கல்லாதவன், கண் இல்லாதவன்

 


கல்லாதவன் கண் இல்லாதவன்

-----

 

"கண் உடையவர் என்போர் கற்றார், முகத்து இரண்டு

புண் உடையர் கல்லாதவர்"

 

என்பது திருக்குறள்.

 

     கண்களை உடையவர் என்பவர் கற்றோரே. கல்லாதவர் தமது முகத்தில் இரண்டு புண்களை உடையவராகவே கருதப்படுவர் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     மனிதனாகப் பிறந்த ஒருவனுக்கு, தனது பிறப்பால் சில பெருமைகள் உண்டாகின்றன. நல்ல குடியில் பிறந்தவன். செல்வம் மலிந்த குடியில் பிறந்தவன். கல்வியில் மிக்க குடியில் பறிந்தவன். வீரத்தில் சிறந்த குடியில் பிறந்தவன் என்றெல்லாம் சிறப்புக்கள் சில இயல்பாகப் பொருந்தி இருந்தாலும், இந்த மதிப்புகள் எல்லாம் அவனுக்குப் புறத்தில் இருந்து வந்தவையே ஆகும். இவ்வாறு பரம்பரையான குடும்பத்தில் பிறந்து வருவோர் இயல்பாகவே மதிப்புப் பெற்று நிற்கின்றனர். ஆனால், உள்ளத்தில் தகுதி இல்லையானால், இந்தத் தகுதிகள் யாவும் பயனற்றவை ஆகின்றன. செல்வம், அழகு, பலம், குலம் முதலிய நலங்கள் யாவும் ஒருங்கே பெற்றவனாக இருந்தாலும், அவனிடம் கல்வி அறிவு இல்லையானால், அவன் கடையவனாகவே மதிக்கப் படுவான்.

 

     நுண்ணிய,பெருமையுடைய அறிவு நூல்களில் நுழைந்து ஆராயக் கூடிய அறிவு இல்லாதவனுடைய உடலழகின் சிறப்பானது, மண்ணினால் அழகுறச் செய்யப்பட்ட பொம்மையின் அழகை ஒக்கும் என்பதைக் காட்ட,

 

"நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்,

மண்மாண் புனைபாவை அற்று".

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     அமித்திர முனிவனுக்காக அமைந்த நெல்லிக்கனியைப் பாஞ்சாலி விரும்புகின்றாள். தனது விருப்பத்தை அருச்சுனனுக்குத் தெரிவிக்கின்றாள். முனிவனுக்காக அமைந்த நெல்லிக்கனியை அருச்சுனன் தனது அம்பால் வீழ்த்துகின்றான். அதனைக் கண்டோர், இதனை முனிவர் அறிந்தால் என்ன ஆபத்து உண்டாகுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகின்றார்கள். இதனை அறிந்த தருமன் நொந்துகொள்ள,"பழத்தை விழ எறிந்தவன் நான்தான். என்னைத் தவிர யாரையும் முனிவர் சபிக்கமாட்டார். எனவே, கவலை வேண்டாம்" என்கின்றான் அருச்சுனன். "உனக்குத் துயர் வர,நாங்கள் பொறுத்திருப்போமோ?" என்கின்றான் தருமன். அனைவரும் கண்ணனைச் சிந்திக்கின்றாரகள். கண்ணன் வருகின்றான். 

 

     கண்ணன் அவர்களைப் பார்த்து, "உதார குணத்தால்மேம்பட்டவர்களே! நீங்கள் ஐந்து பேரும், வேள்வித் தீயில் வந்தவளாகிய இந்தப் பாஞ்சாலியும், உங்கள் உள்ளத்தில் பட்டதை உள்ளபடி சொன்னால், இந்த நெல்லிக் கனியானது, தான் தோன்றிய மரத்தின் கிளையில் மீண்டும் சென்று சேர்ந்துவிடும்" என்று ஓர் உபாயத்தைக் கூறுகின்றான். 

 

"திண்மையால் உயர்ந்த நீவிர் ஐவிரும்இத் 

     தீயிடைப்பிறந்த சேயிழையும்,

உண்மையா நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கு ஈண்டு 

     உரைத்திட,கோட்டில் மீண்டு ஒன்றும்;

வண்மையால் உயர்ந்தீர்!என்று செம்பவள 

     வாய்மலர்ந்தருளினான்மாயோன்.

தண்மைஆர் கருணைத் தராபதி முதலோர் 

     சாற்றுவார்,தம் மனத்து இயல்பே".

 

     தராபதி --- அரசன். இங்கேகுளிர்ந்த உள்ளமும்கருணையும் கொண்டவன் ஆன தருமனைக் குறித்தது. தருமன் முதலானோர் தத்தமது மனத்தில் உண்டான கருத்தை வெளியிடுகின்றார்கள். இரட்டையர்களில் முந்தியவனாநகுலன் தனது கருத்தைப் பின்வருமாறு சொல்லுகின்றான்.

     

"குலம்மிக உடையர்எழில்மிக உடையர்

     குறைவு இல் செல்வமும் மிக உடையர்,

நலம்மிக உடையர்என்னினும்கல்வி 

     ஞானம் அற்பமும் இலாதவரை,

வலம்மிகு திகிரிச் செங்கையாய்! முருக்கின் 

     மணம் இலா மலர் என மதிப்பேன்,

சலம் மிகு புவியில்என்றனன், வாகைத் 

     தார் புனை தாரைமா வல்லான்". 

                                                        

     வெற்றிமாலையை அணியவல்லதாரையை உடைய குதிரை ஓட்டும் தொழிலிலே வல்லவனான நகுலன்,(கண்ணனை நோக்கி) வெற்றி பொருந்திய சக்கரப் படையைச் சிவந்த திருக் கைகளில் உடையவனே! நிலையாமை மிக்க இந்த உலகத்திலேஒருவர், சிறந்த உயர் குடிப்பிறப்பினை உடையவர். மிக்க அழகினை உடையவர். குறைவில்லாத மிக்க செல்வமும் உடையவர். நற்காரியங்களை மிகுதியாக உடையவர். என்றாலும், கல்வியினால் ஆகிய அறிவு சிறிதும் இல்லாத மானுடரைமுருக்க மரத்தின் வாசனை இல்லாத, பார்வைக்கு மாத்திரம் அழகாகத் தோன்றுகிற, மலர் போல மதிப்பேன்.

 

    மலருக்குச் சிறப்பு,அதனுடைய நறுமணத்தினால் உண்டாகும். நறுமணம் சிறிதும் இல்லாமல், பார்வைக்கு மாத்திரம் பகட்டாகத் தோன்றும் மலர்களை யாரும் மதிப்பதில்லை. அதுபோலஎல்லா நலங்களையும் ஒருவன் பெற்றிருந்தாலும், கல்வி அறிவு இல்லாதவர் மதிக்கப்பட மாட்டார் என்னும் திருவள்ளுவ நாயனார் கருத்தை, வில்லிப்புத்தூரார் இவ்வாறு வெளிப்படுத்தினார்.

 

    மனிதர்களாப் பிறந்தவர் யாவருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளன. கற்று அறிந்தவர்க்கோ, அவர்களது கருத்திலும் கண் ஒன்று உண்டு என்கின்றார் திருமூல நாயனார். ஊனக் கண்ணை விடவும் ஞானக்கண்ணே சிறந்தது என்கின்றார்.

 

கற்றறி வாளர் கருதிய காலத்துக்

கற்றறி வாளர் கருத்தில் ஓர் கண்உண்டு,

கற்றறி வாளர் கருதி உரைசெய்யும்

கற்றறி காட்டக் கயல் உள ஆக்குமே. --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் அவ் அறிவால் கருதி உணரும் காலத்துகல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லுகின்ற கல்வி அறிவுரைபாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.

 

     கற்றவர்க்கு ஊனக்கண் இரண்டோடு, மூன்றாவதாக அறிவுக் கண்ணும் உள்ளது என்கின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.

 

கண் இரண்டே யாவர்க்கும்கற்றோர்க்கு மூன்றுவிழி,

எண்ணுவிழி ஏழாகும் ஈவோர்க்கு, --- நண்ணும்

அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு

அநந்தம் விழிஎன்று அறி.         ---  நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

       மக்கள் எல்லார்க்கும் இரு கண்களே உள்ளன. நன்கு கற்றவர்களுக்கு ஊனக்கண் இரண்டோடு அறிவுக் கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுப்பவர்களுக்கு அவர்களுடைய நகக் கண்கள் ஐந்தோடு சேர்த்து,  கண்கள் ஏழாகும். பொருந்துகின்ற நல் தவத்தால் அருள்ஞானம் பெற்றவர்க்கு அளவில்லாத கண்கள் உண்டு.

 

     கல்வி அறிவு இல்லாதவன், கண் இருந்து குருடனாகவே மதிக்கப்படுவான். மணமற்ற மலராகவே மதிக்கப்படுவான். எனவேஉடம்பில் உயிர் உள்ளபோதேஇளமை கழியாத முன்னரே இறைவனது திருவடிச் சிறப்பைத் தெரிவிக்கின்ற அறிவு நூல்களையும்அருள் நூல்களையும் கற்றுத் தெளிதல் வேண்டும். நாம் இப்போது இளமை உடையவராக இருக்கின்றோம். இளமைக் காலத்தில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்து விட்டுபிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருத்தல் கூடாது.

 

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்

கற்கின்ற செய்மின்,கழிந்து அறும் பாவங்கள்,

சொற்குன்றல் இன்றித் தொழுமின்,தொழுதபின்

மற்று ஒன்று இலாத மணிவிளக்கு ஆமே.

 

என்றுகல்வியின் சிறப்பை எடுத்து ஓதுகின்றார் திருமூல நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றியனாய் உள்ள,நிலையான பொருளாக நிற்கின்ற இறைவனது திருவடிச் சிறப்பைத் தெளிவிக்கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்அவ்வாறு கற்றுத் தெளிவது உங்கள் பாவங்கள் பற்றறக் கழியத் துணை புரியும். எனவேஅக் கல்வியானது,வெறும் ஏட்டுக் கல்வியாய் ஒழியாதவாறுபயனைப் பெறுவதற்கு இறைவன் திருவடிகளைத் தவறாது வணங்குங்கள்அவ்வாறு நீங்கள் வணங்கித் தொழுதால்அது இயல்பாகவே ஒளி வீசுகின்ற மணிவிளக்குப போல எக்காலத்தும் உங்களுக்குத் துணையாய் வரும்.

 

     இருளை நீக்குதற்கு ஒளிவிளக்குத் தேவைப்படுவது போஅஞ்ஞானத்தால் உண்டான துன்பம் நீங்கிஞானத்தைப் பெற்று இன்புற்று வாழ்வதற்குஇறைவன் திருவடிக் கல்வி அவசியமாகின்றது என்பதை உணர்த்த, "மற்று ஒன்று இல்லாத மணிவிளக்கு" என்றார். அந்த மணிவிளக்கைப் போன்றதொரு விளக்கு வேறு ஏதும் இல்லை.

 

     எனவேஇறைவன் திருவடிக் கல்வியே ஓளிவிளக்குப் போல இருந்து,உள்ளக் கண்ணுக்கு ஒளியைக் காட்டிஞானத்தை அடைவித்து உய்விக்கும் ஒப்பில்லாத கல்வி ஆகும். "உள்ளக் கண் நோக்கும் அறிவு ஊறிஉள்ளத்தை நோக்க அருள்வாயே" என்றார் அருணகிரிநாதப் பெருமான். முகத்தில் கண் கொண்டு காணாமல்அகத்தில் உள்ள கண்ணைத் திறந்து,அதனைக் கொண்டு காண்பதே ஆனந்தம் தரும்.

 

கழித்திலேன் காம வெந்நோய்,

     காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன்ன்கண் நோக்கி,

     உணர்வு எனும் இமை திறந்து

விழித்திலேன்,வெளிறு தோன்ற 

     வினை எனும் சரக்குக் கொண்டேன்,

அழித்திலேன் அயர்த்துப் போனேன் 

     அதிகைவீ ரட்ட னீரே.             --- அப்பர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     திருஅதிகை வீரட்டானத்துள் எழுந்தருளி உள்ள பபெருமானே! என்னிடத்துள்ள ஆசாபாசம்காமம் என்ற கொடிய நோய்களை நான் நீங்கப் பெறவில்லை. காரணம்,ஆசை என்னும் பற்றினை நான் விடவில்லை.உடலுயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருக்கின்றேன்.  அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலகும்படிக்கு,  மூடிக் கிடக்கும் மெய்யுணர்வு ஆகிய விழியைத் திறந்து பார்க்கும் நிலையை நான் பெறவில்லை.இதற்குத் தடையாக உள்ள வினைகள் என்னும் சரக்கை என்னிடம் நிறைய வைத்து உள்ளேன். எனது இந்த நிலைக்குக் காரணமாக உள்ள இழிதகவு உடையோர் சார்பை நான் விலக்கிக் கொள்ளவும் இல்லை. நான் சோர்ந்து போய் உள்ளேன். (மெய்யடியார் கூட்டத்தைச் சார்ந்து இருந்து எனது வினைச் சரக்கைப் போக்கிக் கொள்ள அருள் புரிவாய்)

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...