், தான் என்ற இரண்டையும் நாம் அறிய முடியாத
வகையில் நமது அறிவை மறைத்து நிற்கும்.
கண்
வேறாகவும், உயிராகிய நாம்
வேறாகவும் இருக்கிறோம். புற
இருள் வந்து கண்ணை மறைக்கும்போது பொருள்களைக் காணும் காட்சி தடைப்படுகிறது. கண்
வழியாகப் பார்த்து அறிகின்ற நாம் கண்ணுக்கு வேறாக இருப்பதனாலே கண் செயற்படாதபோது
அதை வைத்துக் கண்ணை மறைக்கின்ற இருள் வந்து சேர்ந்தது என்பதை அறிந்து கொள்கிறோம்.
அந்த இருளுக்கு மாற்றுப் பொருள்களாகிய விளக்கு முதலியவற்றின் உதவியை நாடி இருளை
அகற்ற முயல்கிறோம். புற இருளை உணர முடிவதனாலேயே, அதனை நீக்குகிற முயற்சியும் எழுகிறது.
இது பற்றியே இருள் உருவம் காட்டும் என்றார் திருவருட்பயன் ஆசிரியர். உருவம்
என்பதற்கு இருப்பு என்பது பொருள்.
புற
இருள் உயிருக்கு வேறாகிய கண்ணைத் தான் மறைக்கிறது. அக இருளாகிய ஆணவமோ உயிரறிவை
மறைத்து அதற்கு அறியாமையை உண்டாக்குகிறது. உயிர் தனது அறிவிலுள்ள மறைப்பினைச் சிறிதும்
உணர முடிவதில்லை. அம் மறைப்பினால் உண்டாகும் அறியாமையையும் தெரிந்து கொள்வதில்லை.
மாறாக, அவ் வறியாமையையே
அறிவு என்று நம்பி விடுகிறது.
தேர்வு
அறையில் எழுதும் மாணவர்கள் இதற்குத் தக்க எடுத்துக்காட்டு ஆவர். அவர்கள் சில
கேள்விகளுக்குத் தவறாகவே விடை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது அவர்களுக்குத் தெரிவதில்லை. தாம்
எழுதுவது சரியான விடையே என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அறியாமையில்
இருந்த போதிலும் அதுவே அவர்களுக்கு அறிவாகத் தோன்றுகிறது. அதனாலேயே அப்படி
நினைக்கிறார்கள். நம்மிடத்தில் அறியாமை இருப்பது தெரிந்தால் அல்லவா அதற்கான காரணம்
யாது என ஆராய்ந்து அதனை நீக்கிக் கொள்ள முயல்வோம்? அறியாமையே அறிவு போலத் தோன்றும் போது
அறியாமை பற்றிய ஆராய்ச்சி எப்படி உண்டாகும்? அதனை நீக்குகிற முயற்சியும் எப்படி
உண்டாகும்? இவ்வாறு உயிர், தன்னறிவை ஒன்று மறைத்து நிற்கிறது
என்பதை எவ்வகையிலும் உணர முடியாமல் போகிறது.
உயிரறிவை
மறைத்து ஆணவம் செய்கின்ற காரியங்கள் அளவற்றவை. சிலவற்றை இங்கே காண்போம். சிலர்
யார் என்ன அறிவுரை கூறினாலும் தான் பிடித்த தவறான போக்கை விடுவதில்லை. இன்னும்
சிலர் மற்றவரின் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளத் துளியும் விரும்ப
மாட்டார்கள்; தங்கள் கருத்தை
அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாடுபடுவார்கள். ஒப்புக் கொள்ளாதவரை
விடமாட்டார்கள்! சிலர் எதிரில் இருப்பவரின் கருத்துத் தவறு என்று காட்டுவதிலேயே
கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும்.
அவமானப்படுத்த வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். மற்றும் சிலர் பிறரிடம்
தகுதி இருந்தாலும் அதை மதிக்க மாட்டார்கள். தம்மிடம் தகுதியில்லாத போதிலும்
தம்மையே பெரிதாக மதித்து மகிழ்வார்கள். இவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது
இவ்வியல்பு தம்மிடம் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. இப்படி நடந்து
கொள்ளும் போக்கிற்குக் காரணமாயிருப்பது தம்மிடமுள்ள ஆணவ மலம் என்பதையும் அவர்கள்
அறிய மாட்டார்கள். ஆணவ மலம் தன்னைக் காட்டாமல் எண்ணிறந்த வகைகளில் செயற்படும்
என்பதை, மனிதர்கள்
இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆணவ
மலத்தின் இயல்பை "திருவருட்பயன்" என்னும் சாத்திர நூலின் ஆசிரியர் ஆகிய "உமாபதிசிவம்"
போல எடுத்துக் காட்டியவர்கள் வேறு யாறுமில்லை. உலகில் இருளை விட இருண்ட பொருள்
உண்டா? உண்டு.
உயிர்களிடத்தில் அஞ்ஞானமாகிய மயக்கத்தைச் செய்கின்ற ஆணவமலம் அப்படிப்பட்ட பொருள்.
அதன் முன்னால் உலகத்து இருளும் ஒளி என்று சொல்லும்படி ஆகிவிடும் என்றால் அந்த ஆணவ
மலம் எவ்வளவு இருண்டதாக இருக்க வேண்டும்! இக் கருத்துப்பட இருள் ஒளிர இருண்ட
மோகமாய், அறிவு முழுதினையும்
மறைக்கும்.
இதனை, "சிவப்பிரகாசம்"
என்னும் சித்தாந்த சாத்திர நூல் இவ்வாறு காட்டும்...
ஏகமாய், தம்கால எல்லைகளில்
மீளும்
எண்அரிய சத்தியதாய்
இருள்ஒளிர, இருண்ட
மோகமாய்ச்
செம்பில்உறு களிம்புஏய்ந்து நித்த
மூலமலமாய் அறிவு
முழுதினையும் மறைக்கும்
பாகமாம்
வகைநின்று திரோதாயி சத்தி
பண்ணுதலால்
மலம்எனவும் பகர்வர்அது பரிந்து
நாகம்மா
நதிமதியம் பொதிசடையான் அடிகள்
நணுகும்வகை கருணைமிக
நயக்கும் தானே.
இதன்
பொருள் --- மூலமலமாகிய
ஆணவமலம் ஒன்றே தான். ஆயினும், பக்குவம் அடைந்த
காலத்து உயிரைவிட்டு நீங்கும் தன்மை உடையதாய், எண்ணுவதற்கு அரிய ஆற்றலை உடையதாய் நிற்கும்.
செறிந்த இருள்கூட இதனோடு ஒப்பிடும்போது ஒளி என்று கருதுமாறு இருண்டது ஆணவமலம். இது
அறிவு மயக்கத்தை விளைவிப்பது. செம்பினில் களிம்பு போன்று எப்போதும் உடன் இருப்பது.
எல்லாப் பெருங்கேட்டிற்கும் காரணம். ஆதலால் மூலமலம் என்ற பெயரைப் பெற்றது.
உயிர்களின் அறிவு முழுவதினையும் மறைத்து நிற்பது. மறைப்பாற்றல் என்ற திரோதான சத்தி
ஆணவமலம் பக்குவப்படும் வரையில் அதற்குத் துணையாய் நின்று, பக்குவப்பட்ட பிறகு அரவும் கங்கையும்
பிறையும் அணிந்த சடையினையுடைய சிவபெருமானின் திருவடிகளை அவ்வுயிர்கள் அடையும்
வண்ணம் செய்தலால் அதனையும் மலம் என்று கூறுவர்.
ஒன்றாகிய
ஆணவமலம் எண்ணிறந்த உயிர்களை வெவ்வேறுபட்ட வலிமையோடு பற்றிநிற்பது எவ்வாறு என்ற
கேள்வி எழலாம். ஆணவ மலம் ஒன்றே ஆயினும் எண்ணுவதற்கரிய சத்திகளை உடையது என்பது
அதற்குரிய விடை. அது மட்டுமல்லாமல்,
ஒவ்வோர்
உயிரையும் பற்றியுள்ள ஆணவமலம் அந்தந்த உயிரின் பக்குவத்திற்கு ஏற்ப அதனதனுக்கு
ஏற்ற கால எல்லைகளில் உயிரைப் பற்றுவதை விட்டு நீங்குகிறது. இக் கருத்துக்களை
விளக்கவே தம் கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் என்று உரைத்தார்.
மேலும்
ஆணவமலம் தான் ஒரு பொருள் இல்லை என்னும்படி உயிரில் பொருந்தி இருக்கும் எனவும், ஆணவம் உளது என்பதைத் திருவருள் துணையால்
அறியலாமே அன்றி, வேறு எவ்வகையாலும்
அறிதல் இயலாது.
இந்த
ஆணவமானது, உயிரோடு எல்லாக் காலத்தும் பொருந்தி இருப்பது.
"அன்று அளவி
உள்ஒளியோடு ஆவியிடை அடங்கி
இன்று
அளவும் நின்றது இருள்".
உயிரிடத்தில்
இரண்டறக் கலந்து நிற்கின்ற உள்ளொளியாகிய இறைவனோடு ஆணவமாகிய இருளும் அன்றே உடன்
கலந்திருக்கிறது. அந்த இருள் இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி, உயிரை மட்டுமே பற்றி நிற்கிறது. அன்று
தொட்டு இன்று வரையிலும் உயிரை விட்டு நீங்காமலே உள்ளது.
உயிரோடு
இறைவன் இரண்டறக் கலந்திருக்கின்ற போது அவனுக்கு எதிராகிய ஆணவ மலமும் உயிரில் உடன்
கலந்துள்ளது என்பது எப்படி என்னும் வினா எழலாம்.
"ஒளிக்கும்
இருளுக்கும் ஒன்றே இடம்" என்பதை அறிந்தால் இந்த வினா எழாது. பகலில் ஒளியும்
இருளும் ஓரிடத்தில் தான் உள்ளன. ஒளி மேலிட்டபோது இருள் அந்த இடத்தை விட்டு
ஓடிவிடவில்லை. அதே இடத்திலேயே மடங்கிப் போய் சிறிதும் புலனாகாமல் உள்ளது. ஆனால், உலக வழக்கில் இருள் நீங்கியதாகச்
சொல்லுகிறோம். அதன் பொருள், இருள் ஒளி முன்னர்
தன் சத்தி கெட்டு மடங்கிக் கிடக்கிறது என்பதே ஆகும். விளக்கு மெலிகின்றபோது, அது வரையில் அவ்விடத்தில் மடங்கி நின்ற
இருள் மேலிடும். இதனை "விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல்" என்றார்
திருவள்ளுவ நாயனார். உயிரிடத்தில் ஒளியாகிய இறைவனும் இருக்கிறான். இருளாகிய ஆணவ
மலமும் இருக்கிறது. இரண்டிற்கும் இடம் உயிர்தான். இருந்தாலும், அக ஒளியாகிய இறைவன் முன், அக இருளாகிய ஆணவம் என்றும்
கீழ்ப்பட்டதாய் அடங்கியே நிற்கும்.
பரத்து
உறை சீலத்தவர் வாழ்வே ---
பரம்
- மேலானது, திவ்வியம்.
மேலான
நல்லொழுக்க நெறியில் நின்றவர்க்கு இறைவனது அருட்செல்வமானது வாய்க்கும்.
பணித்து
அடி வாழ்வு உற்று அருள்வோனே ---
"எமை
பணி விதிக்கும் சாமி" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "எது
எமைப் பணிகொள்ளும் ஆறு, அது
கேட்போம்" என்றார் மணிவாசகப் பெருமான்.
இறைவன்
பக்குவப்பட்ட ஆன்மாக்களை ஆட்கொண்டு,
திருவருள்
நெறியில் நின்று ஒழுகி, ஈடேறுமாறு பணிக்கின்றான். திருவருள் நெறியில்
வாழும் வாழ்வே உயர்ந்தது. அதுவே உயிர்களைப் பரகதியில் சேர்க்க வல்லது.
திருவருள்
நெறியில் ஒழுகுபவர்கள், உலக இன்பத்தை
ஒரு பொருளாகக் கருதமாட்டார்கள்.
வரத்து
உறை நீதர்க்கு ஒரு சேயே ---
வரம்
- தெய்வத்தால் பெறும் பேறு. அருள்,
வேண்டுகோள், விருப்பம்.
நீதன்
- நீதிமான்.
இறைவன் பெருங்கருணையாளன். "கருணையே உருவம் ஆகி" என்றார் தெய்வச்
சேக்கிழார் பெருமான். உண்மை அடியவர்கள் வேண்டியதை வேண்டியவாறு அளித்து அருள்
புரிபவன் இறைவன். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்றார் அப்பர்
பெருமான். "வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ" என்றார் மணவாசகப் பெருமான்.
எம்பெருமான் சிவபெருமானைப் போலவை, அவரது திருக்குழந்தையாகிய முருகப் பெருமானும் கருணைக்கடல். ஆதலின், "வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும்
பெருமாளே" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.
"அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்து அருள் பெருமாளே" என்றார் அடிகளார் பிறிதொரு
திருப்புகழில்.
"நினைத்தவை முடித்து அருள் க்ருபைக் கடல்" என்றும், "நினையும் அவை முடிய வருவதும்... மணநாறு
சீறடியே" என்றும் திருவகுப்புகளில் காட்டி அருளினார்.
வயித்திய
நாதப் பெருமாளே ---
பிறவிப்
பிணிக்கு மருத்துவராக உள்ளவன் இறைவன். வைத்தீசுவரன் கோயில் என்னும்
திருப்புள்ளிருக்கு வேளூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி
இருக்கும் சிவனுக்கு, வைத்தியநார்
என்று திருநாமம். தீராத நோயைத் தீர்த்து அருள்பவர் அவர் என்பதை,
பேர்ஆ
யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானை, பிரிவிலா
அடியார்க்கு என்றும்
வாராத
செல்வம் வருவிப்பானை,
மந்திரமுந்
தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய்
தீர்த்துஅருள வல்லான் தன்னை,
திரிபுரங்கள் தீ எழத்
திண்சிலை கைக்கொண்ட
போரானை, புள்ளிருக்கு
வேளூரானைப்
போற்றாதே, ஆற்றநாள்
போக்கினேனே.
என்னும்
அப்பர் திருத்தாண்டகத்தால் அறியலாம்.
ஐம்முகச்
சிவமும், அறுமுகச் சிவமும் ஒன்றே.
எனவை,
முருகப்
பெருமானும்,
தீராத
பிணியாகிய பிறவிப் பிணிக்கு மருத்துவர் ஆவார் என்பதை "பவரோக வயித்திய நாதப்
பெருமாள்" என்று திருத்தணிகைத் திருப்புகழில் அடிகளார் காட்டினார்.
பிறவித்
துன்பமானது, மூவாசைகளால்
வருவது. அவை,
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை
எனப்படும். இவை உலகியல் சேற்றில் மனிதனை அழுத்தும். பிறவித் துன்பம் என்னும்
பவரோகம் உண்டாகும். அது தீர, இத் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள
முருகப் பெருமானை, "வேளூரில் அன்பர் பவரோகம் அற வளர் வயித்திய
நாதனே" என்று ஒரு திருப்பதிகத்தையே அருளிச் செய்து உள்ளார் வடலூர் வள்ளல்.
அத்
திருப்பதிகத்தினைக் காண்போம்.
ஓகை
மடவார் அல்குலே பிரமபதம், அவர்கள்
உந்தியே வைகுந்தம், மேல்
ஓங்கு
முலையே கைலை, அவர் குமுத வாயின் இதழ்
ஊறலே அமுதம், அவர்தம்
பாகு
அனைய மொழியே நல் வேதவாக்கியம், அவர்கள்
பார்வையே கருணைநோக்கம்,
பாங்கின்
அவரோடு விளையாட வரு சுகம் அதே
பரமசுகம் ஆகும், இந்த
யூகம்
அறியாமலே தேகம் மிக வாடினீர்!
உறுசுவைப் பழம் எறிந்தே,
உற்ற
வெறுவாய் மெல்லும் வீணர்நீர்! என்று, நல்
லோரை நிந்திப்பர், அவர்தம்
வாகைவாய்
மதம்அற மருந்து அருள்க! தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 1.
உண்டதே
உணவு, தான் கண்டதே காட்சி, இதை
உற்று அறிய மாட்டார்களாய்,
உயிர்உண்டு, பாவபுண்ணியம் உண்டு, வினைகள்உண்டு,
உறுபிறவி உண்டு, துன்பத்
தொண்டதே
செயும் நரக வாதை உண்டு, இன்பமுறு
சொர்க்கம் உண்டு, இவையும்அன்றித்
தொழுகடவுள்
உண்டு, கதி உண்டு என்று சிலர்சொலும்
துர்ப் புத்தியால், உலகிலே
கொண்டதே
சாதகம் வெறுத்து, மடமாதர் தம்
கொங்கையும் வெறுத்து, கையில்
கொண்டதீங்
கனியைவிட்டு, அந்தரத்து ஒருபழம்
கொள்ளுவீர் என்பர், அந்த
வண்டர்
வாய் அற ஒரு மருந்து அருள்க! தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 2.
உம்பர்வான்
அமுது அனைய சொற்களால் பெரியோர்
உரைத்த வாய்மைகளை நாடி
ஓதுகின்றார்
தமைக் கண்டு, அவமதித்து எதிரில்
ஒதிபோல நிற்பதும் அலால்,
கம்பர்வாய்
இவர்வாய்க் கதைப்பு என்பர், சிறுகருங்
காக்கைவாய்க் கத்தல், இவர்வாய்க்
கத்தலில்
சிறிது என்பர், சூடேறு நெய்ஒரு
கலங்கொள்ள வேண்டும்என்பர்,
இம்பர்நாம்
கேட்டகதை இது என்பர், அன்றியும்
இவர்க்கு ஏது தெரியும் என்பர்,
இவைஎலாம்
எவனோஓர் வம்பனாம் வீணன்முன்
இட்ட கட்டு என்பர், அந்த
வம்பர்
வாய் அற ஒரு மருந்து அருள்க, தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 3.
கல்லையும்
உருக்கலாம், நார் உரித்திடலாம்,
கனிந்த கனியாச் செய்யலாம்,
கடுவிடமும்
உண்ணலாம், அமுது ஆக்கலாம், கொடுங்
கரடிபுலி சிங்கம் முதலா
வெல்லும்
மிருகங்களையும் வசமாக்கலாம், அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்,
மிக்க
வாழைத்தண்டை விறகு ஆக்கலாம், மணலை
மேவு தேர் வடம் ஆக்கலாம்,
இல்லை,ஒரு தெய்வம் வேறு இல்லை, எம் பால்இன்பம்
ஈகின்ற பெண்கள் குறியே
எங்கள்
குலதெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில்
எத்துணையும் அரிது அரிதுகாண்.
வல்லை
அவர் உணர்வு அற மருந்து அருள்க, தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 4.
படிஅளவு
சாம்பலைப் பூசியே சைவம்
பழுத்த பழமோ? பூசுணைப்
பழமோ? எனக் கருங்கல் போலும்
அசையாது
பாழாகுகின்றார்கள், ஓர்
பிடிஅளவு
சாதமும் கொள்ளார்கள், அல்லது ஒரு
பெண்ணை
எனினும் கொள்கிலார்,
பேய்
கொண்டதோ, அன்றி நோய் கொண்டதோ, பெரும்
பித்தேற்றதோ அறிகிலேன்,
செடிஅளவு
ஊத்தைவாய்ப் பல் அழுக்கு எல்லாம்
தெரிந்திடக் காட்டி, நகை தான்
செய்து, வளையாப் பெரும் செம்மரத் துண்டுபோல்
செம்மாப்பர், அவர் வாய்மதம்
மடி
அளவு அதா ஒரு மருந்து அருள்க, தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 5.
பெண்கொண்ட
சுகம்அதே கண்கண்ட பலன்,இது
பிடிக்க அறியாது, சிலர்தாம்
பேர்ஊர்
இலாதஒரு வெறுவெளியிலே சுகம்
பெறவே விரும்பி, வீணில்
பண்கொண்ட
உடல்வெளுத்து, உள்ளே நரம்பு எலாம்
பசைஅற்று மேல்எழும்ப,
பட்டினி
கிடந்து சாகின்றார்கள், ஈது என்ன
பாவம்? இவர் உண்மை அறியார்,
கண்கொண்ட
குருடரே என்று, வாய்ப் பல் எலாம்
காட்டிச் சிரித்து, நீண்ட
கழுமரக்
கட்டைபோல் நிற்பார்கள், ஐய! இக்
கயவர்வாய் மதம் முழுதுமே
மண்கொண்டு
போக ஓர் மருந்து அருள்க, தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 6.
திருத்தம்
உடையோர் கருணையால், இந்த உலகில்
தியங்குவீர், அழியாச் சுகம்
சேர்
உலகமாம் பரமபதம் அதனை அடையும் நெறி
சேர வாருங்கள் என்றால்,
இருத்து
இனிய சுவைஉணவு வேண்டும், அணி ஆடைதரும்
இடம்வேண்டும், இவைகள் எல்லாம்
இல்லையாயினும், இரவு பகல் என்பது அறியாமல்
இறுகப் பிடித்து அணைக்கப்
பெருத்த
முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய
பெண் அகப்படும் ஆகிலோ
பேசிடீர், அப் பரம பத நாட்டினுக்கு
நும்
பிறகு இதோ வருவம் என்பார்,
வருத்தும்
அவர் உறவுஅற மருந்து அருள்க, தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர்வவைத்தியவநாதனே. 7.
பேதை
உலகீர்! விரதம் ஏது? தவம் ஏது? வீண்
பேச்சு இவை எலாம், வேதனாம்
பித்தன்வாய்ப்
பித்து ஏறு கத்துநூல் கத்திய
பெரும் புரட்டு ஆகும், அல்லால்
ஓதை
உறும் உலகாயதத்தின் உள உண்மைபோல்
ஒருசிறிதும் இல்லைஇல்லை,
உள்ளது
அறியாது இலவு காத்த கிளி போல் உடல்
உலர்ந்தீர்கள், இனியாகினும்
மேதை
உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு, நீர்
விரை மலர்த் தொடை ஆதியா
வேண்டுவ
எலாம் கொண்டு, மேடைமேல் பெண்களொடு
விளையாடுவீர்கள் என்பார்,
வாதைஅவர்
சார்பு அற மருந்து அருள்க, தவசிகா
மணி! உலக நாதவள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 8.
ஈனம்
பழுத்த மன வாதை அற, நின் அருளை
எண்ணி, நல்லோர்கள் ஒருபால்
இறைவ!
நின் தோத்திரம் இயம்பி, இரு கண்நீர்
இறைப்ப, அது கண்டு நின்று,
ஞானம்
பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர்,
நம்உலகில் ஒருவர் அலவே,
ஞானி
இவர் யோனி வழி தோன்றியவரோ என
நகைப்பர், சும்மா அழுகிலோ
ஊனம்
குழுத்த கண்ணாம் என்பர், உலகத்தில்
உயர்பெண்டு சாக்கொடுத்த
ஒருவன்
முகம் என்ன, இவர் முகம் வாடுகின்றது
என
உளறுவார் வாய்அடங்க
மானம்
பழுத்திடு மருந்து அருள்க, தவசிகா
மணி! உலகநாத வள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 9.
கற்பவை
எலாம் கற்று உணர்ந்த பெரியோர் தமைக்
காண்பதே அருமை அருமை,
கற்பதரு
மிடியன்இவன் இடை அடைந்தால் எனக்
கருணையால் அவர் வலிய வந்து,
இல்புறன்
இருப்ப, அது கண்டும் அந்தோ! கடிது
எழுந்துபோய்த் தொழுது, தங்கட்கு
இயல்உறுதி
வேண்டாது, கண்கெட்ட குருடர்போல்
ஏமாந்து இருப்பர், இவர்தாம்
பொற்பின்
அறு சுவைஅறியும் அறிவுடையர் அன்று,
மேல்
புல்லாதி உணும் உயிர்களும்
போன்றிடார், இவர்களைக் கூரைபோய்ப்
பாழாம்
புறச்சுவர் எனப் புகலலாம்,
வற்பு
உறும்படி தரும வழி ஓங்கு தவசிகா
மணி! உலகநாத வள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 10.
மெய்
ஓர் தினைத்தனையும் அறிகிலார், பொய்க்கதை
விளம்ப எனில், இவ்வுலகிலோ
மேல்
உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்,
தெரு
மேவு மண் எனினும்உதவ,
கையோ
மனத்தையும் விடுக்க இசையார்கள்,
கொலை
களவு கள் காமம் முதலாக்
கண்ட
தீமைகள்அன்றி, நன்மை என்பதனை ஒரு
கனவிலும் கண்டு அறிகிலார்,
ஐயோ!
முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
அங்கை தாம் கங்கை என்னும்
ஆற்றில்
குளிக்கினும், தீ மூழ்கி எழினும், அவ்
அசுத்தம் நீங்காது கண்டாய்,
மை
ஓர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
மணி! உலகநாத வள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 11.
இளவேனில்
மாலையாய், குளிர் சோலையாய், மலர்
இலஞ்சி பூம் பொய்கை அருகாய்
ஏற்ற
சந்திரகாந்த மேடையாய், அதன்மேல்
இலங்கும் அரமிய அணையுமாய்,
தளவு
ஏயும் மல்லிகைப் பந்தராய், பால்போல்
தழைத்திடும் நிலாக் காலமாய்,
தனிஇளம்
தென்றலாய், நிறை நரம்பு உள வீணை
தன் இசைப் பாடல் இடமாய்,
களவே
கலந்த கற்பு உடைய மடவரல் புடை
கலந்த நய வார்த்தை உடனாய்,
களிகொள
இருந்தவர்கள் கண்ட சுகம், நின் அடிக்
கழல்நிழல் சுகம் நிகருமே,
வளவேலை
சூழ் உலகு புகழ்கின்ற தவசிகா
மணி! உலகநாத வள்ளல்
மகிழவரு
வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வைத்திய நாதனே. 12.
எல்லோரும்
ஓதி உணர்ந்து தெளியவேண்டிய அற்புதமான திருப்பதிகம் இது.
திருபுள்ளிருக்குவேளூர்
என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்திருத்தலம் தற்போது வைத்தீசுவரன்கோயில் என்று
வழங்கப்படுகிறது.
இத்திருத்தலம்
சென்னையில் இருந்து இரயில் பாதையில் 270
கி.மி. தூரத்தில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மி. தூரத்தில் உள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல
முக்கிய ஊர்களில் இருந்து வைத்தீசுவரன்கோயிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு உரியது.
இறைவர்
: வைத்தியநாதர்
இறைவியார்
: தையல்நாயகி
முருகன் : செல்வமுத்துக்குமாரர்
தல
மரம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்த குளம்
திருஞானசம்பந்தராலும், அப்பர்
பெருமானாலும் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.
திருமுறைகளில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீசுவரன்கோயில் என்றும் விளங்கும் இத்திருத்தலம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும்.
சடாயு
என்னும் புள் (பறவை), ரிக்குவேதம்
(இருக்கு), முருகவேள் (வேள்), சூரியனாம் (ஊர்) ஆகிய நால்வரும் இறைவனை
வழிபட்ட திருத்தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள்
கூறுகின்றன.
பிறவிப்
பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோயிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும்
போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல்நாயகியையும்
வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும்
தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும்
திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.
சிறிய
சிவலிங்கத் திருமேனியுடன் மந்திரமும், தந்திரமும், மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள்
வல்லானாகிய வைத்தியநாதப் பெருமானைக் கண்டு வணங்கி அவரின் பேரருளைப் பெற நாம்
வாழ்வில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இறைவி
தையல்நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு
அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு
நோக்கி காட்சி தருகிறார்.
அசுரன்
ஆகிய சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற திருத்தலம் இது
என்பர். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமராசுவாமியின் மீது
பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.
கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும்.
அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு
வழிபாடு நடைபெறும்.
தெற்குப் பிரகாரத்தில்
சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது
எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச்
செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும்
சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள்
நீங்கும் என்பதும் ஐதீகம்.
இத்தலம்
நவக்கிரகங்ளில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில்
மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு
இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டு வாகனத்தில்
அங்காரகமூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள்
பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
இத்தலத்தில்
நவக்கிரங்களுக்கு வலிமை இல்லை. நவக்கிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி
கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர்.
இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பர்.
கருத்துரை
பவரோக வயித்திய நாதா!
அடியேன் ஆணவத்தால் அழியாமல் காத்து அருள்.
No comments:
Post a Comment