வலிமை மிக்க விதியை மதியால் வெல்லலாம்
-----
"ஊழ்" என்னும் விதி வலியது. அது யாரையும் விட்டு வைக்கவில்லை. அந்த ஊழை விலக்குவது யாராலும் இயலாத ஒன்று என்பதையும் புராண நிகழ்வுகளின் வழியாக அறிந்து உள்ளோம். இத்தனை வல்லமை வாய்ந்த ஊழினை விலக்கி, வெற்றிகொள்ள வேண்டுமானால், அது மதி (அறிவு) ஒன்றினால் மட்டுமே முடியும். அதுவும் நமது முயற்சி ஒன்றினாலேயே முடியாது. ஒரு பெருந்துணை நமக்கு வேண்டும். அந்தப் பெருந்துணையைப் பற்றியும், விதியை வெல்லும் உபாயம் குறித்தும் காண்போம்.
உபாயம் என்னும் சொல்லுக்கு, உத்தி, வழி, சூழ்ச்சி, யோசனை என்று பொருள்.
பெருந்துணை --- உயிர்களுக்கு எல்லாம் எக்காலுத்தும் பற்றுக் கோடாக உள்ள இறைவன்.
நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால்தான், நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப துன்பங்களை வெல்ல முடியாது. வருவன வந்தே தீரும், அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதிவசம் என எண்ணி ஆறுதல் அடைந்து, மதி வலியால் அதனைப் போக்கலாம். அதற்குத் தளரா முயற்சி வேண்டும்
ஊழின் வலியானது, தன் வழியாக வராதபோது ஒருவன் எடுத்த காரியத்தை அது விலக்கும். அப்போது எடுத்த முயற்சியை விடாது செய்து வந்தால், அந்த முயற்சியே ஊழாகி, எடுத்த தொழில் முற்றுப் பெறுவதோடு, எண்ணிய பயனையும் தந்துவிடும். எனவே,தொடர் முயற்சியானது முன் இருந்து, ஊழை விலக்கி, நற்பயனைத் தந்துவிடும் என்பதைக் காட்ட,
"ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்".
என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
"பாலன் ஒருவன் பணிந்து கடவூர் அரனைக்
காலற் கடந்து இருக்கக் கண்டோமே --- ஞாலத்தின்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்று பவர்".
இதன் பொருள் ---
விடா முயற்சியால் விதியையும் கடக்கலாம்.
பாலன் --- மார்க்கண்டேயன். கடவூரன் --- திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான். காலற் கடந்து --- இயமனை வென்று. மார்க்கண்டேயன் பொருட்டுச் சிவபெருமான் யமனைச் சங்கரித்தது யாவரும் அறிந்ததே.
மார்க்கண்டேயர் வரலாறு
அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசித் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர். வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவ! நீ வேண்டும் வரம் யாது?” என்றனர். முனிவர் பெருமான் திரிபுராந்தகன் ஆகிய பரம்பொருளைப் போற்றி செய்து, புத்திர வரம் வேண்டும் என்றனர்.
அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து, “தீங்கு பொருந்திய குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மை ஆகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும், கோல மெய்வனப்பு உடையவனும், குறைவிலா வடிவுடையவனும், நோயற்றவனும், எம்பால் அசைவற்ற அன்புடையவனும், பதினாறாண்டு உயிர்வாழ்பவனும் ஆகிய மைந்தன் வேண்டுமா? சொல்லுவாயாக” என்றனர்.
OPTION A.
"தீங்கு உறு குணமே மிக்கு, சிறிது மெய் உணர்வு இலாமல்,
மூங்கையும் வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,
ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,
ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",
OPTION B
"கோலமெய் வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,
ஏல் உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,
காலம் எண் இரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல
பாலனைத் தருதுமோ? நின் எண்ணம் என்? பகர்தி" என்றான். --- கந்த புராணம்.
முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” (OPTION B) என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.
"மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,
"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி, யாக்கைக்கு
ஈண்டு ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு
பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன், புரிக என்றான்". --- கந்த புராணம்.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதியினிடத்து, இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் உண்டாமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது உனக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன. இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேரும் என எண்ணி நாங்கள் ஏங்குகின்றோம்" என்றனர்.
மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று கூறி விடைபெற்று,காசியில் மணிகர்ணிகையில் நீராடி, சிவலிங்கத்தைத் தாபித்து, நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா! யாது வரம் வேண்டும்?” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,
“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய
மெய்யனே! பரமனே! விமலனே! அழல்
கையனே! கையனேன் காலன் கைஉறாது
உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்" --- கந்தபுராணம்.
“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.
மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் விண்ணிடைக் கருமுகில் என வந்து, சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி, சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, அவன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராம் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர், “இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால், அவர் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை. கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனைப் பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துள்ளான். உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவான். வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.”
“நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,
ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்
போதிபோதி என்று உரைத்தலும் நன்று எனப் போனான்.”
அது கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிக் காலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும், பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன்.
அந்தகனைக் கண்ட மார்க்கண்டேய அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை உனது பாவத்தை நீக்குமே அல்லாது, நான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும் ககனத்து உடுக்களை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு. கமலாசனுக்கும் உண்டு. எனக்கும் உண்டு. பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும், மற்ற எவர் காப்பினும்,உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்; விரைவில் வருதி” என்றனன்.
மார்க்கண்டேயர் “அந்தகா! அரன் அடியார் பெருமையை நீ அறிந்திலை போலும்; அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி, இயமபுரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்க வல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில், உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.
“தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க
ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய் போதாய் என்றுஉரை செய்தான் புகரில்லான்".
“இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட கூற்றுவன் மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனையா? என் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி, சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர் வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து இயமனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபாரம் மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.
"மதத்தான் மிக்கான், மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்
பதைத்தான் என்னா உன்னி, வெகுண்டான் பதி மூன்றும்
சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி
உதைத்தான், கூற்றன் விண்முகில் போல் மண் உற வீழ்ந்தான்".
இந்த நிகழ்வை, சுந்தரமூர்த்தி நாயனார் திருச்சோற்றுத்துறைத் திருப்பதிகத்தில் ஒரு பாடலில் வைத்து அழகுறக் காட்டி உள்ளார்.
"உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு
வதையும் செய்த மைந்தன் இடமாம்,
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே".
இதன் பொருள் ---
நிலைபெற்ற மகரந்தமும்,தேனும், வண்டும் சோலைகளில் நெருங்கியிருக்கின்ற, காவிரி ஆற்றை உடைய,திருச்சோற்றுத்துறை என்னும் தலமே, கூற்றுவனுக்கு உதையையும், ஒன்றற்கும் தோலாத ஊழிற்கு அழிவையும் ஈந்த வலிமை உடையவனாகிய இறைவனுக்கு இடமாகும்.
"கூற்றுக்கு உதையும், ஒல்கா விதிக்கு வதையும்" என்று கூட்டிப் படிக்கவேண்டும். --- கூற்றுவனைத் தனது திருவடியால் உதைத்து, தோல்வி என்பதையே கண்டு அறியாத விதியை (ஊழ்வினையை) வதை செய்தவன் சிவபெருமான். யாருக்காக என்றால்,தனது திருவடியே சரண் என்று இருந்து மார்க்கண்டேயருக்காக.
"தாழாது உஞற்றுபவர்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியபடியே, குமரகுருபர அடிகளார், "உலையா முயற்சி களைகண்ணா" என்று குறித்து அருளிய பாடலைக் காண்போம்.
"உலையா முயற்சி களைகணா, ஊழின்
வலி சிந்தும் வன்மையும் உண்டே, - உலகு அறியப்
பால்முளை தின்று, மறலி உயிர்குடித்த
கால்முளையே போலும் கரி". --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
உலையா முயற்சி --- இளைத்தல் இல்லாத முயற்சியையே, களைகண்ணா --- பற்றுக்கோடாகக் கொண்டு, ஊழின்வலி --- போகு ஊழினது வலிமையை,சிந்தும் --- சிதைக்கின்ற, வன்மையும் உண்டே --- வலிமையும் உண்டு, உலகறிய --- உலகம் அறிய, பால்முளை தின்று --- ஊழ்வினையின் முளையைத் தின்று, மறலி உயிர் குடித்த --- கூற்றுவனது உயிரையும் குடித்த கால்முளையே --- மார்க்கண்டன் என்னும் சிறுவனே, கரி --- சான்றாவன்.
"சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை, --- உபாயம்
இதுவே மதியாகும், அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்". --- நல்வழி.
இதன் பொருள் ---
"சிவாயநம" என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை எப்போதும் தியானிப்பவர்களுக்கு, ஒரு நாளும் துன்பம் உண்டாகாது. விதியை வெற்றி கொள்வதற்கு இதுவே சிறந்த உபாயம் ஆகும். இதுவே சிறந்து மெய்யறிவும் ஆகும். இது அல்லாத மற்றைய அறிவு எல்லாம், விதியை நீக்கத் துணை செய்யமாட்டா. விதிப்படியே நன்மை தீமைகளை அனுபவிக்க நேரும்.
வலிமிக்க விதியை வெல்வதற்கு உபாயம் இறைவன் திருவடி வழிபாடே. தன்னை வழிபடுவோர்க்குப் பெருந்துணையாக இருந்து காப்பவன் இறைவன்.
அப்படியானால், இறப்பு நேராமல் எண்ணிய காலம் வரையிலும் உயிரோடு வாழமுடியுமா? என்னும் ஐயம் தோன்றும். தோன்றிய அனைத்தும், நின்று அழியக் கூடியவையே என்பதை அறிதல் வேண்டும்.
விதியை வெல்ல முடியாதவர்களுக்கு, விதியின் முடிவில் இறப்பு நேரும். இறந்தால், பின்னர் வந்து பிறக்க நேரும். பிறப்பும் இறப்பும் சங்கிலித் தொடர்போல் வந்து கொண்டே இருக்கும். அந்தச் சங்கிலியில் ஒரு இணைப்பைத் துண்டித்து விட்டால் போதும். துண்டிப்பதற்கு நம்மால் முடியாது. காரணம், சங்கிலித் தொடரைப் பூட்டியவன் இறைவன். அவனால் அறுக்க முடியும். வினைத் தொடர் அறுந்து போனால், பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இறைவன் திருவடி ஞானத்தால், வினைத் தொடரை அறுத்துக் கொள்ள முடிந்தவர்க்கும், விதிக்கப்பட்ட காலம் முடிந்த பின்னர் உடம்பு இருக்காது.
வினைத் தொடர் அறாதவர்கள் உடம்பை விட்டால், காலதூதுவர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்வார்கள். வினைத் தொடரை அறுத்துக் கொண்ட அடியவர்கள், உடம்பு விடும் காலம் வந்தபோது, இறைதூதுவர்கள் வந்து உயிரைக் கொண்டுபோய், இறைவன் திருவடியில் வைத்து இறவாத இன்பத்தில் திளைக்க வைப்பார்கள்.